48. ஆண்டவனின் சீடர் நாம்

ஒருபுறத்தில் படையெடுப்பாளர்களின் பராக்கிரமத்தாலும், மறுபுறத்தில் மதமாற்றங்களாலும் நமது சமுதாயம் பலவீனப்பட்டது. அத்தகைய சூழலில்தான் அகத்திலும் புறத்திலும் எதிரிகளை ஒடுக்கும்

உலகியல் வாழ்வின் இன்பங்களைத் துய்ப்பதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்தால் வாழ்நெறி தறிகெட்டுவிடும் என்பதால், அதன் துன்ப இயல்பை போதிக்கும் தத்துவங்கள் எழுந்தன. ஆனால், இதனை உணர்ந்து வாழ்க்கை முறையை சமன்படுத்தி சீர்செய்வதற்குப் பதிலாக, வேதனையே வாழ்க்கை என்ற விரக்தி மார்க்கம் தலைதூக்கிவிட்டது. இந்த எதிர்த்திசைப் பயணத்தால் எல்லாம் அவன் செயல் என்றோ, விதி விட்ட வழி என்றோ ஹிந்து சமூகத்தினர் வாழத் தலைப்பட்டனர். அனைத்தும் கடவுளின் செயல் என்றாலும், விதி வலியது என்றாலும், நமக்கு சிந்திக்கும் ஆற்றலை இறைவன் எதற்கு அளித்திருக்கிறான்? விதி நமது கர்மவினைகளின் படியன்றோ அமையப்பெறுகின்றது? இந்த விஷயங்களை மறந்துவிட்டு ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்’ என்ற வகையில் மக்கள் வாழத் தொடங்கினர்.

அதேநேரத்தில், அனைத்தும் ஆண்டவனே, அனைத்திலும் ஆண்டவனே என்ற பாரதீய மெய்ஞானத்தின் ஆணிவேரையும் மக்கள் மறக்கத் தொடங்கினார்கள். தகுதியின் அடிப்படையில் நான்கு வர்ணம் என்ற நிலை மாறி, பிறப்பின் அடிப்படையில் என்ற வகையில் அதற்கு வர்ணமடிக்கப்பட்டது. தொழிலின் அடிப்படையில் புதிதாக ஜாதி முறை முளைத்து, வர்ணாசிரமத்தை வளைத்துப்போட்டது. ஒற்றைக் கடவுளின் ஒட்டுமொத்தமான மனித சமுதாயம், மேல்-கீழ் என்று பிளவுபட்டது. அதிலும் குறிப்பிட்ட சகோதர சமூகத்தினர் பிரதிலோமர், அனுலோமர் என்றெல்லாம் கதைகள் பேசி தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்படும் கொடுமை தொடங்கியது. புருஷன் அல்லது சிவம் என்பது அறிவாற்றல் என்றும், பிரகிருதி அல்லது சக்தி என்பது பௌதீக ஆற்றல், அதாவது சிந்திக்க இயலாத பொருள் ஆற்றல் என்றும் அதுவே மாயை என்றும் தத்துவம் கூறப்பட்டதை தவறாகப் புரிந்துகொண்டு, பெண்கள் என்றால் மாயப் பிசாசுகள் என்பதாகவும், பெண் ஜென்மத்தில் முக்தி கிடைக்காது என்றும், அவர்களுக்கு ஆன்மீக அறிவு குறைவு என்பதாகவும் மனப்போக்கு தொடங்கியது. இதன் அடிப்படையில் பெண்ணடிமைத்தனமும் புகுந்துகொண்டது.

இவ்விதமாக, மனிதனை மேம்படுத்தி தெய்வநிலைக்கு உயர்த்துவதற்காக எழுந்த நமது முன்னோர்களின் மெய்ஞானத் தத்துவங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சீர்குலைக்கப்பட்டு, நமது சமுதாயம் கீழ்மையை நோக்கிச் செல்லத் தலைப்பட்டது. அப்போதுதான் அந்நியப் படையெடுப்புகளால் வாள்முனையில் மதமாற்றங்கள், பெண்களின் கற்புக்கு பங்கம், ஆலயங்கள்- பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கலாசார, அறிவுப் பொக்கிஷங்களின் அழிப்பு என நமது சமுதாயத்தின் சீர்குலைவு அதிகரித்தது. வசுதைவ குடும்பகம் – உலகமே ஒரு குடும்பம் என்று தத்துவம் பேசிய நாம், படையெடுத்து வந்த அந்நியரைக்கூட அவரும் சகமனிதர்தானே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருந்தோம். ஆனால் நமது சொந்த சகோதரர்களை ஜாதிகள் என்ற பெயரால் தாழ்த்தியும் அடக்கியும் கொடுமைப்படுத்தும் அவலத்தையும் அரங்கேற்றினோம். என்ன ஒரு குரூர முரண்பாடு! படையெடுத்து வந்த முகமதியர்கள் மாற்று மதத்தினர் மீது அடக்குமுறையையும் அட்டூழியங்களையும் பிரயோகித்தாலும், சொந்த மதத்தினர் மீதான சகோதரத்துவத்தை வெறும் கொள்கையாக அன்றி நடைமுறையிலும் நிலைநிறுத்தினார்கள்.

இதனால் ஒருபுறத்தில் படையெடுப்பாளர்களின் பராக்கிரமத்தாலும், மறுபுறத்தில் மதமாற்றங்களாலும் நமது சமுதாயம் பலவீனப்பட்டது. அத்தகைய சூழலில்தான் அகத்திலும் புறத்திலும் எதிரிகளை ஒடுக்கும் சிங்கம் என சீக்கிய சம்பிரதாயம் தோன்றியது. சிக் என்ற வேர்ச் சொல்லுக்கு சிஷ்யன், சீடன் என்று பொருள். சீக்கி அல்லது சீக்னா என்பதற்கு கற்றுக்கொள்ளல் என்று பொருள். ஆகையால், சீக்கியன் என்றால் சீடனானவன் என்று பொருள். யாருக்குச் சீடன்? எல்லாம்வல்ல இறைவனுக்குச் சீடன். அந்த இறைவனே நம் அனைவரையும் படைத்து, வழிநடத்தும் பரம குரு. அந்த இறைவனின் சீடர்களாகிய நாம் அனைவரும் சரிசமம். மனித சமுதாயத்தின் ஒற்றுமையைப் பேணிக் காப்பதும், தன்னலமற்ற சேவை செய்வதும், அனைவரின் நலனுக்காகச் செயல்படுவதும், நேர்மையான- எளிமையான வாழ்க்கையை வாழ்வதுமே அந்த இறைவனின் சீடர்களாகிய நமது கடமை என்கிறது சீக்கியம்.

இஸ்லாமியர்களைப் போலவே தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் சகோதரர்களாகக் கருதுவதும், இறைவனை உருவமற்ற வகையில் (பஞ்சாபி மொழியில் அல்லக் அல்லது அல்லஹு என்றால் காண இயலாதவர், உருவமற்றவர் என்று பொருள்) வழிபடுவதும் சீக்கிய சமயத்தின் தனிச் சிறப்பு. ஆனால் இவை இரண்டும் இஸ்லாத்திலிருந்து கடன் பெற்றவை அல்ல. ஹிந்து தர்மத்தின் தத்துவங்களில் இருந்து எடுத்துக்கொண்டவையே. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வேகம் இஸ்லாத்தால் ஏற்பட்டது. ஏனெனில், இறைவனை ஆதி குருவாகக் கூறுவது பாரதீய மெய்ஞான மரபு. அதனையொட்டியே சீக்கியமும் இறைவனை குர், குரு, வாஹேகுரு என்று குறிப்பிடுகிறது. மேலும் இறைவனை வடிவமற்றவர் என்ற வகையில் நிரங்கார் என்றும், காலத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற முறையில் அகால் என்றும் சீக்கியம் அழைக்கிறது. இவை முறையே பாரதீய மெய்ஞானத்தில் இறைவன் நிர்குணி என்றும் காலாதீதர் என்றும் அழைக்கப்படுவதே ஆகும். அத்துடன் உருவமில்லாத, வகைப்படுத்த முடியாத இறையை இக் ஓங்கார் (ஏக ஓங்காரம்) என்கிறது சீக்கியம். ஓம் என்ற பிரணவமே பிரபஞ்சத்தின் தொடக்கம் என்றும் அந்த நாதமே நாதனாகிய இறைவன் என்றும் பாரதீய மெய்ஞானம் கூறுவதையே அதன் வழிவந்த சீக்கியம் வழிமொழிகிறது. அதேபோல் உபநிஷதங்களும், பக்தி மார்க்கங்களும் எடுத்துரைத்த ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையுமே நடைமுறையில் சீக்கியம் சிறப்பாக நிலைநிறுத்தியது.

பொதுவாக, பாரதீய மெய்ஞானம் அல்லது ஹிந்து தர்மம் என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் சுருங்கிக்கொள்வது அல்ல. காலவோட்டத்துக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப தன்னை சீர்திருத்திக்கொள்ள, மேம்படுத்திக்கொள்ள புதுப்புது தத்துவங்களை, சித்தாந்தங்களை, சம்பிரதாயங்களை உருவாக்கி வளர்ப்பதே அதன் சிறப்பம்சம். அதனால்தான் சாங்கியம், யோகம், தாந்திரீகம், பௌத்தம், சமணம், வைசேஷிகம், நியாயம், மீமாம்சம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என எண்ணற்ற வழிமுறைகள் பாரதத்தில் தொடர்ந்து தோன்றி வருகின்றன. அந்த வரிசையில், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வழிமுறையே சீக்கியம். இதனைத் தோற்றுவித்தவர், நானக் சந்த் என்ற இயற்பெயர் கொண்ட குரு நானக். பஞ்சாப் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த தலவண்டிராய் என்ற கிராமத்தில் கி.பி. 1469-ல் இவர் பிறந்தார்.

சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம்கொண்ட நானக், சுமார் 15 வயதில் மளிகைக் கடை ஒன்றில் பணியாற்றியபோது பொருள் ஒன்றை எடைபோடும்போது, ஒன்று, இரண்டு என 13 வரும்போது அதற்குரிய ஹிந்திச் சொல்லான தேரா என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். தேரா என்றால் உன்னுடையது என்றும் ஒரு பொருள் உண்டு. பதின்மூன்று என்ற எண்ணுக்குரிய தேரா, நானக்கின் ஆன்மீக உணர்வின் காரணமாக ‘இறைவா எல்லாம் உன்னுடையது’ என்ற எண்ணத்தில் அதனையே சொல்லிக்கொண்டிருந்தது. இவ்வாறு இருக்கும் பையனுக்கு கால்கட்டுப் போட்டால் சரியாகிவிடும் என்ற சராசரி பெற்றோரின் நினைப்பால், இவருக்குத் திருமணமும் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழிந்து 2 குழந்தைகளுக்குத் தகப்பனான நானக், ஆன்மீக நாட்டத்தை அதற்கு மேல் தள்ளிவைக்க இயலாமல், மனைவி-மக்களைத் துறந்து புனித யாத்திரையைத் தொடங்கினார்.

கிழக்கே வங்காளம், அஸ்ஸாம் வரையும், தெற்கே ஆந்திரம், மதுரை, ராமேசுவரம் வரையும், வடக்கே காஷ்மீரம், திபெத் வரையும், இறுதியாக மேற்கே பாக்தாத், மெக்கா வரையிலும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட நானக் தேவின் ஞானம் முதிர்ச்சி அடைந்தது. எங்கும் இறைவனாகிய பிரும்மம் வதிகிறது (ஸப் கட பிரம்ம நிவாஸா) என்ற நம்பிக்கையொளி இவருக்கு ஏற்பட்டது. மெக்காவுக்கு இவர் சென்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மெக்காவில் யாத்திரைக் களைப்பு நீங்க இவர் படுத்துறங்கியபோது, இறைவன் இருப்பிடமான காபா நோக்கி இவர் கால்நீட்டிப் படுத்துள்ளார். இதனைப் பார்த்த அங்குள்ளவர்கள், ”இறைவனை நோக்கிக் காலைநீட்டுவதா? கால்களை மாற்றி வையுங்கள்” என்று கூறியுள்ளனர். “என்னால் இயலவில்லை, நீங்களே இறைவன் இல்லாத திசைநோக்கி என் கால்களை மாற்றுங்களேன்” என்று நானக் கூறியுள்ளார். உடனே அந்த நபர்கள் அவர் கால்களைச் சுழற்றி வேறு பக்கம் நீட்ட, அந்தப் பக்கத்துக்கு காபா நகர்ந்து தென்பட்டதாம். இவ்வாறே சில முறை மாற்றியபோதும் இதேபோல்தான் நிகழ்ந்தது. இறைவன் எங்கும் இருக்கிறார் என்பதையும், அதனை நன்கு உணர்ந்தவர் நானக் என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.

புனிதப் பயணங்களை முடித்துக்கொண்டு பாரதம் திரும்பிய நானக், ராவி ஆற்றங்கரையில் பொதுமக்களுக்கு முதலில் கூறிய உபதேசம் - ந கோயி ஹிந்து ந கோயி முஸல்மான் ஸப் இன்ஸான் (ஹிந்து என்று எவரும் இல்லை, முஸ்லிம் என்று எவரும் இல்லை, அனைவரும் மனிதர்களே) என்பதே. நாம் அனைவரும் இறைவனாகிய குருவின் சீடர்கள் என்றும், அவரே நமக்கு வாழ்வென்னும் பாடத்தை நடத்துகிறார் என்றும், எங்கும் நிறைந்துள்ள அந்த இறையை மனிதர்கள் ஊனக் கண்களால் காண இயலாது, அகக்கண்ணால்தான் காண முடியும் என்றும் நானக் உபதேசித்தார்.

இறைவனை வழிபாடு செய்வதற்கு சடங்கு, சம்பிரதாயங்களோ, தொழுகையோ அவசியமல்ல. அவரது திருப்பெயரை, அதாவது நாமத்தை மனத்துக்குள் ஜபிப்பதும், வெளிப்படையாகப் பாடுவதுமே சிறந்த வழிபாடு என்றார் குரு நானக். இதைத்தான் சீக்கியர்கள் பின்பற்றுகின்றனர். நாமஜபத்துக்குப் பெயர் சிம்ரன். பாராயணம் செய்தல் என்று பொருள்படும் ஸ்மரண் என்பதன் பஞ்சாபி மொழித் திரிபே சிம்ரன். இதேபோல் பாடல்களாக இறைவனைப் பாடுவது கீர்த்தன் எனப்படுகிறது. குரு நானக் உள்ளிட்ட முதல் சீக்கிய குருமார்கள் 5 பேரின் உபதேசங்கள் ஆதி கிரந்த் என்றும் கிரந்த சாஹிப் என்றும் அழைக்கப்படும் புனித நூலில் இடம்பெற்றுள்ளது. இந் நூலின் முதல் வாக்கியமாக அமைந்துள்ள குரு நானக்கின் உபதேசம், மூல மந்திரம் என்று போற்றப்படுகிறது.

இக் ஓங்கார் ஸத் நாமு கரதா புரக் நிர்பவு நிர்வைரு

அகால மூரதி அஜுனி சைபான் குர் பிரஸாதி

என்பதே அந்த மூலமந்திரம். இதன் பொருள் – ஓங்காரம் என்னும் பிரணவமாகிய ஒற்றை ஆற்றலே எங்கும் வியாபித்திருக்கிறது (ஏக் ஓங்கார்). அதன் பெயர் உண்மை (ஸத் நாம்). அதுவே அனைத்தையும் நிகழ்த்துவது (கர்த்தா), அனைத்துப் படைப்புகளிலும் அதுவே உறைகிறது (புருஷ்). அது அச்சமற்றது (நிர்பய்), விரோதமற்றது (நிர்வைரி). கால எல்லையற்றது (அகால்), எங்கும் உள்ளது (மூர்த்தி), தானே தோன்றியது (அஜுனி). அப்படிப்பட்ட அந்த குருவாகிய இறையை, ஞானத்தைத் தேடுவதன் மூலமும் பயிற்சி பெறுவதன் மூலமும் அதன் அருளால் (குர் பிரஸாதி) அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு இறைவனை அறிந்துகொள்வதை, அவரோடு ஒன்றுபடுவதை மாயை தடுக்கிறது. இந்த மாயை என்பது உலகியல் வாழ்வில் கிடைக்கின்ற தாற்காலிக திருப்தி, அது உண்மையற்றது என்கிறார் குரு நானக். ஆதிசங்கரரைப் போல இந்த உலகமே மாயை என்று அவர் கூறவில்லை, மாறாக, உலகியல் வாழ்வின் இன்பங்களும் ஆசைகளும் மாயை என்கிறார். கடவுளிடமிருந்து ஐந்து திருடர்கள் (பஞ்ச் சோர்) நம்மைப் பிரிக்கிறார்கள் என்கிறது சீக்கியம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய அந்த ஐந்து திருடர்கள் – ஆணவம், கோபம், பேராசை, பற்று, காமம்.

அதேநேரத்தில் எல்லோரும் வாழ்வைத் துறந்துவிட்டு சன்யாசியாகப் போய்விட வேண்டும் என்று குரு நானக் கூறவில்லை. மனித சமுதாயத்துக்கு தன்னலமற்ற சேவை செய்வதையும், பசிப் பிணி போக்குவதையும், உண்மையாக – நேர்மையாக - அச்சமின்றி வாழ்க்கை நடத்துவதையும் அவர் விதிக்கிறார். தன் (உடல்), மன் (மனம்), ன் (செல்வம்) ஆகிய மூன்று வழிமுறைகளிலும் மனித சமுதாயத்துக்கு சேவை புரிய வேண்டும் என்கிறார். உழைப்பு, பக்தி, தானம் ஆகியவற்றுடன் சக மனிதர்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்குப் போராடவும் வேண்டும் (கிரத் கரோ) என்று கட்டளையிடுகிறார் நானக். அதன் அடிப்படையில்தான் அந்நியப் படையெடுப்பாளர்களின் அட்டூழியங்களையும், கட்டாய மதமாற்றங்களையும் வீரத்துடன் போராடி தடுத்து நிறுத்தினர் சீக்கிய குருமார்களும், அவர்தம் தொண்டர்களும். பகிர்ந்துண்ண வேண்டும் (வந்த் சக்கோ) என்ற குரு நானக்கின் கட்டளைதான், சீக்கிய குருத்வாரங்களில் சாதி மத வித்தியாசமின்றி அனைத்து மனிதர்களுக்கும் வழங்கப்படும் தினசரி பொது விருந்தாக உருவெடுத்தது.

இறப்புக்குப் பின்னர் இறைவன் திருவடியை அடைவதே முக்தி என்று குரு நானக் கூறவில்லை, வாழும்போதே அந்த அகாலுடன் ஒன்றுவதே முக்தி என்கிறார். அதாவது, ஜீவன்முக்தராக அவர் வாழச் சொல்கிறார். அவர் கூறும் முக்தி, உலகை விட்டு வெளியே இருக்கவில்லை, நாம் வாழும் உலகிலேயே ஓர் உயிர்ப்புடன், தெய்வீகமாய் இருக்கிறது. அதேநேரத்தில், நமது கர்மவினைகளுக்கு ஏற்ப மறுபிறவி அமையும் என்பதில் சீக்கியம் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அடுத்தடுத்த பிறவிகளில் கடவுளின் கருணையால் ஜீவன்முக்தி சாத்தியம் என்று கருதுகிறது.

குரு நானக் ஏற்படுத்திய சீக்கிய சம்பிரதாயத்தில் அனைத்து சாதியினர் மட்டுமின்றி, முஸ்லிம்களும் கணிசமாக இணைந்தனர். குறிப்பிட்ட மதம்தான் உண்மை வழி என்றும் மற்றவை எல்லாம் பொய்யான வழிமுறை என்றும் குரு நானக் கருதவில்லை. அனைத்து மதங்களுமே ஒற்றை உண்மையாகிய இறைவனையே வெவ்வேறு விதங்களில் கூறுகின்றன என்பதை அவர் உணர்ந்து போதித்தார். ஆகையால், சீக்கியர்களின் புனித நூலாகிய ஆதி கிரந்தத்தில் குரு நானக்கின் ஜபுஜி உள்பட முதல் 5 சீக்கிய குருமார்களின் உபதேச, கீர்த்தனைகளும் மட்டுமின்றி குர்ரானில் கூறப்படுகின்ற உயர்ந்த வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ரவி தாஸர், நாம தேவர், சூர் தாஸர், தனா, பீகன், வேனி, பிறப்பால் இஸ்லாமியரான கபீர் தாஸர், இஸ்லாமிய சூஃபி ஞானியாகிய ஃபரீத் ஆகியோரின் பாடல்களும், போதனைகளும் இதில் அடங்கியுள்ளன.

குரு நானக்குக்குப் பின்னர் தோன்றிய மேலும் 9 குருமார்கள், சீக்கிய மதத்தை காலவோட்டத்துக்கு ஏற்ப சிறப்புடன் வளர்த்தனர். குரு நானக் தமது அந்திமக் காலத்தில், தனது பிரதான சீடராகிய லஹினா என்பவரை அடுத்த குருவாக அறிவித்து, அவருக்கு குரு அங்கத் என்று பெயர் சூட்டினார். 2-ஆவது குருவாகிய இவர்தான், சீக்கியர்களின் புனித இலக்கியங்கள் எழுதப்படும் பஞ்சாபி மொழி எழுத்து முறையான குருமுகி என்பதை உருவாக்கித் தந்தார். 3-ஆவது குருவாகிய குரு அமர்தாஸ் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தினார். சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்கும், பர்தா அணிவதற்கும் எதிராகப் போராடினார். இவர் பயிற்சி அளித்த 146 சீக்கிய இறைப் பணியாளர்களில் 52 பேர் பெண்கள். சீக்கிய ஆலயங்களான குருத்வாரங்களில் (குருத்வாரம் என்றால் கடவுளின் வாயில் என்று பொருள்) அன்றாட இறை வழிபாட்டுக்குத் தலைமை வகிக்கும் தலைமைக் கிரந்தி பதவிகளில் ஆண்களைப் போலவே பெண்களும் நியமிக்கப்படுகின்றனர். வழிபடுவதில்கூட பெண்களுக்குத் தனி இடம் என்று ஒதுக்குகின்ற சூழலில், வழிபாட்டை நடத்துவதுகூட பெண்கள்தான் என்ற புரட்சியை சீக்கியம் நிகழ்த்திக் காட்டுகிறது.

குரு அமர்தாஸருக்குப் பின்னர் அவரது மருமகன் ஜேதா, குரு ராம்தாஸ் என்ற பெயருடன் 4-ஆவது குருவானார். இவர் காலத்தில்தான் இன்றைய அமிருதசரஸ் நகரம், ராமதாஸ்பூர் என்ற பெயரில் உருவானது. இவரது இளைய மகன் குரு அர்ஜுன்தேவ் என்ற பெயருடன் 5-ஆவது குருவானார். இவர்தான் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் எனப்படும் ஹர்மந்தர்சாஹிப் குருத்வாரத்தை எழுப்பினார். அத்துடன் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் நூல் தொகுக்கப்படுவதற்கும் இவரே காரணம். ஆதி கிரந்தத்தில் தங்களது ஆணைக்கேற்ப மாற்றம் செய்யாததாலும், இஸ்லாமியராக மதம் மாற மறுத்ததாலும் மொகலாய மன்னன் ஜஹாங்கீரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டார் குரு அர்ஜுன்தேவ். அவர் உயிரோடு சமாதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது தியாகம் சீக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய வரலாற்றிலும் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து, 6-ஆவது சீக்கிய குருவாக அமர்ந்த குரு ஹர்கோவிந்த் காலத்தில் சீக்கிய மதம் தற்காப்புக்காகவும், அநீதிகளைத் தட்டிக் கேட்கவும் ஆயுதம் ஏந்தத் தொடங்கியது. அவரது வழிகாட்டுதலால் சீக்கியர்கள் தத்துவ வாளுடன் தற்காப்பு வாளும் ஏந்தினர். அரசியல் வாளுக்கு மீரி என்றும், ஆன்மீக வாளுக்கு பீரி என்றும் பெயர். சீக்கியர்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், ஆணைகளைப் பிறப்பிக்கவும் அகால் தக்த் (அகால் பீடம்) என்ற அமைப்பை பொற்கோவிலில் குரு ஹர்கோவிந்த் நிறுவினார்.

குரு ஹர் ராய் 7-ஆவது குருவாகவும், குரு ஹர் கிருஷண் 8-ஆவது குருவாகவும் வழிகாட்டினர். 9-வது குருவான குரு தேக் பகதூர் (தேஜ் பகதூர்) காலத்தில் வரலாறு மீண்டும் திரும்பியது.

மொகலாய மன்னன் ஔரங்கசீப் காலத்தில் காஷ்மீர பண்டிதர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்டனர். இஸ்லாமியராக மதம் மாற விரும்பாத பல காஷ்மீர பண்டிதர்கள், சீக்கிய குருவான தேக் பகதூரிடம் சரணடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற மொகலாய ராணுவத்துடன் தேக் பகதூர் போரிட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர், ஔரங்கசீப் கட்டளையின் பேரில் தலையை வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உயிர்த் தியாகத்துக்குப் பின், இளைஞனான அவரது மகன் கோவிந்த் ராய், குரு கோவிந்தர் என்ற பெயரில் 10-ஆவது குருவானார். இவரது காலத்தில், சீக்கிய மதம் மிகப்பெரிய ராணுவக் கட்டுக்கோப்பான மதமாக மிளிர்ந்தது. சீக்கிய மதம் மேலும் விரிவடைந்தது.

அந்நியர்களை எதிர்த்து முறியடிக்கவும், மதச் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் இணைந்து போராடுமாறு சக ஹிந்துக்களுக்கு இவர் அறைகூவல் விடுத்தார். அக்காலத்தில் பெரும்பாலான ஹிந்துக்களில், குடும்பத்தில் ஒருவர் சீக்கியராக ஆகினர் என்று கூறப்படுவதுண்டு. கால்ஸா எனப்படும் சீக்கிய மத ராணுவத்தை குரு கோவிந்தர்தான் நிறுவினார். அனந்தபூர் சாஹிப் நகரில், கடந்த 1699-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, வைசாகி மாதத்தில் கால்ஸாவை நிறுவிய குரு கோவிந்தர், அதற்கென விசேஷ சடங்கையும் நடத்தினார். உயிர்த் தியாகத்துக்கு அஞ்சாத வீரமும் துணிச்சலும் உடைய 5 பேர்களை (அவர்களுக்கு பிரியமான ஐவர் – பஞ்ச் பியாரே என்று பெயர்) தேர்ந்தெடுத்து அவர்களை சீக்கிய வீரர்களாக்கும் சடங்கை நிகழ்த்தினார். பின்னர் அவர்களைக் கொண்டு தனக்கு அச் சடங்கை நிகழ்த்திக்கொண்டார். இதே சடங்கின்படி ஆயிரக்கணக்கான சீக்கியர்கள், கால்ஸா வீரர்களாகினர். இவ்வாறான சடங்கு செய்து கொள்ளும் சீக்கிய ஆண்கள் சிங்கம் என்று பொருள்படும் சிங் என்ற பட்டப் பெயரையும், பெண்கள் இளவரசி என்று பொருள்படும் கௌர் என்ற பட்டப் பெயரையும் சூட்டிக்கொண்டனர். இன்றளவிலும் இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.

கால்ஸா சடங்கு செய்துகொள்ளும் சீக்கியர்களுக்கு 5 விஷயங்கள் முக்கியமானவையாகும். அவை ஐந்து ககாரங்களாகும். பஞ்சாபி மொழியில் இதனை பஞ்ச் ககார் என்றும் பஞ்ச் கக்கே என்றும் அழைப்பர். அவை – கேஸம் (முடியை வெட்டிக்கொள்ளாமல் வளர்த்தல்), கங்கம் (கேஸத்தைப் பராமரிப்பதற்கான சிறிய மரச் சீப்பு), கரா (மணிக்கட்டில் அணியப்படும் உலோக வளையம்), கிர்பான் (குறுவாள்), கச்சேரா அல்லது கௌபீண் (சிறப்பு உள்ளாடை, லங்கோடு). இவை ஐந்தும் முறையே யாருக்கும் முடிவணங்காமை அதாவது அச்சமின்மை, அதேநேரத்தில் தன்னை சீர்செய்யும் ஒழுங்கு, செயலுறுதி, போருக்கான ஆயுதம், தற்காப்புடன் போருக்கு ஆயத்த நிலை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவ்வாறாக, சீக்கியர்களை நாட்டையும் சமுதாயத்தையும் காப்பாற்றும் ராணுவ ரீதியிலான ஆன்மீகவாதிகளாக கட்டமைப்பதில் முதல் கோவிந்தராகிய 6-ஆவது குரு ஹர்கோவிந்த் தொடங்கி வைத்ததை, இரண்டாம் கோவிந்தராகிய 10-வது குரு கோவிந்த் சிங் பூரணமாக்கினார்.

சீக்கியர்களுக்கு மதக்கட்டளை பிறப்பிக்கும் ஹுக்கும்நாமா என்ற முறையையும் குரு கோவிந்த சிம்மர்தான் தொடக்கிவைத்தார். தனக்குப் பின்னர், சீக்கியர்களுக்கு மனித குரு யாரும் இனி கிடையாது என்றும் ஆதி கிரந்தம் எனப்படும் கிரந்த சாஹிப்தான் இனி 11-வது மற்றும் இறுதி குரு என்றும் அவர் பிரகடனம் செய்தார். அதன்படி இன்றளவிலும் குருத்வாரங்களின் கருவறை போன்ற மையப் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பேழையில் ஆதி கிரந்த நூல் வைத்துப் போற்றப்படுவதுடன், சீக்கியர்களின் மனங்களிலும் அது போற்றப்படுகிறது. குருத்வாரங்களின் மையப் பகுதியில் வேறு எந்த உருவமும் இருக்காது. ஜபுஜி உள்ளிட்ட கீர்த்தனங்களையும், நாம ஜபத்தையும் மெய்யுருக சீக்கியர்கள் பாடுவர், பாராயணம் செய்வர். குருத்வாரத்தின் வெளிப்புறங்களில் சீக்கிய குருமார்களின் தியாகத்தையும், பண்பையும் விளக்கும் சித்திரங்கள் வரையப்பட்டிருக்கும். குருத்வாரத்துக்குள் நிர்குணமாக அருவ வடிவில் சீக்கியர்கள் இறைவனை வணங்குகின்ற போதிலும், வெளியே மற்ற ஹிந்துக் கோவில்களில் சகுண வடிவில் அதாவது நற்குண உருவ வடிவில் இறைவனை வணங்குவதற்குத் தடை ஏதுமில்லை. இதேபோல் ஆதி கிரந்தத்தில் உள்ள குரான் வாசகங்கள் குருத்வாரங்களில் ஓதப்படுவதுடன், சீக்கியர்கள் தர்கா, மசூதிக்குச் செல்லவும் தடை இல்லை.

படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்த அந்நியன் என்றபோதிலும் அவர்களிடம் உள்ள நல்லவற்றை எடுத்துக்கொண்டு, அதேநேரத்தில் அவர்களது அடக்குமுறையையும் அட்டூழியங்களையும் எதிர்த்து நமது பாரம்பரியத்தைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர்கள் சீக்கியர்கள். சுதந்திரப் போராட்டங்களிலும், விடுதலைக்குப் பின்னர் இந்திய ராணுவத்திலும் முன்வரிசையில் இருப்பவர்கள் சீக்கியர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர்களின் தூண்டுதலால் தனி நாடு (காலிஸ்தான்) கேட்டு சில சீக்கியர்கள் போராடினாலும், அதனை அந்த சமுதாயமே கைவிட்டு, மீண்டும் தேசீய நீரோட்டத்தில் மலையென நிமிர்ந்து நிற்கிறது.

இஸ்லாமியப் படையெடுப்புகளால் பாரதத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் அதற்கேற்ப புதுப்பொலிவு பெறவும் சீக்கியம் பாடுபட்டதென்றால், அதன் பின்னர் கிறிஸ்தவர்களான ஐரோப்பியப் படையெடுப்புகளால் நேர்ந்த அவலங்களைத் துடைத்தெறியவும், அக்காலகட்டத்துக்கேற்ப மறுமலர்ச்சி பெறவும் புதிய சம்பிரதாயங்கள் உருவாகி உதவின. அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com