106. கண்ணீரின் பனிக்குடம்

நாம் இருந்த பனிக்குடத்தில் கண்ணீரே நிறைந்திருந்திருக்கிறது. துடைப்பதற்கு நம்மில் யார் கையை நீட்டினாலும் மேலும் கண்ணீரையே பூசிவிட நேரும்.

‘ஒருநாள் நான் அண்ணாவைக் குறித்துத் தவமிருந்தேன்’ என்று வினய் சொன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.

‘என்ன?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘என்ன செய்து மீளலாம் என்று தெரியாத சூழ்நிலையில் உணர்ச்சி மேலிட்டு ஒருநாள் அவனை நினைத்துத் தவம் இருந்தேன். அவன் நேரில் வந்து உதவி செய்வான் என்று நினைத்தேன்’.

நான் சிரித்துவிட்டேன். ‘அவன் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால், உன் காதில் ஓங்காரம் ஓதி உட்கார வைத்துவிட்டுப் போவான். அதற்கு அவன் எதற்கு? சுயமாக தீட்சை வழங்கிக்கொள்ள முடிந்தவனுக்கு சுய மந்திரோபதேசமா சிரமம்?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அவன் என்னைச் சரிசெய்ய முடியும் என்று அப்போது நான் தீவிரமாக நம்பினேன்’.

‘சரி. உன் தவத்துக்குப் பலனாக அவன் வந்தானா?’

‘வரவில்லை. ஆனால் பேசினான்’.

‘ஓ. என்ன சொன்னான்?’

‘என்னை இமயமலைக்குப் போகச் சொன்னான். சிரமப்பட்டாவது மானசரோவரத்தின் கரையைச் சென்றடைந்துவிடச் சொன்னான்’.

‘பிறகு?’

‘ஒரு பரிக்ரமாவை முடித்துவிட்டு மானசரோவரத்திலேயே அமர்ந்து எட்டு நாள் தவம் செய்யச் சொன்னான்’.

‘செய்தாயா?’

‘இல்லை’.

‘ஏன்?’

‘என்னால் நேபாளத்துக்கு மேலே போக முடியவில்லை. நடப்பது சிரமமாக இருந்தது. மூச்சு விட முடியவில்லை’.

‘அங்கேயே உட்கார்ந்து அவனைத் திரும்பக் கூப்பிட்டுப் பிரச்னையைச் சொல்ல வேண்டியதுதானே? ஆஞ்சநேயர் மாதிரி யாரையாவது அனுப்பி, தூக்கிக்கொண்டு போய் இறக்கிவிடச் சொல்லியிருப்பானே’.

‘நீ கிண்டல் செய்கிறாய்’.

‘வினய், வேறென்ன செய்ய முடியும் சொல். நீ இவ்வளவு அப்பாவியாக இருக்கக் கூடாது. உனக்கு உன் பிரச்னை என்ன என்பதிலேயே நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன’.

‘எனக்கு ஒரே ஒரு பிரச்னைதான். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதுதான் அது’.

‘காரணம், நீ உன் இயல்பில் பயணம் செய்யவேயில்லை. அப்பா சந்தோஷத்துக்காகக் காஞ்சீபுரம் மடத்துக்குப் போய்ச் சேர்ந்தாய். வழியில் அண்ணாவைப் பார்த்துப் பரவசமாகி, அவன் காட்டிய பாதையில் போனாய். சொரிமுத்து செய்து காட்டிய சித்து வேலைகளில் லயித்து அவனுக்குச் சீடனானாய். யாரோ ஒரு துலுக்கனைக் கொன்றாயே, அதுகூட அவனால் செய்ய முடிவதை நம்மால் செய்ய முடியவில்லையே என்ற சுய ஏக்கத்தின் விளைவுதான்’.

அவன் நெடுநேரம் கண்ணிமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘வினய், நான் சொன்னேனே சுதந்திரம், அதன் முதல் விதியே அடுத்தவனை நினைக்காதிருப்பதும் அவன் சொற்படி வாழாதிருப்பதும்தான்’.

‘நீ அப்படித்தான் இருக்கிறாயா?’

‘சந்தேகமில்லாமல். நான் என் குருவோடு இருந்த காலத்தில்கூட ஒருநாளும் அவர் சொன்னதைக் கேட்டதில்லை’.

‘இது ஒரு அகங்கார நிலையல்லவா?’

‘சன்னியாசம் என்பதே அகங்கார வெளிப்பாடல்லவா?’

‘ஐயோ’ என்றான்.

‘என்ன ஐயோ? நம் நான்கு பேரில் உச்சபட்ச அகங்காரி அண்ணாதான். அவனுக்கு அவன்தான் முக்கியமாக இருந்தான். அவன் அடைய வேண்டிய இலக்கு முக்கியமாக இருந்தது. அவனது சாதகங்கள், அவனது தவம், அவனது மீட்சி. வீட்டைத் தூக்கியெறிந்துவிட்டுப் போனவன் சும்மா போய்ச் சேராமல் உன்னையும் உருப்படாமல் ஆக்கிவிட்டுப் போனான். சுயநலம் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடுதான்’.

‘இல்லை. நீ முற்றிலும் பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். துறவில் அகங்காரம் கிடையாது. இன்னும் புரியும்படிச் சொல்கிறேன். எனக்கு அகங்காரம் கிடையாது. ஆனால் நான் சன்னியாசியா என்கிற சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது’.

‘அதுதான். நான் சொல்ல வருவதும் அதுதான். அகங்காரம் இருந்திருந்தால் நீ சன்னியாசியாகியிருப்பாய். அல்லது அதை உணர்ந்திருப்பாய்’.

‘மன்னித்துக்கொள் விமல். நான் அடைய விரும்பும் தெளிவு வேறு. நீ அடைந்ததாக எண்ணியிருக்கும் தெளிவு வேறு. இது என்றுமே சேராது’ என்று அவன் சொன்னான்.

உண்மைதான். இதை முதல் முதலில் நான் ஶ்ரீரங்கப்பட்டணத்து முக்கூடல் சங்கமத்தில் அவனைச் சந்தித்த அன்றே உணர்ந்தேன். சொன்னால் வருத்தப்படுவான் என்பதால் சொல்லாமல் இருந்துவிட்டேன். எந்தவிதத்திலாவது அவனுக்கு உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. நாங்கள் வீடு போய்ச் சேரும் நேரம் அம்மா பிராணனை விட்டுவிட்டால், அதோடு வினய் தனது துறவை விட்டுவிடும் அபாயம் இருப்பதாக ஏனோ எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. துறவியானால் என்ன, யாரானால் என்ன? மனிதப் பிறப்பின் ஆதார விருப்பங்களுள் ஒன்று பழி வாங்குவது. அவன் தன்னைப் பழிவாங்கிக்கொள்ளத் தன் துறவைக் களைந்துவிடுவான் என்று நினைத்தேன். ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னைக் கேட்டால் அவன் அப்படிப் போவதே நல்லது என்பேன். ஆனால் அதைச் சொல்ல இதுவல்ல தருணம். முதலில் ஊர் போய்ச் சேர வேண்டும்.

பயணம் மிக நீண்டதாகவும் களைப்பூட்டக்கூடியதாகவும் இருந்தது. பேசிக்கொண்டு வந்ததால் ஓரளவு களைப்பு மறந்திருக்க முடிந்தது. அண்ணா தன்னோடு பேசினான் என்று அவன் சொன்ன பின்பு அந்தக் களைப்பு பூதாகாரமாகப் பெருகத் தொடங்கிவிட்டது. அவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் தன் மனத்தில்? என்னைத் தவிர எல்லோருடனும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறான். வினோத் என்னவானான் என்று அதுவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக அவனோடும் அண்ணா தொடர்பில் இருந்திருப்பான். வழி நடத்தியிருப்பான். பேசியிருப்பான். சந்தித்திருந்தால்கூட வியப்பதற்கில்லை.

நான் வினய்யிடம் கேட்டேன். ‘வினோத்தைப் பற்றி உனக்கும் ஒன்றுமே தெரியாதா?’

‘தெரியவில்லை. எனக்கு அவன் முகமே மறந்துவிட்டது’ என்று அவன் சொன்னான். அதெப்படி மறக்கும்? எனக்குச் சிறு வயது முகங்கள் அனைத்தும் அப்படி அப்படியே நினைவில் இருக்கின்றன. என் உடன் பிறந்தவர்களின் முகங்கள் மட்டுமல்ல. திருவிடந்தையில் நான் பார்த்த அத்தனை பேரின் முகங்களும் நினைவில் உள்ளன. தற்கொலை செய்துகொண்டு இறந்த சித்ராவின் முகம் பார்க்க விகாரமாக இருந்தது என்று கேசவன் மாமா என்னிடம் சொல்லியிருந்தார். என் மனத்தில் இருந்த சித்ராவின் முகம் ஓர் அகல் விளக்கை நிகர்த்த அழகு கொண்டது. வினய்யிடம் நான் அதை நினைவுகூர்ந்தபோது, ‘ஆம். அவள் அழகிதான். வினோத் அவளைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம்’ என்று சொன்னான்.

‘எதற்கு? முகமது குட்டியைத் தேடிச் சென்று கொலை செய்ததுபோல அவனையும் உன் கையால் மோட்சத்துக்கு அனுப்புவதற்கா?’

‘சேச்சே. எனக்கு அப்படியொரு பொறாமை எழ வாய்ப்பில்லை விமல்’.

‘அது அந்தத் திருமணம் நின்றுபோனதால் ஏற்பட்ட உணர்வு. அவள் தற்கொலை செய்துகொண்டதாலும் வினோத் ஓடிப்போய்விட்டதனாலும் நீ சொல்லும் சொற்கள்’.

‘அப்படியா நினைக்கிறாய்? தெரியவில்லை. ஆனால், விடிந்தால் திருமணம் என்ற நிலையில் ஒருவன் அனைத்தையும் துறந்துவிட்டுப்போவது என்பது பயங்கரம்’.

‘துறவு மனப்பான்மை திட்டமிட்டு வராது அல்லவா? அது ஒரு தற்செயல்’.

‘ஆம். தற்செயல்தான். ஆனாலும் எதுவோ ஒன்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்’.

‘என்னை எதுவும் தூண்டவில்லை’.

‘இல்லை. நீ அண்ணாவைத் தேடி அலைந்துகொண்டிருந்தாய். அலைதலின் சுகமே உன் சன்னியாசத்தின் தூண்டுதல்’ என்று அவன் சொன்னான்.

யோசித்துப் பார்த்தேன். பகுதியளவில் அவன் சொல்வது உண்மை என்றே தோன்றியது. ஆனால் நான் அப்படியொன்றும் அலைதலில் விருப்பம் கொண்டவனல்ல. என் அலைச்சலுக்கோ, அசையாதிருக்கும் நிலைக்கோ யாருக்கும் விளக்கம் தர விரும்பாத மனமே அடிப்படைக் காரணம்.

‘வினய், இந்த உலகில் நான் அச்சப்படும் ஒரே விஷயம் கண்ணீர். உண்மையில் நான் கண்ணீருக்கு பயந்துதான் ஓடினேன். என் சன்னியாசம் ஒரு பயத்தில் இருந்து பிறந்ததுதான்’ என்று சொன்னேன்.

‘உண்மையாகவா?’

‘ஆம். என்னால் அம்மாவின் கண்ணீரைத் தாங்கவே முடியவில்லை. அவள் அழாதிருந்தபோதும் அவள் கண்ணீரின் பாரம் என் தலையில் ஒரு பனிப்பாறையாகத் திரும்பத் திரும்ப விழுந்துகொண்டே இருந்தது. நான் விட்டுச் சென்றதற்கு அந்த வலிதான் முக்கியமான காரணம்’.

சிறிது நேரம் இடைவெளிவிட்டு அவன் கேட்டான், ‘அந்தக் கண்ணீரைத் துடைக்க உனக்குத் தோன்றவில்லை அல்லவா?’

நான் சிரித்துவிட்டேன். அப்படித் துடைக்க நினைத்தவன்தான் இன்னொரு குடும்பத்தையும் சேர்த்து அழ வைத்துவிட்டுப் போனான்.

‘வினய், நாம் இருந்த பனிக்குடத்தில் கண்ணீரே நிறைந்திருந்திருக்கிறது. துடைப்பதற்கு நம்மில் யார் கையை நீட்டினாலும் மேலும் கண்ணீரையே பூசிவிட நேரும். என் நோக்கம் வெளியேறிய கண்ணீரைக் காய விடுவதுதானே தவிர, காய்ந்த ஊற்றைப் பீறிட வைப்பதல்ல’.

அவன் புன்னகை செய்தான். என்னை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டான். ‘நான் சொன்னதைத் திரும்பப் பெறுகிறேன். நீ சன்னியாசிதான்’ என்று சொன்னான்.

மீண்டும் அவன் தவறாகத்தான் புரிந்துகொண்டான் என்பதை நான் சொல்லவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com