21. மாயவலையில் சிக்காதீர்

அதிக அளவிலான வட்டி, கவர்ச்சிகரமான திட்டங்கள், இலவசங்கள் ஆகியவற்றின் மூலம் சில நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் பணத்தைக் கவர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

பேராசை பெருநஷ்டம் என்ற மூதுரை, எக்காலத்துக்கும் பொருந்தும் அறிவுரை. பொருளாதாரத்தில் ஒருவரது முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவை அச்சம், அறியாமை, பேராசை. இவற்றில் அச்சம் என்பது ஒன்றைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பதாலும், பழக்கம் இல்லாததாலும், நம்மால் செய்ய முடியுமா என்ற தன்னம்பிக்கைக் குறைவினாலும் ஏற்படுவது. இதனை முறையாக அறிந்துகொள்வதன் மூலமும், தகுந்த பயிற்சிகளின் மூலமும் சரிசெய்துவிட முடியும். அடுத்ததாக உள்ள அறியாமை, ஒரு புதிய விஷயத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமல் இருத்தல், முழுமையாகவும் தெளிவாகவும் அதுபற்றி விளங்கிக்கொள்ளாமல் இருத்தல் ஆகியவற்றால் ஏற்படுவது. முயற்சி எடுத்து அறிந்துகொள்வதன் மூலமும், தகுந்த நபர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலமும் அறியாமையை அகற்றிவிட முடியும்.

அதேநேரத்தில், மூன்றாவது தடையாக உள்ள பேராசை இருக்கிறதே, மனிதனை அது படுத்தும் பாடுதான் அதிகம். பேராசைக்காரர்களுக்கு அச்சம் இருக்காது, போதிய அறிவும் இருக்கும். ஆனால் அளவற்ற, அடக்கியாளத் தெரியாத ஆசைகளின் உந்துதலால், பேராசைக்காரர்கள் முறையற்ற முதலீடுகளை மேற்கொண்டு கைப்பொருளை இழந்து கதறுவர்.

அதிக அளவிலான வட்டி, கவர்ச்சிகரமான திட்டங்கள், இலவசங்கள் ஆகியவற்றின் மூலம் சில நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் பணத்தைக் கவர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் பற்றி அவை பணத்தை வாரிச் சுருட்டிய பின்னரே மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவருகிறது. அதன்பின்னர், இதுபோன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பல முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுப் பணம் திரும்பக் கிடைக்க உத்தரவாதம் இல்லை. மேலும், ஒரு சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வேறு சில நிறுவனங்கள் - வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு திட்டங்கள் என புற்றீசல்போலக் கிளம்புகின்றன.

அச்சமுடையவர்கள் அவர்களது இயல்பின் காரணமாக, பொதுவாகவே எவ்வகை புதுமையான முதலீட்டையும் பயத்துடன் பார்த்து ஒதுங்கி இருப்பதால், இதுபோன்ற நிறுவனங்களின் வலையில் விழுவதில்லை. அவர்களது அச்சம், ஒருவகையில் நல்லதுதான். ஆனால் அறியாமை உடையவர்களும், பேராசை பிடித்தவர்களும், பறப்பதைப் பிடிக்கலாம் என்ற நினைப்பில் இருப்பதையும் இழந்துவிடுகிறார்கள்.

ஒரு விஷயம் பற்றித் தெரியாததாலும், தைரியமின்மையாலும் ஏற்படுகின்ற அச்சம், உயர்வானது அல்ல. அதேநேரத்தில், பேராசை வயப்பட்டு தவறான நடவடிக்கையில் இறங்குவதற்கு அறிவுடையோர் கொள்கின்ற அச்சம் உயர்வானது, பெருமைக்குரியது. இதனை ‘சிற்றினம் சேராமை’ என்ற அதிகாரத்தின் கீழ் சிறப்பாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும். (451)

சிற்றினம் என்றால் சிறுமை இனம், அதாவது தகுதியற்ற வகைகள் என்று பொருள். சேர்ந்தவற்றை சிறுமைப்படுத்தும் விஷயங்கள் என்றும் கொள்ளலாம். பெருமை உடையவர்கள், இதுபோன்ற தகுதியற்ற சிற்றினங்களைக் கண்டு அஞ்சி, ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், உயர்ந்த குணமற்றவர்களான சிறுமையாளர்கள், இதுபோன்ற சிற்றினங்களை தமது சுற்றமாகக் கருதி சூழ்ந்துகொள்வார்கள் என்கிறது இக் குறள். பொருளாதார விஷயத்திலும் இதுபோலத்தான். தரமற்ற முதலீடுகளான சிற்றினங்களைக் கண்டால், பெருமையுடைவர்கள் அச்சத்துடன் விலகிச் சென்றுவிடுவார்கள். ஆனால் அறியாமையும், பேராசையும் கொண்ட சிறுமதியாளர்கள் இந்தத் தகுதியற்ற முதலீடுகளையே தாங்கள் சேருகின்ற இனமாகக் கருதி சேர்ந்துகொண்டு, பின்னர் அவதிப்படுவார்கள்.

மக்களை மயக்க, தகுதியற்ற நிதி நிறுவனங்கள் விரிக்கும் மாயவலையில் முக்கியமானது அதிக வட்டி. தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில், முதலீடுகளுக்கு அதிகபட்சம் 8 முதல் 10 சதவீத வட்டிக்கு மேல் தருவது, எந்தவொரு நிறுவனத்துக்கும் இயலாத, பொருந்தாத விஷயம். அப்படியிருக்க, இதற்குமேல் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டும் நிறுவனங்கள், பெரும்பாலும் திடீரென காணாமல்போகும் தில்லுமுல்லு நிறுவனங்களாகவே இருக்கும். நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, பொருள்களைத் தயாரிப்பதாகக் கூறிக்கொள்ளும் சில நிறுவனங்கள், பொருள் விற்பனை நிறுவனங்கள், தங்க நகை சேமிப்புத் திட்டங்களை அறிவிக்கும் சில நகைக் கடை நிறுவனங்களும், அதிக வட்டிக்கு ஆசை காட்டி மக்களை மோசம் செய்த பல சம்பவங்கள் உண்டு. அண்டை மாநிலமான கேரளத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் அதிகம் இருந்தன. அவை முதலீட்டாளர்களின் சேமிப்புகளை, ஜேப்படித் திருடனைப்போல அறுத்துக்கொண்டு சென்றுவிடுவதாலோ என்னவோ, அவற்றுக்கு பிளேடு நிறுவனங்கள் என்றே செல்லப் பெயர்(!) உண்டு.

இதுபோன்ற நிறுவனங்களைக் கண்டு அஞ்சி, ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்பதற்கேற்ப விலகி இருப்பதே அறிவு, அறம். அவ்வாறில்லாமல் ஆசை உந்தித் தள்ளினால் ஆபத்தில் மாட்டிக்கொள்ள நேரிடும். இதனை ‘அவா அறுத்தல்’ அதிகாரத்தின் கீழ் வரும் ஒரு குறளில் அறிவுறுத்துகிறார் வாழ்நெறி காட்டும் வள்ளுவப் பெருந்தகை.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா. (366)

அஞ்சுவது ஓரும் அறனே, ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். ஓரும் என்பது அசைச்சொல். செய்யுளின் ஓசை நயத்துக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. அவா என்றால் ஆசை, பேராசை என்று பொருள். ஒருவனை வஞ்சிப்பது, அதாவது துரோகமிழைத்துக் கெடுப்பது எதுவென்றால், அவன் கொண்டிருக்கும் ஆசைகள், பேராசைகளே. இப்படிப்பட்ட ஆசைகளையும், பேராசைகளையும் கண்டு அஞ்சி, அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தலே அறம் - அதாவது வாழ்நெறி ஆகும் என்கிறது இக்குறள். அறம் என்றால் வரையறை செய்யப்பட்ட நெறிமுறை என்று பொருள். ஆகையால், முதலீட்டாளர்களும் நெறிமுறைகளுக்கு உட்பட்ட, முறையான முதலீட்டுத் திட்டங்களில் மட்டுமே இணைய வேண்டும். இல்லையேல் அவர்கள் வஞ்சனையில் விழ நேரிடும்.

மக்கள் பணத்தை வாரிச் சுருட்டுவதற்கு, விதவிதமான திட்டங்களை ஏமாற்று நிறுவனங்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன. தேக்கு மர முதலீடு, ஈமு கோழி வளர்ப்பு, நாம் பார்த்தேயிராத வெளி மாநில ஊரில் வேளாண் நில முதலீடு, விடுமுறைக் கால விடுதி (டைம்ஷேர்) முதலீடு என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவையெல்லாம் காரிய சாத்தியமா, இவற்றின் நம்பகத்தன்மை என்ன, இவற்றால் நமக்கு உண்மையிலேயே என்ன பலன் என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், அவர்கள் கூறும் அபரிமித வட்டி, இதர பரிசுப் பொருள்கள் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு, பின்னர் ‘விளக்கில் விழுந்த விட்டில்பூச்சிகளாக’ அவதிப்படும் முதலீட்டாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதுபோன்றவர்கள், ஒரு முறை ஒரு வகையிலான திட்டத்தில் ஏமாந்துபோனால்கூட ‘புத்திக் கொள்முதல் செய்துகொள்ள மாட்டார்கள். சிறிது காலம் கழித்து வேறு வகையிலான ஏமாற்றுத் திட்டத்தில் பேராசை வசப்பட்டு சேர்ந்து, பின்னர் மீண்டும் வஞ்சனைக்கு ஆளாவார்கள். இவர்களுக்கான எச்சரிக்கையையும் ‘அவா அறுத்தல்’ அதிகாரத்தில் செப்பியுள்ளார் செந்நாப்போதர்.

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம்அஃ துண்டேல்

தவாஅது மென்மேல் வரும். (368)

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம், அஃது உண்டேல் தவாது (தவாஅது என வந்திருப்பது அளபடை) மென்மேல் வரும் எனப் பிரித்துப் படிக்க வேண்டும். ஆசை (பேராசை) இல்லாதவர்களுக்கு, துன்பம் இல்லை என்றாகிவிடும். அது இருக்குமாயின், துன்பமானது மென்மேலும் வந்துகொண்டே இருக்கும் என்று எச்சரிக்கிறது இக்குறள்.

ஆயினும், அப்பாவி முதலீட்டாளர்களையும், ஆசைப் பிடித்தாட்டும் முதலீட்டாளர்களையும் ஏமாற்று நிறுவனங்கள் எளிதில் விடுவதாக இல்லை. அவற்றில் ஒன்றுதான் எம்.எல்.எம். என்று சுருக்கமாக அழைக்கப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (பல்லடுக்கு விற்பனை) நிறுவனங்கள். நேரடி விற்பனை (டைரக்ட் மார்க்கெட்டிங்) நிறுவனங்கள் என்று தங்களை இவை அழைத்துக்கொள்கின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கு பேரிடி விற்பனை நிறுவனங்களாகவே உள்ளன.

எம்.எல்.எம். நிறுவனங்கள் அனைத்துமே ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டவை என்று குறை கூறிவிட முடியாது. ஆனால், முறையாக இயங்கும் எம்.எல்.எம். நிறுவனங்களில்கூட, அதன் திட்டத்தில் முதலில் சேர்ந்து கடுமையாக உழைத்தவர்களுக்கு மட்டுமே அதிக லாபம் கிடைக்கும். பின்னால் சேர்ந்தவர்களுக்கு கடினமாக உழைத்தாலும் அந்த அளவுக்கு வருமானம் கிடைக்காது.

இதுபோன்ற நிறுவனங்களில் சில, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை விற்றாலும்கூட, வெளிச் சந்தையில் கிடைக்கும் அதேபோன்ற பொருள்களின் விலையைவிட இங்கு விலை மிக அதிகமாக இருக்கும். ஆகையால், முதலீடு பொருளாகக் கிடைத்தாலும்கூட அதை விற்று லாபமீட்டுவது கடினமே. நாமே பயன்படுத்தினால்கூட விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் நஷ்டமே மிஞ்சும். மேலும், தொடர்புச் சங்கிலி அறுந்துவிடாமல் தொடர்ந்து கீழடுக்கில் ஆட்கள் சேர்ந்துகொண்டே இருந்தால்தான், இடையடுக்கில் உள்ளவர்களுக்கு வருமானம் கிடைக்கும். இல்லையேல் அதுவும் இடர்ப்பாடுதான்.

அதேநேரத்தில், மக்களுக்கு அவசியமில்லாத பொருள்களை அவர்களது தலையில் கட்டும் எம்.எல்.எம். நிறுவனங்களும் அதிகம். உதாரணத்துக்கு, காந்தப் படுக்கை எனப்படும் மேக்னடிக் பெட் விற்பனை. இவற்றின் விலையும் மிக அதிகம். நமக்குக் கீழே ஆட்களைச் சேர்த்தால் லாபப் பங்கும், ராயல்டியும் கிடைக்கும் என்ற பேராசையில் சேர்ந்துவிட்டு, பிறகு ஆட்களை கீழே சேர்க்கமுடியாமல் அல்லல்படுவோர் அதிகம். எம்.எல்.எம். நிறுவனங்களிலேயே மிகவும் மோசமானவை பிரமிடு முறையைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள். அதாவது எகிப்திய பிரமிடானது, கீழே அகன்று இருக்கும், மேலே செல்லச் செல்ல கூம்பிக்கொண்டே சென்று, மேலுச்சியில் கூர்மையாக முடியும். அதேபோல, பிரமிடு முறையைத் தொடக்கிவைத்த எம்.எல்.எம். நிறுவனங்களின் உரிமையாளர்களும், அவர்களது சுற்றத்தாரும் இத்திட்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பார்கள். அவர்களுக்குக் கீழே அடுக்குகள் உருவாகிக்கொண்டே வரும். முதலில் சேருபவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். பின்னால் சேரச் சேர அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு குறுகிவிடும். அதேநேரத்தில் அவர்களது எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், பிரமிடு வடிவின் உச்சியில் இருக்கும் உரிமையாளர்கள் வகையறாக்களையே போய்ச்சேரும்.

இதுபோன்ற திட்டங்களில் சாதாரண மக்களில் பலர் சேருவதற்குக் காரணம், இத் திட்டத்தில் சேர்ந்துள்ள தமது உறவினர்களோ, நண்பர்களோ, அண்டைவீட்டாரோ தரும் நச்சரிப்புத் தாங்காமல்தான். அவர்களோடு உள்ள உறவு, நட்பின் காரணமாக அதிகம் யோசிக்காமல் இதுபோன்ற திட்டங்களில் சேர்ந்துவிட்டு, பின்னர் தங்களது முதலீட்டுத் தொகையுடன் உறவையும், நட்பையும்கூட தலைமுழுக நேரிடும் அப்பாவிகளின் எண்ணிக்கை அனேகம். இதுபோன்றவர்களுக்கு ‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தின் கீழ் வருகின்ற குறள், தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் எச்சரிக்கிறது.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும். (507)

காதன்மை என்றால் அன்புடைமை என்று பொருள். கந்தா என்றால் காரணமாக என்று பொருள். ஒருவரின் பேரில் உள்ள அன்பின் காரணமாக, அவருக்கு ஒரு விஷயத்தில் உள்ள அறிவின் ஆழத்தை ஆராய்ந்து பார்க்காமல் நம்பி, அவர் சொல்வதைக் கேட்டு மற்றொருவர் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார் எனில், அது எல்லாவிதமான அறிவீனத்தையும் தந்துவிடும் என்று இக்குறள் எடுத்தியம்புகிறது. எம்.எல்.எம். போன்ற முதலீடுகளுக்கு இக் குறள் மிகவும் ஏற்றது. ஏற்கெனவே இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவரின் பேரில் உள்ள அன்பு (அதாவது நட்பு, உறவு) காரணமாக, அவருக்கு இத்திட்டம் குறித்து முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதைக்கூட ஆராய்ந்து பார்க்காமல், வெற்று நம்பிக்கையின் பேரில் அத்திட்டத்தில் நாமும் சேர்ந்தால், அதுதான் முட்டாள்தனத்தின் மொத்தக் கொள்முதல் என்று இக்குறள் எச்சரிக்கிறது.

சில எம்.எல்.எம். நிறுவனங்கள் பொருள் விற்பனையில்கூட இறங்காமல், பணத்தை மட்டுமே முதலீடு செய்யத் தூண்டி ஏமாற்றியுள்ளன. ‘குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவிட்டு, தன்னைப்போல் மேலும் இருவரை இத்திட்டத்தில் சேர்த்துவிட்டால் குறிப்பிட்ட ஊக்கத்தொகை, அதிகபட்சம் ஆட்களைச் சேர்த்தால் அதிக அளவில் ஊக்கத்தொகை. இவ்வாறாக முதலீட்டைவிட பல மடங்குப் பணம் திரும்பக் கிடைக்கும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முதலீட்டையும் திரும்பப் பெறலாம்’ என்று ஆசை வார்த்தைகள் காட்டி மோசம் செய்த நிறுவனங்கள் உண்டு. முதலீடு செய்துவிட்டு சில சர்வேக்களுக்கான (ஆய்வுகளுக்கான) படிவங்களைப் பூர்த்தி செய்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும், ஆட்களைச் சேர்த்துவிட்டால் அதற்குத் தனிக் கமிஷன் தொகை என்றும் கூறி சில நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. இந்த ஏமாற்று வேலைகளின் உச்சகட்டம், குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவிட்டு, இணையத்தில் (ஆன்லைனில்) சில இணையதளங்களைச் சொடுக்கினால் (கிளிக் செய்தால்) போதும், ஒவ்வொரு சொடுக்குக்கும் ரூ.5 வீதம் பணம் என்று கூறி ஏமாற்றியதுதான்.

ஆனால் அறியாமையாலோ, பேராசையாலோ, தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்ற தேவையற்ற நம்பிக்கையாலோ இதுபோன்ற நிறுவனங்களின் பின்னணியையும், இத் திட்டங்களின் சட்டப்பூர்வ தகுதிகளையும் முதலீட்டாளர்கள் ஆராய்வதில்லை. தானும் ஆராய்ந்து, பலரிடமும் கேட்டறிந்து, நிதானமாக யோசித்தால் இதுபோன்ற திட்டங்களில் யாரும் சேரமாட்டார்கள். அவசரம், உலகில் மற்றவனைவிட தான் விரைவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற குருட்டு அவசரம், பாழுங்கிணற்றில் தள்ளிவிடுகிறது. இவர்களுக்காகவே திருவள்ளுவர் ‘ஒற்றாடல்’ என்ற அதிகாரத்தின் கீழ் ஒப்பற்ற அறிவுரையை வழங்கியுள்ளார்.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588)

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். ஓர் அரசானது, ஓர் ஒற்றன் மூலம் கண்டறிந்த விஷயங்களை அவனுக்குத் தெரியாமல் மற்றோர் ஒற்றன் மூலம் சரிபார்க்கச் செய்து, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்கிறது இக்குறள். அந்த வகையில், அபரிமித வட்டி உள்ளிட்டவற்றை அறிவிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை நன்கு ஆராய்வதோடு மட்டுமின்றி, அதுகுறித்து அறிந்த வேறு சிலரின் அறிவுரைகளையும் கேட்டு ஒப்பாய்வு செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களால் பயனடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; அதுவும் சரியானதுதானா என்பதை வேறு பிறரிடம் கேட்டு உண்மையை ஒப்பாய்வு செய்துகொள்ள வேண்டும்.

ஆராய்ந்து பார்க்காமல் முதலீடு செய்தால், நமக்குத்தான் நஷ்டம். சில நிதி நிறுவனங்கள் அதிக அளவிலான வட்டியை தாங்கள் அறிவித்த வண்ணம், முதல் சில மாதங்களில் அல்லது ஆண்டுகளில் கொடுத்து வரும். அதைப் பார்த்ததும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட்டு, உடனடியாகப் போய் முதலீடு செய்துவிட்டு மோசமடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள், தாங்கள் கூறிய திட்டத்தை உண்மையிலேயே செயல்படுத்தி அதன் லாபத்தின் மூலம் நமக்கு வட்டி முதலிய ஆதாயத்தைப் பிரித்துக் கொடுப்பதில்லை. மாறாக, முதலில் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அதிக அளவிலான வட்டித் தொகையையும், அதில் சிலருக்குத் திருப்பி வழங்கும் அசல் தொகையையும், பின்னால் இந்தத் திட்டத்தில் சேரும் முதலீட்டாளர்கள் தரும் பணத்தைக்கொண்டே திருப்பித் தருகிறார்கள். பின்னால் சேருபவர்களின் பணம் ‘பாழுங்கிணற்றுக்குள் போட்டதைப் போல’த்தான்.

இதுபோன்ற நிறுவனங்களின் செயல்முறைக்கு ஆங்கிலத்தில் ‘பொன்ஸீ ஸ்கீம்’ என்று பெயர். பின்னால் வருவோர் தரும் தொகையை எடுத்து முன்பு சேர்ந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு ஏமாற்றும் திட்டம் என்பதே இதன் விளக்கம்.

நம்மிடம் பணம் இல்லாமல் இருப்பது அவமானகரமானது அல்ல; இருக்கும் பணத்தையும் ஏமாந்துபோவதுதான் அவமானத்துக்குரியது. பணம் இல்லாதவர்களிடம்கூட, உலகம் சில சமயங்களில் பரிதாபப்படும். ஆனால், ஏமாந்து பணத்தைப் பறிகொடுத்தவர்களை எள்ளி நகையாடும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளா துலகு. (470)

‘தெரிந்து செயல்வகை’ என்ற அதிகாரத்தின் கீழ் மேற்கண்ட குறளை சரியாக எடுத்துரைத்துள்ளார் முப்பால் முனிவர். தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு என்றால், தமது இயல்போடு பொருந்தாதவற்றை உலகம், அதாவது சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று பொருள். ஆகையால், உலகம் (சமூகம்) எள்ளி நகைக்காத விஷயங்களை எண்ணிப் பார்த்து நாம் செயல்பட வேண்டும் என்று இக்குறள் வலியுறுத்துகிறது.

ஆகையால், ஏமாற்று நிதி நிறுவனங்கள் விரிக்கும் மதிமயக்கும் மாயவலைகளில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க, பேராசையையும் அறியாமையையும் உடனடியாகத் தவிர்ப்போம். இல்லையேல் இழக்க நேர்வது நமது வருமானம் மட்டுமல்ல, மானமும் கூடத்தான்.

***

துணைத் தகவல்

நூதன மோசடி நிறுவனங்கள்

‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’ என்ற திரைப்பட வசனம், ஏமாற்று நிதி நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமானது. மகாகவி பாரதியார், பாஞ்சாலி சபதத்தில் திரௌபதியின் சேலையை துச்சாதனன் கழற்றும்போது, கண்ண பெருமானின் அருளால், ‘கழற்றிடக் கழற்றிட துணிபுதிதாய்’ தோன்றிய வண்ணம் இருந்ததாகக் குறிப்பிடுவார். அதுபோல், இந்த மோசடி நிறுவனங்களும் கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டாலும்கூட, சளைக்காமலும் அஞ்சாமலும் புதிய புதிய உத்திகளோடு புதிய புதிய ஏமாற்றுப் பேர்வழிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதுபோன்ற நூதன மோசடித் திட்டங்கள் மூலம் பெருமளவு பணத்தை வாரிச் சுருட்டிய முன்னணி ஏமாற்று நிறுவனங்கள் பற்றி இப்போது காண்போம் –

பி.ஏ.சி.எல். – பேர்ல்ஸ் அக்ரோ கம்பெனி லிமிடெட் என்பதன் சுருக்கமே பி.ஏ.சி.எல்.. நாட்டின் மிகப்பெரிய மோசடியை நிகழ்த்திக்காட்டிய முன்னணி நிறுவனம் இதுதான். மக்களிடம் பணம் திரட்டி அவர்கள் சார்பில் வேளாண் நிலங்களை வாங்குவதாக இந்நிறுவனம் கூறிக்கொண்டது. வாங்கும் பணத்துக்கு விவசாய நிலத்தை இவர்கள் நமது பெயரில் பட்டா போட்டுத் தருவார்களாம், வேண்டாம் என்றால், அதனை விற்று அந்தத் தொகையை நமக்குத் தருவார்களாம். நாட்டில் விவசாய நிலத்தை வாங்கிக்கொள்ள அத்தனைப் பெரிய போட்டியா இருக்கிறது? அதைவிட மோசமான நகைச்சுவை, வங்கிகளைப்போல எஃப்.டி, ஆர்.டி., அதாவது சில ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பாகவும், மாதாந்திர தொடர் வைப்பாகவும் இந்நிறுவனம் பணத்தைத் திரட்டி, அந்தத் தொகையைக் கொண்டு வேளாண் நிலம் வாங்குவதாக அறிவித்ததுதான். இந்த முதலீடுகளுக்கு அதிக அளவிலான வட்டி அறிவிப்பு வேறு. முதலில் சேர்ந்த சில முதலீட்டாளர்களுக்கு இவர்கள் அறிவித்த 5 ஆண்டுகளுக்குப் பின், வேளாண் நிலத்தை விற்றதாகக் கூறி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதிக வட்டித் தொகையுடன் அசலும் திருப்பித் தரப்பட்டது.

இதை நம்பி, மொத்தம் 5 கோடியே 60 லட்சம் பேர் இதில் முதலீடு செய்தார்கள். அவர்களிடமிருந்து பி.ஏ.சி.எல். நிறுவனம் திரட்டி மோசடி செய்த தொகை ரூ.49,100 கோடி. பின்னர் இந் நிறுவனத்தின் ‘குட்டு’ வெளிப்பட்டதைத் தொடர்ந்து, செபி அமைப்பு நடவடிக்கை எடுத்தது. இந்நிறுவனத்தின் தலைவர் நிர்மல் சிங் பாங்கூ கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில், இந்நிறுவனத்தின் சொத்துகளை விற்று, முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்க, லோதா கமிட்டியை நீதிபதிகள் நியமித்துள்ளனர்.

சஹாரா – சஹாரா டி.வி., சஹாரா ஏர்லைன்ஸ் ஆகிய பிரபல நிறுவனங்களை நடத்திவந்த சஹாரா குழுமம்தான், சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி ரூ.24,000 கோடி மோசடியில் ஈடுபட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களிடமிருந்து சட்டத்துக்குப் புறம்பாக பணமாகவே தனது முதலீடுகளை இந்த இரண்டு நிறுவனங்களும் திரட்டின. இதன் மோசடியை அறிந்த செபி, இத் திட்டங்களை சட்டவிரோத நடவடிக்கை என்று அறிவித்ததுடன், முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பியளிக்கவும் உத்தரவிட்டது. இதைச் செய்யத் தவறியதால், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களின் பணத்தைத் திருப்பியளிப்பதற்காக இந் நிறுவனங்களின் சொத்துகளை விற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாரதா – சாரதா சிட் ஃபண்ட் என்ற நிறுவனம், மேற்கு வங்கத்தை ஆளும் அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் செயல்பட்ட மோசடி நிறுவனமாகும். இதன் கீழ் சுமார் 200 சிறு நிறுவனங்கள் இயங்கின. நிலம், வீடுகள் ஆகியவற்றை வாங்குவதற்கான முதலீடு என்ற பெயரில் மாதத் தவணைகளில் அப்பாவி மக்கள் சுமார் 18 லட்சம் பேரிடம் ரூ.2,400 கோடியை சாரதா சிட் ஃபண்ட் திரட்டி ஏமாற்றியது. மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய கிழக்கு மாநிலங்களில்தான் ஏராளமானோர் ஏமாந்தனர். அவர்களில் 35 பேர் தற்கொலை செய்துகொண்டனர். நிலைமையின் விபரீதத்தை அடுத்து. சாரதா சிட் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அப்ளேஸ் இன்ஃபோ – தில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த அப்ளேஸ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், இணையத்தில் சில வெப்சைட்டுகளை கிளிக் செய்வதன் மூலம், ஒரு கிளிக்குக்கு ரூ.5 வீதம் பணம் கிடைக்கும் என்று கூறி முதலீடு திரட்டி ஏமாற்றிய நிறுவனம். சுமார் 6.5 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடியை இந் நிறுவனம் மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அபிநவ் மிட்டல், ஸ்ரீதர் பிரசாத் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் (2017) கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.500 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட முடிந்தது.

ஸ்பீக் ஆசியா – சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கிய இந்நிறுவனம், 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.2,200 கோடி திரட்டி ஏமாற்றியது. இந்நிறுவனத்தின் திட்டத்தில் சேருவோர் ரூ.11,000 முதலீடு செய்ய வேண்டும். பதிலுக்கு இந்நிறுவனம் தருகின்ற 2 ஆய்வுப் படிவங்களை இணைய தளத்தில் நிரப்பித் தந்தால் போதும். இதற்கு ரூ.4,000 வழங்கப்படுமாம். இத்திட்டத்தில் பிறரைச் சேர்த்துவிட்டால், தலைக்கு ரூ.1,000 கிடைக்குமாம். இவ்வாறாக ஆண்டுக்கு ரூ.52,000 வருமானம் ஈட்டலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றியது இந்நிறுவனம். இதன் தலைவர் ராம் சுமிரன் பால், கடந்த 2013-இல் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஸ்டாக் குரு – உல்லாஸ் பிரபாகர், ரக்ஷா என்ற தம்பதி இணைந்து நடத்திய பங்கு முதலீட்டு மோசடி நிறுவனம்தான் ஸ்டாக் குரு இந்தியா. வாடிக்கையாளர்கள் சார்பில் பங்குகளில் முதலீடு செய்து, லாபமீட்டித் தருவதாகக் கூறி சுமார் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.1,100 கோடி திரட்டியது இந் நிறுவனம். ‘குட்டு’ வெளிப்பட்டதைத் தொடர்ந்து, மோசடி தம்பதியும், அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட பங்கு முதலீட்டு நிபுணர் யோகேந்திரா என்பவரும் கடந்த 2012-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மோசடி தம்பதியிடமிருந்து ரூ.83 கோடி மட்டுமே பறிமுதல் செய்ய முடிந்தது. இவர்களிடம் லஞ்சம் வாங்க முயன்ற மூத்த வருமான வரித் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தனிக்கதை.

க்யூநெட் – ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், எம்.எல்.எம். முறையில் ரூ.1,000 கோடி திரட்டி மோசடி செய்தது. க்வெஸ்ட்நெஸ்ட், கோல்டுக்வெஸ்ட் ஆகிய பெயர்களில் ஏற்கெனவே நிறுவனங்களை நடத்தி, எம்.எல்.எம். முறையில் தங்க நாணய விற்பனை என்ற பெயரில் மோசடி செய்த அதே பேர்வழிகளின் புதிய அவதாரம்தான் க்யூநெட். 2009-ஆம் ஆண்டில் மேற்கண்ட 2 நிறுவனங்களும் தடை செய்யப்பட்ட நிலையில், க்யூநெட் என்ற புதிய பெயரில் காந்தத் தட்டுகள், மூலிகைப் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் புதிய மோசடி அரங்கேற்றப்பட்டது. இந்த மோசடியில் முக்கிய சூத்ரதாரிகளான பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் மைக்கேல் ஃபெரேரா உள்ளிட்ட 4 பேர், கடந்த 2016-இல் கைது செய்யப்பட்டனர்.

டிவிஐ எக்ஸ்பிரஸ் – டிராவல் வெஞ்சர்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ்பிரஸ் என்பதன் சுருக்கமே டிவிஐ எக்ஸ்பிரஸ். சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிக்கொண்ட இந்நிறுவனம், ஓர் இணையதளத்தைத் தொடங்கி நூதன மோசடியில் ஈடுபட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தருண் திரிகா. இவரது வங்கிக் கணக்கில் ரூ.15,000 செலுத்தி, இந் நிறுவனத்தின் இணையதளத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். தன்னைப்போல் மேலும் 2 உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் ரூ.30,000 கிடைக்கும். இதேபோல் அதிகபட்சம் 64 உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டு, ரூ.5 லட்சம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டப்பட்டது. எந்தப் பொருளையும் இந்நிறுவனம் விற்கவில்லை. ரூபாயை முதலீடு செய்துவிட்டு, மற்றவர்களைச் சேர்த்துவிட்டால் வருமானம். என்ன ஒரு நூதனக் கொள்ளை? இதனை நம்பி, இந்தியாவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் ஏமாந்தனர். உலக அளவில் 70 லட்சம் பேரிடம் இதுபோல் இந்நிறுவனம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2013-ல் மோசடிப் பேர்வழி தருண் திரிகா கைது செய்யப்பட்டார்.

நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் சில சதி நிறுவனங்களிடமும், எம்.எல்.எம். நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் சில எமன் நிறுவனங்களிடமும், சிட் ஃபண்ட் என்ற பெயரில் செயல்படும் சில சீட் ஃபண்ட் நிறுவனங்களிடமும், விவசாய நில முதலீடு என்ற பெயரில் ஏமாற்றும் விபரீத நிறுவனங்களிடமும் இதுபோன்று பல்வேறு நூதன முறைகளில் மோசடி செய்ய முனையும் எண்ணற்ற நிறுவனங்களிடமும் எச்சரிக்கையாக இருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com