67. தொட்ட இடம்

சித்து பயில்பவர்களுக்கு சட்டென்று ஒரு கணம் மனத்தில் தோன்றும். இந்த நிமிடம் இதைச் செய் என்று எங்கிருந்தோ ஒரு கட்டளை வரும்.

நெடுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்தேன். என்னால் தாங்கவே முடியவில்லை. உண்மையில் நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அது வினய்யைக் காயப்படுத்தும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் வாழ்க்கை இப்படித்தான். என் சிறு வயதுகளில் கேசவன் மாமா மசால்வடையில் மருந்து தடவி எலிப்பொறிக்குள் வைப்பதைக் கண்டிருக்கிறேன். வெறும் மசால்வடை போதாதா எலியை அழைக்க? எலியைப் அழைப்பதல்ல. எலியை அழிப்பது முக்கியம் என்று மாமா சொல்லுவார். இரவு வைக்கும் மசால்வடைக்கு விடியலில் எலி பொறிக்குள் செத்துக் கிடக்கும். மாமா அதை அப்படியே தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிட்டு வந்து சோப்புப் போட்டு கையை அலம்பிக்கொள்வார்.

வினய் சந்தித்த பெண் எனக்கொரு மசால்வடையாகத் தெரிந்தாள். அவள் பெயர் சித்ராவாக இருந்தது, அதில் தடவிய மருந்து. நட்சத்திர விடுதி அறையில் வினய் தன்னையறியாமல் நெடு நேரம் அழுதுகொண்டே இருந்தான். அவன் அழுது முடிக்கக் காத்திருந்தேன். உண்மையில் அவன் மிகவும் வருந்தியதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அது சற்றும் எதிர்பாராத ஒரு சந்திப்பு. தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த பெண். அவளுக்கு அவன் ஒரு சொம்பு பாலைக் கொடுத்ததே அதிகப்படி. அதைச் செய்திருக்க வேண்டாம் என்று நான் சொன்னேன்.

‘விமல், இது உனக்குத் தெரியாது அல்லது புரியாது. சித்து பயில்பவர்களுக்கு சட்டென்று ஒரு கணம் மனத்தில் தோன்றும். இந்த நிமிடம் இதைச் செய் என்று எங்கிருந்தோ ஒரு கட்டளை வரும்.’

‘அது உன் மனம் சொல்வதுதான்’ என்று சொன்னேன்.

‘இருக்கலாம். என் மனம், உன் மனம் என்று தனித்தனியே இல்லை. மனம் ஒன்றுதான். கட்டளைகள் மட்டும் இடம் மாறி வரும்.’

‘கடவுள் அனுப்புவாரா?’

‘அப்படித்தான் நம்புகிறேன்’ என்று வினய் சொன்னான்.

எனக்குக் கடவுள்கள் இல்லாதிருப்பது எத்தனை சொகுசாக இருக்கிறது! பொதுவாக நான் என் மனத்துக்குள் பேசுவதே கிடையாது. பேச்சு என்ற செயலுக்கு எதிராளி ஒருவன் முக்கியம். அல்லது பலபேர். யாருமற்ற நேரங்களில் நான் மிதமாக மது அருந்திவிட்டுத் தூங்கிவிடுவேன். வினய்யிடம் இதைச் சொன்னபோது அவன் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவனது வருத்தமெல்லாம், அந்தப் பாளையங்கோட்டைக்காரியிடம் வீழ்ந்து கிடந்த தினங்களைப் பற்றியதாகவே இருந்தது.

‘என்னால் மீளவே முடியவில்லை விமல். என் கண்ணெதிரே நான் தோற்றுக்கொண்டிருந்தேன். ஒருமுறை இருமுறையல்ல. ஒவ்வொரு முறையும்.’

அவளை சக்தி வடிவமாகக் கொண்டு உள்ளே புகப் பார்த்ததில் ஆரம்பித்திருக்கிறது சிக்கல். அவன் மனக்கண்ணில் தெரிந்த நீர்நிலை, அவளைக் கண்ட பிறகு ஒரு பெண்ணுருவம் கொண்டிருக்கிறது. ஒரு நாள் நள்ளிரவு, உறங்கிக்கொண்டிருந்த சித்ராவைத் தட்டியெழுப்பி, ‘பெண்ணே இப்படி எதிரில் வந்து உட்கார்’ என்று சொல்லியிருக்கிறான். ஒரு சொம்புப் பாலில் தடுக்கி விழுந்த அந்தப் பெண், வினய் சொன்னதற்கு மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்து எதிரே வந்து அமர்ந்தாள். வினய் அவளது கண்களை உற்றுப் பார்த்தான். உதடுகளை உற்றுப் பார்த்தான். பார்வையை அப்படியே மெல்லக் கீழிறக்கி, கழுத்தைப் பார்த்தான். சற்றே தெரிந்த இடுப்பைப் பார்த்தான். அவள் எதிர்பாராத ஒரு கணத்தில் அவள் சேலையைத் தனது இடக்கரத்தால் விலக்கி மார்பகங்களைக் கண்டான். அதைத் தொட்ட கணத்தில், அவன் நினைவில் இருந்து சொரிமுத்து முற்றிலுமாக நகர்ந்துபோனான்.

‘இல்லை. அது தவம்தான். நான் சக்தி சொரூபத்தை அவளது தேகத்தில் மானசீகமாக ஆவாகனம் செய்தபின்தான் பூஜிக்க ஆரம்பித்தேன்’ என்று வினய் சொன்னான்.

‘முட்டாள். உன் மனத்தில் சிவமே உட்காரவில்லை. சக்தி எப்படி ஆவாகனமாவாள்?’

அவன் கேவிக்கேவி அழத் தொடங்கினான். ‘என் சக்திகள் என்னை விட்டுப் போய்விட்டன விமல். நான் அந்தக் கணம் ஒரு சித்தனாகும் தகுதியை இழந்தேன். என் உடலெங்கும் சாக்கடை ஓடத் தொடங்கியது. அதன் துர்நாற்றம் என் நினைவெங்கும் படர்ந்து ஒரு கிருமியாக என்னைத் தின்ன ஆரம்பித்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. மீளவும் முடியவில்லை.’

‘எத்தனைக் காலம்?’

‘ஒன்பது மாதங்கள். அவள் ஒரு கருக்கலைப்புச் செய்யவேண்டி வந்தது. அன்றைக்கு நான் அந்த இடத்தைவிட்டு ஓடிப்போனேன்’ என்று வினய் சொன்னான்.

‘சுத்த அயோக்கியன்.’

‘ஆம். சந்தேகமில்லை. அயோக்கியன்தான். இந்தப் பாடுக்கு நான் காஞ்சீபுரம் வேதபாட சாலையிலேயே இருந்திருக்கலாம். படித்து முடித்து பத்மா மாமியின் மகளைத் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.’

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை வினய். பத்மா மாமியின் மகளுக்கு வேண்டுமானால் திருமணமாகிக் குழந்தை பிறந்து வளர்ந்திருக்கலாம். நீ வேறு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டு வாழலாம்’ என்று சொன்னேன்.

‘இல்லை. அது முடியாது. நான் ஒரு பெரிய குழிக்குள் இருக்கிறேன். பிசாசுகளும் குட்டிச் சாத்தான்களும் என்னைச் சூழ்ந்திருக்கின்றன. பூரணத்தை நோக்கிய ஒரு பெரும் பயணத்தை மேற்கொண்டு, அந்தப் பாழாய்ப் போன முகமது குட்டியால் சூனியத்துக்குள் விழுந்துவிட்டேன்’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவன் ஏன் முகமது குட்டியைப் பழிவாங்க நினைத்தான் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நான் அதை அவனிடம் கேட்கவில்லை. அந்த நேரத்து ஆங்காரம் என்பது பதிலாக இருக்கும். எனக்கென்னவோ அவன் முகமது குட்டியின் வித்தையின் மீது தன்னையறியாமல் மையல் கொண்டிருப்பான் என்று தோன்றியது. ஒரு சுண்டியிழுப்பு. ஒரு வசீகரம். உன் இடுப்பில் இருந்ததை என் இடுப்புக்கு மாற்றிவிட்டேன் பார் என்கிற எகத்தாளம் அளித்த ஆத்திரத்தின் அடியில் புதைந்திருந்த ஆச்சரிய உணர்வு. அவன் சித்தனல்ல என்று வினய்க்குத் தெரிந்திருந்தது. ஒரு சித்தன் செய்யக்கூடிய காரியத்தை சித்தனல்லாத ஒருவன் செய்வது எப்படி என்று குழம்பிப் போயிருக்கிறான்.

ஒரு சமயம் டெல்லியில் நானொரு மேஜிக் ஷோ பார்க்கப் போயிருந்தேன். அசோகா ஓட்டலின் விஸ்தாரமான அரங்கமொன்றில் மிகப்பெரிய முக்கியஸ்தர்கள் சிலருக்காக நிகழ்த்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி. உண்மையில் அது ஒரு முக்கியமான அரசியல் ஆலோசனைக் கூட்டம். ரகசியக் கூட்டமும் கூட. ஆலோசனைகள் செவ்வனே நிறைவேறியதும், களைப்பு நீங்க மதுவருந்திவிட்டு உணவுத் தட்டுகளோடு எல்லோரும் மேஜிக் ஷோ பார்க்க அமர்ந்தோம்.

அந்தக் கலைஞன் மிகவும் இளைஞனாக இருந்தான். ஒல்லியாக, சிவப்பாக, தோள்வரை புரண்ட தலைமுடியோடு மிகவும் வசீகரமாக இருந்தான். வழக்கமான தொடக்கக் காட்சிகளைப் பரபரவென்று செய்துகாட்டிக் கைதட்டல் பெற்ற பின்பு, யாராவது ஒருவர் மேடைக்கு வர முடியுமா என்று கேட்டான்.

குறைந்தபட்சம் ஒரு எம்பி பதவி, குறைந்தபட்சம் ஐம்பது கோடி ரூபாய் சொத்து, குறைந்தபட்சம் ஆறு பங்களாக்கள், பத்து கார்கள் வைத்திருந்தவர்கள் அவர்கள். அந்தக் கூட்டத்தில் என்னைச் சேர்த்து ஓரிருவர் மட்டுமே பணக்காரர்கள் அல்லாதவர்கள். ஆனால் முன் சொன்ன எம்பிக்கள் பல பேரின் பலகோடிக்கணக்கான பணம் எங்களிடம்தான் புழங்கிக்கொண்டிருந்தது. அதுவல்ல விஷயம். அன்றைக்கு அந்த மேஜிக் கலைஞன் யாராவது மேடைக்கு வர முடியுமா என்று கேட்டவுடன் நாலைந்து பேர் எழுந்து முன்னால் போனார்கள். அவன் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து தன்னருகே அழைத்தான். ஒரு ஸ்டூலைப் போட்டு அதன் மீது ஏறி நிற்கச் சொன்னான். குஜராத்தில் பிரம்மாண்டமான பால் பண்ணை ஒன்றை நடத்துகிற அந்த மனிதர், ஸ்டூல் மீது ஏறி நிற்பது பற்றிச் சற்றும் வெட்கமுறாமல் அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஏறி நின்றார். அவன் அந்தப் பெரிய மனிதருக்கு இரண்டு உயரமான கழிகளைக் கொடுத்து இரு கைகளிலும் பிடித்துக்கொள்ளச் சொன்னான். ஒரு பாதுகாப்பு போல. பிடிமானத்துக்காக. அவன் சொன்னபடியே அவர் கழிகளைப் பிடித்துக்கொண்டு ஸ்டூல் மீது நின்றதும், அவன் தனது குச்சியைச் சுழற்றி ஏதோ செய்தான். பிறகு சட்டென்று அவர் நின்றுகொண்டிருந்த ஸ்டூலை உருவி நகர்த்திவிட்டான். பிரமுகர் விழவேயில்லை. அந்தரத்தில் அப்படியே நின்றுகொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ஓவென்று சத்தமிட்டு பலமாகக் கைதட்டினார்கள். அவன் அதோடு நிறுத்தவில்லை. அவரது பிடிமானத்துக்காகக் கொடுத்த இரு கழிகளையும் அதேபோல் உருவி, நீக்கிவிட்டான். இப்போது பிரமுகர் முற்றிலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடங்களுக்கு இந்த மேஜிக் நீடித்தது. அதன்பின் அவன் மீண்டும் ஸ்டூலை நகர்த்தி அவர் காலுக்கடியில் வைத்து நிற்கும்படிச் செய்து கீழே இறக்கினான்.

இது எப்படி, இது எப்படி என்று அத்தனை பேரும் அந்த மேஜிக் நிபுணனைத் துளைத்து எடுத்துவிட்டார்கள். ‘திஸ் இஸ் மேஜிக்’ என்று சொன்னானே தவிர, அவன் அதன் சூட்சுமத்தைச் சொல்லவில்லை. நான் அந்தப் பால் பண்ணை அதிபரிடம் சென்று, ‘நீங்கள் அந்தரத்தில் மிதந்ததை உணர்ந்தீர்களா?’ என்று கேட்டேன்.

ஆமாம் என்று உடனே பதில் சொன்னவர் சற்று யோசித்துவிட்டு, ‘சரியாகத் தெரியவில்லை. அப்படித்தானே நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

இந்தச் சம்பவத்தை நான் வினய்யிடம் சொன்னபோது, ‘கண்கட்டு’ என்று சொன்னான். ‘ஏவலாளி ஜாதி ஒன்று இருக்கிறது. அவர்களைக் கூப்பிட்டு இதையெல்லாம் செய்வது சுலபம்’ என்றான்.

‘அதைத்தானே முகமது குட்டி செய்தான்?’ என்று கேட்டேன்.

அவன் சற்றுத் தயங்கினான். பிறகு, ‘ஆம். நான் உன்னிடம் மறைக்க விரும்பவில்லை. ஶ்ரீரங்கப்பட்டணத்து நடிகரின் மனைவிக்கு இதெல்லாம்தான் பிடிக்கும். அவளைப் போல எனக்குப் பலபேரைத் தெரியும்.’

எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு ஞானத்தேடல் இப்படியொரு வியாபார உத்திக்குள் அவனை விழச் செய்திருக்க வேண்டாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com