22. சமூகம் காத்திடு

ஒருவனது நல்லது - கெட்டது அனைத்திலும் கூட நிற்பது சுற்றம். அந்தச் சுற்றத்தை எவனொருவன் தழுவி வாழ்கிறானோ, அவன்தான் வாழ்வில் உண்மையிலேயே ஏற்றம் பெறுவான்.

ஓடிக்கொண்டே இருந்தால் நீரோடை; தேங்கி நின்றால் சாக்கடை. தண்ணீர் மட்டுமல்ல, செல்வமும் அப்படித்தான். பணவோட்டம் இருந்தால்தான் பொருளாதாரம் செழிக்கும். நீர்த்தேக்கத்தைப்போல பணத்தையும் சேமித்துவைக்க வேண்டியது அவசியம்தான். அதேநேரத்தில், நீர்த்தேக்கத்தின் முக்கிய நோக்கம், நீரைத் தேக்கிவைத்து தேவைப்படும் நேரத்தில் விவசாயத்துக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் திறந்துவிடுவதுடன், தேக்கிவைக்கப்படும் நீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பயன்களுக்காகத்தான். அதைப்போலத்தான் சேமித்துவைக்கப்படும் பணத்தின் நோக்கமும். தகுந்த நேரத்தில் நமக்குத் தேவையான செலவுகளை மேற்கொள்வதன் மூலம், நமது தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு மற்றவரின் வருமானத்துக்கும் உதவுவதுடன், தேவைப்படுவோருக்கு தானமாகவோ, நன்கொடையாகவோ, இல்லையேல் கடனுதவியாகவோ அளித்து உதவுவதற்காகவும்தான்.

ஒரு விளக்கின் கனலைக் கொண்டு பல விளக்குகளை ஏற்ற முடியும் என்பதைப்போல, ஒருவருடைய பொருளாதார முன்னேற்றமானது, பலரது வளர்ச்சிக்குக் காரணமாக அமைய வேண்டும். கஷ்டப்பட்டு தான் சேர்த்துவைக்கும் பணத்தைக் கொண்டு கருமியாக வாழ்கின்ற ஒருவனால், சமூகத்துக்கு மட்டுமல்ல, அவனுக்கேகூட நல்லதல்ல. ஈட்டுகின்ற பணத்தை நல்ல விதங்களில் செலவழிக்கவும் வேண்டும். இது, பிறருக்குப் போய்ச் சேர்ந்து, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.

மனிதன் வேறு ஒருவரை சார்ந்து வாழ்தல் கூடாது. அதேபோல் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் தன்னை மட்டுமே கருதி, மற்ற மனிதர்களை மறுதலித்தலும் தகாது. மனிதர்கள் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள் என்பதை உணர்ந்து வாழ்வதே சரி. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, குடியிருக்கும் வீடு, நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள், நாம் துய்க்கும் பல்வேறு சேவைகள் ஆகிய அனைத்துமே பிற மனிதர்களின் உழைப்பால் உருவானவை. ஆகையால் மனிதன், சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். டிபென்டெண்டாக வாழ்வது சரியல்ல; ஓவர் இன்டிபென்டெண்டாக வாழ்வதும் சரியல்ல, இன்டர்-டிபென்டெண்ட் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதே சரி.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது தமிழ் மூதுரை. செல்வம் இருப்பவர்கள் மனித சமூகத்தை, குறைந்தபட்சம் தமது சுற்றத்தாரையாவது அரவணைத்தல் அவசியம். இல்லையேல், ‘நாய் பெற்ற தெங்கம்பழம்’ போலத்தான் அவரிடம் உள்ள செல்வமும். உரிக்காத இளநீர்க் காயை (தெங்கம்பழம்) எப்படியோ பெற்றுவிட்ட நாய்க்கு அதனை உரித்துத் தின்னவும் தெரியாது; பிறரிடம் கொடுக்கவும் மனம் வராது. ஆகையால், கடைசிவரை யாருக்கும் பயனில்லாமல் உருட்டிக்கொண்டே செல்லும். அதுபோல், தம்மிடம் உள்ள செல்வத்தால் தனக்கும் பயனின்றி, தன்னைச் சுற்றியிருப்போருக்கும் நன்மையின்றி வாழ்பவர்கள், உலகத்துக்கு வெறும் பாரம்தான். இதனை ‘சுற்றந்தழால்’ அதிகாரத்தில் விளக்குகிறார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார மேதை திருவள்ளுவர்.

சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்

பெற்றத்தாற் பெற்ற பயன். (524)

ஒருவர் செல்வச் செழிப்பைப் பெற்றிருக்கிறார் எனில், அதனால் என்ன பயன் என்று கேட்டால், அந்தச் செல்வத்தைக் கொண்டு சுற்றத்தார் தம்மை சுற்றி வாழும்படி அவர்களுக்கு நன்மை செய்து, தான் வாழுவதுதான் அதன் பயன் என்கிறது இக்குறள்.

வசதியுள்ள காலத்தில் சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தனிமனிதனாக வாழ நினைப்பவன், வசதி குறையும் காலத்தில் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு புறந்தள்ளப்படும் நிலைக்கு ஆளாவான். ஒருவனது நல்லது - கெட்டது அனைத்திலும் கூட நிற்பது சுற்றம். அந்தச் சுற்றத்தை எவனொருவன் தழுவி வாழ்கிறானோ, அவன்தான் வாழ்வில் உண்மையிலேயே ஏற்றம் பெறுவான். இதனை அழகாக இதே ‘சுற்றந்தழால்’ அதிகாரத்தில் மற்றொரு குறள் மூலம் உதாரணத்துடன் எடுத்துரைக்கிறார் பொய்யாமொழிப் புலவர்.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள. (527)

காக்கை எனப்படும் காகமானது, தான் ஓர் உணவுப்பொருளைக் கண்டுவிட்டால் அதனைக் கரவாது, அதாவது மறைத்து வைத்துக்கொள்ளாது. அதற்குப் பதிலாக, கரைந்து அதாவது கா, கா என்று குரலெழுப்பி, தன் இனத்துப் பிற காக்கைகளை அழைத்து அனைத்துமாகச் சேர்ந்து உண்ணும். எந்த மனிதர் இதுபோல தனக்குக் கிடைத்த பொருளாதார வளத்தை தான் மட்டும் அனுபவிக்காமல், தமது சுற்றத்தாருக்கும் பகிர்ந்துகொண்டு வாழ்கிறாரோ அவரைப் போன்றவருக்குத்தான் (அன்ன நீரார்க்கு) மென்மேலும் பொருளாதார வளர்ச்சி என்ற ஆக்கமும் வந்துசேரும் என்று அறிவுறுத்துகிறது இக்குறள்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் எல்லாம், மிகப் பெரிய வள்ளலாக இருப்பார்கள். பங்குச் சந்தையில் பல கோடி டாலர் சம்பாதித்த வாரன் பஃபே, தொழிலதிபர்கள் மைக்கேல் புளூம்பெர்க், மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ் போன்றோரை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இந்தியத் தொழிலதிபர்களான அஸிம் பிரேம்ஜி (விப்ரோ), ஷிவ் நாடார், ஜி.எம். ராவ் (ஜிஎம்ஆர் குரூப்), ரத்தன் டாடா, நந்தன் நீலேகனி (இன்ஃபோசிஸ்) போன்றோரும் இத்தகையவர்களே. இவர்களில், தமது நிறுவனத்தில் பணிபுரியும் கடைக்கோடி ஊழியருக்கும் தமது நிறுவனப் பங்குகளை வழங்கி, அவர்களையும் தாம் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக ஆக்கியதோடு, அப்பங்குகள் விலையேற்றம் கண்டபோது, அந்த சாதாரண ஊழியர்களை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் உயர்த்திய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதல் தலைவரும் நிறுவனருமான நாராயணமூர்த்தி தனித்துக் குறிப்பிடத்தகுந்தவர்.

அந்தக் காலத்தில் பணம் படைத்த செல்வந்தர்கள் ஊருக்குப் பொதுவாகக் குளம் வெட்டுதல், கோவில் எழுப்புதல், அன்னச் சத்திரம் வைத்தல், பள்ளிக்கூடங்களுக்கு அறைகள் கட்டித் தருதல், மருத்துவமனைக் கட்டடம் கட்டித் தருதல், மருத்துவர்களைக் கொண்டு இலவச சேவை அளித்தல் ஆகியவற்றைச் செய்தார்கள். 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள்கூட இதனைக் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள். ஆனால் இக்காலத்திலோ, பணம் படைத்தவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றைத் தாமே கட்டி, அவற்றின் மூலம் மென்மேலும் பணம் ஈட்டலாம் என்று முனைகிறார்கள். இதுதான் ‘காலம் செய்யும் கோலம்’ போலும்!

சில நிறுவனங்களும், நிறுவன உரிமையாளர்களும் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி – சி.எஸ்.ஆர்.) என்ற பெயரில், கிராமங்களைத் தத்தெடுத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டித் தருதல், பெண்களுக்கும் ஏழைகளுக்கும் இலவசத் தொழில் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நற்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இதில்கூட சில நிறுவனங்கள் உள்ளர்தத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதாவது, ரசாயனத் தொழிற்சாலை போன்ற ஊழியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கின்ற தொழில் செய்யும் நிறுவனங்களும், இதர பிற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நிறுவனங்களும் அதை மறைப்பதற்காகவும், தங்களுக்கு ஒரு போலியான நற்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்குவதாகக் கூறப்படுகிறது. இத்தகு குற்றச்சாட்டுகளில் உண்மையும் உண்டு. இதுபோன்ற போலியான நற்செயல்கள் நிலைத்த பலன் தராது. உண்மை ஒருநாள் விழித்தெழும், அதன் கிரணத்தில் பொய்மைகள் பொசுங்கிப் போகும்.

மேலும், பொதுவாக ஓர் குற்றச்சாட்டு உண்டு. சட்டத்துக்குப் புறம்பாகவும், தொழிலாளர்களைச் சுரண்டியும் சம்பாதிப்பவர்கள்தான் செல்வந்தர்கள் ஆகிறார்கள் என்று. இதுவும் ஓரளவு உண்மை என்றபோதிலும், இதுவும் நிலையானதல்ல. இதுபோல் பணம் ஈட்டுபவர்களின் சொகுசு வாழ்க்கை, கானல் நீர்போன்றது. ஒருநாள் இல்லாவிடினும் வேறொருநாளில், சட்டத்தின் பிடியிலோ அல்லது பாதிக்கப்பட்டோரின் வெறியிலோ சிக்கி அவர்கள் சின்னாபின்னமாவார்கள். நேர்மையாகவும், நியாயமாகவும், தொழிலாளர்களை மதித்தும் தொழில் செய்பவர்களே உண்மையில் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, புகழாரத்திலும் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

இவ்வாறு இல்லாமல் பிறரை அடித்துப் பிடுங்கி உயர்ந்த நிலையை எட்டுபவன், விரைவில் தரைமட்டமாவான் என்பதை ‘வினைத்தூய்மை’ என்ற அதிகாரத்தின் கீழ் ஓர் குறள் மூலம் எச்சரிக்கிறார் செந்நாப்போதர்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை. (659)

தவறான நடவடிக்கைகள் மூலம் பிறரை அழவைத்து ஈட்டுகின்ற செல்வம் அனைத்தும், அவ்வாறு அதனை ஈட்டியவர்களை அழச்செய்து விரைவில் விலகியோடும். அதேநேரத்தில், நல்ல வழிமுறைகளில் பொருளை ஈட்டுபவர்கள் ஒருவேளை திடீரென இழப்பைச் சந்திக்க நேர்ந்தாலும், அவர்கள் இழந்த செல்வம் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் அவர்களை வந்து சேர்ந்து பயனளிக்கும் என்கிறது இக்குறள்.

செல்வந்தர் ஆகுபவர்கள்தான் தவறான வழிகளில் பொருள் சேர்க்கக் கூடாது; ஆனால், வயிற்றுப்பிழைப்புக்காக வறியவர்கள் அவ்வாறு செய்து பொருள் ஈட்டுவது தவறில்லை என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். இதுவும் சரியல்ல. பொய்க்கணக்கு காட்டித் திருடுதல், மோசடி செய்தல், எளியோரைச் சுரண்டுதல், கடன் வாங்கி ஏமாற்றுதல், வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் சேர்த்தல் போன்ற தீய செயல்களில் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் ஈடுபடக் கூடாது. அதேபோல்தான் திருடுதல், பொய் கூறி ஏமாற்றிப் பணம் சம்பாதித்தல், மோசடி செய்தல், கடனை வாங்கிவிட்டு திருப்பித் தராமல் இழுத்தடித்தல் போன்ற தீய செயல்களில் பண வசதி இல்லாத ஏழைகளும், நடுத்தர மக்களும்கூட ஈடுபடக் கூடாது. இதனையும் திருவள்ளுவர், ‘வினைத் தூய்மை’ அதிகாரத்தில் வேறொரு குறளில் தீதற இயம்பியுள்ளார்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை. (656)

தன்னைப் பெற்றெடுத்த தாய் வறுமை காரணமாக பசியால் மிகவும் துடிக்கின்ற நிலைமையை நேரில் காண்கின்ற நிலைமை ஏற்பட்டபோதிலும், சான்றோர் (பெரியோர்) தகாத செயல்கள் என்று பழித்துக் கூறக்கூடிய தீய வினைகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் முப்பால் முனிவர். தன்னை ஈன்றெடுத்து, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த தாயின் பசியைக் கண்டபோதுகூட அவளது பசியைப் போக்குவதற்காக, தவறான வழிமுறைகளில் சென்று பணம் ஈட்டுதல் கூடாது என்கிறார் திருவள்ளுவர். வறியோரே தீய வழிகளில் பணம் ஈட்டுதல் கூடாது என்றால், வலியோர் அவ்வழியில் செல்லலாமா? கூடவே கூடாது.

இவ்வாறாக, நேர் வழிமுறைகளில் பணம் ஈட்டி, அதனைத் தான் மட்டுமே அனுபவிக்காமல், தம்மைச் சூழ்ந்துள்ள சுற்றத்தாருக்கும், உலக மக்களுக்கும் பயன்படும் வகையில் வாழ்வதே சாலச் சிறந்தது என்பதே வள்ளுவர் வாய்மொழி. செல்வச் செழிப்புள்ளபோது உதவி பெற்ற சுற்றத்தாரில் சிலர், வறிய நிலை ஏற்படும்போது விலகிச் செல்ல நேரிடலாம். ஆனால் எல்லோருமே அப்படி இருக்கமாட்டார்கள். தனக்கு உதவியவர் வறிய நிலை உற்றபோது, செய்நன்றி மறவாமல், தான் உதவ முன்வருவோரும் இருக்கவே செய்கிறார்கள். ‘தனக்கு ஒருவர் உதவியதால் நாம் நன்மை அடைந்தோம், வாழ்வில் உயர்ந்தோம். ஆகையால் நாமும் பிறருக்கு உதவினால் அவர்களும் உயர்வார்கள்’ என்ற நல்ல எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள். பிறருக்கே அவர்கள் உதவுகின்றபோது, தனக்கு முன்பு உதவியோருக்கு உதவ மாட்டார்களா? இதுபற்றியும் ‘சுற்றந்தழால்’ அதிகாரத்தில் எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள. (521)

பற்று என்றால் தாம் பற்றியிருந்த செல்வம் என்று பொருள். அது அற்ற கண்ணும், அதாவது அந்தச் செல்வத்தை இழந்த நிலையிலும், பழைமை பாராட்டுதல் - முன்பு தாம் அவரிடம் பெற்ற உதவிகளை நினைத்துப் பார்த்து பாராட்டி அவரைத் தழுவி நிற்கும் தன்மை - சுற்றத்தார் இடமே உள்ளது என்று இக்குறள் கூறுகிறது. ஆகையால், உண்மையான சுற்றம் என்பது பணம் இருக்கும்போது மட்டுமே ஒருவரை சுற்றி நின்று புகழ்பாடி பயன் பெறுவர்கள் அல்ல, பணம் இல்லாத நிலையிலும் அவருக்கு பக்கபலமாக நிற்கக் கூடியவர்களே சுற்றம். ஆக, ஒரு சிலர் தவறிழைத்தாலும், பலரை நல்ல சுற்றமாகப் பெறுவதற்கு, ஒருவர் தம்மிடம் செல்வம் இருக்கும்போது அதனைப் பிறருக்கும் உதவும் வகையில் செலவிட வேண்டும்.

திருக்குறள், பாரத நாட்டின் பண்பாட்டுச் சிந்தனையில் தோய்ந்து வள்ளுவப் பெருந்தகையால் ஆக்கப்பட்ட மாபெரும் படைப்பு. பாரதீய தத்துவங்கள் அனைத்துமே, வாழ்வின் விழுமியங்களாக (இலட்சியங்களாக) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்), வீடு அல்லது விடுதலை (மோட்சம்) ஆகியவற்றை போதிக்கின்றன. இவற்றில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் முறையாக இருந்தால், வீடுபேறு அல்லது விடுதலை தானே கிடைத்துவிடும் என்று கருதியே முதல் முப்பாலை திருவள்ளுவர் மொழிந்தார் என்று பெரியோர்கள் கூறுவர்.

இவற்றில் அறம் செய்வதற்கும், இன்பம் துய்ப்பதற்கும் பொருளே அவசியம் என்பதால் அதுதொடர்பாக இக் கட்டுரைத் தொடரை, பொருள் தரும் குறள் என்ற தலைப்பிலே, பொருள் பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளதை என்னால் இயன்றவரை இக்காலத்துக்கு ஏற்ற சில தலைப்புகளில் தொகுத்துப் படைத்துள்ளேன். அதேநேரத்தில் பொருள் ஈட்டுவதற்கும், இன்பம் துய்ப்பதற்கும் அறமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை என்பதால்தான் அறத்துப்பாலை முதலில் வைத்தார். அறம் துறவறத்தாருக்கும் உண்டு, இல்லறத்தாருக்கும் உண்டு. இதில் இல்லறத்தாருக்குக் கூடுதலாகவே உண்டு. ‘இல்வாழ்க்கை’ என்ற தலைப்பிலான அதிகாரத்தில் இதனை இயம்பியுள்ளார் திருவள்ளுவர்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. (41)

துறந்தார் என்றால் சாதாரண வாழ்க்கையைத் துறந்து துறவியானவர்கள் என்று பொருள். துவ்வாதவர் என்றால் வறிய நிலையில் உள்ளோர் என்று பொருள். இறந்தார் என்றால் முன்னோர் என்று பொருள். இந்த மூவகையினருக்கும் இல்வாழ்க்கை வாழ்கின்ற இல்லறத்தானே துணையாக நிற்கிறான் என்கிறது இக்குறள். துறவிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்வதற்கும்; வறியவர்களுக்கும் உணவளித்தல், நிதியுதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்வதற்கும்; தமது முன்னோருக்கு ஈமக்கடன் மட்டுமின்றி அவர்கள் வைத்துவிட்டுப் போன கடன்களை அடைப்பதற்கும் இல்வாழ்க்கை வாழ்பவன்தான் துணையாக இருக்கிறான்.

ஆகையால், இல்வாழ்வான் அறத்தோடு பொருள் ஈட்டி, பிறருக்கும் உதவினால் நல்வாழ்வான் என்று கூறி, இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறேன்.

***

துணைத் தலைப்பு

பாரதத்தின் மாற்றுப் பொருளாதாரச் சிந்தனைகள்

இன்றைய உலகில் பொருளாதாரத் தத்துவங்களாக கேப்பிடலிஸம் எனப்படும் முதலாளித்துவமும், கம்யூனிஸம் எனப்படும் குழுவாழ்வியலும் கருதப்படுகின்றன.

இவற்றில் முதலாளித்துவம் தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அதேவேளையில், மற்ற மனிதரைப் பற்றிய சிந்தனையை மழுங்கடிக்கிறது. முதலாளித்துவ அரசு முறை, தனிமனித வாழ்க்கையை நேர்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. அதேபோல் கம்யூனிஸம், மக்களின் வறுமையை அகற்றுவதைப் பற்றி சிந்தித்தாலும்கூட தனிமனித சுதந்திரத்தை மதிப்பதில்லை. அரசு என்ற பெயரில் கட்சியின் சர்வாதிகாரப் போக்கும், தலையீடும் அதிகம். மேலும், இந்த இரண்டு மேலைநாட்டுப் பொருளாதாரச் சிந்தனைகளும், மனிதனை பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளக்கின்றன.

முதலாளித்துவ நாட்டில் பணம் அதிகம் வைத்துக்கொண்டு இன்பத்தை அனுபவிப்பவன்கூட திருப்தி அடையாமலும், வெறுமை எண்ணத்தாலும் அவதிப்படுகிறான். அதேபோல், கம்யூனிஸ நாட்டில் வேளைக்கு உணவு கிடைத்தாலும், வேறு சுதந்திரங்கள் இல்லாமலும், தனிச் சிறப்புகளுக்கு அங்கீகாரம் இன்றியும் மக்கள் அவதிப்படுகிறார்கள். மனிதன் தனித்துக் கிடப்பதும் சரியல்ல; மிருகங்களைப்போல கூட்டமாகத் திரிவதும் சரியல்ல. மாறாக, மனிதன் தனித்துவத்தோடு வாழ்கின்ற அதேநேரத்தில், சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்ற உணர்வோடு வாழ வேண்டும்.

இதனைத்தான் பாரதீய தத்துவங்கள் போதிக்கின்றன. மனிதனுக்கு உடல், பொருள் இவற்றைத் தாண்டி மனம், ஆன்மா இருக்கின்றன. மனம் என்பது ஒருவனுடைய தனித்த சிந்தனை, எண்ணவோட்டம். ஆன்மா என்பது அனைவருக்குள்ளும் பொதுவாக இருக்கின்ற ஒற்றைத் தன்மை. சிலர் இதனைக் கடவுள் என்றும் மொழிவர். தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் எண்ணம் எவ்வாறு ஒருவனுக்கு திண்ணமாக ஏற்படும்? ‘வெளித்தோற்றத்தில் பிறருக்கும் எனக்கும் வேறுபாடுகள் இருந்தாலும்கூட, உள்ளீடாக ஓர் ஒற்றுமை நம்மை இணைக்கிறது, அந்த ஒருமைதான் ஆன்மா’ என்ற எண்ணம் ஏற்பட்டால் ஒழிய, ஒருவன் மற்றொருவனை உண்மையிலேயே நேசிக்க மாட்டான்; ஏதேனும் பெயர் சொல்லி ஏமாற்றவே செய்வான்.

இதனை உணர்ந்துதான் ஆன்மநேயத்தைக் கூறிய நம் முன்னோர், அறத்தை அதற்கு அடிப்படையாக வைத்தார்கள். ஆன்மநேயம் என்பது ஓர் அறச்சிந்தனை. ‘மன்னுயிரைத் தன்னுயிர்போல்’ எண்ணும் தன்மையை அதுவே தரவல்லது.

இந்த அறச்சிந்தனையின் அடிப்படையில்தான் மகாத்மா காந்தி, கிராமீயப் பொருளாதாரத்தை வலியுறுத்தினார். மேலும் பண்டைய இந்திய முறையிலான தர்மகர்த்தா பொருளாதாரச் சிந்தனையையும் அவர் எடுத்துரைத்தார். செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை தன்னுடைய செல்வம் என்று கருதலாகாது, தம்மைச் சார்ந்த சமூகத்துக்கு உதவுவதற்காக தம்மிடம் பொறுப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ள செல்வமாகக் கருத வேண்டும் என்பதே தர்மகர்த்தா பொருளாதார முறை. அக்கால அரசர்கள் அப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ‘இது என்னுடைய செல்வம் அல்ல; எனது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு என்னிடம் வழங்கப்பட்டுள்ள செல்வம்’ என்று கருதி மன்னர்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

இதேபோல் குறிப்பிடத்தக்க மற்றொரு மாற்றுப் பொருளாதாரச் சிந்தனை, பண்டித தீனதயாள் உபாத்யாயவின் ‘ஏகாத்ம மானவ தர்சனம்’ (ஆன்ம ஒருமை மானுடக் கோட்பாடு). இன்றைய பாரதீய ஜனதாவின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் தீனதயாளர். இவரது ஏகாத்ம மானவ தர்சனம், தனிமனிதத்தனமே உயர்ந்தது என்ற கேப்பிட்டலிஸத்தையும், தனிமனித சுதந்திரத்தை நசுக்கும் கம்யூனிஸத்தையும் ஒருசேர மறுதலிக்கிறது. மாறாக, தனியொரு மனிதர்கள் இணைந்த ஒற்றை உயிரினம்போல் வாழ்வதே சமூகம் என்பதே தீனதயாளரின் கருத்து. இதில் தனிமனிதத்துவத்துக்கும் மதிப்பு உண்டு, வெறும் கூட்டமாக சேர்ந்து வாழாமல், இயல்பாய் ஒன்றிணைந்து வாழ்கின்ற சமூக ஒருமைப்பாட்டுக்கும் முக்கியத்துவம் உண்டும். “வாழின் முப்பது கோடி முழுமையும் வாழ்வோம், வீழின் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்” என்றாரே மகாகவி பாரதி, அது இத்தகைய சிந்தனைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com