101. சிந்திக்கும் மிருகம்

ஒற்றைச் சொல். வெறும் ஓம். நான் திருப்பிச் சொல்லவில்லை. வெறுமனே அந்த ஒலியைப் பிடித்துக்கொண்டேன். அதனோடு கூட மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஆசிரமத்தை விட்டு விலகியதைப் பற்றி முன்பே ஒரு முறை சொன்னேன் என்று நினைக்கிறேன். அந்தச் சம்பவம் அப்போது என்னோடு ஆசிரமத்தில் இருந்த சஹிருதயர்கள் அனைவரையும் மிகவும் பாதித்திருந்தது. நான் அங்கிருந்த நாள்களில் ஒருவராலும் என்னைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதைக் குறித்துப் பலகாலம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று பிறகு அறிந்தேன். அதைவிட அவர்களுக்குப் பெரிய வியப்பு, குரு எப்படி என்னை எனது அனைத்துப் பிழைகளோடும் ஏற்று ஆதரித்தார் என்பது. சில சமயம் எனக்கேகூட அந்த வினா எழுந்ததுண்டு.

ஒருநாள் எனக்கு கஞ்சா குடித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மடிகேரியில் கஞ்சா எங்கெல்லாம் கிடைக்கும் என்று நானறிவேன். ஆனால் எனக்குச் சிறு பொட்டலங்களை வாங்கிப் பயன்படுத்திப் பார்க்க விருப்பமில்லை. தோட்டத்தில் இறங்கி, நானே என் கையால் பறித்து எடுக்க விரும்பினேன். இதனை எனது தோழர்களிடம் சொன்னபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வேண்டாம், மிகவும் தவறு என்று சொன்னார்கள்.

‘அப்படியா? தவறான ஒன்று எனக்குத் தோன்ற வாய்ப்பில்லையே?’ என்று சொல்லிவிட்டு நான் நேரே குருவிடம் சென்றேன்.

‘என்ன?’

‘குருஜி, நான் சிவ மூலிகையைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். சித்தர்களுக்கெல்லாம் அது மிகவும் உதவியிருப்பதாகப் படித்தேன்’.

‘அதற்கென்ன? பயன்படுத்தி, அதன்மூலம் என்ன செய்யவிருக்கிறாய் என்று சொல். நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று அவர் சொன்னார். இது அச்சம்பவத்துக்கு சாட்சியாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஏனெனில், நான் தியானம் செய்து அவர்கள் பார்த்ததில்லை. தவத்தில் ஈடுபட்டுக் கண்டதில்லை. ஓரிடத்தில் நான் பொருந்தி அமர்ந்ததே இல்லை. சிறிது காலம் மூச்சுப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன் என்றாலும், போதிய தேர்ச்சி அதில் கிடைத்துவிட்ட பின்பு நான் அதனைத் தொடரவில்லை. தேவைப்படும்போது எந்தப் பயிற்சியையும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து செயல்படுத்திப் பார்க்க முடியும் என்று தோன்றியதால் விட்டுவிட்டேன். எந்தப் பயிற்சியும் தேவைக்காக மட்டுமே என்பதில் எனக்கு இயல்பாகவே ஒரு தெளிவு இருந்தது.

அக்காலங்களில் ஆசிரமத்தில் எனது ஒரே பணி, வாசித்துக் கொண்டிருப்பதுதான். அதிகாலை ஐந்தரை, ஐந்தே முக்காலுக்கு எழுந்து இரண்டு மணி நேரம் நடந்துவிட்டு வருவேன். வந்த வேகத்தில் ஆசிரம வளாகத்தில் விழுந்துகிடக்கும் இலைக்குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்திவிட்டுக் குளிக்கச் செல்வேன். குளித்ததும் ஒரு கறுப்புத் தேநீர் அருந்திவிட்டு குருவின் நூலகத்துக்குள் சென்றுவிடுவேன். அது ஒரு பெரிய நூலகமல்ல. ஆனால் அவரிடம் பல அபூர்வமான நூல்களின் சேகரம் இருந்தது. அங்கேதான் ஒரு சமயம் நான் ‘தால்மூத் பாவ்லி’ என்ற புத்தகத்தைக் கண்டெடுத்தேன். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் தத்துவம் மற்றும் மதச் சட்டங்களின் பிரதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மிகப் பழமையான பதிப்பு. ஒரு ஆர்வத்தில் நான் அந்த நூலைப் புரட்ட ஆரம்பித்தபோது குரு என் அருகே வந்தார். ‘படி. ஆனால் நடுவே எழுந்துவிடாதே. முழுக்க முடிப்பதற்கு எட்டில் இருந்து ஒன்பது நாள்கள் தேவைப்படும்’ என்று சொன்னார்.

‘ஒரு சட்டப் புத்தகத்தை எப்படி மொத்தமாக உட்கார்ந்து படிப்பது?’

‘முடியும். சட்ட திட்டங்கள் இல்லாமல் மனிதர்களைச் சமாளிக்க முடியாது என்று உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் யோசித்திருக்கிறார்கள். இடம் வேறு, மொழி வேறு, சம்பவங்கள் வேறு. ஆனால் அடிப்படை அனைத்துக்கும் ஒன்றுதான்’.

‘ஆம் குருஜி. மனிதனைத் தவிர உலகில் வேறெந்த உயிரினமும் சட்டங்களின் சட்டையை அணிவதில்லை’.

‘இதில் இருந்து உனக்கு என்ன புரிகிறது?’

‘சிந்தனை மிகவும் ஆபத்தானது. சிந்திப்பதற்குத்தான் இத்தனை சட்டங்களும்’.

‘இந்தச் சட்டங்களும் சிந்தித்து உதித்தவைதான்’.

‘ஆனால் ஒரு சிந்திக்கும் மிருகமாக இருப்பது கிளுகிளுப்பாக இருக்கிறது குருஜி. இதற்குப் பதில் சொல்லுங்கள். மனிதனின் மரணம் என்பது சிந்தனையின் மரணம் என்றால் மற்ற உயிரினங்களின் மரணம் எதனுடையது?’

‘நியாயமான வினா. எனக்கென்னவோ, மனிதனைத் தவிர மற்ற எந்த உயிரும் மரணமடைவதில்லை என்று தோன்றுகிறது’.

‘பிறகு?’

‘அவை சிறிய ஓய்வில் செல்கின்றன’.

‘மீண்டும் வருமா? அப்படியானால் மறு பிறப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?’

‘மறு பிறப்பா! அப்படியில்லை. இது கதாநாயகிகள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு அம்மா வேடத்தில் திரும்ப வருவது போல’.

நான் சிரித்தேன். அன்றைக்கு அறிவற்றிருப்பதற்கும் அறிவை நகர்த்தி வைத்திருப்பதற்குமான வேறுபாடுகளைக் குறித்து குரு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சம்பாஷணை எங்கெங்கோ விரிந்து இறுதியில் உச்சகட்ட ஆன்மிகம் என்பது சிவனைத் துறப்பதில் சென்று முடியும் என்று சொன்னார். ‘ஆனால் கவனம்! இது நாத்திகமல்ல. அரசியல் நாத்திகத்துக்கும் சித்தாந்த நாத்திகத்துக்கும் அப்பால் தர்க்கபூர்வமாக அணுக முடிந்தால் மட்டுமே இதனைப் புரிந்துகொள்ள முடியும்’.

பலமுறை அவர் சொல்லியிருக்கிறார். ‘நாம் கடவுளை ஏற்காதவர்கள். ஆனால் கடவுளை நினைக்காதிருப்பதில்லை’.

ஏற்பதும் மறுப்பதும் அல்ல. நினைப்பதும் நினைக்காதிருப்பதும்தான் இங்கு விஷயம். நான் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். மதங்கள் வரையறுக்கும் சட்டதிட்டங்கள். அல்லது மதத்தின் பெயரால் குருமார்கள் தீர்மானிக்கும் சட்டதிட்டங்கள். எல்லோரையும் அச்சுறுத்த எல்லோருக்கும் யாராவது ஒரு சில நாலு கண்ணன்கள் வேண்டித்தான் இருக்கிறார்கள்.

‘நமக்கு, கண்ணனினும் பெரிய நாலு கண்ணன் இல்லை’ என்று குரு சொன்னார். அவரது கீதை வகுப்புகள் பிரமாதமாக இருக்கும். வருடம் இருமுறை எங்களுக்கு அவர் தலா பதினெட்டு தினங்கள் கீதை வகுப்புகள் எடுப்பார். அந்நாள்களில் எங்கள் ஆசிரமத்தில் கண்ணனுக்குப் பிடித்த நாவல் பழங்கள், அவல் பொரி, வெண்ணெய் போன்ற பிரசாதங்கள் தாராளமாகக் கிடைக்கும். குருநாதரின் சொற்பொழிவுகளின் மூலம் கண்ணனை அறிபவர்களுக்கு அது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும். ஒரு தெய்வமாகவோ, ஞானியாகவோ, ராஜதந்திரியாகவோ அவர் எப்போதும் கண்ணனைச் சுட்டிக்காட்டியதே இல்லை. உலகின் ஆகப்பெரிய அரசியல்வாதி அவந்தான் என்று அவர் சொல்லுவார்.

எதையோ சொல்ல வந்து நகர்ந்துவிட்டேன். சிவ மூலிகை. ஆம். குருநாதர் எனக்கு அது எதற்கு என்று கேட்டார்.

‘நான் போதைப் பொருள்களைக் குறித்துச் சிறிது யோசிக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். அவர் சிரித்துவிட்டார். ‘இல்லை. உண்மையாகவே குருஜி. பக்தி எப்படிப்பட்ட போதையாக இருக்கும் என்பதை அறியாமல் அதைக் குறை கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாலு இழுப்பு கஞ்சா எனக்கு பக்தியைப் புரியவைக்கும் என்று நினைக்கிறேன்’.

அவர் எனது அந்த யோசனையை விமரிசனம் செய்வார் என்று நண்பர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ‘முட்டாள். கஞ்சாவைக் கொளுத்திப் புகைப்பது அநாகரிகம். அது போதையல்ல. மயக்கம். போதை என்பது போதத்துக்கு நெருங்கிச் செல்வது’.

‘புரியவில்லை குருஜி’.

அன்று மாலை ஆசிரமத்துக்கு ஒரு குடியானவன் வந்தான். குருஜியைச் சந்தித்துத் தனது இடுப்பு முடிப்பில் இருந்து கொத்தாகக் கொஞ்சம் கஞ்சா இலைகளை அள்ளிப் போட்டான். எனக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது.

‘குருஜி, எனக்காகவா?’ என்று கேட்டேன்.

‘ஆம். நீதானே ஆசைப்பட்டாய்? ஆனால் இதைப் பயன்படுத்தும் விதம் வேறு. நான் சொல்லித்தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, விக்னேஷை அழைத்து ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சச் சொன்னார். பிறகு, என்னைக் கடைக்கு அனுப்பி ஒரு தேன் பாட்டில் வாங்கிவரச் சொன்னார். நான் கடைக்குப் போய் வருவதற்குள் காயத் தொடங்கியிருந்த பாலில் கஞ்சா இலைகளைக் கசக்கிப் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கச் சொல்லியிருக்கிறார். சீடர்களுக்கு குரு ஏன் இப்படியொரு விஷப் பரீட்சையில் இறங்குகிறார் என்பது புரியவேயில்லை.

நான் தேன் பாட்டில் வாங்கி வந்தபோது, அந்த ஒரு லிட்டர் பால் அரை லிட்டராகச் சுண்டிவிட்டிருந்தது. பொடித்துப் போட்ட கஞ்சா இலைகள் அதில் எங்கு போயின என்று தெரியவில்லை. குருநாதர், நான் வாங்கி வந்த தேனை அந்தப் பாலில் ஊற்றி அடுப்பைவிட்டு இறக்கி வைத்தார்.

‘குருவே, என்ன செய்கிறீர்கள்?’

‘என் பிரியத்துக்குரிய சீடனுக்கு நான் சோமபானம் தயார் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் அந்த மூடிய பால் பாத்திரத்தைக் கொண்டுபோய் வைத்தார். ‘அது இருக்கட்டும். மூன்று மணி நேரம் சும்மா விட்டுவிடு’ என்று சொன்னார்.

‘இதுவா சோமபானம்?’

‘ஆம்’.

‘இல்லை. ஏதோ ஒரு நிலவுத் தாவரத்தின் இலையில் இருந்து எடுக்கப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்’.

‘எல்லாம் இந்தத் தாவரம்தான் விமல். பஸ் ஸ்டாண்டுக்குப் போ. அங்கே ஒரு திபெத்தியன் ஸ்வெட்டர் விற்றுக்கொண்டிருப்பான். அவனிடம் போய் கஞ்சாவுக்கு திபெத்திய மொழியில் என்ன பெயர் என்று கேள். சோமராஜா என்று சொல்லுவான்’.

‘அப்படியா?’

அன்றிரவு ஆசிரமத்தில் என் நண்பர்கள் அனைவரும் விநோதமாகப் பார்த்துக்கொண்டிருக்க, குருநாதர் அந்தத் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்த பால் பாத்திரத்தை எடுத்து அப்படியே என் கையில் கொடுத்து, ‘அருந்து’ என்று சொன்னார்.

‘உங்களுக்கு?’

‘விருப்பமில்லை. நீ குடி. நீதானே ஆசைப்பட்டாய்?’

நான் அந்த போதைப் பாலை ருசித்து அருந்த ஆரம்பித்தேன். தேன் கலந்த பால். இனிப்புக்குக் கேட்கவா வேண்டும்? ‘பிரமாதமாக இருக்கிறது. உங்களில் யாருக்காவது வேண்டுமா?’ என்று என் நண்பர்களைக் கேட்டேன். சொல்லிவைத்த மாதிரி அனைவருமே வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். எனக்கென்ன போயிற்று? திருப்தியாக அந்த அரை லிட்டர் பாலையும் குடித்துவிட்டுப் பாத்திரத்தைக் கீழே வைத்தேன்.

‘உட்கார்’ என்று குரு சொன்னார்.

நான் ஒரு பாயை விரித்து அமர்ந்தேன்.

‘சுவரோரம் சாய்ந்து அமர்ந்துகொள்’.

அப்படியே செய்தேன்.

‘கண்ணை மூடிக்கொள்’ என்று சொல்லிவிட்டு என் காதருகே வந்து குரு ஓம் என்று சொன்னார். அந்தச் சொல் ஒரு மெல்லிய தாமிரக் கம்பியைப்போல் என் செவிக்குள் நுழைய ஆரம்பித்தது. நான் அதனைப் பற்றிக்கொண்டேன். ஒற்றைச் சொல். வெறும் ஓம். நான் திருப்பிச் சொல்லவில்லை. வெறுமனே அந்த ஒலியைப் பிடித்துக்கொண்டேன். அதனோடு கூட மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஓம். காற்றின் அசைவில் அது சற்று வேகமெடுக்கத் தொடங்கியது. நானும் என் நடைவேகத்தை அதிகரித்தேன். ஓம். சட்டென்று அது ஓடத் தொடங்கியபோது நானும் பிடியை நழுவ விடாமல் உடன் ஓடினேன். ஓம். அதன்பின் அது என்னை எங்கு இழுத்துச் சென்றது என்று நினைவில்லை.

நான் போய்ச் சேர்ந்த இடத்தில் அண்ணாவைப் பார்த்தேன். ஒரு மொட்டைப் பாறையின் மீது அவன் அமர்ந்திருந்தான். ஒரு சார்மினார் சிகரெட்டுக்குள் கஞ்சாவைத் திணித்து இழுத்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com