5. பிரித்து முதலிடு

ஊடுபயிர்களையும் மாற்றுப் பயிர்களையும் பயிரிடும் விவசாயியோ, ஒன்று கையைக் கடித்தாலும் மற்றொன்று கைகொடுக்க மகிழ்ச்சியோடு இருப்பார். அதேபோல்தான் முதலீடும்.

சிக்கனத்தின் மூலம் சேமிப்பு உருவாகிறது. இந்தச் சேமிப்பு என்பது விதை போன்றது. அதனை வெறுமனே வைத்திருந்தால் விளைச்சல் கிடைக்காது. அதனை விதைத்து உழவு செய்ய வேண்டும். அதுதான் முதலீடு. குறிப்பிட்ட திட்டங்களைத் தேர்ந்தெடுத்து நமது சேமிப்புத் தொகையான முதலீட்டை அதில் இடுவது விதைப்பாகவும், தொடர்ந்து அத் திட்டத்தைக் கண்காணித்து, பராமரித்து மேற்கொண்டு நிதிசார் நடவடிக்கைகளை எடுப்பது உழவாகவும் அமைகின்றன.

வேளாண்மையில்கூட ஒரேயொரு பயிரை மட்டுமே பயிர் செய்யும் விவசாயி, இடர் நேரும்போது நிலைகுலைந்து போவார். அதேநேரத்தில், ஊடுபயிர்களையும் மாற்றுப் பயிர்களையும் பயிரிடும் விவசாயியோ, ஒன்று கையைக் கடித்தாலும் மற்றொன்று கைகொடுக்க மகிழ்ச்சியோடு இருப்பார். அதேபோல்தான் முதலீடும்.

“டோன்ட் புட் ஆல் யுவர் எக்ஸ் இன் ஒன் பேஸ்கட்” (உனது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதே) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இவ்வாறு பிரித்துப்போடும்போது, ஒரு கூடை கீழே விழ நேர்ந்து அதில் உள்ள சில முட்டைகள் உடைந்துபோக நேரிட்டாலும், மற்ற கூடைகளில் உள்ள பிற முட்டைகள் உடையாமல் பாதுகாப்பாக இருக்கும். இதேபோல், வெளியூர் அல்லது வெளியிடங்களுக்குச் செல்கையில், ஒரே இடத்தில் அனைத்துப் பணத்தையும் வைத்திருக்காமல், நாலைந்து இடங்களில் பிரித்துவைத்து பாதுகாப்பாகக் கொண்டு செல்வோர் உண்டு. இதன் உட்பொருள், ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ள பணத்தை ஏதேனும் ஒருவகையில் இழக்க நேர்ந்தாலும்கூட, மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக இருந்து கைகொடுக்கும் என்பதே.

இந்த அடிப்படை எச்சரிக்கை உணர்வு, பணத்தை விதைத்து பணத்தை அறுவடை செய்யும் முதலீட்டிலும் இருந்தாக வேண்டும். அந்த வகையில், நமது கையிருப்புப் பணம் அனைத்தையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்துவிடக் கூடாது. அதனைப் பலவாக அல்லது சிலவாகவேனும் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடுகளில் பணத்தைப் பிரித்துப் போடுவதற்கு முன்னதாக, எந்த வகை முதலீடுகளைப் பிரித்து ஒதுக்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அங்கீகாரமற்ற நிதி நிறுவனங்கள் - அமைப்புகள், சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள், ஆசை காட்டி இழுக்கும் திட்டங்கள் போன்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும். நம்மிடம் உள்ள முதலுக்கே மோசமாகிவிடுமோ என்ற அச்சத்தை அல்லது ஐயத்தை ஏற்படுத்துகின்ற முதலீடுகளை முற்றிலுமாக நிராகரித்துவிட வேண்டும்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். (428)

என்கிறது திருக்குறள். நமக்கு பழி, பாவத்தை அல்லது தீங்கைத் தந்துவிடுமோ என்று அச்சப்படக்கூடிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவீனம். அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சி அவற்றைத் தவிர்ப்பதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் வள்ளுவர். இது முதலீடுகளுக்கும் மிகவும் பொருத்தமானதுதானே! பறப்பதைப் பிடிக்கிறேன் என்ற நினைப்பில், இருப்பதையும் இழந்துவிட்டால் என்னாவது? ஆகையால், ஆசைகளைத் தூண்டி ஏமாற்றுகின்ற, நம்பத்தகாத முதலீட்டுத் திட்டங்களை எடுத்த எடுப்பிலேயே மறுதலித்துவிட வேண்டும்.

அடுத்ததாக, முதலீட்டுத் திட்டங்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதில் உள்ள நன்மை - தீமைகள் என்ன, இத்திட்டத்தின் முடிவில் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் யாவை என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இதனைத்தான் வள்ளுவர்,

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையால் ஆளப் படும். (511)

என்கிறார். எந்தவொரு திட்டத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய வேண்டும். இவ்வளவு சாதகங்கள் இருக்கின்ற இத் திட்டத்தில், ஒருவேளை ஏற்படக்கூடிய பாதகங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இதில் சாதகங்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அத்திட்டத்தில் முதலீடு செய்தோமேயானால், அதன்மூலம் நமக்குக் கிடைக்ககூடிய பலன்கள் என்ன என்பதையும் அறிந்துகொண்டு, அதற்கேற்ப முதலீட்டைத் தொடங்குதல் என்ற வினையை ஆள வேண்டும் என்று இக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.

சரி, ஒதுக்க வேண்டிய முதலீடுகளை ஒதுக்கி, தேவையான முதலீட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அதில் அப்படியே முதலீடு செய்துவிடலாமா? அதிலேயும் பகுத்தறிந்து பார்க்க வேண்டியது இருக்கிறதா? அதற்கு கீழேயுள்ள குறள் விடை பகர்கிறது.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். (471)

இந்தக் குறள், போருக்குச் செல்லும் மன்னனுக்காகக் கூறப்பட்டது. தான் ஈடுபடக்கூடிய போரின் வலிமை, அதற்குரிய தனது வலிமை, எதிராளியின் வலிமை, இரு தரப்புக்கும் துணையாக வரக்கூடியவர்களின் வலிமை ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து பிறகு போரைத் தொடங்க வேண்டும் என்று இதற்குப் பொருள். அதேநேரத்தில், தற்காலத்துக்குத் தகுந்தபடி சாமானிய மனிதரின் பொருளியல் தேவைக்கும் ஏற்ப இக்குறளைப் பொருள் கொள்ளலாம்.

அந்த வகையில், வினை வலி என்பதை நாம் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய அல்லது நமக்குத் தேவைப்படுகின்ற திட்டத்தின் தன்மை என்று எடுத்துக்கொள்ளலாம். தன்வலி என்பது, அத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நமது பொருளாதார வலிமையைக் குறிக்கிறது. மாற்றான் வலி என்பதை இதற்கு மாற்றாக உள்ள மற்ற திட்டங்களின் தன்மை என்ன என்பதை அறிதல். துணைவலி என்பதை இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு நமக்குப் பயன்படக்கூடிய கூடுதல் பொருளாதார பலம் என்று ஒரு வகையிலும், குறிப்பிட்ட அந்த முதலீட்டுத் திட்டத்திலோ அல்லது மாற்றுத் திட்டத்திலோ ஏற்படக்கூடிய கூடுதல் பலன்கள் என்று மற்றொரு வகையிலும் இதனை ஆராயலாம்.

உதாரணத்துக்கு, சாதாரணமாக எடுக்கும் காப்பீட்டுத் திட்டத்துக்கு மாற்றாக, யூலிப் எனப்படும் பங்குச் சந்தை அலகுடன் (யூனிட்) இணைந்த காப்பீட்டுத் திட்டத்தை எடுப்போமேயானால், நமக்குக் கிடைக்கும் முதிர்வுத் தொகை அல்லது பலன்கள் அதிகரிக்க மிகுந்த வாய்ப்புள்ளது. இதேபோல், ஓர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை சாதாரணமாக எடுப்பதற்குப் பதிலாக, கூடுதல் சிறு பிரீமியத் தொகையில் விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவையும் கூடுதலாகக் கிடைக்கும் ரைடர் எனப்படும் திட்டத்தையும் சேர்த்து எடுக்கலாம்.

இவ்வாறெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து முதலீட்டுத் திட்டங்களை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றில் ஒரே திட்டத்தில் ஒட்டுமொத்தமாக பணத்தை முதலீடு செய்துவிடாமல், குறிப்பிட்ட சில திட்டங்களைத் தேர்ந்தெடுத்து பணத்தைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். வேறு வேறு திட்டங்கள், வேறு வேறு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் என்ற வகையிலே பிரித்து முதலீடு செய்வது என்பதை அமைத்துக்கொள்ளலாம்.

குறைந்த வட்டி கிடைத்தாலும், இடர்பாடு ஏதுமில்லாத வகையான முதலீடுகள் எல்லோருக்கும் ஏற்றவை. அரசு அமைப்புகள், வங்கிகளின் நிரந்தர முதலீட்டுத் திட்டங்கள், அவற்றின் கடன்பத்திரத் திட்டங்கள் ஆகியவை இந்த வகையைச் சார்ந்தவை. அடுத்ததாக, அதிக வட்டி அல்லது லாபம் கிடைத்தாலும் இந்தக் கூடுதல் ஆதாயமோ அல்லது சில சமயங்களில் முதலீட்டுத் தொகையோகூட குறையக்கூடிய இடர்கள் (ரிஸ்க்) உள்ளவை. பங்குப் பத்திர முதலீடுகள், பண்டகச் சந்தை முதலீடுகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், நீண்ட காலத்தில் வளர்ச்சி காண்பவை அடுத்த ரகம். தங்கம், வீட்டுமனைகள் ஆகியவற்றிலான முதலீடுகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இவை திருட்டு, அபகரிப்பு உள்ளிட்ட இடர்கள் ஏற்படக்கூடியவை.

ஆகையால், இதுபோன்ற முதலீட்டு வாய்ப்புகளை அலசி ஆராய்ந்து, வெவ்வேறு  திட்டங்களில் நமது பணத்தைப் பிரித்து பரவலாக முதலீடு செய்ய வேண்டும். அகல உழுதலைவிட ஆழ உழுதல் மேல் என்பது விவசாயத்துக்குப் பொருத்தமானது. ஆனால், முதலீட்டைப் பொருத்தவரை ஒரே திட்டத்தில் ஆழமாக உழுவதைவிட, பல்வேறு திட்டங்கள் என அகலமாக உழுவதே பலன் கொடுக்கும். அந்த வகையில், நிரந்தர வைப்புத் திட்டத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகை, இடர்பாடு இருந்தாலும் ஏற்றத்துக்கு மிகவும் வாய்ப்புள்ள பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட தொகை, தங்கம், நிலம் போன்றவற்றில் குறிப்பிட்ட சதவீதத் தொகை என பிரித்து முதலீடு செய்யலாம். அவரவர்களுக்கு உரிய இடர்களைச் சமாளிக்கும் திறன், வலிமை, பக்குவத்துக்கு ஏற்ப இந்த சதவீதத்தை அமைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு பிரித்து முதலிடுவதற்கும் பொருத்தமாக ஒரு குறள் உண்டு.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடல். (517)

இதனை – இந்தச் செயலை, இதனால் – இந்தக் கருவியைக் கொண்டு, இவன் முடிக்கவல்லான் என்று ஆய்ந்து – இந்த நபர் செய்து முடிக்க வல்லவர் என்பதை ஆராய்ந்து அறிந்துகொண்டு, அதனை அவன்கண் விடல் - அவ்வாறு பொருத்தமுடைய நபரிடம் அந்தச் செயலைப் புரிவதற்கான பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும் என்பது இக் குறளின் பொருள்.

முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தோமேயானால், இதனை என்பது நமது எதிர்கால அல்லது தற்கால பொருளாதாரத் தேவைக்கான திட்டம். இதனால் என்பது அதற்குரிய முதலீட்டு வகைப்பாடு. இவன் என்பது குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகின்ற பல்வேறு நிறுவனங்கள், நிதி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. இவற்றையெல்லாம் ஆராய்ந்து, நமது தேவைக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துகின்ற நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அத்திட்டத்தில் நமது முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.

நமக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. உதாரணத்துக்கு, பிள்ளைகளின் நிகழாண்டுக்கான அல்லது அடுத்த ஆண்டுக்கான பள்ளிக் கல்விச் செலவு, உயர் கல்விச் செலவு, காப்பீடு, மருத்துவக் காப்பீடு, பிள்ளைகளின் திருமணச் செலவு, சொந்த வீட்டுக் கனவு, வாகன வசதி, ஓய்வூதியப் பலன்கள் என நமது தேவைகள் விரிந்து நிற்கின்றன. ஆகையால், இவற்றை நிரல்படுத்தி அதற்கேற்ற திட்டங்களை ஆராய்ந்து, நமது பணத்தைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

பிரித்து முதலீடு செய்வதில், நாம் எந்தத் தேவைக்காக முதலீடு செய்கிறோம் என்பதையும், எந்தக் காலத்தில் நமக்கு அந்தப் பணம் தேவையாக இருக்கிறது என்பதையும், அதற்கு மிகவும் ஏற்ற திட்டம், நிறுவனம் எது என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பது மிகவும் அவசியம்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ

டெய்த உணர்ந்து செயல். (516)

என்கிறது முந்தைய குறள்.

முதலில் வினை நாடி - எந்தச் செயலுக்காக அந்த முதலீடு என்பதைப் பார்க்க வேண்டும். பிறகு செய்வானை நாடி – அதற்கு உரிய (நிறுவனத்தின்) திட்டத்தை ஆராய்ந்து அறிய வேண்டும். பின்னர் நமது தேவைக்கான காலத்துக்குப் பொருத்தமாக அவை இருக்கிறதா என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு வினையையும் (முதலீடு), செய்பவனையும் (உரிய திட்டம்) காலத்தோடு பொருத்திப் பார்த்து, அது ஏற்புடையாதக இருப்பின் அந்தச் செயலை (முதல் இடுதல்) மேற்கொள்ள வேண்டும். இவைதாம் பிரித்து முதல் இடுவதற்கு திருக்குறள் தரும் பொருள் விளக்கங்கள்.

***

துணைத் தகவல்

இடர் பகுப்பு

ஒளி இருந்தால் நிழல் இருக்கத்தான் செய்யும். அதுபோல, எந்தவொரு ஆதாயத்திலும் சிறிதளவாவது அபாயம் அல்லது இடர் இருக்கத்தான் செய்யும். ஆகையால் முதலீடு, நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதில் உள்ள இடர்கள் என்ன, அவற்றை எவ்விதம் சமாளிக்கலாம், அந்த இடரைக் கடந்து சென்றால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பதை முதலீட்டாளர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட முதலீடு அல்லது சொத்தில் (வீடு, வாகனம் போன்றவை) உள்ள இடர்கள், அந்த முதலீடு அல்லது சொத்தை கடனுதவி மூலம் வாங்குகிறோம் என்றால், அந்தக் கடனுக்கான வட்டி, கடனுதவி நிறுவனத்தின் கெடுபிடி முதலிய இடர்கள், குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டம் முதிர்வடைவதில் அல்லது முதிர்வுக்கு முன்பே நமது தேவைக்கு ஏற்ப பணத்தைத் திரும்ப எடுப்பதில் உள்ள இடர்கள், சொத்தாக இருந்தால் அதனை விற்பதில் உள்ள இடர்கள், முதலீட்டுச் சந்தை அல்லது சொத்து விற்பனைச் சந்தையில் நிலவும் இடர்கள், குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டத்தின் செயல்பாடு சார்ந்த இடர்கள், முதலீடு செய்துள்ள அல்லது செய்ய விரும்பும் நிறுவனத்துக்குரிய இடர்கள், முதலீடு சார்ந்த தொழில் துறைக்குரிய இடர்கள், குறிப்பிட்ட முதலீட்டில் அரசின் பட்ஜெட், வரி விதிப்பு போன்ற அறிவிப்புகளாலோ இதர அறிவிப்புகளாலோ ஏற்படக்கூடிய இடர்கள், பணவீக்கம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரச் சூழலால் ஏற்படக் கூடிய இடர்கள் என இடர்கள் பலவகைப்படும்.

இதுபோன்ற இடர்களைப் பகுத்தறிந்து பார்க்கும்போது, எல்லாவற்றிலுமே சில இடர்கள் இருந்தாலும் அவற்றை மீறி சில ஆதாயங்களும் இருக்கத்தான் செய்யும். ஆகையால், ஒரேயொரு திட்டத்தில் நமது அனைத்துக் கையிருப்பையும் முதலீடாக இடாமல், பகுத்து முதலீடு செய்ய வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ரிஸ்க் டைவர்ஸிஃபிகேஷன் என்று பெயர். இதனைத் தமிழில் இடர் பகுப்பு அல்லது இடர் மடைமாற்று என்று கூறலாம்.

முதலீட்டுத் திட்டங்களில் இந்த இடர் மடைமாற்று மிகவும் அவசியம். குறிப்பாக, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் இடர் பகுப்பைக் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். இதனால்தான், இடர் பகுப்பை ஆதாரமாகக் கொண்டு துறைவாரி நிர்வாகம் (போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்) என்ற முறை பங்கு வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நமது பல்வேறு வகைப்பட்ட முதலீடுகளில் பங்குச் சந்தையிலும் குறிப்பிட்ட சதவீத முதலீட்டை மேற்கொள்ளலாம். அந்தப் பங்குச் சந்தையிலும் துறைவாரி நிர்வாக முறைப்படி பல்வேறு தொழில் துறை சார்ந்த பங்குகளில் அத்தொகையைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். நமக்காக துறைவாரி முதலீட்டை மேற்கொள்வதற்கெனவே பல நிபுணர்கள் உள்ளனர். அதுபோக, பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் பணத்தில் ஒரு பகுதியை, கூடுதல் ஆதாயம் கருதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் போன்றவை இதுபோன்ற துறைவாரி நிர்வாக முறையிலான முதலீட்டையே மேற்கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com