17. புருஷ தத்துவம்

சாங்கிய தத்துவத்தின்படி, பிரகிருதி பேரியற்கை என்றால், புருஷன் பேரறிவு. இரு துருவங்களான இவை இரண்டின் இணைப்புதான் உலகத் தோற்றமும் இயக்கமும்.


சாங்கிய தத்துவத்தின்படி, பிரகிருதி பேரியற்கை என்றால், புருஷன் பேரறிவு. இரு துருவங்களான இவை இரண்டின் இணைப்புதான் உலகத் தோற்றமும் இயக்கமும். புத்தி, அகங்காரம், மனம் இவையெல்லாம் புருஷன் ஆகா. ஏனெனில், இவையெல்லாம் பிரகிருதியின் வெளிப்பாடுகளே. பிரகிருதியோடு சம்பந்தப்படாத தனித்துவமானதும், பிரகிருதிக் கூட்டின் மூலமான அனுபவத்தை அறிந்துகொள்வதும், பின்னர் அதிலிருந்து விடுபடுகின்ற முக்திக்கு முனைவதுமான உயிர்ப்பே புருஷன்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆற்றலே பிரகிருதி. அது புருஷனின் அனுபவத்துக்காகவும், அதன் மூலமான புருஷனின் விடுதலைக்காகவும் செயல்படுகிறது. பிரகிருதியில் இருந்தே மஹத் (புத்தி), அகங்காரம் (தன்னுணர்வு), ஐம்புலன்கள், மனம் ஆகியவை பரிணமித்து புருஷனின் அனுபவக் களமான உலகம் தோன்றுகிறது.

இந்த உலகம், இல்லாததில் இருந்து தோன்றுவதில்லை. ஏற்கெனவே இருப்பதில் (ஒடுங்கியதில்) இருந்துதான் தோன்றுகிறது. முற்றிலும் புதிதாக - அதாவது ஏற்கெனவே இல்லாமல் இருந்து, திடீரென எதுவும் தோன்றிவிட முடியாது. ஏற்கெனவே உள்ளவற்றின் மாறுபாடுகளே, வளர்ச்சியே புதிய பொருள்கள். பாலில் இருந்து தயிரும், தயிரில் இருந்து வெண்ணெய்யும் தோன்றுகின்றன. தண்ணீரில் இருந்து தயிரோ, வெண்ணெய்யோ தோன்ற முடியுமா? முடியாது. ஏனெனில், ஒவ்வொரு விளைவிலும் அதற்குரிய காரணம் இருக்கிறது. காரணத்தைப் பொருத்தே காரியமும் (விளைவும்) அமைகிறது. அதுபோல்தான் உலகமும், ஏற்கெனவே இருக்கின்ற மூலப் பிரகிருதியில் இருந்து உருவாகிறது.

பிரகிருதியில் தோன்றிய பொருள்கள் நித்தியமானவை. அவை அழிவதில்லை. மாறாக, பிரளயத்தில் அதாவது உலக அழிவின்போது அதன் மூலத்தில் (பிரதானத்தில்) ஒடுங்குகின்றன. பின்னர் மீண்டும் உலகத் தோற்றம் தொடங்கி, இயங்கி, ஒடுங்குகின்றன. இந்தத் தொடர்ச்சிக்குப் பெயர்தான் சம்சாரம். இதனைக் கடலாக உருவகித்து சம்சார சாகரம் என்று வர்ணிப்பார்கள். இந்த சம்சார சாகரத்தில் இருந்து புருஷன் கடைத்தேற வேண்டும் என்பதே, வாழ்வு என்பதன் லட்சியம் என்கிறது சாங்கியம். இதற்கு புருஷார்த்தம் என்று பெயர். அதாவது, முக்தி என்ற லட்சியமே, புருஷன் என்பதற்கான லட்சணம் என்று பொருள்.

ஆதலால், அனுபவக் களமாக விரிகின்ற பிரகிருதியில் இருந்து, அனுபவிப்பதான புருஷன் வேறுபடுகிறது. ஆயினும், பிரகிருதியின் சாரமாகிய உடலாகவோ அல்லது மனமாகவோ புருஷன் தன்னை நினைத்துக்கொள்வது அறியாமையே. தூய விழிப்புணர்வு இல்லாமையால் இந்த அறியாமை ஏற்படுகிறது. புருஷனின் நிலைத்தன்மை மாற்றமடையாதது, நிரந்தரமானது ஆகிய இரண்டையும் தாங்கி நிற்கிறது. ஆனால், பிரகிருதி நிரந்தரமானது என்றபோதிலும் மாறிக்கொண்டே இருப்பது. பிரகிருதியில் ஏற்படும் மாற்றங்களைத் தனதாக புருஷன் பாவிப்பதால் துயரங்களை அடைகிறது. இதில் இருந்து விடுபடுவதே முக்தி.

வாழ்க்கை ஒரு நாடகம் என்றால், அதனைக் காண்பவனாக புருஷன் இருக்கிறது. ஆனால், நாடகக் காட்சியோடு தனக்குள்ள ஈடுபாட்டால், தானே அந்தத் துயரத்தையோ, மகிழ்ச்சியையோ அடைவதாகக் கருதுவதைப்போல, ஐம்புலன்கள், மனம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளைத் தனதாக புருஷன் கருதுகிறது. ஆனால், நாடகக் காட்சிகள் அதனைக் காண்பவனுக்கு உண்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததைப்போல, பிரகிருதியின் மாறுபாடுகள் புருஷனை பாதிப்பதில்லை. புருஷன் எக்காலத்திலும் அனுபவத்தை அறிந்துகொள்வதாக மட்டுமே இருக்கிறது.

புருஷன் என்று கூறுவதால் ஆண் என்று கருதிவிடக்கூடாது. ஆங்கிலத்தில் நபர் என்பதையும், அதன் இலக்கணத்தில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றையும் குறிக்க பெர்சன் என்கிறார்களே, அதுபோல்தான் இந்தப் புருஷனும். ஆண், பெண் என்ற எவ்வித பேதமோ, குணங்களோ அற்ற நிர்குணம்தான் புருஷன். அது தூய பிரக்ஞையாக, அனுபவத்தை அறிவதாக மாத்திரமே இருக்கிறது. ஆயினும் பிரகிருதியை பெண்ணாகவும் (சக்தியாகவும்), புருஷனை ஆணாகவும் (சிவனாகவும்) உருவகித்து உலகின் தோற்றத்துக்குக் காரணமாகக் கூறுவதுமுண்டு. இது ஓர் உதாரணம், உருவகம் மாத்திரமே. இருப்பினும் இதில் தத்துவம் உள்ளது.

ஆண் தொடர்பினால் பெண்ணில் கரு உற்பத்தியாகி, பிரசவம் நிகழ்கிறது. ஆயினும் பெண்ணுக்குள் ஏற்படும் கருவுற்ற சூழல், பத்து மாத அனுபவம், பிரசவ வேதனை, பிள்ளைப் பேறு ஆகிய எதிலும் ஆணுக்கு நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. அதுபோல்தான் புருஷனின் தொடர்பால் பிரகிருதி சலனப்பட்டு, உலகையும், வாழ்வையும் தோற்றுவிக்கின்றபோதிலும், அதனால் ஏற்படும் மாறுபடுகளால் புருஷன் எவ்வித பாதிப்புமின்றி தனித்திருக்கிறது.

இவ்வித புருஷன் ஒன்றல்ல, பலவாகும். புருஷர்களின் அனுபவத்துக்காக ஒட்டுமொத்த உலகம் தோன்றுவது ஒரு நிலை. அதே நேரத்தில், தனிப்பட்ட ஒவ்வொரு புருஷனுக்காகவும் பிரகிருதி உருவாக்கும் வாழ்வு என்பது மற்றொரு நிலை. அனைத்துப் புருஷர்களும் முக்தி அடைகின்ற வரையில் பிரகிருதியின் சம்சார சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும். ஜனனம் (தோற்றம்), ஸ்திதி (இருப்பு), லயம் (ஒடுக்கம்) என்ற மூன்றும் மாறி மாறி பிரகிருதியின் படைப்பான உலகுக்கு நிகழ்கிறது. அதேபோல பிரகிருதியின் கூட்டின் காரணாக ஒவ்வொரு புருஷனுக்கு ஏற்படும் வாழ்க்கை எனும் அனுபவமும் பிறப்பு, வாழ்வு, இறப்பு; மீண்டும் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனச் சுழல்கிறது. இதில் புருஷன் என்பது தூய பிரக்ஞை மாத்திரமே என்பதால் அது பிறப்பு, மூப்பு, இறப்பு ஆகியவற்றை அடைவதில்லை. அதனோடு தொடர்புடைய பிரகிருதிக் கூட்டே இந்த மாற்றங்களை அடைகிறது.

புருஷனை சாங்கியம், சதாபிரகாஷஸ்வரூபம் என்கிறது. இதற்கு எப்போதும் ஒளிர்கின்ற வடிவம், அதாவது மாறா அறிவு வடிவம் என்று பொருள். பிரகிருதியில் ஏற்படும் பரிணாமத்துக்கு (மாற்றங்களுக்கு) புருஷனே காரணம். ஆனால், பிரகிருதியில் இருந்து முற்றிலும் நேர்மாறானது புருஷன். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் அது மாறாமல் இருக்கிறது. இந்த மூன்றும் பிரகிருதியோடு தொடர்புடைய புத்திக்குத்தான் ஏற்படுகிறதே அன்றி, புருஷனுக்கு அல்ல. இதேபோல்தான், எப்போதும் நீடித்திருக்கின்ற, நிலையான புருஷனிடம் துக்கம், சந்தோஷம் ஆகிய இரண்டுமே இல்லை. ஏனெனில், துக்கம் புருஷனின் குணம் என்றால், புருஷனின் நிலைத்தன்மை காரணமாக துக்கமும் நிலையாகவே இருக்கும். அதில் இருந்து விடுபட முடியாது. அதேபோல்தான், சந்தோஷம் என்ற குணமும் புருஷனுக்குரியதாக இருந்தால், அதன் நிலைத்தன்மை காரணமாக புருஷன் அதில் இருந்து விடுபட முடியாது. வேதனை, மகிழ்ச்சி ஆகிய இரண்டும் புத்தியின் மாறுபாடுகள் என்பதால்தான், அதில் இருந்து புருஷன் முக்தி அடைய முடிகிறது.

வேதனை, மகிழ்ச்சி ஆகிய அனுபவங்கள் தன்னோடு தொடர்புடைய பிரகிருதியின் மாற்றங்களே என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றில் இருந்து வேறுபட்டு நிற்பதே புருஷனின் முக்தி ஆகும். இவ்வாறான அனுபவமும், வாழ்வும், முக்தி நிலையும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வோர் உயிரினத்துக்கும் மாறுபடுவதால் புருஷன் ஒன்றல்ல, பல. புருஷன் ஒன்றே என்று கூறினால், ஒருவருக்கு ஏற்படும் அனுபவம்தான் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். ஒருவர் முக்தி அடைந்தால் அனைவருமே அதனை அடைந்துவிடலாம். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லையே. ஆகையால், புருஷர்கள் பலவே என்கிறது சாங்கியம். இதற்கு பஹு புருஷத்துவம் என்று பெயர்.

அத்துடன், பிரகிருதியின் பரிணாமத்தால் புருஷன், மனிதர் மாத்திரமின்றி பல்வேறு உயிரினங்களாகவும் தோற்றம் எடுப்பதாகக் கூறும் சாங்கியம், கர்ம வினைகள் காரணமாக பல்வேறு பிறப்புகளை அனுபவிக்கும் புருஷன், பிரகிருதியின் பரிணாமத்தில் மேம்பட்ட மனித நிலையில் முக்தி அடைவதாகத் தெரிவிக்கிறது.

பிரகிருதிக்குள் புருஷன் நுழைந்து அடைகின்ற ஜீவன் என்ற வாழ்வுயிர், புருஷனோடு, பிரகிருதியின் புத்தி, அகங்காரம், மனம் ஆகியவற்றின் முக்கூட்டான அந்தகரணமும் இணைந்ததாகும். ஒரு வாழ்வில், இந்த அந்தகரணத்தின் மூலமாக புருஷன் அனுபவத்தைப் பெறுகிறது. ஐம்புலன்களோடும், கண், காது உள்ளிட்ட இந்திரியங்களோடும் மனத்துக்கு உள்ள தொடர்பு காரணமாக, ஒரு ஜீவன் தன்னை உடலாகக் கருதிக்கொள்கிறது.

பொருள்களால் ஆன உடலுக்கு தூல உடல் என்று பெயர். இது பரு உடல், பூத உடல் என்றும் அழைக்கப்படுகிறது. இறப்பின்போது அழிந்துபோவது இந்தப் பரு உடலே. ஒவ்வொரு பரு உடலுக்குள்ளும் ஒவ்வொரு நுண்ணுடல் (சூக்கும உடல்) உள்ளது. இதனை சாங்கியம் லிங்கதேஹம் என்று கூறுகிறது. லிங்கம் என்றால் சுட்டப்படுவது, குறியீடு என்று பொருள். அதாவது, ஜீவன் (ஆன்மா) என்று சுட்டப்படுவதே இந்த நுண்ணுடல். இந்த நுண்ணுடல்தான் அடுத்தடுத்த பிறவிகளில் புதிய புதிய பரு உடல்களுக்குள் நுழைகிறது. கர்மவினைக் கோட்பாட்டின்படி, முந்தைய பிறவிகளில் செய்த நன்மை, தீமை ஆகிய கர்மவினைகளுக்கேற்ற பலனையும் இது கூடவே கொண்டு செல்கிறது. இந்தக் கர்மவினைகளுக்கு ஏற்பவே அதன் புதிய பிறப்பும், வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது.

புருஷன் என்பது எவ்வாறு பொருள்களால் ஆன பரு உடல் இல்லையோ, அதேபோல் கர்மவினைப் பலன்களால் ஆன நுண்ணுடலும் அல்ல. புருஷன் இவற்றில் இருந்து தனித்திருப்பது. அது அனுபவத்தை உணர்கின்ற தூய பிரக்ஞை மாத்திரமே. பிரகிருதியில் இருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்கும் – பகுத்தறிந்து பார்க்கும் – ஞானம் வருவதன் மூலம், பிரகிருதியின் வேறுபாடுகளால் பாதிப்படையாத முக்தி நிலையை புருஷன் அடைகிறது. அவ்வாறு விடுதலை அடைந்த புருஷனிடம், பிரகிருதி நாணமடைந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக்கொள்வதால் முக்தி சாத்தியமாகிறது என்கிறது சாங்கிய காரிகை. சாங்கிய தரிசனத்தை அறிந்துகொள்வதில் இந்த சாங்கிரிய காரிகை என்ற நூலும் சஷ்டி தந்திரம் என்ற மற்றொரு நூலும் மிகவும் முக்கியமானவை. அவை குறித்து அடுத்த வாரம் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com