1. நீலக் குறிஞ்சி

தலையைக் கலைத்துவிட்டுக்கொண்டு சாமியாடும் பெண்களைப் போன்றதல்ல மரங்களின் ஆட்டம். தலை ஆடிக்கொண்டிருந்தாலும் ஒழுங்காக வகிடெடுக்கிற நேர்த்தி அதில் ஒளிந்திருப்பது தெரிகிறதா?

விரிந்து விடைத்த செவிகளை ஆவேசமாக அசைத்துக்கொண்டு ஓடிவரும் மதம் கொண்ட யானையின் பிளிறலைப் போலிருந்தது இந்திராவதியின் பேரிரைச்சல். தண்டகாரண்யப் பெருவனத்தின் அடர்த்தியும் இருளும் நதியின் ஓசையைத் தம்மேல் பூசிக்கொண்டு அச்சமூட்டின. காற்றுக்குத் தலைவிரித்தாடிய தடித்த மரங்களின் நிழலாட்டம் நதியின் சுருதிக்குச் சேராமல் தன்னியல்பில் வேறொரு ஓசையின் ஊற்றைத் தோண்டிக்கொண்டிருந்தது. சம்பந்தமில்லாமல் திடீரென்று எங்கிருந்தோ ஒரு ஓநாயின் குரல் சீறி அடங்கியது. தாங்கொணாக் குளிரில் நடுங்கியவண்ணம் கூடாரத்துக்குள் நான் உறங்காமல் சத்தங்களுக்கு என்னைத் தின்னக் கொடுத்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தீராத வியப்பு, இந்திராவதியின் இந்தச் சீற்றம். மர்டிகுடாவில் அது புறப்படும் இடத்தை முன்பொரு சமயம் பார்த்திருக்கிறேன். ஒரு நாளெல்லாம் அதன் தடம் பற்றி, கரையோரம் நடந்து சென்றிருக்கிறேன். அங்கு இந்த ஆவேசம் கிடையாது. அலையடிப்பு கிடையாது. அச்சுறுத்தும் பேரோசை கிடையாது. வனாந்திரத்தைக் குடைந்துகொண்டு சமவெளியை நோக்கிப் பெருக்கெடுக்கும்போது எங்கிருந்தோ அதற்கொரு ராட்சசத்தனம் சேர்ந்துவிடுகிறது. இயற்கைதான். ஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்கமுடியாது போய்விடும்போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.

நல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போலிருந்தது. தூள் இருந்தது. அடுப்பு இருந்தது. ஒரு வார்த்தை சொன்னால், உறக்கம் துறந்து எழுந்து எனக்குத் தேநீர் தயாரித்துத் தர நான்கு பேர் என்னுடன் இருந்தார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் இரவு முழுதும் நெருப்பைப் பற்றவைக்க வேண்டாம் என்று கானகவாசி ஒருவன் மாலை திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுச் சென்றதுதான் யோசனையாக இருந்தது. மிருகங்களைக் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாக்கக்கூடிய எதையும் செய்யாதிருப்பது நல்லது. இந்த ஓரிரவைக் கடந்துவிட்டால் விடிந்ததும் கிளம்பி, ஜகதல்பூர் எல்லைக்குப் போய்விடலாம். நான்கு மணி நேரம் நடந்தால் போதும். அப்போதும் வனம் இருக்கும். நதியும் இருக்கும். ஆனால் இந்த அடர்த்தியும் அச்சமூட்டும் பேரோசையும் இராது. மனித மனங்களின் அச்சங்களை விழுங்கி விழுங்கித்தான் பகல் சூடாகிவிடுகிறது. அச்சமற்ற மிருகங்கள் உலவும் அடர்ந்த கானகத்துக்குள் வெளிச்சம் அரிதாகவே ஊடுருவுகிறது. வெப்பம் துறந்த வெளிச்சம்.

பொதுவாக, எனக்கு இம்மாதிரி சாகசப் பயணங்களில் விருப்பம் இருப்பதில்லை. வருத்திக்கொள்வதற்காக இந்த உடல் படைக்கப்படவில்லை என்று எப்போதும் தோன்றும். சிந்தனையோ, செயலோ, இனம் குறிப்பிட இயலாத ஒரு சொகுசின் வயப்பட்டது. அனுபவம் ஒரு பேரெழிற் புதையல்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் வருத்திக்கொண்டுதான் அதை அடையமுடியும் என்று நான் நம்பத் தயாரில்லை.

ஒருசமயம், மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிஞ்சி பூக்கத் தொடங்கிவிட்டதாகத் தகவல் வந்தது. போகலாம் என்று சதஸில் எல்லோரும் சொன்னார்கள். அதற்கென்ன, போகலாமே? வருடம் முழுவதும் எங்கெங்கு இருந்தோ, யார் யாரோ அழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். எப்போதும் எங்காவது போய்க்கொண்டேதான் இருக்கிறேன். உடம்பை வருத்தாமல் லபிக்கக்கூடிய எதுவும் எனக்கு விலக்கல்ல. பயணங்கள் உள்பட. ஆனால் இதை நான் வெளிப்படுத்துவதில்லை. போகலாம் என்ற ஒரு சொல் போதும். பயணத்தை இன்பகரமாக்கும் காரியத்தை என்னைச் சேர்ந்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அன்றைக்கு ஆண்களும் பெண்களுமாக இருபது பேர் என்னோடு புறப்படத் தயாரானார்கள். குலுக்கி எடுக்காத உயர்தர சொகுசுப் பேருந்து ஒன்று தருவிக்கப்பட்டது. அதன் நடுப்பகுதியில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு, எனக்கு வசதியாக ஒரு சோபா பொருத்தப்பட்டது. கண்ணாடி ஜன்னல்களுக்குத் திரை போடப்பட்டது. பயணங்களின்போது நான் எடுத்துச்செல்லும் சிறு புத்தக அலமாரியை மறக்காமல் அங்கே கொண்டுவந்து பொருத்தினார்கள். பிளாஸ்கில் வெந்நீர். பசிக்குப் பழங்கள், பிரெட். களைப்புற்றுப் படுக்க நினைத்தால் தலையணை, போர்வை. அவசரத் தேவைகளுக்கு மருந்து மாத்திரைகள். எதுதான் இல்லை? எதுவும் இல்லாமல் நான் எப்போதும் இருப்பதில்லை.

மூணாருக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது, மலை முகட்டில் இருந்து ஒரு பெரும் வெண் பாறையைப் புரட்டிப்போட்டாற்போல் பனிமேகம் திரண்டு இறங்கி வந்துகொண்டிருந்தது. ஏறத் தொடங்கும்போது அத்தனைக் குளிர் இல்லை. உறுத்தாத வெயிலும் சற்றே அடர்த்தி மிக்க மென்காற்றுமாகக் கொஞ்சம் சொகுசாகத்தான் இருந்தது. என் மாணவர்கள் எனக்கொரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. எனக்கு மலை ஏறும் அவஸ்தையைத் தராமல் எங்கிருந்தோ ஒரு பல்லக்கைத் தருவித்து, அதில் அமரவைத்து தூக்கிக்கொண்டு ஏறிச் சென்றார்கள். இதெல்லாம் அதிர்ஷ்டமல்ல. தெளிவான, திட்டமிட்ட உழைப்பு. என் இருப்பின் நியாயத்துக்கு, பிறப்பு தொடங்கி நான் இட்ட விதைகளும் உரங்களும் அநேகம். இன்னொருவரால் கற்பனையில்கூட எட்டிப்பிடிக்க முடியாத சாகசம் அது. அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

என்னையறியாமல் புன்னகை செய்திருக்கிறேன்போல. என் பார்வை நிலைகுத்தி நின்ற மலை உச்சியையும் முகத்தில் சுரந்த புன்னகையையும் கவனித்துவிட்ட சீடன் ஒருவன், ‘குருஜி இயற்கையின் பேரெழிலை மொத்தமாக உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருக்கிறார்’ என்று உடன் வந்தவர்களிடம் கிசுகிசுப்பதைக் கவனித்தேன். இன்னொரு புன்னகையை அவனுக்காகத் தரலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

மலைப்பாதையின் இருபுறமும் முழங்கால் அளவுக்குப் புதர்கள் மண்டிக்கிடந்தன. வேரிலிருந்து பிய்த்துக்கொண்டு திரண்டெழுந்த தண்டுகள். தண்டுகளில் இருந்து விலகிப் பிரியும் சிறு கிளைகள். கிளைகளில் முளைவிட்ட இலைகள். இலைகளை நனைத்த பனி. உற்றுப் பார்த்தால், ஒவ்வொன்றும் வேறு வேறு செடிகள்தாம். இலைகளின் அகலமும் நுனிக் கூர்மையும் கவனமாக மாற்றிச் செதுக்கப்பட்டிருக்கிற செடிகள். பச்சையிலும் துல்லியமான அடர்த்தி பேதங்கள். மனித முகங்களை வடிவமைப்பதைக் காட்டிலும் இது சிரமம்தான். சிப்பிக்குள் சித்திரம் எழுதுவதுபோல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு! ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது. சிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது? எது கெட்டது? எது மருந்தாகும்? எது விஷமாகும்? யாரையாவது கேட்கலாம். சிந்தனையைப் பற்றி நானறிந்ததுபோல, செடிகளைப் பற்றி மலைவாசி மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். சித்த வைத்தியர்களுக்குச் சற்று சுமாராக. எந்த இயலும் கணப்பொழுதில் தரிசனமாகத் தோன்றி மூளைக்குள் நிறைந்துவிடுவதில்லை. ஆசைகளின் வேகத்துக்கு வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்தான். சார்ந்திருப்பதுதான் உயிர்த்திருப்பதின் ஆதார விதி போலிருக்கிறது. செடிகளுக்கே அதுதான் என்றால் மனிதன் எம்மாத்திரம்?

வேறு வழி? எல்லாமே வேண்டித்தான் இருக்கிறது. சிறு தகவல்கள். புள்ளிவிவரங்கள். கீழைக் கதைகள். மேலைக் கதைகள். நாடோடிக் கதைகள். அற்புதத் தகவல்கள். சித்து கொஞ்சம். சித்த வைத்தியம் கொஞ்சம். யோகம் கொஞ்சம். கடவுள் கொஞ்சம். லௌகீகம்? சரிதான். அது இல்லாமலா?

இன்னும் நாநூறு மீட்டர் ஏறி, மறுபுறம் ஐந்நூறு மீட்டர் இறங்கினால் போதும் என்று உடன் வந்த ஆதிவாசி சொன்னான். எனக்குக் குளிர் பிரச்னையாக இல்லை. ஆனால் சட்டென்று பனி ஒளிந்துகொண்டு மழையாகிவிடுகிறது. பாதங்களை நெருடும் அக்குபஞ்சர் செருப்புபோலக் கன்னங்களின் இருபுறமும் குத்துவது, என்னைத் தூக்கிக்கொண்டு நடப்பவர்களை இம்சிக்கிறது என்று தோன்றியது. பெருமழையில் உள்ள மென்மை, வேகமான சிறு தூறல் அல்லது சாரலில் இல்லை. மழையைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. இது காற்றின் வேலை. இந்த மலையில் அது எந்தப்பக்கம் இருந்து வீசுகிறது என்றே கண்டுபிடிக்க முடிவதில்லை. தொலைவில் விழுந்துவிடுவதுபோல அசைகிற சில்வர் ஓக் மரங்களின் சாய்வாட்டம் தெரிந்தது. நின்று பார்க்கலாம். மரங்களின் அசைவுக்கு எப்போதும் ஒரு தாளகதி உண்டு. அசைந்துகொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பதே உலகின் இயல்பு என்று எடுத்துச்சொல்லுகிற லாகவம். இயல்பே ஆனாலும் இலக்கணத்துக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று போதிக்கிற பாவனை. இயல்பு மீறும்போது மரம் முறிந்துவிடுகிறது.

‘அங்கே பாருங்கள். அந்த மரங்களின் அசைவைக் கவனியுங்கள்.’

நான் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ‘தலையைக் கலைத்துவிட்டுக்கொண்டு சாமியாடும் பெண்களைப் போன்றதல்ல மரங்களின் ஆட்டம். தலை ஆடிக்கொண்டிருந்தாலும் ஒழுங்காக வகிடெடுக்கிற நேர்த்தி அதில் ஒளிந்திருப்பது தெரிகிறதா?’

‘ஆமாம் குருஜி!’ வியப்போடு சொன்னார்கள்.

‘அதுதான். ஒழுக்கமீறலில்கூட ஒரு லயம் வேண்டும். ஒழுக்கமோ, மீறலோ அல்ல. லயமே ருசி. இப்போது யோசியுங்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூத்தால் போதும் என்று இந்தக் குறிஞ்சிகளுக்கு யார் உத்தரவிட்டிருப்பார்கள்? அது பத்து வருடத்தில் பூத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா?’

‘நிச்சயமாக இல்லை.’

‘இதே ஸ்ட்ரோபைலான்திஸ் குந்த்யானாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் இனமுண்டு. அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கிற வகை ஒன்றுண்டு. அதை யாரும் நினைவு வைத்திருந்து போய்ப் பார்த்து ரசிப்பதில்லை. பன்னிரண்டு ஒரு சௌகரியம்.’

‘மனித சௌகரியத்தைச் சொல்கிறீர்களா குருஜி?’

ஒரு கணம் யோசித்தேன். எல்லாமே அப்படித்தானே? அதனதன் அறிவு விரிவுகொள்வதற்கேற்ப அர்த்தங்களை உற்பத்தி செய்துகொள்வதில் இருக்கிறது.

‘ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். நீலகிரி மலைப் பள்ளத்தாக்கில் இந்தக் குறிஞ்சி பூப்பதை வைத்துத்தான் தோடர்கள் அந்நாள்களில் தமது வயதைக் கணக்கிட்டார்கள். நாலு குறிஞ்சி பார்த்தவன், ஆறு குறிஞ்சி பார்த்தவன் என்று மூப்பர்களைக் குறிப்பிடுவார்கள்.’

நடப்பவர்களுக்குப் பொழுதுபோகும்படி பேசியபடியே வந்தேன். நாங்கள் சிகரத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்தபோது நேரம் மாலை ஐந்தாகியிருந்தது. இன்னும் பாதி வழிதான். மறுபுறம் ஐந்நூறு மீட்டர்கள் இறங்கினால் போதும். நீலக் குறிஞ்சிப் புதர்களை அடைந்துவிடலாம். ஒரு மணியின் தோற்றத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துகிடக்கிற பூக்கள். காற்றில் அது அசைகிறபோது காதுகளில் மணிச்சத்தம் ஒலிக்கிறதா பார்க்க வேண்டும்.

தொண்ணூற்று நான்காம் வருடம் ஆனமலையில் குறிஞ்சி பூத்தபோது நான் தனியாள். அன்றெனக்குக் காவி இருந்தது. ஆனால் அடையாளமில்லை. சீடர்கள் கிடையாது. நான் சொல்வதைக் கேட்க நான்கு பேர் இல்லை என்பதல்ல விஷயம். எனக்கு சொல்லத் தெரியுமா, என்ன சொல்வேன் என்பதில் எனக்கே குழப்பம் இருந்த காலம் அது. ஆனால் என் குரு தீர்மானமாகச் சொன்னார். ‘மொழியின் குழந்தை நீ.’

நான் அதை அப்போது நம்பவில்லை. ஆனால் அடுத்தடுத்து நடந்த நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அதைத்தான் எனக்கு நிரூபித்தன.

மீண்டும் புன்னகை செய்தேன்.

சிகரத்தில் இருந்து இறங்க ஆரம்பித்து முக்கால் மணி நேரம் சென்றிருக்கும். நீலக் குறிஞ்சிகள் பூத்திருந்த இடத்தை நாங்கள் நெருங்கியபோது வெகுவாக இருட்டிவிட்டிருந்தது. உருவம் தெரியாத அடரிருள். சீடர்களுக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது. மீண்டும் நாளைதான் வர வேண்டுமா என்று கேட்டார்கள்.

‘நீலக்குறிஞ்சியை நீங்கள் புகைப்படத்தில் பார்த்ததில்லையா?’

‘புகைப்படத்தில் பார்த்து என்ன குருஜி?’

‘பிறகு? தொட்டுப் பார்க்க வேண்டும். அவ்வளவுதானே? தொடுங்கள்.’ நான் தொட்டுக் காட்டினேன்.

‘தொடுவது மட்டும்தானா?’

‘வேறென்ன? அதன் உருவம் உங்களுக்குத் தெரியும். புகைப்படத்தில் பார்த்திருக்கிறீர்கள். இதோ இப்போது தொடுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிள்ளி முகர்ந்து பார்க்க விரும்பினாலும் செய்யலாம். வேறென்ன வேண்டும்?’

தர்க்கப்படி சரிதான். ஆனால் ஓர் அனுபவம் இல்லாமல்போகிறதே என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். ஒரு கணம் யோசித்தேன். ‘வா. என்னைத் தொடு. நான் வேறு அது வேறல்ல’ என்று சொன்னேன். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத அந்தப் பதிலில் திகைப்புற்ற பெண்ணொருத்தி, பரவசம் மேலிட்டுப் பாய்ந்து வந்து ‘குருஜி’ என்று என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

மதியம் அவள் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருப்பாள் என்று தோன்றியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com