57. நாய் வளர்ப்பு

ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் உட்கொள்வான். அதுவும் மிகக் குறைந்த அளவு. ஆனால் தினமும் இரவு பத்து மணிக்கு அவன் வீட்டைத் தேடி வரும் அந்தக் கறுப்பு நிற நாய்க்கு அவன் விதவிதமாகச் சாப்பிடக் கொடுப்பான்.

ஒரு கையில் அடங்குகிற அளவுக்குப் பெரிய கூழாங்கல் ஒன்றை வாயில் திணித்து நெஞ்சுக்குள் புதைத்தாற்போல் இருந்தது என்று வினய் சொன்னான். அவனால் சொரிமுத்து சொன்னதை முதலில் நம்ப முடியவில்லை. அவன் சித்தன் என்று தெரியும். சில தந்திரங்கள் செய்யக்கூடியவன் என்பதை நேரில் கண்டிருக்கிறான். உணவின்றியும் உறக்கமின்றியும் நாள் கணக்கில் அவனால் நடந்துகொண்டே இருக்க முடிவதைப் பார்த்திருக்கிறான். ஒரு துண்டு மஞ்சளையும் ஆறு துளசி இலைகளையும் ஏழெட்டு மிளகுகளையும் ஒன்றாக வைத்து இடித்து ஒருவேளை உணவாக உட்கொண்டுவிட்டு, ஒன்பது நாள்களுக்கு வெறும் நீர் அருந்தி வாழ்வதைப் பார்த்திருக்கிறான். ஆனால் புற்று நோயைக் குணப்படுத்தக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தவனா என்று சந்தேகமாக இருந்தது. அவனிடம் கேட்கவும் தயங்கினான்.

சொரிமுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘என்னா? நம்பலியா?’ என்று கேட்டான்.

‘இல்ல.. மருத்துவத்துல இன்னும் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கலை. அதைத்தான் நினைச்சிண்டிருந்தேன்’ என்று வினய் சொன்னான்.

‘வியாதின்றது ஒண்ணுதாண்டா. ஊர்ப்பட்ட பேரு குடுத்து ரகத்துக்கு ஒண்ணா மருந்து சொன்னா அவம்பேரு டாக்டர். என்னைய கேளு. வியாதிக்கு ஒரே பேரு கர்மா. கர்மாவ அழிக்க முடியாது. ஆளு மாத்தி, இடம் மாத்தி வெக்க முடியும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய்க்கு அது புரியவில்லை. ‘எடுத்த புத்துநோய இன்னொருத்தனுக்கு வச்சா நம்புவியா?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘ஐயோ வேண்டாம். யாரா இருந்தாலும் பாவம்தான். துக்கம் கூடாதுன்றதுதான் உங்க கொள்கைன்னா, ஒருத்தன் துக்கத்தை இன்னொருத்தனுக்கு எப்படித் தரலாம்?’

அன்றைக்கு சொரிமுத்துச் சித்தன் வினய்யிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறான். அவன் ஒரு மேஸ்திரி. சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட மேஸ்திரி. திட்டம் தீட்டிய பொறியியல் வல்லுநர் வரைபடத்தைக் காட்டி கட்டடம் எப்படி எழும்ப வேண்டும் என்று விளக்கிச் சொல்லியிருக்கிறான். நிலத்தின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச் சுவர் இது. வெட்டவெளி இது. வீட்டின் தொடக்கப் புள்ளி இது. இங்கே இந்த அறை. அங்கே அந்த அறை. இங்கே மாடிப்படி. அங்கே பால்கனி. ஜன்னல் இப்படி வைக்க வேண்டும். கதவு இன்ன மரத்தாலானதாக இருக்க வேண்டும். மணலை இந்தக் கடையில் வாங்கு. செங்கலை அந்தச் சூளையில் இருந்து தருவி. சிமெண்டுக்கு இங்கே பேசியிருக்கிறது. தண்ணீருக்குக் கிணறு அதோ. உனக்காக ஒதுக்கப்பட்ட வேலையாட்கள் இத்தனை பேர். அதில் ஆண்கள் இவ்வளவு. பெண்கள் அவ்வளவு. இது கடப்பாறை. அது மண்வெட்டி. வேலையைத் தொடங்க இதுவே தருணம்.

சொரிமுத்து தனக்கு அளிக்கப்பட்ட ஆட்களைப் பரீட்சித்துப் பார்த்தான். இன்னின்னாருக்கு இன்னின்ன வேலைகள் என்று ஒதுக்கிக் கொடுத்தான். வேலையில் சுணக்கம் நேரும்போது ஆட்களை மாற்றிப் போட்டான். நீ மண்ணெடுத்தது போதும். போய் கலவை போடு. அவனை இங்கே வந்து பூசச் சொல்லு. அளக்கத் தெரியாதவன் நூல் பிடிக்காதே. போய் கிணற்றில் இருந்து நீர் எடுக்கும் வேலையை நீ பார். நீ அங்கே பூசு. அவன் இங்கே பட்டி பார்க்கட்டும். கலவை தூக்கி வரும் அந்தப் பெண்ணுக்குக் கழுத்து வலிக்கிறது பார். சுமையை நீ வாங்கு. அவளைச் சற்று ஓய்வெடுக்கச் சொல்.

‘தம்பி நான் இவ்ளதான். வெறும் மேஸ்திரி.’

‘உங்களை விடுங்க. உங்ககிட்ட வர்றவங்கள பத்தி சொல்லுங்க. உங்களுக்கு ஒதுக்காத ஆளுங்களுக்கு நீங்க ஒண்ணும் செய்ய முடியாதா?’

முடியாது என்று சொரிமுத்து சொன்னான். ‘நான் மட்டுமில்ல தம்பி. என்னைய மாதிரி இருக்கற எல்லாரும் அப்பிடித்தான். சித்தருகிட்ட போனேன்.. சும்மா பழங்குடுத்து திருப்பி அனுப்பிட்டாருன்னு எத்தினியோ பேரு சொல்லிக் கேட்டதில்ல? நானாச்சும் பழம் குடுத்து அனுப்புவேன். சில பேர் துண்ணூறு பூசி அனுப்பிடுவாங்க.’

அன்று மாலை சொரிமுத்து வெளியே போகலாம் என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு கிளம்பினான். திருவானைக்கா லெவல் கிராசிங்கினுள் நுழைந்து தண்டவாளங்கள் சென்ற வழியிலேயே நடக்க ஆரம்பித்தார்கள். வினய்க்கு சரளைக் கற்கள் மீது நடக்கக் கஷ்டமாக இருந்தது. அடிக்கடி கால் தடுக்கி விழப் போனான். சொரிமுத்து ஒவ்வொரு முறையும் அவனைத் தாங்கிப் பிடித்து நேராக நடக்க வைத்தான்.

வினய் சொன்னான். ‘நான் ஏன் உங்ககிட்டே வந்தேன்னு தெரியலை. அண்ணா போகச் சொன்னான். என்னமோ அவன் சொன்னதையெல்லாம் தட்டாதவன் மாதிரி நேரா இங்க வந்துட்டேன். வந்ததுலேருந்து இங்கேயேதான் இருக்கேன். ஏன் இருக்கேன்னும் தெரியலே, நீங்களும் அதைக் கேக்கலே.’

‘எதுக்கு கேக்கணும்? போவணுன்னு தோணுறப்ப நீயே போயிடுவன்னு தெரியுமே?’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘நீங்க எனக்கு எதாவது கத்துத் தருவிங்களா?’

‘என்னது?’

‘இல்லே. இந்த சித்து.. எனக்கு இது புரியலை. ஆனா ஆர்வமா இருக்கு.’

‘இதெல்லாம் கத்துத் தரக்கூடியதில்லை’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘பின்னே?’

‘தானா வரும். வரணும்னு இருந்தா.’

‘ஆனா நான் உங்ககிட்ட வந்திருக்கேனே? வரணும்னு இருந்திருக்கே?’

‘என்னைத் தேடி தினம் ஒரு நாய் வரும் ராத்திரில. பாத்திருக்கியா?’ என்று சொரிமுத்து கேட்டான்.

வினய்க்குச் சற்று சங்கடமாக இருந்தது.

‘எப்பனாச்சும் நான் அதைத் துரத்தியிருக்கேனா? பன்னி வந்தாலும் துரத்த மாட்டேன், கழுதை வந்தாலும் துரத்த மாட்டேன், நீ வந்தாலும் துரத்த மாட்டேன்.’

‘ஆமால்ல? எல்லாம் ஒண்ணுதான். ஆனா நீங்க நாய்க்கு சாப்பாடு வெக்கறிங்க. அதைப் பாத்தேன்.’

சொரிமுத்து சிரித்தான். வினய்க்கு அது இன்னமும் புரியாத சங்கதியாகத்தான் இருந்தது. சொரிமுத்து பொதுவாக உணவு விஷயங்களில் அக்கறை இல்லாதவன். சில நாள் காலை வேளைகளில் கஞ்சி காய்ச்சச் சொல்லுவான். சில நாள் பிச்சை எடுத்து உண்பான். இன்னும் சில நாள்களில் ஓட்டல்களுக்குச் சென்று இரண்டு இட்லி சாப்பிடும் வழக்கமும் உண்டு. ஆனால் என்னவானாலும் ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் உட்கொள்வான். அதுவும் மிகக் குறைந்த அளவு. ஆனால் தினமும் இரவு பத்து மணிக்கு அவன் வீட்டைத் தேடி வரும் அந்தக் கறுப்பு நிற நாய்க்கு அவன் விதவிதமாகச் சாப்பிடக் கொடுப்பான். ஒரு நாள் பால் சோறு. ஒரு நாள் சாம்பார் சாதம், வெண்டைக்காய் பொரியல். ஒருநாள் வெறும் பால். இன்னொரு நாள் பிரியாணி. சில நாள் கமகமவென்று கறி சமைத்தும் போடுவான். அது சாப்பிடும்போது அருகே உட்கார்ந்து அதன் புறங்கழுத்தைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பான். சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த நாய் அவன் முகத்தை நக்கும். அதனோடு சிறிது நேரம் கொஞ்சிவிட்டு சட்டென்று எழுந்து கல்லால் அடித்துத் துரத்திவிடுவான்.

வினய்க்கு அந்தப் பாசம் புரியவில்லை. அத்தனை அக்கறையாக உணவிடுகிற கிழவன் எதற்குக் கிளம்பும்போது மட்டும் கல்லால் அடித்துத் துரத்த வேண்டும்?

‘அது ஒனக்கு வேணாம் விடு’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘இல்லே. நாளைக்கு என்னையும் கல்லாலடிச்சி துரத்துவிங்களோன்னு ஒரு சந்தேகம்.’

அவன் சற்றும் யோசிக்கவில்லை. ‘ஒனக்கு கல்லு இல்லே. செருப்புதான். பிஞ்ச செருப்பு’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கெ என்று சிரித்தான்.

உண்மையில் அவன் ஒரு சித்தன் என்பதை வினய் அறிந்ததே அவன் அந்த நாய்க்கு உணவிடுவதைப் பார்த்தபோதுதான்.

‘டேய் ஒரு தட்டு எடுத்தாடா’ என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுப்பான் சொரிமுத்து. எதற்கு என்று கேட்காமல் வினய் ஒரு பழைய அலுமினியத் தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வருவான். அதை இடது கையால் அவன் வாங்கும்போதே அவன் மனத்தில் நினைக்கும் உணவு தட்டில் நிரம்பிவிடும். உள்ளே சமைத்து வைத்ததைத்தான் வினய் எடுத்து வந்தாற்போல அதை அவன் நாய்க்குப் போட ஆரம்பிப்பான். நாய் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்வரை வினய் அதையே பார்த்துக்கொண்டிருப்பான். வெறும் சம்பிரதாயமாகக்கூடக் கிழவன் அவனை ஒரு நாளும் நீ சாப்பிடுகிறாயா என்று கேட்டதில்லை. வினய்க்குப் பசித்தால், நொய்க்கஞ்சி வைத்துக் குடித்துக்கொள்ள வேண்டியதுதான். பால் சோறும் பிரியாணியும் நாய்க்கு மட்டும்தான் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

ரயில் தண்டவாளம் சென்ற வழியே அவர்கள் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். ஏழெட்டு ஸ்டேஷன்கள் கடந்த பின்பும் கிழவன் நடையை நிறுத்தவில்லை. வினய்க்குக் கால் வலித்தது. அதை அவன் சொரிமுத்துவிடம் சொன்னபோது, ‘வலிச்சா பரவால்ல’ என்று பதில் சொன்னான். அன்றைக்கு இரவெல்லாம் தன்னை அவன் நடக்கவைத்துவிடுவானோ என்று வினய்க்கு அச்சமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணமின்றி அவன் தன்னை அத்தனை தூரம் அழைத்துச் செல்ல மாட்டான் என்றும் தோன்றியது. வானம் முற்றிலும் இருட்டிவிட்டது. ரயில் பாதை சத்தமற்றுப் போனது. எங்கோ தொலைவில் யாரோ ஒரு லைன்மேன் எப்போதேனும் நடந்து போவது தெரியும். திடீரென்று ஒரு ரயில் கடந்து போகும். அதன் செவ்வக வெளிச்சத்தில் வினய் சொரிமுத்துவின் முகத்தைப் பார்த்தான். சிக்குப் பிடித்த தாடியும் சடை விழுந்த தலைமுடியும் எண்ணெய் வழியும் முகமுமாக அவன் இப்படி அப்படித் திரும்பாமல் நடந்துகொண்டே இருந்தான்.

மூன்று மணி நேரங்களுக்கு மேல் அந்த நடை நிற்கவேயில்லை. அதற்குமேல் தன்னால் நடக்க முடியாது என்று வினய்க்குத் தோன்றிவிட்டது. சட்டென்று அவன் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான்.

‘என்ன?’ என்று கிழவன் கேட்டான்.

வினய்க்கு உண்மையிலேயே அழுகை வந்தது. ‘என்னால முடியலே. இது உங்களுக்குத் தெரியும். தெரிஞ்சும் என்னை இழுத்துண்டு போறேள்’ என்று வினய் சொன்னான்.

சொரிமுத்து மீண்டும் கெக்கெக்கே என்று சிரித்தான். ‘சரி எழுந்திரு.’

‘முடியாது.’

‘அட எந்திரிடா. இனிமே நடக்க வேணா’ என்று கிழவன் சொன்னான். சந்தேகத்துடன் வினய் எழுந்தான். அவன் சற்றும் எதிர்பாராவிதமாக சொரிமுத்து அவனை ஒரு குழந்தையை அள்ளுவதுபோல அள்ளித் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com