அதிகாரம் - 2. வான் சிறப்பு   

மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது. தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்துக்கும் ஆதாரம் மழை.

அதிகார விளக்கம்

வெட்டவெளியில் இருந்தே உலகம் தோன்றியது, அங்கிருந்தே மழை வருவதால், அதை அமிழ்தம் என்கிறோம். அது பூமியை மதித்துத் துப்பாதவர்களுக்குத் துப்புகிறது. உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது. தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்துக்கும் ஆதாரம் மழை. நீர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை, வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை.  

11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

வெட்டவெளியிலிருந்து பூமி தோன்றியதால் அதுவும் அழிவில்லாதது என்று உணரப்படும்.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்புவதுபோல் தூவுவதே மழை.

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

நீரால் நிறைந்த இந்த உலகத்தில், விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால் உள்ளிருந்து வாட்டும் பசி.

14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

புயல் என்று அழிக்கும் வெள்ளப்பெருக்கு தனது தன்மையை இழந்தால், உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

அழிப்பதுவும் அழிந்தவர்களை வளம் செய்வதுவும் என எல்லாம் செய்வதே மழை.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

சிறு துளியாக மழை இல்லாமல் போனால் புல்லும் முளைக்காமல் போகும்.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பெரிய கடலும் தனது நீர்மையை இழக்கும்; மேகமாக தனது நீரை 
தரவில்லை என்றால்...

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

சிறப்பான பூசனைகள் செல்லாது; வரியார்க்கும் வானோர்க்கும் வானம் வழங்கவில்லை என்றால்…

19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

அற்புத உலகத்தில் தானம், தவம் இரண்டும் இருக்காது; வானம் வழங்கவில்லை எனில்…

20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீர் இல்லை என்றால், உலகம் இல்லை; யாருக்கும் வான் இல்லையேல், ஒழுக்கம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com