21. மயான காண்டம்

அரையில் ஒரு கோவணம் மட்டும் உடுத்தி, முற்றுமுழுதாகச் சாம்பல் பூசிக்கொண்டு இருந்தான். முகமெல்லாம் சாம்பல் புழுதி. அது வினய் என்பதை நான் உணரவே எனக்குச் சில விநாடிகள் பிடித்தன.

படூர் வாத்தியார் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருந்ததால், அப்பா என்னை அந்த வருட மயான கொள்ளைத் திருவிழாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருந்தார். ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிட, கையில் இரண்டு ரூபாய் கொடுத்திருந்தார்.

‘ஃப்ரெண்ட்ஸெல்லாம் வந்தாங்கன்னாகூட சேர்ந்து ஜாலியா ஊர சுத்து விமல். அதெல்லாம் தப்பே இல்லை. ஆனா கூட்டம் மயானத்துக்குப் போகறப்ப நீ ஆத்துக்கு வந்துடு. கூட வர யாருமில்லேன்னா, வாத்யார் வீட்ல போய் இரு. அப்பா வந்து அழைச்சிண்டு வந்துடுவா’ என்று அம்மா சொன்னாள்.

கேசவன் மாமா திருவல்லிக்கேணி வரை போயிருந்தார். திரும்ப ஒரு நாளாகும் என்று சொல்லியிருந்தார். அவர் இருந்திருந்தால், வாத்தியாரோடு திருவிழா பார்க்க வேண்டிய அவலம் உண்டாகியிருக்காது. ஊர்ப்பெரியவராக, பஞ்சாயத்து முக்கியஸ்தராக, நல்லவராக, அன்பானவராக இருந்தாலும், அவர் என் பள்ளிக்கூட வாத்தியார். அவரது அருகாமையில் பத்திரமாக இருக்கலாமே தவிர, ஜாலியாக இருக்க முடியாது. ஆனால், எனக்கு அன்றைக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. என்றைக்குமில்லாத திருநாளாக வினோத் படிக்க வேண்டியிருப்பதாகச் சொல்ல, வினய் தனக்குத் திருப்போரூரில் கிரிக்கெட் மேட்ச் இருப்பதாகச் சொல்லிவிட்டு அதிகாலையே கிளம்பிப் போய்விட்டிருந்தான். நான் மிகவும் ஆசைப்பட்டேன் என்பதால், அப்பா தனது நண்பரான படூர் வாத்தியாருக்கு போன் செய்து விவரம் சொல்லியிருக்கிறார்.

‘அதுக்கென்ன, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுடுங்க. நான் பாத்துக்கறேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

எனக்கு அதிலேயே திருவிழா மீதிருந்த விருப்பம் சற்று மட்டுப்பட்டது. படூர் வாத்தியாரின் மகன் என்னோடு படிக்கிறவன்தான். ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். யாரும் தெரியாதவர்கள் இல்லை. அறிமுகமில்லாத முகங்களில்லை. ஆனாலும் அவர் வாத்தியார்.

‘அதெல்லாம் பரவால்ல. ஸ்கூல்லதான் அவர் வாத்தியார். ஆத்துல அன்பாத்தான் இருப்பார். நீ அப்பாவோட கெளம்பு’ என்று அம்மா அனுப்பிவைத்தாள்.

கேளம்பாக்கம், கோவளம், புதுப்பாக்கம், தையூர், திருப்போரூர், நாவலூர், சோழிங்கநல்லூரில் இருந்தெல்லாம் மக்கள் மொத்த மொத்தமாக வந்து சேர்ந்துகொண்டே இருந்தார்கள். படூர் சாலைகளெங்கும் வெறும் உடல்களாக நின்று நகர்ந்துகொண்டிருந்தன. பெரியவர்கள் அவரவர் குழந்தைகளைத் தோளில் ஏற்றி உட்காரவைத்துக்கொண்டு நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். பெண்கள் ஆளுக்கொரு கூடைப் பையில் முருங்கைக்காய்கள், மஞ்சள் கிழங்கு, கொழுக்கட்டைகளை எடுத்துக்கொண்டு, சத்தம் போட்டுப் பேசியபடியே போனார்கள். எங்கோ யார் யாரோ மொத்தமாக இலை பீப்பீ ஊதினார்கள். எனக்கு அது மிகவும் பிடிக்கும். யாராவது செய்து கொடுத்தால் நாளெல்லாம் வைத்துக்கொண்டு ஊதுவேன். கேசவன் மாமாவுக்கு எட்டும், குளிர்ந்த தினத்தில் கோயில் சுவரில் வளர்ந்திருக்கும் ஆல இலைகளை மடித்து பீப்பீ செய்து வந்து தருவார். படூர் வாத்தியாரிடம் பீப்பீ வேண்டும் என்று எப்படிக் கேட்பது?

நான் வாத்தியாரின் மகன் மூர்த்தியிடம் என் விருப்பத்தைச் சொன்னேன். அவனுக்கு பீப்பீயில் விருப்பம் இல்லை. அவன் திருவிழாக் கடைகளின் பக்கம் பார்வையைச் செலுத்தியபடி வந்தான். ஹரிக்கேன் விளக்கு வைத்த தள்ளுவண்டிகளில் விதவிதமான நிறங்களில் பலகாரங்களை மலை மலையாக அடுக்கி விற்றுக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே எல்லாம் அழகாக இருந்தது. பலூன் கடைகள், பொம்மைக் கடைகள், பாத்திரக் கடைகள், துணிக் கடைகள் என்று வீதிகளின் ஓரங்களெங்கும் தரையில் பச்சை, நீல நிற பாலிதீன் கோணிகளை விரித்துக் கொட்டிக் குவித்திருந்தது. எல்லாக் கடைகளின் முன்னும் ஆட்கள் குவிந்திருந்தார்கள். எங்கும் குரல்களால் நிறைந்திருந்தது.

அன்றைக்கு மதியம் முதல் இருட்டி இரண்டு மணி நேரமாகும்வரை படூர் முழுவதையும் சுற்றித் தீர்த்திருந்தேன். கால்கள் வலியில் இழுத்துக்கொண்டன. கால் வலி என்று லேசாக முனகிவிட்டுப் படுத்தால் போதும். தூக்கம் நெருங்கும் நேரத்தில், அம்மா வந்து அருகே அமர்ந்து பாதங்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ஒத்தடம் கொடுப்பதுபோல அமுக்கிவிடுவாள். வீட்டுக்குப் போய்விடலாமா என்று ஒருகணம் நினைத்தேன். மயானத்துக்கு மட்டும் போகவேண்டாம் என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இத்தனை நூறு பேர் போகவிருக்கிற ஓரிடத்துக்கு நான் மட்டும் போகாதிருக்க என்ன அவசியம்?

பேய்களும் பிசாசுகளும் உலவும் இடமானாலும், இன்றைய ஒரு நாள் அவை யாரையும் ஒன்றும் செய்யாது என்று வாத்தியாரின் மனைவி சொன்னாள். சாம்பலும் மணலும் கலந்து செய்யப்படுகிற அங்காளியின் பேருருவம், மயானத்தின் நடுவே கிடத்தப்பட்டிருக்கும். அதன் கண் திறக்கும் வைபவம்தான் உச்சம். எங்கெங்கும் மக்கள் கரகமெடுத்து ஆடிக்கொண்டிருப்பார்கள். தையூர் பண்ணையின் தரைக் கிணற்றில் குதித்துக் குளித்துவிட்டு பூசாரி ஈரம் சொட்டச் சொட்ட எழுந்து வருவார். அங்கிருந்து அவரோடுகூட ஆயிரமாயிரம் பேர் படூர் வரை ஊர்வலமாக வருவார்கள். ஒரு மாறுதலுக்கு பூசாரி அன்றைக்குப் புடைவை கட்டியிருப்பார். முகமெங்கும் சாந்தும் குங்குமமும் பூசியிருப்பார். அவரோடு வருபவர்களுள் யாராவது ஒருவர், வாயில் ஒரு ஆட்டின் பச்சை ஈரலைக் கடித்துக் கவ்விக்கொண்டு கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். ஆளாளுக்குக் கையில் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள். வாள்கள். குத்தீட்டிகள். வேல் கம்புகள். ஜல் ஜல்லென்று அதிரும் சலங்கைகளின் சத்தம். எங்கும் ஒலிக்கும் பறையின் பேரரவம்.

எனக்கு அதைக் கேட்கும்போதே, போய்ப் பார்த்தால்தான் என்னவென்று தோன்றியது. மயானத்தில் கொள்ளையடிக்க என்ன இருக்கும் என்ற வினாவொன்று எனக்கு இருந்தது. அதை வாத்தியாரிடம் கேட்கத் தயக்கமாகவும் இருந்தது. எங்கெங்கிருந்தோ வந்து குவியும் சனம், நூற்றுக்கணக்கான சேவல்களை ஒரே சமயத்தில் பலியிடுவதைப் பார்ப்பதே பெரும் புண்ணியம் என்றாள் வாத்தியாரின் மனைவி. எனக்குக் குலை நடுங்கியது. நூறு சேவல்கள்! அத்தனை ரத்தமும் மயானம் முழுதும் பொங்கிப் பரவி வழிந்தோடுவதுபோலக் கற்பனை செய்து பார்த்தேன். உடல் சிலிர்த்தது. ஒருவேளை இதற்காகத்தான் என்னை அந்தப் பக்கம் போகவேண்டாம் என்று அம்மா சொன்னாளோ என்றும் தோன்றியது.

‘அதெல்லாம் போனா தப்பில்லைடா’ என்று மூர்த்தி சொன்னான். ‘நீ வரலைன்னா வீட்லயே இரு விமல். நாங்க வெளிய கதவ பூட்டிக்கிட்டு போயிடுறோம்’ என்று வாத்தியார் சொன்னார்.

‘இல்லை சார். எனக்கு ஆசையாத்தான் இருக்கு. ஆனா அம்மா திட்டுவாளோன்னு பயம்மா இருக்கு.’

அவர் என்ன நினைத்தாரோ. ‘சரி, நான் உங்கப்பாட்ட பேசிக்கறேன். நீயும் வா’ என்று சொன்னார்.

அன்று நள்ளிரவுக்குப் பிறகு நாங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வீதியில் இறங்கினோம். பகலேபோல எங்கும் வெளிச்சம் பரவி நிரம்பியிருந்தது. காணுமிடம் எல்லாம் மக்கள் கூட்டம். மூலைக்கு மூலை கூம்பு ஸ்பீக்கர் கட்டி, அம்மன் பாடல்கள் ஒலிக்கவிட்டிருந்தார்கள். வாண வேடிக்கைகளும் வேட்டுச் சத்தமும் ஊரை நாலாபுறமும் அரணாகச் சூழ்ந்திருப்பதாகத் தோன்றியது. கும்பலோடு கும்பலாக நாங்கள் மயானத்தை நோக்கித் தள்ளிச் செல்லப்பட்டோம்.

அந்தக் காட்சியை நான் வாழ்நாளில் மறக்கமாட்டேன். வாயில் ஆட்டு ஈரலைக் கடித்துக்கொண்டு ஆவேசமாகத் தீச்சட்டியுடன் முன்னால் ஓடி வந்தவனுக்கு முப்பது முப்பத்து ஐந்து வயது இருக்கும். வருடக்கணக்கில் முடி வெட்டாமல் தலை காடுபோலக் கிடந்தது. அடர்ந்த தாடியும் சிவந்த கண்களும் திரண்டு முட்டிக்கொண்டு நின்ற தோள்களும் எலும்பு புடைத்த மார்புமாக அவன் ஆவேசமாக எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் புவியைப் பிளந்துவிடும்போல் அச்சமூட்டியது. பக்கவாட்டில் முட்டித்தள்ளிய கூட்டத்தை அவன் பொருட்படுத்தவில்லை. குறுக்கே யார் வந்தாலும் உதைத்துத் தள்ளிக்கொண்டே ஓடினான். உண்மையில், அத்தனை பெரும் கூட்டத்தை மயானத்தை நோக்கி உந்தித் தள்ளிக்கொண்டுபோனதே அவந்தான் என்று தோன்றியது. கிளம்பியதுதான் தெரியும். எப்போது, எப்படி அங்கே போய்ச் சேர்ந்தேன் என்றே புரியவில்லை.

பூசாரியும் ஈரல் கடித்தவனும் மயானத்தை வந்தடைந்தபோது கூச்சலும் பறையொலியும் உச்சத்தைத் தொட்டன. இருளில் ஒருவரையொருவர் முகம் பார்க்கக்கூட முடியவில்லை. ஆங்காங்கே பொருத்தியிருந்த விளக்குகளின் வெளிச்சம், கவிந்திருந்த இருளின் அடர்த்தியைத்தான் பெரிதுபடுத்திக் காட்டியதே தவிர, அடுத்தவர் முகம் பார்க்கக்கூட உதவவில்லை.

நான் சற்று பயந்திருந்தேன். என் வாழ்நாளில் அத்தனை பெரும் சத்தத்தை நான் கேட்டதில்லை. ஒரு பெரும் கூட்டமே ஆவேசம் கொண்டு முட்டி மோதும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு சென்றிருக்க மாட்டேன். வாத்தியாரின் வேட்டியை என்ன ஆனாலும் விடக் கூடாது என்று இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று வானில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. உடனே பெண்கள் அத்தனை பேரும் எடுத்து வந்திருந்த முருங்கைக்காய்களையும் மஞ்சள் கிழங்குகளையும் கொழுக்கட்டைகளையும் வானை நோக்கி வீசத் தொடங்கினார்கள். கணப்பொழுதில் மயானம் முழுதும் நிறைந்து நின்றிருந்த அத்தனை பேர் மீதும் முருங்கைக்காய்கள் விழத் தொடங்கின. ஒரு கூட்டம் அதைப் பொறுக்கக் குனிய, பின்னால் வந்துகொண்டிருந்தவர்கள் அவர்களை நெக்கித் தள்ளினார்கள். நெரிசலில் மிதிபட்டுப் பலபேர் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்ட ஆரம்பித்தார்கள்.

பூசாரி உக்கிரமாக சாமியாடிக்கொண்டிருந்தார். உடுக்கைச் சத்தமும் சேகண்டி ஒலியும் செவிகளைக் கிழித்தன. விழாவின் உச்சமாக, அவர் தரையில் படர்ந்து கிடந்த பிரம்மாண்டமான சாம்பல் அங்காளியின் மீது விழுந்து புரண்டு எழுந்தபோது மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது. அவர் உடலெங்கும் சாம்பல் பூசி பார்க்கவே பயங்கரமாக இருந்தார். அப்படியே பிடிப்பிடியாக சாம்பலை அள்ளி அள்ளி சூழ்ந்திருந்த மக்கள் மீது வீசினார். மூலைக்கு மூலை சேவல்களின் மரண ஓலம். எனக்குத் தெரியாது. படூர் வாத்தியாரும் ஒரு சேவலை பலி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் போலிருக்கிறது. அதற்காக அவர் ஒரு ஆளை நியமித்திருந்தார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த அந்த நபர், ‘சார் வாங்க’ என்று அவர் கையைப் பிடித்து கும்பலுக்கு நடுவே இழுத்துக்கொண்டு போக, அவர் வேட்டியைப் பிடித்துக்கொண்டிருந்த நானும் அவரோடு ஒட்டிக்கொண்டு பின்னால் போனேன். வாத்தியாரின் மனைவி வருகிறாளா, மூர்த்தி என் பின்னால் வந்தானா என்றுகூடத் தெரியாது. உலகமே சேர்ந்து என்னைச் செலுத்திக்கொண்டிருந்தது போலத்தான் உணர்ந்தேன்.

அந்த நபர் வாத்தியாரை ஒரு மரத்தடிக்கு இழுத்துக்கொண்டு போனான். மயானத்தின் தெற்கு மூலையில் இருந்த மரம் அது. மொத்தப் பரப்பில் அந்த இடம்தான் சற்று மேடாகவும் இருந்தது. அங்கிருந்து பார்த்தபோது, அங்காளியின் சாம்பல் சிலையுருவின் மீது பூசாரி உருண்டு புரளும் காட்சி சற்றுத் தெளிவாகத் தெரிந்தது. கணப்பொழுது நான் பார்வையைத் திருப்பியபோது, வாத்தியார் தனது நேர்த்திக்கடனாக சேவலைச் சீவி பலி கொடுத்துக்கொண்டிருந்தார்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் அவர் தறி ஆசிரியராக இருந்தவர். கைத்தொழில் பயிற்றுநர். அமைதியே வடிவான மனிதர் என்று பெயரெடுத்தவர். எப்போதாவது வரலாறு, புவியியல் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதிருந்தால், அவரைத்தான் தலைமை ஆசிரியர் அந்த வகுப்புகளுக்கு அனுப்பிவைப்பார். ‘டேய் படிங்கடா’ என்று மட்டும் சொல்லிவிட்டு, ஒரு காகிதத்தைக் கிழித்துச் சுருட்டி, காது குடைய ஆரம்பித்துவிடுவார். வகுப்பு முடியும் நேரத்தில் மட்டும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கைத்தொழில் கற்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து சில வார்த்தைகள் சொல்லுவார். அவரறிந்த வரலாறும் புவியியலும் அதுவாகவே இருந்தது. ஏனோ அந்த சங்கதி தலைமை ஆசிரியருக்குத் தெரியாமலே இருந்தது. நானறிந்து, பிரம்பைத் தொடாத ஒரே ஆசிரியர் எங்கள் பள்ளியில் அவர்தான். ஆனால் எத்தனை உக்கிரமாகச் சேவலின் சிரத்தைச் சீவித் தள்ளிவிட்டார்! வெட்டிய பின்பும் அந்தச் சேவலின் உடல் துடித்துக்கொண்டே இருந்தது. அரை இருளில் அந்தக் காட்சி அளித்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை.

திகைத்துப்போய் நான் வாத்தியாரை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தில் அச்சத்தின் துளிகள் தெறித்திருக்க வேண்டும்.

‘என்ன?’ என்றார் வாத்தியார்.

உடனே நான் ஒன்றுமில்லை என்று தலையசைத்தேன். அந்த இடத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று ஏனோ தோன்றிவிட்டது. உடம்பெங்கும் சாம்பல் பூசி ஆடிக்கொண்டிருந்த பூசாரியின் ஆட்டத்தை விடவும், பக்தியின் உச்சத்தில், கொண்டாட்டத்தின் உச்சத்தில் தம்மை மறந்து குரலெழுப்பிக்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தை விடவும் அந்த ஒரு சிறு கழுத்துச் சீவலின் உக்கிரம் என்னை வெகுவாகத் தாக்கியது.

நான் மெல்ல வாத்தியாரின் வேட்டியைப் பிடித்திருந்த கையை விலக்கிக்கொண்டேன். அவர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தபோது, அவரறியாமல் நாலடி நகர்ந்து சென்று அந்த மரத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டேன்.

அப்போதுதான் மரத்தின் மீதிருந்து ஓர் உருவம் கீழே குதித்தது. வரும்போதே மரக்கிளைகளில் பல பேர் ஏறி நின்றிருந்ததை நான் பார்த்திருந்தேன். ஆனால் முகங்களைக் கவனிக்கவில்லை. இப்போது எதிர்பாராவிதமாக என் முன்னால் குதித்தவனைக் கண்டபோது, எனக்குப் பேச்சற்றுப்போனது. அரையில் ஒரு கோவணம் மட்டும் உடுத்தி, முற்றுமுழுதாகச் சாம்பல் பூசிக்கொண்டு இருந்தான். முகமெல்லாம் சாம்பல் புழுதி. அது வினய் என்பதை நான் உணரவே எனக்குச் சில விநாடிகள் பிடித்தன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com