80. உதவாத உயிர்கள்

நான் கற்றது, தெரிந்துகொண்ட வித்தைகள், வசியமான பெண்கள், வளைத்துப் போட்ட சாத்தான்கள் அனைத்தையும் இடக்கரத்தால் சுற்றி வளைத்து எடுத்து அந்த மனிதர் தூக்கிப் போட்டுவிட்டாற்போல உணர்ந்தேன்.

என்றைக்காவது எப்படியாவது சோமன் எனக்கு வரணாவதியைக் காட்டித் தருவான் என்று போத்தி சொன்னான். வரணாவதி என்பது ஒரு மூலிகை என்று வினய்க்குத் தெரியும். அந்தப் பெயரை சொரிமுத்து சில சமயம் சொல்லியிருக்கிறான். அப்போது வினய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லா சித்தர்களுக்கும் மூலிகைகளின் மீது இருக்கும் ஈர்ப்பு அவனுக்கும் உள்ளதாக நினைத்தான். ஆனால், போத்தியைச் சந்தித்த பிறகு வினய்க்கு அந்த மூலிகையைப் பற்றிய ஆர்வம் வந்துவிட்டது.

அது மட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால், இந்த உலகின் ஒரே பெரும் வைத்தியன் நானாக இருப்பேன் என்று போத்தி சொன்னான்.

‘இருக்குமிடம் தெரியுமா?’

‘அதுதானே சிக்கல்? அது நம் வீட்டிலேயேகூட இருக்கலாம். வேறெங்காவது இருக்கலாம். அதன் தோற்றம் நமக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கலாம். நாம் தினசரி குழம்புக்கும் மற்றதுக்கும் போடும் கருவேப்பிலையாக இருந்துவிடுமோ என்றுகூட எண்ணியிருக்கிறேன். காலத்தின் மறைப்பில் அந்தப் பெயருக்குரிய மூலிகை எதுவென்று தெரியாமல் போய்விட்டது’.

‘யாருக்குமே தெரியாதா?’

‘இல்லை. ஒரு சிலருக்குத் தெரியும். வாரணாசியில் நான் ஒரு யோகியைச் சந்தித்திருக்கிறேன். அவர் பெயர் விஜய். அவரிடம் அந்த மூலிகை உள்ளதாக அவரது சீடன் ஒருவன் சொன்னான்’ என்று போத்தி சொன்னபோது, வினய் திகைத்துப் போய்விட்டான்.

‘நீங்கள் சந்தித்த யோகியின் பெயர் விஜய் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரே சொன்னாரா?’

‘ஆம். அப்படியொரு பெயரில் ஒரு யோகியைக் கற்பனை செய்ய முடியவில்லை அல்லவா?’

‘என் பெயர் வினய். நீங்கள் சந்தித்தது என் அண்ணனை’ என்று வினய் சொன்னபோது, போத்திக்கு ஒரே வியப்பாகிவிட்டது. உண்மையா உண்மையா என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறான்.

‘நான் பொய் சொல்லமாட்டேன். அவன் என் அண்ணன்தான். எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பிள்ளைகள்’.

அதன்பின் போத்தி நெடுநேரம் ஒன்றுமே பேசவில்லை. மிகவும் தயக்கத்துடன் பிறகு, ‘நீ ஏன் இந்த வழிக்கு வந்தாய்?’ என்று கேட்டான்.

‘தெரியவில்லை. அண்ணா என்னை திருவானைக்காவில் சொரிமுத்து என்ற சித்தரிடம்தான் அனுப்பிவைத்தான். முகமது குட்டியை நான் சந்திக்க நேராமல் இருந்திருந்தால், இப்போதும் நான் சொரிமுத்துவிடம்தான் இருந்திருப்பேன்’.

‘யார் அவர்? பெரிய சித்தரா?’

‘தெரியாது. ஆனால் சித்தர்தான். நிறைய பார்த்திருக்கிறேன்’.

அன்றெல்லாம், போத்திக்குத் தன்னுடைய கதையைத்தான் வினய் சொல்லிக்கொண்டிருந்தான். அண்ணா வீட்டை விட்டுப் போனது. அவன் போனது. நான் போனது. வினோத் என்னவானான் என்று தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறான்.

‘இது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான். ஒரே குடும்பத்தில் இப்படி நடப்பது அபூர்வம்’ என்று போத்தி சொன்னான்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பிறகு, போத்தியிடம் வினய் மனம் விட்டு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறான். ‘நான் முறைப்படி சன்னியாச தீட்சை பெற விரும்புகிறேன். அதற்கு ஆவன செய்ய உங்களுக்கு யாரையாவது தெரியுமா?’

உடனே இல்லை என்று போத்தி சொன்னான். ‘நான் அந்த வழிக்குப் போவதில்லை. உனக்குமே அது அவசியமில்லை என்று நினைக்கிறேன்’.

‘இல்லை. எனக்கு அது அவசியம்’.

‘ஏன் அப்படி நினைக்கிறாய்?’

‘ஒரு தடுப்பு வேலி இல்லாததுதான் என் பிரச்னை என்று நினைக்கிறேன். முகமது குட்டி என்ற மனிதனைக் கொன்றது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவேயில்லை. ஆனால் ஒரு கொலையில் இருந்த மனத்தீவிரம் எனக்கு தியானத்தில் கூடுவதில்லை. இது ஒரு பிரச்னை அல்லவா?’

‘நான்தான் தியானமே அவசியமில்லை என்கிறேனே? இதோ பார். மந்திர ஜபம் ஒன்று மட்டும் போதும். அதைக் கொண்டே நினைத்ததைச் சாதித்துவிடலாம்’.

போத்தியுடன் தங்கியிருந்த நாள்களில் வினய் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். மந்திர ஜபம். இருபது முப்பது சிறு தேவதைகளுக்கான மந்திரங்கள். போத்தி, சோமன் என்ற வேதகாலக் கடவுளைத் தன் மானசீக தெய்வமாக வைத்திருந்தான். எதையும் சோமன் முகமாகவே செய்வது அவனது வழக்கம்.

‘ஒன்றைப் புரிந்துகொள் வினய். தவமும் யோகமும் பெரிய விஷயங்கள்தாம். கடும் பயிற்சி கோருபவை. நம்மைப் போன்ற எளியவர்களுக்கு அது சாத்தியமில்லை. என்னால் என் மகளை விட்டுவிட்டு சன்னியாசம் பெற்றுப் போக முடியாது. நீ சன்னியாசம் வேண்டும் என்று கேட்டாலும், உன்னால் உன் குடும்பத்தின் நினைவைத் துறக்க முடியாது’ என்று போத்தி சொன்னான்.

‘ஆம். கஷ்டம்தான்’.

‘அதனால்தான் சொல்கிறேன். உன் கவனத்தை ஜபத்தில் திருப்பு. சோமனை வணங்க ஆரம்பி. சடங்குகள் சிலவற்றைச் சாதிக்கும். யாகங்கள் சிலவற்றைச் செய்து கொடுக்கும். உனக்கு நான் ஏவல் சொல்லித் தருகிறேன். வசியம் சொல்லித் தருகிறேன். என் ஜென்சியைப் போல் நீ ஒன்றைத் தேடிப் பிடிப்பது சுலபம். தெய்வ தரிசனம்தான் கஷ்டம். ஆத்மாக்களை எளிதில் வசப்படுத்திவிட முடியும்’.

‘ஆனால் இது சிறியதல்லவா?’

‘ஆம். நாம் சிறியவர்கள்தாம். அதையும் மறக்கக் கூடாது’ என்று போத்தி சொன்னான்.

வாரணாசியில் அவன் அண்ணாவைச் சந்தித்த விவரத்தை வினய்யிடம் விவரித்துச் சொல்லியிருக்கிறான். அது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகியிருக்கின்றன. போத்தி அப்போதுதான் ஜென்சியை முழுமையாகப் பயன்படுத்தித் தனது பணிகளை நிறைவேற்ற ஆரம்பித்திருந்தான். சும்மா போய் சுற்றிவிட்டு வரலாம் என்று வாரணாசிக்குப் போனவன், மணிகர்ணிகா கட்டத்தில் ஒரு மாலைப் பொழுது போய் அமர்ந்து நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது அண்ணா அந்தப் பக்கமாகப் போனான்.

தோற்றத்தைக் கொண்டு அவன் ஒரு துறவி என்றோ யோகி என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. மிகப் பழைய அழுக்கு வேட்டி ஒன்றை அவன் கட்டியிருந்தான். அதில் பல இடங்களில் கிழிந்திருந்தன. மேல் சட்டை அணியாமல் ஒரு மெல்லிய துண்டைப் போர்த்தியிருந்தான். ஏதோ யோசனையோடு படிக்கட்டுகளில் நடந்து போய்க்கொண்டிருந்தவன், போத்தி அமர்ந்திருந்த இடத்தைக் கடந்தபோது சட்டென்று நின்றான். திரும்பிப் பார்த்தான். போத்தியும் அவனைப் பார்த்தான். மொழி தெரியாத, இடம் அறியாத முற்றிலும் புதிய இரண்டு பேர். நின்று உற்றுப் பார்க்கும் ஒருவனிடம் என்ன பேசுவது? அல்லது வெறுமனே சிரிக்க வேண்டுமா?

போத்தி ஒரு ஹலோ சொல்லலாம் என்று நினைத்தபோது, அண்ணா அவனிடம் மலையாளத்தில் பேசியிருக்கிறான். ‘இங்கே உட்கார்ந்து நேரத்தை விரயம் செய்யாதே. இங்கு போகும் எந்த உயிரும் உனக்கு உதவாது’.

சொல்லிவிட்டு, பதிலுக்கு நிற்காமல் அவன் போயேவிட்டான். போத்திக்கு பேயடித்த மாதிரி ஆகியிருக்கிறது. அவன் சொல்லிவிட்டுப் போனதன் பொருளே சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுக்குப் புரிந்திருக்கிறது. ஐயோ என்று அலறியடித்துக்கொண்டு அண்ணாவைத் தேடி ஓட ஆரம்பித்தான். காசிக் கூட்டத்தில் ஒரு நபரை எங்கே போய்த் தேடிக் கண்டுபிடிப்பது? அதுவும் முகம்கூடப் பரிச்சயமில்லாத யாரோ ஒருவன். அவன் தன்னை மொத்தமாகப் பத்து விநாடிகள் பார்த்திருப்பானா? பார்த்த மாத்திரத்தில் தான் யாரென்று தெரிந்துகொண்டு, தொழிலை அறிந்துகொண்டு, நக்கலாக அப்படி ஒரு வரியை வீசிவிட்டுப் போகிறான் என்றால், அவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும்!

எப்படியாவது அண்ணாவைச் சந்தித்தே தீருவது என்று முடிவு செய்து, போத்தி காசி நகரமெங்கும் அலைந்து திரிந்திருக்கிறான். ஒவ்வொரு தெரு வழியாகவும் சந்து பொந்துகள் வழியாகவும் சுற்றித் தேடியிருக்கிறான். கண்ணில் பட்ட சாதுக்கள் அத்தனை பேரிடமும், அண்ணாவின் தோற்றத்தைத் தான் கவனித்த வரையில் விளக்கி, அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா என்று கேட்டிருக்கிறான்.

‘அவன் எப்படி இருந்தான்? என்ன சொல்லிக் கேட்டீர்கள்?’ என்று வினய் போத்தியிடம் கேட்டான்.

‘என்ன சொன்னேன்? ஆம். அவரது இரு புருவங்களுக்கும் நடுவே ஒரு மச்சம் இருந்தது. பெண்கள் பொட்டு வைப்பது போலொரு மச்சம்’.

‘யாராவது உதவினார்களா?’

‘யாருக்குமே அவரைத் தெரிந்திருக்கவில்லை. அதுதான் என்னைத் தூங்கவிடாமல் அடித்தது. எப்படியாவது அந்த யோகியை நான் மீண்டுமொருமுறை தரிசித்துவிட வேண்டும் என்று தீவிரமாக நினைத்தேன். இருபது நாள் காசி நகரெங்கும் சுற்றியலைந்து தேடினேன்’.

‘இருபது நாளா?’

‘ஆம். நான் எதற்காகக் காசிக்குச் சென்றேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது. அதுவரை நான் கற்றது, தெரிந்துகொண்ட வித்தைகள், வசியமான பெண்கள், வளைத்துப் போட்ட சாத்தான்கள் அனைத்தையும் இடக்கரத்தால் சுற்றி வளைத்து எடுத்து அந்த மனிதர் தூக்கிப் போட்டுவிட்டாற்போல உணர்ந்தேன்’.

‘ஓ. உங்கள் சாத்தான்கள் அப்போது உங்களை விட்டுப் பிரிந்துவிட்டனவா?’

‘அப்படி இல்லை. ஆனால் அந்த இருபது தினங்களும் நான் எவ்வளவோ முயற்சி செய்து அவரைத் தேடினேன். என் ஜென்சி எனக்காக நம்ப முடியாத அளவுக்கு முயற்சிகள் எடுத்தாள். என்ன செய்தும் என்னால் அவரைச் சந்திக்கவே முடியவில்லை. இறுதியில், என் அலைச்சலைக் கண்டு மனம் இரங்கி அவரேதான் எனக்குக் காட்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்’ என்று போத்தி சொன்னான்.

காட்சி கொடுக்க! வினய்க்கு லேசாகச் சிலிர்த்தது. கூடவே சிரிப்பும் வந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com