58. வெளிச்சம்

நாம மனுசன், வேற எவனோ ஒருத்தன் கடவுள் உத்தியோகம் பாத்துக்கிட்டிருக்கான்னு நினைக்கற வரைக்கும் நீ சித்தனாக முடியாது

கண் விழித்து எழுந்தபோது அலையற்ற பெருங்கடல் ஒரு வெளிர் பச்சை நிறச் சேலையைப் போல விரிந்து கிடந்தது. வானத்தின் முனையோடு அது முடிந்துவைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் ஆளரவமற்ற தனிமையில் அந்தக் கடல் தனக்காகவே காத்திருந்தாற்போல வினய் உணர்ந்தான். காரணமற்ற பரவசமும் எழுச்சியும் மனமெங்கும் நிறைந்து ததும்பிக்கொண்டிருந்தது. ஒரு அணிலைப் போல அவன் துள்ளியெழுந்து கரையோரம் சிறிது தூரம் ஓடினான். மீண்டும் கிளம்பிய இடத்துக்கே திரும்பி ஓடி வந்தான். அவனுக்காகவே அந்த நிலப்பரப்பு உற்பத்தி செய்யப்பட்டிருந்தாற்போலிருந்தது. வெண் மணலும் சிறு பாறைகளும் அடர்ந்த வெளி. தொலைவில் ஒரு சவுக்குக் காடு தெரிந்தது. கடற்காற்றில் மரங்கள் நொறுங்கி விழுவது போல் அசைந்துகொண்டிருந்தன. அவனுக்குச் சட்டென்று திருவிடந்தை நினைவு வந்தது. அங்கும் கடல் உண்டு. சவுக்குக் காடுகள் உண்டு. ஆனால் அந்தக் கடலில் அலைகள் இருக்கும். அந்தக் காற்றில் மிதமான சூடு இருக்கும். மரங்களின் அசைவில் ஒரு லயம் இருக்கும். காற்றடிக்கும் நேரம் சவுக்குக் காட்டுக்குள் நடந்தால் யாரோ வாயைக் குவித்து அடித்தொண்டைக்கும் கீழிருந்து ஓர் ஒலியெழுப்புவது போலக் கேட்கும். அது வேறு கடல். அது வேறு காற்று. இந்த இடம் மிகவும் புதிது. அவன் அதுநாள் வரை கண்டறியாத பிரதேசம்.

பத்து நிமிடங்கள் அவன் இலக்கற்றுத் திரிந்துகொண்டே இருந்தான். கண் கூசும் சூரிய வெளிச்சத்தை அந்தக் கடலின் வெளிர் பச்சை நிறம் தணித்துக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. இன்னொரு நபர் மட்டும் அங்கே வந்துவிட்டால் அந்த மோனம் கெட்டுவிடும் என்று அஞ்சினான். ஆனால் யாருமற்ற வெளியில் எவ்வளவு நேரம் திரிந்துகொண்டிருக்க முடியும்? தனிமையை ஒரு லாகிரியாக மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தோன்றியது. கால் சோர்ந்து அவன் மீண்டும் நீர்ப்பரப்புக்கு அருகே வந்து அமர்ந்தபோது சொரிமுத்துக் கிழவன் அவனை நோக்கி வருவது தெரிந்தது. வினய் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

‘எங்க வந்திருக்கோம்?’ என்று கேட்டான்.

‘தனுஷ்கோடி.’

‘ஒரே ராத்திரியிலா? அதுவும் நடந்து.’

இதற்குக் கிழவன் பதில் சொல்லவில்லை. ‘அதுசரி. நீங்கதான் நடந்திங்க. நான் நடக்கலியே’ என்று வினய் மீண்டும் சொன்னான். இதற்கும் அவனிடம் பதில் வரவில்லை. அவன் அருகே வந்து அமர்ந்து வெகு நேரம் கடலையே பார்த்துக்கொண்டிருந்தான். வினய்யேதான் மீண்டும் பேசினான், ‘நான் ராமேஸ்வரம் கோயில் போனதில்லை. கூட்டிட்டுப் போறிங்களா?’

‘நாம கோயிலுக்குப் போக வரலை’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘வேற?’

‘போய் ஒரு முக்குப் போட்டுட்டு வா’

வினய் பதில் பேசாமல் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டுக் கடலுக்குள் இறங்கினான். தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. கடலே ஒரு பெருங்குளமாகக் காட்சியளிக்கும் அதிசயம் தீரவேயில்லை அவனுக்கு. சிறிது நேரம் நன்றாக நீந்திக் குளித்தான். கரையேறி வரும் வரை அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த சொரிமுத்து, ‘டேய் ஒன்ன நான் முக்குப் போட்டுட்டில்ல வர சொன்னேன்? நீஞ்சிட்டு வந்தா என்ன அர்த்தம்?’ என்று கேட்டான்.

வினய் சிரித்தபடி மீண்டும் நீருக்குள் இறங்கினான். இடுப்பளவு ஆழத்துக்குப் போய் நின்றுகொண்டு, ‘ஒரு தடவையா? மூணு தடவையா?’ என்று கேட்டான்.

‘ஒரு முக்கு போடு போதும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் ஒரு முறை முங்கி எழுந்து மீண்டும் ஈரம் சொட்டக் கரைக்கு வந்தான்.

‘உக்காரு இப்பிடி.’

வினய் அவன் எதிரே அமர்ந்தான். சொரிமுத்து அவன் நடு நெற்றியில் தனது கட்டைவிரல் நகத்தை வைத்து ஸ்ரீசூர்ணம் இடுவது போலக் கீறினான். லேசாக வலித்தது. பிறகு, ‘கண்ண மூடிக்க. இதுவரைக்கும் நினைச்சதில்லேன்னாலும் பரவால்ல. இப்ப சிவனை நினை’ என்று சொன்னான்.

வினய் கண்ணை மூடினான். ஒரு சிவ லிங்கத்தை மனத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தப் பார்த்தான். அவனால் லிங்கம் வைக்கப்பட்டிருக்கும் ஆவுடையைக் காண இயலவில்லை. ஒரு ஸ்டூலின் மீது லிங்கத்தை வைத்தாற்போலக் கண்டான்.

‘வந்துருச்சா? அதையே பாரு’ என்று சொரிமுத்து சொல்வது கேட்டது. வினய், தனது மூடிய கண்களுக்குள் தெரிந்த லிங்கத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.

‘அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மேல போ. லிங்கத்தோட உச்சந்தலையப் பாரு’

மொழுங்கென்று இருந்த அதன் சிரத்தை வினய் கண்டான். உற்றுப் பார்த்தான். சட்டென்று அவனது உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போலிருந்தது. அதன்பின் அவன் கவனம் எங்குமே நகரவில்லை. இந்த உலகில் அவன் இருந்தான். அந்த லிங்கம் இருந்தது. அதன் சிரத்தின் வழுவழுப்பு இருந்தது. எங்கும் வேறெதுவும் இருக்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம் என்று வினய்க்குத் தெரியவில்லை. காலமும் வெளியும் மறைந்து போய் அகண்ட பேருலகின் ஒரே உயிராக அவன் கணக்கற்ற தொலைவுகளைக் கணப்பொழுதில் சுற்றி வந்தான். கண் விழித்தபோது அவனுக்கு மிகவும் பரவசமாக இருந்தது. அதுவரை உணராத பக்திப் பெருக்குடன் அவன் சொரிமுத்துவை நோக்கிக் கரம் குவித்தான். அவன் கண்ணில் இருந்து நிற்காமல் நீர் வழிந்துகொண்டிருந்தது.

‘என்ன பார்த்தே?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘எதுவுமில்லை.’

‘ஆனா வெறுமையும் இல்லை. கரீட்டா?’

‘ஆமா.’

‘வெளிச்சமா இருந்திச்சா? இருட்டா இருந்திச்சா?’

‘சரியா தெரியலே. வெளிச்சம்தான்னு நினைக்கறேன்.’

‘கண்ணு கூசிச்சா?’

‘இல்லை. நான் இமைக்கவேயில்லை. அது மட்டும் எப்படியோ நினைவிருக்கு.’

‘ம்ம். அப்ப செரி. போ. போய் இன்னொருக்கா முக்குப் போட்டுட்டு வா’ என்று சொன்னான்.

வினய் எழுந்து சென்று மீண்டும் ஒருமுறை முங்கிக் குளித்துவிட்டு எழுந்து வந்து எதிரே அமர்ந்தான்.

சொரிமுத்து பேச ஆரம்பித்தான்.

இது பாடம் அல்ல. இது கல்வியல்ல. இது அறிவியலோ மற்றதோ அல்ல. ஆன்மிகமா என்றால் மிகவும் யோசித்துவிட்டுத்தான் ஆமென்று சொல்ல முடியும். ஆனால் ஒரு சௌகரியத்துக்குக் கலை என்று சொல்லிக்கொள்ளலாம். நமக்குள் மட்டும்தான். வெளியாளுக்கல்ல. உலகத்துக்கல்ல. ஒரு சித்தன் உயிருள்ளவற்றின் நன்மைக்காக மட்டுமே இயங்க வேண்டும். மனிதர்கள். விலங்குகள். தாவரங்கள். நுண் உயிரிகள்.

‘வைரஸா?’ என்று வினய் கேட்டான்.

‘உயிருள்ள எல்லாம்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும். கடவுள் நிஜமா?’

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான். ‘அதுல என்ன டவுட்டு? இப்பம் நீ பாத்தியே?’

‘எங்கே?’

‘முட்டாள். கண்ணை இமைக்காம வெளிச்சம் பார்த்தேன்னு சொன்னல்ல? அதுதான்.’

‘அதுவா!’ நம்ப முடியாமல் வினய் கேட்டான்.

‘பின்னே? இப்ப வேணா கண்ணை மூடிப் பாரு. அந்த வெளிச்சம் திரும்ப வராது.’

அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. மீண்டும் கண்ணை மூடிப் பார்த்தான். இருட்டாகத்தான் இருந்தது. வெளியே அடித்த சூரிய வெளிச்சத்தின் நிழலும் கடலின் அலையடிப்பும் மங்கலாகத் தெரிந்தது.

‘இருக்குதா?’

‘இல்லை. அப்ப பார்த்தது இப்ப இல்லை.’

‘அதான். அவ்ளதான்.’

‘அப்ப கடவுள்னா வெளிச்சமா?’

‘இருட்டுந்தான்’ என்று சொரிமுத்து சொன்னான். வினய்க்குக் குழப்பமாக இருந்தது. அவன் தனது வேட்டி மடிப்பில் இருந்து சருகு போலாகியிருந்த ஒரு இலையை எடுத்தான். ‘இத மோந்து பாரு’ என்று வினய்யிடம் நீட்டினான். வினய் அதை வாங்கி மூக்கருகே கொண்டு சென்று வைத்து முகர்ந்தான். ஒரு வாசனையும் இல்லை. அதை அவன் சொன்னபோது சொரிமுத்து சிரித்தான்.

‘அதுக்கு வாசனை இருக்குது. ஆனா உனக்கு இப்ப அத கண்டுக்கற பக்குவம் இல்லை.’

‘அப்படியா? அப்படியொரு பக்குவம் வருமா? அது வர நான் என்ன செய்யணும்?’ என்று வினய் கேட்டான்.

அன்றைக்கெல்லாம் சொரிமுத்து அவனிடம் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தான். உச்சாடணம். ஆகர்ஷணம். பேதனம். மோகனம். வசியம். வித்துவேஷணம். மாரணம். தம்பனம்.

‘சில மந்திரங்கள் இருக்குதுடா. அதே மாதிரி சில மூலிகைகள் இருக்குது. மூலிகை உடம்பு. மந்திரம் உசிரு’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘புரியுது. ரெண்டும் சேர்ந்தா பவர்னு சொல்றிங்க’

அவன் கெக்கெக்கே என்று சிரித்துவிட்டு, ‘சேக்கத் தெரிஞ்சவண்ட்டதான் பவரு’ என்று சொன்னான்.

வினய்க்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. அவனுக்கு நீலாங்கரை சித்த வைத்தியரைத் தெரியும். அவனும் ஸ்கவுட்ஸ் வகுப்புகளின்போது அவர் வீட்டுக்குப் போயிருக்கிறான். அங்கே குவியல் குவியலாக மூலிகைகள் குவித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். சில மூலிகைகளை புடைவை விரித்து நிழலில் உலர்த்தியிருக்கும். சிலவற்றை வீட்டுக்கு வெளியே வெயில் படும்படியாகவும் அவர் உலர்த்தியிருப்பார். புத்தகக் கட்டுகள், சுவடிக் கட்டுகள், மூலிகைகள், குப்பிகள், அம்மி, குழவியாலான வீடு.

‘அதுவுந்தான். லச்சம் மூலிகை இருக்கு. ஒண்ணொண்ணும் ஒண்ணொண்ண செய்யும். சுளுவா கிடைக்கறத வெச்சி வைத்தியஞ் செய்வான். செரமப்பட்டுத் தேடிப் பிடிக்கறத வெச்சி சித்து பண்ணலாம்.’

வினய்க்கு அப்போது சட்டென்று முன்பொரு சமயம் வீட்டுக்கு வந்திருந்த சட்டையணிந்த சித்தரின் நினைவு வந்தது. வாழைப் பழத்தில் இருந்து பிள்ளையார் சிலை எடுத்த சித்தர். அவன் சொரிமுத்துவிடம் அந்தச் சம்பவத்தைச் சொன்னான். கேட்ட மாத்திரத்தில் சட்டென்று சொரிமுத்து சிறிது சிரித்தான். உடனே அமைதியாகிவிட்டான்.

‘அதுக்கெல்லாமும் மூலிகை தேவையா?’ என்று வினய் கேட்டான்.

‘எல்லாத்துக்குந்தான். பாரு, இது விளையாட்டில்லெ’

‘அது புரிஞ்சுடுத்து. நீங்க விளையாடலை’ என்று வினய் தீவிரமாகச் சொன்னான்.

‘நிறைய வேலை செய்யலாம் தம்பி. வியாதி விரட்றது ரொம்ப மேம்போக்கு. அதுக்கும் மேல நிறைய இருக்கு. ஆகர்சனம்னா தேவதைங்கள கூப்ட்டு சகாயம் பண்ண வெக்குறது. நீ பாக்குற ஒண்ண உன் கண்ணெதிர்ல இன்னொண்ணா மாத்திப்புடலாம். அது பேதனம். மாரணம்னா சாவடிக்கறது..’

‘ஐயோ..’

‘என்ன ஐயோ? அந்த கேன்சர்காரன்ட்டேருந்து எடுத்து வெச்சேன்ல? எதுக்குன்னு நினைக்கற? வேற யாருக்கு சாவு அவசியமோ அவனுக்குக் குடுக்கறதுக்குத்தான்.’

சட்டென்று வினய் கேட்டான், ‘இதையெல்லாம் மனுஷா பண்ண முடியும்னா அப்பறம் கடவுள் என்னதான் பண்ணுவார்?’

சொரிமுத்து சிரித்தான். ‘நாம மனுசன், வேற எவனோ ஒருத்தன் கடவுள் உத்தியோகம் பாத்துக்கிட்டிருக்கான்னு நினைக்கற வரைக்கும் நீ சித்தனாக முடியாது’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com