119. நிதி சால சுகமா?

ஒவ்வொரு முறையும் ஒளி தோன்றி மறைந்த பின்பு அதை நினைவில் கொண்டு வரப் பார்த்தால், அது வருவதில்லை. அடுத்த பல தினங்களுக்கு உடம்பு அடித்துப் போட்டாற்போல் ஆகிவிடுகிறது.

கண் விழித்தபோது அவன் ஒரு குடிசைக்குள் படுத்திருந்தான். அந்தப் பெண் அவன் அருகே அமர்ந்திருந்தாள். வினோத்துக்கு உடலெங்கும் நிறைய சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. முழங்கால் எரிந்தது. மூக்கு எரிந்தது. இடது கன்னத்தில் எரிந்தது. அனைத்தையும்விடத் தன்னால் எழுந்திருக்கவே முடியாதோ என்று எண்ணும்படியாக இடுப்பில் உக்கிரமாக வலித்தது. ‘எழுந்திருக்காதே. அப்படியே படுத்திரு’ என்று அந்தப் பெண் சொன்னாள். அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான். இவள் தனியாக எப்படித் தன்னைத் தூக்கிவந்து இங்கே கிடத்தியிருப்பாள்? சிறிது வெட்கமாக இருந்தது. அவனையறியாமல் சிரிப்பு வந்தது. அவள் அதைக் கவனித்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

‘என்னை மன்னியுங்கள். உங்களை சிரமப்படுத்தியிருக்கிறேன்’ என்று வினோத் சொன்னான்.

‘அதனால் பரவாயில்லை. உனக்கு கிருஷ்ண தரிசனம் நேர்ந்ததா?’

‘இல்லை. அவன் ஒவ்வொரு முறையும் என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறான்’.

‘எப்படி?’

‘ஒரு ஒளியாக அவன் எனக்கு வெளிப்படுகிறான். ஆனால் நான் முழுதும் பார்ப்பதற்குள்ளாக மறைந்துவிடுகிறான்’.

‘நின்று நிதானமாகப் பார்க்க வேண்டியதுதானே? எதற்கு அப்படி பேயைப் பார்த்தாற்போல ஓடினாய்?’

இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தான். உண்மையில் அந்தப் பதற்றமும் பரிதவிப்பும் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குப் புரிவதேயில்லை. ஒவ்வொரு முறையும் ஒளி தோன்றி மறைந்த பின்பு அதை நினைவில் கொண்டு வரப் பார்த்தால், அது வருவதில்லை. அடுத்த பல தினங்களுக்கு உடம்பு அடித்துப் போட்டாற்போல் ஆகிவிடுகிறது. எழுந்து நடமாடக்கூட சிரமமாகிவிடுகிறது. இதை அவன் அந்தப் பெண்ணிடம் சொன்னபோது, ‘சிலருக்கு அப்படித்தான் நேரும்’ என்று சொன்னாள்.

‘அம்மா, நீங்கள் அவனைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று வினோத் கேட்டான்.

‘யாரை?’

‘கிருஷ்ணனை’.

‘இல்லை. எனக்கு அவன் அத்தனை நெருக்கமில்லை’.

‘ஆம். நீங்கள் ஒரு சிவனடியார் என்று புரிந்துகொண்டேன்’.

அவள் சிரித்தாள். ‘உனக்கு என்ன பிரச்னை? தெய்வத்துக்கு எதற்குப் பெயர் வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கிருஷ்ணனும் சிவனும் இதனால்தான் உன்னை வைத்து விளையாடுகிறார்கள்’.

‘புரிகிறது தாயே. ஆனாலும் என் அறியாமை இங்கேயேதான் நின்று சுழல்கிறது. கொழும்புவில் அந்த ஒளிப்புள்ளி என்னை ஒரு சிவன் கோயிலுக்கு ஏன் அழைத்துச் சென்று விட்டது என்று இப்போதுவரை எனக்குப் புரியவில்லை’.

‘இதில் புரிய என்ன இருக்கிறது? உன் ஒளியை நீ கிருஷ்ணன் என்று நினைத்துக்கொண்டால், கிருஷ்ணன் உன்னை சிவனுக்கு சிநேகமாக்கிவிடப் பார்த்தான் என்று எண்ணிக்கொள். வந்த ஒளி சிவமென்றால் தன் சன்னிதியில் உனக்கு கிருஷ்ணனைக் காட்ட விரும்பியதாக நினைத்துக்கொள். அவ்வளவுதானே?’

அவ்வளவுதானா! மனத்துக்குள் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கும் அவஸ்தையை எப்படிப் புரியவைக்க முடியும்?

‘தாயே, என்னிடம் என்றோ கிடைத்த சிவலிங்கத்தை நான் புறக்கணித்த குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் மிச்சம் இருக்கிறது. கிருஷ்ணனை வணங்கும்போதெல்லாம் அதனாலேயே நான் ஓரத்தில் சிவனை நினைத்துக்கொள்கிறேன்’.

‘என்ன பிழை? ஒன்றுக்கு இரண்டு தெய்வங்கள் உனக்கு உதவி செய்ய இருந்தால் சௌகரியம்தானே?’

‘எங்கே உதவுகிறார்கள்? இரண்டு பேரும் சேர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று வினோத் சொன்னதும் அவள் சிரித்தாள்.

‘மகனே, நீ நல்லவன். அப்பாவி. உன் அறியாமை அழகானது. உன் அண்ணன் உன்னைப் பற்றிச் சொன்னபோது நான் முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது புரிந்துகொண்டேன்’ என்று அவள் சொன்னதும் வினோத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘அண்ணாவா? என்ன சொன்னான்?’ என்று கேட்டான்.

‘அது உனக்கு வேண்டாம். ஆனால் நான் உனக்கு ஒரு உதவி செய்ய முடிவு செய்திருக்கிறேன்’.

‘சொல்லுங்கள் தாயே’.

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘சரி கண்ணை மூடு’ என்று சொன்னாள். அவன் கண்ணை மூடிக்கொண்டான்.

‘இப்போது சொல்வதைக் கவனமாகக் கேள். கிருஷ்ணனா சிவனா என்று பார்க்காதே. உன் மனத்தில் இப்போது முதலில் தோன்றுவது எதுவாக இருந்தாலும் அதை மட்டும் நினை. அதையே தியானப் பொருளாக்கு. நான் குரல் கொடுக்கும்வரை அதைத் தவிர வேறு எதையும் நினைக்காதே’ என்று சொன்னாள்.

வினோத் சரி என்று சொல்லிவிட்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டான். பளிச்சென்று சித்ராவின் முகம் அவன் கண்களுக்குள் திரண்டு எழுந்து வந்து நின்றது. அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இதென்ன விபரீதம்? இவள் முகம் ஏன் இப்போது நினைவுக்கு வருகிறது? ஆட்டத்தைக் கலைத்துவிட்டு முதலில் இருந்து தொடங்கலாமா என்று யோசித்தான். அது கூடாது என்று தோன்றியது. அந்தப் பெண் விதித்த ஒரே நிபந்தனையைக்கூடச் சரியாகப் பின்பற்ற முடியவில்லை என்பது மிகவும் துக்ககரமானதல்லவா.

இருந்துவிட்டுப் போகட்டும் என்று சித்ராவையே நினைக்க ஆரம்பித்தான். சிறு வயதுகளில் வினய், சித்ராவை மிகவும் விரும்பியது அவனுக்கும் தெரியும். ஆனால் அது குறித்து அவன் வினய்யிடம் கேட்டதில்லை. வேறு யாருடனும் விவாதித்ததும் இல்லை. வினய் வீட்டைவிட்டு வெளியேறியபின் வெகு காலத்துக்கு வினோத் சித்ராவைக் குறித்து எண்ணிப் பார்த்ததேயில்லை. எப்போதாவது வீதியில் பார்க்க நேரும்போது சற்றுப் புன்னகை செய்துவிட்டுக் கடந்துவிடுவதே வழக்கம். அவனுக்குப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்த அன்றைக்குத்தான் முதல் முதலில் சித்ரா அழகாகத்தான் இருக்கிறாள் என்று நினைத்தான். என்ன காரணத்தாலோ அப்போது அவனுக்கு வினய்யின் நினைவு வரவில்லை.

சிறு வயது முதல் பார்த்து வரும் பெண். ஒரே ஊர். அடுத்தடுத்த வீதிகளில் வசிப்பவர்கள். இரு குடும்பங்களுக்கும் நல்ல பரிச்சயம் உண்டு. இரு குடும்பங்களுமே ஐயங்கார் குடும்பங்கள். சௌகரியமாக வேறு வேறு கோத்திரம். சித்ராவைத் திருமணம் செய்துகொண்டால் என்ன என்று அன்றைக்குத்தான் அவன் முதலில் நினைத்தான். ஆனால் நினைத்துக்கொண்டதுதான். தவறியும் யாரிடமும் அதைப் பற்றி அவன் பேசவில்லை. ஆசிரியப் பணியை முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் அவன் சித்ராவை அதன்பின் நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அது சுகமாக இருந்தது. அவளைக் காதலிக்கலாம் என்றும் நினைத்தான். தனது நள்ளிரவு ரகசிய சிவபூஜைக்குப் பின்பு சிவனின் அனுமதியோடுதான் அவன் சித்ராவை நினைத்துக்கொள்ள ஆரம்பிப்பான். நினைவில் அவளைத் தொடுவான். கன்னங்களை வருடுவான். நெருங்கி முத்தமிடுவான். அவள் கையைப் பிடித்துக்கொண்டு திருவிடந்தையில் இருந்து நீலாங்கரை வரை கடற்கரையில் நடப்பான்.

மறுநாள் காலை தற்செயலாகச் சித்ராவை வீதியில் பார்க்க நேர்ந்துவிட்டால் மிகவும் சந்தோஷமாகிவிடுவான். சிவனே தங்களைச் சேர்த்துவைப்பான் என்று அவன் மனத்துக்குள் தோன்றும். என்றைக்காவது மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வான். அது அபத்தமாக ஆரம்பித்துவிடக் கூடாது என்றும் உடனே நினைத்துக்கொள்வான். அவளுடன் பேசுவதற்குப் பொருத்தமாக ஏதாவது ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காகப் பலநாள் யோசித்தான். அவளது பிரத்தியேக விருப்பங்கள், ஆர்வங்கள் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் அது முடியும் என்று தோன்றியது. யாரைப் போய்க் கேட்பது?

இந்தக் கவலையில் இருந்தபோதுதான் ஒருநாள் கேசவன் மாமா, சித்ரா நன்றாகப் பாடுவாள் என்ற தகவலைத் தற்செயலாக அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டான்.

‘அப்படியா? எனக்குத் தெரியாதே. மாமி சொன்னதே இல்லியே?’ என்று அம்மா சொன்னாள்.

‘இத்தன வருஷமா பாத்துண்டிருக்கோம். இன்னிக்குத்தான் எனக்கே தெரிஞ்சிதுக்கா. பிரமாதமா பாடறா. இன்னிக்குக் கோயில்ல பெருமாள் சேவிக்க வந்தா. பிராகாரம் சுத்திட்டு தாயார் சன்னிதி வாசல்ல உக்காந்துண்டிருந்தப்ப தனக்குத்தானே மெல்லிசா பாடிண்டிருந்தா.. அந்தப் பக்கமா போனேனா.. எனக்குத் தூக்கி வாரிப் போட்டுடுத்துக்கா. சுருதி சுத்தம்னா அப்படி ஒரு சுருதி சுத்தம். குரலும் நன்னா ஒத்துழைக்கறது அவளுக்கு. ஏண்டிம்மா, இப்படி ரகசியமா பாடிண்டிருக்கே, நன்னா வாய் விட்டுப் பாடப்படாதான்னு கேட்டேன். போங்கோ மாமான்னு வெக்கப்பட்டுண்டு எழுந்து போயிட்டா’ என்று கேசவன் மாமா சொன்னார்.

வினோத்துக்கு இந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. மறுநாள் பள்ளிக்கூடம் விட்டதும் அவன் திருப்போரூருக்கு சைக்கிளில் போனான். சன்னிதித் தெருவில் ஒரு கேசட் கடை இருந்தது. ஓரிரு முறை அந்தப் பக்கம் போகும்போது அதைப் பார்த்திருக்கிறான். எனவே நேரே அந்தக் கடைக்குச் சென்று எம்.எல். வசந்தகுமாரி, டிகே ஜெயராமன் கேசட்டுகள் சிலவற்றை வாங்கிக்கொண்டான். அன்றைய தேதியில் யார் பிரபலமான கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடைக்காரனிடம் கேட்கச் சற்று வெட்கமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானஸ்தராக இருந்தாலும் எம்.எல். வசந்தகுமாரியையும் டிகே ஜெயராமனையும் நிராகரிக்க மாட்டார்கள் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியதால் அவற்றை வாங்கினான். கேசட்டின் மேலே இருந்த பிளாஸ்டிக் உறையைக் கிழித்தெறிந்துவிட்டு அதைப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.

மாலை ஆறு மணிக்கு அவன் திருவிடந்தை கோயிலுக்குப் போனான். மாமா அப்போதுதான் கோயிலில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். ‘என்னடா விசேஷம் இன்னிக்கு?’ என்று கேட்டார்.

‘சும்மாத்தான் மாமா’ என்று சொல்லிவிட்டு நேரே சன்னிதிக்குப் போனான். தீர்த்தம் சடாரி வாங்கிக்கொண்டு தாயார் சன்னிதிக்கு வந்து உட்கார்ந்தான்.

ஆறரைக்கு சித்ரா கோயிலுக்கு வந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே வினோத் அவளைப் பார்த்துவிட்டான். பதற்றமாக இருந்தது. யாராவது பார்த்தால் என்னவாவது நினைத்துக்கொள்வார்களே என்று கவலையாக இருந்தது. ஆனால் அவன் ஒரு பள்ளி ஆசிரியர். கௌரவமான வேலையில் இருப்பவன். சட்டென்று அப்படி யாரும் உடனே தவறாக நினைத்துவிட மாட்டார்கள் என்றும் தோன்றியது. அவள் பெருமாள் சேவித்துவிட்டுத் தாயார் சன்னிதிக்கு வரும்வரை அவனுக்கு நிலைகொள்ளவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. நெஞ்சு வறண்டு தாகம் எடுத்தது. சகித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தான்.

சித்ரா சன்னிதிக்கு வந்தபோது மிக மிக இயல்பாக எப்போதும் புன்னகை செய்வது போலவே செய்தான். அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.

‘நீ நன்னா பாடறியாமே? மாமா சொன்னார்’ என்று ஆரம்பித்தான்.

அவள் சற்று வெட்கப்பட்டாற்போல் இருந்தது.

‘இந்தா’ என்று கேசட்டுகளை நீட்டினான்.

‘என்னது?’

‘எனக்குப் பிடிச்சிருந்தது. உனக்குப் பிடிக்கறதான்னு கேட்டுப் பாரு’ என்று சொன்னான்.

அவள் மறுக்கவில்லை. ‘தேங்ஸ்’ என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டாள்.

‘பாட்டு கத்துண்டியான்ன?’

‘எப்பவோ கத்துண்டது. ரொம்ப சின்ன வயசுல’.

‘ஏன் விட்டுட்டே?’

‘இங்க யார் இருக்கா சொல்லித்தர?’

‘அப்போ மட்டும் யார் இருந்தா?’

‘என் பாட்டி இருந்தாளே. அவ நன்னா பாடுவா’.

‘ஓ’.

அதற்குமேல் பேசினால் சரியாக வராது என்று அவனுக்குத் தோன்றியது. ‘சரி, கேட்டுட்டு சொல்லு’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். யாரும் பார்க்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாள் கழித்து சித்ரா வீட்டுக்கு வந்து கேசட்டுகளைத் திருப்பிக் கொடுத்தாள். அம்மாவுக்கு அது மிகுந்த ஆச்சரியம். ‘நீ எப்படா இதெல்லாம் கேக்க ஆரம்பிச்சே?’ என்று வினோத்தைக் கேட்டாள்.

‘எப்பவோ’ என்று மட்டும் சொல்லிவிட்டு, ‘சரி உனக்குப் பிடிச்சிதா?’ என்று சித்ராவிடம் கேட்டான்.

அவள், ‘ம்’ என்று மட்டும் சொன்னாள். மேற்கொண்டு இசை சார்ந்து பேசுவதற்குத் தன்னிடம் ஒன்றுமில்லை என்பதை நினைவுகூர்ந்த வினோத், ‘உக்காரேன். ஒரு பாட்டு பாடு. அம்மா கேப்பா’ என்று சொன்னான்.

அம்மாவுக்கு அதுவே பூரித்துவிட்டது. ‘அதானே? நீ நன்னா பாடுவேன்னு கேசவன் சொன்னான். ஒரு பாட்டு பாடேன்?’ என்று கேட்டாள்.

அன்றைக்கு சித்ரா நிதி சால சுகமா என்ற கீர்த்தனையைப் பாடிக்காட்டினாள். அது மிகவும் நன்றாக இருப்பதாக அம்மா சொன்னாள். வினோத்துக்கு ராகமோ மற்றதோ தெரியவில்லை. சித்ரா சகஜமாகத் தன் வீட்டுக்கு வந்து சொன்ன வார்த்தையைத் தட்டாமல் பாடிக் காட்டியதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா அவளுக்குக் காப்பி கொடுத்தாள். குடித்துவிட்டு, ‘போயிட்டு வரேன் மாமி’ என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பியபோது, வினோத் வாசல்வரை வந்து அனுப்பிவைத்தான்.

அம்மாவுக்கு ஏதாவது புரிந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. புரியவேயில்லை என்றாலும் அது ஒரு சரியான தொடக்கமாக இருக்கும் என்று நினைத்தான். இரவு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுப் படுத்து, சித்ராவை நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com