76. பசி

சிறிது நாடி பார்க்கத் தெரியும். என் குரு சொல்லிக் கொடுத்திருக்கிறார். சர்க்கரை, ரத்த அழுத்தம், பைல்ஸ், பார்வைக் குறைபாடு போன்ற சில வியாதிகளை வெறும் உணவால் சரி செய்யத் தெரியும்.

ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் நான் வினய்யைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. அது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிதான். கடைசியாக அவனை நான் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சந்தித்துப் பிரிந்தபோது அவன்தான் சொன்னான். ‘அம்மா இறந்தால் நான் ஊருக்குப் போவேன். அப்போது நாம் திரும்ப சந்திக்கலாம்.’ அவனைக் கண்டதும் எனக்கு அந்தச் சொற்கள்தாம் நினைவுக்கு வந்தன. நான் சிரித்தேன். அவனும் சிரித்தான். சட்டென்று நான் இருக்கையைவிட்டு எழுந்து அவனிடம் சென்று, ‘டிக்கெட் இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. தேவைப்பட்டால் வரவழைத்துக்கொள்வேன்’ என்று சொன்னான்.

‘தவறல்லவா?’

‘இல்லை’ என்று சொன்னான். உணர்ச்சியற்ற அவன் முகத்தில் சவக்களை படிந்திருந்தாற்போல எனக்குத் தோன்றியது. காட்டிக்கொள்ளாமல், ‘வினய், அம்மாவைக் குறித்து உனக்கு யார் சொன்னது?’ என்று கேட்டேன்.

‘யாரும் சொல்லவில்லை. எனக்கே தோன்றியது.’

‘என்னவென்று?’

‘அவள் போய்விடுவாள்.’

‘எப்போது?’

‘அது தெரியவில்லை. ஆனால் இந்த தட்சிணாயணத்துக்குள் நடக்கும்.’

‘மிகவும் வயதாகிவிட்டது அவளுக்கு.’

‘ஆம். எழுபத்தொன்பது அல்லவா?’

‘எனக்கு கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்.’

‘அப்படியா? எனக்கு அவரோடு தொடர்பு இல்லை. வேறு யாரோடும் இல்லை. தற்செயலாக உன்னைத்தான் இதோடு சேர்த்து இரண்டு முறை சந்தித்திருக்கிறேன்.’

நான் புன்னகை செய்தேன். ‘அது என் அதிர்ஷ்டம்’ என்று சொன்னேன்.

அவன் என்னைத் தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தான். அவன் கண்ணில் மெல்லிய வியப்புத் தெரிந்தது.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘நீ ஒரு செழிப்பான சன்னியாசி.’

‘ஆம். அதிலென்ன சந்தேகம்? நான் ஒரு சுகவாசி. என் சொகுசுகளை என்றுமே குறைத்துக்கொண்டதில்லை. இந்த முதல் வகுப்புப் பெட்டியே எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பொதுவாக நான் கூபேவில்தான் பயணம் செய்வேன்’ என்று சொன்னேன்.

‘உன்னைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுவேன். அரசியல்வாதிகளோடு ஐக்கியமாகிவிட்டாயா நீ?’

‘அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் அரசியல்வாதிகள் என் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள். வினய், இது ஒரு தொழில். ஒரு வியாபாரம். இதில் எனக்கு வருமானம் என்று தனியே ஒன்றுமில்லை. ஆனால் இந்தியாவில் என்னைக் காட்டிலும் செல்வந்தன் யாருமில்லை.’

அவன் விரக்தியாகச் சிரித்தான். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘கடவுள் சரியாகத்தான் அளித்திருக்கிறான். இந்தியாவில் என்னைக் காட்டிலும் பரம தரித்திரன் இருக்க முடியாது’ என்று சொன்னான்.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘நான் சாப்பிட்டுப் பல நாள்களாகிவிட்டன. என்னிடம் பத்து காசு கூட இல்லை’ என்று சொன்னான்.

எனக்கு மிகவும் பரிதாபமாகிவிட்டது. என் இருக்கைக்கு வந்து ஒரு சீப்பு வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு அவன் நின்றிருந்த இடத்துக்குச் சென்றேன். ‘இந்தா, சாப்பிடு’ என்றேன்.

அவன் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டான். ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சக பயணி ஒருவர் பார்த்தார். வினய்யைக் கண்டதும் தன்னியல்பாக அவர் முகம் சுளித்தார். அவனது தோற்றம், ஒரு முதல் வகுப்புப் பயணிக்குரியதாக இல்லை. யாரோ பிச்சைக்காரன் என்று அவருக்குத் தோன்றியிருக்கும். பைத்தியக்காரன் என்று தோன்றியிருந்தாலும் வியப்பில்லை. அவன் அப்படித்தான் இருந்தான். தலைமுடியெல்லாம் சடை விழுந்திருந்தது. நெஞ்சு வரை நீண்டிருந்த தாடி பாதி உடலை மறைத்தது. இடுப்புக்கும் தொடைக்கும் இடையே ஒரு காவித் துணியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்தான். கண்கள் இரண்டும் குழிக்குள் இருப்பவை போலிருந்தன. எலும்புகள் தெரிந்தன. கையை உயர்த்தி அவன் பேசும்போது விரல்கள் நடுங்கியதைக் கவனித்தேன்.

‘கஞ்சா நிறையப் புகைக்கிறாயா?’ என்று கேட்டேன்.

‘ஆம். பெரும்பாலும் அதுதான் உணவு.’

‘நீ அன்றைக்கு எனக்கு ஒரு ஆப்பிள் பழம் வரவழைத்துக் கொடுத்தாய். நான் மறக்கவில்லை’ என்று சொன்னேன்.

‘ஆம். ஆனால் இப்போது என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது.’

‘அப்படியா? நீ குட்டிச் சாத்தான்களை விரட்டிவிட்டாயா?’

அவன் நெடுநேரம் பதில் சொல்லாமல் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். நான் மீண்டும் கேட்ட பின்பே பதில் சொன்னான், ‘இல்லை. அவை என்னை ஒதுக்கிவிட்டன.’

நான் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே இருந்த டாக்டர் குடும்பம் ரேணிகுண்டாவில் இறங்கிவிட்டது. அந்த இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. டிடிஆர் கண்ணில் பட்டால் வினய்க்கு ஒரு டிக்கெட் எடுத்து அமரச் சொல்லலாம் என்று நினைத்தேன். அவன் சட்டென்று சொன்னான், ‘டிக்கெட் இல்லாமலும் உட்காரலாம். நான் விரும்பினால் டிடிஆரை இனி இந்தப் பக்கமே வராமலும் செய்ய முடியும்.’

நான் சிரித்தேன். ‘ஆக விட்டகுறை ஏதோ மிச்சம் உள்ளது.’

அவன் அதற்கு பதில் சொல்லவில்லை. கதவுக்கு வெளியே பின்புறமாக விரைந்த உலகைக் கண்ணில் விழுங்கியபடி நெடுநேரம் அசைவற்று நின்றிருந்தான். சட்டென்று, ‘விமல் எனக்கொரு சந்தேகம். உன்னால் தீர்க்க முடியுமா?’ என்று கேட்டான்.

‘முயற்சி செய்யலாம். ஆனால் ஒன்று. நான் அண்ணாவைப் போல யோகியோ சித்தனோ அல்ல. உன்னைப் போலப் பேய்களுடனும் குட்டிச்சாத்தான்களோடும் உறவு கொண்டவனும் அல்ல. நான் ஒரு புத்திசாலி. புத்திசாலி மட்டும்தான்’ என்று சொன்னேன்.

‘புத்தி ஒரு சுமை. அது இல்லாதிருப்பது அதனினும் சுமை’ என்று வினய் சொன்னான். அவன் உட்கார விரும்பவேயில்லை. ரேணிகுண்டாவில் ரயில் ஏறியவன், ஒரு மணி நேரம் கதவருகே நின்றுகொண்டே இருந்தான். எனக்குக் கால் வலித்தது. உட்காரலாம் என்று தோன்றியது. இரண்டு முறை அவனிடம் சொல்லிப் பார்த்தேன். அவன் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

‘விமல், நான் ஒரு சமயம் ஒன்பது தினங்கள் ஓர் இடத்தைவிட்டு அசையாமல் நின்றிருக்கிறேன். இரவு பகல் முழுவதும்’ என்று சொன்னான்.

‘எதற்காக?’

‘ஒரு வித்தை கற்க.’

‘ஓ. என்ன வித்தை?’

‘ஒரு குறிப்பிட்ட சாத்தானைப் பணிய வைப்பதன் பொருட்டு.’

‘பணிய வைத்து?’

‘அது பெண்களை இடம் பெயரவைக்க உதவும்.’

‘தூக்கிச் சென்று நீ சொல்லும் இடத்தில் அடைத்து வைக்குமா?’

‘ஆம். அப்படித்தான்.’

‘உனக்கு எதற்குப் பெண்கள்? யாராவது ஒருத்தி போதாதா? அல்லது ஓரிருவர். பேசாமல் நீ திருமணம் செய்துகொண்டிருக்கலாம்.’

‘நான் எனக்காகச் செய்வதில்லை. ஒன்று தெரியுமா? நான் ஒரு பெண்ணைத் தொட்டு முப்பது வருடங்களாகின்றன.’

‘ஆனால் நினைக்கிறாய்.’

அவன் சற்று திடுக்கிட்டாற்போல் இருந்தது. என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சட்டென்று பார்வையைத் தழைத்துக்கொண்டான். எனக்கு அவன் மீது பரிதாபம் வந்தது. அவன் வலக்கையை இழுத்து நாடி பிடித்துப் பார்த்தேன். அவன் உடனே, ‘உனக்கு மருத்துவம் தெரியுமா?’ என்று கேட்டான்.

‘அதெல்லாம் தெரியாது. ஆனால் சிறிது நாடி பார்க்கத் தெரியும். என் குரு சொல்லிக் கொடுத்திருக்கிறார். சர்க்கரை, ரத்த அழுத்தம், பைல்ஸ், பார்வைக் குறைபாடு போன்ற சில வியாதிகளை வெறும் உணவால் சரி செய்யத் தெரியும்.’

‘சர்க்கரையா?’

‘ஆம். முடியும்.’

‘எனக்கு இருக்கிறது’ என்று வினய் சொன்னான்.

‘நீ சொல்லவே வேண்டாம். நாடி சொல்லிவிட்டது.’

‘அது இல்லாவிட்டால் நான் இன்னும் சிலவற்றை முயற்சி செய்து பார்த்திருப்பேன். முடியாமல் போய்விட்டது.’

கண்டிப்பாக அவனுக்கு நான் சர்க்கரை நோயைத் தீர்க்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

அவன் ஒரு தவறு செய்திருந்தான். திருநெல்வேலியில் அவனிடம் இருந்த எள்ளுருண்டை களவு போனபோதே அவன் திருவானைக்காவுக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும். முகமது குட்டியைப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான் தடம் மாறிவிட்டது.

‘அதுசரி அந்த முகமது குட்டியை நீ மீண்டும் சந்தித்தாயா? முடிந்ததா?’ என்று கேட்டேன்.

‘ஓ, அவனைக் கொன்றுவிட்டேன்’ என்று சொன்னான்.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கொலையா என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்.

‘ஆம். ஒரு மரம் வெட்டும் கோடரியால் அவன் மண்டையைப் பிளந்துவிட்டேன். ரத்தம் முழுதும் வெளியேறும்வரை காத்திருந்துவிட்டு பிணத்தை எடுத்துச் சென்று எரித்துவிட்டேன்.’

‘ஐயோ. மாட்டிக்கொண்டிருப்பாய்!’

‘இல்லை’ என்று வினய் சொன்னான். அவன் முகமது குட்டியை இரண்டாம் முறை சந்தித்தது திருவனந்தபுரத்தில் வைத்து. இம்முறை வினய் சூரிய நாராயண போத்தியிடம் மாணவனாகியிருந்தான். போத்தி ஒரு வசியக் கலைஞன். அவனது கட்டுப்பாட்டில் ஏழெட்டு குட்டிச் சாத்தான்கள் இருந்திருக்கின்றன. திருடு போன பொருள்களை மீட்டுக் கொடுப்பது, செய்வினை வைப்பது, பேய் ஓட்டுவது நில பேரங்களை முடித்துக் கொடுப்பது என்று அவனது வருமானத்துக்குச் சில தொழில்கள் இருந்தன. அது அனைத்தையும்விட அவன் பெண்களை வசியம் செய்வதில் விற்பன்னனாக இருந்தான். பல கல்லூரி மாணவர்கள் அவனது நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள், நடிகர்கள், உயரதிகாரிகளும்கூட.

சூரிப் போத்தியிடம் ஒரு பெண்ணைக் காட்டி அவள் தனக்கு வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். ஆறேழு தினங்களில் அந்தப் பெண் சம்பந்தப்பட்டவனைத் தேடித் தானே வந்துவிடுவாள். உண்மையில் வினய் அவனிடம் போய்ச் சேரக் காரணமே ஒரு பெண் தான்.ஓ

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com