14. சுடர்

ஜனங்கள் அங்கப்பிரதட்சிணம் செய்துகொண்டே போவதைக் கண்டேன். அப்பாவும் அம்மாவும் அவர்களோடு சேர்ந்து உருள ஆரம்பித்தார்கள். அரை இருட்டில் கோயில் தாழ்வாரம் முழுவதும் பாம்புகள் ஊர்வதுபோலத் தோன்றியது.

அன்றைக்கு மறுநாள் பொழுது விடிந்து நான் கண் விழித்தெழுந்தபோது, வீடெங்கும் சாம்பிராணிப் புகை பரவியிருந்தது. பூஜை மாடத்தருகே விளக்கேற்றி, கோலம் போட்டு, அப்பா விசிறியடித்திருந்த படங்களை மீண்டும் அதனதன் இடத்தில் வைத்து மாலை சார்த்தியிருந்தது. அடுக்களைக்குள் அம்மா சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே காய் திருத்திக்கொண்டிருந்தாள். நான் உள்ளே போனபோது எப்போதும்போலச் சிரித்தாள். ‘பல்லு தேச்சாச்சா? காப்பி அதோ இருக்கு பார்’ என்று சொன்னாள்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. ஓரிரவு முழுதும் ஓடிக் கடந்திருக்கிறது. அண்ணா வீட்டை விட்டுப் போயிருக்கிறான். நேற்றெல்லாம் அம்மாவின் மௌனக் கதறல் என் செவிப்பறையைக் கிழித்திருக்கிறது. இரவு மாமா பெட்டி படுக்கையோடு வந்து நின்று, இனிமேல் இங்கேதான் இருக்கப்போகிறேன் என்று அறிவித்ததற்கு வினய் சொன்ன காரணத்தில் உயிர்க்குலை நடுங்கிப்போயிருந்தேன். ஆனால் எதுவுமே பெரிதல்ல என்பதுபோல இவளால் எப்படிக் காட்டிக்கொள்ள முடிகிறது? அண்ணாவைப் பற்றி நான் அறிந்த அனைத்தையும் அம்மாவிடம் தெரியப்படுத்திவிட அதுதான் சரியான நேரமாக இருக்குமோ என்று ஒரு கணம் நினைத்தேன். காப்பியை எடுத்துக்கொண்டு அவளருகே போய் அமர்ந்துகொண்டேன். ‘சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகணும் விமல். ஸ்கூல் இருக்கோல்யோ?’

உண்மையில் எனக்கு அப்போது பேச்சே வரவில்லை. ஆனால் ஏதாவது ஒரு சொல்லில் ஆரம்பித்துவிட வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அம்மாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். மீண்டும் அழத்தொடங்குவாள். அப்பா ருத்ரதாண்டவமாடிவிடக்கூடும். மாமா என்னை இழுத்து எதிரே நிறுத்திக்கொண்டு தன் தலையில் அடித்துக்கொண்டு கத்துவார். முதல் நாள் நடந்த அனைத்தும் மறு உருவம் கொண்டு வீடு மீண்டும் துயரத்தின் சாறை உறிஞ்சத்தொடங்கும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு அண்ணாவைப் பற்றி எதுவும் பேசிவிட முடியாது என்று உறுதியாகத் தோன்றியது. ஒருவேளை முதல் நாள் இருந்த நிலையிலேயே அன்றைக்கும் பொழுது விடிந்திருந்தால் எனக்கு அந்தத் தயக்கம் இருந்திருக்காதோ என்னவோ. சட்டென்று ஒரு புன்சிரிப்பில், சாதாரணமான பேச்சில், ஒரு சாம்பிராணிப் புகையில் புதைந்த பேருலகை மீட்டுவிடப் பார்க்கிறாள்.

‘குளிக்கப் போகச் சொன்னேனே’ அம்மா நினைவுபடுத்தினாள். நான் எழுந்துகொண்டேன். எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்பதால், ‘அப்பா எங்கம்மா?’ என்று கேட்டேன்.

‘மாமாவோட போலிஸ் ஸ்டேஷன் போயிட்டு வரேன்னு போயிருக்கார்.’

அதை அவள் சொன்னபோது முகத்தை ஆழமாக உற்றுப் பார்த்தேன். எந்த மாறுதலும் இல்லை. முந்தைய தினத்துக்கு முந்தைய அம்மாவைப் போலவேதான் இருந்தாள். போலிஸ் ஸ்டேஷன் போவதை ஒரு செய்தியாக மட்டும் அறிவிக்கமுடியும் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. சட்டெனத் தோன்றியது. வீட்டில் அப்பாவும் மாமாவும் இல்லாத தருணத்தில் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டால் என்ன?

இப்போது நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. என் குரு என்னைச் சொல்லின் குழந்தை என்று குறிப்பிடுவார். எதையும் சரியான சொற்களில் வெளிப்படுத்திவிடத் தெரிந்தவன் என்றுதான் என்னைப் பற்றி எல்லோரிடமும் அறிமுகப்படுத்துவார். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு. எனது பேச்சு எனக்கே பிடித்துப்போகும் சில தருணங்களில் மகிழ்ச்சியைத் தாண்டி சற்று கர்வம் கொள்வதும் உண்டு. ஆனால் அன்றைக்கு நான் அனைத்துச் சொற்களாலும் வஞ்சிக்கப்பட்டேன். கடைசிவரை என்னால் அம்மாவிடம் அண்ணாவைப் பற்றிச் சொல்லவே முடியாமல் போனது. தயங்கித் தயங்கி நின்றுவிட்டு, பிறகு குளித்து சாப்பிட்டுப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றேன்.

மாலை வீடு திரும்பியபோது அப்பா சற்றுத் தெம்பாக இருப்பது போலிருந்தது. எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று கோவளம் இன்ஸ்பெக்டர் அவரிடம் நம்பிக்கை சொல்லியிருந்தார். அவர் ஸ்டேஷனில் இருக்கும்போதே பல பேருக்கு போன் செய்து அண்ணாவைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, எங்கே பார்த்தாலும் தகவல் தரும்படி உத்தரவிட்டிருக்கிறார். தாயார் உடல்நிலை கவலைக்கிடம் என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் தரச் சொல்லி ஆலோசனை சொல்லியிருக்கிறார். என்ன காரணத்தாலோ, அப்பா அதைச் செய்ய விரும்பவில்லை.

‘குடுத்துத்தான் பாருங்களேன் அத்திம்பேர். நல்லது நடக்க பொய் சொன்னா என்ன தப்பு?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

ஆனால் அப்பா முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். இந்தப் பேச்செல்லாம் நடந்துகொண்டிருந்தபோது நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். தனக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை என்பதுபோல் அவள் காய்ந்த துணிகளை உதறி மடித்து அடுக்கிக்கொண்டிருந்தாள்.

‘நீ சொல்லேன்க்கா. உனக்கு ஒண்ணுனா அவன் ஓடி வந்துட மாட்டானா?’ என்று மாமா சொன்னார்.

அம்மா அதற்கு பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் உறுதியாகத் தோன்றியது. என்னவானாலும் அவன் வரப் போவதில்லை.

அன்றிரவு நாங்கள் மூன்று பேரும் கோயில் முன் மண்டபத்தில் தனியே உட்கார்ந்திருந்தோம். வினோத் மிகவும் கலவரமாகிப் போயிருந்தது எனக்குப் புரிந்தது. வினய் என்னவாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதிருந்தது.

‘அப்படி எங்கடா போயிருப்பான் அவன்? தப்பு பண்ணவன்தான் தப்பிச்சி ஓடுவான். இவன் தப்பே பண்ணதில்லியே?‘ என்று வினோத் சொன்னான். ‘ஒருவேளை யாராவது கடத்திண்டு போயிருப்பாளோ?’

வினோத்துக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. துப்பறியும் கதைகள். சாகசக் கதைகள். பேய்க் கதைகள். பி.டி. சாமி என்பவர் எழுதிய பல புத்தகங்களை அவன் தன் பள்ளிக்கூடப் பைக்குள் மறைத்து வைத்திருப்பான். அதையெல்லாம் அவன் யாரிடமிருந்து வாங்கி வருகிறான் என்று தெரியாது. ஆனால் வாங்கி வருவதை வெறித்தனமாகப் படித்துத் தீர்த்துவிட்டு அடுத்தப் புத்தகத்துக்கு ஓரிரு தினங்களில் மாறிவிடுவான். காரணமே இல்லாமல் அண்ணா காணாமல் போயிருக்க முடியாது; கண்டிப்பாக யாராவது கடத்திக்கொண்டு போயிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவன் அதனால்தான் வந்தான்.

‘அதெல்லாம் இல்லே. எனக்குத் தெரியும், அவன் திருப்பதிக்குப் போயிருப்பான்’ என்று வினய் சொன்னான்.

இது எனக்கு அதிர்ச்சியளித்தது.

‘திருப்பதிக்கா? எதுக்கு?’ என்று கேட்டேன்.

‘என்னடா கேக்கறான் இவன்? பெருமாள சேவிக்கத்தான்’ என்று வினோத் சொன்னான்.

‘இல்லடா. திருப்பதிலதான் சாப்பாடு ஃப்ரீ. மூணு வேளையும் நன்னா சாப்ட்டுண்டு நிம்மதியா இருக்கலாம்’ என்று வினய் சொன்னான்.

நான் சிரித்துவிட்டேன். ‘இப்ப என்ன நாம காசு குடுத்தா சாப்ட்டுண்டிருக்கோம்? மூணு வேளையும் ஆத்துல நன்னாத்தானே சாப்பிடறோம்? இங்க இல்லாத எதை அவன் அங்கபோய் சாப்டப் போறான்?’ என்று கேட்டேன்.

அண்ணா எப்போதோ வினய்யிடம் திருப்பதிக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். ‘ஒரு மனுஷன் கையில பத்து காசுகூட இல்லாம சாகறவரைக்கும் நிம்மதியா வாழறதுக்கு அதுதான் சரியான இடம்’ என்று சொன்னானாம்.

அண்ணாவுக்கு எப்படி அப்படியொரு எண்ணம் வந்திருக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் குடும்பத்தோடு ஒரே ஒரு முறை திருப்பதிக்குப் போயிருக்கிறோம். அப்போது நான் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். சரியான குளிர் காலம். இரவு ஏழு மணிக்கு மலைக்குப் போய் இறங்கியதுமே குளிர்க்காற்று தோலைச் சுரண்ட ஆரம்பித்தது. எனக்கு அந்தக் குளிர் தாங்கவேயில்லை. நடுங்கிப் போய்விட்டேன். அம்மா என்னை இழுத்து இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு அவ்வப்போது சற்று ஆசுவாசம் அளித்துக்கொண்டிருந்தாள். எப்படி அந்த ஒரு இரவைக் கடக்கப்போகிறோம் என்று எனக்குக் கவலையாகிவிட்டது.

‘இங்கயே உக்காந்துண்டிருங்கோ. சாப்பிடறதுக்கு என்ன கிடைக்கும்னு பாத்துட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு அப்பா கிளம்பிப் போனார். நாங்கள் அப்போது கல்யாண கட்டத்துக்கு முன்னால் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தோம். மலை முழுதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. எல்லோரும் மொட்டை அடித்திருந்தார்கள். எல்லா ஆண்களும் அவரவர் பிள்ளைகளைத் தோளில் உயர்த்தி அமரவைத்துக்கொண்டு நடந்துபோனார்கள்.

‘திருப்பதில மொட்டை அடிச்சிண்டே ஆகணுமாம்மா?’ என்று அம்மாவிடம் கேட்டேன்.

‘அப்படின்னு இல்லே. வேண்டுதல் இருந்தா அடிச்சிக்கலாம்.’

‘பொம்பளைங்களெல்லாம் மொட்டை அடிச்சிண்டு போறாளேம்மா.’

‘அவாளுக்கு எதாவது வேண்டுதல் இருக்கும்.’

‘பாக்க நன்னாவேயில்ல.’

‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது விமல். மனுஷாளுக்கு அழகக் குடுக்கறது தலைமுடிதான். அதை பெருமாளுக்கு அர்ப்பணம் பண்றதா நினைச்சிண்டு செய்யறது இது’ என்று அம்மா சொன்னாள்.

‘அப்ப அந்த பாட்டிய பாரு. எண்பது வயசுக்கு மேல இருக்கும். அவ எதுக்கு மொட்டை அடிச்சிண்டிருக்கா? அவ என்ன அழகாவா இருக்கா?’ என்று அண்ணா கேட்டான்.

அம்மா அதிர்ச்சியாகிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லிப் புரியவைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பாள் என்று தோன்றியது. ஆனால் அம்மாவுக்கு பதிலாக எதுவும் கிடைக்கவில்லை.

நான் அண்ணாவிடம் சொன்னேன், ‘நீ அப்படி கேட்டிருக்கக்கூடாது. அம்மா sad ஆயிட்டா பாரு.’

‘தோணிடுத்தே? கேக்காம என்ன பண்றது?’ என்று அண்ணா சொன்னான்.

சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டுப்போன அப்பா முக்கால் மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார். அவர் கையில் இருந்த பொட்டலத்தில் புளியோதரை இருந்தது.

‘ஏதுன்னா?’ என்று அம்மா கேட்டாள்.

‘லைன்ல வரவாளுக்கு ஒரு பிடி பிரசாதமா இதத் தரா. நான் ரெண்டு ரூபா குடுத்தேன். மொத்தமா இப்படி பொட்டலம் கட்டிக் குடுத்துட்டா.’

‘நீங்க கோயிலுக்கா போயிட்டு வரேள்?’

‘இல்லல்ல. கோயில் வாசல்ல விசாரிச்சப்போ தெரிஞ்சிது. சாப்டுங்கோ எல்லாரும்’ என்று சொன்னார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து, குழாயில் நீர் பிடித்துக் குடித்தோம். இரவு தங்குவதற்கு அப்பா எந்த இடத்திலும் ஏற்பாடு செய்திருக்கவில்லை. தர்ம சத்திரம் எங்கோ இருக்கிறது என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே தேடிப் போனாலும் வந்திருக்கும் கூட்டத்தில் அங்கே நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது. அப்பா என்ன நினைத்தாரோ. சட்டென்று தன் வேட்டியை அவிழ்த்து அந்த மரத்தடியிலேயே விரித்தார். ‘படுத்துக்கோங்கோ’ என்று சொன்னார்.

‘ஐயோ இந்தக் குளிர்லயா?’ என்று வினோத் அலறினான்.

‘ஒரு ராத்திரிதாண்டா கண்ணு. கார்த்தால மூணு மணிக்கு எழுந்து குளத்துல குளிச்சிட்டு பெருமாள் சேவிக்கப் போயிட்டா, குளிரும் தெரியாது; ஒண்ணும் தெரியாது’ என்று அம்மா சொன்னாள்.

திக்கென்றாகிவிட்டது எனக்கு. மூன்று மணிக்குக் குளத்தில் குளிப்பதா! நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். ‘ஊருக்குப் போய் குளிச்சிக்கறேன்.’

அம்மா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் அதிகாலை அம்மாவும் அப்பாவும் குளத்தில்தான் முங்கி எழுந்தார்கள். எங்களை முகம் மட்டும் கழுவிக்கொள்ளச் சொல்லி, அப்பா சூரணம் இட்டுவிட்டார். ‘வாங்கோ’ என்று எங்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனார். ஈரம் சொட்டச் சொட்ட அம்மா அவர் பின்னால் வந்தாள்.

அன்றைக்கு அம்மாவும் அப்பாவும் அங்கப்பிரதட்சிணம் செய்தார்கள். உருட்டிவிடுவதற்காக விஜய்யும் வினய்யும் ஆளுக்கொருவர் முன் நின்றுகொண்டார்கள். வினோத்தும் நானும் சிறுவர்களாகத் தெரிந்தபடியால், காவலாளி எங்களைத் தடுக்கவில்லை. கோவிந்தா கோவிந்தா என்று குரல் கொடுத்தபடி கொத்துக் கொத்தாக ஜனங்கள் அங்கப்பிரதட்சிணம் செய்துகொண்டே போவதைக் கண்டேன். அப்பாவும் அம்மாவும் அவர்களோடு சேர்ந்து உருள ஆரம்பித்தார்கள். அரை இருட்டில் கோயில் தாழ்வாரம் முழுவதும் பாம்புகள் ஊர்வதுபோலத் தோன்றியது. எனக்கு மிகுந்த அச்சமாகிவிட்டது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதோ ஆகிவிடும் என்று தோன்றியது. அப்படியெதுவும் நடந்துவிடக் கூடாதே என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டேன்.

பத்து நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் உருண்டபடி த்வஜஸ்தம்பத்துக்கு அருகே வந்து சேர்ந்ததும் எழுந்து கைகூப்பினார்கள். விழுந்து சேவித்தார்கள். உடனே காவலுக்கு இருந்தவர்கள் எங்களை உள்ளே இழுத்துத் தள்ளினார்கள். கோவிந்தா கோவிந்தா என்று குரலெழுப்பியபடி நாங்கள் சன்னிதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம். முழு இருளில் வெறும் நெய் விளக்கு வெளிச்சத்தில் பெருமாள் ஒரு ஆளைப்போல நின்றுகொண்டிருந்தார். எந்தக் கணமும் அவர் அடியெடுத்து வைத்து வெளியே வந்துவிடுவார் என்று தோன்றியது. மிஞ்சிப்போனால் இரண்டு விநாடி அல்லது நான்கு விநாடிகள் நாங்கள் சன்னிதியில் நின்றிருப்போம். அதற்குள் மீண்டும் இழுத்து வெளியே தள்ளிவிட்டார்கள்.

‘சேவிச்சியாடா? நன்னா சேவிச்சிங்களா?’ என்று அம்மா எங்கள் நான்கு பேரிடமும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தாள். சன்னிதியில் எரிந்துகொண்டிருந்த நெய் விளக்கிலிருந்து ஒரு சுடரை எடுத்து அவள் தன் புருவத்தின் மத்தியில் வைத்துக்கொண்டாற்போல் இருந்தாள். என்னவோ, அதுவரை நான் பார்த்திராத ஒரு ஜொலிப்பு அவள் முகத்தில் அன்றைக்கு இருப்பதாகத் தோன்றியது.

லட்டு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அப்பா நகர்ந்து போனார். நாங்கள் கோயிலுக்கு வெளியே படிக்கட்டில் அமர்ந்திருந்தோம். அண்ணா என்ன நினைத்தானோ, தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து என்னருகே வந்து அமர்ந்துகொண்டான். ‘ரொம்பக் குளிர்றதா?’ என்று கேட்டான். தன் சட்டையைக் கழட்டி என்னிடம் கொடுத்து, அதையும் மேலுக்குப் போட்டுக்கொள்ளச் சொன்னான்.

‘விமல், மொட்டையடிச்சிக்கறது அழகை சமர்ப்பணம் பண்றதெல்லாம் இல்லே. மனுஷாளுக்கு எப்பவுமே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி உண்டு. பெருமாளுக்கேயானாலும் திரும்பக் கிடைக்கக்கூடிய ஒண்ணத்தான் தானம் பண்ணுவா. பெருமாளே இந்தா எடுத்துக்கோன்னு ஒரு கைய, கால வெட்டிக் குடுத்தா திரும்பக் கிடைக்குமா? கிடைக்காதோல்யோ? அதான் மழுங்க சிரைச்சிட்டாலும் திரும்ப முளைச்சிடும்ன்ற நம்பிக்கைல முடிய குடுத்துடறா’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com