நேரமே தூங்கி... நேரமே எழுந்தால் எல்லாப் பிரச்னையும் தீரும்! 

நேரமே தூங்கி... நேரமே எழுந்தால் எல்லாப் பிரச்னையும் தீரும்! 

நேரத்துல தூங்கறதா? அப்படின்னா 9 மணிக்கா? ஐயோ அப்போ தானேங்க சன் டி.வி ல பிரியமானவளே போடுவாங்க! காலைல ஆஃபீஸ்ல அலுத்துச் சலித்து வரும் போது இப்படியாவது ஒரு சின்ன ரிலாக்சேஷன் வேண்டாமா?

குழந்தைகளோடு பெற்றோர்கள் பேசக் கற்றுக் கொள்ளலாம். அவர்களை அன்பாக அரவணைக்கக் கற்றுக் கொள்ளலாம்... பைசா பெறாத விசயங்களுக்கெல்லாம் சொந்தக் குழந்தைகளின் மேல் நெருப்பாய் கோபத்தை அள்ளிக் கொட்டாமலிருக்கவும் பெற்றோர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்... தாம் பெற்ற அருமைக் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் மேலே சொன்னவற்றை மட்டுமல்ல இன்னும்... இன்னும் எதையெதையோ எல்லாமும் மாற்றிக் கொண்டு விட்டுத் தர முன் வரலாம். ஆனால் இந்த அருமாந்தக் குழந்தைகள் இருக்கிறார்களே அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்காக ஒரே ஒரு விசயம் மட்டும் செய்தால் போதும். அதை மனமிரங்கி தங்கள் பெற்றோர்களுக்காக அவர்கள் செய்ய முன் வருவார்களா? காலை நேரத்தில் இதனால் தான் பெரும்பான்மை வீடுகளில் கலகமே வெடிக்கிறது.... அம்மாவுக்கும், அப்பாவுக்குமோ, அல்லது பாட்டிக்கும், அம்மாவுக்குமோ இதில் வெடிக்கும் சச்சரவு பின்னர் நாள் முழுதும் ஏதோ ஒரு பனிப்போருக்கான காரணமாகி விடுகிறது. இப்படி ஒரு காரணத்தைச் சொன்னால் அதற்கும் எல்லோருமே பெற்றோர்களை குறிப்பாக அம்மாக்களைத் தான் குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்... என்று அலுத்துக் கொண்டார் நெருங்கிய தோழி ஒருவர். 

என்ன அப்படி ஒரு அலுப்பு?! குழந்தைகள் பெற்றோர்களுக்காக அப்படி என்ன தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டதில்... அவர் சொன்ன பதில் ஆமாமில்லை... இங்கிருந்து தானே பெரும்பாலான வீடுகளில் அன்றைய சண்டையே துவங்குகிறதோ என்று எனக்கும் தோன்றி மறைந்தது. அது வேறொன்றுமில்லை. தினம் தோறும் காலையில் குழந்தைகளைத் துயில் எழுப்பும் வேலை தான் அது. இந்த வேலையில் மட்டும் குழந்தைகள் தங்களது பெற்றோரை எதிர்பாரமல் அவர்களே காலையில் சமர்த்தாக எழுந்து கொண்டு குளித்து விட்டு வந்து சமர்த்தாகச் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு கிளம்பினால் எத்தனை நிம்மதியாக இருக்கும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் மனக்கிலேசங்களாக இருக்கின்றன. 

விடிந்து எழுந்ததும், ஒரு நாளைப் போல இல்லாத திருநாளாய் என்றென்றைக்குமாய் இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரையிலும் அவர்களது தாவாங்கட்டைகளைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டு கட்டில் காலில் அமர்ந்து அவர்களை உலுக்கி, அசைத்து எழுப்புவது நான் உட்பட எல்லா அம்மாக்களுக்குமே பெரும் போராட்டமே தான். ஓரிரு உலுக்கலில் எழுந்து விடும் குழந்தைகள் சமர்த்தர்கள். எத்தனை அசைத்தும், எத்தனை திருப்புகழ் பாடியும், பல்லாண்டு பாடியும், இடியே விழுந்தாலும் காலைத் தூக்கத்தை கைவிட விருப்பமின்றி குளத்தில் இட்ட கல்லாக உறங்கும் குழந்தைகளைக் கண்டால் அந்நேரம் ஐயோ குழந்தையை தூக்கத்தில் எழுப்புகிறோமே என்ற பரிதாபத்தையும் தாண்டி பள்ளி வேன் வந்து விடுமே, தாமதமாக எழுந்து, தாமதமாகக் குளித்து, கடைசியில் சாப்பிடக் கூட நேரமின்றி அரக்கப் பரக்கப் பட்டினியாக ஓடுகிறார்களே என்ன செய்வது இந்தக் குழந்தைகளை என்ற ஆற்றாமை கலந்து வெடிக்கும் கோபத்தில் தான் நகரத் தொடங்குகின்றன பள்ளி நாட்களின் காலைப் பொழுதுகள்.

இந்தப் பிரச்னையிலிருந்து அம்மாக்கள் வெளிவர என்ன தான் தீர்வு?!

பாட்டிகளிடம் கேட்டால் ‘ நேரத்துல தூங்கி நேரத்துல எழுந்திரிச்சா எல்லாப் பிரச்னையுமே தீர்ந்திரும்’ என்று சிம்பிளாக முடித்து விடுகிறார்கள்.

அதே வேலைக்குப் போகும் அம்மாக்களிடம் கேட்டால், முதலில் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு, பிறகு மறுநாள் காலைச் சமையலுக்கான ஆயத்தங்களை செய்து முடித்து விட்டு, படுக்கைக்குச் செல்ல குறைந்தபட்சம் 11 மணியாகி விடுகிறது. இப்படி தாமதமாகத் தூங்கச் செல்வதால் அந்நாளைய எங்களது பாட்டிமார்கள் மற்றும் அம்மாக்களைப் போல எங்களால் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளவே முடிவதில்லை. 6 மணியோ, 6.30 மணியோ ஆகி விடுகிறது. அப்புறம் காலைச் சமையலை முடித்து விட்டு குழந்தைகளுக்கும், எங்களுக்குமாக மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை கட்டி வைத்து விட்டு குழந்தைகளை எழுப்பத் தொடங்கினால் நேரம் றெக்கை கட்டிக் கொண்டி பறக்க ஆரம்பித்து விடும். பிறகென்ன காலை நேரம் எல்லா வீடுகளிலும் போர்க்களம் போலத்தான் காட்சியளிக்கக் கூடும். அத்தனை அவசரகதியில் கிளம்ப வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் இது மிகப்பெரிய அலுப்பாக இருந்தாலும் எங்களால் இந்த விசயத்தில் பெரிய மாற்றம் எதையும் இதுவரை கொண்டு வர முடிந்ததில்லை” என்று சலிப்பாகச் சொல்லி முடிக்கிறார் மற்றொரு தோழி. 

அவரிடம் மேலே பாட்டிகள் சொன்ன தீர்வான “நேரத்துல தூங்கி, நேரத்துல எழுந்திரிச்சா பிரச்னை தீருமே!” எனும் பதிலை முன் வைத்தால்;

நேரத்துல தூங்கறதா? அப்படின்னா 9 மணிக்கா? ஐயோ அப்போ தானேங்க சன் டி.வி ல பிரியமானவளே போடுவாங்க! காலைல ஆஃபீஸ்ல அலுத்துச் சலித்து வரும் போது இப்படியாவது ஒரு சின்ன ரிலாக்சேஷன் வேண்டாமா? டென்சன்லயே எழுந்திருச்சு டென்சனோடவே வேலைக்குப் போய் அந்த டென்சன் தீராமலே படுத்தா தூங்க முடியுமா? இல்ல தூக்கம் தான் உடனே வந்துருமா? என்ன? எங்களை நாங்க ரிலாக்ஸ் பண்ணிக்க எங்களுக்குன்னு இப்படி ஏதாவது நாங்களே கண்டு பிடிச்சு வைச்சா.. அதுக்கும் ஆப்பு வச்சிடுவீங்க போல இருக்கே. இப்போ பாருங்க புதுசா ‘பிக் பாஸ்’ வேற போட ஆரம்பிச்சாட்டாங்க... சொல்லப் போன இதெல்லாம் பார்த்து டென்சன் குறையுதோ இல்லையோ 10 மணிக்கு மேல தானாக கண் செருகி நம்மளையே அறியாம தூங்கிப் போகலாம். இல்லன்னா தூக்கம் வராம வேற கஷ்டப் படனும். இதாங்க எங்களோட முதல் பிரச்னை.

அவரது பதில் என்னைப் போலவே உங்களுக்கும் சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள் பிரச்னை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று;

குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து குறிப்பாக தமது பெற்றோர்களைப் பார்த்து வளர்கிறார்கள். அத்தகைய பெற்றோர்களுக்கு இரவில் பிரியமானவளே, பிக் பாஸ் பார்த்தால் தான் தூக்கம் வருமென்றால் பிறகு அவர்களது குழந்தைகள் ‘எங்களுக்கு டோரிமான், ஹீமேன் பார்த்தால் தான் தூக்கம் வரும் என்று அடம்பிடிக்கும் போது அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அப்போது அவர்களை மட்டும் போட்டு மொத்து மொத்தென்று மொத்துவானேன்?! குறைந்தபட்சம் குழந்தைகளின் பள்ளிக் காலம் முடியும் வரை மட்டுமாவது பெற்றோர் தமது தினப்படி அலுவல்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் நேர மேலாண்மையைக் கடைபிடித்தே ஆக வேண்டியிருக்கிறது. இது ஒன்று மட்டுமே மேலே சொல்லப் பட்டுள்ள பிரச்னைக்கான ஒரே சிறந்த தீர்வாக அமைய முடியும். இந்த நேர மேலாண்மை என்ற விசயத்தைத் தான் அந்தக் காலத்தில் நேரத்துல தூங்கி... நேரத்துல தூங்கி’ என வெகு சிம்பிளாகச் சொல்லி முடித்திருக்கிறார்கள். அதை நாம் தான் புரிந்திருந்தும் கடைபிடிக்க மறுத்தவர்களாக இருக்கிறோம். 

யோசித்துப் பாருங்கள்... பள்ளி செல்லும் குழந்தைகள் காலை 8.30 மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டியவர்களாக இருக்கிறார்கள். சிலருக்கு 7.30 மணிக்கெல்லாம் பள்ளி வேனோ, பேருந்தோ வந்து வீட்டு முற்றத்தில் நின்று அலார்ம் அடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அத்தகைய குழந்தைகள் காலைச்சாப்பாட்டை 7 மணியளவிலாவது நிறைவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.  பெற்றோர்கள் துயில் எழும் நேரமே காலை 6.30 தான் எனில் பிறகெப்படி அவர்கள் போஷாக்கான பிரேக்பாஸ்ட் அளித்து தங்களது குழந்தையை 7.30 மணிக்கு பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட முடியும்? கடமையே என்று காலைச் சாப்பாடாக பிரெட் ஜாம் அல்லது ஒரு டம்ளர் பாலுடன் 4 பிஸ்கட்டுகள், ஏதோ சில பழத்துண்டுகள் என்று வாயில் திணித்து முடிப்பதற்குள் பேருந்து வந்து விட சில நாட்கள் ஷூ அணிவித்தோமா? லஞ்ச் டவல் வைத்தோமா? ஸ்கூல் டைரியில் கையெழுத்துப் போட்டோமா இல்லையா? வீட்டுப்பாடங்களைச் சோதித்தோமா இல்லையா? என்ற நினைவின்றியே குழந்தைகளை அள்ளிக் கொண்டு போய் பள்ளி வேனில் திணித்து விட்டு வந்து ஆசுவாசப் பட்டுக் கொள்கிறோம். இதெல்லாம் மீண்டும் ரீவண்ட் செய்து பார்ப்பதற்கு கூட அலுப்பான காட்சிகளாக இருக்கின்றன. இதையே தான் நம்மில் பெரும்பாலானோர் தினமும் செய்து கொண்டே இருக்கிறோம் என்றால் அது எத்தனை அபத்தமானதாக இருக்கக் கூடும்?

இதற்கு தீர்வு என்ன?

எல்லா ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது நேர மேலாண்மை பற்றிய வரைபடங்கள்.

முதலில் அவற்றை வாங்கி குழந்தைகள் கண்களில் படுமாறு படுக்கையறை சுவரில் ஒட்டுங்கள். 

நேர மேலாண்மைக்கு மட்டுமல்ல இப்போது தான் எல்லாவற்றுக்கும் ரெடிமேட் வரைபடங்கள் கிடைக்கின்றனவே, அவற்றுள் உங்கள் குழந்தைகளுக்குப் பொருத்தமாக சத்தான பிரேக் பாஸ்ட் உணவு வகைகள், சத்தான லஞ்ச், சத்தான சிற்றுண்டிகள் மற்றும் இரவு உணவுகள் உள்ளிட்டவற்றை ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்குப் பிரசன்னமாக்குங்கள். இப்போதெல்லாம் வரைபடங்களென்ன கிச்சன் டைல்ஸ்கள் கூட இப்படியான டிசைன்களில் வந்து விட்டன. எனவே குழந்தைகளுக்காகவும் ஏன் நமக்காகவும் கூட  நமது வீட்டுக் கிச்சனை நாம் ஏன் அப்படிப்பட்ட டைல்ஸ்கள் கொண்டு ஹெல்த்தி கிச்சனாக வடிவமைத்துக் கொள்ளக் கூடாது? அதனால் நிச்சயம் பலனிருக்கும். 

நாம் கடைபிடிக்க வேண்டிய அனைத்தும் நம் கண் முன் படங்களாகக் காட்சி தரும் வண்ணம் வைத்துக் கொண்டால். அவற்றைக் காணும் போதெல்லாம் நாம் நேரத்தின் அவசியத்தை உணர்வோம். உணர்வதோடு டி.வி நிகழ்ச்சிகளுக்கு அடிமைகளாகாமல் தப்பித்து நமது நேரத்தை நாமே ஆட்சி செய்யக் கூடிய்வர்களாக மாறுவோம். அப்புறமென்ன காலை நேரத் துயில் எழுப்பும்... எழும்பும் போராட்டங்கள் குழந்தைகளோடு... பெற்றோர்களுக்கும் தீர்ந்தது. இப்போது பாட்டிகள் சொன்ன தீர்வான நேரமே தூங்கி... நேரமே எழுந்திருச்சு எனும் மந்திரச் சொல்லைக் கடைபிடிக்கும் வழக்கம் நமக்கும் மிக எளிதாகவே இருக்கக் கூடும்.

குழந்தைகளே, பெற்றோர்களே இந்த ஒற்றைத் தாரக மந்திரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள், அதுவே வாழ்வு முழுமையிலும் நமது பல இன்னல்களையும் ஒரு சேரத் தீர்க்கக் கூடிய ஒரே ஒரு தாரக மந்திரம்!

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com