16. நூற்று எண்பத்து ஒன்பது தெய்வங்கள்

குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளும் விரதங்களும், திடீர் ஒழுக்க நியமங்களும் ஆன்மிக முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடை. ஒழுக்கமோ ஒழுக்கமின்மையோ, ஏதேனும் ஒன்றில் முழுமை வேண்டும்.

போபாலுக்கு வந்து ரயில் ஏறுவதற்கு முன்னால், கேசவன் மாமாவுக்கு போன் செய்தேன். ஏன் செய்யத் தோன்றியது என்று தெரியவில்லை. அவர் தந்தி கிடைத்த நேரம் புறப்பட்டிருந்தால் இந்நேரம் திருவிடந்தையில் இருந்திருக்கலாம். என்னையறியாமல் எப்படி அண்ணாவைத் தேடிக் கிளம்பினேன் என்று எத்தனை யோசித்தும் காரணம் விளங்கவில்லை. நான் விரும்பாமலேயே ஊருக்குப் போவதைத் தள்ளிப்போட நினைத்தேனா என்று எண்ணிப் பார்த்தேன். மரணத்துக்கான காத்திருப்பைப்போல் அருவருப்பான விஷயம் வேறில்லை. அம்மாவானால் என்ன, வேறு யாரானால் என்ன? மரணம் பூரணமானது. அமைதியும் நிச்சலனமும் கொண்டது. இரவின் அபூர்வ ரகசியங்களை நிகர்த்தது. ஆனால் அதற்காகக் காத்திருப்பதன் குரூரம் மிகவும் ஆபத்து.

நான் வளர்ந்த குருகுலத்தில் ஒரு சமயம் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். அதெல்லாம் எங்களுக்கு வழக்கமில்லாதது. பூஜை புனஸ்காரங்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஒரு குருநாதரை நான் மிகவும் சிரமப்பட்டுத் தேடிக் கண்டடைந்திருந்தேன். வரலாறும் ஆன்மிகமும் தத்துவமும் விசாரங்களும்தான் எங்களை அங்கே செலுத்திக்கொண்டிருந்தவை. நானறிந்து மருந்துக்கும் அங்கே ஒருநாள் மணியடிக்கும் சத்தம் கேட்டதில்லை. பூஜைகள், விரதங்கள், பஜன் என்று நாள்களைக் கொன்றதில்லை. தெய்வம் ஒன்று என்ற கொள்கைக்கு குருநாதர் முற்றிலும் எதிரானவராக இருந்தார். அவர் கணக்கில் மொத்தம் நூற்று எண்பத்தி ஒன்பது தெய்வங்கள் உண்டு. ஆனால் அவற்றுக்குப் பெயர்கள் கிடையாது. உருவம் கிடையாது. குரு ஒவ்வொரு தெய்வத்தையும் நம்பர் கொடுத்து அழைப்பார். திடீரென்று ‘இந்தப் பதினேழு ரொம்பப் படுத்துகிறான். அவனைக் கொஞ்சம் தட்டிவைக்க வேண்டும்’ என்பார். ‘எண்பத்தாறுக்கு இன்று என்னவோ ஆகிவிட்டது. விடிந்ததிலிருந்து விதவிதமாக ஆடிக்கொண்டே இருக்கிறான். ஆடும்போது ஒருத்தனுக்கு அரிப்பெடுத்தால் எவ்வளவு சிரமம்! இடது காலைப் பின்னால் வளைத்து, கழுத்தைச் சொறிந்துகொள்கிறான். பார்க்கவே தமாஷாக இருந்தது’ என்பார்.

‘முகத்தைப் பார்த்தீர்களா குருஜி?’

‘முண்டக்கலப்பைக்கு முகம் ஏது?’ என்று குரு சொன்னார். ஆனால் எண்பத்தியாறு தனது இடது காலைப் பின்புறம் வளைத்து கழுத்து வரை உயர்த்தி சொறிந்துகொண்டதை அவர் கண்டிருக்கிறார். அது பிரமையல்ல. கற்பனையல்ல. சும்மா கதை விடுவதல்ல. தான் காணாத ஒன்றை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருந்தது. நூற்று எண்பத்தொன்பது தெய்வங்களுடனும் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார். அவரது தெய்வங்களுக்கு மொழி கிடையாது. எப்படி முகமில்லையோ அப்படி. அவற்றுக்குப் பசி உண்டு. தாகம் இருக்காது. உறக்கமும் விழிப்பும் உண்டு. ஆனால் காலம் கிடையாது. இரவு பகல் அறியமாட்டார்கள். அவர்களது உடலுறுப்புகளில் மூளை என்ற ஒன்று இருக்காது. ஆனால் மனம் உண்டு. அது ஓர் உறுப்பாகவே செயல்படும் என்று குருஜி சொல்லுவார்.

‘மொழியற்ற அவர்களுடன் நீங்கள் எப்படி உரையாடுவீர்கள்?’

‘மொழியை விலக்கிச் சிந்திக்கும்போது தெய்வங்களுக்குப் புரியும்’ என்பார் குருஜி.

மொழியை விலக்கிச் சிந்திப்பது! எத்தனை உன்னதமானதொரு கலை! முடியுமா அது? யாருக்கு சாத்தியமாகியிருக்கிறது? சொல்கிறாரே தவிர, குருஜிக்கு மட்டும் கைகூடியிருக்குமா என்ன?

‘மொழி பிறப்பதற்கு முன்னால் சித்திரங்கள் பேசவில்லையா விமல்? அதற்கும் முன்னால் சைகைகள் உதவவில்லையா? சைகைக்கும் முன்னால் சிந்தனையே அந்தப் பணியை நிகழ்த்தியிருக்கும் என்பது உண்மையானால், சிந்தனைக்கு முன்னால் சிந்திக்காதிருப்பதே அதைச் செய்திருக்கும்.’

நான் அவரை முற்றிலும் புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்தும் தெளிந்த கணத்தைக் குறித்தும் பிறிதொரு தருணத்தில் விவரிக்கிறேன். இங்கே சொல்லவந்தது மரணத்துக்கான காத்திருப்பைக் குறித்து. அதற்கு முன்னால் அந்த சாதுர்மாஸ்ய விரதத்தைக் குறித்து.

அந்தப் பையன் எங்கள் குருகுலத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தவன். வேதம் தெரிந்த குருநாதர். உபநிடதங்களில் கரை கண்ட மனிதர். பார்க்கும்போதே அவரது நெற்றிப்பொட்டிலிருந்து ஞானச்சுடர் புறப்பட்டு வந்து தன்னைத் தழுவிக்கொள்வதாக அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எப்படியாவது இவரிடமிருந்து மொத்த சொத்தையும் சுரண்டி எடுத்துக்கொண்டுபோய் எங்காவது மடம் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடலாம் என்று நினைத்திருப்பானோ என்னவோ. வந்த முதல் நாளில் இருந்தே அவன் தீயை மிதித்த பரபரப்பிலேயே இருந்தான். அதிகாலை மூன்றரைக்கு எழுந்து குளிப்பது, ஜபதபங்கள் செய்வது, ஒன்றரை மணி நேரம் தியானத்தில் உட்கார்வது, பிறகு தோட்ட வேலை செய்வது, தண்ணீர் இறைப்பது, குருஜியின் துணிகளைத் துவைத்துப்போடுவது, சாப்பாட்டுக்கு இலைகள் நறுக்கிவைப்பது, குருகுல வளாகத்தை சுத்தமாகப் பெருக்கி மெழுகுவது என்று யாரும் சொல்லாமல் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தான். குருவுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. ‘விமல் அவனை கவனித்தாயா? உன்னைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுத்தான் எழுபத்தியாறு அவனை உருவாக்கியிருக்கிறான்’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.

எப்படி அவனது சுறுசுறுப்பு அவருக்குப் பிடித்திருந்ததோ, அதேபோலத்தான் எனது சோம்பலும் அவரது விருப்பத்துக்குரிய ஒன்றாக இருந்தது. குருகுலத்தில் இருந்த காலத்தில் நான் ஒன்பது மணிக்குக் குறைந்து படுக்கையை விட்டு எழமாட்டேன். ‘இதென்ன சோம்பேறி மடமா?’ என்று அங்கிருந்த அத்தனை பேரும் திட்டுவார்கள். எரிந்து விழுவார்கள். காமேஷ் ஒருமுறை ஒரு சோடா கம்பெனியில் சொல்லிவைத்து ஒரு பாறையளவு பெரிய ஐஸ் கட்டியைத் தருவித்து, உடைத்து, என் போர்வையை உரித்துக் கொட்டி என்னை கதிகலங்க வைத்திருக்கிறான்.

‘அவனை விட்டுவிடு. அவன் தூங்கட்டும்’ என்றுதான் அப்போதும் குருஜி சொன்னார். ‘விழிப்பு நிலை கற்பிக்காத பலவற்றை உறக்கம் சொல்லித்தரும்.’

இதே மனநிலையில்தான் அவர் அந்தப் பையன் கேட்ட சாதுர்மாஸ்ய விரதத்தைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டார். எங்களுக்கெல்லாம் அது பெரும் அதிர்ச்சி. குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளும் விரதங்களும், திடீர் ஒழுக்க நியமங்களும் ஆன்மிக முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடை என்று அவர் அடிக்கடி சொல்லுவார். ‘ஒழுக்கமோ ஒழுக்கமின்மையோ, ஏதேனும் ஒன்றில் முழுமை வேண்டும். நியமங்கள் அல்ல. முழுமைதான் பரம்பொருளுக்குப் பாலம்’ என்பார்.

அந்த ஆண்டு வேறு வழியின்றி நாங்களும் விரதம் கடைப்பிடிக்க முடிவு செய்து, மொத்தமாக துங்கபத்திரை நதிக்கரைக்குப் பயணமானோம். நான்கு மாதகாலப் பயணம். நதிக்கரை வாசம். மழையோ, வெயிலோ. அந்த நான்கு மாதங்களும் வெட்டவெளியில் மட்டுமே படுப்பது, பிச்சை எடுத்து மட்டுமே உண்பது என்று குரு சொல்லியிருந்தார். அந்தப் புதிய பையனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளித்தது. ஒரு மாறுபட்ட அனுபவத்துக்கு அவன் தன்னைத் தயார் செய்துகொண்டான். ஆனால், கிளம்பும்போது குருஜி ஒரு உத்தரவிட்டார். ‘காஷாயம் வேண்டாம். எல்லோரும் வெள்ளை பைஜாமா, குர்த்தா அணிந்தால் போதும்.’

‘புரியவில்லை குருஜி!’ என்று அவன் நெருங்கி வந்து கேட்டான்.

‘நம் விரதத்தை நாம் காவி துறந்து தொடங்குகிறோம்’ என்று குருஜி சொன்னார். அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. ‘இதென்ன குருகுலமா அல்லது பைத்தியக்காரர்களின் கூடாரமா?’ என்று ஆவேசமாகக் குரல் எழுப்பி, அன்றைக்கே அவன் எங்கள் குருகுலத்தை விட்டு விலகிப்போனான்.

குருஜி புன்னகை செய்தார். ‘நல்லது குழந்தைகளே. நம் திட்டம் மாறுதல் இல்லாதது. நாம் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்கப்போகிறோம். கிளம்பலாம்’ என்று சொன்னார்.

ஷிமோகாவுக்கு வடக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் குருஜி ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒரு சிறிய கிராமம் அது. நதிப்படுகை எங்கும் தென்னையும் வாழையும் அடர்த்தியாக வளர்ந்து நிறைந்திருந்த பகுதி. பக்கத்தில் ஒரு பெரிய கோழிப் பண்ணை இருந்தது. நாளெல்லாம் கோழிகளின் கொக்கரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தவிரவும் அந்தக் காற்றில் கோழித்தீவன வாடை எப்போதும் கலந்திருந்தது. நான்கு மாதங்கள் எப்படி அதைச் சகித்துக்கொண்டு அங்கே இருக்கப்போகிறோம் என்று எனக்கு அச்சமாக இருந்தது. ‘பழகிவிடும்’ என்றார் குருஜி. அவர் ஏற்கெனவே அந்தக் கிராமத்து மக்களுக்குத் தெரிந்தவராக இருந்தார். எமர்ஜென்சி அமலுக்கு வந்தபோது, அவர் அந்தக் கிராமத்தில்தான் தங்கியிருந்ததாக ஊர்க்காரர்கள் சொன்னார்கள்.

‘தலைமறைவாகியிருந்தீர்களா!’ என்று கேட்டேன்.

‘ஆம். கட்டாயத் தலைமறைவு. ஜனதாக்கார நண்பர் ஒருவரைக் காப்பாற்றவேண்டி இருந்தது. அவருக்காக இங்கே வந்து தங்கினேன்’ என்று குரு சொன்னார். அது எனக்கு வியப்பாக இருந்தது. அவருக்கு அரசியல் நண்பர்கள் இருக்கக்கூடும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. நானறிந்து நண்பர் என்று சொல்லிக்கொண்டு அவரைப் பார்க்க யாருமே எங்கள் இருப்பிடத்துக்கு வந்ததில்லை. எப்போதும் மாலை வேளைகளில் நடக்கும் வேதாந்த வகுப்புகளில் கலந்துகொள்ள ஏழெட்டுப் பேர் வருவார்கள். வகுப்பு முடிந்ததும் விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்துபோவார்கள். பிரபலமற்ற ஒரு துறவியைப் பொதுவாக யாரும் பொருட்படுத்துவதில்லை. பூச்சுகளற்ற மேதைமையின் இருப்பிடம் புவியின் பரப்பில் வெகு சொற்பமே.

அந்த நான்கு மாதங்களில் அவரது அன்று வரையிலான வாழ்க்கையைக் குறித்து முழுதும் கேட்டுத் தெரிந்துகொண்டுவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். துரதிருஷ்டவசமாக, அந்தக் கிராமத்துக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த நான்காம் நாள் மாலை அவருக்கு உடல் நலன் கெடத் தொடங்கியது. முதலில் சாதாரணக் காய்ச்சல் போலத்தான் இருந்தது. பிறகு அதுவே வீரியம் கொண்டு நாளெல்லாம் ஓயாமல் சுட்டுத் தீர்த்தது. மெலிந்த தேகமும் குழி விழுந்த கண்களும் ஒடுங்கிய முகவாயும் கொண்ட குருஜி, அந்தக் காய்ச்சல் காலத்தில் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டது பெரும் சிக்கலாகிப்போனது.

‘குருஜி, அடம் பிடிக்காதீர்கள். கொஞ்சம் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் மருந்துகள் வேலை செய்யாது.’

‘நான் விரதத்தில் இருக்கிறேன். நானே போய்க் கையேந்திப் பிச்சை எடுக்காத உணவை என்னால் சாப்பிட முடியாது’ என்று சொன்னார்.

‘உங்கள் நாற்பத்தி ஏழு, உங்கள் சார்பாக என்னைப் பிச்சை எடுத்து வரச்சொல்லி சொன்னார்.’

‘அவன் கிடக்கிறான், நான் அவனைப் பொருட்படுத்துவதில்லை. சரியான சந்தர்ப்பவாதி’ என்று சொல்லிவிட்டார்.

முதல் சில தினங்கள் நாங்கள் அவரைக் கட்டாயப்படுத்தி காய்ச்சலுக்கு மருந்து உட்கொள்ள வைத்தோம். ஏழாம் நாள் அவர் கூடாது என்று சொல்லிவிட்டார். எத்தனை மன்றாடியும் ஏற்க மறுத்தார். முன்னர் செய்த தீர்மானத்தின்படி, வெட்டவெளியிலேயேதான் படுத்திருந்தார். நாங்கள் கெஞ்சியும் கதறியும் பார்த்தும் பலனின்றிப்போனது. ஒரு குடில் அல்லது கூடாரம்கூடப் போடக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

அன்றைக்கு இரவு பேய் மழை அடித்தது. ஆற்றங்கரை மணல் வெளியெங்கும் சேறும் சகதியுமாகிப்போனது. தாக்குப்பிடிக்க முடியாத எங்களில் பலர், கோழிப் பண்ணைக்குள் போய் ஒளிந்துகொண்டு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். குருஜி படுத்த இடத்தில் இருந்து எழவேயில்லை. முழு இரவும் கொட்டித் தீர்த்த மழைக்குத் தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு, மறுநாள் காலை என்னை அழைத்துச் சொன்னார்:

‘விமல், விரைவில் நான் இறந்துவிடுவேன். எனக்கு ஒரு கடன் பாக்கி இருக்கிறது. அதை மட்டும் எனக்காக நீ தீர்க்க வேண்டும். அவசரமில்லை. உன் காலம் முடிவதற்குள் தீர்த்தால் போதும்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com