குவியத்தின் எதிரிகள் - 22. இப்ப நான் என்ன சொன்னேன்?

சொல்றது என் கடமை; சொல்லிட்டேன். இனிமே உன் பாடு என்ற அறிவுரையால் எந்தப் பயனுமில்லை என்பதை பெற்றோர் / அறிவுறுத்துவோர் உணர வேண்டியது அவசியம்.

எத்தனையோ தடவை சொல்லியாச்சு; ஒரு முனைப்பா படிடா. பொறுப்போட இரு. படிச்சாத்தான் வாழ்க்கைன்னு. சொல்லும்போதெல்லாம், புரிஞ்ச மாதிரி தலையாட்டறான். கேள்வி கோட்டா, சரியா பதில் சொல்றான். ஆனா, படிக்கற நேரத்துல மொபைல்ல என்னமோ சாட், இன்ஸ்டாகிராம், டிவின்னு கவனம் சிதறுது. மார்க் வரலைன்னா, அப்ஸெட் ஆறான். இதே கதை திருப்பித் திருப்பி.. என்னிக்குப் புரியப்போகுதோ?

கணக்குல இவ வீக் கிடையாதுன்னு டீச்சரே சொல்றாங்க. ஒவ்வொரு ஸ்டெப்பா போட்டு, விளக்கினா புரியுதுங்கறா. அப்ப கேட்டா சரியா போடறா. ஆனா, கேள்வித்தாள்னு வந்துட்டா, சின்னச் சின்ன பிழைகள். கூட்டல், கழித்தல்ல கூடவா வரும்? மார்க் வரலைன்னு, ஒரே அழுகை..

பல வீடுகளில் கேட்கக்கூடியதுதான். ஏன், நாமே கேட்டிருப்போம். அது ஏன், புரிகிற ஒன்றை, சரியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதை உணர்கின்ற ஒன்றைச் செய்யும்போது தவறுகள் ஏற்படுகின்றன? பொறுப்பு என்ற உறுதி ஏன் கலைந்துபோகிறது?

செய்தியை உள்வாங்குதல் என்பதற்கும், உள்வாங்கியதைப் படிகளில் செய்து இயங்குவதற்கான உறுதி என்பதற்கும் உள்ள தொடர்பு பலவீனமாக இருப்பது இதன் முக்கியக் காரணம் என்கிறார்கள் பரிமாற்ற உளவியல் வல்லுநர்கள். Transaction Analysis என்பது பேரண்ட், அடல்ட், சைல்டு என்ற மூன்று நிலைகளில் நம் மனம் செயல்படுவதையும், அதன் குறுக்கான இடையாடல்கள், பரிமாற்றங்களின் தடைகளாக அமைவதையும் தெளிவாக விளக்குகிறது.

நமது பெரும் எதிர்பார்ப்பு என்னவென்றால், அடுத்தவர்கள் அடல்ட் நிலையிலிருந்து, நாம் சொல்லுவதைப் புரிந்துகொண்டு, இம்மி பிசகாது நடக்க வேண்டும். நான் சொல்வது மிகச் சரி.

இதுதான் குறுக்கான இடையாடல்களின் விபரீதம். எதிர்பார்ப்பு ஒன்றிருக்க, நிகழ்வுகளின் தாக்கம் ஏமாற்றத்தையும் கோபத்தையும் மன அழுத்தத்தையும் வரவழைக்கிறது.

பல பத்தாண்டுகளாக, இடையாடல் உளவியலாளர்கள் இந்த இடையாடல்களின் திறனை ஆராய்ந்து வருகின்றனர். நாம் தெளிவாகச் சொன்னாலும், கேட்பவருக்கு அது தெளிவாக விளங்கினாலும், இரு இடங்களில், இடையாடல்களின் வெற்றி வழுகிப்போகின்றன.

{pagination-pagination}

• கேட்பவரின் மனநிலை. அது பேரண்ட்டாகவோ, சைல்டு என்பதாகவோ இருக்குமானால், நாம் சொல்வதன் முழுத் தாக்கம் அவரது மனத்தில் ஏற்படுத்தாது.

கேட்பவர் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போது, என்னதான் அறிவுரை சொன்னாலும் அது உள்வாங்கப்படாது. அறிவுரை சொல்வோர் பேரண்ட் நிலையிலும், கேட்பவர் சைல்டு, அல்லது பேரண்ட் நிலையிலும் இருந்தால், செய்தி சரியாகச் சென்று சேருவதில்லை. உதாரணமாக, “நீ படிச்சாதான் வாழ்க்கை” என்று பேரண்ட் நிலையில் இருந்து ஒருவர் சொல்வதை, “அதான் தெரியுமே? எத்தனை தடவை சொல்லுவீங்க?” என்று கேட்பவர், பேரண்ட் நிலையில் இருந்தால் அதை மறுதலிக்கலாம். தவிர்ப்பை வெளிக்காட்டாமல், மவுனமாகத் தலையசைத்து நிற்கலாம். அல்லது “குமார் மாதிரி, என்னால் பேட்மிண்ட்டன் விளையாடி பெரிய ஆளாக வரமுடியும்பா” என்று தெருவில் விளையாடுவதை முக்கியமாகக் காட்டி, தனது குறைவான மதிப்பெண்களை நியாயப்படுத்த முயற்சிக்கலாம்.

அல்லது, “அய்யோ! இப்ப என்ன செய்யறது?” என்று பதறி, படுக்கையில் குப்புற விழுந்து அழுது கிடக்கலாம். வீட்டை விட்டு ஓடிப்போக எத்தனிக்கலாம். உணர்ச்சிப்பெருக்கில் விபரீதமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கலாம். கோபத்தில், ‘‘எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று அறையின் கதவைச் சாத்திக்கொள்ளலாம். இது சைல்டு நிலையிலிருந்து வரும் எதிர்வினை.

இந்த இரண்டையும்தான் மேற்சொன்ன பாயிண்ட் சுட்டுகிறது. இரண்டு நிலையிலும், சொல்லப்படுவது சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை.

இதன்றி, “ஆமாப்பா. இந்த தடவை மார்க் குறைஞ்சிருச்சு. நல்லாதான் படிச்சேன். ஆனா, என்னமோ கவனம் சிதறுது. அல்லது சின்ன சின்ன மிஸ்டேக் வருது. என்ன செய்யலாம்? டென்ஷனா இருக்கு. படிச்சது மறந்துபோகுது” என்று தன் இடர்களைத் தெளிவாகச் சொல்லி, அதனைத் தீர்க்க படிகளை எடுக்க முயற்சிக்கலாம். இது அடல்ட் என்ற நிலையிலிருந்து வரும் எதிர்வினை. சிறுவர், சிறுமியரிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. ஏன், உணர்ச்சித் தாக்குதலில் இருக்கும் பெரியவர்களிடமுமே இதனை எதிர்பார்க்க முடியாது. பேசுபவர், சூழ்நிலையை அறிந்துகொண்டு அடிப்படையான இரு மாறிகளைக் கருத்தில் கொண்டு பேச்சைத் தொடங்குவதே நல்லது. இந்த இரு மாறிகள் – இடம் மற்றும் காலம்.

அறிவுறுத்தப்பட வேண்டியவரைத் தனியாக அழைத்துச் சென்று திறந்த வெளியில் உட்காரவைத்துப் பேசுவதை உளவியலாளர்கள் நல்லது என்று சொல்கின்றனர். டேனியல் கோல்மேன் தனது எமோஷனல் இண்டலிஜென்ஸ் புத்தகத்தில், “சீரிய சிந்தனைக்கு, சரியான சூழல், மரங்கள் நிறைந்த இடம்” என்கிறார். பூங்காக்களோ, கட்டடங்களோ அல்லது கடற்கரை போன்ற வெட்டவெளிகளைவிட, மரங்கள் அடர்ந்த பகுதி நல்லது என்பதன் அடிப்படை, நிகழ்வுகளின் பதிவின் அடிப்படையில் வந்த ஒன்று.

சமூக விதிகளை மதித்து நடக்கும் மனிதர்கள், இடையாடல்களில் உரசல் வருவதை, வாதம் எதிர்வாதம் வளர்வதைத் தவிர்க்க விருப்பம் கொள்பவர்கள். எனவே, அறிவுரை சொல்பவர் / பயிற்சிப்பவர் சொல்வதை எதிர்க்காமல், தனது எதிர்வினைகளை முன்வைக்க இரு உத்திகளைத்தான் அறியாமலேயே யன்படுத்துவார்கள். ஒன்று, கவனத்தைத் தவிர்ப்பது; இரண்டாவது, கேட்ட செய்திகளைத் தாற்காலிக நினைவிடத்தில் நிறுத்தி, அதனினிருந்தே எதிர்வினையாற்றுவது.

முதலாவது சூழ்நிலையில், எதிர்வினையின் முன், அவர்களுக்குள்ளே பேரண்ட்டுக்கும் அவர்களது சைல்டு நிலைக்கும் ஒரு உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கும். “அவர் சொல்வதைக் கவனிப்பதாகக் காட்டு. ஒரு சிரிப்பைத் தவழவிடு. அடிக்கடி ஆமோதிப்பதாகத் தலையாட்டு. ரைட்டு, ம், நீங்க சொன்னது சரி என்பதாக இடையிடையே சொல்லிக்கொண்டிரு” என்பதான கட்டளைகள், தனது பேரண்ட் நிலையிலிருந்து கிடைக்க, அவரது சைல்டு நிலை, நிலை பிசகாது சொன்னதைச் செய்து வரும். பெரும்பாலும், செய்தி உள்ளே புகாததால், “இப்ப என்ன சொன்னேன்?” என்று, கேள்விக்குத் தடுமாற்றமான, தவறான பதில் வரும்.

{pagination-pagination}

இரண்டாவது நிலை சற்றே வேறானது. இங்கும், சொல்பவரின் ஒரே திசையிலான பேச்சு கேட்பவரின் காதில் நுழைந்திருக்கும். கவனத்தில் நுழைந்திருக்காது. டெம்பரரி மெமரி என்ற கிடங்கில் கருத்து கிடக்கும். “இப்ப என்ன சொன்னேன்?” என்ற கேள்விக்குச் சரியான விடை, இந்த டெம்ப்பரி மெமரியிலிருந்து வருகிறது. பதில் சொல்பவர், சமூக ஆமோதிப்பைக் கருதி தான் கேட்ட செய்தி / அறிவுரைகளுக்கு ஏற்ப பதில் சொல்ல முற்படலாம். அந்த நேரத்தில், இயக்கிக் காட்டச் சொன்னாலும், நாம் சொன்ன மாதிரியே இயக்கங்களையும் அவர் அமைக்கலாம். ஆனால், அது உள்வாங்கப்பட்டு, பெருமூளையின் முற்பகுதியாலும், தருக்கம் மற்றும் உணர்ச்சிகளின் இருப்பிடங்களாலும் செயற்படுத்தப்படாதவரை, நாம் சொன்னதெல்லாம் வீண்.

இந்தச் சூழலில், பின்னூட்டம் கேட்பது, இயந்திரத்தனமான, ஆக்கநிலை அனிச்சைச் செயல் போன்ற ஆனால், சுய உணர்வுடன் செய்யப்படுகின்ற வினையாற்றலை எதிர்வினையாகப் பெறும். எதிர்வினையாற்றுபவரும் ஏமாற்றுவதற்காகச் செய்வதில்லை; கேட்பவருக்கும் இது சரியான எதிர்வினை என்பதில் சந்தேகம் வருவதில்லை.

இதனாலேயே, “இப்ப நான் என்ன சொன்னேன்?” என்ற வகையான கேள்விகளும், ‘‘இனிமே ஒழுங்கா படிப்பியா?” போன்ற கேள்விகளும் கொண்டுவரும் எதிர் வினைகளை நம்பி நாம் மேற்சென்றுவிட முடியாது. கேள்விகளைக் கேட்பவரும் இந்த நாடகத்தை அறிந்திருப்பினும், சாதகமான எதிர்வினை அவரை பொய்யான நம்பகத்தன்மைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

இடையாடலில் வெற்றி வழுகிப்போகும் இரண்டாவது காரணம் -

• கேட்பவர் உள்வாங்கியிருப்பினும், அதனைச் செயல்படுத்தத் தவறுதல்.

செய்தியின் தீவிரத்தையும் பொருளையும் உள்வாங்கியிருப்பினும், புரிதலுக்கும், செயல்பாட்டுக்குமான இடைவெளி பெரிதாக இருக்குமானால், செயல்பாட்டின் திட்டம், படிகள் மறைந்துபோகின்றன. இந்த இடைவெளியில் வர வேண்டியவை கீழ்க்காண்பவை.

தானே அமைக்கும் திட்டத்தின் படிகள், அவற்றைக் குறித்த மீள்பார்வை, நேர்மறையான விமரிசனங்கள் மூலம் கொண்டு வரப்படும் திருத்தங்கள், படிகள் மீதான இயக்கங்கள், இயக்கங்களின் முடிவு குறித்தான அலசல்கள்,

இந்த இரு காரணிகளும் செயல்பாட்டினைக் கொண்டுவராது இருப்பதன் காரணத்தை, ‘உள் நடக்கும் இடையாடல்கள்’ காரணம் என்கிறார் அமி ஜோர்க் ஹாரிஸ், தனது Staying OK என்ற புத்தகத்தில்.

நம்முள் நடக்கும் இந்த இடையாடல்கள், சொல்லப்படுவதைக் கவனத்தில் கொண்டுசெல்ல முடியாத அளவு அறுவையாக இருப்பதாலும், உள் வாங்கப்பட்ட செய்தி செயல்பாட்டுக்குக் கடினமாக இருப்பதாலும், செய்தியையும், செயல்பாட்டையும் தவிர்க்கும்விதமாக நம் கவனத்தை பேரண்ட், சைல்டு நிலைகளில், ‘‘இறந்தகாலத்தில் இதுபோன்ற வலிமிகு காலத்துக்குக் கொண்டுசெல்ல நம்முள்ளேயே இடையாடல்களை நடத்துகின்றன” என்கிறார், கைக்ககார்டு என்ற ஆய்வாளர்.

பேரண்ட் இந்நிலையில் வழிநடத்தும் விதம் - இன்று தோற்றிருக்கிறாயா? இதேபோல் முன்பொருமுறை தோற்றிருந்தாய். அன்று உன்னை நல்ல பிள்ளையாக நடக்கச்சொன்னது… தந்தை, தாய்.. டீச்சர், அவர் கையில் பிரம்பு இருந்தது. அடி.. வலிக்கும். எனவே கட்டுப்பட்டு நட, “ஆம், இனி படிக்கிறேன்” என்று சொல். தலையை ஆமோதிப்பதாக ஆட்டு.

சைல்டு நிலை நம்மை வழிநடத்துவது வேறு விதம் - இந்த ஒழுங்கு, செயல்பாடு வலி தரும். எனவே.. செயல்பாட்டைத் தவிர். எதிர்த்துப் பேசு, முரண்டு செய். கத்து. அழு.. அப்படியும் செயல்பட வேண்டியிருந்தால். மொபைலில் நண்பனுடன் அரட்டை அடி… இன்ஸ்டாகிராம் பார்…

செயல்பாட்டின் பலன் மகிழ்ச்சி தருவது, ஒரு மதிப்பைத் தருவது என்றிருந்தால், நமது சைல்டு நிலை, தவிர்க்கச் சொல்லாமல், செயலில் ஈடுபடத் தூண்டும். எனவேதான் செயல்பாட்டின் நிலைகளை முதலில் வரையறுத்து, அதில் ஒவ்வொரு படியையும் மறுபரிசீலனை செய்து, அதன் நிகழ்வை நேர்மறைப் பின்னூட்டம் கொண்டு ஊக்கப்படுத்துவது முக்கியம்.

“சொல்றது என் கடமை; சொல்லிட்டேன். இனிமே உன் பாடு” என்ற அறிவுரையால் எந்தப் பயனுமில்லை என்பதை பெற்றோர் / அறிவுறுத்துவோர் உணர வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவரின் செயல்பாட்டினை நேர்மறை விமரிசனம் செய்து உதவுவது, அவரைத் தன் எதிர்மறை பேரண்ட், சைல்டு நிலைகளிலிருந்து மீண்டு வர உதவும். எப்படி சொல்ல வேண்டுமென்பதை அறிவுறுத்துபவர்கள் நேராகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com