116. கப்பல்

அவனுக்கு உண்மையில் மிகுந்த குழப்பமாகிவிட்டது. என்ன காரணமாயிருக்கும் என்று திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லை.

இருளில் ஒரு பூனையின் கண்களைப் போல அந்தக் கிழவியின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஆனால் அவள் பார்வையில் உணர்ச்சிகள் இல்லை. வெறியோ, கோபமோ இல்லை. அனைத்தையும் அந்த ஒரு அடியில் இறக்கிவைத்துவிட்டவள் போல அமைதியாக வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். தடுமாறிக் கீழே விழுந்த வினோத், ஒன்றும் புரியாமல் மீண்டும் எழுந்து நின்றபோது அவள் சட்டென்று நடந்துபோக ஆரம்பித்தாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளை அழைப்பதா, எதற்கு அடித்தாள் என்று கேட்பதா, அல்லது போகிறவளை அவள் வழியில் போகவிட்டுவிட்டுத் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடுவதா என்று குழப்பமாக இருந்தது. அவள் சித்தம் கலங்கியவளாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். பத்தடி தூரம் நடந்து சென்றவள் ஒரு கணம் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். இது வினோத் எதிர்பாராதது. ‘வா’ என்று அழைப்பது போலத் தலையை அசைத்தாள். போவதா, வேண்டாமா என்று தெரியாமல் மேலும் சில கணங்கள் யோசித்துவிட்டு, தன்னையறியாமல் அவள் பின்னால் நடக்கத் தொடங்கினான்.

விடியும்வரை அவள் நடந்துகொண்டே இருந்தாள். வினோத்தும் ஒன்றும் பேசாமல் அவள் பின்னால் போய்க்கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் பின்னால் வருகிறானா என்று அவள் திரும்பிப் பார்த்ததுடன் சரி. ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தான் ஏன் பைத்தியம்போல அவள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு கிழவி. வயதானவள். சித்தம் கலங்கியவளாக இருக்கலாம். அவள் தன்னை அடித்ததன் காரணத்தைக் கேட்டிருக்கலாம். அல்லது திருப்பித் தாக்கிவிட்டுப் போயிருக்கலாம். அதையும் செய்யாமலேகூடப் போயிருக்க முடியும். இந்த மூன்றையும் செய்யாமல் அவள் பின்னால் தான் ஏன் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவளைப் பின்தொடர்ந்து போவதைத் தன்னால் தவிர்க்க முடியாது என்று நினைத்தான்.

நடந்துகொண்டே இருந்தவள் சூரிய உதய சமயத்தில் துறைமுகத்தை வந்து சேர்ந்தாள். திரும்பி வினோத்தைப் பார்த்தாள். இம்முறை அவன் நெருங்கும்வரை அசையாமல் நின்றிருந்தாள். அவன் அருகே வந்ததும் சிங்களத்தில் உரக்க ஏதோ சொன்னாள். அவனுக்கு அது புரியவில்லை. என்ன என்று கேட்டான். அவள் மீண்டும் சிங்களத்தில் ஏதோ சொன்னாள். முதல் முறை பயன்படுத்திய சொற்களைக் காட்டிலும் இம்முறை அதிக சொற்களை அவள் பேசினாள். வினோத்துக்கு அவள் பைத்தியம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் அவள் சொல்வதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. கையை ஆட்டி ஜாடை காட்டியபடி பேசினால்கூடப் புரிந்துகொள்ளச் சற்று வசதியாக இருக்கும். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. கைகளை அசைக்காமல், முகத்தில் எந்த உணர்ச்சி பாவத்தையும் காட்டாமல் குரலில் மட்டும் ஏற்றத் தாழ்வுகளை வைத்து ஒலிபரப்பிக்கொண்டிருந்தாள்.

‘அம்மா, எனக்கு நீங்கள் பேசும் மொழி தெரியாது. தமிழ் தெரிந்தவன் நான். சிறிது ஆங்கிலமும் அறிவேன். இந்த இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும். அல்லது வேறு யாருடைய உதவியையாவது பெற்று நீங்கள் சொல்ல விரும்புவதை எனக்குத் தெரிவிக்கலாம்’ என்று அமைதியாகச் சொன்னான்.

இதற்கும் அவள் சிங்களத்திலேயே வேக வேகமாக ஏதோ பதில் சொன்னாள். வினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். உதவிக்கு யாராவது வருவார்களா என்பதே அவனது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரிடமும் சென்று ‘உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’ என்று கேட்கத் தயக்கமாக இருந்தது. யுத்த காலத்தில் அது சற்றுப் பொருத்தமற்ற வினாவாக இருக்கும் என்றும் தோன்றியது.

மேலும் சில நிமிடங்கள் அவனுக்கு இந்த அவஸ்தை நீடித்தது. ஒரு கட்டத்தில் அவள் மீண்டும் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்து, மீண்டும் சிங்களத்தில் ஏதோ சொன்னாள். உண்மையிலேயே வினோத்துக்கு மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது. அவள் அடித்தது இம்முறை அவனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு மூதாட்டியைத் தான் ஏதோ ஒரு விதத்தில் அசௌகரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று கருதினான். என்ன செய்யலாம் என்று அவனுக்குப் புரியவில்லை. சட்டென்று நெடுஞ்சாண்கிடையாக அவள் காலில் விழுந்து கும்பிட்டு எழுந்து நின்றான்.

‘என்னால் உங்களையும் உங்கள் மொழியையும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா. நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு கிருஷ்ண பக்தன். சன்னியாசி இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஆகிவிடுவேன். இரு மொழிகள் தெரிந்த யாரேனும் உதவினால் என்னை உங்களுக்கு விளங்கவைக்க முடியும். அதே போல நீங்கள் சொல்வதையும் நான் விளங்கிக்கொள்ளப் பார்ப்பேன். அது நடக்காமல் நம் உரையாடலுக்கு ஒரு முடிவே இருக்காது’ என்று சொன்னான்.

இம்முறை அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு வா என்று தலையசைத்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். துறைமுகத்தில் அவளுக்கு யாரையோ தெரிந்திருந்தது. அவரிடம் சென்று ஏதோ பேசினாள். அந்தக் காலை வேளையில் அவளைப் பொருட்படுத்திக் கேட்கவும், அவள் சொன்னதற்குத் தலையசைத்துவிட்டு உள்ளே போகவும் அங்கே ஒருவர் இருந்தார்.

பத்து நிமிடங்களில் திரும்பி வந்தவர், மீண்டும் அவளிடம் ஏதோ சொன்னார். வினோத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். வினோத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் போ போ என்று அவனை அவசரப்படுத்தினாள். வேறு வழியின்றி வினோத் அவரோடு துறைமுகத்துக்குள் நுழைந்தான். அந்தப் பெண்மணி அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வெளியேறிப் போனாள்.

வினோத்தை உள்ளே அழைத்துச் சென்ற நபர், அவன் கையில் ஒரு டிக்கெட்டைக் கொடுத்தார்.

‘என்ன?’ என்று வினோத் கேட்டான்.

‘நீங்கள் இந்தியாவுக்குப் போய்விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்’ என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.

‘ஏன்?’

‘அது எனக்குத் தெரியாது. ஆனால் இதை உங்களிடம் சொல்லச் சொல்லி அந்தப் பெண்மணி சொன்னார்’.

‘அவர் யார்?’

‘அவர் ஒரு சன்னியாசினி. பார்த்தால் அப்படித் தெரியாது. எனக்கு அவரை வெகு காலமாகத் தெரியும்’.

‘ஐயா நான் கிருஷ்ண பக்த இயக்க நண்பர்களுடன் இங்கே வந்திருக்கிறேன். எனது நண்பர்கள் கொழும்பு நகரில்தான் தங்கியிருக்கிறார்கள். நேற்றுத்தான் நாங்கள் இங்கே வந்து இறங்கினோம். இப்போது என்னைக் காணாமல் அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். நான் திரும்பிச் செல்ல ஒரு காரணம் தேவையல்லவா?’

‘அது எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் போய்விட வேண்டும் என்று அவர் சொன்னார்’.

வினோத்துக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ‘வேறு ஏதேனும் சொன்னாரா?’ என்று கேட்டான்.

சிறிது யோசித்துவிட்டு, ‘போக மறுத்தாலும் விடாதீர்கள். எப்படியாவது கப்பல் ஏற்றிவிடுங்கள் என்று சொன்னார்’.

அவனுக்கு உண்மையில் மிகுந்த குழப்பமாகிவிட்டது. என்ன காரணமாயிருக்கும் என்று திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லை. அவளைச் சந்திக்கும் முன்னர், ஒளிக் கோளம் தன்னை ஏன் ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றது என்ற குழப்பம் மட்டுமே அவனுக்கு இருந்தது. இப்போது அந்தப் பெண் சன்னியாசி எதற்காகத் தன்னை இந்தியாவுக்குத் திரும்பச் சொல்கிறாள் என்ற குழப்பம் சேர்ந்துகொண்டது.

ஆனால் நெடுநேரம் அவனால் நின்று யோசித்துக்கொண்டிருக்க முடியவில்லை. அந்தத் துறைமுக ஊழியர் அவனை அவசரப்படுத்தி அழைத்துச் சென்று புறப்படத் தயாராக இருந்த ஒரு சரக்குக் கப்பலில் ஏற்றிவிட்டு, ‘ஊர் போய்ச் சேருங்கள். உங்களைச் சேர வேண்டிய தகவலை அவர் எப்படியாவது உங்களுக்குத் தெரியப்படுத்துவார்’ என்று சொன்னார். இதுவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குமேல் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பத்திருபது பயணிகளும் நிறைய சரக்கு மூட்டைகளும் பெரிய பெரிய சரக்குப் பெட்டிகளும் மட்டும் இருந்த அந்தக் கப்பலில் அவன் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சென்று அமர்ந்துகொண்டான்.

அவனது நண்பர்களும் சன்னியாசிகளும் இந்நேரம் கண் விழித்து எழுந்திருப்பார்கள். அவனைக் காணாமல் கவலைப்படுவார்கள். முடிந்தவரை தேடுவார்கள். உடனே பெங்களூருக்குத் தகவல் தர முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு எப்படி இந்த விவரத்தைத் தெரிவிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டுத் தான் எதற்காகக் கப்பல் ஏறினோம் என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் தன்னால் அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது என்றும் தோன்றியது. தனக்கு மட்டும் ஏன் இம்மாதிரியான அனுபவங்கள் நிகழ்கின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. சிறிது கவலையாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு கிருஷ்ணனை நினைக்க முயற்சி செய்தான்.

மூடிய விழிகளுக்குள் ஒரு புள்ளியைப் போல சிறிதாக ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை. கணப் பொழுதில் அந்தப் புள்ளி ஒரு பலூனைப் போல விரிவடைந்துகொண்டே சென்று பிரம்மாண்டமாக விண்ணையும் மண்ணையும் அடைத்து நின்ற ஒரு பேருருவமாக உருக்கொண்டது. அத்தனை பெரிய லிங்க ரூபத்தை அவன் அதற்குமுன் தரிசித்ததில்லை. சிலிர்த்தது. மறுகணம் கண்ணைத் திறந்தான்.

கப்பல் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com