சுதந்திரமாகக் கேள்வி கேட்கும் குழந்தைகள் ஐன்ஸ்டீன் ஆகாவிட்டாலும் பரவாயில்லை!

ஆனால் 12, 13  வயதுக்குப் பின் பெரும்பாலான வளரிளம் குழந்தைகள் கேள்விகள் கேட்பதை அடியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தப் பெற்றோராவது சரியான தருணத்தில் அது ஏன்? என்று சிந்தித்திருக்கிறீர்களா!
சுதந்திரமாகக் கேள்வி கேட்கும் குழந்தைகள் ஐன்ஸ்டீன் ஆகாவிட்டாலும் பரவாயில்லை!

சால்ட் சில்ட்ரன் பெப்பர் பேரன்ட்ஸ்... 3

சிலருக்கு குழந்தைகள் சதா கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், நம, நமவென்று தலை வலிக்கத் தொடங்கி விடும். அதற்காக, அவர்களுக்கு தங்களது குழந்தைகள் மீது பாசமில்லை, அக்கறை இல்லை என்று பொருளில்லை. அவர்களது பொறுமையின் எல்லை அவ்வளவு தான். குழந்தைகளது தொடர் கேள்விக் கணைகளிலிருந்து தப்புவதற்காக காசு செலவானாலும் பரவாயில்லை, காய்ச்சல் வந்தாலும் பரவாயில்லை, பல் சொத்தையானாலும் பரவாயில்லை என்ற ரீதியில் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களது வாயை அடைப்பதில் கவனமாக இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் குழந்தைகள் என்றால் சமர்த்தாகச் சாப்பிட வேண்டும், சமர்த்தாக விளையாட வேண்டும், சமர்த்தாகப் படிக்க வேண்டும், அதை விடச் சமர்த்தாக சீக்கிரமே தூங்கி விட வேண்டும். இது தான் குழந்தைகளுக்கான நியதி என்பது அவர்களது வாதம். ஆனால் நமது குழந்தைகள் ஒன்றும் ஷோ கேஸ் பொம்மைகள் அல்லவே!

அவர்களுக்கே அவர்களுக்கு என்று கேட்பதற்கு பல கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது?

மெரினா பீச் எங்கே முடிகிறது?

மழை பெய்யும் போது தண்ணீர் எப்படி வருகிறது?

காகங்கள் ஏன் கருப்பாக இருக்கின்றன? 

நாய்கள் ஏன் நாக்கைத் தொங்க விட்டபடி அலைகின்றன?

யானைகள் ஏன் காதை ஆட்டிக் கொண்டே இருக்கின்றன?

அம்மாவுக்கு எப்படி பாப்பா பிறக்கிறது?

அப்பா ஏன் சமைக்கறதே இல்லை?

பாட்டி ஏன் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்க மாட்டேங்கறாங்க? 

என்று குழந்தைத் தனமான கேள்விகளில் தொடங்கும் கேள்விகளுடனான பந்தம் பத்துப், பனிரெண்டு வயதில் பெரிய மனுஷி ஆவது என்றால் என்ன? நான் எப்போ பெரிய மனுஷி ஆவேன்? என்பது வரை அவர்கள் தங்களது கேள்விக் கணைகளுக்கு ஓய்வு கொடுப்பதே இல்லை. பெண் குழந்தைகள் மட்டும் அல்ல; ஆண் குழந்தைகளாக இருந்தால் இதே வயதில்... அவரவர் பெற்றோரிடம்,  ‘எங்க கிளாஸ்ல அவந்திகா  ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டாளாம்... அதனால ஒரு வாரமா ஸ்கூல்க்கு வரலை, ஏஜ் அட்டெண்ட் பன்றதுனா என்னம்மா? நான் எப்போ ஏஜ் அட்டெண்ட் பண்ணி ஸ்கூல்க்கு லீவு போடறது? என்று கேட்டு குட்டும், திட்டும் வாங்கிய பையன்களும் இருக்கிறார்கள். 

ஆனால் 12, 13  வயதுக்குப் பின் பெரும்பாலான வளரிளம் குழந்தைகள் கேள்விகள் கேட்பதை அடியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தப் பெற்றோராவது சரியான தருணத்தில் அது ஏன்? என்று சிந்தித்திருக்கிறீர்களா! ஏனென்றால் 12 வயதுக்கு மேல் குழந்தைகளோடு சேர்ந்து அவர்களது சுயமரியாதைகளும் வளர்ந்து விடுகின்றன. கேள்வி விசயத்தில் அவர்களுக்குக் கிடைத்த முந்தைய அனுபவங்கள் திருப்திகரமாக இருந்திருந்தால் குழந்தைகள் அப்படி சட்டென மாற வேண்டிய அவசியமே இருந்திருக்காது. குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விசயத்தில் பெற்றோர்களான நாம் நமது குழந்தைகளின் சுய மரியாதைக்கும், சுய கெளரவத்துக்கும் பங்கம் வரும் வகையில் நடந்து கொண்டிருந்தோமானால் அத்தைகைய அனுபவங்களுக்குள்ளான குழந்தைகள் தங்கள் வாழ்வில் மறுபடியும் சுதந்திரமாகக் கேள்விகள் கேட்கும் சுபாவத்தை அடியோடு போக்கிக் கொண்டு விடுகிறார்கள். குழந்தைகளின் கேள்விகளைப் புறக்கணிப்பதில் இது ஒரு வகை என்றால்... இன்னொரு மோசமான வகையில்,  குழந்தைகளின் அனைத்துக் கேள்விகளுக்கும், தேடல்களுக்கும்  ‘ம்’ எனும் முன் எடுத்ததற்கெல்லாம் இணையத்தைச் சார்ந்திருக்கப் பழக்குவது;

இந்தியாவில் ஏன் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் தோன்ற முடியவில்லை என்பதற்கு நம்மவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று இது. குழந்தைகள் தங்களது வளரும் பருவத்தில் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளைக் கேட்டு அதற்கு பொருத்தமான பதில்களைப் பெற்றுக் கொண்டே வளர வேண்டும். அப்படி பெற்றோர், ஆசிரியர் மற்றும் உறவினர்களிடம் பதில்களைப் பெறும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் தானே பதிலைத் தேடத் தொடங்கும். அந்தத் தேடலே விஞ்ஞானத்தில் முதல் படி என்கின்றன உலக குழந்தை இலக்கியங்கள். 

ஆனால் இன்று குழந்தை வளர்ப்பில் நாம் செய்வதும், செய்து கொண்டிருப்பதும் என்ன?

அலுவலகத்திலிருந்து அலுத்து, சலித்து வீடு திரும்பும் போது, வாசற்படியில் கால் வைப்பதற்குள்ளாக, அப்பா; சயின்ஸ் புராஜெக்டுக்காக மேம் ஏதாவது ஒரு விதை வாங்கி அதை ஒரு தொட்டியில வளர்த்து, தினம் அது கொஞ்சம், கொஞ்சமா வளர்றதை தினமும் ரெகார்ட் பண்ணிட்டு வரச் சொல்லியிருக்காங்க... வாங்கப்பா நர்ஸரிக்குப் போய் செடி வாங்கிட்டு வரலாம் என்று மகனோ, மகளோ அழைத்தால்...

நமது இன்ஸ்டண்ட் பதில்; “ப்ளீஸ் இந்தா ஸ்மார்ட் ஃபோன், லேப் டாப்புலயும் சர்ச் பண்ணு. கூகுள் இல்லனா யூ டியூப்ல, ஒரு செடி வளர்த்தா தினம், தினம் அதில் என்ன மாற்றமெல்லாம் வரும்னு யாராவது ரெகார்ட் பண்ணி வச்ச கட்டுரைகள் கிடைக்கும். அதை அப்படியே காப்பி பண்ணி கொண்டு போய் கொடுத்துடலாம்டா கண்ணா. அப்பா ரொம்ப டயர்டா இருக்கேன்... நர்ஸரிக்கெல்லாம் போனா டைம் வேஸ்ட். கார்த்தால எழுந்து ஆஃபீஸ் போக முடியாது” என்று அவர்களது உருப்படியான ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறியும் பெற்றோர்கள் தான் அதிகமிருக்கிறோம். 

ஒரு சிலர் பிள்ளைகளுக்காக நடு இரவில் கூட நர்ஸரிக்குப் போய் செடி வாங்கித் தர தயங்க மாட்டார்கள். அப்படியான அம்மா, அப்பாக்கள் விதிவிலக்குகள். அவர்கள், பிற அம்மா, அப்பாக்களால் அதிசயப் பிறவிகளாகக் கருதப் படுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ?! 

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால். மேலே சொன்னது மிகச் சாதாரண ஒரு உதாரணம். நர்ஸரிக்குப் போய் செடி வாங்கித் தருவது அல்ல விசயம். நாம் நம் குழந்தைகளுக்கு வெகு எளிதான வழிகளை, உத்திகளைப் பழக்கி விடுகிறோம். தமிழில் ‘நோகாமல் நொங்கு சாப்பிடுகிறார்கள்’ என்றொரு பிரசித்தி பெற்ற பழமொழி உண்டு. அப்படித் தான் நோகாமல், தேடாமல், எந்த சிரத்தையோ, சிரமமோ இல்லாமல் எளிதாக குழந்தைகளின் கேள்விகளுக்கும், தேடலுக்கும் நாம் இப்போது கூகுளை சார்ந்திருக்கப் பழக்கி வைத்திருக்கிறோம். தேடல் எளிதாகும் போது, தேடலுக்கான உந்துதலும் குறைந்து விடுவது சகஜம்.

அப்படித்தான் நாம் இன்று நமது குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை கொஞ்சம், கொஞ்சமாக மழுங்கடித்து வைத்திருக்கிறோம். சுதந்திரமாகக் கேள்வி கேட்கும் குழந்தைகள் பின்னாட்களில் அறிவில் சிறந்து ஐன்ஸ்டீன் ஆகா விட்டாலும் கூட குறைந்த பட்சம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் திறனுடனாவது இருக்கும்.

மாலையில் எத்தனை அலுப்புடன் வீடு திரும்பினாலும் சரி, நமது குழந்தைகளின் கேள்விகளை எதிர் கொண்டு, அவர்களுக்கு நேர்மையான பதில்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்ற மன உறுதி எல்லாப் பெற்றோர்களுக்கும் வந்தால் போதும், குழந்தைகளின் சுதந்திரமான கேள்விகளுக்கு எந்த பங்கமும் வராமல் தடுத்து விடலாம்.

அசலான கேள்விகளுக்கு நாம் அசலாகத் தானே பதில் சொல்லியாக வேண்டும். எப்போதும் குழந்தைகளிடம் பொய்யாகவோ, கற்பனையாகவோ, தட்டிக் கழிக்கும் விதமாகவோ பெற்றோரான நமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி பதில்களை சொல்லிக் கொண்டிராமல் பொறுமையாகவும், நேரடியாகவும் உரிய பதில்களைச் சொல்லப் பழகுவோம்.

5 வயதுக் குழந்தை; காகம் ஏன் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருக்கிறது? என்று கேட்டால். காகம் எப்போதும் கருப்பாக இருப்பது தான் அதன் வழக்கம் என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி எஸ்கேப் ஆகாமல், அது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் என்று உணர்ந்து பதிலைத் தேடி பொறுமையாக விளக்குங்கள். உங்கள் பதில் காகங்களைப் பற்றிய நேட்டிவ் அமெரிக்கன் மரபுக்கதையாக இருக்கலாம், இல்லா விட்டால் சீனப் பழங்குடி நாட்டுப்புற கதையாகவும் இருக்கலாம். இல்லையேல் நம் பண்டைய இந்திய புராணக் கதையாகவும் இருக்கலாம். ஏன் அறிவியல் கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம்... எப்படியாயினும் நீங்கள் காகத்தைப் பற்றி குழந்தைகளுக்கு, அவர்கள் அதுவரை அறிந்திராத சற்றே அதிகமான தகவல்களைச் சொல்லி விட்டால் போதும். 

அங்கே குழந்தைகளின் கேள்விகள் மடை மாற்றம் பெற்று வேறு தளத்தைச் சென்று அடைந்து விடும். கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்க, கிடைக்க மேலும், மேலும் கேள்விகளால் நிரம்பும் குழந்தைகள் தாங்களே ஒரு கட்டத்தில் பதிலைத் தேடத் தொடங்கும் போது அவர்களின் படைப்பாற்றலும் கூடவே வளரத் தொடங்கும். இதை உணர்ந்த பெற்றோர்கள் எப்போதும் தங்களது குழந்தைகளின் கேள்விகளைப் புறக்கணிப்பதே இல்லை.

5 வயதில் காகத்தைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் கேள்வி கேட்டு, உரிய பதில்களைப் பெறும் குழந்தைகள்... 11... 12 வயதில் தங்களது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற மாறுதல்களைக் குறித்தும் அனாவசியமான கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாமல் தன் அம்மாவையோ, அப்பாவையோ அணுகி கேள்விகள் கேட்கத் தயங்குவதே இல்லை. இங்கே உடைபடுகின்றன பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான மாயத் தயக்கங்களும், இடைவெளிகளும்.

ஆகவே குழந்தைகளை சுதந்திரமாகக் கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்... குழந்தை வளர்ப்பில் பாதிப் பிரச்னைகள் அதிலேயே முடிவுக்கு வந்து விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com