99. கற்பின் கதை

பொதுவாகப் பெண்கள் அம்மாதிரிதான் முந்தானையைச் சரிசெய்துகொண்டே இருப்பார்கள். சமயத்தில் சரியாக இருக்கும் முந்தானையைச் சரியாக இல்லாமலும் ஆக்கிவிடுவார்கள்.

காவிரியின் அந்த ரகசியச் சிறு கிளையைக் கால்வாய் என்பதா, ஓடை என்பதா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. அந்த இடத்தில் அந்த நீர்ப்பரப்பைக் கண்டபோது உண்மையிலேயே எனக்கு மிகுந்த பரவசமாக இருந்தது. நாங்கள் நடந்துகொண்டிருந்த மலைச் சரிவில் ஐந்து பெரிய பாறைகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அடர்ந்து நிறைந்திருக்க, அவற்றின் அடியில்தான் முதல் முதலில் நீர் வரத்தின் சத்தத்தைக் கேட்டேன். ‘குருஜி, நதியோட்டம் இம்மலைக்கு மறுபுறமல்லவா?’ என்றேன். ‘ஆம். இது சிறு கால்வாய். உன்னைப் போல உற்பத்தியாகும்போதே ஓடுகாலியான பிறப்பு’ என்று சொன்னார். நான் சிரித்தேன். அந்தப் பாறைகளின் அடியில் இருந்த இடைவெளிகளில் இருந்து சரசரவென ஏழெட்டு நாகங்கள் சீறி வருவது போலத் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

அதன் கரையைப் பற்றிக்கொண்டு நாங்கள் நடந்தபோதுதான் கால்வாய் கிட்டத்தட்ட ஓடி மறையும் இடத்துக்கு அருகே அவரைக் கண்டோம். ‘குருஜி, இது சாதுர்மாஸ்ய விரத காலமா?’ என்று கேட்டேன்.

‘இல்லை’ என்று அவர் சொன்னார். இருந்திருந்தால் நாங்கள் மடிகேரியில் இருந்திருக்க மாட்டோம். வேறு ஏதேனும் ஓரிடம், வேறு ஏதாவது நீர்நிலை இருக்கும் இடமாகத் தேடி குரு எங்களை அழைத்துப் போயிருப்பார். முன்னறிவிப்பு இல்லாமல் குடகுக்கு இவர் வந்திருப்பதன் காரணம் என்னவாயிருக்கும் என்று எங்களுக்குப் புரியவில்லை.

நாங்கள் மேலும் சிறிது தூரம் நடந்து அவர் இருக்குமிடத்தை நெருங்கியபோது அவரும் எங்களைப் பார்த்தார். பார்வையில் சிறு சங்கடம் இருந்தது போலத் தோன்றியது ஒருவேளை என் பிரமையாக இருக்கலாம். என்ன இருந்தாலும் எங்கள் பிராந்தியத்துக்கு வருகை தந்திருக்கும் சக சன்னியாசியை நாங்கள் வரவேற்பதுதான் முறை என்று முடிவு செய்தோம். மேலும் நெருங்கியபோது அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து சட்டென்று எழுந்தார். அவரோடு இருந்தவர்களும் எழுந்துவிட்டார்கள். குருநாதர், ‘நீங்கள் சிறிது நேரம் இங்கேயே இருங்கள்’ என்று எங்களிடம் சொன்னார்.

‘ஏன் குருஜி?’

‘அவர் தனிமை தேடி வந்திருக்கலாம். நாம் அநாவசியமாக அவரைத் தொந்தரவு செய்வது தவறு’.

‘நாலு பேரோடு என்ன தனிமை?’ என்று நான் கேட்டேன். குரு அதற்கு பதில் சொல்லவில்லை. ‘இங்கேயே இரு’ என்று மீண்டும் சொல்லிவிட்டு அவர் மட்டும் நெருங்கிச் சென்றார். நாங்கள் நின்ற இடத்திலேயே காத்திருக்க ஆரம்பித்தோம்.

குருநாதர் நெருங்கிச் சென்றதும் அவர் வணக்கம் சொன்னார். குருவும் அவரை வணங்கினார். அதைப் பார்த்தோம். அதன்பின் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். அவரோடு உடனிருந்தவர்கள் மரியாதை கருதி நாலடி நகர்ந்து போய் நின்றுகொண்டார்கள். குரு அவருடன் ஐந்து நிமிடங்கள் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். பிறகு என்ன நினைத்தாரோ, என்னிடம் திரும்பி, ‘அந்தப் பலகாரப் பையைக் கொண்டு வா’ என்று சொன்னார். ஆசிரமத் தன்னார்வலர் ஆசையாக எங்களுக்காகக் கொடுத்தனுப்பிய பலகாரங்கள். மதியம் சிறிது சாப்பிட்டுவிட்டு மிச்சத்தைப் பையிலேயேதான் வைத்திருந்தேன். இன்னொரு வேளைக்கு உதவும் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த மனிதர் ஏன் அதில் கைவைக்க நினைக்கிறார்?

வேறு வழியின்றி அவரிடம் அந்தப் பையைக் கொண்டு கொடுத்தேன். அப்போதுதான் அவரை நெருக்கத்தில் பார்த்தேன். ஒரு மாம்பழத்தின் வடிவத்தில் இருந்தது அவரது முகம். கன்னங்களில் குறைவாகவும் முகவாயில் சற்று அதிகமாகவும் தாடி முளைத்திருந்தது. மீசை விளைச்சலிலும் ஓர் ஒழுங்கு இருக்கவில்லை. ஒரு புறம் சற்று அடர்த்தியாகவும் மறுபுறம் இடைவெளி விட்டும் இருந்தது. இம்மாதிரியான இயற்கை கொண்டவர்கள் சோம்பேறித்தனம் பாராமல் தினமும் சவரம் செய்துவிடுவதே நல்லது என்று தோன்றியது. சன்னியாசியாக இருந்தாலுமேகூட. அவர் அணிந்திருந்த காவி முக்காடை நொடிக்கொருதரம் இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே இருந்தார். பொதுவாகப் பெண்கள் அம்மாதிரிதான் முந்தானையைச் சரிசெய்துகொண்டே இருப்பார்கள். சமயத்தில் சரியாக இருக்கும் முந்தானையைச் சரியாக இல்லாமலும் ஆக்கிவிடுவார்கள். கையைக் காலை வைத்துக்கொண்டு யாரால் சும்மா இருக்க முடிகிறது?

‘சரி, நீ போய் அங்கே நில்’ என்று குருஜி சொன்னார். நான் பையைக் கொடுத்துவிட்டு நண்பர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்துகொண்டேன். குருஜி அந்தப் பலகாரப் பையை அவரது தொண்டர் ஒருவரிடம் கொடுத்து ஏதோ சொன்னார். மீண்டும் சில நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு, வணக்கம் சொல்லி விடைபெற்று எங்களிடம் வந்தார். ‘நேரமாகிவிட்டது போலிருக்கிறதே. நாம் ஆசிரமத்துக்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று சொன்னார்.

எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. மணி அப்போதே மாலை நாலரை, ஐந்தாகியிருக்கும் என்று தோன்றியது. இதற்குமேல் புறப்பட்டு எப்போது ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்வது?

‘அதெல்லாம் போய்விடலாம்’ என்று சொல்லிவிட்டு அவர் முன்னால் நடக்க ஆரம்பித்தார். வேறு வழியின்றி நாங்கள் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தோம். ஏனோ குருஜி எங்களுடன் பேசவில்லை. இருட்டுவதற்கு முன்னால் இறங்கிய தொலைவை ஏறிக் கடந்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருப்பார் போல. ஆனால் கால்வாய்க்கரை ஓரம் நாங்கள் பார்த்த பிரபல சன்னியாசி கிளம்பும் உத்தேசத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. இரவு அங்கேயே கூடாரம் அடித்துவிடும் முடிவில் இருந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பிராந்தியத்தில் கரடிகள் நடமாட்டம் அதிகம் என்று குருஜி சொல்லியிருந்தார். கண்டிப்பாக அதை அவரிடம் தெரிவித்திருப்பார் என்று நினைத்தேன்.

‘அவர் என்ன விஷயமாக இங்கே வந்திருக்கிறார் குருஜி?’ என்று கேட்டேன். குரு அதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாக நடந்துகொண்டே இருந்தார். ஆனால் அவர் மிகத் தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாற்போல் தோன்றியது. சரி என்ன அவசரம்? அவரே தோன்றும்போது பேசட்டும் என்று எண்ணி அமைதியாகிவிட்டேன்.

எண்ணியதற்கு மாறாக நாங்கள் மலை ஏறி சாலையை எட்டிப் பிடிக்க இரவு ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது. அனைவருமே மிகவும் சோர்ந்திருந்தோம். ‘குருஜி, ஆசிரமத்துக்குக் காலை போகலாம். இப்போது எங்காவது சென்று கால் நீட்டிப் படுக்க வேண்டும்’ என்று ஆகாஷ் சொன்னான்.

‘இல்லை. நாம் போய்விடலாம். நடக்கத்தானே முடியாது? நான் ஏதாவது வண்டிக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். எனக்குப் புரியவேயில்லை. அந்த இடத்தில் தொலைபேசி வசதி கிடையாது. வண்டி போக்குவரத்தும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. ஆள் நடமாட்டமேகூட அதிகம் இல்லை. இவர் எங்கிருந்து வண்டி பிடிப்பார்? ஆனால் குருநாதர், ‘அதெல்லாம் பிடித்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு மலைப்பாதையின் ஓரமாக ஒரு கல்லின் மீது அமர்ந்தார். இதென்ன இந்த மனிதர் இன்று வினோதமாக நடந்துகொள்கிறாரே என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பதினைந்து நிமிடங்கள் அவர் யாருடனும் பேசாமல் அந்தப் பாறையில் அமர்ந்து ஏதோ யோசித்தபடியே இருந்தார். பிறகு, ‘இப்போது ஒரு கார் வரும் பார். அதைக் கைநீட்டி நிறுத்து’ என்று சொன்னார்.

நாங்கள் அனைவருமே சாலையை மறிப்பது போலக் குறுக்கே போய் நின்றுகொண்டோம். ஒரு கார் வந்தது.

‘குருஜி, உங்களுக்கு என்னவோ ஆகிவிட்டது. மடாதிபதிகளோடு சிநேகம் வைத்துக்கொள்ள ஆரம்பித்து மந்திர தந்திரமெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டீர்கள்’ என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘அந்த வண்டியை முதலில் நிறுத்து’ என்று சொன்னார். நாங்கள் நிறுத்தினோம். குருஜியைப் பார்த்ததும் வண்டியை ஓட்டி வந்த நபர் சட்டென்று இறங்கி முன்னால் ஓடி வந்தான். எனக்கு அவனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. கால்வாய்க்கரை ஓரம் அந்த சன்னியாசியுடன் நின்றிருந்த நான்கைந்து பேரில் ஒருவன்.

‘ஐயா உங்களை எங்காவது இறக்கிவிட வேண்டுமா?’ என்று கேட்டான்.

‘ஆம். மிகவும் இருட்டிவிட்டது. ஆசிரமத்துக்கு இனி நடந்து போக முடியாதுபோல் இருக்கிறது’.

‘வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள். இட நெருக்கடி இருக்கும். ஆனாலும் சிறிது நேரப் பயணம்தானே?’

‘அதனால் பரவாயில்லை’ என்று குருஜி சொன்னார். எங்களை ஏறிக்கொள்ளச் சொல்லிவிட்டு, ‘அவர் கிளம்பிவிட்டாரா?’ என்று கேட்டார்.

‘ஆம் சுவாமி. இரவே தலைக்காவேரிக்குச் சென்றுவிட வேண்டும் என்று சொன்னார். வேறொரு வண்டியில் அவரை ஏற்றி அனுப்பிவிட்டுத்தான் வருகிறேன்’.

‘நல்லது’ என்று சொல்லிவிட்டு குருஜியும் வண்டியில் ஏறிக்கொண்டார். ஆசிரமம் வந்து சேரும் வரை நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. இறங்கும்போது, குரு மட்டும் அவனிடம் சில வார்த்தைகள் தனியே பேசினார். அவர் என்ன பேசினார் என்று எங்களுக்குக் கேட்கவில்லை. அவன் கைகூப்பி விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றான்.

எனக்கு அதற்குமேல் பொறுக்கவில்லை. ‘குருஜி, ஏதேனும் பிரச்னையா?’ என்று கேட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று, ‘அவருக்கு’ என்று ஒரு சொல்லைச் சேர்த்தேன்.

சிறிது அமைதியாக இருந்துவிட்டு அவர் சொன்னார் ‘ஆம். ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. சுலபமாக வெளியே வந்துவிடுவார். ஆனால் அவர்மூலம் எனக்கொரு புதிய தரிசனம் சாத்தியமாகும் என்று என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை!’

‘தரிசனமா!’

‘நிச்சயமாக’.

‘அப்படி என்ன அவர் கொடுத்தார்?’

‘அவர் கொடுக்கவில்லை. நான் எடுத்துக்கொண்டேன் விமல்’.

‘இதற்குமேல் சோதிக்காதீர்கள் குருஜி. தயவுசெய்து சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் எனக்குத் தலை வெடித்துவிடும்’.

அவர் சிரித்தார். ‘ஒரு நாத்திக சன்னியாசியின் கற்புக்கு எந்நாளும் பங்கம் வராது என்பதுதான் என் தரிசனம்’ என்று சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com