96. தீட்சை

அகலில் இருந்த சுடர் மெல்லக் காற்றில் எழுந்து நகரத் தொடங்கியது. நேராக அது பிரதீப்பின் நெற்றியை நோக்கி நகர்ந்தது. அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் சென்று சிறிது நேரம் அசைந்தது...

கங்கோத்ரியில் சூர்ய குண்டத்தின் அருகே நாங்கள் சென்று சேர்ந்தபோது நல்ல வெயில் அடித்தது. ஆனால் வெயில் வெளிச்சமாக மட்டுமே இருந்தது. வெப்பம் இல்லை. வெளியெங்கும் நிரம்பிப் பரவியிருந்த குளிர் அவ்வப்போது அசைந்து நகர்ந்து சிலிர்ப்பூட்டிக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவெங்கும் பெரிய பெரிய வெண்பாறைகள் சூழ்ந்திருக்க, பொங்கி ஓடிவந்த நதி சிறு சிறு அருவிகளாக விழுந்துகொண்டிருந்தது. எத்தனை உன்னதமான பரிசுத்தம்! நீரின் நிஜத் தோற்றம் அதுதான் என்று தோன்றியது. கண்ணாடியைக் காட்டிலும் துல்லியம். அருவி விழும் இடத்திலும் நிலமும் அதில் நிறைந்த கூழாங்கற்களும் இடைவெளிகளை நிரப்பியிருந்த மணல் துகள்களும் தெரிந்தன.

‘நாம் இறங்கலாம்’ என்று குருநாதர் சொன்னார். நாங்கள் மேலாடைகளைக் கழட்டிவிட்டு நீரில் இறங்கினோம். உருகியோடும் பனியின் குளிர்ச்சி பாதங்களில் சுரீரெனத் தாக்கி, மறுகணமே உச்சந்தலைக்குச் சென்று சேர்ந்து நிலைத்து நின்றது. குருநாதர் தலைக்கு மேலே கரம் குவித்து வணங்கினார். சாஷ்டாங்கமாக நதியை விழுந்து சேவித்தார். நீர்ப்பரப்பில் அப்படியே படுத்துக் கிடந்தார். இயற்கையினும் பெரிய அதிசயம் இல்லை என்று சொல்லிக்கொண்டேன். அன்றெல்லாம் நாங்கள் சூரிய குண்டத்தைவிட்டு நகரக்கூட இல்லை. நெடுநேரம் நீரில் குளித்துத் திளைத்துவிட்டுப் பிறகு கரைக்கு வந்து ஈரம் காய்ந்தோம். வேறு உடை அணிந்துகொண்டு அங்கேயே பாறைகளின் மீது அமர்ந்து ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே இருந்தோம். யாரும் யாருடனும் பேசவில்லை. யாருக்கும் பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. நதியைத் தவிர அங்கு வேறொன்றும் இல்லை என்பதால் எங்களைத் தொந்தரவு செய்யவும் யாருமில்லை. மாலை வரை நாங்கள் உணவை நினைக்கவில்லை. முதலில் நெஞ்சடைக்கச் செய்த குளிர்ச்சி பழகப் பழக ஒன்றுமில்லாமலாகிப் போனதால், உடலைக் குறித்த நினைவும் இல்லாமலானது. எங்கள் விழிகளில் நதியைத் தவிர வேறெதுவுமே படவில்லை. ஒரு சீரான சத்தமுடன் பொங்கி ஓடிய நதி. பனிப்பாறையின் இண்டு இடுக்குகளில் இருந்துதான் அது பெருகியது. பரந்த பரப்பில் ஆங்காங்கே நிலம் பிளந்த சிறு சிறு நீரூற்றுகளைப் போலத்தான் கிளம்பியது. ஆனால் பெருகத் தொடங்கும் கணத்தில் எப்படியோ அது உரு பெருத்துவிடுகிறது. உருகிய பனியும் உருகாத பனிக்கட்டிகளுமாகச் சுழன்று சுழன்று வந்து விழ்ந்துகொண்டிருந்தது. எத்தனை யுகங்களாக!

குருநாதர் மாலை வரையிலுமே நதியில் அமிழ்ந்து நதியைச் சேவித்துக்கொண்டேதான் இருந்தார். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எங்களுக்குக் கவலையாக இருந்தது. உடல் விரைத்து அவர் இறந்தே போயிருந்தால்கூட வியக்க ஒன்றுமில்லை. எனக்குத்தான் அவரது அந்தக் கோலம் மிகவும் தொந்தரவு செய்தது. நான் நதிக்குள் இறங்கிச் சென்று அவரைத் தொட்டு எழுப்பினேன். ‘என்ன?’ என்று கேட்டார்.

‘போதும். கரையேறிவிடுங்கள்’ என்று சொன்னேன்.

அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் எழுந்து வந்தார். நாங்கள் நால்வருமே உடனே அவரைத் துடைத்துவிட்டு வேறு உடைகளைக் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னோம். பிரதீப் எங்கிருந்தோ சுள்ளிகளைப் பொறுக்கி வந்து நெருப்பு மூட்டினான். சிறிது நேரம் நாங்கள் அதில் குளிர் காய்ந்தோம். ஹரித்வாரில் இருந்து கிளம்பும்போதே சத்திரத்தில் இருந்து கொஞ்சம் ரொட்டிகளையும் மிளகாய் ஊறுகாயையும் எடுத்து வந்திருந்தோம். அதைப் பிரித்து வைத்துக்கொண்டு சாப்பிட்டோம். ஏனோ குருநாதர் அடிக்கடி என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். என் கையைப் பிடித்துக்கொண்டார்.

‘எனக்கு ஒன்றுமில்லை குருஜி. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்’ என்று சொன்னேன். இருந்தாலும் அவருக்குச் சமாதானமாகவில்லை.

‘வாழ்வில் என்றுமே எனக்கு அப்படித் தோன்றியதில்லை விமல். நீ இறந்துவிடுவாய் என்று மனத்தில் பட்டது. நீ இறக்காதது மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு ஏன் அவ்வாறு தோன்ற வேண்டும் என்றுதான் புரியவேயில்லை’ என்று சொன்னார். இதை அவர் ஏழெட்டு முறை என்னிடம் சொல்லிவிட்டிருந்தார். நான் சிறிது நேரம் யோசித்தேன். அந்த யோகினி என்னிடம் சொன்னவற்றை அவரிடம் சொல்வதா வேண்டாமா என்று அதுவரை நான் முடிவு செய்திருக்கவில்லை. சொன்னால் அந்த மனிதர் என்ன ஆவார் என்று யூகிக்கவும் இயலவில்லை. எனக்குத் தெரிந்த குருநாதர் அற்புதங்களை ஏற்காதவர். அவை உண்டென்று அவருக்குத் தெரியும். அதன் அறிவியலையும் அவர் ஓரளவுக்கு அறிவார். இருப்பினும் அது நமக்குத் தேவையில்லை என்று சொல்வதே அவர் வழக்கம்.

‘என்னைப் பொறுத்தவரை எளிய உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்க சிறிதளவு யோகப் பயிற்சி உதவும். அதேபோலத்தான் மூச்சுப் பயிற்சிகளும். நாமெல்லாம் சன்னியாசிகள். பிட்சை எடுத்து உண்கிறவர்கள். நம்மிடம் நினைத்த மாத்திரத்தில் பணம் புழங்காது. ஒரு தலைவலி, ஜுரம் வந்தால் மருந்தில்லாமல் சரிப்படுத்திக்கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்’ என்று சொல்வார்.

தலைவலித்தால் அதில் இருந்து விடுபடுவதற்கு குருநாதர் ஒரு சமயம் எங்களுக்கு ஒரு மூச்சுப் பயிற்சியைச் சொல்லிக் கொடுத்தார். நேராக நிமிர்ந்து நின்றுகொண்டு அப்படியே குனிந்து கால் கட்டை விரல்களைத் தொட வேண்டும். அதாவது, உடல் சரி பாதி வளைந்து குனிந்து நிற்க வேண்டும். அந்த நிலையில் இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசியால் முப்பது விநாடிகளுக்குக் காற்றை உள்ளே இழுத்து, பிறகு வலது நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்தால் வெளியேற்ற வேண்டும். ஆறு முறை இதனைச் செய்தால் போதும். எப்பேர்ப்பட்ட தலைவலியும் உடனே விட்டுவிடும் என்று குரு சொன்னார்.

‘குருஜி, குனிந்த நிலையில் காற்றை உள்ளே இழுப்பது தவறல்லவா?’

‘ஆம் தவறுதான். ஆனால் காற்று உடனடியாக மூளைக்குச் சென்று சேர வேறு உபாயமில்லை. சற்று எச்சரிக்கையுடன் இழுக்க வேண்டும்’ என்று சொன்னார்.

வேறொரு நாள் அகிலேஷுக்கு இடுப்புப் பிடித்துக்கொண்டது. வாயுப் பிடிப்பு. இரண்டு நாள்கள் அவன் மிகவும் கஷ்டப்பட்டான். என்னென்னவோ செய்து பார்த்தும் வலி நீங்கவில்லை. குருஜி அவனை இரண்டு செங்கல்களின் மீது கால் வைத்து ஏறி நிற்கச் சொன்னார். அவனது இரு கரங்களிலும் இரண்டு செங்கற்களைக் கொடுத்து கைவிளக்குப்போல ஏந்திக்கொள்ளச் செய்தார். அப்படியே இரண்டு கரங்களையும் உயரே தூக்கிக்கொண்டு பத்து நிமிடங்கள் அசையாமல் நிற்கச் சொன்னார். அந்தப் பத்து நிமிடங்களும் எவ்வளவு குறைவான முறை சுவாசிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக சுவாசிக்கும்படி அவனிடம் சொன்னார்.

அகிலேஷ் அவர் சொன்னபடியே செய்தான். சரியாகப் பத்து நிமிடங்கள் ஆனதும் குருநாதர் அவன் கைகளில் இருந்த செங்கற்களை வாங்கிக்கொண்டு அவனை இறங்கிவிடச் சொன்னார். இப்போது அவனுக்கு அந்த வாயுப் பிடிப்பு முற்றிலும் இல்லாமலாகியிருந்தது. அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு குழந்தையைப் போலக் குதூகலமடைந்து அவருக்குத் திரும்பத் திரும்ப நன்றி சொல்லிக்கொண்டிருந்தான்.

‘இவ்வளவுதான் விமல்! ஒரு டாக்டரைத் தவிர்ப்பதற்கு மட்டுமே இவற்றை நாம் பயன்படுத்தலாம். இதுவே வாழ்க்கையல்ல. இது மட்டுமே வாழ்க்கையல்ல. நாம் செய்ய நிறைய இருக்கிறது’ என்று என்னிடம் சொன்னார். மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருந்த பல்வேறு சிறு மதங்களையும் நூற்றுக்கணக்கான சிறு தெய்வ வழிபாட்டு முறைகளைக் குறித்தும் நான் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். ‘நீ தயாராகிவிட்டுச் சொல். யாரையாவது பிடித்து ஸ்பான்சர் வாங்கி எப்படியாவது உன்னை இராக்குக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்று ஒரு சமயம் சொன்னார்.

‘குருஜி, மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆகப் போகிறது? நான் பெண்களைப் பற்றி ஆராயலாம் என்று நினைக்கிறேன்’.

‘அப்படியா? அது உன்னை போதையடிமை போல் ஆக்கிவிடும்’.

‘இரண்டும் ஒன்றுதானே? ஆனால் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நான் எதன் அடிமையாகவும் ஆகமாட்டேன்’.

ஏனோ அவர் அதன்பின் அந்தப் பேச்சைத் தவிர்த்துவிட்டார்.

அன்றிரவு நாங்கள் கங்கோத்ரியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் தங்க முடிவு செய்தோம். வரும் வழியிலேயே அந்த இடத்தில் இரவு தங்கலாம் என்று தீர்மானம் செய்துகொண்டு வந்திருந்தபடியால், மாலை ஆனதும் நேரே அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். வரும்போது அங்கே ஒரு கோயிலைக் கண்டோம். மிகச் சிறிய, அழகான கோயில். ஒரு சிவலிங்கமும் விஷ்ணுவின் சிலையும் காளிதேவி சிலையும் இன்னும் இரண்டு மூன்று சிலைகளும் வரிசையாக அடுத்தடுத்து அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. தனித்தனி சன்னிதிகள் அல்ல. ஒரே கூடத்தில் அடுத்தடுத்து அனைத்துக் கடவுள்களும். அந்தக் கோயிலை அடுத்து பாதி கட்டப்பட்டு, கைவிடப்பட்ட கட்டடம் ஒன்று இருந்ததைக் கண்டோம். அங்கே இரவு தங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

இரவு நாங்கள் அங்கே சென்று சேர்ந்தபோது பிராந்தியத்தில் மனித நடமாட்டமே இருக்கவில்லை. நாளெல்லாம் நீரில் கிடந்த களைப்பில் படுத்ததும் உறங்கிவிட்டோம். நள்ளிரவுக்கு மேல் எனக்கு விழிப்பு வந்தது. கண் விழித்து எழுந்தபோது பிரதீப்பைக் காணவில்லை. சிறுநீர் கழிக்கச் சென்றிருப்பான் என்று நினைத்தேன். ஆனால் நெடு நேரம் அவன் திரும்பி வராததால் எழுந்து வெளியே சென்று பார்த்தேன். சுற்று வட்டாரத்தில் எங்கும் எந்தச் சத்தமும் இல்லை. நதியின் ஓட்டம் மட்டும் மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இருட்டில் நான் பிரதீப்பைத் தேடி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ சுற்றிவிட்டு அந்தக் கோயில் வாசலுக்கு வந்தேன். நெருங்கியபோதே அவனைப் பார்த்துவிட்டேன். அவன் கோயிலுக்கு உள்ளேதான் இருந்தான். அங்கிருந்த சிவலிங்கத்தின் எதிரே நிமிர்ந்து உட்கார்ந்து கண்மூடி தியானம் செய்துகொண்டிருந்தான். எனக்கு அந்தக் காட்சி மிகவும் விநோதமாகப் பட்டது. பிரதீப்புக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அது நம்பமுடியாததாக இருந்தது. அதை ஏன் அவன் மறைக்க வேண்டும் என்ற வினா அதனைக் காட்டிலும் பூதாகாரமாக எழுந்து நின்றது. நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண் விழிக்கும்போது நிச்சயமாக என்னைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கும். தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதாக அவனுக்குத் தோன்றலாம். என்னவானாலும் விடுவதில்லை என்று தீர்மானம் செய்துகொண்டேன். குருநாதர் அவனுக்கு மட்டும் இன்னமும் சன்னியாச தீட்சை அளிக்காதிருந்ததை எண்ணிப் பார்த்தேன். அவருக்கும் ஏதோ தோன்றியிருக்கும். ஊசலாட்டத்தில் உள்ளவனுக்கு தீட்சை உபயோகமில்லை என்று கருதியிருக்கலாம். என்னவானாலும் இன்று அவனிடம் விசாரித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டு காத்திருந்தேன்.

முக்கால் மணி நேரம் நான் அங்கு நின்றிருப்பேன். அத்தனை நேரமும் அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்றும் அசையக்கூட இல்லை. திடீரென்று அவனது மூடிய கண்களுக்குள் சிறு அசைவு ஏற்பட்டது. அவனது வலக்கரம் ஒருமுறை எழுந்து அடங்கியது. அவன் முகம் கோணிக்கொண்டு விகாரமாகியது. சட்டென்று அவன் கண்களில் இருந்து கரகரவென நீர் வழியத் தொடங்கியது. எனக்கு மிகுந்த சுவாரசியமாகிவிட்டது. எத்தனை சிறந்த பக்திமான் இவன்! இதை எதற்கு இவ்வளவு காலமாக மறைத்து வைத்திருக்கிறான்? அவசியமே இல்லையே. குருநாதரிடம் சொல்லியிருந்தால் ஆசிரம வளாகத்தில் அவனுக்கென்று ஒரு கோயிலேகூடக் கட்டிக் கொடுத்திருப்பார். போய் பிடித்து உலுக்கி எழுப்பிவிடலாமா என்று நினைத்தேன்.

அந்தக் கணம் அது நிகழ்ந்தது. சிவலிங்கத்தின் எதிரே இருந்த அகல் விளக்கொன்று யாரும் பற்ற வைக்காமல் தானே தீப்பற்றிக்கொண்டு சுடர்விட ஆரம்பித்தது. அந்தக் காட்சியை என்னால் நம்ப முடியவில்லை. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த அகலில் இருந்த சுடர் மெல்லக் காற்றில் எழுந்து நகரத் தொடங்கியது. நேராக அது பிரதீப்பின் நெற்றியை நோக்கி நகர்ந்தது. அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் சென்று சிறிது நேரம் அசைந்தது. அப்படியே உள்ளே போய் ஒடுங்கிவிட்டது. அந்த இடம் மீண்டும் இருண்டு போனது.

சில நிமிடங்களில் பிரதீப் கண் விழித்தான். என்னைப் பார்த்து சிரித்தான். எனக்கு அப்போது பேச்சே எழவில்லை. கண்டதன் அதிர்ச்சியும் வியப்பும் புத்தியெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. என்னைத் திரட்டிக்கொண்டு பேச முற்பட்டேன். என்னைச் சாட்சியாக வைத்து இங்கே என்ன நிகழ்ந்தது என்று அவனிடம் கேட்டேன்.

‘தெரியவில்லை விமல். ஆனால் இது நான் விடைபெறும் நேரம். எனக்கு தீட்சை கிடைத்துவிட்டது. நான் கிளம்புகிறேன் என்று குருவிடம் சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல் இருளில் இறங்கி விரைந்து எங்கோ காணாமல் போய்விட்டான்.

எனக்கு அந்த யோகினி சொன்னது நினைவுக்கு வந்தது. நியாயம்தான். நான் கங்கோத்ரிக்கு வந்திருக்கக் கூடாது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com