27. இடப்பெயர்ச்சி

என்னை எனக்கு மிக நன்றாகத் தெரியும். இந்த உலகில், என்னைக் காட்டிலும் சொகுசு விரும்பி வேறு யாரும் இருக்க முடியாது.

நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. அண்ணா வீட்டை விட்டுச் சென்றபின், அதைப்பற்றிச் சற்றேனும் வாய் திறந்து பேசுவதற்கான துணிவை நான் பெறுவதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அப்போதுகூட அப்பாவிடமோ, அம்மாவிடமோ, மாமாவிடமோ என்னால் அதைப் பேச முடியாது என்று தீர்மானமாகத் தோன்றியது. வினோத்தை நான் தேர்ந்தெடுத்ததன் காரணம், அவன் மட்டும்தான் மிச்சமுள்ள ஒரே நபர். ஒரு வாக்குமூலம்போல, நானறிந்தவற்றை அவனிடம் சொல்லிவிட்டால், ஏதோ ஒரு விதத்தில் என் கடமை முடிந்துவிடும் என்று நினைத்தேன். என் வாழ்வின் ஆகக் குழப்பமான காலகட்டத்தை நான் அப்போது கடந்துகொண்டிருந்தேன். கோவளம் தர்கா அருகே நான் சந்தித்த பக்கிரி, திரும்பத் திரும்ப என் கனவில் வந்துகொண்டே இருந்தார். நான் ஓடிப்போவேன் என்று எப்படி அவர் சொல்கிறார்? அதற்குச் சற்றும் வாய்ப்பில்லை என்றுதான் அன்றைக்கு எனக்குத் தோன்றியது. ஏனென்றால், என்னை எனக்கு மிக நன்றாகத் தெரியும். இந்த உலகில், என்னைக் காட்டிலும் சொகுசு விரும்பி வேறு யாரும் இருக்க முடியாது.

உறவின் சொகுசு. பாசத்தின் சொகுசு. பாதுகாப்பின் சொகுசு. வேளைக்குக் கிடைக்கும் உணவின் சொகுசு. உல்லாசத்தின் சொகுசு. தாவணி போட ஆரம்பித்த பின்பு பத்மா மாமியின் மகள் சித்ரா இன்னமுமே அழகாகியிருக்கிறாள். சற்று மெனக்கெட்டிருந்தால், வினய் அவளை வென்றிருக்கலாம். இரண்டு வயது மூத்தவள் என்றாலும், இந்நாள்களில் நான் முன்பளவு குற்ற உணர்வின்றி அவளை அடிக்கடி நினைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். ஒரு வேகத்தில், வினய்யை அவள் விரும்பினாளா என்று கேட்டுவிட்டாலும், அவள் இல்லை என்றபோது சற்று நிம்மதியாகத்தான் இருந்தது என்பதை நிதானமானபின் உணர்ந்தேன்.

நான் நன்றாகப் படித்தேன். சிறந்த மதிப்பெண்கள் பெறுகிற மாணவர்கள் பட்டியலில் எப்போதும் என் பெயர் இருந்தது. பெரிய துயரங்களற்ற ஒரு நேர்த்தியான வாழ்க்கை எனக்கு எப்படியும் வசப்பட்டுவிடும் என்பது அப்போதே தெரிந்திருந்தது. நான் ஓடிப்போக ஒரு காரணத்தையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஆனால், அந்தப் பக்கிரி அதைத்தான் சொன்னார். இரண்டு வருடங்கள் அதைத் தள்ளிப்போடச் சொல்லி, அவரது எஜமானிடம் கேட்டிருப்பதாக.

அப்போதும்கூட நான் என்னைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை. என் அச்சமெல்லாம் அம்மாவைப் பற்றித்தான். இரண்டு மகன்களைப் பறிகொடுத்திருக்கிறாள். நானும் போய்விட்டால் அவள் என்ன ஆவாள்? அதுசரி. நான் ஏன் போக வேண்டும்?

எப்படி யோசித்துப் பார்த்தாலும், எனக்கு அதற்கு ஒரு காரணம்கூடப் புலப்படவில்லை. இரண்டு பேர் இல்லாமல் போனதன் தொடர்ச்சியாக, வீட்டின் மீதான என் ஒட்டுதலும் இறுக்கமும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது. வினய்யைக் குறித்து விசாரிப்பதற்காகக் காஞ்சீபுரம் போயிருக்கும் அம்மாவும் அப்பாவும் திரும்பி வந்ததும், அவர்களோடு உட்கார்ந்து நிறையப் பேச வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். நிச்சயமாக அண்ணாவைக் குறித்தல்ல. அதை வினோத்திடம் சொல்லிவிட முடிவு செய்திருந்தேன். பிறகு அவன் அதை அவர்களிடம் சொல்லுவதென்றால் சொல்லிக்கொள்ளட்டும். நானாக வாய் திறக்கப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

‘சொல்லுடா. அவன் எங்க போனான்? உனக்கு என்ன தெரியும்?’

வினோத் கேட்டபோது, நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். ‘அவன் நம்மள மாதிரி பையன் இல்லடா. அவன் வேற.’

‘அப்படின்னா?’

‘அவன் ஒரு ஞானி.’

‘அப்படின்னா?’

‘எனக்குத் தெரியலே. ஆனா அவன் யோகாவெல்லாம் பண்ணுவான். தியானம் பண்ணுவான். தண்ணிக்கடியிலே அவனால பதினஞ்சு நிமிஷம் மூச்சடக்கி நிக்கமுடியும். நான் பாத்திருக்கேன்.’

‘எப்போ?’

‘எவ்ளவோ வாட்டி. அவனுக்கு யாரோ ஒரு சித்தரோட தொடர்பு இருந்திருக்கு. யார்னு அவன் சொனதில்லை. ஆனா, திருப்போரூர் சாமிய அடிக்கடி போய்ப் பாப்பான்.’

‘என்ன சொல்றே நீ? திருப்போரூர் சாமி ஐயங்கார் இல்லியேடா?’ என்று வினோத் சொன்னான்.

எனக்கு அதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘விஜய்யே ஐயங்கார் இல்லை வினோத். அவன் ரொம்ப நாளா பூணூலே போட்டுக்கலை.’

‘ஐயோ’ என்றான் வினோத்.

‘தெரியாதோல்யோ? அதான். க்ளவரா அதை ஆத்துல மறைச்சி வெச்சிண்டிருந்தான்.’

‘உனக்கு எப்படித் தெரியும்?’

‘தெரியும். அவனே சொல்லியிருக்கான்.’

வினோத்தால், நான் சொன்ன பல விஷயங்களை நம்ப முடியவில்லை. குறிப்பாக, அவன் தலைகீழாக நின்ற கதை. காலை அசைத்து நரியை விரட்டிய கதை. அல்லிக்குளத்துக்கு அடியில் அவன் ரிஷிகளைச் சந்திக்கச் செல்லும் கதை.

அதனாலென்ன? எனக்கு அவன் நம்புவது அவசியமென்று தோன்றவில்லை. சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஒரு விதத்தில் அவன் நம்பாதிருந்தாலே நல்லது என்றும் தோன்றியது.

‘நீ ஒரு லூசு. அவன் ஒண்ணும் ஞானியெல்லாம் இல்லை. அண்ணாக்கு படிப்பு சரியா வரலை. அதனாலதான் அவன் ஓடிப்போயிட்டான்’ என்று வினோத் சொன்னான்.

இது அபாண்டம் என்று எனக்குத் தோன்றியது. என்னளவுக்கு அவன் மதிப்பெண்கள் பெறுபவனல்ல என்பதை நானறிவேன். ஆனால், அண்ணா என்றைக்கும் எதிலும் தோல்வியுற்றதில்லை. எல்லா பாடங்களிலும் கௌரவமான மதிப்பெண்களை அவனால் பெற முடிந்திருக்கிறது. வீடு அவன் படிப்பைக் குறித்துப் பெரிதாகக் கவலைப்படாத அளவுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை அவன் செய்துகொண்டுதான் இருந்தான். ஒரு வகையில், வீட்டின் கவனத்தைத் தன்புறம் திருப்பாதிருப்பதற்காகவேகூட அவன் அதைச் செய்திருக்கலாம். என்னைவிட ஒரு வயது மூத்தவனான வினோத்துக்கு இது எப்படிப் புரியாதிருக்கிறது?

‘அதெல்லாம் சும்மா. நமக்குத் தெரியாம அவன் எதாவது பெரிய பிரச்னைல சிக்கிண்டிருப்பான். அதச் சொல்ல தைரியமில்லாம ஓடிப்போயிட்டான்’ என்று வினோத் சொன்னான்.

‘அப்ப வினய் ஏன் போனான்?’ என்று நான் கேட்டேன்.

வினோத் வெகுநேரம் எதுவும் பேசவில்லை. அவன் யோசித்துக்கொண்டிருந்தாற்போலத் தோன்றியது. வினய் ஓடித்தான் போனானா என்றே அவன் சந்தேகப்பட்டான். ‘நீ வேணா பாரேன். அப்பாவும் அம்மாவும் இன்னிக்கு அவனை மடத்துல பார்த்திருப்பா.’ என்று சொன்னான்.

அப்படி நடந்திருந்தால், எனக்கும் அது மகிழ்ச்சிதான். ஆனால் ஏனோ அது நடக்காது என்றே தோன்றியது. திரும்பத் திரும்ப, கோவளத்தில் நான் சந்தித்த பக்கிரிதான் நினைவுக்கு வந்தார். வினய் ஓடியிருக்காவிட்டால், அவர் அதையல்லவா முதலில் சொல்லியிருப்பார்? என் ஓட்டத்தைத் தள்ளிப்போடச் சொன்னதாகச் சொல்ல என்ன அவசியம்?

நான் வினோத்திடம் அவரைக் குறித்தும் சொன்னேன். ஆனால் கவனமாக, அவர் என்னைக் குறித்துச் சொன்னதை மறைத்துவிட்டு, அவரிடம் போய்ப் பேசியதை மட்டும் தெரிவித்தேன்.

‘அவர் ஒண்ணும் சித்தர் இல்லை’ என்று வினோத் சொன்னான்.

‘அம்மாவே அவர்ட்ட போய் அடிக்கடி பேசிட்டு வருவா. எனக்குத் தெரியும்!’

‘எனக்கும் தெரியும்டா. நானும் அம்மாவோட போயிருக்கேன். அவர் ஒரு நாட்டு டாக்டர் மட்டும்தான்’ என்று வினோத் சொன்னான்.

அவனுக்கு ஒரு சமயம் முகமெங்கும் கட்டி வந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டி வளர்ந்து, ஊதிப் பெருத்து உடைந்ததும், அடுத்தது முளைக்கும். அதன் காலம் முடிவடையும்போது, இன்னொன்று உடனே முளைவிடும். அப்பா அவனை இரண்டு மூன்று டாக்டர்களிடம் அழைத்துச் சென்று காட்டி, இஞ்செக்‌ஷன், மாத்திரை என்று எவ்வளவோ செய்து பார்த்தார். அவனது பிரச்னை தீராமலே இருந்தது. கேசவன் மாமாதான் கோவளத்துப் பக்கிரியிடம் அழைத்துச் சென்று காட்டலாம் என்று அம்மாவிடம் நினைவூட்டியது. எனக்குத் தெரிந்து, அவன் அந்தப் பக்கிரியைச் சந்தித்த ஒரே சந்தர்ப்பம் அதுதான். அவரிடம் இதை நினைவூட்டினால், ‘அப்படியா? இருக்கலாம்’ என்றுதான் சொல்லுவார். அம்மாவையே நினைவில்லாதவருக்கு, வினோத்தை எப்படித் தெரிந்திருக்கும்?

அன்று அந்தப் பக்கிரி, வினோத்தின் கட்டியின் மீது ஒரு பிடி விபூதியை வைத்துத் தேய்த்து மந்திரித்துவிட்டதாக அம்மா சொன்னாள்.

‘முஸ்லிம்னா விபூதியெல்லாம் வெச்சிருப்பாளான்ன?’ என்று அப்பா கேட்டார்.

‘தெரியலே. ஆனா அவர் விபூதிதான் தேய்ச்சார். சரியாயிடும்னு சொன்னார்’ என்று அம்மா சொன்னாள்.

இரண்டு நாளில் அவனது கட்டி வடியத் தொடங்கிவிட்டது. அதன்பின் அது திரும்ப வரவேயில்லை. வினோத்துக்கு அது ஒரு அற்புதம் என்றெல்லாம் எண்ணத் தோன்றவில்லை. விபூதியில் அவர் ஏதோ மூலிகை கலந்து தேய்த்திருக்கலாம் என்றுதான் நினைத்தான். பெரிதாக அதைப்பற்றி அவன் யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கவும் இல்லை. எனக்குத்தான் அப்போது அது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. டாக்டர்களால் முடியாத ஒன்றை ஒரு பக்கிரி எப்படி சாதித்திருப்பார்? அண்ணாவிடம் அதைக் குறித்து நான் கேட்டேன். ‘மருந்து, விபூதியிலே இல்லை. அவர் தேய்ச்சது வெறும் மண்ணாவோ, சாணியாவோ, எதுவாவோகூட இருக்கலாம். மருந்து வேற இடத்துலேருந்து வந்திருக்கு’ என்று அவன் சொன்னான்.

எனக்கு அது புரியவில்லை. ‘மந்திர பலமா?’ என்று கேட்டேன்.

‘அதுகூட இல்லே.’

‘பின்னே?’

அப்போது அவன் ஒன்று சொன்னான். அன்றைக்கு எனக்கு அது சற்றும் விளங்கவில்லை. அவன் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் கழிந்து, வினோத்துடன் தற்செயலாக அந்த விஷயத்தைப் பேசப்போக, சட்டென்று ஏதோ ஓரிழை பிடிபட்டதுபோலத் தோன்றியது.

‘கட்டி கரைஞ்சிபோகலே வினய். அது இடம் மாறிப் போயிருக்கு.’

‘அப்படின்னா?’

‘அவர் எடுத்துண்டுட்டார் அதை. அவர் மூஞ்சிலயோ முதுகுலயோ எங்கயோ ஒட்டவெச்சுண்டுட்டார். அவ்ளோதான். இல்லேன்னா, வேற யாருக்காவது குடுத்திருப்பார்.’

காஞ்சீபுரத்துக்குப் போன அப்பாவும் அம்மாவும் மூன்றாம் நாள் காலை ஊருக்குத் திரும்பி வந்தார்கள். இரண்டு பேர் முகத்தையும் பார்க்கச் சகிக்கவில்லை. அழுது அழுதே கருகிவிட்டாற்போலிருந்தது. திருப்பதிக்குப் போன மாமா, இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவராவது ஏதாவது நல்ல செய்தியுடன் வரமாட்டாரா என்று அப்போதும் அப்பா எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

‘மடத்துல என்னப்பா சொன்னா?’ என்று வினோத் கேட்டான்.

‘அவா யாருக்கும் தெரியலே. இவன் இங்கேருந்து கெளம்பி அங்க போகலே’ என்று சொன்னார்.

காஞ்சீபுரத்தில் வினய் இருந்த ஒன்றரை வருட காலத்தில் அவன் பழகிய, அவனை அறிந்த அத்தனை பேரையும் அப்பாவும் அம்மாவும் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். யாராலுமே அவன் காணாமல் போனதை நம்ப முடியாதிருந்திருக்கிறது.

‘யாராவது கடத்திண்டு போயிருக்கலாம். நீங்க போலிஸ் கம்ப்ளைண்ட் குடுத்துடுங்கோ’ என்றுதான் நிறையப் பேர் சொன்னார்களாம்.

கடத்திச் செல்லும் வயதா!

அன்றிரவெல்லாம் அப்பா என்னையும் வினோத்தையும் அழைத்து உட்காரவைத்து என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். ‘இன்னும் நாங்க ரெண்டு பேரும் பிராணன விடாம இருக்கோம்னா, அதுக்குக் காரணம் நீங்க ரெண்டு பேரும்தான். என்னிக்கும் இது ஞாபகத்துல இருக்கட்டும்’ என்று அவர் சொன்னது மட்டும் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.

அடுத்த நாள் காலை விடிந்தபோது, கேசவன் மாமா வீடு வந்து சேர்ந்தார்.

‘அக்கா...’ என்று வாசலில் நின்றவாறே அவர் அழைத்தபோது, அவர் குரல் என்னவோ போலிருந்தது.

‘என்னாச்சு கேசவா?’ என்று அப்பாதான் பதைத்துப்போய் ஓடிவந்தார். அம்மா வழக்கம்போல் எவ்வித முக மாறுதலும் இன்றி, அடுக்களை வாசலில் நின்றே கவனித்துக்கொண்டிருந்தாள்.

‘போனியா? பாத்தியா? எதாவது தெரிஞ்சிதா?’ என்று அப்பா கேட்டார்.

‘பாத்தேன் அத்திம்பேர். ஆனா வினய் இல்லே. விஜய்’ என்று மாமா சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com