117. குழலோசை

பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை.

சென்னை வந்து இறங்கியதும் வினோத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது. எங்கோ தடுமாறுகிறோம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதைக் குறிப்பாக எடுத்து நோக்க முடியவில்லை. தன்னையறியாமல் சிவனை நெஞ்சத்தில் இருந்து நகர்த்திவைத்தது பிழையோ என்று தோன்றியது. இதைக் குறித்து யாரிடமும் பேசவும் முடியாத அவலம் அவனை வதைத்தது. கழிந்த வருடங்களில் அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாக சக பிரம்மச்சாரிகளாலும் சன்னியாசிகளாலும் கருதப்பட்டு வந்திருந்தான். கணப்பொழுதும் ஓய்வின்றி கிருஷ்ண கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தான். இரவு படுப்பதற்கு எந்நேரம் ஆனாலும் ஆயிரத்தெட்டு முறை ஹரே கிருஷ்ண ஜபம் செய்யாமல் படுக்கமாட்டான். ‘நாளெல்லாம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்? இரவு தனியே எதற்கு?’ என்று அவனது நண்பர்கள் சிலர் கேட்டபோதெல்லாம், ‘உறங்கும் நேரம் ஜபம் இருக்காது. அதை ஈடுகட்ட உறங்கும் முன் அதைச் செய்துவிடுகிறேன்’ என்று சொல்வான்.

எதற்காக கிருஷ்ணன் தன்னை இலங்கை வரை அழைத்துச் சென்றான் என்று எப்படி யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. மீண்டும் பெங்களூருக்குச் சென்றால் தான் காணாமல் போனதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். உள்ளதை அப்படியே சொல்வதில் ஏதாவது சிக்கல் வரக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. தன்னெஞ்சறிய மாற்றிச் சொல்லவும் மனசாட்சி இடம் தராது என்று உறுதியாகத் தெரிந்தது. இது என்ன அவஸ்தை? இன்னொருவருக்கு நிரூபித்து விளக்குவதல்ல; தனக்கே இத்தடுமாற்றம் ஓர் அவமானமல்லவா? தெய்வம் ஒன்றுதான். அதில் சந்தேகமில்லை. அதைச் சிவமென்று எண்ணுவதையும் யாரும் தடைபோட இயலாதுதான். ஆனால் ஒரு பப்பாளிப் பழத்தைப்போல மனத்தை இரண்டாக வகிர்ந்து வைத்துக்கொண்டு வாழ்வது சிரமம். லயிப்பது சிரமம்.

உறுத்தலுடனே அவன் நடந்துகொண்டிருந்தான். பூக்கடை பேருந்து நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது எதிரே அவன் கேசவன் மாமா வருவதைப் பார்த்தான். அவர்தான் அது. சந்தேகமில்லை. காலம் விதைத்த புதிய அடையாளங்களை மீறி அது மாமாதான் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. முழங்கை வரை நீண்ட சட்டையும் எக்கணமும் அவிழ்ந்துவிடலாம் என்று தோன்றும்படிக்கு இடுப்பில் கட்டிய வேட்டியும் நெற்றியில் இட்ட ஒற்றை ஶ்ரீசூர்ணமுமாக அவரைக் கண்டதுமே அவனுக்கு பகீரென்று ஆகிவிட்டது. அவர் பார்ப்பதற்குள் எங்காவது மறைந்துவிட வேண்டும் என்று நினைத்தான். அந்தக் கணம் அவன் கிருஷ்ணனை மறந்தான். சிவனை மறந்தான். அப்படியே தரையில் படுத்து உருண்டு எங்காவது ஓடிவிட்டால் தேவலாம் போலிருந்தது. மாமாவின் இரு கரங்களிலும் இரண்டு கட்டைப் பைகள் இருந்தன. லிங்கிச் செட்டித் தெருவில் வாங்கினால் சீப், என்.எஸ்.சி. போஸ் சாலையில் சல்லிசாகக் கிடைக்கும் என்று யாரோ எதைக் குறித்தோ அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். திருவிடந்தையில் இருந்து பஸ் பிடித்து இவ்வளவு தூரம் இத்தனை காலை நேரத்தில் வந்திருக்கிறார் என்றால் எப்பேர்ப்பட்ட மனிதர்.

வினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். சட்டென்று இடதுபுறம் வரிசையாகக் கடை வைத்திருந்த காய்கறிக்காரப் பெண்களைத் தாண்டிக் குதித்து மார்க்கெட்டுக்குள் நுழைந்தான். அவன் திரும்பிப் பார்த்தபோது மாமா அவனைப் பார்த்துவிட்டாற்போலத் தோன்றியது. அவனுக்கு அச்சமாகிவிட்டது. உடனே காய்கறி மார்க்கெட்டுக்குள் ஓடத் தொடங்கினான். இன்னொரு முறை திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் அவன் கால் போன போக்கில் ஓடிக்கொண்டே இருந்தான். எங்கெங்கோ சுற்றி, பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ளே புகுந்து, முன் வழியாக வெளியே வந்து நின்று மூச்சுவிட்டான்.

இப்போது மாமா தென்படவில்லை. அந்த வரை நல்லது என்று நினைத்துக்கொண்டான். அந்த இடத்தைவிட்டே போய்விட்டால் இன்னமும் நல்லது. ஒரு கணம்தான். உடனே அவனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. கொழும்புவுக்குக் கப்பலில் போய்க்கொண்டிருந்தபோது அவன் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் தான் இலங்கையில் இருப்பதாகவும் அம்மா இறந்துவிட்டால் அத்தகவலை வீரகேசரியில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் அவன் கேட்டிருந்தான். ஏனென்றால், அவனோடு சென்ற குழுவில் பாதிப்பேர் கொழும்புவிலேயே தங்கும் எண்ணத்தில்தான் கப்பல் ஏறியிருந்தார்கள். கிருஷ்ணனுக்குக் கொழும்பு நகரில் ஒரு ஆலயம் அமைக்கும் திட்டத்தை எப்படியாவது வெற்றிகரமாக்கிவரும் பொறுப்பு அவர்களிடம் தரப்பட்டிருந்தது. அரசாங்க ஒத்துழைப்பைக் கோரிப் பெறுவது முதல் பணி. இடம் தேடுவது அடுத்தது. அதன்பின் சிறிதாக ஒரு குடிசை வீடு கட்டிக்கொள்ள முடிந்துவிட்டால் போதும். அங்கிருந்தபடியே கிருஷ்ண பக்தியைப் பரவச் செய்துவிட முடியும். பரவும் பக்தி பணம் பொருள்களைக் கொண்டுவந்து சேர்க்கும். பிறகு கோயிலைக் கிருஷ்ணன் கட்டிக்கொள்வான்.

எப்படியானாலும் அடுத்த ஐந்தாண்டுகளேனும் தான் இலங்கையில்தான் இருப்போம் என்று எண்ணிக்கொண்டுதான் வினோத் கப்பல் ஏறியிருந்தான். ஆனால் கொழும்புவில் இறங்கிய மறுநாளே கப்பலேறி இந்தியா திரும்பவேண்டி வரும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அந்தக் கடிதத்தை எழுதியிருக்க வேண்டாம் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. எழுதியதுகூடப் பிழையில்லை. படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்துக் கடலில் போட்டிருக்கலாம். கர்ம சிரத்தையாகக் கொழும்பு துறைமுகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே கண்ணில் பட்ட தபால் நிலையப் பெட்டியில் அதனைச் சேர்த்துவிட்டுத்தான் அவன் பட்டணப் பிரவேசம் செய்தான்.

மாமா கண்ணில் மட்டும் பட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி அந்தக் கடிதத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அடுத்த வினா சித்ராவுக்குச் செய்த துரோகத்தைப் பற்றி. அதனால் குடும்பத்துக்கு நேர்ந்திருக்கக்கூடிய அவமானத்தைப் பற்றி. இவை அனைத்தையுமே அவனால் தகுந்த பதில் சொல்லிச் சமாளிக்க முடியும்தான். அவன் கிருஷ்ண பக்தனாக மட்டுமோ, சிவ பக்தனாக மட்டுமோ இருந்திருந்தால் அது சாத்தியம். சன்னியாசம் என்னும் உயர் நோக்கத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இரட்டைக் கடவுள்கள் அளிக்கும் இம்சை தாங்க முடியாததாக இருந்தது. இரண்டில் ஒன்றைத் தீர்மானம் செய்யாமல் தன்னால் யாரையுமே சந்திக்கவோ, எதிர்கொள்ளவோ முடியாது என்று தோன்றியது. அதனால்தான் கேசவன் மாமாவை ஐம்பதடி தொலைவில் கண்டதும் அவன் தலை தெரிக்க ஓடினான். இத்தனைக்கும் மத்தியில் தனக்கு அவரைக் கண்டதும் பாசமோ, அதை நிகர்த்த வேறெதுவோ உருவாகவில்லை என்பதையும் அவன் கவனித்தான். அது சற்று நிம்மதியளித்தது. ஒரு தெளிவு உண்டாகும்வரை இனி சுற்றிக்கொண்டே இருப்பது என்று முடிவு செய்தான். சட்டென்று அவனைக் கடந்து நகர்ந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

ஏறும்போது அவன் அந்த வண்டி எங்கே போகிறது என்று பார்க்கவில்லை. ஏறி அமர்ந்து, நடத்துநர் அருகே வந்ததும் அதைக் கேட்டான். அவர் வினோத்தை ஒரு மாதிரி பார்த்தார். ‘நீங்க எங்க போகணும்?’ என்று பதிலுக்குக் கேட்டார். வினோத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சில விநாடி யோசித்தான். அதற்குள் அவனுக்கு அருகே இருந்த மனிதர், ‘திருவண்ணாமலை’ என்று சொல்லி ஒரு டிக்கெட் வாங்கினார். வினோத்தும் உடனே திருவண்ணாமலை என்று சொன்னான். அவனிடம் சிறிது பணம் இருந்தது. திருவண்ணாமலை வரை டிக்கெட் வாங்குவதற்கு அது போதுமானதாக இருந்ததில் அவன் சற்று நிம்மதியானான். டிக்கெட் வாங்கிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தபோதுதான் திக்கென்றானது.

திருவண்ணாமலை!

சட்டென்று அருகே இருந்தவரிடம், ‘இந்த வண்டி திருவண்ணாமலை வரைதான் போகிறதா?’ என்று கேட்டான்.

‘ஆம். ஏன் கேட்கிறீர்கள்?’

‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டான். ஆனால் அந்தக் கணம் முதல் அவனுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இதென்ன சொல்லிவைத்த மாதிரி இப்படி நடக்கிறது? சென்னை போய்ச் சேர்ந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்மணி வழிகாட்டுவார் என்று கிளம்பும்போது, அந்தத் துறைமுக அதிகாரி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை.

இதற்குமேல் இதனைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. சற்றும் உணர்ச்சிவசப்படாமல் நடப்பதை அதன் போக்கில் கவனித்துக்கொண்டே போவதுதான் சரி என்று நினைத்தான். கூடவே அவன் மனத்தில் இன்னொன்றும் தோன்றியது. இன்னொரு முறை அந்த ஒளிக்கோளத்தின் தரிசனம் கிடைத்தால் அதன் பின்னால் நிச்சயமாக எழுந்து போகக் கூடாது என்பதுதான் அது.

தான் சரியாக இருக்கிறோம், சம நிலையில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான். திருவண்ணாமலை சென்று சேரும்வரை அவன் உறங்கிக்கொண்டேதான் இருந்தான். பேருந்து நின்று அனைவரும் இறங்கிச் சென்றபின் நடத்துநர் வந்து அவனை எழுப்பினார்.

‘திருவண்ணாமலை வந்துவிட்டதா?’ என்று வினோத் பரபரப்பாக எழுந்தான். மண்ணில் கால் வைத்தபோது எங்கிருந்தோ புல்லாங்குழல் சத்தம் கேட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com