குவியத்தின் எதிரிகள்: 12. பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு

இலவசமாக வரும் ஊடகங்களோ, கேட்காமல் வரும் செய்திகளோ நமக்குச் செய்யும் நன்மையைக் கருதும் முன், ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். ‘இதனால் யாருக்கு நன்மை?’

அண்மைக்காலத்தில், நண்பர் ஒருவரது நடவடிக்கைகளில் மாறுதலைக் கவனித்தேன். திடீரென உணர்ச்சிவசப்பட்டு, அரசு இயந்திரங்களைத் திட்டத் தொடங்கினார். பொதுஇடங்களில், தொலைக்காட்சி சேனல்களை அரசியல் விவாதங்களுக்குத் திருப்பச் சொன்னார். காரில் உரத்த குரலில் அரசியல் பேசுகிறார் என்பதால், அவருடன் செல்வதை நண்பர்கள் தவிர்த்தனர்.

சமீபத்தில், வாடிக்கையாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, விவாதம் செய்து அது பிரச்னையாகப் போய்விட்டது. ஒரு வாரம் முன்பு, மருத்துவப் பரிசோதனை செய்ததில், ரத்த அழுத்தம் பார்டர் லைனில் இருப்பதாகவும், அவருக்குத் தூக்கம் குறைவாக இருப்பதாகவும் கம்பெனிக்கு அறிக்கை சென்றது. அவரது வீட்டில் விசாரித்ததில், சமீப காலத்தில் அடிக்கடி கத்துகிறார் என்றும், அதிகம் அரசியல் விவாதம் செய்கிறார் என்றும் கவலைப்பட்டனர். நண்பர்கள் வற்புறுத்தி அவரை ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றோம். மெல்ல மெல்ல காரணம் புலப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு “தனிச்சுற்று இதழ்” ஒன்றை குடியிருப்பு வளாகத்தில் இருப்பவர் இலவசமாகக் கொடுத்துள்ளார். இது அரசியல் சார்ந்ததல்ல என்றும், உலக நிகழ்வுகளையும் சில கதைகளையும் மட்டுமே கொண்டது என்றும் அவர் உறுதி அளித்திருந்தார். “பிடித்திருந்தால், ஆறு மாசத்துக்குப் பின் சந்தா கட்டுங்கள்” என்றபின், மாதாமாதம் அந்த இதழ் அவரது வீட்டுக்கு வந்திருக்கிறது.

அந்த இதழின் கட்டுரைகள் பல கருத்துகளைச் சார்ந்ததாக இருந்தாலும், அடிப்படையில் அரசின் கொள்கைகள், நடப்புகளை வெளீப்படையாகவோ, மறைமுகமாகவோ எதிர்த்தே இருந்தன. இரு கட்டுரைகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கும். அடுத்து ஒரு கவிதை. அதற்கு அடுத்து ஒரு மதத்தின் கொள்கைப் பரப்பும் கட்டுரை. புத்தக விமரிசனம் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும் புத்தகம், அரசினை எதிர்த்து அமைந்ததாக இருக்கும். அல்லது அந்த விமரிசனம், புத்தகம் மூலம் அரசினை எதிர்ப்பதாக இருக்கும். புத்தகத்தில், “பேஸ்புக்கில் வந்தது, ட்விட்டரில் வந்தது” என்று ஒரு பக்கம். அனைத்தும், ஏதோ ஒருவகையில் அரசு எதிர்ப்பாக இருக்கும். சில கட்டுரைகளில், தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் சொன்னதை உயர்த்திப் பிடித்து எழுதியிருந்தார்கள்.

நண்பர் அந்த விவாதங்களைப் பார்க்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல, நகைச்சுவை நாடகத் தொடர், குடும்பத்தோடு பார்ப்பது குறைந்து, சூடான விவாதங்களைத் தனியாக அவர் பார்க்கலானார். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சிலருக்கு நண்பராகச் சேர்ந்தார். சில பக்கங்களில், தொடர்ந்து கமென்ட் எழுதிக்கொண்டிருந்தார்.

அவருக்கும் அவர் மனைவிக்கும் பொது நண்பராக இருந்த ஆசிரியை ஒருவர், அவரது கமென்ட்டுகளைப் படித்து, அவர் மனைவியிடம் அவற்றை வாசிக்கச் சொன்னார். கமென்ட்டுகளை வாசித்த அவர் மனைவி திகைத்துப்போனார். இத்தனை வெறுப்பும், வன்முறையுமாக அவரது பேச்சு இதற்கு முன் இருந்ததில்லை. குறிப்பாக, ஒரு பிரபலத்தின் பேச்சில் வெறுப்படைந்திருந்த அவர், இவரைப் போட்டுத்தள்ளினாதான் நாடு உருப்படும் என்ற அளவில் எழுதியிருந்ததை, மனைவியின் தோழி சுட்டிக்காட்டினார்.

நண்பர்கள் சிலரது முயற்சியாலும், அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆணையாலும், மனநல ஆலோசகரிடம் அவரை அழைத்துச் சென்றனர். மனநல ஆலோசகர் பரிசோதித்துவிட்டு, அவரை இப்படி சிந்திக்கச் சொன்னார் - “உங்களது வருமான வரி திடீரென 30 சதவீதம் அதிகமாக உயர்த்தப்பட்டுவிட்டது. வீட்டுக்கான மாதத் தவணை 1 சதவீதம் அதிகமாகிவிட்டது. பள்ளிக்கூட ஃபீஸ், பெட்ரோல் விலை எல்லாம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. ஆனால், உங்கள் சம்பளம் உயரவில்லை. என்ன செய்வீர்கள்?”

நண்பரின் எதிர்வினை, இயலாமையும், கோபமும் கூடிய, வன்முறையாக இருந்தது. அரசு, அந்த அரசைத் தேர்ந்தெடுத்த பொதுமக்களின் முட்டாள்தனம் என வார்த்தைகளால் விளாசினார். அவரிடம் ஒரு கணனி கொடுக்கப்பட்டது. முதல் வேலையாக அவர் செய்தது, பேஸ்புக்கில் நுழைந்ததுதான். அதன்பின், ட்விட்டரில் அடுத்தடுத்து ட்வீட்டுகள். அனைத்தும் அவரது கருத்தை வலியுறுத்துவதாக இல்லாமல், அரசினையும், சில தலைவர்களையும் திட்டி எழுதப்பட்டிருந்தன. சவால்களைத் தெளிவாகச் சொல்வது, அவற்றின் தாக்கம், எவ்வாறு அவற்றை எதிர்கொள்வது என்பதான சிந்தனைக் குறிப்புகள் என ஒரு தருக்கம் கலந்த சிந்தனையாக அது இருக்கவில்லை. வெறுப்பும், கோபமும் மண்டிக்கிடந்த வசைச்சொற்களின் கலவையாக இருந்தது.

அவர் வாசிக்கும் இதழ்கள், பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதழ்களில் கட்டுரைகளும், கதைகளும் ஒரு திட்டமிட்ட வடிவில் அமைந்திருப்பதை மனநல ஆலோசகர் விளக்கினார்.

ஒரு கருத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எதிர்ப்பவர்களிடம் கொண்டுசெல்ல முயற்சி தேவையில்லை. நம்புபவர்களிடம் கொண்டுசெல்லவும் முயற்சி தேவையில்லை. நடுவில் இருப்பவர்களைக் கவரவே விளம்பரமும், மெல்ல வற்புறுத்தும் உத்திகளும் தேவைப்படும். இந்த உத்திகளில் ஒன்று, அடிக்கடி கருத்தினை பலவிதங்களில் கொண்டுசெல்வது. பிரசாரமாக அதனைச் சொல்லாமல், ஒரு நிகழ்வு, அதனைச் சித்தரிக்கும் காட்சிப் படங்கள், அந்நிகழ்வின் அலசல், அதன் முடிவு, தான் சொல்லவந்த கருத்து என அமைக்கப்பட்டு, கருத்து ஒரு சவாலுக்கான விடையாகச் சொல்லப்படும். தருக்கத்தை பள்ளிக்காலத்திலிருந்தே நம்பிவந்திருக்கும் மனது, இதனை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும். காட்சிப் படங்களும் ஒலிகளும், கருத்தினை மனதில் அதிக ஆழத்தில் கொண்டுசேர்க்கும். எனவேதான், வன்முறை பற்றிய கட்டுரைகளில், நெஞ்சை அசைக்கும் படங்களை வலிந்து இடுகிறார்கள். எழுதுபவர், இதற்கெல்லாம் ஒரே விடை நாம் நம்பும் கருத்து மட்டுமே என்பதாகச் சொல்லியிருப்பார்.

இதன் காரணிகள் பல இருப்பினும், அவற்றில் இரண்டு, மிக முக்கியமானவை. ஒன்று பிரசார விளைவு, மற்றொன்று செய்திகளின் விளைவு. Propaganda Effect மற்றும் News Effect.

பிரசாரம் என்பது இங்கு வெளிப்படையாக மட்டும் வராமல், செய்திகளின், கட்டுரைகளின் உணர்வுகளின் நீட்சியில் மறைமுகமாக வருகிறது. விளம்பரங்களின் அடிநாதமே இந்தப் பிரசார விளைவுதான். இது மிக மோசமான மற்றொரு விளைவை நம் மனத்தில் விதைக்கிறது. அதனை ஸ்லீப்பர் எஃபெக்ட் என்பார்கள். இதனைப் கார்ல் ஹாவ்லெண்ட் என்ற ஆய்வாளர், போர் வீரர்களிடம், போர்ப் பிரசாரங்களின் தாக்கத்தை ஆய்வு செய்தபோது கண்டறிந்தார்.

காட்சிகளும், வலிமையான சொற்களும் நம்முள் புதைந்துபோகின்றன. அந்தக் கட்டுரை மறந்துபோனாலும், அதன் தொடர்பான காட்சிகள், சொற்கள், நமக்குள் ஒரு நீட்சியை கட்டுரையின் பொருளோடு மனதில் ஏற்படுத்துகின்றன. 1960-களில் தயாரிக்கப்பட்ட ஒரு பற்பசையை, வீட்டில் அப்பா பயன்படுத்தச் சொல்வதில் இதன் தாக்கம் இருக்கிறது. 80-களில் நன்றாக இருந்த பத்திரிகையை இன்றும் விடாமல் வாங்குவதன் பின்னணியில், ஸ்லீப்பர் எஃபெக்ட் விழித்திருக்கிறது.

அந்தப் பத்திரிகை அவர் வீட்டுக்கு வருவது நாலு மாதத்துக்கு முன்பே நின்றுவிட்டது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், மனநல ஆலோசகர் ‘அது திறமையான விளம்பர உத்தி’ என்றார். ‘‘ஸ்லீப்பர் எஃபெக்ட் மற்றும் பிரசார விளைவுகள், அவருக்குள் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. அவரை எழுதவும், பேசவும் ஊக்குவித்தவர்கள், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை அளித்து, அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அதன்பின், அவர் காரணிகளின் தூண்டுதல் இல்லாமலே, எந்த ஊடகத்திலும், செய்தியிலும், அந்தச் சொற்களையும், கருத்துகளையும் பிரதிபலிக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அதில் தன் கருத்துகளைப் பரிமாறுவதில், தன் அடையாளத்தை, அங்கீகாரத்தைப் பலப்படுத்த முயல்கிறார். தொலைக்காட்சியில் எவ்வளவோ சேனல்கள் இருக்கும்போது, அவர் ஏன் இந்தச் செய்திகளை, விவாதங்களைத் தேடிப் போகிறார் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்”.

மனநல ஆலோசகரது ஆலோசனைப்படி, மொபைலில் வாட்ஸப், பேஸ்புக் மென்பொருள் போன்றவை நீக்கப்பட்டன. அவரது லாப்டாப் மகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு யாரும் டிவி பார்க்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டு, டிடிஎச் சேவை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மாலைப்பொழுதுகளில், அருகில் இருக்கும் கோவிலுக்கு மனைவியுடன் நடந்துபோவது ஒரு பழக்கமாக வலிந்து கொண்டுவரப்பட்டது. அலுவலகத்தில், அவரது அலுவலகப் பயணங்கள் நிறுத்தப்பட்டு, அவரது பயணங்களை நண்பர்கள் பார்த்துக்கொண்டனர். குடும்பத்தினருடன், அருகில் இருக்கும் இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்தார். ஜிம்-மில் சேர்ந்து, இரு வாரம் சென்று, விலகினார். யோகா கிளாஸ் நாலு நாள்கள் சென்றார். யூடியூபில் பார்த்த ஒரு காணொளி சொன்ன உணவுப்பழக்கம் தனது எடையை 5 கிலோ குறைத்ததென சத்தியம் செய்தார். பொதுவில், இப்போது மனிதனாக இருக்கிறார்.

இலவசமாக வரும் ஊடகங்களோ, கேட்காமல் வரும் செய்திகளோ நமக்குச் செய்யும் நன்மையைக் கருதும் முன், ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். பிரெஞ்சில், ‘க்வீ போனோ’ (Cui Bono) என்பார்கள். அதன் தமிழாக்கம், ‘இதனால் யாருக்கு நன்மை?’

இந்தக் கேள்வி, நம்மை நேராகச் சிந்திக்கும் பாதையில் கொண்டுவந்துவிடும். முக்கியமாக, இந்தக் கேள்வி கேட்கச் சொல்வது, விளம்பரமல்ல.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com