73. சித்ராவும் உருளைக்கிழங்கு போண்டாவும்

நான் வினய்யைத்தான் நினைத்துக்கொண்டேன். அவனுக்கு அப்படியொரு அனுபவம் அந்நாள்களில் வாய்த்திருந்தால், மிக நிச்சயமாக அவன் ஓடிப்போயிருக்க மாட்டான்

எனக்கேகூட அது ஆச்சரியம்தான். வினோத் குறித்து கேசவன் மாமா பேச ஆரம்பித்தபோது, முதலில் எனக்கு ஒரு கதை கேட்பது போலத்தான் இருந்தது. விரக்தியில் மாமா தன்னையறியாமல் சம்பவங்களை மிகைப்படுத்திவிடுகிறாரோ என்று அடிக்கடித் தோன்றியது. சட்டென்று வேறொரு சந்தேகமும் எழுந்தது. என்ன ஆனாலும், நான் வீட்டுக்கு வந்து யாரிடமும் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என்பதை அவர் அறிவார். பெற்ற நான்கு பிள்ளைகளும் தமது தாய்க்கு ஆத்மசுத்தியுடன் செய்த துரோகங்களை அவர் பட்டியலிட்டுக்கொண்டிருந்தார். தமக்கைப் பாசம் தன்னியல்பாக அதில் சில மிகைகளைக் கொண்டு சொருகிவிடுகிறதோ என்று நினைத்தேன். என்னவானாலும், சொல்லி முடிக்கும்வரை மாமா அழுதுகொண்டேதான் இருந்தார். நான் குறுக்கிடவில்லை. அவர் பேசி முடிக்கும்வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லாம் சொல்லியானதும் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார், ‘எங்கக்காவுக்கு என்னடா தலையெழுத்து இப்படியெல்லாம் கஷ்டப்படணும்னு? இப்படியெல்லாம் பண்றதுக்கு நீங்க நாலு பேரும் பேசி வெச்சுண்டு அவளைக் கொன்னு கடல்ல வீசிட்டுப் போயிருக்கலாமே?’

நான் அமைதியாக இருந்தேன். சில வினாக்கள் பதில்களை எதிர்பார்ப்பதில்லை. அவற்றுக்கு வினாவாக மட்டுமே இறுதிவரை இருந்துவிடுவதில்தான் விருப்பம். பொருத்தமான பதில்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் அத்தகைய வினாக்களுக்கு எப்போதும் இருக்கும். பதில்களை வெறுக்கும் வினாக்கள். பதில்களில் இருந்து விலகியோட விரும்புகிற வினாக்கள்.

நல்லது. எனக்கு கேசவன் மாமாவைக் காட்டிலும் வினோத்தின் மீதுதான் பரிதாப உணர்வு அதிகமாகத் தோன்றியது. மூன்று பேர் விட்டு விலகி ஓடிவிட்ட பின்பு அவன் அனுபவித்திருக்கக்கூடிய தனிமையை எண்ணிப் பார்த்தேன். அது என் அப்பா அம்மா அனுபவித்த தனிமையினும் கொடிது. இதை நான் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆனாலும் அதுதான் உண்மை. தன் தனிமையைக் கொல்லத் தெரியாமல் அவன் தவித்திருக்க வேண்டும். ஏற்கெனவே அவனுக்குக் கொள்ளிடத்தில் கிடைத்திருந்த சிவலிங்கம் அவனை சிந்திக்க விடாமல் அடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டை விட்டுப் போகும்வரை அப்படியொரு சம்பவம் நடந்ததையே அவன் காட்டிக்கொள்ளவில்லை என்று கேசவன் மாமா சொன்னார். கிளம்பிய தினத்தில் தன் ஞாபகார்த்தமாக அந்தச் சிவலிங்கத்தை எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்திருக்கிறான். அதன் கீழே ஒரு வரி எழுதிய தாள். இவன் கூப்பிடுகிறான்.

உண்மையில் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கொள்ளிட வெள்ளத்தில் அவனுக்கு லிங்கம் கிடைத்ததற்கும், அவன் வீட்டை விட்டு விலகிப் போனதற்கும் நடுவே பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டு புரண்டோடியிருக்கின்றன. இக்காலத்தில் அவன் திருவிடந்தை ஆரம்பப் பாடசாலையில் ஒரு ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறான். வீட்டுக்குத் தெரியாமல் வாரம்தோறும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்குப் போய்வந்திருக்கிறான். சிவத்தின் மீதான தனது பக்திப் பெருக்கு எங்கே ஏளனத்துக்குரியதாகிவிடுமோ என்ற அச்சத்தில் அதைக் குறித்து யாரிடமும் ஒரு சொல்லும் பேசாமலேயே கழித்திருக்கிறான்.

வினோத்துக்கு இருபத்து மூன்று வயதானபோது, அம்மா வீட்டில் அவனுக்குத் திருமணப் பேச்சை எடுத்தாள் என்று கேசவன் மாமா சொன்னார். இவன் நிச்சயமாக விட்டுப் போகப் போவதில்லை என்பது தெளிவாகியிருந்த நேரம் அது. தனது சொற்ப சம்பளத்தை வீட்டுக்கு மொத்தமாகக் கொடுத்துவிட்டு, ஓய்வுப் பொழுதுகளில் அவன் அம்மாவுக்கு உதவியாகத் துணி மடித்து, பாத்திரங்கள் துலக்கிக் கொடுத்து, வீடு பெருக்கி வாழ்ந்து வந்திருக்கிறான்.

அப்பா அவனிடம் மிகவும் நேரடியாகக் கேட்டாராம். ‘ஒனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு உங்கம்மா ஆசைப்படறா. சரின்னு பட்டுதுன்னா சொல்லு.’

‘ஏம்ப்பா அப்படிக் கேக்கறேள்? நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு சரி’ என்று வினோத் பதில் சொன்னான்.

அம்மாவுக்கு அந்தப் பதில் போதவில்லை. எனவே அவளும் தன் பங்குக்கு அவனைத் தனியே கூப்பிட்டுப் பேசியிருக்கிறாள். ‘மூணு பிள்ளைகளை இழந்தவடா நான். அவா மூணு பேரும் உயிரோடதான் இருப்பான்னு தெரியும். ஆனா எங்க இருக்கான்னு தெரியாது. நம்மாத்துக்கு ஏன் இப்படி நடக்கறதுன்னும் எனக்குத் தெரியலே. இதைச் சொன்னா நாலாவதா உனக்கு யாராவது பொண்ணு குடுப்பாளான்னும் எனக்குத் தெரியலே. இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு நப்பாசை. குறைஞ்சது நீயாவது இதுல தெளிவா இருக்கியான்னு தெரிஞ்சிண்டு முயற்சி பண்ணிப் பாக்க நினைக்கறேன். முயற்சி பண்ணிக் கிடைக்காம போக நிறைய வாய்ப்பு இருக்கு.’

வினோத் யோசிக்கவேயில்லை. ‘கிடைக்கலேன்னா அது என் தலையெழுத்தும்மா. ஆனா நீ ஆசைப்படறதை நீ பண்ணலாம். என்னால எந்தப் பிரச்னையும் வராது’ என்று சொல்லியிருக்கிறான். அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘எனக்கு ஓடிப் போற விருப்பமெல்லாம் இல்லைம்மா. அவ்ளோ துணிச்சலும் இல்லை.’

இரண்டு நாள் இடைவெளியில், அம்மா வினோத்தின் ஜாதகத்தைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று தாயார் சன்னிதியில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு, பத்மா மாமியிடம் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறாள்.

‘பண்ணிக்கறேன்னு சொல்றான் மாமி. இவன் மட்டும்தான் மிச்சம் இருக்கற ஒரே நம்பிக்கை. முயற்சி பண்ணிப் பாக்கலான்னு ஒரு ஆசை.’ அம்மா தயங்கித் தயங்கித்தான் மாமியிடம் பேசினாள்.

பத்மா மாமி, வினோத்தின் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமாகக் கணக்குகள் போட்டாள். சட்டென்று என்ன தோன்றியதோ? ‘நீங்க நாளைக்கு வாங்கோளேன்?’ என்று சொல்லி அம்மாவை அனுப்பிவைத்தாள்.

மறுநாள் அம்மா, பத்மா மாமியின் வீட்டுக்குப் போனபோது அவளது கணவர் வீட்டில் இருந்தார். அம்மாவைக் கண்டதும் ‘சித்ரா ஜாதகத்தோட உங்க பிள்ளை ஜாதகம் நன்னா பொருந்தறது மாமி. உங்களுக்கு இஷ்டமிருந்தா நாம மேற்கொண்டு பேசலாம்’ என்று சொன்னார்.

அம்மாவால் அதை நம்பவே முடியவில்லை. என்ன, என்ன என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறாள்.

‘மூணு பேர் ஓடிப் போனா என்ன மாமி? இவன் ஜாதகம் இவன் கால்ல ஆணியடிச்சி உங்காத்துக் கூடத்துல பொருத்தி வெச்சிருக்கறதாத்தான் சொல்றது. படிச்சிருக்கான். சம்பாதிக்கறான். சின்ன வயசுலேருந்து பாக்கறவன் தானே? இஷ்டமிருந்தா சொல்லுங்கோ’ என்று பத்மா மாமியும் சொல்லியிருக்கிறாள்.

சித்ராவுக்கு அவர்கள் நாலைந்து வருடங்களாகவே வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று கேசவன் மாமா சொன்னார். ‘என்னமோ தெரியலைடா விமல். அந்தப் பொண்ணுக்கு ஒரு இடமும் தகையலை. இத்தனைக்கும் அவளோடது சுத்த ஜாதகம்’ என்று சொன்னார். நாடு முழுவதும் இருந்து திருவிடந்தை கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு யார் யாரோ கல்யாணப் பிராப்தி அடைந்துகொண்டிருந்தார்கள். பத்மா மாமி பிறந்தது முதல் நித்யகல்யாணப் பெருமாளை மட்டுமே வணங்கிக்கொண்டிருப்பவள். அவள் மகளுக்கு ஒரு வழி காட்ட மாட்டாரா?

சித்ராவும் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு மாலை வாங்கிப் போய் வைத்து விரதம் காத்துக்கொண்டிருந்தாள். சொல்லி வைத்த மாதிரி அப்போதுதான் அம்மா வினோத்தின் ஜாதகத்தை எடுத்துச் சென்று பத்மா மாமியிடம் காட்டியிருக்கிறாள்.

தேய்பிறை போகட்டும் என்று அப்பா சொன்னதால், ஒன்பது நாள்கள் காத்திருந்துவிட்டு அப்பா அம்மா கேசவன் மாமா வினோத் நால்வரும் பத்மா மாமி வீட்டுக்கு சம்பிரதாயப்படி பெண் பார்க்கப் போயிருக்கிறார்கள். மாமி உருளைக்கிழங்கு போண்டாவும் கேசரியும் செய்திருந்தாள். சித்ரா, வினோத்துக்கு மானச சஞ்சரரே பாடிக் காட்டியிருக்கிறாள். வினோத்துக்கு அந்தப் பாட்டு பிடித்திருந்ததா அல்லது உருளைக்கிழங்கு போண்டா பிடித்திருந்ததா அல்லது சித்ராவையே பிடித்திருந்ததா என்று தெரியவில்லை. திருமணத்துக்கு அன்றே சம்மதம் சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

அம்மாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். மறுநாளே கோயிலில் தளிகைக்குச் சொல்லி ஐம்பது பண்டாரங்களுக்கு அன்னதானம் செய்தாள். அப்பா, அம்மாவை மட்டும் அழைத்துக்கொண்டு அடையார் கோ ஆப்டெக்ஸுக்குப் போய் நிச்சயதார்த்தத்துக்குத் துணிமணிகள் வாங்கி வந்தார். பத்மா மாமி வீட்டிலேயேதான் நிச்சயதார்த்தம் நடந்தது. சமையலுக்குத் தனியே யாரையும் சொல்லவேண்டாம் என்று கேசவன் மாமா தீர்மானமாகச் சொல்லிவிட்டு தானே களத்தில் இறங்கினார்.

அந்த நிச்சயதார்த்தத் தளிகையே கல்யாணத் தளிகை போலிருந்தது என்று கேசவன் மாமா சொன்னபோது நான் புன்னகை செய்தேன். சன்னிதித் தெருவில் இருந்த அத்தனை பேரும் வினோத் நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்து ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போனார்கள்.

அன்றிலிருந்து நாற்பதாம் நாள் கல்யாணம் என்று குறிக்கப்பட்ட பத்திரிகையை வாத்தியார் வாசித்து ஆனதும் முதல் முதலாக வினோத் துணிச்சல் பெற்று சித்ராவிடம் பேசியிருக்கிறான்.

‘என்னை ஒனக்கு பிடிச்சிருக்கா? இல்லேன்னா உங்கம்மா சொன்னதுக்காக பண்ணிக்கறியா?’

சித்ரா ஒன்றும் சொல்லவில்லை. வெட்கப்பட்டுக்கொண்டு நின்றாள்.

‘பெரிய சம்பளமெல்லாம் இல்லே. மாசம் ரெண்டாயிரத்து எழுநூறு கையிலே வரும். இனிமே ட்யூஷன் எடுக்கலாம்னு இருக்கேன். அதுல ஒரு நாநூறு ஐந்நூறு வரலாம். கரஸ்பாண்டன்ஸ்ல எம்.ஏ. ஜாயின் பண்ணப் போறேன். அது முடிஞ்சிடுத்துன்னா கவர்மெண்ட் ஸ்கூல்லே முயற்சி பண்ணிப் பாப்பேன். அதிர்ஷ்டம் இருந்தா வேலை கிடைக்கும்’ என்று சொன்னான்.

சித்ரா வெறுமனே தலையாட்டினாள்.

கிளம்பும் முன் வினோத் அவளிடம் மீண்டும் கேட்டான், ‘என்னைப் பிடிச்சிருக்கா?’

‘உம்’ என்று மட்டும் சொன்னாள்.

இரண்டு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை தூங்கி எழுந்து முகம் கழுவிக்கொண்டு காப்பி குடித்த பின்பு, வினோத் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா நான் சித்ராவோட இப்போ வெளிய போனா தப்பாகுமா?’

வீட்டில் அப்போது அப்பா இருந்தார். கேசவன் மாமாவும் இருந்தார். அம்மாவுக்கு குப்பென்று வெட்கமாகிவிட்டது. என்ன பிள்ளை இவன்!

‘அதெல்லாம் போகலாம் ஒண்ணும் தப்பில்லே. அதான் நிச்சயதார்த்தம் ஆயிடுத்தே’ என்று கேசவன் மாமா சொன்னார்.

‘அதுக்கில்லே கேசவா. அவாத்துல ஒத்துக்கணுமில்லியா?’ என்று அப்பா கேட்டார்.

வினோத்துக்குப் புரிந்துவிட்டது. வீட்டில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. எனவே, ‘நானே போய் அவப்பாட்ட பேசிப் பாக்கறேம்ப்பா. சரின்னு சொன்னா கூட்டிண்டு போறேன்.’

‘எங்கடா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘ஒனக்கு எதுக்கு அதெல்லாம்? அவன் எங்க வேணா போகட்டும் சித்ரா இனிமே அவன் பொறுப்பு’ என்று அம்மா சொன்னாள்.

நான்கு பிள்ளைகள் பிறந்த நாளாக வராத பேரானந்தம் அன்று அவள் கண்ணில் தெரிந்ததைக் கேசவன் மாமா கண்டார். புன்னகை செய்தார்.

வினோத் தன்னை அலங்கரித்துக்கொண்டு பத்மா மாமியின் வீட்டுக்குப் போனான். அவன் போன நேரம், சித்ரா பூ தொடுத்துக்கொண்டு வாசல் திண்ணையில்தான் அமர்ந்திருந்தாள்.

‘உங்கப்பாவ பாக்கணும்’ என்று வினோத் சொன்னதும் அவள் எழுந்து வந்து புன்னகை செய்தாள். ‘உள்ளே வாங்கோ.’

வினோத் வீட்டுக்குள் சென்று சித்ராவின் பெற்றோரிடம் விவரம் சொன்னான். ‘என்னமோ தோணித்து. உங்களுக்குத் தப்பா படலேன்னா அனுப்பிவைங்கோ. இல்லேன்னாலும் பரவாயில்லை’ என்று சொன்னான்.

‘கேக்கவே வேண்டாம் மாப்ளை’ என்று சித்ராவின் அப்பா சந்தோஷமாகச் சொன்னார். பத்து நிமிடங்களில் சித்ரா தயாராகி, பளிச்சென்று வேறொரு புடைவையில் வந்து நின்றாள்.

‘தேங்ஸ். ராஜலட்சுமி தியேட்டருக்குத்தான் போறோம். படம் முடிஞ்சதும் கொண்டுவந்து விட்டுடறேன்’ என்று சொல்லிவிட்டு, சித்ராவை அழைத்துக்கொண்டு வினோத் புறப்பட்டான்.

‘தியேட்டர்லே அவளுக்கு முத்தம் குடுத்தேன்னு அவன் என்கிட்டே சொன்னாண்டா!’ என்று கேசவன் மாமா சொன்னார். நான் வினய்யைத்தான் நினைத்துக்கொண்டேன். அவனுக்கு அப்படியொரு அனுபவம் அந்நாள்களில் வாய்த்திருந்தால், மிக நிச்சயமாக அவன் ஓடிப்போயிருக்க மாட்டான் என்று தோன்றியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com