90. மழை

அவர் சொன்ன அந்த மூச்சுப் பயிற்சியை நான் செய்து பார்க்க ஆரம்பித்தேன். சில மாதங்களில் குளிர் எனக்கு மிகவும் பழகிவிட்டது. எத்தனை சில்லிட்ட நீரில் இறங்கினாலும் கண நேரத் தவிப்பும் இல்லாதிருந்தது.

மாநிலம் முழுதும் மழை அடித்துப் புரட்டிக்கொண்டிருந்தது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். மடிகேரியிலேயே ஏழெட்டு இடங்களில் நிலச்சரிவு உண்டாகி, போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. வெளியூர் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாமல் எங்கெங்கோ பாதி வழியில் நின்றுகொண்டிருந்தன. காலை ஆறு மணிக்குப் பெய்யத் தொடங்கும் மழை, இடைவிடாமல் மதியம் வரை பெய்துகொண்டே இருந்தது. ஒரு நாள் இருநாளல்ல. ஒரு வாரமாகவே அப்படித்தான் இருந்தது. இரண்டு மணிக்குப் பிறகு சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் நான்கு மணிக்கு மழை பிடித்துக்கொண்டுவிடும். இரவெல்லாம் மழை. ஓயாத மழை. வெளியே கால் வைக்கவே முடியாது போலிருந்தது. அந்நாள்களில் நான் ஆசிரமத்தை விட்டு வெளியே போகவேயில்லை. பெரும்பாலும் குருஜியின் அறையிலேயேதான் இருந்தேன். அவர் படிக்க விரும்பிய புத்தகங்களை அவருக்காகப் படித்துக் காட்டிக்கொண்டிருந்தேன். இதில் ஒரு வசதி என்னவென்றால் குருவோடு ஒரு பணியில் இருக்கும்போது மற்ற வேலைகளுக்கு யாரும் அழைக்கமாட்டார்கள். முக்கியமாக சமைக்கும் பணி.

இந்த உலகில் நான் மனமார வெறுத்த ஒரு வேலை உண்டென்றால் அது சமையல்தான். சமையலைக்கூட சமாளித்துவிடலாம். உண்டபின் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்ப்பது எனக்குச் சற்றும் பிடிக்காத வேலை. ஆசிரமத்தில் நாங்கள் ஐந்து பேர் மட்டும்தான் அப்போது இருந்தோம். சமைப்பது என்றால் எங்கள் ஐந்து பேருக்கு மட்டும்தான். அது ஒரு பெரிய காரியமல்ல என்றாலும் எப்படியாவது அதை நான் தவிர்க்கவே விரும்பினேன். சமைக்க வேண்டிய நேரம் நெருங்கும்போது சட்டென்று குருஜியின் அறைக்குள் சென்று அமர்ந்துவிடுவேன். அவர் கேட்காவிட்டாலும் நானாக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அவருக்குப் படித்துக் காட்ட ஆரம்பித்துவிடுவேன். சரியாக ஒரு மணி நேரம். சமையல் முடித்துவிட்டு மற்ற மூவரும் வந்து சாப்பாடு தயார் என்று சொல்லும்போது மூடி வைத்துவிட்டு எழுந்துவிடுவேன்.

எனது நண்பர்களுக்கு என்னுடைய இந்த உத்தி புரியவில்லை. அவர்கள் வேலைகளைப் பங்குபோட்டுக்கொண்டு தாங்களே தினமும் சமைத்தார்கள். ஒருநாள் குரு கேட்டார், ‘விமல் உனக்கு சமைக்கப் பிடிக்காதா?’

நான் யோசிக்கவேயில்லை. ‘ஆம் குருஜி’ என்று சொன்னேன்.

‘நினைத்தேன். ஆனால் சாப்பிடப் பிடிக்குமல்லவா?’'

‘மிகவும்’.

‘நல்லது. நீயே ரசித்துச் செய்யும்படியாக உனக்கு நான் சில எளிய சாப்பாட்டு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தரலாம் என்று பார்க்கிறேன்’.

‘எதற்கு குருஜி? வேண்டாமே’.

‘இல்லை. என்றாவது உதவும்’ என்று சொல்லிவிட்டு அவர் எனக்கு காய்கறி சாலட் செய்யக் கற்றுத் தந்தார். ஒரு கேரட். ஒரு வெங்காயம். ஒரு பெரிய வெள்ளரிக்காய். முட்டைக் கோஸ் இலைகள் கொஞ்சம்.ஒரு தக்காளி. வெங்காயத் தாள் சிறிது. காய்களை அவர் நறுக்கிய விதம் மிகவும் அழகாக இருந்தது. ஒரு குழந்தைக்குத் தலை வாருவது போல அவர் கறிகாய்களை நறுக்கினார். மிகவும் மென்மையாக. அவற்றுக்கு வலிக்கும் என்பது போல. நறுக்கிய காய்களைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்புப் போட்டுக் கிளறினார். அதன்பின் அரை மூடி எலுமிச்சை சாறை அதன்மீது பிழிந்து மீண்டும் கிளறினார். மேலாகச் சில புதினா இலைகளைத் தூவி ஒரு பிளேட்டில் கொட்டி ஒரு ஸ்பூனையும் வைத்து என்னிடம் தந்தார்.

‘சமைக்க சிரமமாக இருந்தால் இப்படிச் செய்து சாப்பிடலாம். இது நன்கு பசி தாங்கும்’ என்று சொன்னார்.

இன்னொரு நாள் பனீர் வாங்கி வரச் சொல்லி உதிர்த்து அதில் அரை தம்ளர் பால் சேர்த்து வேகவைத்து எடுத்தார். வாணலியில் சிறிது நெய் விட்டு தாளித்து அதில் பனீரைக் கொட்டிக் கிளறிக் கொடுத்து, ‘இது பனீர் பொங்கல். இதைச் சாப்பிட்டால் ஒன்பது மணி நேரம் பசிக்காது’ என்று சொன்னார். உண்மையிலேயே அன்று முழுதும் எனக்கு வேறெதுவும் சாப்பிடத் தோன்றவில்லை. அந்தப் பொங்கல் அவ்வளவு ருசியாக இருந்தது. வயிறும் அடங்கியிருந்தது.

நெய்யை உருக்கி, கொதி வரும் நேரம் ஒரு பிடி துளசி இலைகளைப் போட்டு இறக்கிவிடுவார். அது ஆறியதும் அப்படியே எடுத்துக் குடிக்கச் சொல்வார். ‘இருபத்து நான்கு மணி நேரம் பசி தாங்க இதுதான் சரியான உணவு’ என்று சொன்னார்.

குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் எல்லைகளைத் தாண்டாதிருந்த எனக்கு அவரது மாறுபட்ட உணவு ஆலோசனைகள் ஆர்வத்தைத் தூண்டின. மெல்ல மெல்ல யாருமில்லாத சமயங்களில் சமையலறையில் குருஜி சொல்லிக் கொடுத்தவற்றைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் சகாக்கள் மூவரும்கூட அம்மாதிரியான உணவு முறையின் மீது ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். வெகு விரைவில் நாங்கள் ஒரு நாளில் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டோம். என்னால் சாப்பிடாமல் இருக்க முடிகிறது என்பது எனக்கு மிகுந்த அதிசயமாக இருந்தது. ஒரு வேளை தவறினாலும் துடித்துப் போய்விடுபவன் நான். ஆனால் மிக எளிய சில மாற்றங்களின் மூலம் நாளெல்லாம் உண்ணாதிருக்கும் சக்தியைப் பெற குருஜி உதவினார்.

அன்றைக்குக் காலை எழுந்ததுமே குருஜி மழை பார்க்கப் போகலாம் என்று அறிவித்தார். உடனே நான் வரவில்லை என்று சொன்னேன்.

‘ஏன்?’

‘எனக்குக் கொஞ்சம் படிக்க வேண்டும். நீங்கள் போய்வாருங்கள். மாலை நான் சமைத்து வைக்கிறேன்’ என்று சொன்னேன்.

அவர்கள் நான்கு பேரும் மழை பார்க்கப் புறப்பட்டுப் போனார்கள். குருஜிக்கு அது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. காவிரி தோன்றும் மலை உச்சிக்குப் போய் நின்றுகொள்வார். பெருமழைக் காலங்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரமாட்டார்கள். தனிமையின் பிரம்மாண்டம் ஒரு தரிசனமாக மேகங்களின் வழியே கீழிறங்கி வந்து மேனி தொட்டு நகர்ந்து போகும். மழையை ரசிப்பதற்கு மலை உச்சிதான் சரியான இடம் என்று குரு சொல்லுவார்.

ஒருமுறை என்னையும் அவர் காவிரியின் பிறப்பிடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அன்றும் மழை நாள்தான். ஆனால் இந்தளவு பெருமழை இல்லை. சிகரத்தின் உச்சியில் நாங்கள் ஐந்து பேர் மட்டும் தனியே நின்றிருந்தோம். நாலாபுறங்களில் இருந்தும் மழைச் சாரல் அடித்து எங்களை நனைத்தது. நனைவது ஒரு தவம் என்று அவர் சொன்னார். ‘ஈரத்தை தியானம் செய்’ என்று சொல்லி என்னை அங்கேயே அமர வைத்தார். அரை மணி நேரம் நான் குளிர்ச்சியைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என் நினைவெங்கும் சில்லிட்டுப் போய் மூச்சுக்காற்று சூடாக வரத் தொடங்கியது போல உணர்ந்தேன். குருவிடம் இதனைச் சொன்னபோது, ‘சரியாக இருக்கிறது. அப்படியே வலது நாசியில் காற்றை உறிஞ்சி உள்ளே தேக்கி வை. முப்பது விநாடிகள்’.

நான் அவர் சொன்னது போலச் செய்தேன். முப்பது வரை எண்ணிவிட்டு அவரைப் பார்த்தேன்.

‘இடது நாசி வழியே தேக்கிய காற்றில் பாதியை வெளியே அனுப்பு. சரிபாதி’.

அப்படியே செய்தேன்.

‘மீதமுள்ள காற்றை மீண்டும் வலது நாசி வழியே வெளியே அனுப்பு’ என்றவர், அதன்பின் முப்பது விநாடிகள் மீண்டும் காற்றை உள்ளே இழுக்காமல் சும்மா விடச் சொன்னார்.

என்னால் இருபது விநாடிகள் மட்டுமே அவ்வாறு இருக்க முடிந்தது. அதற்குள் மூச்சு முட்டிவிட்டது.

‘முயற்சி செய்து பார் விமல். இதே போலத் தொண்ணூறு நிமிடங்கள் இடைவிடாமல் உன்னால் செய்ய முடியுமானால் உன்னால் எத்தகைய குளிரையும் வென்றுவிட முடியும்’.

அவர் சொன்னது உண்மை. அன்றைக்குச் செய்ய முடியவில்லை என்றாலும் ஆசிரமத்துக்கு வந்த பின்பு தினமுமே காலை எழுந்ததும் அவர் சொன்ன அந்த மூச்சுப் பயிற்சியை நான் செய்து பார்க்க ஆரம்பித்தேன். சில மாதங்களில் குளிர் எனக்கு மிகவும் பழகிவிட்ட ஒன்றாக இருந்தது. எத்தனை சில்லிட்ட நீரில் இறங்கினாலும் கண நேரத் தவிப்பும் இல்லாதிருந்தது. குளிர்ச்சியில் உடல் புல்லரிப்பதில்லை. என்னால் சட்டையில்லாமல், போர்வையில்லாமல் வெறுந்தரையில் படுத்துத் தூங்க முடிந்தது. கம்பளியும் ஸ்வெட்டரும் மப்ளரும் சுற்றிக்கொண்டு திரியும் மடிகேரிவாசிகள், வெற்றுடம்புடன் அலைந்து திரிந்த என்னை வினோதமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்ப்பதற்காகவே நான் எனது அதிகாலை நடையின்போது மேல் சட்டை அணிந்து செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.

அன்றைக்கு மழை பார்க்க குருநாதரும் என் மூன்று தோழர்களும் புறப்பட்டுப் போனபின்னர் நான் மதியம் இரண்டு மணி வரை படித்துக்கொண்டே இருந்தேன். அதன்பின் சமைக்கலாம் என்று முடிவு செய்து சமையலறையில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தேன். முட்டைக் கோஸ் இருந்தது. கேரட் இருந்தது. கொஞ்சம் அரிசி இருந்தது. ஐந்து பேருக்குப் போதுமா என்று சந்தேகமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் மஞ்சு ஆசிரமத்துக்கு வந்தாள். கொட்டும் மழையில் இவள் ஏன் இப்போது வருகிறாள் என்று எனக்கு வியப்பாக இருந்தது. அவள் மழை கோட் அணிந்திருந்தாள். கையில் ஒரு பெரிய தூக்குச் சட்டி கொண்டுவந்திருந்தாள்.

‘என்ன இது?’

‘பிசிபேளாபாத்’.

‘என்ன?’

‘உங்கள் சாம்பார் சாதத்தின் எங்கள் ஊர் வடிவம்’.

நான் ஆர்வமுடன் அதை வாங்கித் திறந்தேன். குப்பென்று நெய்யின் மணம் நாசியில் ஏறி நிறைந்தது. நன்றாக இருக்கும்போலத் தோன்றியது.

‘இந்த மழைக்கு இதைச் சாப்பிட நன்றாக இருக்கும். குருஜிக்குக் கொடுக்கலாம் என்று கொண்டு வந்தேன்’.

‘மிக்க நன்றி மஞ்சு. என்ன சமைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீ என் வேலையைப் பாதியாக்கிவிட்டாய். பத்து நிமிடங்கள் உட்கார்’ என்று சொல்லிவிட்டு, இருந்த காய்களை நறுக்கி அவசரமாக ஒரு பொரியல் மட்டும் செய்தேன்.

‘பிசிபேளாபாத்தை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். குருஜி எப்போது வருவார்?’ என்று மஞ்சு கேட்டாள்.

‘தெரியவில்லை. அவர்கள் மழை பார்ப்பதற்காக மலை உச்சிக்குச் சென்றிருக்கிறார்கள். திரும்பி வரும் நேரத்தைச் சரியாகச் சொல்ல முடியாதே’.

‘அடக்கடவுளே. அப்படியானால் நீங்களாவது இப்போதே சாப்பிட்டுவிடுங்கள்’ என்று சொன்னாள்.

அழகான பெண் அன்போடு எடுத்து வந்து சாப்பிடச் சொல்லும்போது எப்படி எனக்கு மறுக்கத் தோன்றும்? நான் அந்த பிசிபேளாபாத்தைச் சாப்பிட்டேன்.

‘பிரமாதமாக இருந்தது. நீயே சமைத்தாயா?’

‘இல்லை. என் அம்மா’.

‘உன் அம்மாவுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு. மறந்துவிடாதே’.

‘சரி’ என்று சொன்னாள். நாங்கள் நெடு நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மஞ்சுவுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது கடவுளை நம்புவதா வேண்டாமா என்பது.

‘குருஜியின் சொற்பொழிவுகளைக் கேட்கிறாயே, உனக்கு என்ன தோன்றுகிறது?’

‘நானே கேட்க நினைத்தேன். அவர் பேச்சில் எப்போதும் கடவுளே வருவதில்லை. இது ஏன்?’ என்று அவள் கேட்டாள்.

‘ஏனென்றால் அவருக்கு மொத்தம் நாநூறு கடவுள்கள் உண்டு. யாரைச் சொல்லி, யாரை விட முடியும்? அதனால்தான் யார் பெயரையும் அவர் சொல்வதில்லை’.

‘நாநூறு கடவுள்களா!’

‘ஆமாம். அவரோடு பழகிப் பழகி எனக்கே இப்போது இருநூற்று சொச்சம் பேர் சேர்ந்துவிட்டார்கள்’.

அவள் சிரித்தாள்.

‘நீ நம்பவில்லை அல்லவா? என்னோடு வா’ என்று அவளை எனது குடிலுக்கு அழைத்துச் சென்றேன். உட்கார் என்று சொன்னேன். அவள் தரையில் அமர்ந்தாள். ‘மிகவும் சில்லென்று இருக்கிறது. நீங்கள் ஒரு பாயாவது போட்டுக்கொண்டு அமரலாம்’ என்று சொன்னாள்.

‘அவசியமே இல்லை. என் அறுபதாவது கடவுள் குளிரைத் துரத்திவிடுவான்.’

‘அப்படியா? எங்கே எனக்குத் துரத்திக் காட்டுங்கள் பார்க்கலாம்?’

நான் குருஜி எனக்குக் கற்றுத் தந்த மூச்சுப் பயிற்சியை அவளுக்குச் சொல்லி, செய்ய வைத்தேன். இரண்டு மூன்று முறை தடுமாறினாள். பிறகு சரியாக வந்துவிட்டது. இடைவிடாமல் பத்து நிமிடங்கள் செய்துகொண்டே இருக்கச் சொன்னேன். சட்டென்று ஒரு கணத்தில், ‘ஆம், இப்போது குளிர் போய்விட்டது!’ என்று ஆச்சரியப்பட்டாள்.

‘குளிர்தானே போனது? அறையையே ஹீட்டர் போட்டது போலவும் மாற்ற முடியும். அதை முயற்சி செய்யலாமா?’ என்று கேட்டேன்.

‘ஓ! உடனே’.

நான் அவள் உச்சந்தலையில் கை வைத்தேன். ஒன்பது விநாடிகள் அப்படியே வைத்திருந்தேன். பிறகு மெலிதாக மூன்று முறை கபாலத்தில் தட்டினேன். கண்ணை மூடிக்கொள்ளச் சொன்னேன். தலையில் இருந்து முகவாய் வரை ஒற்றை விரலால் நீளமாக ஒரு கோடு இழுத்தபடி வந்தேன். அவள் உதட்டை என் விரல் தொட்டுக் கீழிறங்கியபோது அவள் கண் திறந்து பார்த்தாள். சிரித்தாள்.

வெளியே மழை மேலும் வலுப்பெற்று சீறிப் பொழியத் தொடங்கியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com