79. கண்ணீரைச் சேமித்தல்

இது எதிரிகளை வசப்படுத்தும் மந்திரம். உன் ஜபம் அன்னையைத் தொட்டுவிட்டால், அதன்பின் உனக்கு எதிரி என்று யாரும் இருக்க முடியாது.

முகமது குட்டியை எரித்தபோது தனக்கு அழுகை வந்ததாக வினய் சொன்னான். அது முகமது குட்டிக்காக வந்த அழுகையல்ல என்று எனக்குத் தோன்றியது. சுய இரக்கத்தின்பாற்பட்டே வினய் அன்று அழுதிருக்க வேண்டும். அல்லது உள்ளுக்குள் அவனையறியாமல் மூண்டிருக்கக்கூடிய அச்சம் அந்த அழுகையைத் தந்திருக்கலாம். எப்படியானாலும் ஒரு சன்னியாசியின் கண்ணில் நீர் பெருகுவது ஓர் அவலமன்றி வேறல்ல.

இதனை என் குருநாதர் எனக்குச் சொன்னார். மகாராஷ்டிர மாநிலத்தில் புனேவுக்கு எழுபது கிலோ மீட்டர் அப்பால் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் அவர். ஒன்பது வயதில் வீட்டைத் துறந்து கர்நாடகத்துக்கு இடம் பெயர்ந்து வந்தவர். அந்த வயதில் அவரைச் செலுத்திவந்த சக்தி எது என்று வெகுகாலம் அவர் யோசித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் சரியான விடை கிடைக்கவில்லை. வீடு, அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு தங்கை அவருக்கு உண்டு. என்ன காரணத்தாலோ மிகச் சிறுவயதில் இருந்தே தன்னால் யாருடனும் பிரத்தியேக உறவு பேண முடிந்ததில்லை என்று அவர் சொன்னார். எல்லா உயிர்களும் எனக்கானவை என்றே தோன்றியது என்ற வரியை அவர் தனது வாழ்நாளில் குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பார்.

அவரது பதினேழாவது வயதில் அவருக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அவரது அப்பா, அம்மா, அண்ணன், தங்கை நால்வரும் ஒரே இரவில் ஒன்றாகத் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். கடன் பிரச்னையாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் தாங்க இயலாத பெரும் பிரச்னை. ஏதோ ஒன்று பூதாகாரமாக வந்து தாக்காமல் குடும்பத்தோடு அப்படி யாரும் இறந்து போக முடிவு செய்திருக்கமாட்டார்கள். குருநாதர் அப்போது மடிகேரிக்கு வந்திருக்கவில்லை. ஒரு நாடோடியாக மாநிலம் முழுதும் திரிந்துகொண்டுதான் இருந்திருக்கிறார். அவரது அப்பாவின் தமக்கையின் கணவர் தற்செயலாக அவரை வழியில் கண்டு, அடையாளம் தெரிந்துகொண்டு மேற்படித் தகவலை அவருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு என்ன பதில் சொல்வது, அல்லது அவரிடம் அந்த மனிதர் என்ன எதிர்பார்த்தார் என்று குருவுக்குப் புரியவில்லை. மரணச் செய்தியை அவர் சொல்லி முடித்ததும், ‘ஓ, சரி’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குமேல் அம்மனிதர் குருநாதருடன் பேச விரும்பவில்லை. ‘கிறுக்குப் பயலே, நீயும் போய்ச் சேர்ந்திருக்கலாம். அல்லது நீ மட்டும் ஒழிந்து தொலைந்திருந்தால் அவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

‘உங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் இல்லையா?’ என்று பின்பொரு சமயம் நான் அவரிடம் கேட்டேன்.

‘இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்’ என்று அவர் பதில் சொன்னார்.

‘இது என்ன பதில்? இருந்ததா? இல்லையா? சரியாகச் சொல்லுங்கள்.’

அவர் சிறிது யோசித்துவிட்டு, ‘ஆம். இருந்தது. ஆனால் நான் அழவில்லை. பத்து நிமிடங்களுக்குமேல் அவர்களை நினைக்கவும் இல்லை’ என்று சொன்னார்.

‘ஏன்? அந்த நினைவு துறவுக்கு விரோதம் என்று நினைத்தீர்களா? உலகமே உறவுதான் என்றான பிறகு ஒரு நான்கு பேரின் மரணத்துக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் விடுப்பதில் என்ன பிழை?’

அப்போதுதான் அவர் சொன்னார். ‘விமல்! மனித ரத்தத்தினும் மதிப்பு மிக்கது கண்ணீர். அது உள்ளத்தின் ஈரம். எப்போதாவது உருப்பெறுவது. எப்போதேனும் கசிவது. அபூர்வமானது. விந்துவினும் வீரியம் கொண்டது. அதைச் சேமிப்பது ஒரு துறவிக்கு மிகவும் முக்கியம்.’

‘கண்ணீரைச் சேமித்து என்ன செய்ய முடியும்?’

‘காமத்தைக் கடந்து என்ன செய்ய முடியுமோ அதைக் கண்ணீரைக் கடந்தும் செய்யலாம்.’

வினய்யிடம் நான் இந்தச் சம்பவத்தைச் சொன்னபோது, அவன் ‘சரிதான். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்’ என்று சொன்னான். ‘ஆனால் அன்று நான் அழுதது உண்மை. என்னால் அடக்கவே முடியவில்லை.’

எனக்கு அவன் மீது பரிதாபமாக இருந்தது. தன்னால் மீண்டும் சொரிமுத்துவிடம் போகவே முடியாது என்று அவன் முடிவு செய்திருந்தான். சொரிமுத்து தன்னை ஏற்கமாட்டான் என்று அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே அவன் சூரிப் போத்தியினிடத்திலேயே தங்கிப்போனான். முகமது குட்டியைக் கொலை செய்து எரித்துவிட்டு அவன் போத்தியின் வீட்டுக்குப் போய் விவரம் சொன்னபோது, சூரிப் போத்தியால் முதலில் அதை நம்பவே முடியவில்லை. ‘எப்படி முடிந்தது? அவன் மிகவும் எச்சரிக்கை உணர்வு உள்ளவனாயிற்றே?’ என்று கேட்டிருக்கிறான்.

‘உறக்கத்தில் யாருக்கும் எச்சரிக்கை உணர்வு வேலை செய்வதில்லை’ என்று வினய் சொன்னான்.

‘அவன் தூங்கிக்கொண்டா இருந்தான்?’

‘ஆம். இளைய பாண்டவர்களை அஸ்வத்தாமன் கொன்றதுபோலக் கொன்றேன். ஒரு கோடரி. ஒரே போடு. தலை பிளந்துவிட்டது.’

‘ஓ. யாராவது பார்த்தார்களா?’

‘இல்லை. ஆனால் ரத்தத்தை அந்தக் தோட்டக்காவலன் பார்த்திருப்பான். போலிசில் போய்ச் சொல்லியிருப்பான்.’

‘ஐயோ. அவன் உன்னைப் பார்த்தானா?’

‘இல்லை.’

‘நீ தோப்புக்குள் நுழைந்ததே அவனுக்குத் தெரியாதா?’

‘ஆமாம். தெரியாது.’

போத்தி வெகுநேரம் பதற்றத்துடன் யோசித்துக்கொண்டே இருந்தான். மறுநாள் செய்தித்தாளில் ஏதாவது செய்தி வருகிறதா என்று பார்த்தான். முகமது குட்டி இறந்த விவரம் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. ஆனால் அடையாளம் தெரியாத பிணமொன்று காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடைத்த விவரம் இரண்டு நாள் கழித்துப் பிரசுரமாகியிருந்தது. ‘அது முகமது குட்டிதான்’ என்று வினய் சொன்னான். போத்தியால் அப்போதும் நம்பவே முடியவில்லை.

‘அத்தனை வெறி உனக்கு இருந்திருக்குமானால் அவனால் நீ இழந்தது மிகப் பெரிதுதான். அது என்னவென்று சொல்’ என்று கேட்டான்.

‘நான் எதையும் இழக்கவில்லை. என் குரு என்னிடம் கொடுத்தனுப்பிய ஒரு கமர்க்கட்டை அவன் களவாடிச் சென்றுவிட்டான். அந்தக் கோபம்தான்’ என்று வினய் சொன்னான். அதன் பிறகுதான், வினய் யாரென்று போத்தி விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்கிறான்.

‘உனக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்று சொன்னேன். அது என்னவென்று நீ கேட்கவில்லையே?’

வினய் புன்னகை செய்தான். ‘உங்களால் எனக்கு என்ன தர இயலும்? மிஞ்சினால் எனக்கொரு குட்டிச் சாத்தானை அடிமையாக்க முடியும். அதானே?’

‘இல்லை. உனக்கு நான் அதர்வத்தின் மிக முக்கியமான சில பகுதிகளைச் சொல்லித் தருகிறேன். ஒழுங்காகக் கற்றால், நீ என்னைக் காட்டிலும் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும்.’

‘உங்களால் ஏன் அது முடியவில்லை?’ என்று வினய் கேட்டான்.

போத்திக்கு அது மிகவும் வருத்தமாகிவிட்டது. என்ன பதில் சொல்வதென்று உடனே தோன்றவில்லை. மிகவும் தயங்கி, யோசித்து, தடுமாறி அதன்பிறகு சொன்னான், ‘நான் பயிலத் தொடங்கிய வயது தவறானது. ஓரெல்லைக்கு மேல் என்னால் கிரகிக்க முடியவில்லை.’

‘என்னால் மட்டும் எப்படி முடியும்? நான் வாலிபத்தைத் தொட்டுக் கடந்துகொண்டிருப்பவன். என் புத்தி ஒருமையில் நிலைப்பதில்லை என்பதுதான் என் குருவின் ஒரே குற்றச்சாட்டு.’

‘அப்படியா? முயற்சி செய்து பார்த்துவிடலாமா?’ என்று புன்னகையுடன் போத்தி கேட்டான்.

ஒரு வாரம் கழிந்த பின்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை போத்தி அவனை ஒரு பகவதி ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். பெரிய கோயிலெல்லாம் இல்லை. காட்டுப் பகுதியில் இருந்த ஒரு சிறு சன்னிதி. மரம் அறுக்கப்போகிற மக்கள் வழியில் பார்த்து வணங்கிவிட்டுப் போவார்கள்.

அந்தக் கோயிலை அடைந்ததும், போத்தி உள்ளே சென்று இரண்டு மாமரப் பலகைகளை எடுத்து வந்தான்.

‘இது எதற்கு?’ என்று வினய் கேட்டான்.

பலகைகளை எதிரெதிரே போட்டுவிட்டு ‘உட்கார்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போனான். இம்முறை அவன் ஒரு சிறிய ஹோம குண்டத்தை எடுத்துவந்து வினய்க்கு எதிரே வைத்தான். குண்டத்தின் மறுபுறப் பலகையில் அவன் உட்கார்ந்துகொண்டான். சமித்துகளோ நெய்யோ ஹோமத்துக்கான பிற பொருள்களோ அங்கு இல்லை என்பது வினய்க்கு நெருடலாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஜென்சி எடுத்து வந்து கொடுப்பாள் என்று போத்தி சொன்னான்.

‘இதோ பார். இப்போது உனக்கு நான் சொல்லித்தரப்போவது மிக மிக எளியதொரு வனதுர்கா மந்திரம். தினமும் இதை ஆயிரத்தெட்டு முறை ஜபித்து வர வேண்டும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தக் கோயிலுக்கு வந்து உட்கார்ந்து லட்சத்து எட்டு முறை ஜபிக்க வேண்டும்.’

‘எத்தனை நாள்களுக்கு?’

‘நாற்பத்து எட்டு தினங்கள்.’

‘சரி.’

‘இது எதிரிகளை வசப்படுத்தும் மந்திரம். உன் ஜபம் அன்னையைத் தொட்டுவிட்டால், அதன்பின் உனக்கு எதிரி என்று யாரும் இருக்க முடியாது. அப்படி யார் எப்போது தோன்றினாலும் உன்னால் அவனை நிர்மூலமாக்கிவிட முடியும்.’

வினய்க்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. எந்த மந்திரமும் தெரியாமல் ஒரு எதிரியை அப்போதுதான் அவன் சம்ஹாரம் செய்துவிட்டு வந்திருந்தான். குறைந்தபட்சம் ஒரு போலிஸ் கேஸாகக்கூட அது உருப்பெறவில்லை. மாயாஜாலங்கள் புரியக்கூடிய தனது எஜமானன், தனது ரத்தத்தை சாட்சியமாக மண்ணில் கொட்டி வைத்துவிட்டு ஏதோ ரகசியத் திட்டத்துடன் கிளம்பிப்போயிருக்கிறார் என்று அந்தத் தென்னந்தோப்பின் காவலாளி, தெரிந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறானாம்.

வினய் இதனை போத்தியிடம் சொன்னபோது, அவனுக்குச் சட்டென்று கோபம் வந்தது. ‘நீ நம்பவில்லை அல்லவா?’ என்று கேட்டான்.

‘இது அப்படியல்ல. நான் தனியன். எனக்கு எதிரி என்று யாருமில்லை. அதனால் இல்லாத எதிரிக்காக நான் இதனைக் கற்றுத் தேருவதில் என்ன பயன்? எனக்கு உபயோகமாக வேறு ஏதேனும் சொல்லிக் கொடுங்கள்’ என்று வினய் கேட்டான்.

போத்தி தீர்மானமாகச் சொன்னான், ‘இல்லை. உனக்கு ஒரு எதிரி வருவான். உன் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவைப்பான். அன்று நீ உருத்தெரியாமல் அழிந்துவிடக் கூடாது. இதைக் கற்றுக்கொள். இது உனக்கு உதவும்.’

‘சரி, சொல்லிக் கொடுங்கள்’ என்று வினய் சொன்னான்.

போத்தி சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் இருந்தான். பிறகு கண்ணைத் திறந்து ஹோம குண்டத்தைப் பார்த்தான். குப்பென்று அதில் அக்னி பிடித்துக்கொண்டு எரியத் தொடங்கியது. எங்கிருந்து வந்ததென்று தெரியாத சமித்துக் கட்டைகளும் நெய் பாட்டிலும் வினய்க்குப் புன்னகை வரவழைத்தன.

போத்தி அதைக் கவனிக்காமல், அவனைத் தன் அருகே செவியை நீட்டும்படி சைகை செய்தான். ஹோம குண்டத்தைத் தாண்டித் தன் முகம் எதிர்ப்புறம் நீளும்படியாக வினய் வில்லாக வளைந்து போத்திக்குத் தன் வலக்காதைக் கொடுக்க, அவன் ‘ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல தூம்ர லோசனி சண்ட சம்ஹாரி...’ என்று தொடங்கி, நான்கு வரி வன துர்கா காயத்ரியை அவன் காதில் ஓதினான். அதன் தொடர்ச்சியாக, ஒன்பது வரிகள் கொண்ட இன்னொரு மந்திரத்தைச் சொல்லி, வரி வரியாக அவனைத் திருப்பிச் சொல்லச் சொன்னான். வினய் எதிர்பாராத ஒரு கணத்தில் தனது இடக்கரத்தால் அவன் உச்சந்தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். அடுத்தக் கணம் வினய் தன் சிந்தை இழந்துபோனான். கண்ணில் தெரிந்த அக்னி ஜுவாலைக்கு நடுவே அவனுக்கு வன துர்கையின் மூக்குத்தி தென்பட்டது. அதனையே உற்றுப் பார்த்தவண்ணம் கட்டுண்டவன் போல போத்தி சொல்லிக்கொண்டிருந்த மந்திரத்தைத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படி இருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் ஓடியிருக்கும் என்று தோன்றியது. போத்தி ஒரு வழியாக யாகத்தைப் பூர்த்தி செய்து ஔபாசனக் கல்லில் எரிந்து மிஞ்சியிருந்த கரித்தூளை வழித்து இரு கைகளிலும் எடுத்து வினய்யின் தலை முதல் உடம்பெங்கும் பூசித் தடவினான். வினய்க்குப் பேச்சே வரவில்லை. வாழ்வில் முதல் முறையாக சுத்தமாகத் தன் நினைவு என்ற ஒன்றே இல்லாதிருந்தது அப்போதுதான். சொரிமுத்து சொல்லி எவ்வளவோ தினங்கள் அவன் தியானத்தில் அமர்ந்திருக்கிறான். மூச்சடக்கி சில அப்பியாசங்கள் செய்திருக்கிறான். ஆனபோதிலும் அவன் தன்னை மறந்ததில்லை. இடமும் இருப்பும் எப்போதும் நினைவில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் போத்தி அவன் உச்சந்தலையில் அடித்த ஓரடியில் உலகமே இருண்டு சுருங்கி மறைந்துவிட்டாற்போலானது அவனுக்கு.

பேரனுபவம்தான். சந்தேகமில்லை. போத்தியிடம் என்னவோ இருக்கிறது என்று வினய்க்குத் தோன்றியது. சட்டென்று அவன் பாதம் பணிந்து எழுந்தான்.

‘இதுதான். இவ்வளவுதான். இந்த மந்திரத்தை நாற்பத்து எட்டு நாள் இடைவிடாமல் ஜபம் செய்துகொண்டிரு. அடுத்த நாள் நீ இதன் பலனைக் காண்பாய்’ என்று சொல்லிவிட்டு போத்தி கிளம்பிப் போனான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com