5. பித்தளைப் பிள்ளையார்

என் பயணங்களில் நூற்றுக்கணக்கான சித்தர்களை நான் சந்தித்திருக்கிறேன். சில அற்புதங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டும் இருக்கிறேன். எனக்குத் தெரியாத ஓர் இயல் என்பதைத் தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை

தண்டகாரண்யத்து வனவாசி என்னை அந்தக் குகைக்குள் அழைத்துச் சென்ற நேரம் அங்கே மூன்று சன்னியாசிகள் இருந்தார்கள். ஒருவர் ஒரு ஓரமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். இன்னொருவர் தியானத்தில் இருக்க, மூன்றாம் நபர் ஒரு காடா விளக்கின் வெளிச்சத்தில் ஓலைச்சுவடி ஒன்றைப் படிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். சுவரோரம் ஒரு கணப்புச் சட்டி இருந்தது. இரண்டு மூன்று துணிப்பைகளில் பிதுங்கப் பிதுங்க ஏதோ அடைத்துவைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருப்பது வெளியே தெரியாதபடிக்கு மேற்புறம் சணல் கோணிச் சுருணைகள் சொருகப்பட்டிருந்தன. ஒரு சில கலயங்கள், பாக்குமட்டைத் தட்டுகள் இருந்தன. அருவியில் பிடித்த மீன்கள் கொஞ்சம் இன்னொரு ஓரத்தில் உலரவைக்கப்பட்டிருந்தன. அவை பாதி காய்ந்த மீன்களாக இருந்தாலும் அதன் வாடை அங்கே இல்லை. மாறாக, எங்கிருந்தோ அடர்த்தியாகத் திரண்டுவந்த எருமைச் சாண வாசம்தான் குகை முழுதும் பரவி நிறைந்திருந்தது.

உள்ளே சென்றதும் வனவாசி அவர்முன் விழுந்து வணங்கி எழுந்து கைகளைக் கட்டிக்கொண்டான். எனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத சத்திஸ்கரி மொழியில் என்னைக் காட்டி ஏதோ சொல்லத் தொடங்கினான்.

அவர் என்னை ஒரே ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். உட்காரச் சொல்லிக் கைகாட்டிவிட்டு, பார்வையை அந்த வனவாசியின் பக்கம் திருப்பி ஏதோ பேச ஆரம்பித்தார். அவர் பேசிய எந்த ஒரு சொற்றொடரும் சிறியதாக இல்லை. குறைந்தது பதினைந்து சொற்களில்லாமல் ஒரு வரியைக்கூட அவர் நிறைவு செய்வதில்லை என்று தோன்றியது. பதில் சொல்லிக்கொண்டிருந்த வனவாசியும் நீளநீளமாகவே பேசினான். சுமார் ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் அவர்கள் உரையாற்றிய பின்பு, வனவாசி என்னிடம் திரும்பி ‘தெரியவில்லை’ என்ற பொருளில் இரு கைகளையும் விரித்தான். எளிய பதில். மிகச் சிறியதும்கூட. ஆனால் அதைக் கண்டடைவதற்கு எத்தனை நூறு சொற்களை விரயம் செய்யவேண்டியதாகிவிட்டது இவர்கள் இருவருக்கும்!

நான் அந்த சாதுவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு குகையைவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் சித்தர்களா என்று என் சீடன் ஒருவன் அந்த வனவாசியிடம் கேட்டான். நான் புன்னகை செய்தேன். அவன் கேட்டது அந்த வனவாசிக்குப் புரிந்ததா என்றும் தெரியவில்லை. கேள்வி கேட்ட மரியாதைக்கு அவனும் விரிவாக ஏதோ விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். அது நிச்சயம் என் சீடனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன காரணத்தாலோ எனக்கு அற்புதங்களின் மீது ஆர்வமில்லாது போய்விட்டது. என் பயணங்களில் நூற்றுக்கணக்கான சித்தர்களை நான் சந்தித்திருக்கிறேன். சில அற்புதங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டும் இருக்கிறேன். எனக்குத் தெரியாத ஓர் இயல் என்பதைத் தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை என்றே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது.

ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அது நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்த காலம். கோயிலுக்கு யாரோ சித்தர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அப்பா விடிகாலையிலேயே குளித்து முழுகி, சந்தியாவந்தனமெல்லாம் செய்துவிட்டுக் கிளம்பிப் போயிருந்தார். வாய்ப்பிருந்தால் அவரை வீட்டுக்கு அழைத்துவருவதாக அம்மாவிடம் சொல்லியிருந்தார். கோயில் கமிட்டியில் இருந்தவருக்கு அதெல்லாம் ஒரு சிரமமா? எப்படியும் அழைத்து வந்துவிடுவார் என்று எங்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனால் அம்மாவும் சீக்கிரம் குளித்து மடிசாரெல்லாம் உடுத்திக்கொண்டு, வீட்டைப் பெருக்கித் துடைத்து வாசலில் பெரிய கோலம் போட்டு வைத்துவிட்டு அப்பா வருகிறாரா என்று திண்ணையில் அமர்ந்து காத்திருந்தாள். முன்னதாக எங்கள் நான்கு பேரையும் எழுப்பி, தூக்கக் கலக்கத்தோடு குளிக்கவைத்து, ஆளுக்கொரு வேட்டியை இடுப்பில் சுற்றிவிட்டு, அப்பா வரும்வரை படித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தாள். தையூர் சந்தைக்குப் போய்விட்டுக் காய்கறிப் பைகளுடன் சைக்கிளில் வந்துகொண்டிருந்த கேசவன் மாமா, அந்நேரத்தில் அம்மாவை வாசல் திண்ணையில் பார்த்ததில் சற்றே வியப்படைந்தார். என்ன என்று சைக்கிளை நிறுத்திவிட்டுக் கேட்டார்.

‘யாரோ சித்தர் வந்திருக்காராம் கோவிலுக்கு. காலங்கார்த்தால கதவ இடிச்சி ஆராம்து சொல்லிட்டுப் போனான். முடிஞ்சா ஆத்துக்குக் கூட்டிண்டு வரேன்னு சொல்லிட்டு இவரும் போயிருக்கார்.’

‘ஓஹோ’ என்றார் கேசவன் மாமா. சித்தர் வருவதற்குள் தன்னால் வீட்டுக்குப் போய் குளித்து முடித்து மடியாக வந்து நிற்கமுடியுமா என்ற சந்தேகம்போல. குளிக்காவிட்டால் சித்தர் ஒன்றும் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று தீர்மானித்து, சைக்கிளை எங்கள் வீட்டுத் திண்ணை ஓரம் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். ‘என்னடா பசங்களா, படிக்கறிங்களா?’ என்று கேட்டார். நான்கு பேரில் வினய்தான் மாமா செல்லம். அவரைப் பார்த்ததும் சட்டென்று புத்தகத்தைப் போட்டுவிட்டு எழுந்துவந்து, ‘கிரிக்கெட் ஆடலாம் வரிங்களா?’ என்றான்.

‘உங்கப்பா பார்த்தா தோலை உரிச்சிடுவார். படிங்கோ, படிங்கோ. அவர் வரவரைக்கும் படிச்சிண்டிருங்கோ. நன்னா சத்தம் போட்டுப் படிங்கோ’ என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தார்.

அம்மா அப்போதுகூட எழுந்து உள்ளே வரவில்லை. மாடவீதியின் வலப்புற வரிசையில் ஏழாவது வீடு எங்களுடையது. முன்புறம் ஓட்டுச் சரிவும் அதன்பின்னால் தளமும் போட்ட புராதனமான வீடு. திண்ணையைத் தாண்டியதுமே சிறிதாக ஒரு நடையோடியை அடுத்து முற்றம் வந்துவிடும். முற்றத்தின் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். பின்கட்டில் சமையல் அறையை ஒட்டினாற்போலப் பாத்திரம் துலக்க அப்பா ஒரு தொட்டி கட்டிவிட்டிருந்தார். கிணற்றில் நீர் இறைத்து தொட்டியில் கொட்டிக்கொண்டு உட்கார்ந்தால், அம்மா நாளெல்லாம் தேய்த்துக்கொண்டே இருப்பாள். எத்தனை தேய்த்தாலும் எந்நாளும் எங்கள் வீட்டுப் பாத்திரங்கள் துலங்கிப் பொலிந்து நான் பார்த்ததில்லை. எல்லாம் எந்தக் காலத்திலோ அம்மா தனது கல்யாணச் சீராகக் கொண்டுவந்த பாத்திரங்கள். பித்தளையும் எவர்சில்வருமாக ரகத்துக்கு இரண்டு ஜோடி இருக்கும். அப்பாவுக்கு காப்பி மட்டும் பித்தளை தம்ளரில் கொடுத்தால் போதும். வாழ்வில் வேறு எதையுமே அவர் எதிர்பார்த்ததில்லை. ஆனால், அம்மா அத்தனை வருடங்களாக தினம் தவறாமல் தேய்த்தும் அந்த தம்ளர் பளபளத்ததில்லை. ‘சிலதெல்லாம் அப்படித்தான். மாத்த முடியாது; தூக்கிப்போடவும் முடியாது’ என்று சொல்லுவாள்.

ஐந்தரைக்குக் கோயிலுக்குப்போன அப்பா, ஏழே முக்காலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு ஓடி வந்தார். ‘அவர் வரார். வரேன்னு சொல்லிட்டார்.’

உடனே அம்மா இங்குமங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை எடுத்து ஒழுங்கு செய்து வைத்தாள். மாமா தனக்காகப் போட்டுக்கொண்ட காப்பி டிக்காஷனில் மிச்சம் இருந்ததை வேறொரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதன் நடுவே வைத்துச் சூடுபடுத்தினாள். பீரோவைத் திறந்து எதையோ தேடி, எந்தக் கல்யாணத்திலோ யாரோ வைத்துக் கொடுத்து, பிரிக்காதிருந்த புதிய வேட்டியொன்றை எடுத்துவந்து தாம்பாளத்தில் வைத்தாள். மாமா நாலு வெற்றிலை, இரண்டு கொட்டைப் பாக்குகளை அதன் மீது வைத்து அழகுக்கு இரண்டு வாழைப் பழங்களையும் வைத்தார்.

ஒரு சித்தரை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அவர் என்னென்ன செய்வார் என்பது குறித்த தெளிவு எங்கள் யாருக்கும் இல்லை. ‘என்ன வேணா பண்ணுவார்’ என்று கேசவன் மாமா சொன்னது சரியாகப் புரியவில்லை. காவியும் ஜடாமுடியும் நீண்ட தாடியும் கமண்டலமுமாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அகத்தியர் திரைப்படத்தின் கதாநாயகர்தான் என் நினைவில் வந்தார். அவர் பெயர் சீர்காழி கோவிந்தராஜன் என்பதைப் பிற்பாடு அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அம்மாவின் சினிமா ஆர்வம் அளப்பரியது. எப்போதும் ஏதாவது படம் பார்த்துக்கொண்டோ அல்லது ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டோ மட்டுமே அவளால் இருக்கமுடியும். அதுவும் உரத்த சத்தத்தில் கேட்டால்தான் அவளுக்குத் திருப்தியாகும். ‘ஏம்மா இப்படி?‘ என்று மூத்த அண்ணா பல சமயம் சலித்துக்கொண்டிருக்கிறான். ஒரே ஒரு சமயம் அம்மா அதற்கு பதில் சொல்லியிருக்கிறாள். ‘இதுவும் இல்லேன்னா செத்துப்போயிடுவேனே.’

நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்கொள்ளத் தயாரான சித்தர் அன்று எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அசப்பில் அவர் எங்கள் மனத்தில் இருந்த பிம்பத்தை ஒத்திருக்கவில்லை. சாதாரணமான எட்டு முழ வேட்டி கட்டியிருந்தார். உள்ளே இருக்கும் பனியன் தெரியும்படி இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு அரைக்கை சட்டை அணிந்திருந்தார். நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டும் அதன் நடுவே கறுப்பாக ஒரு பொட்டும் இருந்தது. சற்றுமுன் வரை வெற்றிலை போட்டுக் குதப்பிக்கொண்டிருந்தவர், வீட்டுக்குள் நுழையும் முன் வெளியே துப்பியிருக்க வேண்டும். சட்டையில் ஒன்றிரண்டு சொட்டுகள் சிந்தியிருந்ததை எப்படியோ கவனிக்க மறந்திருக்கிறார்.

‘வாங்கோ வாங்கோ’ என்று அப்பா இடுப்பு வரை குனிந்து வரவேற்று அவரை அமரவைத்தார். அப்பாவும் அம்மாவுமாக அவரை விழுந்து சேவித்துவிட்டு நகர்ந்துகொள்ள, கேசவன் மாமா அதன்பின் சேவித்தார். ‘இப்படி வாங்கோடா’ என்று அப்பா எங்களை அழைத்தார். நாங்கள் வரிசையில் வந்து நின்று அவரை வணங்கினோம். அவர் கையை உயர்த்தி ஆசீர்வாதம்கூடச் செய்யவில்லை. வெறுமனே எங்களைப் பார்த்துச் சிரித்தார். அம்மா, தயாராக வைத்திருந்த வெற்றிலைத் தாம்பாளத்தை எடுத்துவந்து அவர் முன் வைத்தாள். அவர் அதிலிருந்து ஒரு வாழைப் பழத்தை மட்டும் எடுத்து தோலை உரிக்க ஆரம்பித்தார். மீண்டும் எங்கள் நான்கு பேரையும் ஒரு பார்வை பார்த்தார். என்ன நினைத்தாரோ, உரித்த பழத்தின் பாதியைத் தன் வாயில் போட்டு மென்று விழுங்கினார். மீதமிருந்த பாதி பழத்தை இடது உள்ளங்கையில் வைத்து வலக்கையால் மூடினார். சில விநாடிகள்தாம். மூடிய கைகளை அப்படியே பிசைய ஆரம்பித்தார். சிக்குண்ட வாழைப்பழம் பிதுங்கி நாலாபுறமும் வெளியே வரத் தொடங்கியது. அப்பாவும் அம்மாவும் பக்திப் பரவசம் மேலிட கைகூப்பியபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் எதிர்பாராதவிதமாக அது நிகழ்ந்தது.

அவரது உள்ளங்கைகளுக்குள் இருந்து பிதுங்கி வழிந்துகொண்டிருந்த வாழைப்பழத்தோடு சிறிதாக ஒரு பித்தளை பிள்ளையார் சிலை வெளிப்பட்டுக் கீழே விழுந்தது.

அவ்வளவுதான். அப்பா தடாலென்று மீண்டும் அவர் காலில் விழுந்தார்.

‘எடுத்துக்கோங்கோ’ என்று சித்தர் சொன்னார்.

அப்பா அந்தச் சிலையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு பெருமிதமுடன் அம்மாவிடம் நீட்டினார். அம்மா உடனே அதை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

அதற்குமேல் என் மூத்த அண்ணா பொறுக்கவில்லை. ‘எங்காத்துல பிள்ளையார், முருகர், சிவன் பார்வதியெல்லாம் கிடையாது. நாங்க ஐயங்கார். பெருமாள் சிலை ஒண்ணு வரவெச்சித் தாங்களேன்!’ என்று கேட்டான்.

சித்தர் வெகுநேரம் பேசவேயில்லை. அண்ணாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள் அப்பா பதற்றமாகி அவனைக் கீழ்க்குரலில் அதட்டி, அவன் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. கிளம்பும்போது மட்டும் எங்கள் நான்கு பேரின் பெயர்களையும் அப்பாவிடம் கேட்டார்.

‘மூத்தவன் விஜய் குமார். அடுத்தவன் வினய் குமார். இவன் வினோத் குமார். கடைசிப் பையன் விமல் குமார்’ என்று அவர் அறிமுகப்படுத்தியதும், இடைவெளியே இல்லாமல் கேசவன் மாமா சொன்னார்: ‘பேரெல்லாம் சம்மந்தமே இல்லாம இருக்கேன்னு நினைக்காதீங்கோ. அதெல்லாம் எங்கக்கா நவீனமா ஆசைப்பட்டு வெச்சது. அத்திம்பேர் எவ்ளோ சொல்லியும் கேக்கமாட்டேன்னுட்டா.’

அவர் புன்னகை செய்தார். வரேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அம்மா அவரிடம் எதையோ கேட்க நினைத்து, சொற்களில்லாமல் தவித்துத் தவித்துத் தணிந்துகொண்டிருந்ததை அன்று கண்டேன். அவர் வாசல் படி இறங்கும்போதுகூட, அப்பாவின் தோளை இடித்து எதையோ கேட்கச் சொல்லி சைகை செய்துகொண்டிருந்தாள். அவருக்கும் ஏதோ தயக்கம் இருந்ததாகப் பட்டது. இருந்தாலும் அம்மாவை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு அவரை வழியனுப்பும்விதமாகக் கூடவே போக ஆரம்பித்தார்.

எப்படியும் கடற்கரைச் சாலை வரை அவர் சித்தரோடுகூட போயிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்குள் அம்மா கேட்க விரும்பிய அந்த ஏதோ ஒன்றை அவர் அவசியம் சித்தரிடம் கேட்டிருப்பார். அம்மா என்ன கேட்க நினைத்தாள் என்பதோ, சித்தர் அதற்கு என்ன பதில் சொல்லி அனுப்பினார் என்பதோ கடைசிவரை எனக்குத் தெரியாமலே போய்விட்டது. அண்ணா சொல்லிக்கொண்டிருந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

‘ஒரு பித்தளைப் பிள்ளையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேண்டாம். கடைசிவரைக்கும் அவரால ஒரு பித்தளை வெங்கடாசலபதியைக் கொண்டுவர முடியல பாத்தியா?’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com