87. சேரிடம்

இடங்களோ, மனிதர்களோ இனி எந்நாளும் எனக்கு முக்கியமாக இராது என்று எண்ணிக்கொண்டேன். எது முக்கியம் என்பதைக் கண்டறிந்துகொள்ள முழு வாழ்நாளும் மிச்சம் இருக்கிறது. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்று திடுக்கிட்டாற்போலத் தான் தெரிந்தது. அதனால் என்ன? எனக்குள் ஒரு பாறையை உடைத்துவிட்டாற்போலத் தோன்றியது. மகிழ்ச்சியாக இருந்தது. ஐந்து ரூபாய் எதற்கு? டீ வேண்டுமானால் குடித்துக்கொள் என்று அவன் சொன்னான்.

‘இல்லை. நான் கழிப்பிடம் செல்ல வேண்டும். குளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உணவைப் பற்றியோ பானத்தைப் பற்றியோ நினைக்க முடியும்’ என்று சொன்னேன்.

‘வெளியூரா?’

‘ஆம். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்’.

‘பையை - பணத்தைத் தவறவிட்டுவிட்டாயா?’

‘அப்படி எதுவும் இல்லை. நான் பணமில்லாமல்தான் கிளம்பி வந்தேன். அல்லது இருந்த பணம் தீர்ந்துவிட்டது’.

‘இங்கே யாரைத் தேடி வந்தாய்?’

‘தெரியவில்லை’ என்று சொன்னேன். அதற்குமேல் அவன் என்னுடன் பேசவில்லை. கடையின் உட்பக்கம் கை காட்டி, உள்ளே இருக்கும் கழிப்பறை, குளியலறையை உபயோகித்துக்கொள்ளச் சொன்னான். அவனுடைய வேட்டி சட்டை ஒன்றை எனக்குத் தந்தான். நான் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே போனேன். இருபது நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற்று வெளியே வந்தேன். அவன் எனக்கு ஒரு டீ போட்டுக் கொடுத்தான். அதைக் குடித்தேன். பன் வேண்டுமா என்று கேட்டான். ஏனோ சட்டென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். உண்மையில் எனக்கு மிகுந்த பசி இருந்தது. எதையாவது உண்ண வேண்டும் போலத்தான் உணர்ந்தேன். ஆனாலும் என்னை மீறி வேண்டாம் என்று வாயில் வந்துவிட்டது. சிறிது வருத்தப்பட்டேன்.

‘பரீட்சையில் பெயில் ஆகிவிட்டாயா?’ என்று அவன் என்னைக் கேட்டான்.

‘இல்லை’.

‘வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்துவிட்டாயா?’

‘நிச்சயமாக இல்லை. என் வீட்டில் யாரையும் என்னால் கோபித்துக்கொள்ளவே முடியாது’.

‘அப்புறம் என்ன? காதல் பிரச்னையா?’

நான் அதுவும் இல்லை என்று சொன்னேன். உண்மையில் ஒருவன் வீட்டை விட்டு ஓடிப் போக நியாயமான ஒரே காரணம் அவனுக்கு வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதுதான். இதை எப்படிச் சொல்லி என்னால் புரியவைக்க முடியும்?

அந்தக் கடைக்காரனுக்கு என்ன காரணத்தாலோ என்னைப் பிடித்திருக்க வேண்டும். கடைக்கு ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருக்கலாம். ஒருவேளை நான் பிழைப்புத் தேடி ஓடி வந்திருந்தால் அவனுக்கு மிகவும் வசதியாக இருந்திருக்குமோ?

‘ஐயா, நான் வேலை பார்க்க வரவில்லை. எதற்காக வந்தேன் என்பதையே இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். என்னை அதிகம் நம்பாதீர்கள்’ என்று மட்டும் சொன்னேன். அதோடு, சரி கிளம்பு என்று சொல்லிவிடுவான் என்று எதிர்பார்த்தேன். நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக, நான் முன்னர் கேட்ட ஐந்து ரூபாயை அப்போது என் கையில் கொடுத்து, ‘போய் வா’ என்று சொன்னான்.

‘இது எதற்கு? நீங்கள்தான் உங்கள் கழிவறையை உபயோகித்துக்கொள்ள அனுமதித்துவிட்டீர்களே’.

‘பரவாயில்லை. வைத்துக்கொள்’ என்று சொன்னான். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மரியாதையாக அந்தப் பணத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘தேவை இல்லாதபோது பணம் ஒரு சுமை’ என்று சொன்னேன்.

‘ஆனால் அடுத்த வேளை உனக்குப் பசிக்குமே?’

‘அதை அப்போது பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு இவ்வளவு செய்ததே அதிகம். உங்களை நான் மறக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றேன். அன்று மாலை இருட்டும் வரை கால் போன திசைகளில் நடந்துகொண்டிருந்துவிட்டு, இருட்டியதும் ஒரு சிறிய கோயிலின் முன் மண்டபத்தில் சென்று படுத்துக்கொண்டேன். அது ஒரு அம்மன் கோயில். இங்கெல்லாம் யாரும் படுக்கக் கூடாது என்று சொல்லி யாராவது விரட்டி விடுவார்களா என்று யோசனையாக இருந்தது. அப்படி யாரும் வரவில்லை. ஆனால் குளிர் பயங்கரமாக இருந்தது. நினைத்து நினைத்து மழை வேறு பெய்துகொண்டே இருந்தது. ஓர் இரவு முழுவதும் இந்தக் குளிரில் எப்படிப் படுத்துக் கிடப்பது என்று கவலையாகிவிட்டது. நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். உடலை ஒடுக்கி ஒடுக்கிப் பார்த்தும் குளிர் அதிகரிக்கத்தான் செய்ததே தவிர சற்றும் குறையவில்லை. விரைவில் எனக்கு உடலே ஒரு பெரிய ஐஸ் கட்டி போல் விரைத்துவிடும் என்று தோன்றியது. மூச்சு விடுவதுகூட சிரமமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். படுத்துக்கொண்டும் உட்கார்ந்துகொண்டும் இருப்பதைவிட நடப்பது பலனளிக்கும் என்று தோன்றியது.

சட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன். கோயிலை விட்டு வெளியே வந்து கால் போன வழியில் போய்க்கொண்டே இருந்தேன். காற்றின் ஈரப்பதம் காதுகள் வழியே அடி வயிறு வரை சென்று தாக்கியது. குளிரில் என் விரல்கள் நடுங்கின. உதடு துடித்தது. ஊரடங்கிய இருளில் நான் ஒருவன் மட்டும் ஒதுங்க இடமின்றித் திரிந்துகொண்டிருந்தேன்.

ஒரு வகையில் அந்தக் கொடும் தனிமையை நான் ரசித்தேன் என்று நினைக்கிறேன். எனக்கு அது வேண்டியிருந்தது. வெறும் வினாக்களால் நிரம்பிய மூளையை அந்தக் குளிரும் தனிமையும் கொத்திக் கொத்தி குப்பையள்ளிப் போட்டுக்கொண்டிருந்தன. என் கேள்விகள் அனைத்தும் உதிர்ந்துவிட்டால் குளிர் என்னை விட்டுப் போய்விடும் என்று தோன்றியது. குளிரை என் அச்சங்களின் ஸ்தூலமாகக் கண்டேன். இந்த அனுபவம் எனக்கு நிச்சயம் தேவை என்று தோன்றியது.

நெடு நேரம் நடந்துகொண்டே இருந்ததில் ஒரு கட்டத்தில் குளிர் எனக்குப் பழகிவிட்டிருந்தது. ஒரு சிறந்த குளிரால் ஒருவனைச் சித்திரவதை செய்ய முடியுமே தவிரக் கொல்ல முடியாது என்று நினைத்தேன். ஒருவேளை கொல்லும் குளிர் வேறாக இருக்கலாம். இது இல்லை. இந்த ஊர்க் குளிர் கொல்லாது என்பது புரிந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இரவு முழுதும் நேர்த்திக்கடன் போல மடிகேரியைச் சுற்றிக்கொண்டே இருந்தேன். ஓரிடத்தில்கூட நான் அமரவில்லை. ஓய்வெடுக்க நினைக்கவில்லை. ஒரே இரவில் ஒரு ஊரின் புவியியல் முழுவதையும் கண்டறிந்துகொண்டுவிடும் வேட்கை வந்துவிட்டதா என்ன? அதற்குமுன் மடிகேரி என்ற ஊரின் பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. குடகில் காவிரி பிறக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் வந்து சேர்ந்த இடம் குடகுதான் என்பதே வந்த பின்புதான் எனக்குத் தெரியும். இடங்களோ, மனிதர்களோ இனி எந்நாளும் எனக்கு முக்கியமாக இராது என்று எண்ணிக்கொண்டேன். எது முக்கியம் என்பதைக் கண்டறிந்துகொள்ள முழு வாழ்நாளும் மிச்சம் இருக்கிறது. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

மறுநாள் அதிகாலை நான் அந்த ஆசிரமத்தின் வாசலைச் சென்றடைந்திருந்தேன். அந்த இடத்துக்குப் பெயரெல்லாம் இல்லை. உள்ளே ஒரு சாது இருக்கிறார்; அவருக்கு நான்கு சீடர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. முதலில் அது ஒரு ஆசிரமம் என்பதேகூட எனக்குத் தெரியாது. இடைவெளிவிட்டு நான்கைந்து குடில்கள் இருந்தன. ஒரே ஒரு சிறிய கட்டடம். சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு வேலியெங்கும் மலர்க்கொடிகள் படர விட்டிருந்தார்கள். அது ஒரு தொடக்கப்பள்ளிக்கூடமாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். சிறிது நேரம் உள்ளே சென்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி வேலிப் படலைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போனேன். கதவற்ற குடிசைக்குள் ஓர் இளைஞன் உறங்கிக்கொண்டிருந்தான். அடுத்தக் குடிலுக்குப் போனபோதும் அங்கொரு இளைஞன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலுக்கும் கதவில்லை. அங்கிருந்த நான்கு குடில்களிலும் தலா ஓர் இளைஞன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். நான்கு பேருமே சட்டை அணியாதிருந்தார்கள். வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணிந்திருந்தார்கள். மேல் துண்டை கழுத்தைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள். இந்தக் குளிரில் இவர்களுக்கு மட்டும் எப்படி உறக்கம் வருகிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. போர்வை, தலையணை, படுக்கை இருந்துவிடுமானால் இதே குளிர் சுகமானதாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நான் அங்கிருந்து நகர்ந்து நான்கு குடில்களுக்கும் எதிரே இருந்த அந்தச் சிறிய கட்டடத்தை நெருங்கினேன். அது ஒரு வீடு போலவோ, அரங்கம் போலவோ இல்லை. கோயில், மடம் என்று என்னவாகவும் என்னால் அதை வரையறுக்க இயலவில்லை. மிகச் சிறிய கட்டடம்தான். மிஞ்சினால் பதினைந்தடிக்கு இருபதடி இருக்கும். எந்த அலங்காரமும் இல்லாமல் சுவர்களுக்குச் சுண்ணாம்புகூடப் பூசாமல் வெறும் செங்கல் கட்டடமாக இருந்தது. பாதி கட்டப்பட்ட கட்டடமாக இருக்கும் என்று நினைத்தேன். அல்லது அதற்குமேல் கட்டுவதற்குப் பண வசதி இல்லாதிருந்திருக்கலாம். பார்க்கப் புதிய கட்டடமாகவும் தெரியவில்லை. நான் அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு முன் பக்கம் வந்தேன். ஒரு கதவு இருந்தது. ஆனால் லேசாக மூடப்பட்டிருந்ததே தவிர, மூடித் தாழிடப்பட்டிருக்கவில்லை. கதவுகளை நம்பாமல் வாழும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் என்னை வசீகரித்தார்கள். நான் அந்தக் கட்டடத்தின் உள்ளே நுழைந்ததுமே ‘யாரது?’ என்றொரு குரல் கேட்டது. இருட்டில் எனக்கு உருவம் சரியாகத் தெரியவில்லை. யாரோ ஒரு நபர் எழுந்து சென்று விளக்கப் போடுவதைப் பார்த்தேன்.

இப்போது எனக்கு அவரும் அவருக்கு நானும் முழுதாகத் தெரிந்தோம்.

‘யார்?’ என்று அவர் கேட்டார்.

‘நான் ஒரு வழிப்போக்கன். இந்த இரவு தங்க இடமின்றித் திரிந்துகொண்டிருந்தேன். கதவற்ற இந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என்று நினைத்தேன்’ என்று சொன்னேன்.

‘அப்படியா? சரி உட்கார்’ என்று அவர் சொன்னார். முற்றிலும் நனைந்திருந்த என் தோற்றம் அவரை வருத்தியிருக்க வேண்டும். என்னை அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு துண்டும் வேறு வேட்டி ஒன்றும் கொண்டு வந்து கொடுத்தார். நான் நன்றி சொல்லி அதை வாங்கி ஈரத்தைத் துடைத்தேன்.

‘தலைமுடியை நன்றாகத் துடை. இல்லாவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’ என்று சொன்னார்.

நான் அப்படியே செய்தேன். நான் அணிந்திருந்த அந்தக் கடைக்காரனின் வேட்டியைக் கழட்டிவிட்டு அவர் அளித்த புதிய வேட்டியை அணிந்துகொண்டேன். மேல் சட்டையை அவிழ்த்ததும், ‘அடடா. உனக்குத் தர இங்கே மாற்றுச் சட்டை இல்லையே’ என்று அவர் சொன்னார். அவர் காவி நிறத்தில் ஒரு ஜிப்பா அணிந்திருந்தார்.

‘எனக்கு அம்மாதிரி ஒரு ஜிப்பா தர முடிந்தால்கூடப் போதும்’ என்று சொன்னேன்.

‘சரி இரு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று ஒரு ஜிப்பாவை எடுத்து வந்து கொடுத்தார். அது எனக்கு மிகவுமே பொருந்தாமல் தொளதொளவென்று இருந்தது. இருந்தாலும் ஈர உடையை அவிழ்த்துவிட்டு, காய்ந்த உடைகளை அணிந்தது சற்று இதமாக இருந்தது. நான் அவருக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, ‘நீங்கள் ஏன் தூங்காமல் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

அவர் சிறிது நேரம் என்னை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னார், ‘நீ வருவாய் என்றுதான்’.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com