15. உடைத்தறிதல்

அவன் கையில் இருந்த சாளக்கிராமத் துண்டுகளை எடுத்து உற்றுப் பார்த்தேன். பிளந்த இடத்தின் மடிப்பில் ஓர் உருவம் தெரிந்தது. மிகச் சிறிய உருவம்தான். ஆனால் படுத்த வாக்கில் இருந்தது.

ஒரு குப்பை லாரி கவிழ்ந்தாற்போலக் கூட்டம் மொத்தம் மொத்தமாக அந்தப் பெரிய கூடத்துக்குள் வந்து விழுந்துகொண்டே இருந்தது. உள்ளே வருகிறவர்கள் ஒரு பக்கமும், சாப்பிட்டுவிட்டு வெளியே போகிறவர்கள் இன்னொரு பக்கமுமாக இருபுற வாயில்களிலும் நெருக்கித் தள்ளிக்கொண்டே இருந்தார்கள். பந்தியில் இருந்தவர்கள் யாரும் இந்த மோதும் கும்பலைக் கவனிக்கவேயில்லை. அவர்கள் அத்தனை பேருமேகூட அப்படி மொத்தத்தில் வந்து விழுந்தவர்கள்தாம். ஆனாலும் சாப்பிடுகிற இடத்தில் பேசிக்கொண்டிருக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வழியில்லை. கணம் பிசகினாலும் இலையை எடுத்துப் போட்டுவிட்டுப் புதிய இலையை வைத்துச்செல்லப் பணியாளர்கள் பாய்ந்து பாய்ந்து வந்தார்கள். அப்படிப் புதிய இலை விரிக்கப்படும் இடத்தில் எங்கெங்கிருந்தோ ஆட்கள் எகிறிக் குதித்து வந்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான பாத்திரங்களை இரண்டிரண்டு பேராக நகர்த்திக்கொண்டே வர, பரிமாறுகிறவர்கள் முறத்தால் சாதமெடுத்து இலைகளை நிரப்பிக்கொண்டே போனார்கள். அதை ஒதுக்கி வைப்பதற்குள், யாரோ பாய்ந்துவந்து சொம்பில் சாம்பார் எடுத்து ஊற்றினார்கள். எல்லாமே அதிகம். எல்லாமே அபரிமிதம். அளந்து போட நேரமில்லாத அவசரம். கொதிக்கக் கொதிக்க இலையில் விழுந்த சாதத்தில் குளம் வெட்டி ஊற்றிய குழம்பைக் கலந்து நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

முதலில் அப்பா அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து அண்ணா. அவன் பக்கத்தில் அம்மா. அம்மாவுக்குப் பக்கத்தில் நானும் என்னை அடுத்து வினோத்தும் வினய்யும் இருந்தோம்.

‘திருப்தியா சாப்டுங்கோடா. இங்கல்லாம் சங்கோஜமே கூடாது’ என்று அப்பா சொன்னார்.

‘தர்ம சாப்பாடுன்னாலும் நன்னா பண்றா’ என்றாள் அம்மா.

அன்றைக்குத் திருப்பதியில் நாங்கள் உண்ட உணவு மிகவும் காரமாக இருந்தது. சாம்பாரும் ரசமும் கூட்டும் பொறியலும் மொத்தமாக மிளகாய்ச் சாறில் ஊறவைத்துக் கொண்டு வரப்பட்டது போலிருந்தது. வினோத் விக்கிக்கொண்டே சாப்பிட்டான். வினய், உணவு உண்டதைவிட தண்ணீர் அருந்தியதே அதிகம். ஆனாலும் அது பிரசாதம். திருப்பதிக்கு வந்துவிட்டு ஓட்டலில் சாப்பிடப்போவது மகா பாவம் என்று அப்பா சொன்னார்.

அண்ணா மட்டும் எந்தச் சலனமும் இன்றி பருக்கை பருக்கையாகக் கொறித்துக்கொண்டிருந்தான். உணவு விஷயத்தில் அவன் எப்போதுமே அப்படித்தான் சாப்பிடுவான். ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கட்டை விரலும் மட்டுமே அவனுக்கு ஈரமாகும். அந்த மூன்று விரல்களால் எடுக்கும் உணவை உதட்டில் படாமல் அண்ணாந்துதான் சாப்பிடுவான். நான் வழித்துச் சாப்பிட்டுவிட்டுக் கை முழுதையும் நக்கி உண்கிறவன். இதற்காக அப்பா எத்தனையோ நாள் என்னைக் கண்டித்திருக்கிறார். ‘ஐயோ எச்சில், எச்சில்’ என்று முகத்தைச் சுளித்துக்கொண்டே சொல்வார். எச்சில்தான். ஆனால் உணவின் ருசி பூரணம் என்பது இறுதியாக நக்கித் தின்பதில்தான் உள்ளதென்பது என் கருத்து. இன்று வரையிலுமே நான் அப்படித்தான்.

அன்றைக்கு எங்களோடு அந்தப் பந்தியில் உட்கார்ந்தவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று அடுத்தப் பந்தி ஆரம்பமான பின்பும் நாங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். வாழ்நாளில் என்றுமே அத்தனை சாதம் இலையில் விழுந்து நாங்கள் பார்த்ததில்லை. அம்மா உண்மையில் மிரண்டுபோனாள். ‘என்ன இவா, ஒருத்தர் இலையிலே ஒம்பது பேருக்குப் போடறா?’ என்று சொன்னாள்.

‘கும்பலைப் பாரு. இங்கல்லாம் அளந்து போட்டுண்டிருக்க முடியுமா? படியளக்கறவன் கொண்டுவந்து கொட்டிண்டே இருக்கான். அப்பறம் பரிமாறுறவனுக்கு என்ன கஷ்டம்?’ என்றார் அப்பா.

எங்களுக்கு உண்மையிலேயே அந்த அனுபவம் மிகவும் பிரமிப்பாக இருந்தது. இலவசமாகக் கிடைக்கிற உணவு. அதுவும் தரமான உணவு. அளவில்லாத உணவு. யார் வேண்டுமானாலும் வரலாம். உட்கார்ந்து சாப்பிடலாம். எழுந்துபோய் கை கழுவிக்கொண்டு மீண்டும் வரிசைக்குப் போய் நின்றால், அடுத்த வேளை உணவுக்குள் வரிசை நகர்ந்து உள்ளே வந்துவிடும். அப்போது மீண்டும் உட்கார்ந்து சாப்பிடலாம். ஏன் திரும்ப வந்தாய் என்று யாரும் கேட்கப்போவதில்லை. முகங்களல்ல. வயிறுகளும் பசியும் மட்டுமே முதன்மை பெறுகிற இடம்.  சந்தேகமில்லாமல் அது ஒரு சிறப்பான ஏற்பாடுதான்.

ஊருக்குத் திரும்பி, திருப்பதிக்குப் போய்வந்த கதையைப் பிரசாதத்துடன் சேர்த்து, பார்க்கிற அத்தனை பேரிடமும் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். பெருமாள் சேவித்ததைவிட அந்த தரும உணவுச் சத்திரத்தைப் பற்றித்தான் அவள் அதிகம் பேசினாள்.

‘சாதத்தை மலையா பாத்தேன் மாமி! சந்தேகமில்லாம பெருமாள் அதுலதான் இருந்தார்!’

அதைத்தான் வினய் எங்களுக்கு நினைவூட்டினான். ‘அவன் திருப்பதில நம்மளோடல்லாம் பேசவேயில்லைடா. யோசிச்சிப் பாருங்கோ ரெண்டு பேரும். தனியா தனக்குத்தானே என்னமோ யோசிச்சிண்டே இருந்தான். அப்பவே எனக்கு அவன்மேல சந்தேகம்தான்’ என்று வினய் சொன்னான்.

ஆனால் எனக்கென்னவோ வெறும் சோற்றுக்காக அவன் திருப்பதிக்குப் போயிருப்பான் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது. வினய்க்கும் சரி, வினோத்துக்கும் சரி. நான் அதைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. நீ சின்னப் பையன், உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் சின்னப் பையனிடம்தான் அண்ணா தன் மனத்தைத் திறந்து காட்டியிருக்கிறான். முழுதாக இல்லாவிட்டாலும் பகுதியளவுக்கு. அவன் சொன்ன பல விஷயங்களை என்னால் திரும்ப நினைவுகூர்ந்து அவர்களிடம் சொல்ல முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. சொன்னால் வரக்கூடிய சிக்கல்கள் வேறு. ஆனால் சொல்லத்தான் முடியுமா?

ஒரு சம்பவம். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவுக்கு விடுமுறை. என்ன நினைத்தாரோ, பரணில் ஏறி பெட்டியை எடுத்துக் கீழே வை என்று அண்ணாவிடம் சொன்னார். அண்ணாவின் நாடிச் சுவடி வீட்டுக்கு வந்திருக்காத காலம் அது. அண்ணா, புத்தக அலமாரியின் மீது கால் வைத்து ஏறி நின்று அப்பாவின் டிரங்குப் பெட்டியைக் கீழே இறக்கிக் கொடுத்தான். வினய்யும் நானும் சேர்ந்து பிடித்து அதைத் தரையில் வைத்தோம். அப்பா ஆர்வமுடன் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு குடைவதற்கு உட்கார்ந்தார்.

அப்பாவின் டிரங்குப் பெட்டி ஒரு பெரும் சுரங்கம். அனைவருக்கும் தெரிந்த வெள்ளிப் பாத்திரங்கள், பட்டுப் புடைவை, பட்டு வேட்டிகளைத் தவிரவும், அதில் எப்போதும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் வியப்பதற்கு இருந்துகொண்டே இருக்கும். அவர் ஒவ்வொன்றாக எடுத்து தூசு தட்டிக் கீழே வைத்துக்கொண்டே இருக்க, நாங்கள் அதை எடுத்து எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்போம். பழைய டைரிகள், அந்தக் காலத்துக் காசுகள், பாக்கு வெட்டி, திருமண் பெட்டி, அப்பாவின் அம்மா, நாங்கள் பார்த்தேயிராத எங்கள் பாட்டியின் அறுபதாம் கல்யாண போட்டோ என்று எடுக்க எடுக்க என்னவாவது வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு பொருளை வெளியே எடுத்து தூசு தட்டும்போதும் அப்பா அது தொடர்பான கதையொன்றைச் சொல்லுவார். சில சமயம் அந்தக் கதை சுவாரசியமாக இருக்கும். சில சமயம் ஆர்வம் தூண்டாது. ஆனால் அத்தனையும் சரித்திரம். அதில் சந்தேகமில்லை.

அவர் வழக்கம்போல் ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே வைத்துக்கொண்டிருக்கும்போது அண்ணா சட்டென்று பெட்டிக்குள் கையைவிட்டு அடியில் எதையோ அவனே வைத்ததுபோல வெளியே எடுத்தான். ஒரு சிறிய துணி முடிப்புக்குள் கோலிக் குண்டுகள்போல இரண்டு பொருள்கள் உருண்டன.

‘ஏய் ஏய்.. ஜாக்கிரதை. அது சாளக்கிராமம்’ என்று அப்பா சொன்னார்.

எங்கள் வீட்டு பூஜையில் நான்கு சாளக்கிராமங்கள் உண்டு. கரேலென்று உருண்டு திரண்ட கற்கள். மொழுமொழுவென்று நாவற்பழத்தை நிகர்த்த கற்கள். அதில் ஒன்று லஷ்மி நரசிம்மர். இன்னொன்று திருப்பதி வெங்கடாசலபதி. மூன்றாவது மகாலட்சுமி. நான்காவது என்னவென்று தெரியவில்லை என்று அப்பா சொல்லுவார்.

‘அது வெறும் கல்லு இல்லே விமல்! உடைச்சிப் பார்த்தா உள்ளே பெருமாள் இருப்பார். ஆனா உடைக்கறது தப்பு. யாரும் செய்ய மாட்டா’ என்று அம்மா சொல்லியிருக்காள்.

‘உடைச்சிப் பாக்காம இந்தக் கல்லுல இந்தப் பெருமாள்தான் இருக்கார்னு எப்படித் தெரியும்?’ என்று வினய் ஒரு சமயம் கேட்டிருக்கிறான்.

‘அதெல்லாம் சிலருக்குத் தெரியும். ரொம்ப பெரியவா, மகான்கள் கரெக்டா சொல்லிடுவா.’

‘அதெல்லாம் சும்மா’ என்று அண்ணா சொன்னான்.

‘அப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்று அவனை அடக்கிவிட்டு அம்மா போய்விட்டாள். அதன்பின் அந்தப் பேச்சு வீட்டில் எழுந்ததில்லை.

இப்போது பூஜையில் இருக்கும் நான்கு சாளக்கிராமங்கள் தவிர, இன்னும் இரண்டு அப்பாவின் டிரங்குப் பெட்டியில் இருக்கிற விஷயம் தெரியவந்திருக்கிறது. நல்லது. இந்த சாளக்கிராமங்களுக்குள் இருக்கும் பெருமாள் யார்?

நான் அப்பாவிடம் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு, ‘தெரியலடா. இது எங்கப்பாவோட அப்பா காலத்து சாளக்கிராமம். எங்கப்பா பூஜைல வெச்சிருந்தார்னு நினைக்கறேன். என்னமோ என் காலத்துல அது தொடரலே’ என்று அப்பா சொன்னார்.

அன்றைக்கு மதியம் வரை பெட்டியைக் குடைந்துவிட்டு, போதும் என்று அப்பா அதை மூடிவிட்டார். ‘எடுத்து மேலே போட்டுடுடா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் மூவரும் உதவி செய்ய, அண்ணாதான் மீண்டும் அதைப் பரணில் ஏற்றினான். அன்றைக்கு மதியம் நாங்கள் சாப்பிட உட்காரவே மூன்று மணி ஆகிவிட்டது. அலுப்பில் அனைவரும் படுத்துவிட்டார்கள். எனக்குத் தூக்கம் வராமல் கிணற்றடிக்குப் போய் உட்கார்ந்துகொண்டு வீட்டுப் பாடம் படிக்க ஆரம்பித்தேன்.

சற்று நேரத்தில் அண்ணா அங்கு வந்தான். வழக்கத்துக்கு மாறாக அவன் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. ஏதோ ரகசியம் பதுக்கிய புன்னகை.

‘என்னடா?’ என்று கேட்டேன்.

உள்ளங்கையை விரித்துக் காட்டினான். ஒரு சாளக்கிராமம் இருந்தது.

எனக்கு அச்சமாகிவிட்டது. ‘ஐயோ அப்பா திட்டுவா’ என்றேன்.

‘அப்பாக்குத் தெரியாது. அந்தப் பெட்டில இருந்த ரெண்டுல ஒண்ணு இது’ என்று அண்ணா சொன்னான்.

நான் அதை வாங்கி உற்றுப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் இல்லை. கறுப்பு நிறத்தில் சற்றே நீண்ட ஒரு கூழாங்கல்லைப்போல இருந்த சிறிய சாளக்கிராமம். ஒரு பக்கம் சற்று நசுங்கியிருந்தது. நசுங்கலின் மறுபுறம் பூச்சி அரித்தாற்போல ஒரு சிறு துவாரம் இருந்தது.

‘டேய் இதையெல்லாம் நாம தொடக் கூடாதுடா. குளிக்காம பூஜைகூடப் பண்ணக் கூடாதுன்னு அம்மா சொல்லுவாளே’ என்றேன்.

‘பெருமாளுக்கு தோஷம் கிடையாது விமல். அதெல்லாம் நாமளே நினைச்சிக்கறது’ என்று அண்ணா சொன்னான். ‘இதுக்குள்ள இருக்கற பெருமாளுக்கு நான் தொட்டது பிடிக்கலேன்னா இவ்ளோ நேரம் வெளிய வந்து சொல்லியிருப்பார். இல்லேன்னா என் கைய விட்டுப் போயிருப்பார்.’

‘ஆனா இது என்ன பெருமாள்னு தெரியலன்னு அப்பா சொன்னாளே!’

அண்ணா சிறிது நேரம் அந்த சாளக்கிராமத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டான்.

‘உனக்குத் தெரியுமா?! நிஜமாவா!’

‘சொல்றேன். இது ரங்கநாதர். சயன கோலம்’ என்று சொன்னான்.

என்னால் அதை நம்ப முடியவில்லை. ‘சும்மா சொல்றே’ என்று சொன்னேன்.

அவன் என்ன நினைத்தானோ. உள்ளே சென்று ஒரு சுத்தியலை எடுத்து வந்தான்.

‘ஐயோ வேணாம்டா. இதெல்லாம் தப்பு’ என்று நான் அலறினேன்.

உஷ்ஷ் என்று என்னை அடக்கிவிட்டு, சாளக்கிராமத்தைக் கீழே வைத்தான். யாராவது வருகிறார்களா என்று சுற்றி ஒரு பார்வை பார்த்துக்கொண்டு அதன்மீது ஓங்கி ஓரடி அடித்தான். எனக்கு உயிரே போய்விடும்போலிருந்தது. இது மகா பாவம். இவன் ஏன் இப்படியெல்லாம் முட்டாள்தனம் செய்கிறான்? என்ன ஆயிற்று இவனுக்கு?

அந்தக் கல் இரண்டாகப் பிளந்துகொண்டது. அண்ணா என்ன நினைத்தானோ. கண்ணை மூடிக்கொண்டு அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டான். கையில் எடுத்து வைத்துக்கொண்டு இறுக்கி மூடி நெஞ்சோடு அமர்த்திக்கொண்டான். நான் பார்த்துக்கொண்டே இருந்தபோது தனது உள்ளங்கையை விரியத் திறந்து, ‘இப்போ பார்’ என்று சொன்னான்.

நான் நடுங்கும் கரத்தை உயர்த்தி அவன் கையில் இருந்த சாளக்கிராமத் துண்டுகளை எடுத்து உற்றுப் பார்த்தேன். பிளந்த இடத்தின் மடிப்பில் ஓர் உருவம் தெரிந்தது. மிகச் சிறிய உருவம்தான். ஆனால் படுத்த வாக்கில் இருந்தது. கண்ணோ, மூக்கோ, கரங்களோ, தேகமோ, காலோ வேறெதுவுமோ தெரியவில்லை. ஓர் உருவம். மொத்தமாக ஓர் உருவம். ஆனால் சந்தேகமின்றி அது படுத்த உருவம்.

‘பெருமாளே!’ என்று என்னையறியாமல் குரல் கொடுத்தேன். கைகூப்பி நின்றுகொண்டேன். எனக்கு உடலெங்கும் உதற ஆரம்பித்துவிட்டது. கழுத்தில் வியர்த்து சட்டைக்குள் இறங்கியது. நம்பவே முடியாமல் அண்ணாவிடம் கேட்டேன், ‘அன்னிக்கு மகான்களுக்குத் தெரியும்னு அம்மா சொன்னப்போ அதெல்லாம் சும்மான்னு சொன்னியே? இன்னிக்கு நீ எப்படிடா உள்ள இருக்கறவர் ரங்கநாதர்னு சொன்னே?’

அண்ணா சொன்னான், ‘தெரியலேடா விமல். மனசுல பட்டுது. இந்தக் கல்லுக்குள்ள இருக்கற உருவம் கண்ணுக்குத் தெரிஞ்சிதுடா!’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com