24. ஐயாவுக்கு ஒரு கடிதம்

நபியோடகூட பத்ரு போர்ல கலந்துக்கிட்டவரு தமீம் அன்சாரி. எத்தனையோ வருசம் முன்ன இந்தியாவுக்கு வந்து, இங்க கோவளத்துல இறந்துட்டாரு. இறை நேசர்னு சொல்லுவோம்

சாம்பல் பூத்த எரிந்த கட்டை போலிருந்தது அவர் முகம். அவர் அணிந்திருந்த ஜிப்பாவும் தலைக்குச் சுற்றியிருந்த துணியும்கூடத் தமது நிறமிழந்து சாம்பல் வண்ணத்திலேயே காட்சியளித்தன. வார் அறுந்த செருப்புக்குப் பின் குத்தியிருந்தார். பெரிய பெரிய நீலக் கட்டங்கள் போட்ட அழுக்கு லுங்கியை தேவைக்கு அதிகமாக இடுப்பில் மடித்துவிடப் போக, அவரது வலது முழங்காலில் ஒரு காயம் பட்டு ஆறிக்கொண்டிருந்தது தெரிந்தது. பொதுவாக, அந்த வயதில் கோவளம் தர்கா அருகே நான் பார்த்த அனைத்து முஸ்லிம் பக்கிரிகளும், மெல்லிய ஜெமினி கணேசன் மீசையும் அடர்த்தியான அம்ஜத்கான் தாடியும் வைத்திருப்பார்கள். எத்தனை பெரிய கூட்டத்திலும் அது அவர்களைத் தனியே தூக்கிக் காட்டும். ஆனால் அந்தப் பக்கிரி அந்த மெல்லிசு மீசைகூட வைத்திருக்கவில்லை. தாடி மட்டும்தான். தினமும் பொழுது விடிந்ததும் மீசையை மட்டும் மறக்காமல் ஷேவ் செய்துவிட்டுத்தான் பல் துலக்கப் போவார் என்று தோன்றியது.

கேளம்பாக்கத்தில் எங்கள் பள்ளிக்கூடத்தை அடுத்து ஒரு கீரைத் தோட்டம் இருந்தது. பெரிய தோட்டம். எப்படியும் இரண்டு, இரண்டரை ஏக்கரா பரப்பளவுக்கு இருக்கும். எல்லாக் காலங்களிலும் அந்தத் தோட்டத்தில் ஏதேனும் நாலைந்து கீரைகள் பயிரிடப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த மண்ணுக்கு அப்படியென்ன மகத்துவமோ. எந்தக் கீரை போட்டாலும் நான்கு நாள்களில் பளிச்சென்று முளைத்து நிற்கும். பெரியதொரு தரைக்கிணற்றில் இருந்து ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சுவார்கள். பாத்திகளெங்கும் தண்ணீர் தரதரவென்று வழிந்தோடுவது பார்க்க ரசமாக இருக்கும். சுற்றிலும் தென்னை மரங்கள் அரண்போலக் காத்து நிற்கும் அத்தனை பெரிய தோட்டத்தின் நட்ட நடுவில், இரண்டடிக்கு இருபதடி ஓர் இடைவெளி இருக்கும். நானும் எத்தனையோ முறை தோட்டத்துக்குப் போகும்போதெல்லாம் அங்கு வேலை பார்க்கிறவர்களிடம் அந்த இடைவெளி எதற்கு என்று கேட்டிருக்கிறேன். யாரும் சரியான பதிலைச் சொன்னதில்லை. ‘அது மொதலாளி வெக்க சொன்ன இடம்’ என்பார்கள். எதற்கு என்றால், தெரியாது. முதலாளி அங்கே கயிற்றுக் கட்டில் போட்டுப் படுப்பாரா என்றால் அதுவும் கிடையாது. தோட்டத் தொழிலாளிகள் அந்த இடத்தை வேறு ஏதேனும் காரியத்துக்குப் பயன்படுத்துவார்களா என்றால் தெரியாது. ஆனாலும் கீரை வனத்தின் குறுக்கே ஒரு விபூதிப் பட்டை போன்ற வெட்ட வெளி.

அந்தப் பக்கிரியின் தாடி நிறைந்த, மீசை மழித்த முகத்தைப் பார்த்தபோது எனக்கு அந்தக் கீரைத் தோட்டம்தான் நினைவுக்கு வந்தது. சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டார் என்று தோன்றியதால், அதை அவரிடமும் சொன்னேன். அவர் சிரித்தார். தாடியைத் தடவியபடியே, ‘சரியாத்தான் சொல்லுறே. இது அந்த மாதிரிதான்’ என்று சொன்னார்.

‘நீங்க மீசையும் வெச்சிண்டேள்னா நன்னாருக்கும்.’

‘அப்படியா?’ என்று கேட்டார். என்ன காரணததாலோ, பேசும்போது எனதிரு கரங்களையும் இழுத்து இழுத்து வைத்துக்கொண்டு உருவி விட்டுக்கொண்டே இருந்தார். பிறகு என்னை இன்னும் நன்றாக முன்னால் வந்து அமரச் சொல்லி, தோள் பட்டைகளைப் பிடித்து அதேபோல் உருவிவிட்டார். என் பாதங்களைக் காட்டச் சொல்லி சிறிது நேரம் அவற்றை உற்றுப் பார்த்தார். காது மடிப்பை வளைத்துப் பார்த்தார். இடது கையால் என் கழுத்தைப் பிடித்து முன்னால் இழுத்துக் குனியவைத்து தலை முடியை வலக்கரத்தால் கலைத்து சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தார்.

‘எனக்கு உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லே. மந்திரிக்க வேணாம்’ என்று சொன்னேன். மீண்டும் சிரித்தார்.

‘நான் மந்திரிப்பேன்னு உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘ஓ, தெரியுமே. எங்கம்மாவோட நானே வந்திருக்கேனே.’

‘அப்படியா? உங்கம்மா இன்னிக்கு வரலியா?’

‘இல்லை. நான் தனியாத்தான் வந்தேன்.’

‘நேத்தும் தனியாத்தான் வந்த.’

‘ஆமா. மனசு சரியில்லே. அதான் பீச்சுக்கு வந்தேன்.’

‘திருவிடந்தைலயும் பீச்சு இருக்குதே.’

‘தெரியல. என்னமோ இங்க வந்தேன்.’

‘வர வெச்சிட்டான்போல.’

‘யாரு?’

அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. தர்காவை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார்.

‘உங்க பெருமாள சொல்றேளா?’

‘இங்க உள்ளவரு சாமி இல்லே. தமீம் அன்சாரின்னு ஒரு மகான். பெரிய பக்தர்.’

‘அப்ப இது கோயில் இல்லியா உங்களுக்கு?’

‘இல்ல. இது தர்கா. மசூதிதான் கோயில் மாதிரி.’

‘ஓ. சமாதியா இது?’

‘ஆமா. நபியோடகூட பத்ரு போர்ல கலந்துக்கிட்டவரு தமீம் அன்சாரி. எத்தனையோ வருசம் முன்ன இந்தியாவுக்கு வந்து, இங்க கோவளத்துல இறந்துட்டாரு. இறை நேசர்னு சொல்லுவோம்.’

‘ராமானுஜர் மாதிரி!’ என்றேன் உற்சாகத்துடன். அவர் சிரித்தார்.

‘ஐயிர் ஊட்டுப் புள்ளையா நீ?’

‘ஐயங்கார்’ என்று சொன்னேன்.

‘ரெண்டும் ஒண்ணுதான். அதவிடு. என்னாண்ட எதுக்கு வந்த?’

‘தெரியல. எங்கம்மாக்கு நீங்க நிறைய தடவை மந்திரிச்சி தாயத்து குடுத்திருக்கேள். நீங்க வியாதிக்கு மட்டும்தான் செய்வீங்களா இல்ல வேற எல்லாத்துக்குமா?’ என்று கேட்டேன்.

‘வேறென்ன வோணும் உனக்கு?’

சொல்லலாமா என்று ஒரு கணம் தயக்கம் ஏற்பட்டது. ஏனோ முதல் நாள் அவரைப் பார்த்துவிட்டுப் போனதில் இருந்தே, அவரைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன். அண்ணா ஓடிப்போனது, வினய் காஞ்சீபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது இரண்டினைக் குறித்தும் அவரிடம் பேசலாம் என்று தோன்றியது. எனக்குத் தென்படாத ஏதேனும் ஒரு உட்குறிப்பை அவர் கண்டறிந்து சொல்ல வாய்ப்பிருப்பதாக நினைத்தேன். இல்லாவிட்டால் ‘பெருமாள் தீர்த்தத்துக்கு மிஞ்சின மருந்தில்லே’ என்று வாய்க்கு வாய் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவே அவரைத் தேடிப்போய் ஏன் சூரணம் வாங்கிவரப் போகிறாள்?

இன்னொரு சம்பவம்கூட நினைவுக்கு வந்தது. மாமாவே இதைச் சொன்னதாக, விஜய் வீட்டில் இருந்த காலத்தில் ஒரு சமயம் என்னிடம் சொல்லியிருக்கிறான்.

கேசவன் மாமாவின் மனைவி காலமாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆன பின்பு, அவருக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டிருக்கிறார். ‘இப்படியே இருக்க முடியாது கேசவா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்’ என்று பலமுறை அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் மாமா அதற்குச் சம்மதிக்கவில்லை. அம்மாவும் தன்னால் முடிந்த விதத்தில் எல்லாம் முயற்சி செய்து பார்த்துவிட்டு, எதுவும் நடக்காதபடியால் அந்தப் பக்கிரியிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தம்பிக்கு இன்னொரு திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? அரைக்கணம்கூட யோசிக்காமல், இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

அம்மா அதிர்ந்து போய்விட்டாள். ஏன் என்று கேட்டதற்கு, எழுந்து போ, அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகும் அம்மாவும் அப்பாவும் எத்தனையோ முறை மாமாவின் இரண்டாம் திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார்கள். அம்மா, கேசவன் மாமாவிடம் சண்டை போட்டு, அழுது ஆர்ப்பாட்டமெல்லாம் செய்து பார்த்திருக்கிறாள். வம்படியாக நாலைந்து இடங்களில் சொல்லிவைத்து ஜாதகங்கள் தருவித்திருக்கிறாள். என்ன முயற்சி செய்தும் மாமாவுக்கு அது நடக்கவில்லை. அவருக்கு தாடி முடி நரைக்க ஆரம்பித்தபோது, வீட்டில் இயல்பாக அந்தப் பேச்சு இல்லாமல் போய்விட்டது.

நான் அந்தப் பக்கிரியிடம் இந்த விஷயத்தை நினைவுகூர்ந்து, ‘அதெப்படி எங்க மாமாவுக்கு ரெண்டாங்கல்யாணம் நடக்காதுனு நீங்க சொன்னேள்? உங்களுக்கு அவரைத் தெரியக்கூடத் தெரியாதே? அம்மாவாவது எப்பவாவது உங்கள வந்து பாப்பா. மாமா கோயில் மடப்பள்ளியிலே வேலை பார்க்கிறவர். அவர் இங்கல்லாம் வரமாட்டாரே’ என்று கேட்டேன்.

‘அப்படியா? நானா சொன்னேன்? நெனப்பில்லப்பா’ என்று அவர் சொன்னார். நான் பலவிதமாக நினைவூட்டியும் அவரால் என் அம்மாவைக்கூட நினைவுகூர முடியவில்லை. அம்மாவோடு நானே வந்து அவரைப் பார்த்திருக்கிறேன் என்றபோதும், என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்றே சொன்னார்.

‘உங்களுக்கு ஞாபக மறதி ஜாஸ்தி போலருக்கு’ என்று சொன்னேன்.

‘இருக்கும், இருக்கும்’ என்று சொன்னார். தன்னருகே வைத்திருந்த ஒரு அழுக்கு மூட்டையைப் பிரித்து அதனுள் இருந்து ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்தார். ஏற்கெனவே அதில் நாலைந்து பிஸ்கட்டுகளை அவர் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தைச் சுருட்டி வைத்திருந்தார். ஒன்றை எடுத்து அவர் கடித்துவிட்டு, இன்னொன்றை என்னிடம் நீட்டி, ‘சாப்பிடு’ என்று சொன்னார்.

நான் தயங்கினேன்.

‘ஒண்ணுஞ்செய்யாது. சாப்டு’ என்று மீண்டும் சொன்னார். நான் அதை வாங்கிக்கொண்டேன்.

‘ஒனக்கு என்கிட்டே என்ன கேக்கணும்?’

‘தெரியல. எங்கண்ணா வீட்டைவிட்டுப் போயிட்டான். இன்னொரு அண்ணாவை, அப்பா காஞ்சீபுரம் மடத்துல கொண்டுபோய் சேர்த்துட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கறதுன்னு புரியல. எனக்கு அழுகையா வருது’ என்று சொன்னேன்.

அவர் சிறிது நேரம் என் வலக்கையைப் பிடித்துக்கொண்டு முணுமுணுவென்று என்னவோ உச்சரித்துக்கொண்டிருந்தார். அதை முடித்துவிட்டு, அதே அழுக்கு மூட்டையை மீண்டும் பிரித்து எதையோ தேடினார். அவர் தேடிய பொருள் அத்தனை எளிதில் அகப்படாதபடியால், மூட்டைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தார். அதில் ஒரு அழுக்கு லுங்கி, கிழிந்த துண்டு ஒன்று, பனைமரம் படம் போட்ட மஞ்சள் நிற டால்டா டப்பா ஒன்று, விபூதிச் சம்புடம் போல மரத்தாலான கிண்ணம் ஒன்று, ஹுக்கா பிடிக்கிற குழாய் ஒன்று, ஒரு புகையிலைப் பொட்டலம், அரபி மொழிப் புத்தகங்கள் இரண்டு, ஒரு பிடி சில்லறைக் காசுகள், ஒரு சந்தன மாலை என்று என்னென்னவோ வெளியே வந்தன. கடைசியாக அவர் தேடியது அனைத்துக்கும் அடியில் இருந்தது.

அது ஒரு அமிர்தாஞ்சன் தைல டப்பா. அடக்கடவுளே. எனக்கொன்றும் தலைவலி இல்லையே. இவர் இதையா இத்தனை நேரம் தேடிக்கொண்டிருந்தார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அவர் அந்த டப்பாவின் மூடியைத் திறந்தார். அதில் தைலம் இல்லை. மாறாகக் கொஞ்சம் மண் இருந்தது. எங்கிருந்து எடுத்த மண் என்று எனக்குத் தெரியவில்லை. அதை வைத்து அவர் என்ன செய்வார் என்றும் புரியவில்லை. அவர் அந்த மண் டப்பாவைத் திறந்ததும் ஒருதரம் முகர்ந்து பார்த்தார். பிறகு அதிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணை எடுத்து, ‘வாயத் தொற?’ என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.

எனக்குப் புரியவில்லை. இந்த மனிதர் நான் சொன்ன எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றிவிட்டது. எனவே மீண்டும் சொன்னேன், ‘எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை.’

‘பரவால்ல வாயத் தொற தம்பி’ என்று சொன்னார்.

சிறிது நடுக்கத்துடனே வாயைத் திறந்து காட்டினேன். நான் எதிர்பார்த்ததுபோல, அவர் அந்த மண்ணை என் வாயில் போடவில்லை. போட்டால் துப்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, என் நாக்கில் அந்த மண்ணை வைத்து ஒரு இழு இழுத்தார். பிறகு அவரே அதை வழித்து வெளியே போட்டுவிட்டு லுங்கியில் விரலைத் துடைத்துக்கொண்டார்.

‘என்ன செஞ்சிங்க இப்போ?’ என்று கேட்டேன். சிரித்தார்.

‘ஒண்ணுமில்ல. நீ வீட்டுக்குப் போ’ என்று சொன்னார்.

‘இல்லே. எனக்குத் தெரியணும். நீங்க என்ன செஞ்சிங்க?’

‘அவசியம் தெரியணுமா?’

‘கண்டிப்பா தெரியணும்.’

‘அப்ப எனக்கு பத்து காசு குடு’ என்று சொன்னார். நான் உடனே என் நிஜார் பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்தேன். என்னிடம் பத்து காசு இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வீட்டுக்குப் போய் எடுத்துவந்து கொடுப்பதென்றால், இன்னும் ஒரு மணி நேரம் ஓடிவிடும். எனவே, ‘இப்ப நீங்க சொல்லுங்கோ. நான் நாளைக்கு எடுத்துண்டு வந்து குடுக்கறேன். இப்ப என்கிட்ட காசு இல்லே’ என்று சொன்னேன்.

‘அப்படியா? சரி, அப்ப ஒண்ணு செய். நாளைக்குப் பத்து காசு கொண்டுவந்து குடுத்துட்டுக் கேளு. சொல்றேன்.’

ஏன் அவர் அப்படி அடம் பிடித்தார் என்று எனக்கு இன்றும் புரியவில்லை. ஆனால் நான் பலமுறை மன்றாடியும் அவர் தாம் செய்ததன் காரணத்தை எனக்குச் சொல்லவில்லை. வேறு வழியின்றி நான் மறுநாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும்போது, நேரே வீட்டுக்குப் போகாமல் கோவளம் தர்காவுக்குப் போய் அவரிடம் பத்து காசைக் கொடுத்து ‘இப்ப சொல்லுங்கோ’ என்று சொன்னேன்.

அப்போதுதான் அவர் சொன்னார், ‘நீயும் போகத்தான் போற. என்ன, அதை ஒரு ரெண்டு வருசம் தள்ளிப் போடச் சொல்லி ஐயாவுக்கு லெட்டர் எழுதினேன்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com