ஸ்டாக்கிங் அல்லது ‘பின் தொடர்தல்’ அத்தனை பெரிய குற்றமா? என்றெண்ணுவோர் கவனத்துக்கு...

தனக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்ய வற்புறுத்தும் ஆணை இப்படிச் செய்யும் தைரியம் எத்தனை இளம்பெண்களுக்கு வரக்கூடும்?
ஸ்டாக்கிங் அல்லது ‘பின் தொடர்தல்’ அத்தனை பெரிய குற்றமா? என்றெண்ணுவோர் கவனத்துக்கு...

இந்த வாரம் நாம் ஸ்டாக்கிங் என்று சொல்லப்படக்கூடிய ‘பின் தொடர்தல்’ குறித்துப் பேசலாம்...

ஸ்டாக்கிங் என்றால் என்ன என்று புரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தில், அவர் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதற்குப் பெயர் தான் ஸ்டாக்கிங். இந்த ஸ்டாக்கிங் என்ற விஷயத்தை ஒட்டி அது நல்லதா? கெட்டதா? எனும் ரேஞ்சில் அந்தப் படம் வெளிவரவிருந்த சூழலை ஒட்டி விஜய் தொலைக்காட்சியின் நீயா? / நானா? - வில் அது பேசுபொருளானது. அந்த நிகழ்வில் ஸ்டாக்கிங் பற்றி இளைஞர்களும், இளைஞிகளும் ஆளுக்கு ஆள் தங்களது சொந்த அனுபவங்களைப் பற்றி பேசினார்கள். முடிவில் தீர்ப்பு சொன்ன கோபிநாத்... பெண்களும் ஆண்களைக் காதல் என்ற பெயரில் சும்மா அலைக்கழிக்கக் கூடாது. அதே சமயம் ஆண்களும் பெண்களை வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுற்றி வந்து இம்சை தரக்கூடாது என்று முடித்தார்.

இதில் நடுவர்களாகக் கலந்து கொண்டவர்களில் இயக்குனர் கதிரும் ஒருவர். ஸ்டாக்கிங் குறித்துக் கதிர் சொன்ன பதில் ஒன்று ஏற்புடையதாக இருந்தது. அவரது திரைப்படங்களில் வரும் நாயகர்கள் கூட பெரும்பாலும் நாயகிகளைப் பின்தொடரக் கூடியவர்களே, ஆனால் அந்தப் பின்தொடர்தல் எப்படி இருக்குமென்றால், தனது நேசத்திற்குரிய பெண்ணை பாதுகாக்கும் அளவுக்கு ஒரு கண்ணியமான இடைவெளி இருக்கும் அதில். வயது வேறுபாடுகளை விட்டுத் தள்ளுங்கள், காதல் எந்த வயதில் வருவதாக இருந்தாலும் அதில் கண்ணியமிருக்க வேண்டும், தன்னால் நேசிக்கப்படும் ஒரு பெண்ணின் மரியாதை மற்றும் கெளரவம் குறித்த கவனம் என் ஹீரோக்கள் எல்லோரிடமும் இருக்கும். ஆகவே உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் பின் தொடர்தலும் அவ்விதமே அந்தப் பெண்ணுக்கு தொல்லை தராத வகையில் சமயத்தில் அந்தப் பெண்ணுக்கே தெரிந்திராத வகையில் தான் இருக்கும் என்றார். ஒரு வகையில் அது தான் சரி.

ஒரு ஆண், தன்னைக் கவர்ந்த ஒரு பெண்ணை பின் தொடர்வதை காதல் என்று கற்பிதம் செய்து கொள்ள நமக்குக் கற்றுக் கொடுத்தது சினிமாக்களே! பழைய மோகன் மற்றும் முரளி படங்களில், பின் தொடர்தல் எனும் விஷயத்தை மையமாக வைத்தே முழுக்கதையும் பின்னப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு விதி, கிளிஞ்சல்கள் மற்றும் இதயம் படங்களை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தீர்களெனில் உங்களுக்குப் புரியக்கூடும். அந்தப் படங்கள் வெற்றி பெற்ற படங்களாக இருந்தாலும் கூட அவை திரைப்படங்களாக இருக்கும் வரை ரசிக்க முடிந்தது. ஆனால் அதுவே நிஜ வாழ்க்கையில் என்று வரும் போது, அதன் விளைவுகள் வேறானவையாக இருந்தன... இருக்கின்றன. 

ஒன்றுமில்லை... எனது பள்ளிக் காலத்தில், நெருங்கிய ஸ்நேகிதி ஒருத்தி இதே விதமான தொல்லைகளுக்கு ஆளானாள். நாங்கள் நான்கைந்து பேர் எப்போதுமே ஒன்றாகத் தான் சேர்ந்து நடந்து பள்ளிக்குச் செல்வது வழக்கம். அப்போது அவள் மிக மிக உற்சாகமான மனநிலை கொண்ட சிறுமி. அவள் மட்டுமல்ல நாங்கள் எல்லோருமே தான். எங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? பிறர் எங்களை எந்த விதமான கண்ணோட்டத்தில் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்பதைப் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறை கொள்ளாத நாட்கள் அவை. 8 ஆம் வகுப்பிலிருந்து 9 ஆம் வகுப்பிற்கு காலடி எடுத்து வைத்திருந்தோம். காதலைப் பற்றியெல்லாம் பெரிதாக எந்த யோசனைகளும் அன்றைக்கு எங்கள் மூளைக்கு எட்டியிருக்கவில்லை. சொல்லப்போனால் எங்களது சம வயதிலிருப்பவர்களில் யாரேனும் காதல், கத்தரிக்காய் என்று உளறிக் கொட்டினால் அவர்களை ஐயோ பாவம் என்று பார்க்கக் கூடிய அளவுக்கு சமர்த்துப் பிள்ளைகளாக இருந்தோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘காதலிப்பவர்கள் கெட்டவர்கள்’ ‘காதலில் விழுவது மோசமான பழக்கம்’ யாராவது அறியாத ஆணால் பின் தொடரப்பட்டால் அதைக் காண்பவர்கள் நம்மைத் தான் குற்றவாளியாக நினைப்பார்களோ?! என்றெல்லாம் நாங்கள் எண்ணிக் கொண்ட காலம் அது.

அப்போது நடந்த சம்பவம் இது. என் ஸ்நேகிதியின் பெயரை திவ்யா என்று வைத்துக் கொள்வோம். திவ்யாவை தினமும் ஒரு இளைஞன் தன் நண்பர்கள் குழுவுடன் பின் தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறான். அது திவ்யாவுக்குத் தெரியாது. சில மாதங்கள் கடந்தன... 9 ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு வந்தது. சிலருக்கு காலையில் தேர்வு, சிலருக்கு பிற்பகலில் தேர்வு. எனவே கும்பலாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த எங்களில் சிலர் காலையிலேயே சென்று விட, மதியம் நானும், திவ்யாமும் மட்டுமே செல்ல வேண்டியதானது. ஒருநாள் நானும் அவளுடன் செல்லவில்லை. எனக்கு கணக்கு, பெரும் பிணக்கு என்பதால் அன்று சற்று முன்னதாகப் பள்ளிக்குச் சென்று அங்கேயே கணக்கு டீச்சருடன் உட்கார்ந்து விட்டேன். மதியம் எப்போதும் போல பள்ளிக்கு வந்த திவ்யாவுக்கு பரீட்சை ஹாலில் படித்ததை ஒழுங்காக எழுதக் கூட முடியாத அளவுக்கு அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. ஆசிரியை விசாரித்ததற்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு முடிந்தவரை சமாளித்து தேர்வு எழுதி முடித்தாள். மாலையில் வீடு திரும்பும் போதும் அவள் முகத்தில் சுரத்தில்லை. நானும், உடன் வரும் பெரிய அக்காவான மலர் விழியும் ‘என்னாச்சு... ஏன் இப்படி இருக்க? உடம்புக்கு என்ன பண்ணுது திவ்யா?’ என்று கேட்டது தான் தாமதம். நட்ட நடுச்சாலை என்றும் பாராமல் திவ்யா விக்கி, விக்கி அழத்தொடங்கி விட்டாள். எங்களுக்கு குழப்பமாகி விட்டது. ஆப்புறம் அவ்ள் திக்கித் திணறிச் சொன்னது. இதைத்தான்...

‘யாருன்னே தெரியல.... இன்னைக்கு நான் ஸ்கூல்க்கு வரும் போது ரோட்ல யாருமே இல்லக்கா... கருப்பா, நெட்டையா ஒருத்தன் என்கிட்ட வந்தான்... இந்த வருஷ ஆரம்பத்துல இருந்து எம் பின்னாலயே வரானாம்... என்னை ரொம்ப டீப்பா லவ் பண்றானாம். நான் இல்லைன்னா செத்துடுவானாம். இந்தா இதான் என் மனசு, இதைப் படிச்சிட்டு உன் பதிலைச் சொல்லுன்னு சொல்லி ஒரு லெட்டரை கையில திணிச்சான். நாளைக்குள்ள நான் பதில் சொல்லனுமாம். அதுவும் சரின்னு சொல்லனுமாம். இல்லன்னா அவன் சூசைட் பண்ணிப்பானாம். சொல்லிட்டு ஓடியே போய்ட்டான். எனக்கு ஒரே நடுக்கமா இருக்கு மலரக்கா.’ என்றாள்.

மலரக்காவும் அப்போது ஒன்றும் பெரிய யுவதி எல்லாம் இல்லை, நாங்கள் 9 ஆவது என்றால், அவள் 10 படித்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளுக்குமே இந்த விஷயத்தில் என்ன பதில் சொல்லி அவளைத் தேற்றுவது என்று உடனே ஒன்றுமே தோன்றவில்லை. எனவே நாங்கள் இருவருமாகக் கலந்தாலோசித்து, பேசாமல் இந்த விஷயத்தை அவளது பெற்றோர்களிடத்தில் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். அவளுக்கும் அதில் ஆட்சேபணை இருக்கவில்லை.

நடுவில் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். திவ்யா மிக அருமையாகப் படிக்கக் கூடிய மாணவி. எப்போதுமே தேர்வென்றால் முதல் மூன்று ரேங்குகளில் வரக்கூடியவள். அவளுக்கு அவளுக்கு கணக்கு மிகப்பிடித்த சப்ஜெக்ட்; எதிர்காலத்தில் தானொரு கணித ஆசிரியை ஆக வேண்டும் என்ற பிரேமை அடிமனதில் இருந்தது. மிக, மிகக் கூச்ச சுபாவி. குடும்பம் அத்தனை வசதியானது இல்லையென்றாலும் குறைந்தபட்சம் பெண்ணை ஒரு டிகிரியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற முனைப்பு அவளது அம்மாவுக்கு இருந்தது. ஆனால் அவளது அப்பாவைப் பொறுத்தவரை, மகள் பிளஸ் டூ முடித்த கையோடு, தன் கூடப்பிறந்த சகோதரியின் மகனுக்குத் அவளை மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கு குறுக்கே நின்றது திவ்யாவின் அம்மாவின் டிகிரி ஆசை மட்டுமே! மனைவிக்காக அவர் தனது ஆசையைத் தள்ளிப் போட்டு வந்தார். இம்மாதிரியான ஒரு சூழலில் தான் திவ்யாவின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அவளுக்கும் சரி, எங்களுக்கும் சரி அந்த விஷயத்தை இதைத் தாண்டி எப்படி சமாளிப்பது என்று புரியாததால் அவளது பெற்றோரிடம் இதைப் பற்றி சொல்லி விட்டோம்.

மறுநாள் முதல் திவ்யா என்னோடு நடந்து பள்ளிக்கு வருவது நின்றது. நல்ல வேளை அவள் பள்ளிக்கு வருவதை நிறுத்தாமல் போனார்களே என்று ஆறுதலானோம் நாங்கள்! அந்த ஆறுதலுக்கும் ஆயுள் குறைவே. திவ்யாவின் அத்தை மகன் பல்கலைக் கழகத்தில் அட்டண்டர் வேலை பார்த்து வந்தார். கால்பணம் ஆனாலும் அரசாங்க உத்யோகஸ்தரான மாப்பிள்ளை என்பதால் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையிலேயே பெரிதாக யாருக்குமே சொல்லாமல் சுருக்கமாக திவ்யாவுக்கு கல்யாணமே முடிந்து விட்டிருந்தது. அப்புறமென்ன அவளது கணித ஆசிரியை கனவு இன்று வரையிலும் அவளிலிருந்து கனவாகவே தான் தூரப்பட்டு நிற்கிறது. பல ஆண்டுகள் கழித்து திவ்யாவை ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வைத்து சேல்ஸ் உமனாகப் பார்க்க நேர்ந்தது. அவளும் என்னிடம் பேச முயற்சிக்கவில்லை. எனக்குமே அவளிடம் பேசத் தயக்கமிருந்தது. என்னவென்று பேச... ஒருவேளை அவள் பேசியிருந்தால் நானும் பேசி இருப்பேனோ என்னவோ?! வாழ்க்கையில் சில நட்புகள் இப்படித் தான் ஆகி விடுகின்றன. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த ஸ்டாக்கிங்ஸும், அதன் பின் விளைவுகளும் தான். திவ்யாவிடம் தன் காதலைச் சொன்ன, அவள் சரி சொல்லாவிட்டால் சூசைட் செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய அந்த இளைஞனை எங்களில் யாருக்கும் அடையாளம் தெரியாது. அவன் அதன் பின் என்ன ஆனான் என்றும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் திவ்யாவுக்கு அவனை இப்போது வரையிலும் கூட நன்றாகவே நினைவிருக்கக் கூடும். ஏனெனில் அவனல்லவோ அவளது ஆசிரியைக் கனவுகள் நிர்மூலமாகக் காரணமானான்.

ஸ்டாக்கிங்ஸ் என்ற பாழாய்ப்போன அந்த விவகாரத்தால் அன்று ஒரு மாணவியின் கனவு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

இன்றைக்கும் கூட இந்த ஸ்டாக்கிங்ஸ் விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. இளைஞர்களிடம் அதெல்லாம் படிப்பை முடித்த பிறகு,  கருத்திலும், எண்ணங்களிலும் வாழ்வைப் பற்றிய ஒரு முதிர்ச்சி வந்த பிறகு வைத்துக் கொள்ளக் கூடாதா? என்றால் அதெல்லாம் அந்தந்த வயதுக்கு ஏற்ற மாதிரி தான் வாழ வேண்டும். நடுத்தர வயதில், ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று பின் தொடர்ந்தால் அது தான் பொருந்தாத விஷயம். நாங்கள் கல்லூரிக் காலத்தில் இப்படி இருப்பதில் என்ன தவறு? இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்.. என்று கைகளை உதறித் தோளைக் குலுக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

எந்தக் காலமென்றாலும் புரிதல் என்றொரு விஷயமிருக்கிறது. இளைஞர்கள், தாங்கள் விரும்பிய பெண்ணை, அந்தப் பெண்ணும் விரும்பும் பட்சத்தில் பின் தொடர்ந்தால் மட்டுமே அதை சரி என நியாயப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு வேளை பெண்ணுக்கு விருப்பமில்லாத பட்சத்தில் இந்த ஸ்டாக்கிங்ஸ் விவகாரத்தை ஒரு போதும் நியாயப்படுத்தவே முடியாது. அதில் கொஞ்சம் கூட நேர்மையே இல்லை.

காக்க, காக்க திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், பள்ளி மாணவி ஒருத்தியை, ரெளடி ஒருவன் பின் தொடர்வான். அவள் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம், என்னைக் காதலிக்கப் போகிறாயா? இல்லையா? காதலிக்கா விட்டால் உன் முகத்தில் ஆஸிட் அடித்து விடுவேன் என்று; அதற்குப் பெயர் காதல் இல்லை, அது மிரட்டல். இந்த மிரட்டலுக்கும், நான் சூசைட் செய்து கொள்வேன் என்ற மிரட்டலுக்கும் பெரிதாக எந்த வேறுபாடுகளும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இளைஞர்கள் உணர வேண்டும். ஸ்டாக்கிங்ஸ் என்பது எந்த வயதில் செய்தாலும், அதை சம்மந்தப்பட்டவர் விரும்பாத பட்சத்தில் அது மிக மிக கண்டிக்கத் தகுந்த குற்றமே!

ஒரு பெண்ணை அவள் பள்ளி மாணவியாக இருந்தாலும் சரி, கல்லூரி மாணவியாக இருந்தாலும் சரி, அல்லது அவள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவளாக இருந்தாலும் சரி ஏன் அவள் உங்களை விட உயர்பதவியிலிருப்பவளாக இருந்தாலும் சரி, வலிமை வாய்ந்த அரசியல்வாதியாகவே இருந்தாலும் சரி அவளது விருப்பமின்றி அவளைப் பின் தொடர்வது என்பது அவளது ஆற்றலை, அவளது திறமைகளைக் குறைக்கும் முயற்சியே!

பெரியவர்களை விடுங்கள், அவர்களுக்குத் தெரியும் இந்த சிக்கல்களை எப்படிக் கையாள வேண்டும் என, ஆனால் பள்ளி மாணவிகளைக் காதல் என்ற பெயரில் பின் தொடர்வதோ, அல்லது படிப்பில் முனைப்பாக இருக்கும் மாணவியிடம் சென்று காதலிக்கிறேன் என்று தொந்திரவு செய்வதோ பாதகமான விளைவையே தரக்கூடும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

இது குறித்து இம்மாதிரியான பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவிகள் சிலரிடமும், அவளது பெற்றோரிடத்தும் பேசும் போது தெரிந்து கொண்ட விஷயம், இயல்பாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்வில் இம்மாதிரியான திடீர் விளைவுகளை அவர்கள் அறவே விரும்பவில்லை என்பதோடு அந்தப் பிரச்னையிலிருந்து தப்பிப்பதாக நினைத்துக் கொண்டு உறவுகளில் வெகு இளமையில் திருமணம் செய்து வைப்பது, படிப்பைப் பாதியில் நிறுத்தி விடுவது, பின் தொடரும் நபர் அரசியல் செல்வாக்குள்ள நபர் என்றால் பயந்து கொண்டு குடும்பத்தோடு ஊரை விட்டு ஓடுவது மாதிரியான அவலமான முடிவுகளை எல்லாம் எடுக்க வேண்டியதாகிறது. எனவே பெற்றோரும் சரி மாணவிகளும் சரி இதை வெறுக்கத்தான் செய்கிறார்கள் என்பதே!

சமீபத்தில்; ஹரியானா மாநில பாஜக தலைவரின் மகன், மாவட்ட ஆட்சியரின் மகளைப் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த விஷயத்தில், அந்தப் பெண் சில நாட்கள் பொறுத்துப் பார்த்து விட்டு பிறகு தாங்க முடியாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்து விட்டார். ஆதாரத்துடன் பிடிபட்ட அந்த இளைஞர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தனக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்ய வற்புறுத்தும் ஆணை இப்படிச் செய்யும் தைரியம் எத்தனை இளம்பெண்களுக்கு வரக்கூடும்? 

இந்த விஷயத்தில் யோசிக்க வேண்டியது பெண்களல்ல... எப்போதும் ஆண்கள் மட்டுமே!

Discy: Used image does not blame the movie.it is used here for to mention the situation only.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com