29. கண்ணீரின் கனம்

எங்கள் குடும்பத்தைக் குறித்து, யாருமறியாத சில ரகசியங்களைக் குறித்து நான்கே வரிகளில் அந்தச் சுவடி சொல்லுவதாக அண்ணா என்னிடம் சொல்லியிருந்தான்.

நான் பதறக் கூடாது. நான் உணர்ச்சி வயப்படலாகாது. என்ன ஆனாலும் அம்மாவை நிலைகுலையச் செய்யும்படியாக எதையும் செய்வதில்லை என்று பிரக்ஞை பூர்வமாக முடிவெடுத்தவன் நான். எனக்கு நான் வகுத்த விதியை நான் மீறுவதற்கில்லை. ஆனால் என்னால் அந்த அவலச் சுவை ததும்பும் கணங்களைக் கடக்க முடியவில்லை. வீட்டுக் கூடத்தில் எரிந்துகொண்டிருந்த அறுபது வாட்ஸ் விளக்கிலிருந்து ஒளியின் வடிவில் கண்ணீரே ஒழுகிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. சுவரெங்கும் கண்ணீர். தரையெங்கும் கண்ணீர். அப்பா, அம்மா, கேசவன் மாமா, வினோத் நான்கு பேருமே மாற்றி மாற்றி அழுதுகொண்டிருந்தார்கள். தாழிட்ட வாசல் கதவு தாண்டி இந்தத் துக்கமும் கண்ணீரும் வெளியே போக வழியில்லை. இது இங்கேயேதான் கிடக்கும். மேலும் மேலும் பெருகிப் பெருகி ஒரு பொருளாக உருத்திரண்டு கூடத்தை அடைக்கும். இடம் போதாமல் அறைகளுக்குப் பரவும். அடுக்களை முழுதும் வியாபிக்கும். காரை பெயர்ந்த வீட்டின் சுவர்கள் அனைத்தும் கண்ணீரின் கனத்த மோதல் பொறுக்காமல் மேலும் பெயர்ந்து விழும். சிதிலங்களில் அண்ணாவின் நினைவு புதைந்து மண்ணோடு சேர்ந்து மட்கும்.

அப்படி மட்கிப் போய்விட்டால்கூடப் பரவாயில்லை. அம்மா அதை மட்க விடுவாளா என்று சந்தேகமாக இருந்தது. கணத்துக்குக் கணம் அப்பா தன் ஆற்றாமைச் சொற்களால் இட்டு நிரப்பிய துக்கத்தின் இடைவெளிகளை அம்மா தன் மௌனத்தினால் மெழுகிவிட்டுக் கொண்டிருந்தாள்.

அந்தச் சுவடியை நான் கையில் வைத்திருந்தேன். கணப் பொழுது முடிவுதான். அதைக் கொண்டுபோய் நடுக்கூடத்தில் விட்டெறிந்துவிட்டால் போதுமானது. என்னதுடா என்று மாமா குனிந்து எடுத்துப் பார்ப்பார். தமிழில் எழுதப்பட்ட சுவடிதான் அது. ஆனாலும் படிப்பது அத்தனை சுலபமல்ல. அதன் தொன்மமும், பழுப்பேறி பல எழுத்துகள் காணாமலாகியிருந்ததும் மட்டுமல்ல காரணம். அதிலிருந்த தமிழின் முகம் காலத்தின் பேய்ப் பாய்ச்சலில் மண்மூடிக் கிடந்தது. அது வேறு தமிழ். புராதனமானது. பூடகத்தன்மை கொண்டது. பலமுறை அதை எடுத்துப் படித்த அண்ணாவே தனக்கு அது முற்றிலும் புரிந்ததில்லை என்றுதான் சொல்லியிருக்கிறான். ஆனால் அதிலுள்ள வரிகளின் சாரத்தை அவன் அறிவான். அது எங்கள் குடும்பத்தைப் பற்றியது. ஒரு பெரும் சரித்திரத்தின் ஒரு வரி. ஆனால் முழுதையும் தாங்கி நிற்பது. திருப்போரூர் சாமிக்கு அது எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. அதை அவர் எப்படிச் சரியாக அண்ணாவைப் பிடித்து ஒப்படைத்தார் என்பதும் தெரியவில்லை. எல்லாமே அவன் சொன்னதுதான். அவன் என்ன சொன்னாலும் அது உண்மையாக மட்டுமே இருக்கும் என்று நான் ஏன் நினைக்கிறேன்? எனக்கு அது புரியவில்லை. என்னையறியாமல் நான் அவனைக் கண்டு பிரமித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. அவன் சாதாரணமானவனில்லை என்று அடிமனத்தில் எப்போதோ ஒரு வித்து விழுந்திருக்கிறது. காரணம் புரியாத எண்ணம்.

என் கவலையெல்லாம், என்னைப்போல என் வீடு அவனை அப்படி நினைக்குமா, நம்புமா என்பதுதான். மாமா அவனை அயோக்கியன் என்று சொன்னார். ‘எவன் கேட்டான் இவன் கொள்ளியை? இவன் கொள்ளி வெக்கலேன்னா உன் கட்டை வேகாதாக்கா? விட்டுட்டு ஓடின நாய்க்காகவா உன் கொள்ளி காத்துண்டிருக்கும்? விடமாட்டேன்க்கா. இவா எவனுமே இல்லேன்னாலும் நான் இருக்கேன் ஒனக்கு. தம்பியா நீ நினைச்சுக்கோ. புள்ளையாவே இருந்துட்டுப் போறேன்’ என்று சொன்னார்.

ஆற்றாமையும் ஆதங்கமும் நிறைந்து ததும்பிக்கொண்டிருந்த தருணத்தில், அந்தச் சுவடியைக் கொண்டுபோய்க் கொடுப்பது அபத்தமாகிவிடுமோ என்று ஒரு கணம் நினைத்தேன். ஆனால் ஏதோ ஒரு வகையில் அம்மாவுக்கு அதிலொரு தெளிவு கிடைக்கலாம் என்று தோன்றியது. என்னைத்தான் துருவித் துருவிக் கேட்பார்கள். அனைத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும். அது பிரச்னையல்ல. ஆனால் இத்தனை நாளாக ஏன் மறைத்தாய் என்றொரு கேள்வி வரும். அண்ணா ஓடிப்போன கணத்திலேயே தெரிந்ததைச் சொல்லியிருந்திருக்கலாம். அப்போது செய்யவில்லை. துணிவில்லை என்பதுதான் காரணம். ஒரு அச்சம். ஒரு தப்பித்தல் உணர்வு. அனைத்தையும் தாண்டி, அண்ணாவின் ஓட்டம் தடைப்பட்டுவிடக் கூடாது என்று அடிமனத்தில் நினைத்திருக்கிறேனா என்ன? அவன் போனது சந்தேகமில்லாமல் இழப்புத்தான். எத்தனையோ இரவுகள் அவனை எண்ணிக்கொண்டு உள்ளுக்குள் கலங்கி நின்றிருக்கிறேன். அதன் பெயர் பாசம்தானா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. வீட்டில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு அவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அறிய முடியாத பூடகத் தன்மை கொடுத்த உறவின் நெருக்கமாக இருக்கும்.

உறவு நிலைகளின் புதிர்த்தன்மை பேரெழில் கொண்டது. அன்பென்றும் பாசமென்றும் ஒற்றைச் சொற்களில் அனைத்தையும் முடிந்து வைத்துவிட நினைக்கிறது மனம். உண்மையில், சொற்களற்ற பெருவெளியில் காற்றில் அலைக்கழியும் ஒரு சிறு சிறகு அல்லது சருகு நிகர்த்த ஸ்தூலமாகத்தான் நான் அதை உணர்ந்தேன். எதையும் நகர்த்தி வைத்துவிட முடியும் என்று தோன்றியது. தேவை என்ன, அவசியம் என்ன என்பதுதான் விஷயம். அவன் அம்மாவையும் நகர்த்தி வைத்ததில்தான் நான் திகைத்துப் போனேன். எத்தனை பெரிய ஞானம் சித்தித்தாலும் எனக்கு அது சாத்தியமில்லை என்றே கருதினேன். சாத்தியமே ஆனாலும் செய்ய விரும்பமாட்டேன் என்று தோன்றியது. அந்த வயதில் என்னால் இதை யோசிக்க முடிந்ததேகூட எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த நாடிச் சுவடியை நான் அனைவருக்கும் பொதுவாகக் கொண்டுபோய் வைக்கவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் மிக நிச்சயமாக அம்மாவுக்கு அது தேவை. தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் உள்ளுக்குள் அவள் சிதிலமாகிக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது. என்றைக்காவது ஒரு நாள் கோயில் வாசலில் குவித்திருக்கும் சரளைக் கற்களைப்போல், இதுதான் அம்மா என்று ஒரு குவியலைக் காட்டி யாராவது சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சினேன். அதனால் அந்தச் சுவடியை அவள் மட்டும் அறியும்படியாக அடுக்களைக்கு எடுத்துச் சென்று துவரம் பருப்பு டப்பாவுக்குள் போட்டு மூடினேன். ‘இது எப்படி இங்க வந்தது? யார் கொண்டு வந்து வெச்சா?’ என்று கேட்டால் ஒன்றும் சொல்லாதிருந்துவிடுவது. அடித்து உதைத்து மிரட்டினாலும் எனக்குப் பிரச்னையில்லை. சொல்ல வேண்டாம் என்றால் வேண்டாம்தான். நான் சொல்லி எதையும் யாரும் நம்பப் போவதில்லை என்று நினைத்தேன். அதைக் காட்டிலும் அம்மாவின் அப்போதைய துயரத்துக்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை.

மறுநாள் காலை அம்மா பருப்பு டப்பாவைத் திறந்தபோது அந்தச் சுவடியை எடுத்தாள். நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் ஒன்றும் அறியாதவன்போல நகர்ந்து போய்விட்டேன். அம்மா அதைப் படிக்க முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. அப்பாவிடம் வந்து, ‘இது என்னதுன்னு பாருங்கோ’ என்று சொன்னாள்.

அப்பா அதை வாங்கிப் பார்த்தார். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கேசவன் மாமாவும் வாங்கிப் படித்துப் பார்த்தார். ‘எங்க இருந்தது இது?’ என்று கேட்டார்.

‘துவரம் பருப்பு டப்பாக்குள்ள இருந்தது கேசவா. எப்படி வந்ததுன்னு தெரியலே.’

‘நீயாடா?’ என்று மாமா கேட்டார்.

‘எனக்கென்ன தெரியும்?’ என்று நான் பதில் சொன்னேன். தனக்கும் ஒன்றும் தெரியாது என்று வினோத் சொன்னான். அதுதான் எனக்கு வியப்பாக இருந்தது. அண்ணாவைப் பற்றி நான் அறிந்த அனைத்தையும் அவனிடம் சொல்லியிருந்தேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது அவன் கண்டிப்பாக அதை வீட்டில் சொல்வதோடு, நான் சொன்னதையும் தவறாமல் குறிப்பிடுவான் என்றுதான் நினைத்தேன். நான் சற்றும் எதிர்பாராவிதமாக அவன் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லாததுபோலக் காட்டிக்கொண்டது சற்றுக் குழப்பமாக இருந்தது.

‘நானில்லே, நீயில்லே, யாருமில்லேன்னா யாரு கொண்டுவந்து பருப்பு டப்பால போட்டது?’ என்று அப்பா கேட்டார்.

‘டப்பால போட்டது இருக்கட்டும் அத்திம்பேர். இவ்ளோ நாளா இது எங்க இருந்தது? இந்தாத்துல சுவடில்லாம் கிடையாதே’ என்று மாமா சொன்னார். வெகுநேரம் அந்தச் சுவடியைப் படிக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். புராதனமான ஒற்றைப் பனை ஓலை. ஒரு எழுத்தும் புரியாமல் அதில் கிறுக்கியிருந்தது. ஆணியால் கீறி, மஞ்சள் பொடி தூவிய எழுத்துகள். சுவடியின் பழுப்பில் மஞ்சள் மங்கிக் கிட்டத்தட்டக் காணாமலாகிக்கொண்டிருந்தது.

‘எண்ணெய் தடவி வெய்யில்ல வெச்சா படிக்க முடியும்னு நினைக்கறேன்’ என்று மாமா சொன்னார்.

அப்பா அந்தச் சுவடியின் மீது விரலில் தொட்டு தேங்காய் எண்ணெய் தடவினார். அம்மா அதை எடுத்துச் சென்று வெயில் படும்படி வைத்துவிட்டு வந்தாள். வினோத்தைக் கூப்பிட்டு, ‘உண்மைய சொல்லு. இது ஏது உனக்கு? எங்கேருந்து வந்தது?’ என்று கேட்டாள்.

‘சத்தியமா எனக்குத் தெரியாதும்மா. நான் வெக்கலே. இந்த மாதிரி ஓலையை இப்பத்தான் பாக்கறேன்’ என்று அவன் சொன்னான்.

‘விமல்..’ என்று அம்மா என்னை அழைத்தாள். வாழ்வில் முதலும் முடிவுமான ஒரு பெரும் பொய்யைச் சொல்லிவிட முடிவு செய்துகொண்டு நான் அம்மாவின் அருகே சென்றேன். ஆனால் அம்மா என்ன நினைத்தாளோ. என்னிடம் அவள் வினோத்தைக் கேட்டதுபோலக் கேட்கவில்லை. மாறாக, ‘நேத்து கார்த்தால குழம்புக்குப் பருப்பு எடுத்தப்போ அது அந்த டப்பால இல்லை. இப்ப இருக்குன்னா எப்படி?’ என்று கேட்டாள்.

‘தெரியலம்மா’ என்று சொல்லிவிட்டேன்.

கீழைத்தெருவில் ஒரு சக்தி உபாசகர் இருந்தார். புதுப்பாக்கம் போக்யோ டானரீஸில் வேலை பார்த்து ரிடையர் ஆகி, அதன்பின் சக்தி உபாசகரானவர். அப்பா அந்தச் சுவடியை அவரிடம் எடுத்துச் சென்று விவரம் சொல்லியிருக்கிறார். ‘இந்த மாதிரி சுவடியெல்லாம் எங்காத்துல கிடையாது. திடீர்னு இன்னிக்கு இது கிடைச்சிது. ஒண்ணும் புரியலே.’

அவர் அந்தச் சுவடியை வாங்கி, உயர்த்தி வைத்துப் படித்துப் பார்த்தார்.

‘பசங்க ரெண்டு பேரும் தெரியலேன்னு சொல்றா. நாங்களும் இப்படி ஒண்ணைப் பாத்ததில்லே. திடீர்னு இது அடுக்களைக்குள்ள எப்படி வந்திருக்கும்?’

அப்பாவுக்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. அப்பா அதை வீட்டில் பொதுவில் பேசவில்லை. அவர் உபாசகரைப் பார்க்கப்போனது எங்களுக்குத் தெரியும். போய் வந்தபோது, ‘என்ன சொன்னார்?’ என்று அம்மா கேட்டபோது நான் அருகில்தான் இருந்தேன். ஆனால் அப்பா அதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாக உள்ளே போய்விட்டார். அதன்பின் அம்மாவிடம் அவர் எப்போது என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அந்தச் சுவடியை அதன்பின் அவர் எங்கே எடுத்து வைத்தார் என்றும் எனக்குத் தெரியவில்லை.

அது எனக்குத் தீராத வியப்பு. அண்ணாவைக் குறித்து, எங்கள் குடும்பத்தைக் குறித்து, யாருமறியாத சில ரகசியங்களைக் குறித்து நான்கே வரிகளில் அந்தச் சுவடி சொல்லுவதாக அண்ணா என்னிடம் சொல்லியிருந்தான். திடீரென்று அப்படியொரு சுவடி கிடைக்குமானால், அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அறிய விரும்பமாட்டார்களா. யாரையாவது பிடித்து எப்படியாவது அதைப் படித்துவிடத் தோன்றாதா? அம்மா ஏன் பேசாதிருக்கிறாள்? அப்பா ஏன் அமைதியாகிவிட்டார்? கேசவன் மாமாகூட வினய் காணாமல் போனது தொடர்பாக இங்கே அங்கே அலைந்து திரிந்து யார் யாரையோ பார்த்துவிட்டு வந்தாரே தவிர, அந்தச் சுவடியை மறந்தே விட்டாற்போலத்தான் இருந்தது.

எனக்குத் தாங்கவில்லை. மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது வினோத்திடம் கேட்டேன். ‘நீ ஏண்டா என்னை மாட்டிவிடலே? நாந்தான் உன்கிட்ட எல்லாத்தையும் சொன்னேனே?’

‘அப்பா உன்னைத் திட்டுவா. மாமா அடிப்பா. நீயும் மனசு உடைஞ்சு போய் ஆத்தைவிட்டுப் போயிட்டேன்னா அம்மா செத்தே போயிடுவாளேடா!’ என்று சொன்னான்.

அப்போது எனக்கு உறுதியாகத் தோன்றியது. நாங்கள் இரண்டு பேரும் என்றென்றைக்கும் அம்மாவுக்குப் பிள்ளைகளாக வீட்டில்தான் இருப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com