105. வன்மத்தின் வண்ணம்

சூழ்ச்சியின்றி அரசியல் இல்லை. சூழ்ச்சியின்றி சுழற்சியில்லை. சூழ்ச்சியின்றி எதுவுமில்லை. அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கிய பின்பு நான் பயின்ற முதல் பெரும் பாடம் இதுதான்.

சூழ்ச்சியின்றி அரசியல் இல்லை. சூழ்ச்சியின்றி சுழற்சியில்லை. சூழ்ச்சியின்றி எதுவுமில்லை. அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கிய பின்பு நான் பயின்ற முதல் பெரும் பாடம் இதுதான். ஒரு சன்னியாசியாக இருப்பதன் ஆகப்பெரிய சௌகரியம் இத்தகு சூழ்ச்சிகளின் வலைப்பின்னல்களுக்குள் சென்று சிக்க வேண்டாம் என்பதுதான். உறவுகளும் பகையும் அற்று இருத்தல். அது அத்தனை எளிதல்ல. ஆனால் அதன் சொகுசு அபாரமானது. விவரிப்புக்கு அப்பாற்பட்டது. காற்றில் பறக்கும் ஒரு இறகைப் போல இலக்கின்றி அலைந்து திரிந்து விரும்பினால் அடங்கி இருக்கலாம். அல்லது மேலும் அலைந்து திரிந்துகொண்டே போகலாம். எனக்குப் பிரதம மந்திரி எப்படியோ அப்படித்தான் அந்த எதிர்த் தரப்புத் தலைவரும். வேண்டுதல் வேண்டாமை எனக்குத் தனிப்பட்ட முறையில் இருவரிடமும் இல்லை. ஆனால் அவருக்கு உதவ வேண்டும் என்று எனக்குத் தோன்றியதன் காரணம் மிக எளிது. அவரைப் பழிவாங்க நினைத்த ஆளும் தரப்பின் காரணங்கள் அற்பமானவை. கட்சி மாறாத அரசியல்வாதி யார்? காலை வாரிவிடாத நபர்கள் யார்? மனித குலத்தின் ஆதார இயல்புகள் அனைத்தும் வன்மம் சார்ந்தவை. வக்கிரம் பூசியவை. குரூரத்தின் தடம் பிடித்து ஓடித் திரியும் வேட்கை மிகக் கொண்டவை. அன்பும் அரவணைப்பும் பெருந்தன்மை உள்ளிட்ட வேறெந்த நற்குணமும் மேலான பாவனையே. இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

என் குருநாதர் நான் இதைக் குறித்துப் பேச்செடுக்கும்போதெல்லாம் புத்தர், ராமலிங்க அடிகள், காந்தியின் பெயரை எடுப்பார்.

‘மன்னித்துவிடுங்கள் குருஜி. அவர்கள் மூவருமே அருங்காட்சியக மனிதர்கள்’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்.

‘அன்பு இயல்பானதல்ல என்கிறாயா?’

‘இருக்க வாய்ப்பே இல்லை என்கிறேன். காதலைச் சொல்லுங்கள். ஒப்புக்கொள்கிறேன். காமத்தைச் சொல்லுங்கள். கேள்வியே கேட்காமல் சரி என்பேன். அன்பு ஒரு மாயை. குளிருக்குப் போர்வை போல மனத்தின் பலவீனமான கணங்களுக்கு அது ஒரு கணப்புச் சட்டி. யாராவது செலுத்தும் அன்புக்காக ஏங்குவது சரி, செலுத்தப்படும் அன்பை ஏந்திக் கொள்வதும் சரி; ஒரு மாய யதார்த்தம். உண்மையில் அன்பற்ற உலகில் நாம் இன்னும் பிழைகளற்று வாழ்வோம் என்றே நினைக்கிறேன்’.

அவர் என்னை மறுத்துப் பேசியதில்லை. ஆனால் ‘அங்கேயே தேங்கிவிடாதே. தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிரு’ என்று சொல்வார். அரசியல்வாதிகளின் பரிச்சயம் ஏற்பட ஆரம்பித்த பின்பு நான் அதைக் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமே எனக்கு இருக்கவில்லை. அன்பு ஒரு மாய யதார்த்தம் மட்டுமே. வன்மம் ஒன்றே அடிப்படை மனிதப் பண்பு. இதில் ஆண் பெண் பேதமில்லை. பெரியவர், சிறியவர் பேதமில்லை. படித்தவர், படிக்காதோர் பேதமில்லை. ஜாதி மத இன பேதமும் அறவே இல்லை.

வன்மத்தை எப்படி அன்பால் வெல்ல முடியும்? வெல்லலாம். இறுதியில் குண்டடி பட்டு செத்துப் போகத் தயாராயிருக்க வேண்டும். தரையில் கால் ஊன்றி நிற்பதே நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் ஒரு வன்முறையல்லவா? பறவையின் சிறகடிப்பு, காற்றின் மீதான வன்முறை. ஒரு புன்னகையைக் காட்டிலும் பெரிய வன்முறை வேறென்ன இருந்துவிட முடியும்?

அந்தத் தலைவரை நான் பத்து நாள் இடைவெளியில் மீண்டும் சந்தித்தேன். அவரிடம் ஒரு தகவலைச் சொன்னேன். அது நிதித் துறை அமைச்சகத்தில் மிக மேல் மட்டத்தில் உள்ள ஒரு தவிர்க்க முடியாத நபரின் மகளும் அவளது கணவரும் சேர்ந்து செய்யும் ஒரு ரகசிய வியாபாரம் குறித்த தகவல். என்னிடம் இருந்த தகவலுக்கு ஒரு ஆதாரமும் இருந்தது. அதையும் சேர்த்தேதான் அவரிடம் அளித்தேன்.

‘ஐயா, இதற்குமேல் இந்த விஷயத்தில் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. இந்த ஆதாரத்தைச் சொல்லி அந்த நபரிடம் பேசுங்கள். பிரதமரை அவர் சமாளித்துக்கொள்வார். வருமான வரித் துறை தாற்காலிகமாக உங்களை மறக்கும்’ என்று சொன்னேன்.

நான் சொன்னவாறு அவர் செயல்பட்டிருந்தால் நிச்சயமாக வழக்கில் இருந்து தப்பித்திருப்பார். அவர் அரசியல்வாதியல்லவா? நான் அளித்த ஆதாரத்துடன் நேரடியாகப் பிரதம மந்திரிக்கே மிரட்டல் விடுத்தார். என்னை மடக்கப் பார்த்தால் உமது பெயரைக் கெடுக்க நான் தயாராகிவிட்டேன் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். பிரதமருக்கு என்ன போயிற்று? சம்பந்தப்பட்ட நபரை இரவோடு இரவாக யாரோ இல்லாமல் செய்துவிட்டார்கள். ஒரு எளிய விபத்தில் அனைத்தையும் சரி செய்துவிட முடிவது எப்பேர்ப்பட்ட வசதி?

அந்தத் தலைவர் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்யலாம் என்று என்னிடமே வந்து கேட்டார். நான் யோசிக்கவேயில்லை. வருமான வரித் துறை கவனத்துக்கு வராத அவரது வேறு இரு வருமானக் கால்வாய்களின் வழித்தடத்தை நானே பிரதமருக்கு எடுத்துச் சொல்லிவிட்டு ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிரதம மந்திரி கர்நாடகத்துக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்கத் தவறியதே இல்லை. பல இடங்களுக்கு என்னை நல்லெண்ணத் தூதுவராக அவர் அனுப்பிவைத்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை நான் வினய்யிடம் விவரித்தபோது அவன் பயந்துவிட்டான். ‘நிச்சயமாக நீ சன்னியாசி இல்லை. நீ ஒரு கிரிமினல்’ என்று சொன்னான்.

‘இல்லை வினய். நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். முட்டாள்கள் நிறைந்த உலகத்தில் நான் வாழ விதிக்கப்பட்டிருப்பது என் துரதிருஷ்டம். அதற்காக நான் முட்டாளாகிவிட முடியாது. என் சுதந்திரம் என்பது முட்டாள்த்தனத்தை அனுமதிக்காதது. அபத்தங்களுக்கு அங்கு இடமில்லை. அற்பத்தனங்களுக்கு இடமில்லை. நான் அரசியல்வாதிகளுக்கு உதவி செய்பவனல்ல. என்னிடம் உதவி கேட்கும் யாருக்கு வேண்டுமானாலும் என் அறிவின் துளியைக் கிள்ளித்தருவதே என் தருமம். ஆனால் அதை ஏந்தும் பாத்திரம் சரியாக இருக்க வேண்டும். சிந்துவது என் பிழையல்ல’.

‘நீ ஒரு வியாபாரி’ என்று வினய் சொன்னான்.

‘யார் சொன்னது? யாரிடமும் ஒரு பைசா நான் வாங்குவதில்லை. சேவைகளைச் சேவைகளாக மட்டுமே செய்கிறேன். கையேந்துவதில்லை’.

‘உண்மையாகவா?’

‘என் பலம் அதுதான். பணத்தை நான் தொட்டதே இல்லை என்றால் நம்புவாயா? இந்த உலகில் என்னைக் காட்டிலும் எளியவன் யாருமில்லை வினய். இந்தப் பயணத்தில் நான் உண்ணும் வாழைப்பழங்கள்கூட என் சீடர்கள் வாங்கித் தந்தவை. இந்தக் கணம் என்னை அடித்துப் போட்டால் உன்னால் எட்டணாகூட என்னிடமிருந்து எடுக்க முடியாது’.

அவனுக்குப் புரியவில்லை. ‘நீ என்னிடம் மறைக்கிறாய்’ என்று சொன்னான்.

‘நான் எதையுமே மறைப்பதில்லை. ஏனென்றால் மறைக்க என்னிடம் ஒன்றுமில்லை. யோசித்துப் பார்த்தால் வாழ்வில் நான் மறைத்த ஒரே விஷயம் அண்ணா வீட்டைவிட்டுப் போன சம்பவம் மட்டும்தான். அவனை ஓரளவு அப்போது அறிந்தவன் என்ற முறையில் அம்மாவிடம் நான் அதைச் சொல்லியிருக்கலாம். அன்றைய பக்குவம் அதற்கு இடம் தரவில்லை’ என்று சொன்னேன்.

அவன் நெடு நேரம் அமைதியாக இருந்தான். யோசித்துக்கொண்டிருப்பான் என்று தோன்றியது. இருபது வருடங்கள் ஒரு குருவுக்காகத் தேடியலைந்து இறுதியில் சுய தீட்சை அளித்துக்கொண்டு சன்னியாசியானவன் அவன். தேவர்களையும் கந்தர்வர்களையும் தெய்வங்களையும் உத்தேசித்து, பேய்களிடமும் குட்டிச்சாத்தான்களிடமும் சரணாகதியடைந்தவன். அவன் வளர்த்து வந்த இடாகினிப் பேய் ஒன்று ஒருநாள் அவனிடம் சொன்னதாம், ‘உனக்கு என்னைப் பயன்படுத்தத் தெரியவில்லை’.

அந்த அவமானத்தில் அதை அவிழ்த்துவிட்டு ஓடிப் போகச் சொல்லிவிட்டு கோதாவரி நதியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போயிருக்கிறான். ஒரு கட்டுமரக்காரன் காப்பாற்றிக் கரை சேர்த்து, தனது குடிசையிலேயே அவனைப் பத்து நாள்களுக்குத் தங்க வைத்து சோறு போட்டிருக்கிறான்.

‘புறப்படும்போது அவனுக்கு ஒரு தங்கக் காப்பை அன்பளிப்பாகத் தந்துவிட்டுப் போக நினைத்தேன் விமல். ஆனால் என் சக்திகள் என்னைக் கைவிட்டுப் போயிருந்தன. என்னால் ஒரு துரும்பைக்கூட என் வசப்படுத்த முடியாமல் போனது’ என்று சொன்னான்.

என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் சரி பாதியை அவன் வீணடித்திருக்கிறான். சொரிமுத்துச் சித்தனை விட்டு அவன் போயிருக்கவே கூடாது. அல்லது அவனிடமே திரும்பிச் சென்றிருக்க வேண்டும். அதை ஏன் அவன் செய்யாமல் போனான்?

‘தெரியவில்லை. ஏனோ எனக்கு மீண்டும் அவனிடம் போகத் தோன்றவேயில்லை. இந்நேரம் அவன் இறந்திருப்பான் அல்லவா? அப்போதே அவன் கிழவன்’ என்று சொன்னான்.

இறந்திருக்கலாம். அல்லது உயிரோடும் இருக்கலாம். சித்தர்கள் தமது மரணத்தைக் காரண காரியங்களுடன் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். இருந்தது போதும் என்பதல்ல; இல்லாமல் இருப்பதன் அவசியம் உணரப்படும்போது மட்டுமே அவர்கள் மறைகிறார்கள்.

நான் வினய்யிடம் சொன்னேன், ‘வருத்தப்படாதே. இன்றுவரை நீ தோற்றிருந்தாலும் இன்றுவரை நீ முயற்சி செய்யாமல் இல்லை. உனக்குத் தெரியுமா? சன்னியாசம் என்பது இறுதிவரை முயற்சியும் பயிற்சியும் மட்டுமே’.

‘என்றால் தேர்ச்சி?’

இதே வினாவை நான் ஒரு சமயம் என் குருநாதரிடம் கேட்டபோது மரணத்தை எதிர்கொள்ளும் விதத்தில்தான் ஒரு சன்னியாசி மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவான் என்று சொன்னார். எப்படி என்று நான் அவரிடம் கேட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் சொன்ன பதிலை என்னால் வினய்யிடம் சொல்ல முடியவில்லை.

சொன்னால் அவன் அந்தக் கணமே இறந்துவிடுவான் என்று தோன்றியதுதான் காரணம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com