104. சதுரங்கம்

தலைவர் ஒருவர் வருமான வரிப் பிரச்னையில் மாட்டிக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்தார். ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குப் போனவர் அவர்.

உன்னை எப்படி ஒரு சன்னியாசியாகக் கருதுவது என்று எனக்கு விளங்கவில்லை என்று வினய் சொன்னான். ரேணிகுண்டாவில் இருந்து கிளம்பிய ரயில் அரக்கோணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மிஞ்சினால் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்னையைத் தொட்டுவிடும். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் திருவிடந்தை. கோயில். அம்மா. கேசவன் மாமா. தெரிந்தவர்கள். தெரியாதவர்கள். வெறும் முகங்கள். எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. வினய்யின் சுய துயரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த என் கதையை அவனுக்குச் சொல்லத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எப்படிப் பார்த்தாலும் அவனது குழப்பத்தையும் சந்தேகங்களையும் அதிகப்படுத்தும்படியாகத்தான் நான் பேசியிருக்கிறேன் என்று புரிந்தது. தான் ஒரு பூரண சன்னியாசியாக இல்லை என்று வருந்திக்கொண்டிருந்தவன், நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன் என்பதை அறிந்தபோது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியடைந்தான்.

‘இல்லை. இதுவல்ல சன்னியாசம். நாம் தவறு செய்துவிட்டோம் விமல்’ என்று சொன்னான்.

‘அப்படியா? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? நான் சரியாகத்தான் இருக்கிறேன். திருப்தியாகவும் இருக்கிறேன். எனது சன்னியாசம் தன் இலக்கை நோக்கி மிகச் சரியாக நகர்ந்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்’.

‘முட்டாள். சன்னியாசமே இலக்கு. சன்னியாசத்துக்கு ஏது இலக்கு?’

‘அது உன் பார்வை வினய். எனக்கு என் சுதந்திரமே இலக்கு. அதை எட்டிப் பிடிப்பதற்கு சன்னியாசம் ஒரு கருவி. அவ்வளவுதான்’.

‘சுதந்திரம் சுதந்திரம் என்று எதைச் சொல்கிறாய்? அப்படி ஒன்று யாருக்கும் முழுமையாகக் கிடையாது’.

‘எனக்கு இருக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன்’.

‘என்ன பெரிதாக அனுபவித்துக் கிழித்துவிட்டாய்?’

‘அதை எப்படிச் சொல்ல முடியும்? ஒரு பூரண ஆனந்தமயமான நிலையை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? தளைகளற்றது. கவலையில்லாதது. விடிந்து எழும்போது இன்று செய்ய வேண்டியவை என்றொரு பட்டியல் மனத்தில் உதிக்காத நிலை. யாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையற்ற நிலை. ஒன்று தெரியுமா? நான் செய்கிற ஒவ்வொரு செயலையும் எனக்குப் பிடிக்கிறதா என்று பார்த்துத்தான் செய்கிறேன். ஒரு சிறு சுளிப்பு என் மனத்துக்குள் உருவானாலும் தவிர்த்துவிடுகிறேன்’.

அவனுக்கு நான் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து விவரித்தேன். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். தலைவர் ஒருவர் வருமான வரிப் பிரச்னையில் மாட்டிக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்தார். ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குப் போனவர் அவர். அடுத்து வரும் பொதுத் தேர்தல் சமயம் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்திருந்தார்கள். திட்டமிட்டு மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி அவரைச் சிக்கச் செய்திருந்தார்கள். உலகெங்கிலும் பரவியிருந்த அவரது பணத்தை கவனமாக எண்ணிப் பட்டியலிட்டு, அனைத்துக்கும் கணக்குக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

நோட்டீஸ்தான். விஷயம் அப்போது ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அதைச் சற்றுத் தள்ளிப் போடலாம் என்று எதிர்த்தரப்பு முடிவு செய்திருந்தது. எந்தக் கணமும் செய்தி வெளியே வந்துவிடும் என்ற அச்சத்திலேயே அவரைச் சிறிது காலம் தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிற எண்ணம். ரெய்டுக்குப் போகவில்லை. வங்கிக் கணக்கை முடக்கவில்லை. விசாரணை இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு நோட்டீஸ்.

அவர் பயந்துபோனார். உடனடியாகச் செய்யக்கூடியது என்ன என்று முடிவு செய்வதற்காகத் தனது நெருங்கிய சகாக்களுடன் கோவாவுக்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றார். ஏனெனில், அந்த நோட்டீஸ், வழக்கமான வருமான வரித்துறை நோட்டீஸைப் போல நான்கு வரிகளில் எழுதப்பட்டிருக்கவில்லை. மிகவும் விலாவாரியாக ஏழு பக்கங்களில் அவரது சொத்து மதிப்பு பட்டியலிடப்பட்டிருந்தது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் செய்திருந்த அனைத்துத் தொழில் முதலீடுகளைக் குறித்தும் அதில் விவரிக்கப்பட்டிருந்தது. கணக்கில் காட்டப்படாத சுமார் நூற்றைம்பது கோடி ரூபாய்க்கான கணக்கு அதில் கேட்கப்பட்டிருந்தது. நூற்றைம்பது கோடி என்பது அந்நாளில் மிகப்பெரிய தொகை. எந்த உச்சபட்ச ஊழல் வழக்கும் அன்றைக்கு அந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கவில்லை. அந்த மனிதரின் விவகாரம் மட்டும் வெளியே வருமானால் தேசம் முழுவதும் அதிர்ச்சி அலை வீசும். இவரா, இவரா என்று உலகமே வாய் பிளக்கும். அவமானத்தின் உச்சத்தில் அவர் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியற்றுப் போகும்.

என்ன செய்யலாம்? தனக்கு நெருங்கியவர்களுடன் விவாதித்து, இறுதியில் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

‘சுவாமிஜி. பிரச்னை இதுதான். நான் மாட்டிக்கொண்டேன். இதில் இருந்து சேதாரம் இல்லாமல் வெளியே வர நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

சேதாரத்தைத் தவிர்க்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அதன் சதவீதத்தைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்யலாம் என்று சொன்னேன்.

‘என்ன செய்ய வேண்டும்?’

‘அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்’.

‘எனக்காக அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?’

‘முயற்சி செய்கிறேன்’ என்று சொன்னேன்.

அந்த வாரம் முழுவதும் நான் டெல்லியில் இருந்தேன். எனக்குப் பரிச்சயமான அமைச்சர் ஒருவர் மூலம் பிரதம மந்திரியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். இரண்டு நாள் கழித்து ‘என்ன விஷயமாகச் சந்திக்க விரும்புகிறீர்கள்?’ என்று அவரது செயலகத்தில் இருந்து ஒரு வினா வந்தது. நான் மறைக்க விரும்பவில்லை. எனவே உண்மைக் காரணத்தைச் சொல்லி, அந்த நோட்டீஸ் தொடர்பாகச் சிறிது பேச வேண்டும் என்று கேட்டேன். இன்னொரு நாள் கழித்து பதில் வந்தது. ‘பிரதமருக்கு இப்போது நேரம் இல்லை’.

அதற்கும் அடுத்த நாள், என் நண்பரான அமைச்சர் நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நேரில் வந்து என்னைச் சந்தித்தார்.

‘நீங்கள் அவருக்கு உதவ நினைக்க வேண்டாமே?’ என்று சொன்னார்.

‘ஏன்? அவர் அந்தளவு மகாபாவி என்று ஆளும் கட்சி முடிவு செய்துவிட்டதா? அடிப்படையில் நல்ல மனிதர். என்ன ஒன்று, அவசரப்பட்டு கட்சி மாறிவிட்டார்’.

‘சுவாமிஜி! நாம் இதைப் பற்றி இனி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் அவரது தொடர்பைத் துண்டித்துக்கொள்வது நல்லது. அது சிக்கல்களில் இருந்து உங்களைக் காக்கும். பிரதமருக்கு உங்கள் சொற்பொழிவுகள் பிடிக்கும். அவர் உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறார். ஆனால் இப்போதல்ல’.

எனக்குப் புரிந்தது. அன்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு பேரைத் தனியே சந்தித்தேன். என்ன செய்யவிருக்கிறார்கள் என்று விசாரித்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தலைவர் மட்டுமல்லாமல் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இருபத்து ஏழு பேரை அவர்கள் இலக்காக நிர்ணயித்து வைத்திருந்தார்கள். ஒரு வழக்கு என்று வந்தால் அவருக்கு உதவி செய்யக்கூட யாரும் வெளியே இல்லாதபடி மொத்தமாகச் சிறைப்பிடிக்கும் திட்டம் ஒன்று தயாராகி இருந்ததை அறிந்தேன்.

எனக்கு இது மிகுந்த வருத்தமளித்தது. யாரும் யோக்கியர்கள் இல்லை. யாரும் உத்தமர்கள் இல்லை. யாரும் தவறிழைக்காதவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு தப்பிக்கும் வழி அமையத்தான் செய்கிறது. அவற்றை முதலில் தேடி அடைத்துவிட்டுப் பிறகு பழி வாங்க ஆரம்பிப்பது என்பது மன்னிக்க முடியாத வன்முறை என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இத்தனைக்கும் அந்தத் தலைவர் எனக்கு மிகவும் நெருங்கியவரெல்லாம் கிடையாது. ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். அரசியல்வாதிகளுக்குப் பெயர் மட்டும்தான் ஆளுக்கு ஆள் மாறுபடும். மற்றபடி அனைவரும் ஒரே ஆத்மாதான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

நல்லது. அவருக்கு உதவ வேண்டும். ஆனால் எனக்கு ஏன் அவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது? என்னால் பிரதமரை மீறி என்ன செய்துவிட முடியும்? அதுதான் புரியவில்லை. நாள்கள் ஓடிக்கொண்டே இருக்க, அந்தத் தலைவர் என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார், ‘ஏதாவது செய்ய முடிந்ததா?’

'இதுவரை இல்லை. இன்னும் இரண்டு நாள் அவகாசம் வேண்டும்’ என்று சொன்னேன்.

‘நீங்கள் பிரதமரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்ததாகக் கேள்விப்பட்டேன். அவர் பேசினாரா?’

‘ஆம். உங்களுக்கு நான் உதவ நினைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை’.

‘ஐயோ. அப்படியானால் வேறு வழி?’

நான் ஒரு வழியை யோசித்திருந்தேன். அதைச் செய்வதா வேண்டாமா என்று முடிவெடுத்திருக்கவில்லை. அது அவசியமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் அந்த முயற்சியில் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்று தோன்றியது. அந்தத் தலைவரை நான் காப்பாற்றிவிடுவேன். அதில் சந்தேகமில்லை. ஆனால் பிரதம மந்திரி முதல் அத்தனை பேரின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். அதைத் தவிர்க்க ஒரு வழி கிடைத்துவிட்டால், நான் யோசித்த வழியைச் செயல்படுத்துவதில் எனக்குப் பிரச்னையே இல்லை.

செய்வதா? வேண்டாமா? அதற்குத்தான் அவரிடம் இன்னும் இரண்டு நாள் அவகாசம் கேட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com