69. ஒரு பயணம்

என் கடவுள் நானேதான். என் குருவுக்கு இருந்த நூற்றுக்கணக்கான கடவுள்களின் முழுத் தொகுப்பாக நான் என்னைக் கண்டேன். என் கடவுள் என்பது என் சிந்தனை மட்டுமே.

பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்பானியர்கள் மெக்ஸிகோவுக்குப் படையெடுத்து வென்றதற்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நான் மெக்ஸிகோவுக்குப் பயணம் மேற்கொண்டதற்கும் சில பொருத்தங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஊர் சுற்றிப் பார்க்கப் போகவில்லை. அங்கே உள்ள உல்லாசங்களை அனுபவிக்க எனக்கு நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. என்னை அறிந்தவர்களோ, என் மொழி தெரிந்தவர்களோ அங்கு யாருமிருக்கவில்லை. ஆனால், வட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் எல் பசோ நகரத்தில் வசித்துவந்த எனது சீடர்களுள் ஒருவனான விக்கி என்கிற விக்னேஸ்வரனுக்கு மெக்ஸிகோவில் ஒரு தொடர்பு இருந்தது. அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட ஒரு மெக்ஸிகக் குடும்பத்தில்தான் அவன் பெண் எடுத்துத் திருமணம் செய்திருந்தான். அந்தப் பெண்ணின் உறவினர்கள் பலர் மெக்ஸிகோவில் இன்னமும் வசித்துக்கொண்டிருந்தது சௌகரியமாக இருந்தது. என்னை வரவேற்கவும் தங்கவைப்பதற்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

இருபது நாள் அமெரிக்காவில் சொற்பொழிவுகளை முடித்துக்கொண்டு நான் மெக்ஸிகோ போய்ச் சேர்ந்தபோது, ‘இங்கே நாம் என்ன செய்யப் போகிறோம் குருஜி?’ என்று மிருதுளா கேட்டாள்.

‘தெரியவில்லை பெண்ணே. உன் தந்தைக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு பெரிய மனிதருக்கு உதவ ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்க வந்திருக்கிறேன்’ என்று சொன்னேன்.

உண்மையில் எனக்கு அதுவரை நிழல் உலகத்துடனான தொடர்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்ததில்லை. பணத்தின் மீதான விருப்பத்தை அறவே களைந்தவனுக்கு அதன் தேவையும் இல்லை. ஓரிருவரை எனக்குத் தெரியும். உஸ்பெகிஸ்தானில் ஒரு போதைக் கடத்தல் தலைவன். திபெத்தில் வசிக்கும் ஒரு வெடிகுண்டு நிபுணன். இதைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவன் பெயர் கேம்போ. பார்த்த கணத்தில் விழுந்து வணங்கத் தூண்டும் விதத்தில் அவனது தோற்றம் அப்படியொரு சாந்த வடிவமாயிருக்கும். தூய காவி உடையும் மழுங்கச் சிரைத்த தலையும் முகமும் எப்போதும் புத்த பெருமானின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டிருக்கும் உதடுகளும் அவனை ஒரு துறவியாகக் காட்டும். அது உண்மையும்கூட. கேம்போ ஒரு துறவிதான். அவனுக்குக் குடும்பம், குழந்தை குட்டியெல்லாம் கிடையாது. நானாவது மடிகேரியில் ஒரு ஆசிரமம் வைத்திருக்கிறேன். அவனுக்கு அப்படியும் ஒன்றுமில்லை. எளியதொரு கிராமப்புற வீட்டில் வசித்துக்கொண்டு, பிட்சை எடுத்து உண்டு வாழ்பவன். கிராமத்துச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்து இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பவனாகப் பிராந்தியத்தில் அவனை அறியாதவர்கள் இல்லை.

அவனை வேறுவிதமாக அறிந்தவர்கள் உலகில் மிகச் சிலரே. என்னோடு சேர்த்து இருபது பேர் இருந்தால் அதிகம். கேம்போ ஒரு சிறந்த வெடிபொருள் நிபுணன். இலக்கு, நோக்கம், எதிர்பார்ப்பைச் சொல்லிவிட்டால், மிகச் சரியாகத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுவான். நூறு பேர் இறக்க வேண்டுமென்றால் நூறு பேர். ஆயிரம் பேர் இறக்க வேண்டுமென்றால் ஆயிரம் பேர். கட்டடம் நொறுங்க வேண்டுமானால் அதற்கான ஆயத்தம். கப்பல் வெடிக்க வேண்டுமானால் அதற்கொரு வழி. நான்கு வருடங்களுக்கு முன்பு கேம்போ இந்தியாவுக்கு வந்திருந்தான். எனக்கு மிகவும் பரிச்சயமான அரசியல்வாதி ஒருவர் என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பவுத்தம் ஏன் இந்தியாவில் எடுபடாமல் போனது என்பது பற்றி நான் அவனுக்கு முக்கால் மணி நேரம் சொற்பொழிவாற்றினேன்.

‘சராசரி இந்தியர்கள் எத்தனை பெரிய ஏமாற்றங்களையும் விழுங்கி செரிக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், கடவுள் இல்லை என்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கம்யூனிச நாத்திகமும் திராவிட நாத்திகமும் இங்கே எடுபடாமல் போவது அதனால்தான். கடவுளைக் குறித்துப் பேசாமல் நீங்கள் எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் இங்கே அரசியல் செய்ய முடியும். ஆனால், கடவுள் கிடையாது என்பீர்களானால் உங்கள் வாழ்வு முடிந்தது’ என்று சொன்னேன்.

‘ஆனால் தத்துவங்கள்...’

‘ஆ, தத்துவங்கள்! அவற்றின் தேவைதான் என்ன இங்கே? பசியினும் பெரிய தத்துவம் இல்லை. பசியாற்றுவதினும் பெரிய அறம் இல்லை. எளிய மக்கள் தத்துவங்களின் பக்கம் ஒதுங்குவதில்லை நண்பரே. மூளை ஒரு நகை. அதைத் துடைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைக்கவே விரும்புகிறோம். விசேஷக் காலங்களில் மட்டும்தான் அதற்கு வேலை. உங்களால் எளிய உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடிந்தால் போதும். சிந்திக்கச் சொல்லாதீர்கள். அதற்கெல்லாம் நேரமில்லை. அதற்குள் ரேஷன் கடை மூடிவிடுவார்கள்’.

நானொரு நாத்திகன் என்று அறிந்தபோது, கேம்போ ஆச்சரியப்பட்டான். ‘இந்தியாவில் நாத்திகமும் ஒரு மதம் என்று தெரியுமல்லவா? இன்றைக்கு இல்லை. ஒரு காலத்தில். இன்று நாத்திகம் அரசியலுக்கு மட்டும் பயன்படுகிற ஒரு கருவி. அதுவும் தோற்பதற்கு உதவும் கருவி.’

‘எனில் உங்கள் கடவுள் யார்?’ என்று கேம்போ கேட்டான்.

சந்தேகமென்ன? என் கடவுள் நானேதான். என் குருவுக்கு இருந்த நூற்றுக்கணக்கான கடவுள்களின் முழுத் தொகுப்பாக நான் என்னைக் கண்டேன். என் கடவுள் என்பது என் சிந்தனை மட்டுமே என்று கேம்போவிடம் சொன்னேன். அவனுக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. என்னை திபெத்துக்கு வரும்படி அன்போடு அழைத்தான். அதற்கென்ன? என்றைக்காவது ஒருநாள் அவசியம் வருகிறேன் என்று சொன்னேன்.

உண்மையில் நான் மெக்ஸிகோவுக்குப் போவது நல்லது என்று எனக்கு ஆலோசனை சொன்னது கேம்போதான்.

‘அங்கே நடப்பது போதைப் போர்கள்தான். ஆனால், ஆயுத மார்க்கெட்டுடன் தொடர்புடைய ஒரு சிலர் அங்கே இருக்கிறார்கள்’ என்று சொல்லி, எனக்கு ஒரு தொடர்பையும் அவன்தான் ஏற்படுத்திக் கொடுத்தான். மிருதுளாவிடம் நான் இதையெல்லாம் எப்படிச் சொல்ல முடியும்? அழகான சிறுமி அவள். மிகச் சில மூச்சுப் பயிற்சிகளை மட்டும்தான் நான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சிரத்தையாக அவற்றை அப்பியாசம் செய்து சில வியாதிகளில் இருந்து அவள் விடுதலையாகியிருந்தாள். ஒரே ஒருமுறை அவளை நிஷ்டையில் அமரவைத்து சஹஸ்ரார சக்கரத்தைச் சுழலவிட்டுக் காட்டியிருக்கிறேன். கிறுகிறுத்துப் போய் சுருண்டு விழுந்துவிட்டாள். மூன்று மணி நேரத்துக்கு அவள் எழுந்துகொள்ளவேயில்லை. ஆசிரமத்தில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த சீடர்கள் சற்று மிரண்டு போனார்கள். ‘குருஜி இவள் எப்போது எழுந்திருப்பாள்?’ என்று அச்சத்தோடு கேட்டார்கள். நான் புன்னகை செய்தேன். அவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அறைக்கதவை மூடினேன். எனக்குத் தெரியும், அவளுக்கு என்ன நிகழ்ந்தது என்று. சின்னப் பெண் அல்லவா? அவள் கண் விழிக்கும்வரை அவள் அருகேயே அமர்ந்திருந்தேன். விழித்து எழுந்ததும் என்னைக் கண்டு சிரித்தாள். கட்டியணைத்து என் கன்னத்தில் முத்தமிட்டாள். ‘தேங்க்யூ குருஜி, தேங்க்யூ குருஜி!’ என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள். அதன்பின் ஒருவார காலம் ஆசிரமத்தில் நான் சொற்பொழிவு நிகழ்த்தவேயில்லை. தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஆயிரமாயிரம் சொற்களில் மிருதுளா திரும்பத் திரும்ப விவரித்துக்கொண்டே இருந்தாள். கேட்பவர்களுக்கெல்லாம் சொன்னாள். கேட்காதவர்களையும் கூப்பிட்டு வைத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

என்றோ ஒருநாள் அவளுக்கு அந்தச் சந்தேகம் வந்துவிட்டது. ‘குருஜி, எனக்கு ஒன்று நிகழ்ந்தது. நான் என்னால் முடிந்தளவு அதை மற்றவர்களுக்கு விளக்கப் பார்க்கிறேன். ஆனால் நான் உணர்ந்ததை எந்தச் சொல்லும் சரியாக வெளிப்படுத்தவேயில்லை’ என்று சொன்னாள்.

நான் புன்னகை செய்தேன்.

‘தயவுசெய்து உதவுங்கள். எனக்கு நேர்ந்ததை நான் எப்படி விளக்குவது?’

சில விநாடி அமைதியாக இருந்துவிட்டு நான் சொன்னேன், ‘சொல் தோற்கும் இடங்களில் மௌனம்தான் வெல்லும்.’

கேம்போ தந்திருந்த மெக்ஸிகனின் முகவரி, நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தொலைபேசியில் அவனை அழைத்து, நான் வந்துவிட்ட விவரத்தைச் சொல்லும் பொறுப்பை நான் மிருதுளாவிடம் தந்திருந்தேன். அவள் ஏழெட்டு அழைப்புகளுக்குப் பிறகு அவனுடன் நேரில் பேசினாள். ‘சுவாமிஜி நாளை உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொன்னாள். அவனுக்கு ஆங்கிலம் அத்தனை வராது போலிருக்கிறது. திரும்பத் திரும்ப மிருதுளா சொன்னதையே சொல்லிப் புரியவைக்கப் பார்த்தாள். பத்து நிமிடங்கள் பேசிய பிறகு நன்றி சொல்லி போனை வைத்தாள்.

நான் ‘என்ன’ என்று கேட்டேன்.

‘சொல்லிவிட்டேன் குருஜி. நாளைக் காலை ஒன்பது மணிக்கு நம்மை அழைத்துச் செல்ல இங்கே வண்டி வரும்’ என்று சொன்னாள்.

இடையில் பதிமூன்று மணி நேரம் இருந்தது. ஒரு விடுதி அறையில் அடைந்து கிடப்பதில் என்ன இருக்கிறது? நாம் வெளியே போகலாம் என்று மிருதுளாவிடம் சொன்னேன். அன்றிரவு இரண்டு மணி வரை நாங்கள் மெக்ஸிகோ நகரெங்கும் சுற்றித் திரிந்தோம். எங்கெங்கோ சாலையோரக் கடைகளில் விதவிதமான மெக்ஸிகோ உணவு ரகங்களை ருசி பார்த்தோம். கால் களைத்தபோது அறைக்குத் திரும்பி வந்து படுத்தோம்.

இரண்டு மணி நேரம்கூடத் தூங்கியிருக்க மாட்டோம். திடீரென்று நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே இடைவிடாமல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. திடுக்கிட்டுக் கண் விழித்து ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி நான் வெளியே பார்த்தேன். மிருதுளா அச்சத்துடன் என் பின்னால் பதுங்கி நின்று கவனித்தாள். ஐந்தாறு நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சூட்டின் இறுதியில், சாலையில் ஒன்பது பிணங்கள் தனியே கிடந்தன. ஒரு நாய் மட்டும் அவற்றுக்கிடையே உயிருடன் சுற்றிச் சுற்றி வந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com