3. அறிவே துணை

உழைக்கின்ற மனிதர்கள் பலர் ஓட்டாண்டிகளாகவே இருப்பதற்கு என்ன காரணம்? அவர்களிடம் செல்வம் சேர்ப்பதற்குரிய அடிப்படை அறிவு இல்லாதிருப்பதே காரணம்.


அனைத்தையும் ஆக்குவதற்கு பொருள் உதவுகிறது என்றால், அதனை ஆக்குவதற்கு அறிவே துணை நிற்கிறது. அறிவின் துணையின்றி பொருளைப் படைத்தலும், காத்தலும், முறையாக (செலவு) அழித்தலும் இயலாது. பொருள் மயமாகிய உலகின் தோற்றத்துக்கு அறிவு மயமாகிய இறைவன் காரணமாக இருப்பதைப்போல, உலக வாழ்க்கைக்குத் தேவையான பொருளை (செல்வத்தை) படைப்பதற்கும் இறைவனின் அம்சமாகிய அறிவே காரணமாகிறது.

அறிவுதான் நாம் அறியக்கூடிய தெய்வம் என்பதை ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பிலான கவிதையில் மகாகவி பாரதியார் தெளிவாகக் கூறியுள்ளார். “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் – பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ” என்கிறார் பாரதி. வெளியிலே பல தெய்வங்களைத் தேடி அலையும் மூடர்களே, நமக்குள்ளே அறிவாக இயங்குவதுதான் தெய்வம் என்று பல ஆயிரம் வேதங்கள் நுட்பமாகக் கூறுவதை நீங்கள் அறியமாட்டீர்களா? என்று நம்மை நோக்கிக் கேள்வி கேட்கிறார். 

கவிதையில் அறிவே தெய்வம் என்று மொழிந்துள்ள பாரதியார், கட்டுரையொன்றில் அறிவுதான் செல்வத்தைப் படைப்பதற்கும் காப்பதற்கும் முக்கியக் காரணம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ‘தொழிலாளர்’ என்ற தலைப்பிலே ‘தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்’ என்ற துணைத் தலைப்பிலான கட்டுரையில், “கைத்தொழிலால் (உழைப்பால்) செல்வம் விளைகிறது, அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது; கைத்தொழில் செல்வத்தை ஏற்படுத்துகிறது, அறிவுத் தொழில் கைத்தொழிலை நடத்துகிறது” என்று சற்று விளக்கமாகவே கூறியுள்ளார் பாரதி. 

உழைக்கின்ற மனிதர்கள் பலர் ஓட்டாண்டிகளாகவே இருப்பதற்கு என்ன காரணம்? அவர்களிடம் செல்வம் சேர்ப்பதற்குரிய அடிப்படை அறிவு இல்லாதிருப்பதே காரணம். “கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் இவையென்ற அறிவுமிலார்” என்று பிறிதொரு கவிதையில் மகாகவி பாரதி குறிப்பிட்டுள்ளார். கஞ்சி குடிப்பதற்குக்கூட வழியில்லாத வறுமை இருப்பதற்கு, இந்தக் காரணங்களால்தான் நாம் இந்தத் துயர நிலையை அடைந்திருக்கிறோம் என்ற விழிப்புணர்வாகிய அடிப்படை அறிவு இல்லாதிருப்பதே காரணம் என்கிறார் பாரதி. வறுமைக்கு முக்கியக் காரணம் அறியாமை என்பதை விளக்க, இதைவிட வேறு வார்த்தைகள் வேண்டுமா?

எனவே, செல்வத்தைச் சேர்ப்பதற்கு விருப்பம் மாத்திரம் நம்மிடம் இருந்தால் போதாது, அதற்குரிய அறிவும் நம்மிடம் இருந்தாக வேண்டும். இனி பொருளாகிய செல்வத்தை உருவாக்குவதற்கும், சேமித்துக் காப்பதற்கும், உரிய வகையில் செலவழிப்பதற்கும் அறிவு எவ்வாறு துணை நிற்கிறது என்பது பற்றி திருவள்ளுவர் அறிவுறுத்தியிருப்பதைக் காண்போம்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர். (430)

என்ற குறளில், அறிவின் அவசியத்தை வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். எவ்விதச் செல்வமும் அறிவால் ஆக்கவும், காக்கவும் செய்யப்படுகிறது என்பதால், அறிவு உடையவர்களே எல்லாம் உடையவர்கள் என்று கருதப்படுவர். அறிவற்றவன் செல்வம் படைத்திருந்தாலும் விரைவில் அதனை தனது அறிவீனத்தால் இழந்துவிடுவான் என்பதால், அறிவில்லாதவர்கள் எவ்விதச் செல்வத்தைச் சொந்தமாக வைத்திருந்தாலும் யாதொன்றும் இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்பது இக் குறளின் பொருள்.

இதற்கு முன்னுள்ள வேறொரு குறளிலும் அறிவின் அவசியத்தை திருவள்ளுவர் எடுத்தியம்பியுள்ளார். அக்குறள் –

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். (427)    

தனக்கு வரக்கூடிய நன்மைகளையோ தீமைகளையோ அறிவுடையவர்கள்தான் முன்கூட்டியே அறிந்துகொள்வார்கள். அறிவற்றவர்களுக்கு அவ்வாறு முன்கூடியே அறிகின்ற அறிவு இருக்காது என்பது இக்குறளின் பொருள். 

கல்வியின் மூலம், அதாவது கற்றுக்கொள்வதன் மூலம் அறிவு கிடைக்கிறது. அதேநேரத்தில், ஏட்டுச் சுரைக்காய் போன்று இருப்பதோ அல்லது பிறர் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதோ அறிவு ஆகிவிடாது. எந்தவொரு விஷயத்தையும் தனது பகுத்தறிவைக் கொண்டு உரைத்துப் பார்த்து உணர்ந்துகொள்வதே உண்மையில் அறிவாகும். இதுகுறித்து குறள் கூறுவதைக் காண்போம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (355)

துறவறவியலில் மெய்யுணர்தல் என்ற தலைப்பில் ஆன்மீக நோக்கில் திருவள்ளுவர் இயம்பியுள்ள இந்தக் குறள், இல்லற வாழ்வில் பொருள் தேடுவோருக்கும் பொருத்தமாய் அமைந்துள்ளது. எந்தவொரு பொருளும் வெளித் தோற்றத்தில் எத்தகைய தன்மை வாய்ந்ததாக இருந்தாலும்கூட, அதன் உட்பொருளாகிய உண்மைத் தோற்றம் (மெய்ப்பொருள்) என்ன என்பதைக் கண்டுணர்வதே அறிவு என்று இதற்குப் பொருள். செல்வத்தைத் தேடுகின்ற வேளையில் மதிமயக்கும் விஷயங்களுக்கு மனம் பிசகாமல், மெய்யாகவே நமக்கு நன்மை தரக்கூடிய வழிவகையிலான செல்வத்தைப் பகுத்தறிந்து பார்த்து நாடுவதே அறிவு என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆக, எது ஒன்றையும் செய்வதற்குரிய திறனும், எது ஒன்றும் நிகழ்வதை முன்கூட்டியே அறியக்கூடிய திறனும், உண்மையைப் பகுத்தறிந்து பார்க்கின்ற திறனும் உடையவர்களே அறிவுடையவர்கள் என்பது வள்ளுவர் வாக்கு. இந்த அறிவு இருந்தால்தான் செல்வத்தைப் படைக்கவும், காக்கவும் முடியும். 

செல்வத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் அறிவை நாம் தேடிக் கற்க வேண்டும். பொதுவாக, நாம் கல்வி கற்பதன் முக்கிய நோக்கமே, வளர்ந்தபின் வாழ்க்கையை நன்கு நடத்திச் செல்வதற்குத் தேவையான பொருட்செல்வத்தைத் தேடுவதற்கான அறிவைப் பெறுவதற்காகத்தான். வாழ்வின் பல்வேறு கூறுகளை கல்வி நமக்குச் சொல்லித் தந்தாலும், அதன் ஊடாக பொருள் சேர்ப்பதற்கு உரிய அறிவையும் அது நமக்கு ஊட்டுகிறது. பணமே எல்லாமும் என்பது இதற்குப் பொருள் அல்ல, பணமே எல்லாவற்றுக்கும் தேவை என்பதே இதன் பொருள். அதற்குக் கல்வி அறிவு மிகவும் துணை நிற்கிறது.

வாழ்வை நடத்திச் செல்வதற்குத் தேவையான கல்வியை நாம் எப்படிக் கற்க வேண்டும் தெரியுமா?

கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391)

என்கிறார் வள்ளுவர். கற்க வேண்டிய விஷயங்களை, கசடுகள் அதாவது குற்றங்குறைகள் இல்லாமல் கற்க வேண்டும். கற்பவை என்றால் கற்க வேண்டியவை என்று பொருள். கற்க வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் நாம் கசடு இல்லாமல் கற்க வேண்டும். அவ்வாறு கற்றால் மட்டும் போதாது, கல்வியின் மூலம் கற்றுக்கொண்ட நெறிமுறைகளில் உறுதியுடன் நாம் நிற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதே விதிமுறை செல்வம் சேர்ப்பதற்கான அறிவைப் பெறுவதற்கும் பொருந்தும். செல்வம் சேர்ப்பதற்காக எந்தவொரு தொழிலைச் செய்தாலும் சரி, பணியாற்றினாலும் சரி அல்லது முதலீடு செய்தாலும் சரி, அதற்குரிய விஷயங்களை நாம் எவ்வித குற்றம் குறைகள் இல்லாமல் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அறிய வேண்டிய அனைத்தையும் அரைகுறையாக அன்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் நாம் கற்றறிந்துகொண்ட நெறிமுறைகளில் இருந்து வழுவாமல் அதனைக் கடைப்பிடித்து, தொழில் புரிதலையோ, பணியாற்றுவதையோ, முதலீடு செய்வதையோ மேற்கொள்ள வேண்டும்.

வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் போதாது. அனுபவக் கல்வியும் அவசியம். அனைத்து அனுபவங்களையும் நாமே பெற்றுத் தெரிய வேண்டுமானால், நம்மில் எவருக்கும் நமது வாழ்நாள் போதாது. ஆகையால், அடுத்தவரின் அனுபவப் பாடங்களைக் கேட்டறிதல் மிகவும் முக்கியமானது. இதனைத்தான் வள்ளுவர் செவிச்செல்வம் என்கிறார்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)

பிறரிடமிருந்து அவர்களது அனுபவங்கள் உள்பட அவர்கள் தெரிந்துவைத்திருக்கும் பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொள்வதற்கு செவிச் செல்வம் என்று பெயர். இந்த கேள்வி்ச் செல்வம் எனப்படும் செவிச் செல்வந்தான், ஒருவரிடமுள்ள செல்வங்களிலேயே சிறந்த செல்வமாகும். ஏனெனில், அனைத்து வகை செல்வங்களிலும் இந்த செவிச் செல்வமே தலையாயதாகும் என்கிறார் வள்ளுவர். இவ்வாறு அவர் கூறியிருப்பதன் காரணம் என்ன? பிறர் சொல்வதை செவிகொடுத்துக் கேட்டு, அனுபவ அறிவாகிய செவிச் செல்வத்தைப் பெற்றிருப்பவர் வசம் எல்லாவிதமான செல்வங்களும் காலப்போக்கில் வந்து சேரும். கல்வியறிவைவிட கேள்வியறிவால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த படிக்காத மேதைகள் பலர் இருக்கிறார்கள். ஆகையால், பாட அறிவோடு, அனுபவப் பாட அறிவும் செல்வம் சேர்க்க முக்கிய உறுதுணையாகும்.

சரி, இந்த அறிவின் துணை கொண்டு, செல்வத்தை எவ்விதம் உருவாக்குவது? இதற்கு, அரசியல் என்ற பிரிவில் ‘இறைமாட்சி’ என்ற தலைப்பின் கீழ் திருவள்ளுவர் இயற்றியுள்ள திருக்குறள் விடை பகர்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)

இக்குறள் அரசனுக்காகக் கூறப்பட்டது. ஓர் அரசன், எவ்வாறு தனது அரசை நடத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட அறிவுரை இது. சட்டதிட்டங்களை இயற்றுதல், அதன் வழி பொருளை ஈட்டுதல், ஈட்டிய பொருளை சரியான வகையில் காப்பாற்றுதல், அப்பொருளைக் கொண்டு உரிய திட்டங்களின் வழியே செலவழித்தல் ஆகியவற்றில் வல்லமை பெற்றவனே அரசனாவான் என்பது இக்குறளின் பொருள். இருப்பினும் எந்தவொரு தனிமனிதரும் பணம் படைப்பதற்கான பொதுவான விதிமுறையாக இதனைப் பொருள்கொள்ளலாம். மேலும், இப்போதுதான் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆயிற்றே! அந்தவகையில் தனிமனிதனின் பொருள் உருவாக்கத்துக்கு இக்குறள் தரும் பொருளைக் காண்போம்.

இயற்றல் – முதலில் ஒருவன் தான் செல்வம் ஈட்டக்கூடிய அல்லது தன்னிடம் இருக்கக்கூடிய செல்வத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். பணிபுரிதல், சுயதொழில் செய்தல், பணிபுரிந்துகொண்டே ஓய்வு நேரங்களில் பகுதிநேர வேலைசெய்தல் அல்லது சுய வருமானத்துக்கான நடவடிக்கைகளில் இறங்குதல், கையிருப்பில் உள்ள சேமிப்பு அல்லது செல்வத்தை சரியான வகையில் முதலீடு செய்தல் உள்ளிட்டவை இத்திட்டமிடலில் அடங்கும். 

அடுத்த நடவடிக்கை – ஈட்டல். வருமானத்தை அல்லது தான் ஏற்கெனவே திட்டமிட்ட வழிவகைகளை மேற்கொண்டு பணத்தை ஈட்டுதல். மூன்றாவது நடவடிக்கை – காத்தல். தனது கடினமான உழைப்பினாலும், திறன் மிகுந்த திட்டங்களாலும் சேர்ந்துள்ள செல்வத்தை அழிந்துவிடாமலோ, கொள்ளை – திருட்டுப் போகாமலோ பாதுகாத்தல். நான்காவது நடவடிக்கை – காத்த செல்வத்தை வகுத்தல். அதாவது, ஈட்டிய தொகையை முறையாக இன்னின்ன செயல்களுக்கு என்று செலவழித்தல் அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்ளுதல். 

ஆக, இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகிய இவை நான்கும் செல்வத்தைத் தொடர்ந்து உருவாக்குவதற்கும், காப்பாற்றிப் பெருக்குவதற்கும் உரிய அடிப்படையான நான்கு குறள்நெறிகளாகும்.

செல்வம் சேர்ப்பதற்குரிய அறிவு படைத்தவர்கள் அடையக்கூடிய நிலை குறித்து செந்நாப்போதர் என்ன செப்பியுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம். 

ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். (472)

தமக்கு உரிய செயல்களை, தம்மால் செய்ய இயலக்கூடிய செயல்களை நன்கு அறிந்துகொண்டு, அவ்வாறு அறிந்துகொண்ட விஷயங்களில் இடைவிடாது நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்குச் செல்லாதது (முடியாதது) என்று எதுவுமில்லை என்பது இதன் பொருள். தம்மால் செய்யக்கூடியவற்றை நன்கு அறிந்துகொண்டு முயற்சி செய்பவர்கள் எதையும் செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்களாக உயர்கிறார்கள். ஆக, எல்லாவற்றையும் செல்லுபடியாக்கக் கூடிய செல்வம் ஒருவரிடம் சென்று சேர்வதற்கு, அவரிடம் அதற்குரிய அறிவும் இடைவிடாத முயற்சியும் இருப்பது இன்றியமையாததாகும்.

***

துணைத் தகவல்

நிதிசார் அறிவு

மனிதர்களுக்கு உடல் நலம் குறித்த ஹெல்த் அவேர்னஸ் எவ்வளவு அவசியமோ, அதேபோல் அவர்களது செல்வ நலம் குறித்த வெல்த் அவேர்னஸும் அவசியம். பணம் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்த அறிவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள், அர்த்தசாஸ்திரம் ஆகிய நூல்கள் மூலம் பாரத நாடு உலகுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக நாம் வெறுமனே பழம்பெருமை பேசிப் பயனில்லை. நிகழ்காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வள்ளுவர், சாணக்கியர் போன்ற நம் முன்னோர்கள் அறிய நேர்ந்தால் வெட்கித் தலைகுனிவார்கள்.

பொருளாதார விஷயங்கள் சார்ந்த அறிவில் - அதாவது நிதிசார் அறிவில் பின்தங்கியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எஸ் அண்ட் பி என்ற பிரபல சர்வதேச தர மதிப்பீட்டு ஆய்வு நிறுவனம், 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்திய நிதிசார் அறிவு குறித்த ஆய்வில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளும், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷியா, தென்னாப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்நாடுகளில், 18 வயதுக்கு மேற்பட்டோர்களில், 25 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பணம், பொருளாதார விஷயங்கள் தொடர்பான நிதிசார் அறிவை (ஃபைனான்ஷியல் லிட்டரஸி) பெற்றுள்ளனர். 

தெற்காசிய நாடுகளில் சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்காக, 59 சதவீதம் பேர் நிதிசார் அறிவு பெற்றுத் திகழ்கின்றனர். இதற்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து நடத்திவரும் நிதிசார் அறிவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை முக்கியக் காரணமாகக் கூறலாம். ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஃபின்லாந்து, ஜெர்மனி, இஸ்ரேல், ஹாலந்து, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா ஆகிய வளர்ந்த நாடுகளில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் நிதிசார் அறிவைப் பெற்றுள்ளனர். வயது வந்தவர்களிடம் நிதிசார் அறிவு வளர்ந்திருப்பதால்தான் அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன போலும். 

உலக அளவில் ஆண்களைவிட பெண்கள் நிதிசார் அறிவில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை 27 சதவீத ஆண்களும், 20 சதவீத பெண்களும் மட்டுமே நிதிசார் அறிவு பெற்றுள்ளனர்.

வங்கி வட்டித் தொகையில், சாதா வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் என்ன வித்தியாசம் என்பதில் தொடங்கி, நாட்டின் பணவீக்கம் வரையான பணம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் அறிந்துவைத்திருப்பது நிதிசார் அறிவில் அடங்கும். நம் நாட்டில் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கும், அப்படியே தொடங்கியிருந்தாலும் பணம் எடுப்பதற்கோ அல்லது செலுத்துவதற்கோ உரிய படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கே தடுமாறும் பாமரர்கள் மட்டுமல்ல, படித்தவர்களும் அதிகம் பேர் உள்ளனர். 

சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் என்ன வித்தியாசம், முதலீடுகளில் எத்தனை வகைகள் உள்ளன, வைப்புத்தொகை (டெபாசிட்) திரட்டும் நிதி நிறுவனங்களுக்கான தரக் குறியீடுகள் என்ன, பங்கு முதலீட்டில் என்ன இடர்பாடுகள், கடனுதவி பெறுவதற்கான நடைமுறைகள் யாவை, எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்கப்பட வேண்டும், பங்குச் சந்தையோடு தொடர்புடைய காப்பீட்டுத் திட்டத்தில் சாதக -பாதகங்கள் என்னென்ன, துறைவாரி முதலீட்டு நிர்வாகம் (போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்) எப்படிப் பயன்தரும், பட்ஜெட்டின் எதிர்விளைவாக வங்கி முதலீடுகளிலும் பங்கு முதலீடுகளிலும் நிகழவிருக்கும் மாற்றங்கள் என்ன, உலகப் பொருளாதாரச் சூழல் உள்ளூர் பொருளாதாரத்தில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தும் – இவையெல்லாம் நிதிசார் அறிவில் சில அம்சங்கள்.

இத்தகு சூழலில், நம் நாட்டில் நிதிசார் அறிவை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்ந்துள்ள பாரத ரிசர்வ் வங்கி, அதற்கான முன்முயற்சியைத் தற்போது எடுத்துள்ளது. நிதிசார் அறிவு தொடர்பான பல்வேறு விளக்கங்களை அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏதுவாக பிரத்யேக இணைய தளச் சேவையைத் தொடங்கியுள்ளது.

அதன் முகவரி: https://www.rbi.org.in/financialeducation/Home.aspx

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com