112. கிருஷ்ணனாவது

வினோத்தால் அந்த நாளை மறக்கவே முடியாது. பூரண ஞானமடைந்த ஒரு யோகியின் எதிரே அமர்ந்திருக்கும் பரவசத்தில் நெடுநேரம் அவன் பேச்சற்று இருந்தான். அவனையறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.அவன் சம நிலைக்கு வரும்வரை அண்ணா அமைதி காத்தான். பிறகு, ‘எனக்கு இடப்பட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன்’ என்று சொன்னான்.

‘என்ன செய்தாய்?’

‘சொன்னேனே. உன் மனத்துக்குள் ஒரு செய்தியைப் புதைத்திருக்கிறேன்’.

‘இல்லை. என்னால் எதையும் உணர முடியவில்லை. உன்னிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை’.

‘இப்போது வராது. தேவைப்படும்போது அது உன் சிந்தையில் உதிக்கும்’.

‘புரியவில்லை’.

‘வினோத், உனக்கு அந்தத் தகவல் இப்போது தேவையில்லை. ஆனால் ஒருநாள் அது தேவைப்படும். அன்று என் குரல் உன் மனத்தில் அதை ஒலிபரப்பும்’.

‘இதெல்லாம் மாயாஜாலம் போல இருக்கிறது’.

‘ஒன்றுமே இல்லை. வெறும் அறிவியல்’ என்று அண்ணா சொன்னான்.

‘அறிவியலா?’

‘ஆம். அறிவியல்தான். ஒரு கேசட்டில் பதிவுசெய்து வைப்பதைப் போல உன் மனத்துக்குள் பதிந்து வைத்திருக்கிறேன். அவ்வளவுதான். உரிய நேரத்தில் அது ஒலிபரப்பாகும்’.

வினோத் அவனை பிரமித்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘விஜய், நான் எளியவன். எனக்கு யோகம் தெரியாது. சித்து தெரியாது. ஞானமடைந்தவனா என்றால் அதையும் யோசித்துத்தான் சொல்லவேண்டி இருக்கும். ஆனால் நான் பக்தியை என் வழியாகக் கொண்டவன். பக்தி ஒன்றே முக்திக்கு வழி என்று நினைப்பவன்’.

‘தவறில்லை’.

‘எனக்கு கிருஷ்ண மந்திரம் தவிர வேறெதுவும் தெரியாது’.

‘தெரிந்தது போதுமே?’

‘நாம ஜெபம் ஒன்றுதான் நான் செய்வது. நாள் முழுவதும் அதைத்தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்’.

‘கடை திறப்பது போன்ற கட்டளைகளையா?’

‘ஆம். அதுவும் உண்டு. எங்கள் இயக்கம் செய்யும் பணிகளுள் முதன்மையானது அன்னதானம். தேசம் முழுதும் மிகப்பெரிய அளவில் நடக்கிற காரியம். அதற்கு நிதி வசூல் செய்வதுதான் எனக்கு அனைத்தினும் தலையாய பணி’.

அண்ணா சிரித்தான். ‘பரவாயில்லை. ஆனால் உன் துறவின் நோக்கம் இதுவா என்று அவ்வப்போது கேட்டுக்கொள்’.

‘கேட்காமல் இல்லை. என் துறவின் நோக்கம் அன்றைக்கு ஒளிக் கோளமாகத் தென்பட்டவனின் உருவத்தைத் தெளிவாகப் பார்ப்பது. என்றைக்காவது அது நடந்துவிடும்’.

‘பார்ப்பதா? அது அத்தனை அவசியமா?’

‘இல்லையா?’

‘வினோத்! இறையை உணர்வதுதான் முதன்மையானது. இறைத்தன்மையை நெருங்குவது முக்கியமானது. இரண்டறக் கலத்தல் இறுதியில் வருவது’.

‘அப்படியா சொல்கிறாய்? ஆனால் என் நண்பர்களுடன் நீ பேசியதை வைத்து உன்னை நான் வேறு விதமாக எண்ணிவிட்டேன்’.

‘அது சும்மா தமாஷுக்குப் பேசியது. ஒன்றைப் புரிந்துகொள். அறிவியல் என்பது ஆன்மிகத்தின் புரிந்த பகுதி. புரிந்ததில் தெளிவு இருந்தால்தான் புரியாதவற்றை நோக்கி நகர முடியும்’.

‘எனக்கு உன்னைக் காண ஒரே பிரமிப்பாக இருக்கிறது. உன்னைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை’.

அண்ணா சிரித்தான்.

‘இது நம் குடும்பத்தின் விதி வினோத். நாம் நால்வரும் இப்படியாகப் பிரிந்து போக வேண்டியவர்கள் என்பது என்றோ முடிவான விஷயம்’.

‘அவ்வப்போது அம்மாவை எண்ணிக்கொள்வேன். சற்று வருத்தமாக இருக்கும்’.

‘என்ன வருத்தம்?’

‘நான்கைப் பெற்று நான்கையும் இழப்பதன் வலியைச் சொன்னேன்’.

அண்ணா இதற்கு பதில் சொல்லவில்லை. நெடுநேரம் பேசாதிருந்துவிட்டு, ‘அவள் சமாளித்துக்கொண்டுவிட்டாள்’ என்று சொன்னான்.

‘அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? நீ அவர்களைச் சந்தித்தாயா?’

‘சந்திக்கவில்லை. ஆனால் கவனிக்கிறேன்’.

‘வினய் என்ன செய்கிறான்?’

அண்ணா சிரித்தான். ‘அவன் விதியை வெல்லப் பார்க்கிறான். ஆனால் அவனால் அது முடியாது’.

‘ஐயோ’.

‘அவன் ஒரு மாயவலைக்குள் சிக்கிக்கொண்டான். மீள முடியாமல் அவதிப்படுகிறான்’.

‘உன்னால் உதவ முடியாதா?’

‘முடியாது’ என்று உடனே சொன்னான்.

‘ஏன்?’

‘எனக்கு அதற்கு அனுமதி இல்லை’.

வினோத்துக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. சிறிது நேரம் கண்மூடி ஜபம் செய்தான். பிறகு, ‘விமல்?’ என்று கேட்டான்.

அண்ணா சிரித்துவிட்டான்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘அவனும் சன்னியாச ஆசிரமத்தைத்தான் ஏற்றான். ஆனால் ராஜரிஷி ஆகிவிட்டான். வாழ்நாளில் ஒருபோதும் அவன் உண்மை உணரமாட்டான்’.

‘என்ன சொல்கிறாய்?’

‘அவன் ஒரு அரசியல் புரோக்கர். விடு. அவனை மறந்துவிடு’.

வினோத்துக்கு நெடுநேரம் வியப்பு தீரவேயில்லை. இது எப்படி,இது எப்படி என்று திரும்பத் திரும்பத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தான். அண்ணா அவனுக்குத் தன் வலக்கரத்தில் அணிந்திருந்த மணிக்கயிறை அவிழ்த்துக் கொடுத்தான்.

‘இதை வைத்துக்கொள். இது ஒரு காப்பு. இதை அணிந்துகொள்ள உங்கள் இயக்கம் அனுமதிக்குமா?’

‘தெரியவில்லை. நாங்கள் துளசி மாலை மட்டுமே அணிவோம்’ என்று கழுத்தைத் தொட்டுக் காட்டினான்.

‘பரவாயில்லை. உன் பையில் வைத்துக்கொள்’ என்று சொன்னான்.

வினோத் அதைத் தன் கழுத்தில் தொங்கிய பையில் போட்டுக்கொண்டான். அதில் ஏற்கெனவே ஒரு ஜபமாலை இருந்தது.

அண்ணா அவனிடம் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். சிறு வயதில் அவனுக்குக் கிடைத்த சுவடியைக் குறித்துச் சொன்னான். ‘அந்தச் சுவடி திருப்போரூர் சாமியிடம் உள்ளதை எனக்குச் சொன்னதே கபிலர்தான்’.

வினோத் சட்டெனக் கேட்டான், ‘கபிலர் ஏன் உன்னைத் தேர்ந்தெடுத்தார்?’

அண்ணா சிறிது யோசித்தான். பிறகு ‘தெரியவில்லை. எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்திருக்கிறது’ என்று சொன்னான்.

கிளம்பும்போது, ‘உனக்கு உபயோகப்படும்’ என்று சொல்லி இரண்டு மூச்சுப் பயிற்சிகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

‘மறுபடி உன்னை எப்போது பார்ப்பேன்?’ என்று வினோத் கேட்டான். சிரித்துவிட்டு அண்ணா அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

வினோத் இந்தச் சம்பவத்தை எங்களுக்குச் சொன்னபோது என்னால் வெறுமனே சிரிக்கத்தான் முடிந்தது. வினய்க்குத்தான் ஆற்றாமை பொங்கிவிட்டது. ‘நான் உருப்படமாட்டேன் என்று அவன் சொன்னானா? உண்மையிலேயே அப்படித்தான் சொன்னானா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டான். வினோத் அவனை சமாதானப்படுத்த முடிவு செய்தான்.

‘இதோ பார் வினய், பிழைப்பது அல்லது வாழ்வது என்பது வேறு. வாழ்வுக்கு அப்பால் உள்ளவற்றின் அடிப்படைகளை அறிவது வேறு. சன்னியாசம் அதற்கான அடிப்படை சௌகரியம். அதை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்த நினைப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் தொடக்கப்புள்ளி’ என்று சொன்னான்.

‘ஆம். புரிகிறது. ஆனால் பாதி வாழ்க்கை விரயமாகிவிட்டது’.

‘வருந்தாதே. வாழ்வின் நீளம் நீ அறியமாட்டாய். அது நூறாண்டுகளாக இருக்கலாம். நாளையே முடியக்கூடியதாகவும் இருக்கலாம். வாழும் கணத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்’.

‘இனி என்ன செய்வது?’

‘கிருஷ்ணனை நினை. அவனை மட்டும். பக்தி கூட வேண்டாம். வெறும் ஜபம் போதும். வெறுமனே உச்சரித்துக்கொண்டிருப்பதே உன்னை உய்யச் செய்யும்’ என்று வினோத் சொன்னபோது நான் பாய்ந்து அவன் வாயைப் பொத்தினேன்.

‘டேய் நிறுத்து. நீ எனக்கு ஒரு பாதிரி போலத் தெரிகிறாய்’ என்று சொன்னேன்.

‘இல்லை விமல். அவனைத் தடுக்காதே. அவன் எனக்கு நல்லது செய்ய நினைக்கிறான்’.

‘முட்டாள். உனக்கு ஒருவராலும் நல்லது செய்ய முடியாது. உன் வாழ்க்கையை அவன் வாழமாட்டான். உன்னால் ஒருபோதும் அவன் வழியில் போக முடியாது’.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘நாம் இடறுகிறோம் என்று நீ நினைத்திருந்தால், என்றோ சொரிமுத்துவிடம் திரும்பிச் சென்றிருப்பாய்’ என்று சொன்னேன்.

வினய் அமைதியாகிவிட்டான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘ஆம். நீ சொல்வது சரி. நான் யுத்த களத்தில் இருக்கிறேன். எனது தருமம் வேறு’ என்று சொன்னான்.

நான் வினோத்திடம் வினய்யின் பிரச்னையைப் பற்றி விளக்கிச் சொன்னேன். ‘அவன் உன்னை, என்னை, அண்ணாவைவிட வல்லவன். துரதிருஷ்டவசமாக அவன் தெய்வங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கிவிட்டான். சரணடைந்தால் வாரியத் தலைவர் பதவி நிச்சயம். அதைக் காட்டிலும் அவன் எதிர்க்கட்சிக்காரனாக இருப்பதே நல்லது’ என்று நான் சொன்னதை வினோத் விரும்பவில்லை.

‘நீ மிகவும் மலினப்படுத்துகிறாய்’ என்று சொன்னான்.

‘இல்லை. அதுதான் உண்மை. அவனது கட்டை விரலைப் பார்’ என்று அவன் கையை எடுத்துக் காட்டினேன்.

பல்லாண்டுக்காலம் கட்டுப்போட்டு ஓர் இடாகினியை அடைத்து வைத்திருந்த அந்த விரலின் நிறமே கருநீலமாகியிருந்தது. ரத்த ஓட்டம் முற்றிலும் இல்லாமல் போய், அது ஒரு காய்ந்த கரித்துண்டுபோல் இருந்தது. வினோத்துக்கு அது புரியவில்லை. நான் விளக்கிச் சொன்னதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த உலகின் அனைத்துச் சிக்கல்களுக்கும் கிருஷ்ணன் தீர்வு தந்துவிடுவான் என்று அவன் சொன்னான்.

‘மடையா, வினய் ஒரு கிருஷ்ணனாகியிருக்க வேண்டியவன். இது உன் கிருஷ்ணனுக்கே தெரியும், கேட்டுப் பார்’ என்று கத்தினேன்.

வினோத் பயந்துவிட்டான். ‘சரி. நான் உனக்காக ஜபம் செய்கிறேன்’ என்று வினய்யிடம் சொன்னான்.

நான் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com