25. பகவத் சங்கல்பம்

மாமாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாடவீதி நான்கிலும் ஓடி ஓடி ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறி வினய் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்தார். அவனது வருகை பிரம்மோற்சவத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.

வினய் காஞ்சீபுரத்துக்குப் போய்ச் சேர்ந்து ஆறு மாதங்கள் இருக்கும். இடையில் இரண்டொரு முறை அப்பாவும், மாதம் ஒரு முறை மாமாவும் அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். ஒரே ஒரு சமயம், அப்பா போகும்போது அம்மாவை உடன் அழைத்துப் போனார். அம்மா அப்போது அவன் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மடத்துக்குப் போகவில்லை. வரதராஜர் கோயில் குளக்கரையில் வைத்து அவனைப் பார்த்ததாகச் சொன்னாள்.

‘என்னால நம்பவே முடியலடா விமல். உங்கண்ணன் எப்படி இருக்கான் தெரியுமா இப்போ? கட்டுக்குடுமியும் திருமண்ணுமா, பாத்தா என் கண்ணே பட்டுடும்போல இருந்தது’ என்று சொன்னாள்.

குளக்கரையில் வைத்து வினய் அம்மாவுக்கு முதலாயிரத்தில் நூறு பாசுரங்கள் சொல்லிக் காட்டியிருக்கிறான். அதோடு நிறுத்தாமல், அவனே அம்மாவைப் பெருமாள் சன்னிதிக்கும் அழைத்துச் சென்றிருக்கிறான்.

‘நான் சேவிச்சுட்டேண்டா‘ என்று அம்மா சொன்னபோது, ‘பரவால்ல வாம்மா’ என்று சொல்லி வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே போயிருக்கிறான்.

பட்டாச்சாரியார் அவனைக் கண்டதும், ‘வாடா, இவா உங்கம்மாவா? ஏன் மாமி இத முன்னாடியே சொல்லமாட்டேளோ? இருங்கோ’ என்று சொல்லி மீண்டும் ஒருமுறை அம்மாவுக்காகக் கற்பூர ஆரத்தி காட்டி, தீர்த்தம் சடாரியெல்லாம் அளித்து, தாயார் சன்னிதியில் ஸ்பெஷலாக ஒரு அர்ச்சனை வேறு செய்து அனுப்பியிருக்கிறார்.

‘இனிமே எனக்கு அவனைப் பத்திக் கவலையே இல்லேடா விமல். என்னமோ கெட்ட நேரம், அப்போ அவனை அப்படிப் படுத்தி எடுத்திருக்கு. குழந்தை இப்போ ஞானவானா ஆயிண்டிருக்கான்’ என்று சொன்னாள்.

வினய் என்னவானாலும் எனக்கு அது குறித்துக் கவலை இல்லை. ஆனால், அம்மா மகிழ்ச்சி கொள்ளும்படியாக அவள் எதிரே அவன் நடந்துகொண்டிருக்கிறான் என்பதை அறிந்தபோது சற்று நிம்மதியாக இருந்தது.

பிறகு ஒருநாள் அப்பா, வீட்டில் எல்லோரையுமே அழைத்துக்கொண்டு காஞ்சீபுரத்துக்குப் போனார். மடத்தில் நானும் வினோத்தும் அவனைப் பார்த்தபோது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தான். நாங்கள் உள்ளே போனபோது, மடத்துக்கு மளிகை சாமான்கள் வந்து இறங்கியிருந்தன. கடைக்காரப் பையன் பெரிய பெரிய மூட்டைகளில் இருந்து ஒவ்வொரு பொட்டலமாக எடுத்து எடுத்துக் கீழே வைக்க, வினய் கையில் லிஸ்ட் வைத்துக்கொண்டு படித்து சரி பார்த்துக்கொண்டிருந்தான்.

‘வெல்லம் ரெண்டு கிலோ போட்டிருந்தது வரலே. பச்சைக் கல்ப்பூரம் வரலே. விளக்குத் திரி வரலே. சமித்து மூட்டை இளைச்சாப்ல இருக்கே. எத்தன கட்டு குடுத்தனுப்ச்சார் முதலியார்வாள்?’ என்று அவன் கேட்டபோது, கடைப்பையன் திருதிருவென்று விழித்தான்.

அம்மாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. ‘அவன் வெறுமே சந்தை சொல்லக் கத்துக்கலே. வாழக் கத்துண்டிருக்காண்டா’ என்று கேசவன் மாமா சொன்னார். ‘பிரமாதம்டா. பிரமாதம்டா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அவன் முதுகில் தட்டிக்கொண்டே இருந்தார். வினய் எங்களுக்கு அவனது நண்பர்களை அறிமுகப்படுத்திவைத்தான். மடத்தின் நிர்வாகி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்தான். உபாத்தியாயரிடம் சென்றபோது சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, எழுந்து அபிவாதயே சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் ‘இவா எங்கம்மா’ என்று ஆரம்பித்தான்.

அப்பாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. அங்கிருந்த அத்தனைப் பேரிடமும் திரும்பத் திரும்ப நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. வினய் கெட்டுப் போகாதிருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் அவர் அவனைப் பாடசாலையில் கொண்டுபோய்ப் போட்டார். அவன் ஒன்றும் கற்காமல், எதையும் அறியாமல் வெறுமனே எட்டு வருடங்கள் கழித்துத் திரும்பி வந்திருந்தாலும், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒரு வருடத்துக்கும் குறுகிய காலத்துக்குள் ஒருவன் இத்தனைப் பொறுப்பும் திறமையும் ஞானமும் பெற்றவனாகிவிட முடியுமா! எப்படி சாத்தியம்?

மடத்தில் சந்தை சொல்லிக்கொடுக்கும் அந்த உபாத்தியாயர் சொன்னார், ‘இதெல்லாம் பகவத் சங்கல்ப்பம். சேரவேண்டியது எப்படியும் சேர்ந்துடும். கூடாதுன்னா இழுத்து வெச்சிக் கட்டினாலும் அறுத்துண்டு ஓடிடும்.’

ஆயிரத்தில் ஒரு சொல் அது. என்னால் அதை மறக்கவே முடியாது.

வினய் காஞ்சீபுரம் பாடசாலைக்குப் போய்ச் சேர்ந்து இரண்டரை வருடங்கள் ஆகியிருந்தன. திருவிடந்தை கோயிலில் பிரம்மோத்சவத்துக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. கோயிலெங்கும் சுவர்களிலும் தூண்களிலும் இருந்த பழுதுகள் செப்பனிடப்பட்டு சுண்ணாம்பும் காவியும் பூசினார்கள். பந்தல் போட்டு பத்து நாள்களுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கமிட்டி கூடி அறிவித்தார்கள். கேசவன் மாமா அந்நாள்களில் வீட்டுக்கே வரவில்லை. கோயிலே கதியென்று கிடந்தார். தினசரி வீதி உலா, கதாகாலட்சேபம், பாராயணம் என்று ஊரே அமர்க்களப்பட ஆரம்பித்தது. எங்கள் வீட்டில் சமைப்பதே நின்றுபோனது. காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கோயில் பிரசாதமே உணவாகிப் போனது. அம்மா நினைத்துக்கொண்டால், கோயிலுக்குப் போய் உட்கார்ந்துவிடுவாள். வேலைக்குப் போகிற நேரம் தவிர, மிச்ச நேரமெல்லாம் அப்பாவும் கோயிலிலேயேதான் இருந்தார். எனக்கும் வினோத்துக்கும் வீட்டில் கேள்வி கேட்க ஆளில்லாமல் போனது. நாங்கள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றித் திரிந்தோம். நண்பர்களோடு விளையாடினோம். ஆங்காங்கே மோர்ப் பந்தல்களில் தாகம் தணித்துக்கொண்டு இரவு பகலாக ஊரைச் சுற்றி வந்தோம்.

உற்சவம் தொடங்குவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னால் அப்பா, வினய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பத்து நாள் உற்சவத்தில் ஓரிரு நாள்களுக்காவது அவன் ஊருக்கு வந்துபோக முடிந்தால் நன்றாக இருக்கும் என்று அதில் சொல்லியிருந்தார். மறுநாளே வினய் கோயில் ஆபீஸுக்கு போன் செய்து, மாமாவைக் கூப்பிட்டுப் பேசினான். கடைசி மூன்று நாள் வருகிறேன். தொடர்ச்சியாக ஒருவாரம் ஊரில் இருந்துவிட்டுப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறான்.

மாமாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அங்கிருந்தே அந்தச் சேதியைக் கத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து அறிவித்தார்.

‘அத்திம்பேர், அவன் வரான். கடேசி மூணு நாள் உற்சவத்துக்கு அவன் இங்கதான் இருக்கப் போறான்!’

எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் குடும்பம் முற்று முழுதான மகிழ்ச்சியைக் கொண்டாடிய ஒரே தருணம் அதுதான். வினய் வருகிறான் என்றதுமே, அப்பா தனது தங்கைகளுக்கெல்லாம் கடிதம் எழுதி விவரம் சொல்லிவிட்டார். எல்லோரையும் உற்சவத்துக்கு வரும் சாக்கில், வீட்டுக்கு வந்து தங்கும்படிக் கேட்டிருந்தார்.

அப்பாவுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். எனக்கு அந்த இரண்டு அத்தைகளுமே அதிகப் பரிச்சயம் இல்லாதவர்கள். ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தார். இன்னொருத்தர் சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்தார். அப்பா தலையெடுத்துத்தான் தங்கைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார் என்று அம்மா எங்களிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அடிக்கடி வந்து போகிற உறவாக அவர்கள் எக்காலத்திலும் இருந்ததில்லை. அடிக்கடி என்ன? எனக்குத் தெரிந்து அத்தைகள் என்று இரண்டு பேர் எனக்குண்டே தவிர, சந்தித்ததில்லை. அப்பா எப்போதாவது கோயில் ஆபீசுக்குப் போய் அவர்களுடன் போனில் பேசிவிட்டு வருவார். பேசிய விவரங்களை அம்மாவிடம் சொல்லுவார். அப்போது அவர்கள் பெயர் காதில் விழுவதுடன் சரி.

அந்த முறை, ‘சந்திராவையும் ஜெயஸ்ரீயையும் உற்சவத்துக்கு வரச் சொல்லியிருக்கேன்’ என்று அப்பா வீட்டில் சொன்னபோது, அம்மாவுக்கே சற்று ஆச்சரியமாகப் போய்விட்டது.

‘என்ன சொன்னா?’ என்று கேட்டாள்.

‘முடிஞ்சா வரேன்னா. வினய் ஊர்லேருந்து வரான்னு சொல்லியிருக்கேன். அவன பாக்கறதுக்கு வருவான்னு நினைக்கறேன்’ என்று அப்பா சொன்னார்.

அப்பாவுக்கு அதுதான் ஆசை. தங்கைகள் எதிரே வினய்யை உட்காரவைத்து அரை மணி நேரம் பிரபந்தம் சொல்லவைக்க வேண்டும். ஊர்ப் பையன்கள் அத்தனை பேரும் கோயில் உற்சவத்தில் வெறுமனே பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறபோது, அவன் மட்டும் சந்தையில் சேர்ந்துகொண்டு நாலாயிரம் சேவிப்பான். பெருமாள் வீதி உலா வரும்போது முன்னால் போகும் கோஷ்டியில் அவன் இருப்பான். பரிபாஷைகள், சம்பிரதாய ஒழுக்கங்கள், பெரிய மனித சேர்மானங்கள். தன் மகனை வேறொருவனாக மிக உயரத்தில் நிறுத்தி அவர்களுக்குக் காண்பிக்கும் வேட்கை அவருக்கு இருந்ததை நான் புரிந்துகொண்டேன். ஒன்றும் பிழையில்லை. அவர் பெருமைப்பட்டுக்கொள்ள அவருக்கென்று வேறு யார் இருக்கிறார்கள்?

சொன்னது போலவே ஏழாம் நாள் உற்சவத்தன்று வினய் ஊருக்கு வந்து சேர்ந்தான்.

‘செங்கல்பட்டு வந்து காண்டீபன் பிடிச்சி கேளம்பாக்கத்துல இறங்கி நடந்து வரேன்’ என்று சொன்னான்.

‘இன்ன பஸ்ல வரேன்னு சொல்லமாட்டானோ ஒருத்தன்? நான் சைக்கிள் எடுத்துண்டு வந்திருப்பேனோல்யோ?’ என்று அப்பா சொன்னார். அம்மா அவனை வீட்டு வாசலில் நிற்கவைத்து ஆரத்தி எடுத்து உள்ளே வரச் சொன்னாள். மாமா தாங்கமுடியாத பரவசத்தில் அவனைக் கட்டியணைத்து மாற்றி மாற்றி முத்தமிட்டார்.

‘நீ சாதிச்சுட்டேடா. சரியான நேரத்துலே, சரியான இடம் போய்ச் சேர்ந்தே பாரு! அதுதான் பகவத் கிருபை. அன்னிக்கு அத்திம்பேர் சொல்லச் சொல்லக் கேக்காம ஒன்ன காஞ்சீபுரத்துல கொண்டு தள்றேங்கறாரேன்னு எனக்கு ஆறவேயில்லே. ஆனா இப்ப யோசிச்சிப் பாத்தா, அவர் செஞ்சதுதான் சரின்னு படறது. என்ன இருந்தாலும் பெத்தவர் இல்லியா? அவர் கணக்கு சரியாத்தான் இருக்கும்!’

கேசவன் மாமாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாடவீதி நான்கிலும் ஓடி ஓடி ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறி வினய் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்தார். அவனது வருகை பிரம்மோற்சவத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்று வினோத் சொன்னான்.

எங்களுக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. நாளெல்லாம் வினய் எங்களுக்கு காஞ்சீபுரத்துக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனது சிநேகிதர்கள். உபாத்தியாயர். கற்றுக்கொண்ட பாசுரங்கள். வரதர் கோயிலுக்கு தினசரி போய்விடுவானாம். ‘கோயில்னா அதுதான். பெருமாள்னா அவர் மட்டும்தான்’ என்று வினய் சொன்னான்.

அப்பா ஒரு நிரந்தரப் புன்னகையுடன் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

‘நீங்க தப்பு பண்ணிட்டேள்ப்பா. என்னை அஞ்சு வயசுலயே பாடசாலைல கொண்டு போய்ப் போட்டிருக்கணும். அப்ப அத்தி வரதர் சேவிச்சிருப்பேன். அது முடியாம போயிடுத்து பாருங்கோ’ என்று அவன் சொன்னபோது, ‘என் கண்ணே’ என்று அம்மா அவனை இழுத்து இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

‘அதென்ன அத்தி வரதர்?’ என்று வினோத் கேட்டான்.

‘குளத்துக்கடியிலே ஒரு பெருமாள் இருப்பர். நாப்பது வருஷத்துக்கு ஒரு தடவைதான் வெளியிலே வருவார் அவர்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

‘வெறும் பெருமாள் சிலை இல்லே வினோத். ஒரு சன்னிதி அது. தனிக் கோயில்னே சொல்லலாம். அவர சேவிக்கணும்னா நாப்பது வருஷம் காத்துண்டிருக்கணும். மனுஷாளா பொறந்து ப்ராப்தம்னு ஒண்ணு இருந்தா, இந்த ஜென்மத்துல ரெண்டு தடவை மட்டும்தான் அவர சேவிக்கமுடியும். அப்படி ரெண்டு தடவையும் அத்தி வரதரை சேவிச்சவாளுக்கு அடுத்த ஜென்மா கிடையாது’ என்று வினய் சொன்னான்.

எனக்கு அண்ணாவின் ஞாபகம் வந்துவிட்டது. அல்லிக் குளத்துக்கு அடியில் இன்னமும் தவத்தில் இருக்கும் ரிஷிகளைச் சென்று சந்தித்துவிட்டு வந்தவன் அவன். ஒரு முயற்சி எடுத்தால், வினய்யும் வரதர் கோயில் புஷ்கரணியில் குதித்து நீந்தி உள்ளேபோய் அத்தி வரதரைச் சேவித்துவிட்டு வந்துவிட முடியாதா? இத்தனை ஆசைப்படுகிறவனுக்கு அதைச் செய்வதா கஷ்டம்?

‘அதெல்லாம் தப்பு. அவரச் சேவிக்க அவர் அனுக்ரஹம் வேணும்’ என்று வினய் சொன்னான்.

அவன் திருவிடந்தையில் இருந்த அந்த ஒரு வாரமும் எங்கள் வீடு அமர்க்களப்பட்டது. பிரம்மோற்சவத்தின் கடைசி மூன்று தினங்களும் அவன் அப்பா ஆசைப்படி கோயில் சேவாகாலத்தில் கலந்துகொண்டு கணீரென்று பாசுரங்கள் சொன்னான். கருட சேவையின்போது பெருமாளைத் தூக்கிக்கொண்டு போன கூட்டத்தில் அவனே முதலாவதாக நின்றான். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு என்ன ஓட்டம் ஓடினான்! என்னால் அதையெல்லாம் நம்பவே முடியவில்லை. அப்படியொரு மாற்றம் அவனுக்குள் நிகழும் என்று கற்பனைகூடச் செய்ய முடியவில்லை.

உற்சவமெல்லாம் முடிந்து, விடுமுறையும் முடிந்து அவன் மீண்டும் ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு பஸ் ஏறியபோது, அம்மாவின் முகத்தில் விவரிக்க இயலாத ஒரு பேரமைதியைக் கண்டேன். இனி அவனைக் குறித்துக் கவலைப்படவே வேண்டாம் என்று தோன்றியிருக்கும்.

‘நீ முடிச்சிட்டு வாடா பயலே. நித்ய கல்யாணப் பெருமாளுக்கு இனிமே நித்ய கைங்கர்யம் பண்ணப்போறது நீதான்! நான் அதெல்லாம் ஏற்பாடு பண்ணிடுவேன்’ என்று கேசவன் மாமா சொன்னார். அவன் சந்தோஷமாக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து, அனைவருக்கும் கையாட்டி விடை கொடுத்துவிட்டுத்தான் போனான்.

போய்ச்சேர்ந்து நான்கு நாள்களுக்குப் பிறகு, மடத்தில் இருந்து கோயில் ஆபீசுக்கு போன் செய்து யாரோ மாமாவிடம் பேசியிருக்கிறார்கள். வினய் ஏன் இன்னும் ஊரிலேயே இருக்கிறான், எப்போது காஞ்சீபுரத்துக்கு வந்து சேருவான் என்று கேட்டார்களாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com