28. எழுப்புதல்

திருப்பாவை சேவையில் யார் வேண்டுமானாலும் போய்ச் சேர்ந்துகொள்ளலாம். மூன்றே நிபந்தனைகள். காதுக்குக் கீழே கிருதா வளர்ந்திருக்கக்கூடாது. தாடியில்லாமல் மீசை மட்டும் வைத்திருக்க அனுமதியில்லை...

கேசவன் மாமா திருமலைக்குச் சென்று இறங்கியபோது, அபூர்வமாக அன்றைக்குக் கூட்டம் குறைவாக இருந்தது. ஆண்டுப் பரீட்சை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்திருந்த சமயம் என்பதால், ஜனவரத்து குறைவாக இருக்கிறது என்று அவர் நினைத்தார். இருப்பினும், அத்தனை எளிதில் வினய்யை அங்கே தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமல்ல என்றே தோன்றியது. அது நேர வேண்டும். அவன் தானாகத் தன் கண்ணில் பட வேண்டும். அதற்குப் பெருமாள் துணை புரிந்தாக வேண்டும்.

குளத்தில் குளித்துவிட்டு, திருமண் இட்டுக்கொண்டு அதிகாலை ஜீயருடன் அவர் திருப்பாவை சேவை கோஷ்டியில் போய் நின்றுகொண்டார். திருப்பாவை சேவையில் யார் வேண்டுமானாலும் போய்ச் சேர்ந்துகொள்ளலாம். மூன்றே நிபந்தனைகள். காதுக்குக் கீழே கிருதா வளர்ந்திருக்கக்கூடாது. தாடியில்லாமல் மீசை மட்டும் வைத்திருக்க அனுமதியில்லை. அல்லது முற்றிலும் மழித்திருக்க வேண்டும். தென்கலையோ, வடகலையோ, இரண்டிலொரு திருமண் கட்டாயம். மற்றபடி திருப்பாவை தெரிந்திருக்கிறதா என்றெல்லாம் யாரும் பரிசோதிக்கமாட்டார்கள். ஜீயர் கோயிலுக்குள்ளே போகும்போது, பின்னாலேயே ஒட்டிக்கொண்டு போய்விடலாம். கெடுபிடியின்றி பத்து நிமிடங்கள் சன்னிதியில் நிற்கமுடியும்.

கேசவன் மாமா, திருப்பாவை சேவையை முடித்துக்கொண்டு மனமார வேண்டிக்கொண்டார். எப்படியாவது வினய் கண்ணில் பட்டுவிட வேண்டும். அதன்பின் அவனைப் பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்வது அவருக்குப் பெரிய பிரச்னையாக இருக்காது. இதை மட்டும் நடத்திக் கொடுத்துவிட்டால், அடுத்த முறை திருவிடந்தையில் இருந்து பாத யாத்திரையாகவே மலைக்கு வருவதாக அவர் வேண்டிக்கொண்டார்.

கோயிலை விட்டு வெளியே வந்ததும், அவர் நேரே உணவுக் கூடத்துக்குத்தான் போனார். தரும உணவு. வரிசையில் நின்று ஒவ்வொரு முகத்தையும் கவனிக்க ஆரம்பித்தார். தமிழ் முகங்கள். தெலுங்கு முகங்கள். ஹிந்தி முகங்கள். திருமலையில் தென்படும் முகங்களில் ஏனோ மலையாள முகங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. சமீப காலத்தில் பிரபலமாகத் தொடங்கியிருக்கும் ஐயப்பன் அவர்களை வளைத்துப் போட்டுவிடுகிறார் போலிருக்கிறது. தவிரவும், பிராந்தியக் கடவுள் அணுகச் சுலபம் என்று கருதியிருக்கலாம்.

மதியம் இரண்டு மணி வரை, கேசவன் மாமா உணவுக் கூடத்தைவிட்டு நகரவேயில்லை. காத்திருக்கும் வரிசையிலும் பந்தி வரிசைகளிலும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருந்தார். வினய் அங்கு வரவில்லை. கிளம்பும்போதே அவர் மறக்காமல் வினய்யின் புகைப்பட நெகடிவ் ஒன்றை எடுத்துச் சென்றிருந்தார். கீழ்த்திருப்பதியில் இறங்கியதும் ஒரு ஸ்டுடியோவுக்குச் சென்று அதில் பத்து ப்ரிண்ட் போட்டு எடுத்துக்கொண்டுதான் மலை ஏறியிருந்தார். உணவுக்கூடத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த சிலரிடம் விவரம் சொல்லி, அவர்களிடம் போட்டோவையும் கொடுத்துவிட்டுத்தான் வேறிடம் தேடிச் சென்றார்.

மலை முழுதும் கால் போன போக்கில் நடந்துகொண்டே இருந்துவிட்டு, மாலை பாபவிநாசம் அருவிக்கரைக்குச் சென்று சேர்ந்தார். அருவியில் அதிகம் தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், அந்த இடம் மாமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்குமுன் அவர் அங்கு சென்றதே இல்லை. அங்கே குளித்துக்கொண்டிருந்தவர்கள், சுற்றி அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தவர்கள், மரத்தடி நிழல்களில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் என்று கண்ணில் பட்ட அத்தனை பேரிடமும் வினய் குறித்து அவர் விசாரித்தார். புகைப்படத்தைக் காட்டிக் காட்டி எங்காவது பார்த்தார்களா என்று கேட்டார். யாரோ பாவம் வந்த இடத்தில் பிள்ளையைத் தொலைத்திருக்கிறார் என்று எண்ணி அவர்களும் கனிவோடு பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதுவரை பார்க்கவில்லை; பார்த்தால் அவசியம் காவல் நிலையத்தில் தகவல் சொல்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அன்று காலை முதல் கேசவன் மாமா எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை. நாளெல்லாம் அலைந்து திரிந்ததில் தலை சுற்றி, கிறுகிறுவென்று வந்தது. அருவித் தண்ணீரை நாலு கை அள்ளிக் குடித்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இருட்டும் வரை சுற்றித் திரிந்துவிட்டு, அதற்குமேல் அலைய முடியாது என்ற நிலை வந்தபோது கல்யாணக் கட்டத்துக்கு வந்து, அந்தக் கட்டடத்தின் வாசலில் ஒரு ஓரமாகத் துண்டை விரித்துப் படுத்துவிட்டார். கால் வலி கொன்றெடுத்தது. நாள் முழுதும் உண்ணாதிருந்தது வேறு கண்ணைத் திறக்கமுடியாமல் செய்திருந்தது. எப்படியாவது வினய்யைக் கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணித்தான் அவர் திருமலைக்கு வந்திருந்தார். அது முடியாதோ என்று அப்போது அவருக்குச் சந்தேகம் வந்தது. அது துக்கம் அளித்தது. அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தார். பிறகு எப்படியோ உறங்கிப்போய்விட்டார்.

நள்ளிரவு யாரோ தன்னைத் தொட்டு எழுப்புவதுபோலத் தோன்றவும், கேசவன் மாமா திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தார். அப்போதுதான் விஜய் அங்கிருப்பது அவருக்குத் தெரியவந்தது.

‘ஐயோ’ என்றுதான் அவருக்கு முதலில் அலறத் தோன்றியிருக்கிறது. ‘நீயாடா? நீயாடா இங்க இருக்க? டேய் பாவி! இவ்ளோ நாளா இங்கயாடா இருக்க?’ என்று அவனைப் பிடித்து உலுக்கியிருக்கிறார்.

‘இல்லே மாமா. இவ்ளோ நாளா நான் இங்கே இல்லை. இப்பத்தான் வரேன்’ என்று அண்ணா சொல்லியிருக்கிறான்.

‘ஏண்டா அப்படி செஞ்சே? எங்கடா போய்த் தொலைஞ்சே?’ என்று கதற ஆரம்பித்தவருக்கு, அதற்குமேல் பேச்சே வரவில்லை. பத்து நிமிடங்கள் இடைவிடாமல் அழுது தீர்த்தார். அவர் அழுது முடிக்கும்வரை அண்ணா ஒன்றும் பேசவில்லை. பிறகு, ‘பசியா இருக்கா? எதாவது சாப்பிடறேளா?’ என்று கேட்டுவிட்டு, தன் தோள் பையில் இருந்து ஒரு சாத்துக்குடி பழத்தை எடுத்து நீட்டினான்.

மாமாவால் அதை நம்பவே முடியவில்லை. மிக நிச்சயமாக அவர் அண்ணாவைச் சந்திப்போம் என்று நினைத்திருக்கவில்லை. திருப்பதியில் உணவுப் பிரச்னை இராது என்று அவன் என்றோ சொன்னதை நினைவில் வைத்திருந்து வினய் குறிப்பிட்டதுதான் அவரை அங்கே செலுத்திச் சென்றது. என்ன காரணத்தாலோ அண்ணா வெறும் உணவை உத்தேசித்துத் திருப்பதிக்குப் போக நினைத்திருக்கமாட்டான் என்றே அவர் கருதினார். ஆனால் ஓடிப்போக வேறு என்ன காரணம் இருந்தாலும், உடனடி உணவுப் பிரச்னை வராதிருக்க வினய் அந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருப்பான் என்றும் அவர் நினைத்தார்.

‘அவனுக்கு வேறென்ன தெரியும்? பிரபந்தம் சொல்லுவான். கோஷ்டில போவான். கோயில் கைங்கர்யங்கள் தெரிஞ்சிருக்கும். அதுல பிழைக்க நினைச்சா திருப்பதி பொருத்தம்தானே?’ என்று அவர் சொன்னார்.

அன்றிரவு முழுதும் அண்ணா, கேசவன் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தான். ‘தேடாதிங்கோ மாமா. என்னைத் திரும்ப ஆத்துக்குக் கூட்டிண்டு போகணும்னு தயவுசெஞ்சி நினைக்காதிங்கோ. நான் அங்க வரமாட்டேன்.’

‘ஏண்டா?’ என்று மாமா கேட்டார்.

‘உங்களுக்கு சொன்னா புரியாது. விட்டுடுங்கோ.’

‘இப்ப நீ எங்க இருக்கே? என்ன பண்ணிண்டிருக்கே?’

‘சொன்னேனே, உங்களுக்குப் புரியாது.’

‘கொன்னுடுவேன் படவா. பெத்த தாய் தகப்பனைத் தவிக்க விடுறதெல்லாம் மகா பாவம்டா’ என்று கேசவன் மாமா சொன்னார். அண்ணா அமைதியாக இருந்தான். ‘அப்படி அவாள தவிக்க விட்டுட்டு எங்க போய் என்ன சாதிப்பே நீ? ஒரு புல்லைக்கூட உன்னால பிடுங்க முடியாது பாத்துக்கோ. நான் சும்மா சொல்லலே விஜய். என் வயித்தெரிச்சல் இதைச் சொல்ல வெக்கறது. வேண்டாம். என்னோட ஆத்துக்கு வந்துடு.’

‘மன்னிச்சுடுங்கோ மாமா. அது முடியாது’ என்று அண்ணா சொன்னான்.

மாமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு வீட்டில் என்ன குறை இருந்தது? ஒன்றுமே இல்லை. விட்டுச்செல்லத் தோன்றும் அளவுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. சொல்லிவைத்த மாதிரி, இன்றைக்கு வினய் காணாமல் போயிருக்கிறான். இப்படி ஆளாளுக்கு ஒழிந்துபோகத்தானா அக்கா உங்களையெல்லாம் பெற்றுப்போட்டாள்?

அவரது கண்ணீரும் கதறலும் அண்ணாவுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

‘உங்கள ஒண்ணு கேக்கறேன். நீங்க இங்க படுத்து தூங்கிண்டிருந்தேள். நானாத்தான் வந்து தொட்டு எழுப்பினேன். ஏன் செய்யணும்?’

‘அதைத்தாண்டா கேக்கறேன் ராஸ்கல். வரமாட்டேன்னு இப்படி அழிச்சாட்டியம் பண்றதுக்கு, என் முகத்துல முழிக்காமலே இருந்திருக்கலாமே?’

‘செஞ்சிருக்கலாம் மாமா. ஆனா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன். அதனாலதான் உங்ககிட்ட வந்தேன்.’

‘என்னது?’

'நான் ஆத்துக்குத் திரும்பி வருவேன் மாமா. கண்டிப்பா அது ஒரு நாள் நடக்கும். ஆயிரமானாலும், அம்மாக்கு கொள்ளிபோட நாந்தானே வந்தாகணும்?’ என்று அண்ணா சொன்னான்.

அதற்குமேல் மாமாவுக்குப் பேச்சே வரவில்லை. சீ என்று காறித் துப்பிவிட்டு, எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.

*

நடந்த அனைத்தையும் மாமா விவரித்து முடித்தபோது, அப்பாவும் அம்மாவும் மௌனமாக அழுதுகொண்டிருந்தார்கள். வினோத் பயத்தில் நடுங்கி ஒடுங்கிப்போய் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். ஐந்து பேர் இருந்த வீட்டில் ஒரு சொல்லும் உலவாதிருந்தது என்னவோ போலிருந்தது.

‘அவனுக்கு என்னமோ ஆயிடுத்துக்கா. அவன் சரியா இல்லே. பேச்சே சரியா இல்லே. அவன் பாத்த பார்வை சரியா இல்லே. நின்ன தோரணை சரியா இல்லே. விஜய் வேற யாரோ மாதிரி ஆயிட்டான்க்கா’ என்று மாமா சொன்னார்.

‘அவன் ஆயிரம் சொல்லட்டும்டா. நீ ஏன் அவனை விட்டுட்டு வந்தே? பிடிச்சி இழுத்துண்டு வந்திருக்க வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று அப்பா கேட்டார்.

மாமா வெகுநேரம் ஏதோ யோசித்துக்கொண்டே இருந்தார். என்ன நினைத்தாரோ. சட்டென்று சுவரில் முட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

‘விடு கேசவா. நீ என்ன பண்ணுவே பாவம்’ என்று அம்மா சொன்னாள்.

‘இல்லேக்கா. நாலு பேர உதவிக்குக் கூப்ட்டுண்டாவது அவன இழுத்துண்டு வந்துடணும்னுதான் நினைச்சேன். ஆனா அவன் சொன்ன அந்த வார்த்தைக்குள்ள என்னமோ இருந்திருக்குக்கா. கனம்மா இரும்புக் கை ஒண்ண ஒளிச்சிவெச்சி ப்ரயோகம் பண்ண மாதிரி சொன்னான்க்கா. நானா கெளம்பல தெரியுமோ? அது என்னைப் பிடிச்சித் தள்ளிண்டே போயிடுத்துக்கா. கீழத் திருப்பதி வந்தப்பறம்தான், நான் என்ன பண்ணேன்றதே நெனப்புக்கு வந்தது. ஐயோ விட்டுட்டமேன்னு திரும்ப மலைக்கு ஓடினேன். ஆனா அவனைப் பாக்க முடியலேக்கா.’ சொல்லிவிட்டு, மாமா கேவிக் கேவி அழத் தொடங்கினார்.

என்னால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாது என்று தோன்றியது. என்ன ஆனாலும் நானறிந்ததைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அமைதியாக அறைக்குள் சென்று ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு, பரண் மீது ஏறினேன். அப்பாவின் டிரங்குப் பெட்டியை நகர்த்திவிட்டு, அண்ணா அதன் பின்னால் மறைத்து வைத்திருந்த நாடிச் சுவடியைத் துழாவி எடுத்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com