குழந்தைகளுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!

குழந்தைகளுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!

குழந்தைகள் சுதந்திரமாகச் சிறகு விரித்துப் பறப்பதற்கு முன்னால் பெற்றோரான நம்முடன் பரம அந்நியோன்யமாகக் காலத்தைக் கழிக்கவென்று இயற்கை அளித்த இந்த பள்ளிப் பருவக் காலங்களை

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்... 3

பிள்ளை வளர்ப்பில் பொக்கிஷமான காலம் எது தெரியுமா? அது நமது குழந்தைகளின் பள்ளிப் பருவம் தான். கல்மிஷமில்லாத அந்த காலகட்டத்தில்... வாழ்வின் அத்தனை விசயங்களைப் பற்றியும் சற்றே விவரம் அறிந்தும், அறியாமலும் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள நாடும் முதல் இடம் பெற்றோர்களான நம்மிடமே! பாரம்பரியமான ஒரு சொல்வழக்குண்டு. ஆண்குழந்தைகளுக்கு அவரவர் அம்மாக்களும், பெண் குழந்தைகளுக்குப் பொதுவாக அவரவர்  அப்பாக்களும் தான் அவர்களுடைய வாழ்நாள் முழுக்கவும்  ‘ஆதர்ஷம்’ என்று. அது எத்தனை நிஜம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயற்கை நமக்களித்த கொடையே நமது குழந்தைகளின் பள்ளிப் பருவம். அந்தப் பருவம் தாண்டி விட்டால் அப்புறம் அவர்கள் சுதந்திரப் பறவைகள். அதுவரை அம்மா, அப்பா எப்போதடா வீட்டுக்குத் திரும்புவார்கள் என்று குழந்தைகள் காத்திருந்த காலம் போய், இப்போது பெற்றோரான நாம், நமது குழந்தைகளின் வருகைக்காக காத்திருக்க வேண்டிய அளவில் நிலைமை மாறும். இதெல்லாம் தொன்று தொட்டு வழக்கம் தானே?! நேற்று நம் தாத்தா, பாட்டிகள் காத்திருந்திருப்பார்கள், இன்று நம் அப்பா, அம்மா காத்திருக்கிறார்கள்... நாளை நமது குழந்தைகள் அவர்கள் பெறப் போகும் குழந்தைகளுக்காக காத்திருக்கப் போகிறார்கள். இதிலென்ன விந்தை?! என்று கேட்கிறீர்களா?!

விந்தை என ஒன்றுமில்லை. ஆனால் நமது குழந்தைகள் சுதந்திரமாகச் சிறகு விரித்துப் பறப்பதற்கு முன்னால் பெற்றோரான நம்முடன் பரம அந்நியோன்யமாகக் காலத்தைக் கழிக்கவென்று இயற்கை அளித்த இந்த பள்ளிப் பருவக் காலங்களை நம்மில் எத்தனை பெற்றோர்கள் அலுப்பும், சலிப்பும், கோபங்களும், காயங்களும், மனஸ்தாபங்களும், குற்றச்சாட்டுகளும் இன்றி பரஸ்பர புரிந்துணர்வோடும், உள்ளார்ந்த ப்ரியத்தோடும், பிள்ளைகள் ஏங்கி எதிர்பார்க்கும் தோழமை உணர்வோடும் கடந்து செல்ல அனுமதித்திருக்கிறோம்.

ஒரு பக்கம் ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது’ எனும் பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு சில பெற்றோர்கள் தம் குழந்தைகளை பள்ளிக்காலங்களில் ஒழுக்கத்துடன் வளர்க்கிறோம் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் முழு அடக்குமுறைகளோடு வளர்க்க நினைக்கிறோம். மறுபக்கம் ச்சே... ச்சே என் குழந்தையை நான் முழுச் சுதந்திரத்துடன் வளர விடுகிறேன் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான சுதந்திரத்தை அனுமதித்து பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக்க பெற்றோரான நாமே காரணமாகி விடுகிறோம்.

இந்த இரு பக்கங்களும் தங்கள் வாழ்வில் வாய்க்கப் பெறாத குழந்தைகள் பாக்கியசாலிகள். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தோன்றுகிறது.  நமது பள்ளிக்காலங்களில் இந்த உண்மையை நாமோ, நமது பெற்றோர்களோ சரியாக உணர்ந்து தான் இருந்தோமா? அல்லது அதன் பெருமையை, பரிசுத்தத்தை, அந்நியோன்யத்தை உணராமலே அந்தக் காலகட்டம் ஏனோ, தானோவென வீணாகக் கடந்து போக அனுமதித்தோமா? என்பதை ஒரு நிமிடம் மனத்திரையில் ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டால் தேவலாம். ஏனெனில் ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே’ வழக்கமாகி விட்ட இந்த மனித வாழ்க்கையில் ‘அற்புதம்’ என்று எண்ணும் பல விசயங்களை அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் அதே நிகழ்காலத்தில் நாம் உணர்வதே இல்லை... அதே சமயம் அவற்றைத்  தவற விட்டு விட்டு பின்நாட்களில் அதைப் பற்றி யோசித்து எந்தப் பலனும் இல்லை.

இன்றைய எலக்ட்ரானிக் யுகத்தில் மாலையில் ஆய்ந்து. ஓய்ந்து வீடு திரும்பும் போது உடனே குளித்துச், சாப்பிட்டு விட்டு தூங்கத்தான் மனம் விரும்பும். ஆனால் அப்படித் தூங்கி விட்டால் நம் குழந்தைகளுக்கும், நமக்குமான இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு பிறகெப்போது நேரம் கிடைக்கும்? காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக வேலைகள் நம்மைத் தின்னட்டும். மிச்சமிருக்கும் நேரம் மொத்தத்தையுமே நாம் நமது குழந்தைகளுக்குத் தின்னத் தரலாமே. அந்த நேரத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக நாம் நம் குழந்தைகளையும், குழந்தைகள் நம்மையும் புதுப் புது பரிமாணங்களில் அறிந்து கொள்ள முயலலாமே! அப்படியான தருணங்களில் தான் நம் நமது குழந்தைகளின் தனித்திறன்களை அடையாளம் காண முடியும். அப்படியான தருணங்களில் தான் குழந்தைகள் அவர்களது பெற்றோரான நமக்குள் ஒளிந்திருக்கும் சாகஷ புருஷர், புருஷிகளை அடையாளம் காண முடியும். 

மாறாக வீடு திரும்பிய அப்பா மிகவும் சோர்வுடன் இருப்பார்... அவரைத் தொல்லை செய்யக் கூடாது. காலை முதல் வீட்டு வேலைகள் செய்து அம்மா சோர்வுடன் இருப்பார். அவரையும் தொல்லை செய்யக்கூடாது, பாட்டி, தாத்தா வயதானவர்கள்.. அவர்களையும் அது, இதுவெனக் கேட்டு அலைகழிக்கக் கூடாது. பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் அளவாகத் தான் பேசிக் கொள்ள வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அழகு சமர்த்தாய் படித்து விட்டு, சாப்பிட்டுத் தூங்குவது தானே தவிர; வீட்டில் இருப்பவர்களைத் தொல்லை செய்து வழ வழப்பதில்லை. என்று கட்டளையிடும், சதா புலம்பும் அனேகம் பெற்றோர்களைக் கண்டிருப்போம். ஏன் பல நேரங்களில் நாமும் அவர்களில் ஒருவராகத்தானே இருந்திருப்போம். அதனால் அவர்களை நமக்குத் தெரியாதிருக்காது. ஆனால் இது சரியா? என்று அவ்வப்போது நமக்குத் தோன்றியிருந்தால் நமக்குள் இப்போதும் மனிதத் தன்மை இருக்கிறது என்று அர்த்தம். இல்லா விட்டால் நாம் பயன்படுத்தும் மடிக்கனிணியோடு கனிணியாக, ஸ்மார்ட் ஃபோன்களோடு ஃபோன்களாக நாமும் இயந்திரங்களாகிப் பல வருடங்களாகிறது என்றே அர்த்தம்.

ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது உங்களை வரவேற்க உங்களது பெற்றோர் மலர்ந்த முகத்துடன் வீட்டில் காத்திருக்கிறார்கள். வீட்டுப் பாடம் செய்து கொண்டிருக்கும் குழந்தைகள் உங்களைக் கண்டதும் அப்படியப்படியே அவற்றைப் போட்டு விட்டு ஆவலாக உங்களருகே ஓடி வந்து அன்று பள்ளியில், அண்டை அசலில் நடந்த விசயங்களைப் பற்றி கொஞ்சம் கதைத்து விட்டு மீண்டும் தங்களது வீட்டுப் பாடங்களை விட்ட இடத்திலிருந்து துவக்குகிறார்கள். அவர்களைத்  தாண்டி உள்ளே வந்தால் மாலையில் உங்கள் சோர்வைப் போக்குவதற்காகவே வந்தாற் போல உடன்பிறந்தவர்களும், அத்தை பிள்ளை, சித்தி மகள்கள், நெருங்கிய, மனதிற்குகந்த நண்பர்கள்  என்று ஒரு ஜமா உங்களுடன் ஜாலியாக அரட்டையடிக்க காத்திருக்கிறது. அவர்களது பிள்ளைகள் அனைவரும் உங்களது பிள்ளைகளுடன் கூடத்தில் தாத்தா, பாட்டிகளுடன் வீட்டுப் பாடத்தோடு உலக விசயங்களை ஒரு புரட்டுப் புரட்ட அனுமதித்து விட்டு நீங்கள் உங்கள் வயதொத்தவர்களுடன் அரசியல், சினிமா, அரட்டைக் கச்சேரியோடு மாலை டிஃபன் முடித்து அலுவலகம், போக்குவரத்து, என்று அல்லோல கல்லோலப்பட்டு இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்றுக் கொள்கிறீர்கள். அப்புறமென்ன வந்தவர்கள் எல்லாம் ஒரு வழியாக அவரவர் வீடுகளுக்குத் திரும்பியதும்... கூடத்தில் கதை பேசிக் கொண்டே குடும்பத்தில் அனைவருமாய் அமர்ந்து இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு காற்றாட வீட்டு முற்றத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ கொஞ்சமாய் உலவி விட்டு பேச்சு... பேச்சாய் இருக்கும் போதே கண்கள் சொருக, கொட்டாவியுடன் குழந்தைகளை அணைத்துக் கொண்டு நித்ரா தேவியிடம் சங்கமிக்க வேண்டியது தான் பாக்கி. அப்படிப்பட்ட நாட்கள் எப்போதாவது உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வந்து போயிருக்கும் தானே! இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் இதுவே நாம் எல்லோரும் விரும்பும் வாழ்க்கையாக இருக்கக் கூடும். குடும்பத்தை அரவணைத்து உறவுகள், நட்புகளுடன் அனுசரனையாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது?

இதில் சிலருக்கு உறவுகளையும், நண்பர்களையும் கூட பிடிக்காமல் போகலாம். ஆனால் மாலையில் வீடு திரும்புகையில் பூப்பந்துகளாய் நம்மை வந்து மோதும், பூனைக்குட்டிகளாய் உரசும் குழந்தைகளை யாருக்குமே பிடிக்காமல் போகாது. அப்படியெல்லாம் இல்லை... மாலை வீடு திரும்பும் போது மேலே விழுந்து பிடுங்கும் குழந்தைகளை கண்டால் எனக்கு எரிச்சல் தான் வரும். அது என் குழந்தையாகவே இருந்தாலும் கூட என்று சொல்பவர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் வாழ்வை ரசிக்கத் தெரியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளை அனுசரிப்பதும், அரவணைப்பதும் அப்புறம்... முதலில் நம்மில் பலருக்கு குழந்தைகளோடு சம்பாஷிக்கவே தெரியவில்லை எனும் போது மேற்கொண்டு பேச எதுவுமிருக்குமா? முதலில் நாம் நமது குழந்தைகளுடன் சம்பாஷிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதன் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெற்றோராகப் பட்டவர்களுக்கு அதைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

குழந்தைகளுடன் எதைப் பேசுவது? எதைத் தவிர்ப்பது என்ற குழப்பங்களுக்கே இடமில்லை. இன்றைய குழந்தைகளுக்கு உலக விசயங்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஏதோ கொஞ்சம் தெரிந்தே இருக்கிறது. அவர்கள் தெரிந்து கொண்டது அவர்களது பாதுகாப்புக்கும், நிம்மதிக்கும், வளமான எதிர்காலத்துக்கும் எவ்விதமாக உதவக் கூடும்? அல்லது உதவப் போவதில்லை என்பதை நமது அனுபவங்களில் இருந்து அவர்களிடம் பகிர்ந்து கொண்டாலே போதும். 

ஏனெனில் எல்லா அம்மாக்களும், அப்பாக்களும் ஒரு காலத்தில் அவரவர் மகன், மகளது வயதைக் கடந்து வந்தவர்கள் தான். 

ஆகவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுடன் சுவாரஸ்யமாக சம்பாஷிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...

குழந்தைகளுடன் பேசுவதும், குழந்தைகளைச் சுதந்திரமாகப் பேச வைப்பதும் ஒரு மாபெரும் கலை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com