4. நாமகரணம்

பெருங்கூட்டத்தில் நீ விரும்பும் அடையாளத்தைப் பெற முயற்சி செய். காவியில் ஒன்றுமில்லை. பேன்ட் சட்டை அணிந்தும் துறவியாக இருக்கமுடியும். ஆனால் காவி உன்னைப் புறத்தே காலிப் பயலாகாமல் காக்கக்கூடும்.

பாதி வாய் பிளந்த நிலையில் இறந்துகிடக்கும் ஒரு கருங்குரங்கின் தோற்றத்தில் இருந்தது அந்தக் குகை. தண்டகாரண்ய வனவாசி ஒருவன் என்னை அதனுள் அழைத்துச் சென்றபோது, உண்மையில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இந்த சாதுக்கள் எவற்றிடமிருந்து தப்பித்து இப்படி ஓர் இடம் தேடிவந்து ஒளிந்து வாழ்கிறார்கள் என்று புரியவில்லை. சாதனைகள் புரிந்து பழகுவதற்குத் தனிமை தேவை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு போதையாகிவிடும் அளவுக்குத் தனிமை பழகிவிடுவதும் ஆபத்தே அல்லவா? நான் சன்னியாசம் ஏற்றபோது எனக்குள் நியமித்துக்கொண்ட வைராக்கியம், எதனிடமிருந்தும் விலகுவதில்லை என்பதுதான்.

‘அப்புறம் அது எப்படி சன்னியாசமாகும்?’ என்று என்னோடு குருகுலத்தில் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு சமயம் கேட்டான்.

‘ஆகும். விலகுவதற்குச் சமமான வீரியம், நெருங்கிக் கரைந்து காணாமல் போய்விடுவதிலும் உள்ளது’ என்று பதில் சொன்னேன்.

‘அப்படியென்றால் பெண்?’ சட்டென்று கேட்டுவிட்டான். நான் வாய்விட்டுச் சிரித்தேன். எல்லா முயற்சிகளும் சென்று சரணடையும் பிராந்தியமாக யுகம் யுகமாக இருந்துவருகிற பிறப்பு. யாரால் தவிர்க்கமுடிந்திருக்கிறது? தள்ளிப்போயிருப்பது வேறு. ஆனால் பெண்ணை நினைக்காத ஆண் பிறப்பென்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. சக்தி ரூபமாகக் கருதுவதும் ஒரு பாவனைதான். உடலின் துணையின்றி நினைவில் புரண்டு மீள ஒரு சௌகரியம். தொழுவதற்கும் புணர்வதற்கும் வித்தியாசம் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன. சொன்னேனே, நெருங்கிக் கரைந்து காணாமல் போவது.

‘நீ ஒரு அயோக்கியன். வேஷதாரி. தயவுசெய்து ஓடிப் போய்விடு. உன்னால் நம் குருகுலத்துக்கே கேடு.’ அவன் மிகவும் பதற்றமடைந்திருந்ததைக் கண்டேன். என்ன சொல்லி அவனை சமாதானப்படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவன் எனக்கு மிகவும் பின்னால் குருகுலத்தில் வந்து சேர்ந்தவன். உபநிஷத், கீதை, பாரதம், மேலைத் தத்துவம் என்று ஏராளமாகப் படித்துவிட்டுவேறு வந்திருந்தான். மஃபத்லால் நிறுவனத்தில் பிராந்திய விற்பனை அதிகாரியாக வேலை கிடைத்து மைசூருக்கு வந்தவனுக்குத் தற்செயலாக ஒரு கல் இடறி எங்கள் குருகுலத்துடன் தொடர்பு உண்டானது. பெரிய சம்பளம், வசதியான வாழ்க்கை, சுக சௌகரியங்கள், குடும்பம், உறவுகள் எதுவும் வேண்டாம் என்று மொட்டை அடித்துக்கொண்டு காவியுடுத்திக்கொண்டவன்.

‘ஆனால் நண்ப, நான் அடைந்தவை போதாது என்ற வேட்கையுடன் மேலும் அடைவதற்காக இங்கு வந்து சேர்ந்தவன் என்று சொன்னால் உனக்குப் புரியுமா? நீ என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவன். என்னைவிட அதிகம் வாசித்தவன். என்னைவிட வைராக்கியம் மிக்கவன். அழகனும்கூட. ஆனாலும் சொல்கிறேன். மரணத் தருவாயில் நீ திருப்தியடைந்தவனாக இருக்கமாட்டாய். நானோ, உலகை வென்ற செங்கிஸ்கானைப்போல் உணர்ந்தபடி விண்ணை வென்ற இந்திரனாவதற்காக இறந்துபோவேன்.’

அவன் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக என்னை வெறுப்போடு பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு ஒரு கதை சொன்னேன். உண்மையில் அது கதையல்ல. எனக்கு நடந்ததுதான். ஆனால் ஒரு கதையைப்போலவே விவரணைகளுடன் சொன்னேன். அது அவனுக்கு அவசியம் என்று பட்டது. என் குருநாதர் என்னை மொழியின் குழந்தை என்று வருணித்ததைக் குறித்துச் சொன்னேன் அல்லவா? அன்றைக்குத்தான் அவர் என்னைக் குறிஞ்சி மலரைப் பார்த்துவரச் சொல்லி ஆனமலைக்கு அனுப்பிவைத்தது நடந்தது.

சட்டென்று அவர் மொழியில் இருந்து மலரை நோக்கித் தாவியதில் ஏதோ பொருள் இருக்கும் என்று தோன்றியது. பயணம்தானே? போனால் போகிறது என்று கிளம்பினேன்.

முதலில் நான் குமுளிக்குப் போய்ச் சேர்ந்தேன். அன்றைக்கு உள்ளூர் கம்யூனிஸ்டுகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். லாரி உரிமையாளர்களுடன் ஊழியர்களுக்குச் சிக்கல். சம்பள உயர்வு கோரிக்கைகள். போராட்டம், ஊர்வலம், கடையடைப்பு.

எனக்கு நல்ல பசி. எங்காவது ஒரு தேநீர்க் கடை திறந்திருந்தால்கூடப் போதும். இரண்டு பன் சாப்பிட்டு ஒரு தேநீரைக் குடித்தால், ஒரு நாளைக் கடத்திவிடலாம். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. சாலையோரம் பழங்களைக் குவித்து விற்பனை செய்பவர்கள் இல்லை. உணவகங்கள் இல்லை. ஒன்றுமே இல்லை. ஊரே உறங்கிவிட்டாற்போலிருந்தது. பிற்பகல் வரை தாக்குப்பிடித்துப் பார்த்து முடியாமல் போய்விட, வேறு வழியில்லாமல் ஒரு வீட்டுப் படியேறி கதவைத் தட்டினேன்.

சிறிய வீடுதான். முன்புற ஓட்டுச் சரிவுக்கு அப்பால் சிறிய முற்றம் ஒன்று இருந்தது. அதன் இருபுறமும் இரண்டு அறைகள். பின்னால் அடுக்களை. விரியத் திறந்துவைக்கப்பட்டிருந்த வீடு ஒரு புராதனமான குகையை நினைவுபடுத்துவதுபோலிருந்தது. நான் கதவை இரண்டாம் முறை தட்டினேன். இப்போது ஒரு பெண் வந்தாள்.

பெண்ணே எனக்குப் பசிக்கிறது. ஊரில் கடையடைப்பு நடந்துகொண்டிருப்பதால் உண்ண ஒன்றுமில்லை. நான் இரவிகுளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். போய்த் திரும்பும் வரை பசி தாங்க வேண்டும். உண்ண ஏதேனும் கிடைக்குமா?

இயல்பாகவே கேட்டேன். அது என் குரு சொல்லிக் கொடுத்தது. உணவைக் கேட்பதற்கு வெட்கப்படாதே. தயங்காதே. கிடைக்கிறபட்சத்தில், உண்மையிலேயே போதுமான அளவு வருவதற்குமுன் போதுமென்று சொல்லாதே.

இருங்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் உள்ளே போனாள். சில நிமிடங்களில் ஒரு அலுமினியத் தட்டில் மொச்சைக் கொட்டை குழம்பு ஊற்றிய சோறு எடுத்துவந்து வைத்துவிட்டு, உட்காருங்கள் என்று சொன்னாள்.

யார் என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. கணவனாயிருப்பான். அவள் அதற்கு பதில் சொல்லவில்லை. சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஒரு குவளை தண்ணீரும் கொண்டு வைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அந்தக் கதவருகிலேயே அமர்ந்து நான் முழுக்கச் சாப்பிட்டு முடித்தேன். பசி போய்விட்டது. அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, உன் பெயரென்ன என்று கேட்டேன்.

‘சாப்பிட்டாயிற்றல்லவா? போய் வரலாம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

ஒரு கணம் எனக்குத் திடுக்கிட்டுவிட்டது. அவள் பெயர் எனக்கு அநாவசியம் என்று அவள் நினைத்ததல்ல காரணம். எனக்கு ஏன் அவளது பெயரைக் கேட்கத் தோன்றியது என்று புரியவேயில்லை. பெயரில் என்ன இருக்கிறது? அவள் அன்னபூரணி. தட்டென்றோ, சோறென்றோ, குழம்பென்றோ அவளை நினைவில் நிறுத்துவது பெரிய விஷயமே அல்ல. குனிந்து தட்டை அவள் என்முன் வைத்தபோது அவளது இடுப்பு சற்றே உள்வாங்கி வெளிவந்ததைப் பார்த்தேன். என்ன சாப்பிட்டாலும் குண்டாகாத உடல் வாகு என்று அப்போது நினைத்துக்கொண்டேன். பெரிய அழகியெல்லாம் இல்லை. சராசரி மலையாளப் பெண்தான். ஆனால் நிச்சயம் குமுளிக்காரி இல்லை. நடு கேரளத்தில் எங்கிருந்தோ இங்கு வாழ வந்திருப்பாள் போலிருக்கிறது. ஒரு பெயராக அவளை நினைவில் இருத்திக்கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லைதான். உணவாகவோ இடுப்பாகவோ பதியவைத்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் நான் ஏன் பெயர் கேட்டேன்? புரியவேயில்லை.

அதன்பின் குருவோடு சுமார் மூன்றாண்டுகள் பாரதமெங்கும் சுற்றித் திரிந்த பிற்பாடு என்றோ ஒருநாள், ‘சரி உனக்கு சன்னியாச தீட்சை அளிக்கிறேன்’ என்று சொன்னார். அந்த தீட்சைச் சடங்கின்போதுதான் முதல் முதலாக என் முழுப்பெயரைக் கேட்டார். ‘மாற்றுவதற்கு முன்னால் எதை மாற்றப்போகிறேன் என்று அறிந்துகொள்வது அவசியம்.’

‘குருஜி, என் முழுப்பெயர் விமல் குமார்.’

ஏனோ அவர் புன்னகை செய்தார். நான் காரணம் சொன்னேன். ‘என் மூத்த அண்ணா பிறந்தபோது நடிகர் விஜயகுமார் கந்தன் கருணை படத்தில் நடித்திருந்தார். அவரது பெயர் நவீனமாக இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றியிருக்கலாம். அவள் அந்தப் பெயரை விரும்பியிருக்கலாம். அண்ணாவுக்கு விஜய் குமார் என்றே பெயர் வைத்தாள். அடுத்தவன் பிறந்தபோது அதே மாதிரி வியில் ஆரம்பிக்கும் பெயராகத் தேடி வினய் குமார் என்று வைத்தாள். அவனுக்குப் பிறகு பிறந்தவன் வினோத் குமார் ஆனான். நான் விமல் குமார்.’

அதற்குமேல் அவருக்கு விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை. என் தலையில் தனது உள்ளங்கையை வைத்துச் சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார். பிறகு, எழுந்திரு என்று சொன்னார். நாங்கள் அப்போது ஒகேனக்கல் அருவிக்கரையோரம் நின்றிருந்தோம். பிரம்மாண்டமான ஆகிருதியுடன் ஆக்ரோஷமாகப் பொங்கிப் பொழிந்துகொண்டிருந்த அருவி. அதன் சத்தத்தின் லயத்தை தியானம் செய்யச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு நான் அருவிச் சத்தத்தை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும்.

‘விமலானந்த! வா என்னோடு’ என்று குரு என்னை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். நான் அமைதியாக அவரோடு நடந்துகொண்டிருந்தேன். வெகு நேரம் என்னால் அமைதி காக்க முடியவில்லை. சட்டென்று சொல்லிவிட்டேன். ‘குருஜி, நான் வேறு பெயர் எதிர்பார்த்தேன்.’

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

‘இல்லை. வேறு ஏதாவது ஒரு பெயர். இந்தப் பெயரில் நேற்றைய நெடி இருக்கிறது. நான் அதை முற்றிலும் களைந்துவிட விரும்புகிறேன்.’

நான் சற்றும் எதிர்பாராத ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது. ‘உன்னால் வேறு எதையெல்லாம் களைய முடிந்திருக்கிறது? நீ பெண்களின் முலைகளை ரசிக்கிறாய். அழகான உதடுகளைக் காணும்போதெல்லாம் மனத்துக்குள் அதைக் கையில் ஏந்தி சுவைத்து மகிழ்கிறாய். நான் ஊரில் இல்லாத நாள்களில் சிகரெட் பிடிக்கிறாய். வாரம் ஒருமுறை சுய இன்பம் அனுபவிப்பதில்லை என்று உன்னால் சொல்ல முடியுமா? உனக்குப் பணம் பிடித்திருக்கிறது. புகழ் வேண்டியிருக்கிறது. ஓர் அதிகார மையம் ஆக விரும்புகிறாய். இவை அனைத்தையும் டைரியில் எழுதிவைக்கிற நேர்மையும் உன்னிடம் இருக்கிறது. மறுப்பாயா?’

திடுக்கிட்டுவிட்டேன். என்ன பேசுவதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது அவரே சொன்னார். ‘விமலா, துறவு என்பது வழங்கப்படுவதல்ல. உணரப்படுவது. நீ துறவியல்ல. துறவி ஆகவும் போவதில்லை.’

‘பிறகு எதற்கு எனக்கு தீட்சையளித்தீர்கள்?’ நான் தொண்டை கிழிந்துவிடும் ஆவேசத்துடன் கத்தினேன்.

‘நான் தீட்சையளித்ததாக யார் சொன்னது? உன்னை எனக்குப் பிடிக்கும். உன் விருப்பங்கள் நிறைவேற உன் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான்.’

‘அப்புறம் எதற்கு எனக்குக் காவி?’ என் குற்ற உணர்வே சொற்களில் ஆவேசமாகப் புகுந்து புகுந்து புறமுதுகிட்டுக்கொண்டிருந்தது.

அவர் அப்போதும் நிதானம் இழக்கவில்லை. அமைதியாகத்தான் சொன்னார். ‘நீ மாற வாய்ப்பில்லை விமலா. ஆனால் உன்னால் நிறையப் பேர் வாழ்வில் மாற்றமடையமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. உனக்கு நல்ல பேச்சு இருக்கிறது. நீ மொழியின் கருவியாக வளர்ந்திருக்கிறாய். இன்னும் சிறிது காலம் கழித்து எங்காவது போ. என்னைவிட்டு அகன்றுவிடு. பெருங்கூட்டத்தில் நீ விரும்பும் அடையாளத்தைப் பெற முயற்சி செய். காவியில் ஒன்றுமில்லை. பேன்ட் சட்டை அணிந்தும் துறவியாக இருக்கமுடியும். ஆனால் காவி உன்னைப் புறத்தே காலிப் பயலாகாமல் காக்கக்கூடும்.’

அரை மணி நேரம் கதறி அழுது தீர்த்தேன். பிறகு நிதானத்துக்கு வந்தபோது, அவர் சொன்னதில் பிழையே இல்லை என்று தோன்றியது. நான் அப்படித்தான். நான் அதுதான். அது மட்டும்தான்.

குரு சொன்னார். ‘கண்ணுக்குத் தென்படாதவரை கடவுளுக்கு நம்மால் ஆபத்தில்லை. அவர் பெயரை உபயோகிக்க அவர் ராயல்டி கேட்காதவரை அவர் ஒரு பொதுச் சொத்து. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது மனிதப் பிறவியின் ஆதார குணம். கடவுளின் பெயரால்தான் நீ பிழைப்பு நடத்துவாய். அது தவறு என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால் செய்யாதே என்று சொல்லமாட்டேன். விரைவில் அதிலிருந்து உன்னால் விடுபட முடிந்தால் மகிழ்ச்சி கொள்வேன்.’

நீண்ட நேரம் நான் அமைதியாக இருந்தேன். பிறகு கேட்டேன். ‘குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா?’

அவர் யோசிக்கவேயில்லை. சட்டென்று பதில் சொன்னார், ‘கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன்? முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.’

குருகுலத்து நண்பனிடம் நான் இந்த இரு சம்பவங்களையும் விவரித்து முடித்தபோது அவன் நடுங்கிப் போய்விட்டான். குருவின் மீதே அவனுக்குச் சந்தேகம் வந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டறியவும் ஆவலாக இருந்தது. ஆனால் நான் எதுவும் கேட்பதற்கு முன்னால் அவன் முந்திக்கொண்டான்.

‘சிறிது காலம் கழித்து என்னைவிட்டுப் போய்விடு என்று அவர் சொன்னதாகச் சொன்னாயே, எப்போது போகப் போகிறாய்?’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com