49. சமய சஞ்சீவிகளான சமாஜங்கள்

திருவள்ளுவரைப் போலவே புலால் உண்ணாமையை மிகவும் வலியுறுத்தினார். ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்ற இவரது கவிதை வரிகள், இவர் எந்த அளவுக்கு ஜீவ காருண்யம் மிகுந்தவர் என்பதைக் காட்டும்.

அந்நியப் படையெடுப்புகள் பாரதத்துக்குப் புதியதல்ல. ஆனால், மத்திய ஆசிய முகமதியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் படையெடுப்பு மேற்கொண்டதன் நோக்கங்களும் விளைவுகளும் புதியவை. கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஹூணர்கள், தார்த்தாரியர்கள் என தற்கால வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலந்தொட்டே அந்நியர்கள் இங்கு அலைஅலையாய் படையெடுத்துள்ளனர். அவர்களது படையெடுப்பு வெறும் அரசியல் நோக்கம் சார்ந்ததே. பின்னர் அவர்களது ஆதிக்கம் முறியடிக்கப்பட்டதுடன், பாரத கலாசாரத்தில் அவர்கள் கரைந்துபோனார்கள். அதேநேரத்தில், பிற்காலப் படையெடுப்புகள் ஓரளவு அரசியல் சார்ந்து இருந்தாலும், மத நோக்கம் அதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆகையால், படையெடுப்பாளர்களாக இருந்த மத்திய ஆசிய முகமதியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் கட்டாய மதமாற்றத்தையும், பாரத கலாசார அழிப்பையும் முக்கிய ஆயுதங்களாகக் கைக்கொண்டனர்.

இதில் முன்னவர்கள் பெரும்பாலும் உடல் ரீதியிலான, அதாவது வெளிப்படையான வன்முறைகளையும் போர்களையுமே கைக்கொண்டார்கள் என்றால், பின்னவர்கள் அவற்றுடன் உளவியல் ரீதியிலான, அதாவது மறைமுக வன்முறைகளையும் போரையும் சேர்த்து பிரயோகித்தார்கள். மொகலாயர்கள் உள்ளிட்ட முகமதியப் படையெடுப்பாளர்களை எதிர்த்து தங்களது ஸ்வதந்திரம், ஸ்வதர்மம் ஆகியவற்றைக் காப்பாற்ற இந்தியர்களுக்கு சீக்கிய சமயம் ஒரு சமய சஞ்சீவியாகத் தோன்றியது. அதேபோல், வித்யாரண்யரால் வழிநடத்தப்பட்ட ஹரிஹரர்-புக்கர் ஆகிய இருவர் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியும், சமர்த்த ராமதாஸரால் ஆசீர்வதிக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவியும், ஒட்டுமொத்த பாரதீய மத-கலாசார-தத்துவ சங்கமமான ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றினார்கள். அதேநேரத்தில், இஸ்லாமிய சூஃபி தத்துவமும், கஜல், கவ்வாலி போன்ற இசை வடிவங்களும் ஹிந்து-இஸ்லாமிய ஜுகல்பந்தியாய் தோன்றி இணக்கத்தை வளர்த்தன. மறுபுறத்தில், பெண்கள் தங்களது மானத்தைக் காப்பாற்ற கட்டாய உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் ஆகிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட சூழலும் ஏற்பட்டது.

இத்தகைய சூழலில்தான், பாரதத்துக்கு வியாபாரம் என்ற பெயரில் வந்த ஐரோப்பியர்கள், இங்குள்ளவர்களுக்கு உலகச் சிந்தனை இருக்கின்ற அளவுக்கு தேசச் சிந்தனை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, தங்களது அரசியல், மத விஸ்தரிப்பு வேலைகளையும் தொடங்கினர். அதுவரை ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று வாழ்ந்துவந்த பாரதத்தின் பொதுமக்கள் சமுதாயம், ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் இங்கு வேரூன்றிய பிறகு மிகப்பெரிய தாக்குதலைச் சந்தித்தது. இதுவரை காணாத வரி வசூல் கொடுமையையும், வறுமையையும் பொதுமக்கள் அனுபவிக்கத் தொடங்கினர். ஆகையால், ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி மெதுவாக வளரத் தொடங்கியது. அப்போதுதான், இன்றளவிலும் பாரதத்தைப் பதம் பார்த்து வரும் உளவியல் ஆயுதத்தை ஆங்கிலேயன் பிரயோகித்தான். அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. அந்த ஆயுதத்தின் பிரம்மாஸ்திரம்தான், போலித்தனமான ஆரிய இனவாதம். இதிலிருந்து சமூகம் இன்றுவரை முழுமையாக விடுபட முடியவில்லை.

பாரதத்துக்குள் பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்ததும், இங்கே பல்வேறு இனக் குழுக்கள் வாழ்ந்து வந்ததும் உண்மை. ஆனால், நடக்கவே இல்லாத ஆரியப் படையெடுப்பை தனது வஞ்சக அறிவின் வலிமையால் நிகழ்த்திக் காட்டியது ஆங்கிலேய அரசு. வேதத்துக்கு தவறான பொருள் விளக்கம், சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வுக்கு மனம்போன போக்கில் விளக்கம் (தற்போது இதுதான் சரஸ்வதி நதி நாகரிகம் என நடுநிலை வரலாற்று ஆய்வாளர்கள் அறிவிக்கிறார்கள்; சிந்து மாகாணம் மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் பண்டைய ஹரப்பா நாகரிகம் செழித்திருந்ததை தற்போதைய அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கின்றன) ஆகியவற்றின் துணைகொண்டு, ஆரிய – திராவிட வாதத்தை ஆங்கிலேய அரசு அரங்கேற்றியது. ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த, மேன்மையான என்று பொருள் உள்ள நிலையில், அதனை ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் என்ற விஷ விதையை ஆங்கிலேயன் ஊன்றினான். (இதேபோல் தமிழ் என்பதைக் குறிக்கும் திராவிட என்ற சொல்லை தனியொரு இனமாகக் கூறினான்). ஆனால், மகாகவி பாரதி போன்ற மெய்ஞானிகள், இதன் போலித்தன்மையை உணர்ந்ததால்தான் ‘‘ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம்’’ என்று தைரியமாக முழங்கினர். இருப்பினும், ஆரிய – திராவிட வாதத்துக்கு அகப்பட்ட பாமரர்களும், அதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வித்தகர்களும் இருக்கவே செய்கின்றனர்.

இதுமட்டுமின்றி, இயற்கையை வழிபடும் இந்தியர்களை பாம்புகளையும், மரங்களையும் வணங்கும் காட்டுமிராண்டிகள் என்றும் உயர் ஆன்மீகம் பேசிய பாரத மக்களை, ஆண்டவனை அறியா அறிவிலிகள் என்றும் ஐரோப்பியர்கள் வசைபாடினர். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்ட நம்மிடையே வேற்றுமையைக் கண்டுபிடித்து வளர்த்தனர். அவர்களுக்கு வாகாக, உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை உள்ளிட்ட கொடிய வழக்கங்கள் சிக்கிக்கொண்டன. மெய்ஞானம் பேசியவர்களை சிலுவையில் அறைந்தும், கல்லால் அடித்தும் கொன்றதையும், இயற்கையை வழிபட்ட தங்கள் நாட்டவர்களை, குறிப்பாக பெண் ஆன்மீகவாதிகளை சூனியக்காரர்கள் என்றுகூறி உயிரோடு தீயிலிட்டு வதைத்ததையும், உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோவுக்கு மரண தண்டனை வழங்கியதையும் அவர்கள் மறந்தும் மறைத்தும் நம்மை ஏளனம் செய்தார்கள். அதேநேரத்தில் உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை போன்றவை நமது சமுதாயத்தின் இழிசெயல்கள் என்பதிலும், அவை அழிக்கப்பட வேண்டியவை என்பதிலும் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய சூழலில்தான் நம்மிடையே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளையும், தீய பழக்கங்களையும் அகற்றுவதற்காகவும், நமது மகோன்னதமான உயர் நிலையை மீண்டும் நிலைநிறுத்துவதற்காகவும் புதிய தத்துவ அமைப்புகள் தோன்றின.

இவ்வாறாக, வேண்டிய சமயத்தில் தோன்றி, நமது சமயத்தை சீர்திருத்திய சமாஜங்களில் (அமைப்புகளில்) குறிப்பிடத்தக்கது ஆரிய சமாஜம். ஆரிய சமாஜம் என்றால் மேலோர் மன்றம் அல்லது மேலோர் அவையம் என்று பொருள். வேதத்தில் கூறியபடி ஏக இறைவன், இயற்கையோடு இயைந்த வழிபாடு, சாதி பேதமற்ற சகோதரத்துவ சமுதாயம், பெண்களுக்கு சமத்துவம் ஆகியவற்றை நடைமுறையில் மீண்டும் நிலைநாட்டத் தோன்றியதே ஆரிய சமாஜம். இதனைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. குஜராத் மாநிலத்தின் கத்தியவார் பகுதியில் தங்கரா என்ற இடத்தில் 1824-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் மூல் சங்கர் திவாரி. ஆன்மீகத்திலும் சமூக சேவையிலும் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், பிரம்மசாரியாக வாழ்ந்து சன்னியாசம் பூண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி ஆனார்.

தயானந்த சரஸ்வதி

வேதத்தை ஆழ்ந்து படித்த இவர், அதன் கருத்துகளை நடைமுறையில் பின்பற்றாமல் சமூகம் நலிந்து கிடப்பதைக் கண்டு துயருற்றார். வேத காலத்தில் சாதி வேறுபாடுகளும் இல்லை; ஆணுக்குப் பெண் அடிமை என்ற நிலையும் இல்லை. மேலும், அக்காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக இளவயதிலேயே குருகுல கல்வி முறை மூலம் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு, நல்ல பண்பாளர்களாக உருவாக்கப்பட்டனர். ஆகையால், இதன் அடிப்படையில் வேதக் கல்வியை சொல்லிக் கொடுக்கும் முதல் குருகுலத்தை உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாதில் 1869-ல் ஆரம்பித்தார். பின்னர் மீர்ஸாபூர், வாராணசி (காசி) உள்ளிட்ட மேலும் 4 இடங்களிலும் இதுபோன்ற குருகுலங்களைத் தொடங்கினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் குருகுலங்களில் சாதி, மத வித்தியாசமின்றி மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு வேதக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இந்த மாணவர்கள் உருவ வழிபாடு செய்யக் கூடாது. தினசரி மூன்று வேளை சந்தியா வந்தனங்களும், இரு வேளை அக்னி ஹோத்திரமும் (சிறு வேள்வி) செய்ய வேண்டும். வேதங்கள், உபநிஷதங்கள், தரிசனங்கள், நிருக்தம், அஷ்டாத்யாயீ என பல்வேறு பாடங்கள் சொல்லித் தரப்பட்டன. பெண் குழந்தைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டு, தனியே அவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டது. ஆடைகள், உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் இலவசம். ஆனால், சிறிது காலத்திலேயே போதிய ஆதரவின்றி இந்த வேதப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. அப்போதுதான், தமது கருத்துகள் பொதுமக்களிடம் நன்கு சென்றடைய வேண்டுமானால், முதலில் அதற்கான ஆதரவுக் களத்தை உருவாக்க வேண்டும் என்பதை தயானந்தர் தெரிந்துகொண்டார்.

வேத நெறிப்படியான வாழ்க்கை முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமது கருத்துகளைப் பரப்பவும் கல்கத்தா, பம்பாய், அஹமதாபாத், ராஜ்கோட், லூதியானா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பல தத்துவ அறிஞர்களுடன் விவாதங்களில் பங்கேற்று வேதம் அனைத்து சாதியினருக்கும், பெண்களுக்கும் உரியது என்பதை தயானந்தர் நிலைநாட்டினார். சிறிது காலத்துக்குப் பிறகு, பண்டிதர்களைத் தாண்டி, பாமர மக்களையும் தமது கருத்துகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக, அதுவரை முன்னுரிமை அளித்துவந்த சம்ஸ்கிருத மொழிக்குப் பதில், ஹிந்தியை தமது உரையாற்றும் மொழியாகப் பயன்படுத்தினார்.

தயானந்தரின் உரைகளைக் கேட்ட ராஜ் ஜெய்கிஷண் தாஸ் என்பவர், இந்த உரைகள் எல்லாம் நூல்களாக வந்தால் நன்றாக இருக்குமே என்ற கருத்தை் கூறினார். இதனையேற்று, தமது உதவியாளரான பண்டிட் பீம்சேன் சர்மா என்பவரிடம் தொடர்ச்சியாக பல தலைப்புகளில் கருத்துகளையும் சொற்பொழிவுகளையும் எடுத்துரைத்து எழுதச் செய்தார் தயானந்தர். அவையெல்லாம் தொகுக்கப்பட்டு, 1875-ம் ஆண்டில் வாராணசியில் சத்யார்த்த பிரகாஷ் (மெய்ப்பொருள் ஒளி) என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. இந்த முயற்சிதான் ஆரிய சமாஜம் என்ற அமைப்பு தோன்றுவதற்கும் காரணமானது.

பம்பாயில் 1875-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஆரிய சமாஜம் என்ற அமைப்பை சுவாமி தயானந்த சரஸ்வதி முறைப்படி தோற்றுவித்தார். 100 உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது, தயானந்தரை குருவாக அல்லது சமாஜத்தின் தலைவராகப் பதவியேற்கும்படி மற்றவர்கள் கேட்டுக்கொண்டபோதிலும், பிறரைப்போல தாமும் ஓர் உறுப்பினராக இருந்து வழிகாட்டுவதாகக் கூறிவிட்டார். ஆரிய சமாஜம், பஞ்சாபில்தான் அபரிமித வளர்ச்சி பெற்றது. அன்றைய பஞ்சாப் மாகாணம் லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1877-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதிதான் ஆரிய சமாஜம் முறைப்படி தொடங்கப்பட்டது என்று கூறுவாரும் உண்டு. விடுதலைப் போராட்ட வீரர்கள் லாலா லஜபதி ராய், வீர் சாவர்க்கர், மதன்லால் திங்க்ரா உள்ளிட்டோர் சுவாமி தயானந்தரால் கவரப்பட்டவர்கள். தயானந்தர் கூறிய ‘‘இந்தியர்கள் அனைவருக்கும் சுயராஜ்ஜியம் பிறப்புரிமை’’ என்பதைத்தான் பிற்காலத்தில் லோகமான்ய பாலகங்காதர திலகர், ‘‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்’’ என்ற கொள்கை முழக்கமாக எழுப்பினார்.

ஆரிய சமாஜிகளுக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள பிரணவமாகிய ‘ஓம்’தான் ஒரே கடவுள். வேதத்தை ஏற்றுக்கொள்ளும் ஹிந்து மத நூல்களை மாத்திரமே, அதாவது வேதங்கள், உபநிஷதங்கள், ஆரண்யகங்கள், ஷட்தர்சனங்கள் போன்றவற்றை மட்டுமே இவர்கள் ஆதாரங்களாக எடுத்துக்கொள்வர். ராமாயணம், மகாபாரதம், புராணங்களில் கூறப்படும் தெய்வங்கள் வரலாற்று நாயகர்கள் மாத்திரமே; அவர்கள் தெய்வீக அருள் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களே கடவுள்கள் அல்ல. ஆகையால், உருவ வழிபாடு கூடாது. வேதத்தில் கூறியுள்ளபடி இறைவனை சந்தியா வந்தனம் மூலமும், வேள்விகள் மூலமும் தியானம் செய்யலாம்; பிரார்த்திக்கலாம். தயானந்தர் 1883-ல் மறைந்த பிறகு, அவரது சீடரான லாலா முன்ஷி ராம் என்ற சுவாமி சிரத்தானந்தர் ஆரிய சமாஜத்தை வழிநடத்தினார். முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறியவர்களை தாய்மதம் திரும்பச் செய்யும் சுத்தி இயக்கத்தை இவர் தீவிரமாகச் செயல்படுத்தினார். அதனாலேயே கொலையுண்டார். சாதி வேற்றுமையைக் களைவதில் தீவிரமாகப் போராடியதோடு மட்டுமின்றி, பெண் கல்வி, விதவைகள் மறுமணம் ஆகியவற்றை செயல்படுத்தியதிலும் ஆரிய சமாஜத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

சாதியற்ற சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பாடுபட்ட மற்றொரு முக்கியமான அமைப்பு பிரும்ம சமாஜம். தொடக்கத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியே, பிரும்ம சமாஜத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். (ஆகையால், ஆரிய சமாஜத்தைவிட பிரும்ம சமாஜம் காலத்தால் முந்தையது.) பிறகு சிறிய கொள்கை வேறுபாட்டால் அவர் பிரிந்தபோதிலும், இரு அமைப்பினருக்கும் இடையே நெருக்கமான நட்புறவும் ஆதரவுப் போக்கும் இருந்துள்ளது. ராஜா என்ற பட்டப்பெயர் கொண்ட ராம் மோகன் ராய் என்னும் சமூக சீர்திருத்தத் தலைவரால் 1828-ல் தோற்றுவிக்கப்பட்ட பிரும்ம சபா என்ற அமைப்பே பின்னர் பிரும்ம சமாஜமாக ஆனது.

ராம் மோகன் ராய்

வங்காளத்தில் ஹூக்ளி அருகே உள்ள ராதாநகரில் 1772-ம் ஆண்டு ராம் மோகன் ராய் பிறந்தார். ஆங்கிலம், பாரசீகம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்காகக் தொடக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களுடனான நட்புறவு, பாரம்பரியப் பெருமை கொண்ட பாரதம் மீதான அவர்களது கண்ணோட்டத்தை இவருக்குப் புரியவைத்தது. ஹிந்துக்களின் சில மூடத்தனமான சமூகப் பழக்கங்களால், ஆன்மீக மேன்மை மறைக்கப்பட்டு, மற்றவர் கண்முன் மிகக் கீழ்த்தரமான அவலநிலையில் நாம் இருப்பதை அறிந்துகொண்டார். இதனால், ஒருபுறத்தில் நமது சமூக சீர்கேடுகளைக் களைவதற்கும், மறுபுறத்தில் நமது ஆன்மீக ஒருமைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்குமான முயற்சியை ராம் மோகன் ராய் மேற்கொண்டார். இதன்படி தோற்றுவிக்கப்பட்ட பிரும்ம சபா, 1830-ம் ஆண்டில் பிரும்ம சமாஜம் என மாற்றம் பெற்றது.

பிரும்மம் என்பது நமது வேதங்களில் கூறப்படும் உருவமற்ற, பெயர்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றை ஆற்றலாகிய கடவுளே. இந்தப் பிரும்மத்தை வழிபடுபவர்களே பிரும்ம சமாஜிகள். பிரும்மமாகிய கடவுள் அனைவருக்கும் ஒருவரே. ஆகையால், பிரும்ம சமாஜிகள் எவ்வித சாதி, மத வித்தியாசமும் பார்ப்பதில்லை. பிரபல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், கேசவ சந்திர சேன் போன்றோர் பிரும்ம சமாஜிகளே. சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு மூலம் தடைபோடச் செய்து மாபெரும் சமூகப் புரட்சியை ராம் மோகன் ராய் ஏற்படுத்தினார். அவரது வழியில், குழந்தைத் திருமண ஒழிப்பு, விதவைகள் மறுமணம் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தங்களுக்கும் பிரும்ம சமாஜிகள் பாடுபட்டனர்.

அதேநேரத்தில், வேதங்களில் நமது முன்னோர்கள் கூறியபடி, உலகின் தோற்றம், இயக்கம் உள்ளிட்ட அனைத்துக்கும் காரணமாக இருப்பது எல்லாம்வல்ல இறை எனப்படும் பிரும்மமே என்பதை வலியுறுத்தி, சமய, சமூக ஒற்றுமையையும் ஏற்படுத்தினர். ஆரிய சமாஜம், பிரும்ம சமாஜம் போன்ற அமைப்புகளால் (புதிய சம்பிரதாயங்களால்) ஹிந்து சமூகத்தின் மூடப்பழக்கங்கள் அகற்றப்பட்டு, முன்பிருந்த மேன்மையை நோக்கிய மறுமலர்ச்சியும் ஏற்பட்டது. இதனால், மதமாற்றங்கள் தடுக்கப்பட்டன; ஹிந்துக்களிடையே மனமாற்றங்களும் ஏற்பட்டன.

வடக்குக்கு இணையாக தெற்கிலும் ஆன்மீக ரீதியிலான சமய - சமூக சீர்திருத்த அமைப்புகளை சில மகான்கள் தோற்றுவித்தனர். அவர்களில் முக்கியமானவர் வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார். மிகச் சிறந்த கவிஞரும், காருண்யருமான வள்ளலார், 19-ம் நூற்றாண்டின் ஞானச் சித்தராகப் போற்றப்படுகிறார். சிதம்பரம் அருகேயுள்ள மருதூரில், ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதியருக்கு ஐந்தாவது கடைக்குட்டியாக, 1823-ம் ஆண்டு பிறந்தார் ராமலிங்கம். ஐந்து வயதில் தந்தையை இழந்த இவர், சென்னையில் இருந்த மூத்த அண்ணன் சபாபதியின் ஆதரவில் வளர்ந்தார். பள்ளிக்குச் செல்வதைவிட, அருகில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குச் செல்வதிலேயே நாட்டம் கொண்டிருந்தார். பின்னர் வீட்டுக்குள்ளேயே தனி அறையில், நிலைக்கண்ணாடிக்கு முன்பு சிறு அகல் விளக்கை எரியவைத்து, தியானப் பயிற்சி மேற்கொண்டு இறையனுபவம் பெற்றார்.

சில ஆண்டுகளுக்குப் பின், தமையன் வழியில் புராணச் சொற்பொழிவாளராக ஆன ராமலிங்கம், தனது 35-வது வயதில், 1858-ல் சென்னையில் இருந்து வெளியேறி கருங்குழி என்ற இடத்தில் தங்கினார். சாதி முறையால் ஏற்பட்ட சமூகக் கேடுகளை பகிரங்கமாகச் சாடிய இவர், உயிர்க் கொலையையும் கடுமையாக எதிர்த்தார். திருவள்ளுவரைப் போலவே புலால் உண்ணாமையை மிகவும் வலியுறுத்தினார். ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்ற இவரது கவிதை வரிகள், இவர் எந்த அளவுக்கு ஜீவ காருண்யம் மிகுந்தவர் என்பதைக் காட்டும். 1865-ல் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவிய இவர், பின்னர் 1872-ல் அதன் பெயரை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று மாற்றினார். சிவனும், முருகனும் இவருக்குப் பிரியமான வழிபடு தெய்வங்களாக இருந்தபோதிலும், அனைத்து மக்களுக்கும் ஏற்ப ஜோதி (விளக்கு, தீபம்) வழிபாட்டையை முன்மொழிந்தார். கருணை வடிவமான கடவுளை அகத்துள்ளும் வெளியிலும் ஜோதி வடிவமாக வழிபடுவதையே இவர் ஊக்குவித்தார். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்பது வள்ளலாரைப் பின்பற்றுவோர் கூறுகின்ற மந்திரமாகவே ஒலிக்கிறது.

வள்ளலார்

1867-ம் ஆண்டில், வடலூரில் சத்திய தர்ம சாலை என்ற ஆலயத்தை நிறுவினார். அங்கு அனைவருக்கும் 24 மணி நேரமும் பசிப்பிணியைப் போக்கும் அன்னதான சாலையையும் இவர் ஏற்படுத்தினார். அதனால், ராமலிங்கர் பொதுமக்களால் வள்ளலார் என்று வாஞ்சையுடன் போற்றப்படுகிறார். சென்னை கந்தக்கோட்டத்துள் உறையும் முருகப் பெருமானை வேண்டுகின்றபோதுகூட ‘‘மதமான பேய் என்னைப் பிடியாதிருக்க வேண்டும்’’ என்று மதங்களைக் கடந்த உயர் ஆன்மீகத்தையே ராமலிங்க வள்ளலார் நாடினார். இனிமையும், நன்மையும் நிறைந்த இவரது பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. வடலூர் சத்திய தர்ம சாலைக் கோவிலில் ஓர் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட இவர், கடந்த 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி யார் கண்ணுக்கும் தெரியாமல் மாயமானார். ஜோதி வழிபாட்டை வலியுறுத்திய அவர் ஜோதியில் கலந்ததாக அன்பர்கள் கூறுகிறார்கள். அனைத்து உயிர்களும் ஆண்டவனே என்ற வேதக் கருத்தை, மனிதநேயத்தையும் தாண்டிய ஜீவகாருண்யத்தை, நம்மோடு சகமனிதனாக வாழ்ந்து போதித்தார் வள்ளலார்.

இதே 19-ம் நூற்றாண்டில் பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் மற்றொரு சமய - சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டர் அவதரித்தார். கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி) கிறிஸ்தவ மதமாற்றமும், சாதியின் அடிப்படையிலான கொடுமைகளும் உச்சத்தில் இருந்தபோது அவற்றைத் தடுத்தும் நிறுத்தும் சக்தியாகத் தோன்றினார், முடிசூடும் பெருமாள் என்ற முத்துக்குட்டி என்னும் இயற்பெயர் கொண்ட அய்யா வைகுண்டர். இன்று பல ஆலயங்களில் அறங்காவலர்களாக, மதத்தைக் காப்பாற்றும் கொடை வள்ளல்களாக, சமூகத்தில் மதிக்கத்தக்க வர்த்தகர்களாக வலம்வருகிறார்கள் நாடார் சமூகத்தினர். ஆனால், அன்றைய காலத்தில் சாணார்கள் என்றும் மரமேறிகள் என்றும்கூறி சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகினர். அவர்களது சமய – சமூக அந்தஸ்தை மீட்டெடுத்ததிலும், ஒடுக்கப்பட்ட அனைவரின் உயர்வுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் வழியமைத்ததிலும் அய்யா வைகுண்டருக்கு மாபெரும் பங்குண்டு.

இவரைப் பின்பற்றுவோர் அய்யா வழியினர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர் விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். பூவந்தன்தோப்பு (தற்போது சாமித்தோப்பு) என்ற இடத்தில், கடந்த 1809-ம் ஆண்டில் (சிலர் 1810 என்கிறார்கள்) பொன்னு மாடன் – வெயிலாள் அம்மாள் தம்பதியருக்கு இவர் மகனாகப் பிறந்தார். பிறந்தபோது சிறிதுநேரம் குழந்தை உயிரற்று இருந்ததாகவும் பின்னரே உயிர் வந்ததாகவும் கூறப்படுகிறது. அய்யா வைகுண்டரின் வரலாற்றையும், உபதேசங்களையும் எடுத்துரைக்கும், அய்யா வழியினரின் புனித நூலாகிய அகிலத்திரட்டு அம்மானையில், அய்யா விஷ்ணுவின் அவதாரம் என்றும் அவர் மும்முறை பிறந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. முதலில் உயிரற்ற குழந்தையாகப் பிறந்தார். சிறிது நேரத்தில், விஷ்ணுவின் முந்தைய அவதாரமான கிருஷ்ண அவதாரத்தின் ஆன்மாவாகிய சம்பூர்ணதேவன் என்ற உயிர் புகுந்ததால் இரண்டாவது முறை பிறந்தார். பின்னர், முத்துக்குட்டியாக வளர்ந்த அவர் தனது 24-வது வயதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழிபடச் சென்றபோது கடலுக்குள் சென்று மறைந்தார். மூன்று நாள்களுக்குப் பிறகு வெளிவந்தார். அப்போது தன்னை விஷ்ணுவின் அவதாரமாகிய வைகுண்டர் என்று அறிவித்தார். அதுவே அவரது மூன்றாவது பிறப்பு என்கிறது அகிலத்திரட்டு.

திருச்செந்தூரில் இருந்து மீண்டும் பூவந்தன்தோப்பு சென்ற அய்யா வைகுண்டர், 6 ஆண்டுகள் தவமிருந்தார். பின்னர் மக்களுக்கு அறவுரைகள் கூறியதுடன், பல அற்புதங்களையும் அவர் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. தனது அவதார நோக்கம், மக்களை வதைக்கும் கலியனை (கலியுக தீய எண்ணங்களின் உருவகமான அரக்கன்) அழித்து, தர்ம யுகத்தை மீண்டும் நிலைநாட்டுவதே என்று அய்யா வைகுண்டர் அறிவித்தார். மக்கள் அனைவரும் சாதி வித்தியாசமின்றி நீராடுவதற்கு பொதுக் குளம் கட்டினார். இதேபோல் சாதி வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்ணும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார். ‘கீழோரை உயர்த்துவதே தர்மம்’ என்று பிரகடனம் செய்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்றார், அதற்காகப் பாடுபட்டார். சுய மரியாதை, கண்ணியம், தைரியம் ஆகியவற்றோடு மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்று போதித்தார், அவ்வாறு வாழ்ந்தால் கலி மாயை தானே அழிந்துவிடும் என்றார்.

சீக்கியர்களைப்போல அய்யா வழியினர் தலையில் முண்டாசு அணிவது சுய மரியாதை, கண்ணியம், தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் அடையாளம். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு ஆன்மீக வழியில் பாடுபட்டு வெற்றி கண்ட அய்யா வைகுண்டர், 1851-ம் ஆண்டில் சாமித்தோப்பில் தனது ஜீவனை ஒடுக்கினார். அவரது உடல் சமாதியில் வைக்கப்பட்டு அங்கே ஆலயம் அமைக்கப்பட்டது. இது தலைமைப் பதி என்று அழைக்கப்படுகிறது. அய்யா வைகுண்டரின் வாழ்வோடு தொடர்புடைய திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் அய்யா வழியினரின் பதிகள் அமைந்துள்ளன. இந்தப் பதிகளுக்குள் முண்டாசு கட்டிக்கொண்டுதான் நுழைய வேண்டும். உருவ வழிபாடு கிடையாது. தத்வமஸி (நீயே அது) என்ற உபநிஷதக் கருத்தை உணர்த்துவதுபோல, பெரிய நிலைக்கண்ணாடியும், ஒளிவீசும் குத்துவிளக்குகளும் மாத்திரமே இருக்கும்.

அய்யா வைகுண்டரைப்போல கேரள மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான ஈழவர்களின் உரிமைகளைக் காப்பாற்றவும், அனைத்து சமுதாயத்தினரின் ஆன்மீக மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டவர் ஸ்ரீ நாராயண குரு. கேரளத்தில் ஈழவ மக்கள், பஞ்சமர்கள் என்றும் அவர்ணர்கள் (அதாவது, நான்கு வர்ணத்துக்குள் வராதவர்கள்) என்றும் கூறி சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இவர்களுக்கும் மரம் ஏறுவதுதான் அக்கால வயிற்றுப்பிழைப்பு. வஞ்சிக்கப்பட்ட இவர்களது சமூக விடுதலைக்காகவும், சாதியற்ற சமத்துவத்துக்காகவும், அனைவருக்குமான ஆன்மீக விடுதலைக்காகவும் நாராயண குரு போராடினார். திருவனந்தபுரம் அருகேயுள்ள செம்பழந்தி என்ற கிராமத்தில், ஈழவரான மாதன் ஆசான் – குட்டியம்மா தம்பதியருக்கு மகனாக, 1856-ம் ஆண்டில் இவர் பிறந்தார்.

சிறு வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட நாராயணர், இள வயதில் பல்வேறு ஸ்தலங்களுக்கும் சென்று ஆன்மீக அறிவைத் தேடினார். சட்டாம்பி ஸ்வாமி என்ற குருவிடம் யோகம் பயின்றார். அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் சம்ஸ்கிருதத்தையும், ஆன்மீகக் கல்வியையும் போதிக்கத் தொடங்கினார். வேதாந்தக் கருத்துகளில் குறிப்பாக அத்வைதத்தில் ஆழத் தோய்ந்தார் நாராயண குரு. அத்வைதம் சமத்துவத்தையும், ஐக்கியத்தையும் போதிக்கின்ற நிலையில், நடைமுறையில் அதற்கு எதிர்மறையான போக்குகள் சமய ஆசாரம் என்ற பெயரில் சமூகத்தில் மலிந்திருப்பது கண்டு வேதனையுற்றார். இந்த நிலைமையை மாற்ற துணிச்சலுடன் சமய, சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். பிராமணர்கள் மட்டுமே கோவிலை ஸ்தாபிக்க முடியும் என்ற நிலையை மாற்ற, அருவிப்புரம் என்ற இடத்தில் 1888-ல் தனது சீடர்களுடன் இணைந்து சிவாலாயம் எழுப்பினார். அதனை மேல்ஜாதி நம்பூதிரிகள் எதிர்த்தபோது, இது ஈழவர்களின் மகாதேவன்; யார் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம் என்று தைரியத்துடன் முழங்கினார். திருச்சூர், கண்ணனூர், கோழிக்கோடு, மங்களூர் உள்ளிட்ட இடங்களில் இதேபோல் அனைத்து சாதியினரையும் அனுமதிக்கும் சிவாலயங்களை அடுத்தடுத்து எழுப்பினார்.

நாராயண குரு

வேதங்களும், சம்ஸ்கிருதமும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய துவிஜனர்கள் (இரு பிறப்பாளர்கள்) எனப்படும் மேல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டுமே உரிமையானவை என்ற மாயையை உடைத்தெறிந்து, அத்வைத பெருவெள்ளத்தை அனைத்து சமூகத்தினருக்கும் பாய்ச்சினார். ஒரு ஜாதி ஒரு மதம் ஒரு தைவம் மனுஷ்யனு (மனிதருக்கு ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே தெய்வம்) என்பது நாராயண குருவின் மிகச் சிறந்த உபதேசம். 1897-ல் மலையாளத்தில் இவர் இயற்றிய ஆத்மோபதேச சதகம் உயர்ஞானப் பொக்கிஷம். அத்துடன் ஸ்வானுபவகீதே, அத்வைத தீபிகா, அறிவு, தைவ தஸகம், ஜீவகாருண்ய பஞ்சகம், ஜாதி நிர்ணயம், ஜாதி லக்ஷணம், ஆத்ம விலாஸம், சிவ சதகம் உள்ளிட்ட பல நூல்களை மலையாளத்திலும், தர்ஸன மாலா, பிரும்மவித்யா பஞ்சகம், வேதாந்த சூத்ரம், தர்மம், ஹோம மந்திரம், குஹாஷ்டகம், வாசுதேவாஷ்டகம், பத்ரகாளியஷ்டகம் உள்ளிட்ட நூல்களை சம்ஸ்கிருதத்திலும் இயற்றியுள்ளார். தமிழிலும் புலமை கொண்ட நாராயண குரு, திருவள்ளுவரின் திருக்குறளையும் சீர்காழி கண்ணுடய வள்ளலின் ஒழிவின் ஒடுக்கம் நூலையும் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

1904-ம் ஆண்டில் இருந்து சிவகிரியில் தங்கிய நாராயண குரு, அங்கு தனது ஆத்ம சாதனைகளைத் தொடர்ந்தார். 1912-ல் அங்கு சாரதா தேவி ஆலயத்தை நிறுவினார். வர்க்கலையில் சம்ஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வி அளித்தார். ஏழைகள் மற்றும் ஆதரவற்ற மாணவர்களை அரவணைத்தார். 1913-ல் அலுவா என்ற இடத்தில் அத்வைத ஆசிரமத்தை ஸ்தாபித்தார். அதன் நோக்கம் ஓம் சஹோதர்யம் சர்வத்ர (எங்கும் சகோதரத்துவம்) என்பதே. நாராயண குருவின் முயற்சியால் அலுவாவில் 1921-ல் சர்வதேச சகோதரத்துவ மாநாடும், 1924-ல் அனைத்து சமய மாநாடும் நடத்தப்பட்டன. 1922-ல் நாராயண குருவைச் சந்தித்துப் பேசிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அவரைப்போல ஒரு ஞானியை இதுவரை தான் கண்டதில்லை என்று போற்றியிருக்கிறார். அந்த அளவுக்கு சமய – சமூக சீர்திருத்த குருவாகத் திகழ்ந்த ஸ்ரீ நாராயண குரு, 1928-ல் சிவகிரியில் மறைந்தார். அங்கு அவரது ஜீவசமாதி அமைந்துள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரதீய மெய்ஞான மரபின் வழியில் அவர் ஏற்படுத்திய ஆன்மீக உணர்வலைகள், இன்றளவிலும் உயிர்ப்புடன் வலம்வருகின்றன. நாராயண குருவால் 1903-ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி.யோகம்) என்ற அமைப்பு இன்றளவிலும் ஆன்மீக, சமூக மேம்பாட்டுத் தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறாக, பல மகான்கள் புதிய அமைப்புகளைத் தொடங்கி, பாரதீய மெய்ஞானத்துக்கு உள்நாட்டில் புத்துயிர் ஊட்டினார்கள் என்றால், சர்வதேச அளவில் இதன் மதிப்பை நிலைநிறுத்தி புதுப்பாதை காட்டினார் இதே 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் துறவி. அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com