2. புரிந்ததில் இருந்து விடுதலை

எனக்குத் தெரியும், சந்தேகமில்லாமல் நானொரு மேதை. எனக்குத் தெரிந்த இந்தப் பேருண்மையை நான் உலகுக்கு அறிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு பிக்‌ஷையில் அதனை ஆரம்பித்திருந்தேன்.

பெரிய காரியம் நடந்துவிடும்போலிருக்கிறது. நீயாவது பக்கத்தில் இருந்தால் உன் அம்மா சந்தோஷப்படுவாள் என்று கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்.

அப்போது நான் மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தேன். இருபது நாள் பயணம். இருபது இடங்களில் சொற்பொழிவு. எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலத்தில்தான் பேசுவேன். சட்டென்று யாரும் எதிர்பாராத விநாடியில் என் பேச்சு தமிழுக்கு மாறிவிடும். ஆயிரம் பேர் நிறைந்த அரங்கு அந்தக் கணம் நிலைகுலைந்துபோய்விடும். அதனாலென்ன? நான் நிறுத்தமாட்டேன். குறைந்தது பத்து நிமிடங்கள் இடைவிடாமல் தமிழில் பேசிவிட்டுப் புன்னகை செய்வேன். என்ன பிரச்னை உங்களுக்கு? நான் பேசியது புரியவில்லையா?

‘ஆமாம், ஆமாம்’ என்று கூட்டம் கூக்குரலிடும்.

‘இதுவரை புரிந்த அனைத்திலிருந்தும் உங்களை விடுவிப்பதற்காகத்தான் புரியாத மொழியில் இவ்வளவு நேரம் பேசினேன்’ என்று சொல்லுவேன். ‘எதையும் முழுதாகப் புரிந்துகொண்டுவிடாதீர்கள். அது ஒரு ஆபத்து. புதிர்கள் இல்லாத வாழ்வில் சுவாரசியம் இல்லை. சுவாரசியம்தான் வாழ்வின் அர்த்தமே தவிர, தெளிவடைவது அல்ல. தீர்மானங்களுக்கு வந்து சேர்வதல்ல. ஒவ்வொன்றையும் அன்றன்றே முடித்து பைசல் செய்வதற்கு வாழ்வென்ன மளிகைக் கடைக் கணக்கா? அதையே நாம் மாதம் ஒருமுறை அல்லவா செய்கிறோம்?’

கூட்டம் கைதட்டும். நான் மீண்டும் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பிப்பேன். பொதுவாக நான் சொற்பொழிவுகளுக்குத் திட்டமிடுவதில்லை. மொழியின் குழந்தை அல்லவா. அதைச் சார்ந்த அக்கறை மட்டும்தான் எனக்கு எப்போதும் இருக்கும். சரியான மொழி வசமாகிவிட்டால் அபத்தங்களின் அழகியலை உதறி விரித்து உலர்த்திவிடலாம். அனுபவம் எனக்குக் காட்டித்தந்த பாடம் அதுதான். மக்கள் அறிவின்மையின் உலகில் மட்டுமே சௌகரியமாக உலவ விரும்புகிறார்கள். அறிதலோ, அறியாமையோ அல்ல. அறிவின்மை. முட்டாள்தனத்தின் கவித்துவம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. முடை நாற்றத்துக்கு மூக்கு பழகிவிட்ட பிற்பாடு அத்தர் வியாபாரம் செய்யப் புறப்படுவதில் பொருளில்லை.

அன்றைய சொற்பொழிவை இருபது நிமிடங்கள் முன்னதாக முடித்துக்கொண்டேன். நிகழ்ச்சி அமைப்பாளரிடம் எனக்கு வந்திருந்த தந்தியைக் காட்டி, விவரம் சொன்னபோது துடித்துப் போய்விட்டார். ‘ஐயோ, உடனே கிளம்புங்கள். இப்போதே விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார். எனக்கென்னவோ அத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்துவிடும் என்று தோன்றவில்லை.

கேசவன் மாமா கவலைப்பட்டுத் தந்தி கொடுத்ததில் பிழையில்லைதான். அவருக்கும் வயதாகிவிட்டது. தான் முந்தியா, தமக்கை முந்தியா என்ற வினாவைச் சிந்தித்துக்கொண்டேதான் ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழுந்திருப்பாராயிருக்கும். மனைவியோ குழந்தைகளோ இல்லாத மனிதருக்குத் தமக்கையின் இருப்பு ஒன்றே தன் இருப்பின் அர்த்தமாயிருக்கும். அந்தப் பாசம் சித்திரிப்புகளுக்குள் அடங்காத பேரிலக்கியம். ஊரில் இருந்த காலம்வரை மிக நெருக்கமாக நான் அதைக் கவனித்திருக்கிறேன். விட்டு விலகி வெளியேறித் திரியத் தொடங்கிய முதல் சில வருடங்கள் தொடர்பில்லாமல் இருந்தாலும், எனக்கென்று ஓர் இடமும் அடையாளமும் உருவாகத் தொடங்கிய பின்னர் எல்லாம் சரியாகிவிட்டது.

மாமா ஒரு சமயம் என்னைப் பார்ப்பதற்கு மடிகேரிக்கே வந்திருந்தார். நான் அப்போது ஒரு ஸ்தாபனமாகியிருக்கவில்லை. ஆனால் ஸ்தாபனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தேன். எனக்குச் சில சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். எளிய சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் நான் அவர்களுடைய சில்லறை வியாதிகள் பலவற்றை குணப்படுத்திக் கொடுத்திருந்தது காரணம். மடிகேரியில் நான் தங்குவதற்கு அவர்கள்தாம் ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

ரம்மியமான மலைச்சாரலில் தொந்தரவில்லாத வசிப்பிடம். ஒரு கூடையைக் கவிழ்த்துவைத்த அளவுக்குத்தான் வீடு என்றாலும் எனக்கு அது போதும். வீட்டைச் சுற்றி பத்தடி வெற்றிடம் இருந்தது. வீட்டுக்காரர் இரும்புக் கம்பி வேலி போட்டிருந்தார். நட்டு வளர்க்க அவசியமின்றி ஏராளமான பூச்செடிகளும் புல்வகையும் தன்னியல்பாக முளைத்துச் செழித்திருந்தன. சற்று அழகுபடுத்தினால் ஒரு ஆசிரமமாகத் தோற்றம் தந்துவிடமுடியும் என்று தோன்றியது. பின்னணியில் இயல்பாக அமைந்திருந்த மலைச்சாரல் ஒரு வரப்பிரசாதம். ஒரு காவிரியைப்போல நான் பொங்கிப் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன்.

அந்த வீட்டுக்கு வாடகை என்னவென்று எனக்குத் தெரியாது. வீட்டு உரிமையாளரை முதல் நாள் பார்த்ததுடன் சரி. சீடர்கள் அவரிடம் என்னைப் பற்றிச் சொன்னபோது, ‘மாஸ்டர்’ என்று குறிப்பிட்டதை மிகவும் ரசித்தேன். எனது காவி அங்கியும் கருத்த இளம் தாடியும் கூர்ந்த பார்வையும் மேலான புன்னகையும் அந்த வீட்டு உரிமையாளரைக் கவர்ந்திருக்க வேண்டும். என்னிடம் ஜெபமாலையோ, கமண்டலமோ, அகண்ட பெரும் பூஜை அறைத் தேவைகளோ இல்லை என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் ஒரு புகைப்பட தெய்வம்கூட இல்லாததைக் கண்டு, ‘நீங்கள் ஆத்திக சாமிதானே?’ என்று சற்றே சந்தேகப்பட்டுக் கேட்டார். ‘ஒரு சாமி எப்படி நாத்திகராக இருப்பார்?’ என்று பதிலுக்கு நான் கேட்டது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பத்து நிமிடங்கள் அவருடன் முண்டகோபநிஷத் குறித்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘சரி புறப்படுங்கள், நான் என் பயிற்சிகளில் அமர வேண்டும்’ என்று சொன்னதே, நான் விரும்பும்வரை அந்த வீட்டில் குடியிருப்பதற்கான குத்தகைப் பணமாகிவிடும் என்பதை அறிந்திருந்தேன்.

மறுநாள் நான் விடிந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கோலம் போடப்பட்டிருந்தது. ப்ரணாம் குருஜி என்றபடி சீடன் ஒருவன் ஃப்ளாஸ்கில் காப்பி எடுத்து வந்தான். இன்னொருவன் சிற்றுண்டி கொண்டு வந்தான். மதிய உணவுக்கு என்ன வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது நான் புன்னகையுடன் மறுத்தேன். ‘நான் பிக்‌ஷை எடுத்து உண்ண வேண்டியவன். என்னை உட்காரவைத்து சோம்பேறியாக்கிவிடாதீர்கள்’ என்று சொன்னேன்.

அவர்களுக்கு அது கடும் அதிர்ச்சியளித்தது. ‘நீங்கள் போய் பிக்‌ஷை எடுப்பதா? அதெல்லாம் முடியாது; கூடாது’ என்று தீர்மானமாக ஒரே குரலில் சொன்னார்கள்.

‘என்னைத் தடுக்காதீர்கள். வேறெந்தவிதத்திலும் நான் என் நிர்வாணத்தை நெருங்க இயலாது’ என்று சொன்னேன்.

‘புரியவில்லை குருஜி.’

‘அகங்காரமே ஆடை. அதைக் களைவதற்குப் பிக்‌ஷை எடுத்து உண்பதே சரி. வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். இன்று உன் வீட்டுக்கு வருகிறேன். நாளை இவன் வீடு. அடுத்த நாள் அவன் வீடு. ஆனால் நான்தான் வருவேன். பிக்‌ஷை கேட்ட பிறகுதான் நீங்கள் எனக்கு உணவளிக்க வேண்டும்.’

பாவனைகள் சக்திமிக்கவை. மின்சாரம் நிகர்த்த வீரியம் கொண்டவை. ஆனால், சரியான இடத்தில், சரியான அளவில் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். மேதைமை என்பது அதில் அடங்கிய சங்கதி. எனக்குத் தெரியும், சந்தேகமில்லாமல் நானொரு மேதை. எனக்குத் தெரிந்த இந்தப் பேருண்மையை நான் உலகுக்கு அறிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு பிக்‌ஷையில் அதனை ஆரம்பித்திருந்தேன்.

அப்போதுதான் கேசவன் மாமா என்னைத் தேடிக்கொண்டு மடிகேரிக்கு வந்து சேர்ந்தார். என்னைக் கண்டதும் அவரது உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுக்கத் தொடங்கின. வெகுநேரம் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறித் தீர்த்தார். அவர் சமநிலைக்கு வரும்வரை நான் அமைதியாக இருந்தேன். ஒரு சொல்கூடப் பேசவில்லை. பிறகு அவருக்கு என் கையால் தேநீர் தயாரித்துக் கொடுத்து அருந்தச் சொன்னேன். குடித்துவிட்டு அவர் கோப்பையை வைத்த பிறகு, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘இருக்கேண்டா. உங்கம்மாதான் மூச்சத் தவிர ஒண்ணும் மிச்சமில்லாதவளா ஆயிட்டா. பாவி, அப்பா போனதுக்குக்கூட வராம போயிட்டியே!’

நான் அமைதியாக இருந்தேன். அவர் ஆவேசம் மீதுற என்னைத் திட்டத் தொடங்கினார். ‘என்னடா பெரிய சன்னியாசம்? என்னத்தக் கண்டே இதுல? கடவுள பாத்துட்டியோ? ஆமான்னு பொய் சொன்னேன்னா தொலைச்சி கட்டிடுவேன் சொல்லிட்டேன். தோபார், பக்தி ஒரு போர்வை. பலதுலேருந்து தப்பிச்சிக்க உதவற கருவி. அவ்ளோதான் என்னைப் பொறுத்தவரைக்கும். சராசரி மனுஷாளுக்கு ஆயிரம் கஷ்டம். அதையெல்லாம் மறக்க சில பேர் குடிக்கறான். சில பேர் சிகரெட் பிடிக்கறான். கஞ்சா குடிக்கறான், இன்னும் என்னென்னமோ பண்றான். நீயும் நானும் தயிர்சாதம். நமக்கு பெருமாள் பேர்தான் லாகிரி. அத இப்படி காஷாயம் கட்டிண்டு வந்துதான் சொல்லிண்டு திரியணுன்னு அவசியமில்லே. பெத்தவ எக்கேடு கெட்டா என்ன, தகப்பன் செத்தே போனாத்தான் என்னன்னு விட்டுத் தொலைச்சிட்டு வந்தவனுக்குத்தான் தெய்வம் காட்சி குடுக்கும்னா, அத நிக்கவெச்சி செருப்பால அடிப்பேன் பாத்துக்கோ.’

நான் அவருக்கு பதிலே சொல்லவில்லை. இதில் பதில் சொல்ல என்ன இருக்கிறது? பதினெட்டு வயதில் நான் வீட்டைத் துறந்து வெளியே வந்தேன். அதன்பின் பத்து வருடங்கள் பைத்தியக்காரன்போல எங்கெங்கோ அலைந்து திரிந்த பின்பு என் குருவை இதே மடிகேரியில்தான் சந்தித்தேன். அவரோடு நான்கு வருடங்கள். அவர் காலமான பிறகு என் பாதையைத் தீர்மானிப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகளிலும் முயற்சிகளிலும் இரண்டு வருடங்கள் ஓடிப்போயின. இதோ, எனக்கெனச் சில சீடர்கள் இன்று பிறந்திருக்கிறார்கள். ஒதுங்க ஓரிடம் கிடைத்திருக்கிறது. மாமாவுக்குக் கடிதம் எழுதி, வந்து பார்க்கச் சொல்லும் அளவு தைரியம் கிடைத்திருக்கிறது.

‘கேக்கறேன்ல? சொல்லு, உண்மையச் சொல்லு. நீ கடவுள பாத்தியா? அப்படி ஊர் உலகமெல்லாம் திரிஞ்சி என்னத்த கத்துண்டே? ஒன்ன பாத்ததும் இதத்தான் கேக்க சொன்னா உங்கம்மா.’

நான் புன்னகை செய்தேன். ‘அம்மா செத்துப்போனா நான் அவசியம் ஊருக்கு வருவேன் மாமா’ என்று சொன்னேன்.

ஆனால் எனக்குத் தெரியும். அந்தத் தருணத்தில் என்னைக் காட்டிலும் அம்மா பார்க்க விரும்பக்கூடியது என் மூத்த அண்ணனைத்தான். நான் வீட்டை விட்டுப் போவதற்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் அவன் போயிருந்தான். அவன் வெளியேறிய அடுத்த ஆண்டே இரண்டாவது அண்ணன் காணாமல் போனான். அவனுக்கு இரண்டாண்டுகள் கழித்து மூன்றாவது அண்ணன். கடைசியாக நான்.

‘நாலு பெத்தும் நாசமா போகணுன்னு அவ தலைல எழுதினவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா அவன வெட்டி பொலிபோடாம விடமாட்டேண்டா!' என்று கேசவன் மாமா சன்னதம் வந்தவர்போலக் கண்கள் சிவக்க, உதடு துடிக்கச் சொல்லிவிட்டுப்போனது நினைவில் நகர்ந்துபோனது.

காலம் ஒரு மின்மினியைப் போலச் சுடர்ந்து அணைந்து, சுடர்ந்து அணைந்து நகர்ந்து நகர்ந்து எங்கெங்கோ கொண்டுபோய்விட்டது. நான் மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது வந்து சேர்ந்த தந்தி, மீண்டும் என் மூத்த அண்ணாவை நினைத்துப் பார்க்க வைத்தது. சற்றும் எதிர்பாராதவிதமாக யாரோ சொன்னார்கள். தண்டகாரண்ய வனத்தில் புதிதாக ஒரு யோகி அலைகிறார். ஒரு விநாடிகூட உட்காராமல் நடந்துகொண்டே இருக்கிறார். திடீர் திடீரென்று ஓடவும் ஆரம்பிக்கிறார். எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் மரக்கிளைகளில் தாவி ஏறிக் காணாமல் போய்விடுகிறார்.

‘அவரை நீங்கள் யாராவது பார்த்தீர்களா? அவர் பேசுகிறாரா?’

பார்த்ததாகச் சொன்ன ஒருவனை என்னிடம் அழைத்துவந்தார்கள். அவன், இந்திராவதி பெருக்கெடுக்கும் சித்ரகூட அருவிக் கரையோரம் கடை போட்டு வியாபாரம் செய்கிற கிராமத்தான். அவனிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு விளங்கிவிட்டது. அது என் அண்ணாதான். இந்த உலகில் இரு புருவங்களுக்கு மத்தியில் துல்லியமாக வைக்கப்பட்ட கருஞ்சாந்துப் பொட்டைப்போல மச்சம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது, அவனைத் தவிர. அவன் பிறந்தபோது அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத்தான் அம்மாவிடம் பட்டாச்சாரியார் சொல்லியிருக்கிறார், ‘இந்தப் பிள்ளை உன்னிடம் தங்கமாட்டான்.’

என் பன்னிரண்டு வயதில் அவனைக் கடைசியாகப் பார்த்ததுடன் சரி. இன்று அவனுக்கு ஐம்பத்தொன்பது வயது இருக்கும். மீண்டும் சந்தித்துவிடத்தான் போகிறேனா?

ஒரு வாரத்தில் ஊருக்கு வருவதாக மாமாவுக்குத் தகவல் அனுப்பிவிட்டுத்தான் தண்டகாரண்யத்துக்குள் புகுந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com