111. தரிசனம்

வினோத் கண்ணைத் திறந்தபோது அண்ணாவின் நடு நெற்றியில் சிறியதாக ஓர் உருவம் தெரிந்தது. ஒரு யோகியின் உருவம். அது கபிலர்தான்..

கயாவில் அண்ணாவைச் சந்தித்த கதையை வினோத் முக்கால் மணி நேரம் எங்களுக்குச் சொன்னான். பிராட்வே பேருந்து நிறுத்த ஜன நெரிசலோ, துர்நாற்றமோ, ஓயாத பெரும் சத்தமோ எங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஒரு பெஞ்சில் நாங்கள் மூவரும் சென்று அமர்ந்துகொண்டோம். சிறிது நேரம் வினோத் என்னைப் பற்றியும் வினய்யைப் பற்றியும் விசாரித்துவிட்டு அவன் அண்ணாவைச் சந்தித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவனுக்கு அப்போது அப்பா காலமான விவரம் தெரியாது. அவனது சக கிருஷ்ண பக்தி இயக்கத் தோழமை சன்னியாசிகள் இருவரோடு கயாவுக்கு சுற்றுலாவாகச் சென்றிருக்கிறான். அங்கே ஒரு ஸ்டால் அமைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சொந்தமாக ஓரிடம். பின்னால் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். அது பிரச்னையில்லை. முதலில் சிறிய அளவில் ஒரு கடை. புத்தகங்கள், போட்டோக்கள், ஜப மாலைகள், கோபி சந்தனம், ஊதுபத்தி விற்பனை. இந்த உலகில் தன்னார்வலர்களுக்குப் பஞ்சமே இல்லாத ஒரே இயக்கம் கிருஷ்ண பக்தி இயக்கம்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஒரு பொட்டு நெருப்பை எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டால் போதும். ஊர் முழுக்க அதைப் பரவச் செய்துவிடத் தெரிந்த வல்லவர்கள். பக்தியைக் கேளிக்கையாகவும் கொண்டாட்டமாகவும் ஆக்கிவிடும்போது, சராசரி மனங்கள் அதை எளிதில் விரும்ப ஆரம்பித்துவிடும். கேளிக்கையின் உச்சத்தில் பக்தியை நகர்த்தி வைத்துவிட்டாலும், கூடிய கூட்டம் நகராமல் நிற்கும். ரஜனீஷ் அதனைத்தான் செய்தார்.

‘ஆனால் நாங்கள் கேளிக்கையை நிராகரிக்கிறோம் விமல். கொண்டாட்டம் என்பது மட்டும் சரி. பக்தி, கொண்டாடப்பட வேண்டியதுதான்’ என்று வினோத் சொன்னான்.

கயாவில் அவர்கள் ஓரிடத்தைப் பார்த்து விலை பேசி முடித்துவிட்டு, கடை அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது ஒருநாள் வினோத் கங்கைக் கரையில் தன் தோழர்களோடு காலை நடை சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அண்ணாவை அவன் பார்த்தான்.

முதலில் அவனுக்கு அது அண்ணாதானா என்று சந்தேகமாக இருந்தது. தடதடவென்று அருகே ஓடிச் சென்று உற்றுப் பார்த்திருக்கிறான். அண்ணாதான். நீருக்குள் நின்றுகொண்டு தர்ப்பணம் செய்துகொண்டிருந்தான். ‘விஜய், விஜய்’ என்று அவன் இரண்டு முறை உரக்க அழைத்தும் அவன் திரும்பவில்லை.

‘அவர் யார்? உங்களுக்குத் தெரிந்தவரா?’ என்று வினோத்தின் நண்பர்கள் கேட்டார்கள்.

‘ஆம். அவன் என் அண்ணா’.

அவர்களால் நம்பவே முடியவில்லை. விஜய் அப்போது இடுப்பு வரை நீண்ட சடாமுடியும் மழித்த முகமுமாக இருந்தான். இடையில் ஒரு கோவணம் மட்டும் கட்டி, இரு தோள்பட்டைகளிலும் ஏதோ மணிக்கயிறு அணிந்திருந்தான். கழுத்தில் ஒன்றுமில்லை. பூணூல் அணிந்திருக்கவில்லை. நதியில் நீரோட்டம் அதிகம் இருந்தது. நின்றால் நகர்த்திவிடும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது வலுவான கால்களால் புவியை அழுத்திக்கொண்டு நின்று நீர்க்கடமை ஆற்றிக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்கள் அவன் அசையவில்லை, திரும்பவில்லை. முடித்துவிட்டு ஒரு முக்குப் போட்டு எழுந்தான். சூரியனைப் பார்த்துக் கும்பிட்டான். பிறகு கரைக்குத் திரும்பி வந்தான்.

தாங்க முடியாத வியப்புடன் வினோத் அவனை நோக்கி ஓடி, ‘விஜய், நீயா!’ என்றான்.

அண்ணா புன்னகை செய்தான்.

‘எப்படி இருக்கிறாய்? இங்கேதான் இருக்கிறாயா?’

‘இல்லை. நேற்றிரவு அப்பா காலமாகிவிட்டார். அவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பதற்காக இங்கே வந்தேன்’ என்று சாதாரணமாகச் சொன்னான்.

வினோத்துக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சில விநாடிகள் பேச்சற்று நின்றுவிட்டான். பிறகு சட்டென்று அங்கேயே அமர்ந்து அப்பாவுக்காகச் சில நிமிடங்கள் தியானம் செய்தான். அவன் கண் விழித்து எழும்வரை அண்ணா அமைதியாக நின்றுகொண்டிருந்தான். எழுந்தபின், ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டான்.

‘நீ?’

அவன் பதில் சொல்லவில்லை. சிரித்தான்.

‘நான் உன்னை இப்படிக் கற்பனை செய்திருக்கவில்லை’ என்று வினோத் சொன்னான்.

‘ஆனால் நான் நினைத்த மாதிரிதான் நீ உருப்பெற்றிருக்கிறாய்’.

‘நீ என்ன நினைத்தாய்?’

‘நீ ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாவாய் என்று நினைத்தேன்’.

‘எப்போது?’

‘சிறு வயதிலேயே. உனக்கு சிவலிங்கம் கிடைத்ததே. அப்போதே’.

வினய்க்கு அது ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு லிங்கம் கிடைத்தது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டான்.

‘இது ஒரு பெரிய விஷயமா? திருவானைக்காவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சொன்னார்’.

‘எனக்கு லிங்கம் கிடைத்தது அவருக்கு எப்படித் தெரியும்?’

‘அதெல்லாம் அவ்வளவு முக்கியமா? உன் கிருஷ்ணனை நீ பார்த்துவிட்டாயா? அதைச் சொல்’.

வினோத் தனது நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். அவர்களை அழைத்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான். அண்ணா அவர்களுக்கு வணக்கம் சொன்னான்.

சிறு வயதிலேயே அண்ணா வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற கதையை வினோத் சுருக்கமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னதும், அவர்களுக்கு அண்ணாவின் மீது பெருமதிப்பு உருவானது. ‘இப்போது எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘எங்கும் இருப்பதில்லை. சுற்றிக்கொண்டே இருப்பேன். பெரும்பாலும் இமயச் சாரல்களில். எப்போதாவது காசியில்’.

வினோத் கேட்டான், ‘விஜய், எனக்காவது சொல். உன் குரு யார்? எந்த சக்தி உன்னை வீட்டை விட்டு அழைத்துச் சென்றது?’

‘நான் கபிலரின் மாணவன்’ என்றுதான் அண்ணா அவனிடமும் சொல்லியிருக்கிறான்.

‘கபிலரா?’

‘ஆம். திருவிடந்தை அல்லிக் குளத்தின் அடியில் அப்போது அவர் தவம் புரிந்துகொண்டிருந்தார். நான் அவரை தினமும் சந்தித்தேன். அவரிடம்தான் யோகாப்பியாசங்கள் கற்றேன்’.

நம்புவதற்கு சிரமம் தரக்கூடிய அந்தத் தகவல்களை வினோத்தின் நண்பர்கள் உணர்ச்சியற்ற பாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வினோத்துக்கு அந்த விதமான உரையாடலைத் தொடருவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே சட்டென்று பேச்சை மாற்றி, ‘நீ எங்கே தங்கியிருக்கிறாய்? வா போகலாம்’ என்று சொன்னான். அண்ணா புன்னகை செய்து வினோத்தின் நண்பர்களைப் பார்த்து இடக்கையை உயர்த்தி ஆசி சொன்னான். அது அவர்களுக்குச் சற்று அதிர்ச்சியளித்தது. பொதுவாக சன்னியாசிகளுக்கு யாரும் ஆசி சொல்வதில்லை. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களும் மிக மூத்த துறவிகளும் மட்டுமே அதைச் செய்வார்கள். அண்ணாவுக்கு மிஞ்சினால் என்ன வயது இருக்கும்? அந்த கிருஷ்ண பக்தத் துறவிகளுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். எனவே அவன் கையை உயர்த்தி ஆசி சொன்னதும் அவர்கள் சற்றுத் திகைத்துவிட்டார்கள்.

அண்ணா புன்னகை செய்தான், ‘நீங்கள் வைணவத் துறவிகள் அல்லவா? நான் வணங்கியதும் நீங்களும் என்னை வணங்கினீர்கள். அதேபோல் நான் ஆசி சொன்னதும் நீங்கள் சொல்ல வேண்டாமா?’ என்று கேட்டான்.

‘ஏன் நீங்கள் வைணவர் இல்லையா?’ என்று வினோத்தின் நண்பர் ஒருவர் கேட்டதும் அண்ணா மீண்டும் சிரித்தான். இல்லை என்று சொன்னான்.

‘பிறகு? உங்கள் குரு கபிலரே ஒரு வைணவர்தானே?’

அண்ணா இப்போது வாய்விட்டுச் சிரித்துவிட்டான். வெகு நேரம் சிரித்தான். மூச்சு விடாமல், கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்தான். பிறகு, ‘உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். கபிலர் ஒரு நாத்திகர்’.

என்ன, என்ன என்று அவர்கள் அதிர்ச்சியடைந்து பரபரப்பானார்கள். அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னான், ‘பிறகெப்படி அவர் சாங்கியத் தத்துவத்தை முன்வைப்பார்? பௌதிகப் பிரபஞ்சத்தின் தன்மையையும் அடிப்படைகளையும் பேசுவதல்லவா சாங்கியம்? பகுத்தறியாமல் மெட்டாஃபிசிக்ஸ் ஏது?’

அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். ‘இல்லை. நீங்கள் சொல்வது தவறு. கபிலர் மகாவிஷ்ணுவின் அம்சம். அவதாரம் என்றே சொல்வார்கள்’.

‘இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கபிலரைவிட ஜடத்துக்கும் சேதனத்துக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் அவரது தத்துவம்தான் முக்கியம்’ என்று சொன்னான்.

‘அதுதான் அதுதான்! ஜடத்துக்கும் சேதனத்துக்கும் உள்ள வேறுபாட்டின் புரிதலே பக்தியில்தானே நிகழ்கிறது?’

‘இல்லை. ஞானத்தில்’ என்று சொல்லிவிட்டு அண்ணா வினோத்தின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். ‘நீங்கள் நமது இருப்பிடத்துக்குச் செல்லுங்கள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன்’ என்று வினோத் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு அண்ணாவோடு நடக்க ஆரம்பித்தான்.

நகருக்கு வெளியே ஒரு கானகத்துக்குள் அண்ணா அவனை அழைத்துச் சென்றான்.

‘நீ இங்கேயா இருக்கிறாய்?’

‘கயாவுக்கு வந்தால் இங்கே தங்குவேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சிறிய குகைக்குள் அவன் வினோத்தை அழைத்துச் சென்றான். மிகச் சிறிய குகை. இயற்கையான குகை போல அது இல்லை. சாதுக்கள் யாரோ தமது சௌகரியத்துக்கு ஆள் வைத்து உருவாக்கிய குகை போலிருந்தது. நான்கு புறமும் பாறைகள் அடைத்து, இடைவெளிகளை சிமெண்டால் பூசியிருந்தார்கள். தரை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அண்ணா ஒரு நீண்ட மரப்பலகையை எடுத்துப் போட்டு, உட்கார் என்று சொன்னான்.

வினோத் உட்கார்ந்தான். ‘ஏதாவது சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டான்.

‘என்ன இருக்கிறது?’

‘பழங்கள் இருக்கின்றன. மாமிசம் இருக்கிறது. ஆனால் அதை நீ சாப்பிட மாட்டாய்!’

‘நீ மாமிசம் உண்பாயா?’

அண்ணா புன்னகை செய்தான். ‘பதினெட்டு நாள்களுக்கு ஒருமுறை நான் உணவு உட்கொள்வேன். அப்போது என்ன கிடைக்கிறதோ அதுதான் உணவு’.

‘என்னால் நம்பவே முடியவில்லை. மாமிசம் தவ நெறிக்கு முரணானதல்லவா?’

‘உடலுக்குத்தானே உணவு. உடலே தவத்துக்கு ஒரு ஊறுதான்’.

‘மடக்கிவிடும்படி பதில் சொல்லித் தப்பிக்க நினைக்காதே. உயிர்க்கொலை பாவம்’.

‘ஆம். ஆனால் நான் கொல்வதில்லை’.

‘பிறகு?’

‘இறந்தவற்றைத்தான் உட்கொள்வேன்’.

வினோத் அதிர்ச்சியடைந்தான். 'எதுவானாலுமா?'

‘ஆம். பிணத்தில் என்ன பேதம்? ஆடு, கோழி, மாடு, பன்றி, மான், மனிதன், மயில், குயில், காகம் எல்லாம் ஒன்றுதான்’.

‘ஹரே கிருஷ்ணா. நீ நர மாமிசம் உண்பாயா?’

‘இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். அது ஒரு சுத்திகரிப்பு. உனக்குப் புரியாது. புரியவும் வேண்டாம். நீ எப்படி இருக்கிறாய்? அதைச் சொல்’.

‘மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன்’.

‘வினோத், உறவை அறுத்ததுபோல உணவை அறுப்பது யோகிகளுக்கு முக்கியம். ஆனால் அப்பா இறந்ததை அறிந்ததும் தர்ப்பணம் செய்தேன் பார், அந்த மாதிரி பசிக்கும் நேரம் எதையாவது தின்னவேண்டி இருக்கிறது. ஒரு யோகிக்கு உணவில் தேர்வு சாத்தியங்கள் இல்லை’.

‘அப்பா இறந்துவிட்டதாக நீ சொன்னபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது’.

‘ஒரு தெருநாய் அடிபட்டு இறக்கும்போதும் அந்த வருத்தம் வருமானால் நீ சரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்’.

‘ஆம். அப்படித்தான் வருந்துகிறேன்’.

‘நல்லது. பழம் சாப்பிடு’ என்று சொல்லிவிட்டு, ஒரு ஓரமாக துணி சுற்றி வைத்திருந்த நான்கு வாழைப்பழங்களை எடுத்துவந்து கொடுத்தான். வினோத் அதைச் சாப்பிட்டதும் ‘குடிக்க நீர் வேண்டுமா?’ என்று கேட்டான். பிறகு அவனே வெளியே சென்று ஒரு மண் குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

‘உன்னை இன்று சந்திக்க வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை’ என்று சொன்னான்.

‘யார் இட்ட கட்டளை?’

‘அது சொன்னால் உனக்குப் புரியாது. ஆனால் உன் மனத்துக்குள் நான் ஒரு செய்தியை விதைக்க வேண்டும். அது உனக்குள் இறங்க வேண்டுமானால் நீ பசியற்று இருக்க வேண்டும். அதனால்தான் முதலில் சாப்பிடச் சொன்னேன்’.

‘புரியவில்லை’.

‘புரியவேண்டாம். சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இரு. கிருஷ்ணனை நினைத்துக்கொண்டிரு’ என்று சொன்னான்.

வினோத் அதற்குக் கட்டுப்பட்டு பத்மாசனமிட்டு அமர்ந்தான். கண்ணை மூடிக்கொண்டான். அண்ணா அவன் எதிரே அமர்ந்துகொண்டு அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. வினோத் கண்ணைத் திறந்தபோது அண்ணாவின் நடு நெற்றியில் சிறியதாக ஓர் உருவம் தெரிந்தது. ஒரு யோகியின் உருவம். அது கபிலர்தான் என்று வினோத்துக்குத் தோன்றியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com