115. இருவர்

இடைவிடாது பக்தி செய்வதன் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்று திரும்பத் திரும்ப அவனுக்குச் சொல்லித் தரப்பட்டிருந்தது. அவன் அதைத்தான் செய்துகொண்டிருந்தான்.

தன் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அந்தப் பேரொளியின் தரிசனம் கிட்டுமா என்று வினோத் அந்த முதல் தரிசனம் நிகழ்ந்த கணத்தில் இருந்து ஏங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு முறை அப்படியொரு தரிசனம் கிடைக்குமானால், கண்டிப்பாக ஒளியின் ஊடே கிருஷ்ணனைத் தரிசித்துவிட முடியும் என்று அவன் மனத்தில் உறுதியாகத் தோன்றியது. விழித்திருந்த நேரமெல்லாம் அதைக் குறித்து மட்டுமே அவன் யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால் என்ன யோசித்தும் அந்த முதல் தரிசன அனுபவத்தை மீளக் கொண்டுவர முடியவில்லை. இடைவிடாது பக்தி செய்வதன் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்று திரும்பத் திரும்ப அவனுக்குச் சொல்லித் தரப்பட்டிருந்தது. அவன் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். எப்போதும் கிருஷ்ண ஜபம். செய்கிற ஒவ்வொரு செயலையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எண்ணியே செய்தான். உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்றுவரை கிருஷ்ணனைத் தவிர வேறில்லை என்பதில் அவனுக்குச் சற்றும் சந்தேகமில்லை. யாருமற்ற பொழுதுகளில் கிருஷ்ண ஸ்மரணை அதிகரித்து, சமயத்தில் அழவும் ஆரம்பித்துவிடுவான். எப்படியாவது உன்னைப் பார்த்துவிட வேண்டும் கிருஷ்ணா என்று தனக்குள் கதறுவான். திருமணத்துக்கு முதல் நாள் தனக்குக் காட்சி கொடுப்பதற்காக வந்துவிட்டு என்ன காரணத்தாலோ கிருஷ்ணன் வேண்டாம் என்று மனத்தை மாற்றிக்கொண்டு போய்விட்டதாக அவன் நினைத்தான். இன்னொரு முறை ஒளிக்கோளம் தென்பட்டால் பாய்ந்து அதன் உள்ளே புகுந்துவிட வேண்டும் என்று அப்போதே நிச்சயம் செய்துகொண்டான்.

கொழும்பு துறைமுகத்தில் அவர்கள் சென்ற கப்பல் நின்றதும், பயணிகள் அனைவரும் முதலில் இறங்கிய பின்பு சன்னியாசிகள் தனியே மொத்தமாக இறங்கினார்கள். மொத்தம் எட்டு சன்னியாசிகள். அவர்களோடு பன்னிரண்டு பிரம்மச்சாரிகள். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். பாதுகாப்பு கெடுபிடிகளும் பரிசோதனைகளும் அதிகம் இருந்தன. மலையகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியால்தான் அவர்களால் கொழும்புவுக்கு வர முடிந்திருந்தது. இலங்கையில் ஒரு கிருஷ்ணர் ஆலயத்தை எழுப்புவதற்கான சாத்தியங்களை ஆராய்வது திட்டம்.

வினோத் அன்றிரவு சக பிரம்மச்சாரிகளுடன் ஒரு பள்ளிக்கூடக் கட்டடத்தில் தங்கினான். என்றோ அது பள்ளிக்கூடமாக இருந்திருக்க வேண்டும். அப்போது அது செயல்பாட்டில் இல்லை. உடைந்த ஒரு சில மேசை நாற்காலிகள் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தவர், இழுத்து மூடிவிட்டு லண்டனுக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். கிருஷ்ணரின் சேவையில் இருப்பவர்களுக்கு சுக சௌகரியங்கள் ஒரு பொருட்டல்ல. அவர்கள் அன்றிரவு பிரெட்டும் வாழைப்பழமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தரையில் துணி விரித்துப் படுத்தார்கள்.

அதிகாலை மூன்று மணிக்கு வினோத்துக்கு யாரோ எழுப்புவது போன்ற உணர்வு ஏற்பட்டது. திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தபோது அந்த ஒளிக்கோளம் அவன் படுத்திருந்த அறைக்கு வெளியே அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தது. வினோத் பரவசமாகிப் போனான். உடனே எழுந்து ‘கிருஷ்ணா..’ என்று கத்திக்கொண்டு அதனை நோக்கிப் பாய்ந்தான். முதல்முறை நிகழ்ந்தது போலவே இப்போதும் அந்த ஒளிக்கோளம் மெல்ல நகர்ந்து போக ஆரம்பித்தது. வினோத் அதன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினான். அவன் எவ்வளவு வேகமாக ஓடியும் அந்தக் கோளத்தை அவனால் நெருங்க முடியவில்லை. அவன் கிட்டே போகும்போதெல்லாம் அது பத்தடி தள்ளிப் போய் இருந்தது. ‘கிருஷ்ணா, இந்த முறை என்னைக் கைவிடாதே. என்னை ஏற்றுக்கொண்டுவிடு. உன்னோடு சேர்த்துக்கொண்டுவிடு’ என்று கதறியபடியே வினோத் அதைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

நெடுந்தூரம் அவன் நடந்து போய்க்கொண்டே இருந்தான். ஒளியும் நிற்காமல் மிதந்து சென்றுகொண்டே இருந்தது. முற்றிலும் சுய நினைவு அழிந்து அந்த ஒளிக் கோளம் சென்ற திக்கில் அவன் போனான். தோட்டமா, காடா என்று சரியாகத் தெரியாத ஒரு பகுதிக்குள் அது சென்றது. வினோத்தும் விடாமல் அங்கே சென்று சேர, இறுதியில் ஒரு சிறு கோயிலின் பின்புறமாகச் சென்று அந்த ஒளி மறைந்துவிட்டது. வினோத் அதிர்ச்சியானான். கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறியபடியே கோயிலைச் சுற்றி வந்து முன்புறம் வந்தான். சன்னிதி மூடியிருந்தது. ஆனால் உள்ளே பார்க்கும்படியாகக் கம்பிக் கதவுதான் போடப்பட்டிருந்தது. சிறியதொரு விளக்கு மட்டும் அங்கே எரிந்துகொண்டிருக்க, வினோத் உள்ளே பார்த்தபோது ஒரு சிவ லிங்கம் தெரிந்தது.

அந்தக் கணத்தில் அவனுக்கு சுய நினைவு மீண்டது. இது என்ன? கிருஷ்ணன் எதற்காக என்னை ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்து வந்து விட்டிருக்கிறான்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று காவிரி வெள்ளத்தில் தனக்குக் கிடைத்த சிவலிங்கத்தை நினைத்துக்கொண்டான். அந்த லிங்கம் கிடைத்த நாளாக அவன் சிவ நாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தான். திருமணத்துக்கு முதல் நாள் கண்ட ஒளி, கிருஷ்ணன்தான் என்று அவன் மனத்தில் குறிப்பாக ஒன்று விழுந்ததில் இருந்துதான் அவன் கிருஷ்ணனை நினைக்க ஆரம்பித்திருந்தான். சற்றும் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் ஏன் தன்னை சிவன் சன்னிதியில் கொண்டு நிறுத்தியிருக்கிறான்?

வினோத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. மிகவும் குழப்பமாக, தலை சுற்றுவதுபோல் இருந்தது. மனத்துக்குள் ஒரு மெல்லிய குற்ற உணர்வு எழ ஆரம்பித்தது. சிவனை மறந்தது தவறோ? கிருஷ்ணன் அதைச் சுட்டிக்காட்டுகிறானோ? ஒருவேளை சிவனேதான் ஒளியாக முதலில் வந்தானோ? இப்போது வந்தவனும் அவனேதானா? அப்படியானால் அன்றைக்கு ஒளியைக் கண்ட கணத்தில் இது கிருஷ்ணன் என்று ஏன் மனத்தில் தோன்ற வேண்டும்?

மெல்ல மெல்ல அவனது பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிப்போய் அந்தப் பழைய பள்ளிக்கூடக் கட்டடத்தில் நண்பர்களோடு படுத்துவிடலாம். அல்லது இந்தச் சம்பவத்தின் குறியீடு என்னவாக இருக்கும் என்று உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

இரண்டாவதைச் செய்யலாம் என்று நினைத்து அங்கேயே அவன் அமர்ந்துவிட்டான். தெய்வம் ஒன்று என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அது கிருஷ்ணன்தான் என்று அன்றுவரை நினைத்துக்கொண்டிருந்தான். கிருஷ்ண அனுபவம் ஏற்படுவதற்கு முன்பு அது சிவமாக மட்டுமே இருந்ததையும் நினைவுகூர்ந்தான். லிங்கம் கிடைத்தபோது உண்டான பரவசமும் சிவ பக்தியும் இந்தக் கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது ஏன் தனக்கு உருவாகவில்லை என்று நினைத்துப் பார்த்தான். மனமெங்கும் கிருஷ்ணன் வியாபித்திருக்கும்போது சிவனைப் பெரிதாகக் கருதத் தோன்றாதது பற்றிய அச்சமும் தவிப்பும் அவனுக்கு ஏற்பட்டது. இது கிருஷ்ணன் தனக்கு வைக்கும் பரீட்சையாக இருக்குமோ என்று நினைத்தான். என்ன செய்து இதிலிருந்து விடுபட முடியும் என்று தெரியவில்லை.

திரும்பிச் சென்று நண்பர்களிடமும் மூத்த சன்னியாசிகளிடமும் தனது அனுபவத்தைச் சொல்லிக் கருத்துக் கேட்கலாமா என்று நினைத்தான். ஆனால் அவன் சொன்ன அந்த ஒளிப்பந்தின் கதையையே அவனோடு இருந்தவர்களுள் பலர் நம்பவில்லை. ‘இதோ பார் வினோத்! கிருஷ்ணன் என்பது ஒரு தத்துவம். தத்துவம் மட்டுமே. உருவமல்ல. நபரல்ல. உணரத் தொடங்கும்வரை மட்டுமே உருவத்துக்கு வேலை. உணர்ந்துவிட்டால் உருவம் பொருட்டல்ல. சைக்கிள் பழகும்போது யாராவது பிடித்துக்கொள்ள வேண்டியிருப்பது போலத்தான் அது’ என்று ஒரு சுவாமிஜி சொன்னார்.

‘ஆனால் நான் கண்ட ஒளிக்கோளம் உண்மை சுவாமிஜி’.

‘அது உன் பிரமையாக இருக்கலாம். அடிமனத்தில் இருந்த கிருஷ்ண தாகம் அதை எழுப்பி வெளியே கொண்டுவந்து நிறுத்தியிருக்கும்’ என்று அவர் சொன்னார்.

அவனுக்கு அப்போது அது புரியவில்லை. அவரோடு விவாதம் செய்யவும் விருப்பமில்லாமல் இருந்தான். அது ஒரு அனுபவம். அவனுக்கு நேர்ந்தது. அவனுக்கு மட்டும் நேர்ந்த அனுபவம். அதை எப்படி அடுத்தவருக்குப் புரியவைப்பது? புரியவைக்கத்தான் முடியுமா?

அதை நினைத்துப் பார்த்தவன், இந்தச் சம்பவத்தை இப்போது போய்ச் சொன்னால் மீண்டும் அதே போன்ற கருத்துகள்தாம் வரும் என்று நினைத்தான். பிரச்னை, அது கிருஷ்ணனா சிவனா என்பதுதானே தவிர, ஒரு ஒளி தன்னைத் திரும்பத் திரும்பத் தொட்டுத் திருப்புவதை இல்லை என்று சொல்லவே முடியாது.

நெடுநேரம் அவன் அந்த சிவன் சன்னிதியிலேயே அமர்ந்திருந்தான். ஏதாவது குறிப்பால் உணர்த்தப்படும் என்று எதிர்பார்த்தான். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. விடியும்போதே மழையும் பெய்யத் தொடங்கியது. திரும்பிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் இந்தக் குழப்பம் தன்னைச் சாகும்வரை நிம்மதியாக இருக்க விடாது என்று தோன்றியது. என்னவானாலும் கிருஷ்ணன் செயல் என்று எண்ணிக்கொண்டு எழுந்தான்.

அவன் சற்றும் எதிர்பாராவிதமாகப் பின்னங்கழுத்தில் பொளேர் என்று யாரோ அறைந்தார்கள். கிருஷ்ணா என்று அலறிக்கொண்டு அவன் கீழே விழுந்தான். நெற்றி தரையில் மோதி ரத்தம் வந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com