10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியவை!

இந்த விஷயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நமது பிள்ளைகளின் கிளாஸ் டீச்சர்கள் ‘எள் எனும் முன் நாம் எண்ணெயாக நிற்கத் தயாராக இருக்க வேண்டும்’.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியவை!

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்... 9!

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடென்றால் நீங்கள் சில அத்யாவசியமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது. அப்படியென்ன அத்யாவசியமான விஷயங்கள் என்கிறீர்களா? ஒரு நல்ல மெடிக்கல் ஷாப், அனைத்து விதமான ஸ்டேஷனரி பொருட்களையும் எப்போதும் இருப்பில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு ஸ்டேஷனரி கம் ஃபேன்ஸி ஸ்டோர். அது மட்டுமல்ல ஃபேன்ஸி டிரஸ்களை வாடகைக்கு விடும் கடை ஒன்று. இந்த மூன்றும் நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் இருக்கிறதா என்று முன்கூட்டியே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை அப்படியான கடைகள் இல்லா விட்டால் அப்புறம் உங்கள் பாடு திண்டாட்டம் தான். ஏனென்றால் உங்கள் குழந்தைகளுக்கு அந்தக் கடைகள் மிக, மிக அவசியமானவை. 

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் அவை அத்யாவசியம் என்று நினைத்து விடாதீர்கள். இப்போதெல்லாம் பேரூர், பெருநகர நிலையிலிருக்கும் ஊர்களில் படிக்கக் கூடிய குழந்தைகளுக்கும் இவையெல்லாம் தேவைப்படத்தான் செய்கின்றன. பெற்றோர் தமது குழந்தைகளை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்குவிக்கிறார்களோ இல்லையோ... கண்டிப்பாக குழந்தைகளின் வகுப்பாசிரியர்கள் பால் பேதங்களின்றி எல்லாக் குழந்தைகளுக்குமே ஏதாவது ஒரு வாராந்திர, மாதாந்திர கமிட்மெண்டுகளை அள்ளித் தந்து முடித்துக் கொண்டு வரச் சொல்லி விடுகிறார்கள். அது ஃபேன்ஸி டிரஸ் காம்பெட்டிஷனாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. மாதாந்திர  புராஜெக்ட், வாராந்திர ஆக்டிவிட்டி, வருடாந்திர ஆனுவல் டே, ஸ்போர்ட்ஸ் டே என்று என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

இந்த விஷயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நமது பிள்ளைகளின் கிளாஸ் டீச்சர்கள் ‘எள் எனும் முன் நாம் எண்ணெயாக நிற்கத் தயாராக இருக்க வேண்டும்’. அப்போது தான் நமது குழந்தைகளை மட்டுமல்ல அவர்களது ஆசிரியர்களையும் திருப்திப்படுத்திய நிம்மதி நமக்கு கிட்ட முடியும்.

இப்போது ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். நமது பள்ளிக்காலங்களில் ஏது இத்தனை ஃபேன்ஸி டிரஸ் கடைகளெல்லாம்?!. பென்சில் வாங்குவதற்கே நாம் நகரத்துக்குத் தான் சென்றாக வேண்டுமென்கையில் கிராமப்புற மாணவர்கள் ஃபேன்ஸி டிரஸ்களுக்கு எல்லாம் எங்கே போவார்கள்?! அப்போதும் பள்ளிகளில் நாடகங்கள் நடத்தப்படாமலா இருந்தன. இல்லை மாணவர்கள் தான் கலந்து கொள்ளாமல் இருந்தார்களா? அப்போதும் இவையெல்லாம் இருக்கத்தான் செய்தன. வேண்டுமானால் இன்று மாதம் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்வுகள் அன்றைக்கெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்திருக்கக் கூடும். அவ்வளவு தான் வித்யாசம். ஆனால் மாணவர்களுக்கான ஆர்வங்கள் அப்போதும், இப்போதும் ஒன்று போலவே தான் இருக்கின்றன. அதாவது புதிதாக, ஆக்டிவாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்கத் துடிக்கும் மனநிலை என்றுமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அன்றைய மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தி பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியம் அற்றவர்களாகவே இருந்தார்கள். 

அதற்கு காரணம் இந்நாட்களைப் போல அன்றைய நாட்களில் வீட்டுக்கு ஒன்று, இரண்டு குழந்தைகள் மட்டும் தானா இருந்தார்கள்?! இல்லை அப்போது பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பதோடு ஒவ்வொரு வீட்டிலுமே, ‘நாமிருவர் நமக்கு மூவர்’ எனும் கான்செப்ட் இருந்தது. அதனால் எவர் ஒருவருக்குமே தனிக் கவனமெல்லாம் கிடைக்காமலே போய் விட்டது. இதற்கு நடுவில் அத்தை மகள், மாமன் மகன், சித்தி மகள் என்று உறவுகள் வேறு எந்நேரமும் உறவுகள் வேறு சூழ்ந்திருப்பார்கள். எனவே அன்றைய குழந்தைகள் அடம்பிடித்தால் முதுகில் நான்கு அறை கொடுத்து செம்மையாக உதைத்து அனுப்புவார்களே தவிர தேவைக்கு அதிகமாகப் பிடிவாதமாக எந்தப் பொருட்களையும் அவர்களிடமிருந்து பெற்று விட முடியாது. இம்மாதிரியான சூழலில் அன்றைக்கெல்லாம் பள்ளியில் டிராமா போடுகிறோம், அதில் எனக்கு ராஜா வேஷம். அதற்கு ஏற்றாற் போல உடை வாங்கித் தாருங்கள் அம்மா... என்று கேட்டால்; உடனடியாக ரெடிமேட் பதிலாக என்ன வந்து விழும் தெரியுமா?! பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டியின் பழம் பட்டுப்புடவைகள் வந்து கூடத்தில் விழும். அதற்கு மேல் ஏதாவது தேவை எனில் தாத்தா உடுத்துக் கழித்த அரை வெள்ளை நிற முக்கால் கை வைத்த காமராஜர் வேஷ்டியும், துண்டும் கிட்டலாம். அவற்றைக் கொண்டு உடை விஷயத்தைச் சமாளித்து விட்டு; மேற்கொண்டு நகைகள் வேண்டுமானால் பள்ளி இறுதி வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும்  அத்தை மகள் மற்றும் சித்தி பெண்களை கெஞ்சிக் கொண்டு தொங்க வேண்டும். அவர்கள் இஷ்டமிருந்தால் தருவார்கள், அல்லது தராமலே போனாலும் போவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு நல்ல கிராஃப்ட் டீச்சரின் நட்பு மட்டும் கிடைத்தால் அவர்கள் தப்பிப் பிழைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

கிராஃப்ட் டீச்சர்களுக்குத் தெரியும் ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் முறையில் வீணாகிப் போன சாக்லேட் உறைகளைக் கொண்டு எவ்விதம் ஆபரணங்கள் செய்யலாம் என்பது அவர்கள் செய்யும் போது பார்த்துக் கொண்டிருக்கும் நாமும் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல அன்றைக்கிருந்த ஆசிரியர்களும் கூட இந்நாளைப் போல காஸ்ட்லியான கல்ச்சுரல் ஆக்டிவிட்டிஸ் செலவுகளை மாணவர்கள் தலையில்
கட்டியதாகத் தெரியவில்லை. உதவியென்று கேட்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை அவர்களும் கூடச் சேர்ந்து செய்த தர முயற்சித்ததாகத் தான் நினைவு. ராஜா, ராணி டிராமாவில் பெண் வேடமிடும் ஆண் மாணவர்கள் இன்றைய நாட்களைப் போல ஃபேன்ஸி டிரஸ் கடைகளைத் தேடியெல்லாம் படையெடுத்ததில்லை. சொல்லப்போனால் அப்போதெல்லாம் சிறு நகரங்களில் இப்படியான கடைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியான நிலையில் அக்கா, தங்கைகள் மற்றும் அத்தை, சித்திகளின் உடைகள் தான் அபய ஹஸ்தம் காட்டி பல மாணவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது. அதெல்லாம் ஒரு காலம்! அதை விடுங்கள்.

எனது மூத்த மகள் 2 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் அவளுக்கு ஜான்ஷி ராணி வேடம் போட வேண்டியிருந்தது. எனக்கு அப்போதெல்லாம் இந்த ஃபேன்ஸி டிரஸ் கடைகள் அவ்வளவாகப் பரிச்சயமில்லை என்பதால் நான் சர்வ சகஜமாக ஊர்ப் பழக்கத்தில் மகளுக்குப் பட்டுப் பாவடை சட்டை உடுத்தி விட்டு, மேலே என்னிடமிருந்த சில்க் துப்பட்டாவால் புடவை போல செட் செய்து, விலைக்கு வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வாள் ஒன்றைக் கையில் பிடித்துக்கொள்ளக் கொடுத்து அனுப்பி விட்டு அதோடு முடிந்தது என்று நிம்மதியாகி விட்டேன். மாலையில் வீடு திரும்பிய குழந்தையின் முகத்தில் ஒளியைக் காணோம். என்னிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டது குழந்தை. எனக்கு ரொம்பவும் பரிதாபமாகி விட்டது. என்னடா? ஏன் இப்படி இருக்கிறாய்? என்றூ கேட்டது தான் தாமதம்;

‘போங்கம்மா, உங்களுக்கு ஒன்னுமே தெரியல... ஆண்டு விழா நாடகத்துக்கு என்னை இப்படியா ஏனோ, தானோன்னு அனுப்பி வைப்பீங்க, அங்க என் கிளாஸ்மெட்ஸ் எல்லாரும் எப்படி வந்திருந்தாங்க தெரியுமா? என்னையெல்லாம் ஸ்டேஜ்ல கூட ஏத்த மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருந்தா அந்த ஷைலி, ஏன்னா நிஜமாவெ ஜான்ஷி ராணி என்னை மாதிரி டிரஸ் பண்ணியிருக்க மாட்டாங்களாம்... நான் பட்டிக்காடு மாதிரி டிரஸ் பண்ணியிருக்கேனாம்... அவ என்னை ரொம்ப டீஸ் பண்ணிட்டே இருந்தா இன்னைக்கு முழுக்க’  கிளாஸ் டீச்சர் கூட; அய்யோ என்னம்மா இது, இப்படி டிஸ் அப்பாயிண்ட் பண்ணிட்டியே நீ? இதுவா ஜான்ஷி ராணி டிரஸ்... நெக்ஸ்ட் டைம் இப்படி எல்லாம் பொருத்தமில்லாம டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தா நான் உன் பேரை லிஸ்ட்ல இருந்து தூக்கிடுவேன்னு சொல்லிட்டாங்க’  எனக்கு அழுகை, அழுகையா வந்துடுச்சு” என்றாள். 

குழந்தை வருத்தப்பட்டதைக் கேட்டதும் எனக்கும் ரொம்பவே வருத்தமாகிப் போனது;

அன்றிலிருந்து ‘ரோமில் இருந்தால் ரோமானியனாக இருக்க வேண்டும்’ என்றொரு பழமொழி உண்டே அதற்கேற்ப நானும், என் கணவரும் அன்றிலிருந்து பக்கா சென்னைப் பெற்றோராகி விட்டோம்.

அடுத்த நாளே... இனியொருமுறை எங்களது குழந்தை அவளது சக நண்பர்களான பிற குழந்தைகள் முன்னிலையிலோ, அல்லது வகுப்பாசிரியரின் முன்னிலையிலோ இப்படியான உப்புப் பெறாத காரணம்க்களுக்காக எல்லாம் தலை குனியத் தேவை இல்லை என முடிவு செய்து;

வீட்டைச் சுற்றி 4 முதல் 5 கிலோமீட்டருக்குள்; 

எங்கெல்லாம் ஃபேன்ஸி டிரஸ் கடைகள் உள்ளன;
தரமான ஸ்டேஷனரி பொருட்கள் கிடைக்கும் கடைகள் எத்தனை உள்ளன;
ஆத்திர அவசரத்துக்கு அருகில் எத்தனை மெடிக்கல் ஷாப்புகள் உள்ளன.
வீட்டருகில் குழந்தைகள் நல மருத்துவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
கராத்தே, பாட்டு, நடனப் பயிற்சிகள் எங்கெல்லாம் தரப்படுகின்றன?
வருடம் பிறந்தால் யூனி ஃபார்ம் தைக்கத் தர வேண்டுமே அதற்கு திறமை வாய்ந்த டெய்லர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
வார இறுதியானால், பிள்ளைகளை வெளியில் அழைத்துச் சென்று சாப்பிடத் தோதாக நல்ல தரமான ரெஸ்டாரெண்ட்டுகள் வீட்டருகில் எத்தனை உள்ளன?

என்பது போன்ற அத்யாவசிய லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொண்டோம்.

இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. முன்னைப்போல அது கிடைக்கவில்லை, இது கிடைக்கவில்லை என்ற ஓயாத விவாதச் சத்தம் இனி எங்கள் வீட்டில் கேட்கப்போவதில்லை.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டிலும் இருந்தால் நீங்களும் இவற்றையெல்லாம் உடனே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எப்போதாவது அல்ல, இப்போதெல்லாம் அடிக்கடியும் இவை நமக்குத் தேவைப்படுகின்றன.

Image courtesy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com